மதுர ஜில்லா... மச்சானே!-38
அத்தியாயம்-38
திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.
அந்த அதிகாலையிலேயே ஊர் முழுவதும் ஒரு விதமான பரபரப்பு பரவியிருந்தது.
அகிலன் வீட்டின் முன்பாக லாரி ஒன்று வந்து நின்றது. அதில் நீளமான இரும்புக் குழாய்கள், மரச்சட்டங்கள், டிஜிட்டல் பேனர்கள், என வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
"டேய்... மெதுவா இறக்குங்கடா... கிழிச்சிடாதீங்க." என்று ரகு கத்திக்கொண்டே ஆட்களை வேலை வாங்கினான்.
"இந்த பேனர் எங்க வைக்கணும்?" என்று பணியாட்கள் கேட்டனர்.
"பஸ் ஸ்டாண்ட் முச்சந்தியில ஒண்ணு... மாரியம்மன் கோவில் வாசல்ல ஒண்ணு... பெரிய ஆலமரத்துக்கு பக்கத்துல ஒண்ணு... மண்டபத்துக்கு முன்னாடி ரெண்டு..."
"சரிண்ணே..." என்று அவர்கள் ஒவ்வொருவரும் தூக்கிச் சென்றனர்.
அந்த நேரத்தில் வயலிலிருந்து திரும்பி வந்த அகிலன் அதை பார்த்ததும் புருவம் சுருங்கியது.
"ரகு..." என்று நண்பனை அழைத்தான்.
"சொல்லுடா மச்சி..."
"இவ்வளவு பெரிய பேனர் எதுக்குடா?" என்று பல்லை கடித்து கேட்டான்.
"உன் கல்யாணத்துக்குத் தான். நான் அன்னிக்கே சொன்னேன்ல. சாதாரணமானது சின்னதா போதும்னு" என்றதற்கு ரகு தோளை குலுக்கியான்.
"அது அன்னிக்கு.. சொன்ன... இருந்தாலும்.. இப்ப நீ பஞ்சாயத்துல ஜெயிச்ச ஹீரோடா. அதுவும் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கற. ஊரே பேசுற கல்யாணம். சாதாரணமா விட்டா நம்மள கேவலப்படுத்திடுவாங்க."
அகிலன் தலையைப் பிடித்தான்.
"இதெல்லாம் தேவையில்லடா... பார்க்க பகட்டா இருக்கு" என்றான். இதெல்லாம் இனியன் பார்த்தால் மதுராவை காயப்படுத்துவானோ என்று தான் யோசித்தான்.
"உனக்கு தேவையில்லாம இருக்கலாம். ஆனா எனக்கு தேவை. நீ என் நண்பன். என் மச்சான் கல்யாணம். தெருவே திரும்பி பார்க்கணும். அதோட தங்கச்சியும் ஆசைப்பட்டுச்சுல்ல" என்றவன் பேசிக் கொண்டிருக்கும்போதே பெரிய டிஜிட்டல் பிரிண்ட் ஒன்றை விரித்தனர்.
அதை பார்த்த அகிலன் அதிர்ந்து நின்றான்.
திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில், காவ்யாவை இரு கைகளிலும் பூங்கொத்துப் போல தூக்கி வைத்திருந்த அந்தப் படம்.
அதன் கீழே பெரிய எழுத்தில், "வாழ்க வளமுடன்" அகிலன் ❤ காவ்யா என்று அச்சிடப்பட்டிருந்தது. நண்பர்கள் சார்பாக ரகு அடித்திருந்தான்.
"ரகுஉஉஉ." என்று அதிர்ந்தான் அகிலன்
"இப்ப என்னடா?" என்று வந்தான்.
"இதைத்தான் பேனரா வைக்கப் போறியா?" என்று கேட்டான்.
"ஆமாடா இது அம்சமா வந்திருந்தது. நீ வேண்டாம்னு தங்கச்சி காவ்யாவிடம் சொல்லிட்டியாம். என்னால விட முடியுமா... நண்பர்கள் சார்பா ஒன்னு இருக்கட்டும்னு பேனர் போட்டாச்சு." என்றான்.
"ஊர்ல எல்லாரும் பார்க்கப் போறாங்க." என்று தலையை பிடித்தான். இனியன் பார்த்தால் எரிச்சலாவான்.
"அதுக்குத்தான்டா மாப்பிள தெருவுக்கு தெரு வைக்கறது.." என்றதும் அகிலன் அசௌகரியம் கொண்டான். நண்பனிடம் இப்பொழுது மறுத்தால், ரகுவும் மற்ற நண்பர்களும் கூட வருந்தலாம்.
"வேற போட்டோ இல்லையாடா உன் பாசத்தை காட்டறதுக்கு?" என்று பல்லைக்கடிக்க.
"இருக்கு மச்சி. ஆனா இதுல தான் நீ நெத்தி சுருங்காம இருக்க பாரு." என்றதும் அவனை அமைதியாக்கியது.
உண்மைதான். அந்த புகைப்படத்தில் காவ்யாவை தொட்டு தூக்கியதில் அதிர்ச்சியடைந்தாலும், லேசான பதட்டமிருந்ததே தவிர நெற்றி சுருக்கம் இல்லை.
பல மாதங்களுக்குப் பிறகு அவன் முகத்தில் இயல்பான முகம் இருந்தது.
ரகு அகிலன் பேச்சை கேட்ட மீனாட்சியும் கவனித்திருக்க, "வைக்கட்டும்ப்பா... இதுல என்ன இருக்கு." என்றார் மெதுவாக.
"அம்மா..." என்று அகிலன் கூற முடியாது தவிக்க,
"உன்னை இப்படி பார்க்க எத்தனை நாளாச்சு தெரியுமா? அதனால அந்த பேனர் நல்லாவே இருக்கு. அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்காத. கஷ்டப்படுத்தணும்னு நினைக்கறவங்க எப்படியும் காயப்படுத்தி கஷ்டப்படுத்துவாங்க. அது அவங்க சுபாவம்" என்றார்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றான் அகிலன். உண்மை தான் இனியன் இதை பார்த்து தான் மதுராவை கஷ்டப்படுத்த வேண்டுமென்று இல்லை. அவனுக்கு காவ்யாவை தான் மணப்பதே எரிச்சலாக தான் இருக்குமென அமைதியானான்.
பண்ணை வீட்டில் காவ்யாவும் அந்தப் பேனர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
புகைப்படக்காரர் ஆல்பத்தை கொண்டு வந்து கொடுத்திருந்தார்.
ஒவ்வொரு படத்தையும் திருப்பிப் பார்த்தாள்.
ஒரு படத்தில் அகிலன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மற்றொரு படத்தில் தான் சிரிக்க அவன் பார்வை மட்டும் அவள் முகத்திலேயே இருந்தது.
மற்றொரு படத்தில் அவன் கைகளில் தன்னைத் தூக்கியபடி... இருவரும் ஒருவரையே ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் படத்தை விரலால் வருடியவள் தானாகவே புன்னகைத்தாள்.
"என்னம்மா... கல்யாண கனவா?" என்று ராஜாராம் கேட்டார்.
"போங்க டாட்.. அப்படியெல்லாம் இல்ல." என்றாலும்...
அவளது கண்களில் இருந்த ஒளியைப் பார்த்தவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
மதியம் ஊரெங்கும் பேனர்கள் ஏறத் தொடங்கின. பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கோவில் வாசல், நான்கு சாலை சந்திப்பு, எங்குப் பார்த்தாலும் அகிலன் – காவ்யாவின் புகைப்படமே.
"பொண்ணு ரொம்ப அழகா இருக்காளே..."
"அமெரிக்காவுல வளர்ந்தவளாம்..."
"அகிலனுக்கு அடிச்சதுப்பா அதிர்ஷ்டம்."
"செம ஜோடில"
"அகிலன் நல்ல பையன்... நல்ல பொண்ணு தான் கிடைச்சிருக்கு." என்று ஊரே பேசிக்கொண்டிருந்தனர்.
பைக்கில் வந்து கொண்டிருந்த இனியன். பஸ் ஸ்டாண்டை கடந்தபோது பெரிய பேனர் ஒன்று அவன் கண்களில் விழுந்தது.
அவன் திடீரென்று பிரேக் அடித்தான். பைக்கின் சக்கரம் மணலை வாரியபடி நின்றது.
அவன் மெதுவாக தலைநிமிர்ந்தான். அகிலன் காவ்யாவை தூக்கியபடி இருந்த புகைப்படம். அந்தக் காட்சி அவனது நெஞ்சுக்குள் யாரோ கத்தியால் குத்தியது போல இருந்தது. "ச்சே..." என்று பற்களைக் கடித்தான்.
'என்னடா நடக்குது கடைசில நான் காதலிச்ச பொண்ணு... அகிலன் கூட... அதுவும் இப்படி...' என்றவன் கைகளில் இருந்த நரம்புகள் புடைத்தன. இதே வலி அகிலனுக்கு தந்திருக்கின்றோமென்ற எண்ணம் வரவில்லை.
கோபத்தில் பேனரை நோக்கி நடந்தான். அதை இழுத்து கிழித்துவிட வேண்டும் போல இருந்தது.
அருகிலிருந்த டீக்கடை முதியவர் சிரித்தபடி,
"என்ன தம்பி... மாப்பிள்ளை கட்அவுட்டைப் பார்த்துக்கிட்டு நிக்கிறீங்களே... நாளைக்கு கல்யாணம். தம்பி கல்யாணத்துக்கு இறங்கி வேலை பார்க்கறிங்களா?"
என்று இவர்களை பற்றி அரையும் குறையுமாக புரிந்தவர் கேட்டார்.
இனியன் ஒரு நொடி அவரைப் பார்த்தான். அங்கே இன்னும் நான்கு பேர் நின்றிருந்தனர். இப்போது ஏதாவது செய்தால்
ஊரே கூடிவிடும். அவன் முஷ்டியை இறுக்கமாக மூடிக்கொண்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் மீண்டும் பைக்கில் ஏறி வேகமாக கிளம்பினான்.
வீட்டிற்கு வந்து மதுராவிடம், "அவன் வேண்டுமின்னே பண்ணறான். நான் வச்ச கட்அவுட் அவனை காயப்படுத்தியதால, இப்ப அகைன் என்னை காயப்படுத்த செய்யறான்." என்று அறைக்கு வந்து சட்டையை கழட்டி மதுரா முகத்தில் வீசி கூறினான்.
"ஓ... அப்ப நீங்க அகிலன் மச்சானை காயப்படுத்த தான் நம்ம கல்யாணத்துல பேனரு எல்லாம் தெருவுக்கு தெரு வச்சிங்களா மச்சான்? ம்கூம்... அப்பறம் சொல்ல மறந்துட்டேன். நான் கூட கேள்விப்பட்டேன். பேனரா இருக்குனு பக்கத்து வீட்டு அக்கா சொல்லுச்சு. விசாரிச்சதுல, இங்க வந்தாங்களே அந்த காவ்யா அவங்க தான் ஏதோ... போட்டோ ஷூட் எல்லாம் வேண்டும்னு சொல்லி அகிலன் மச்சானை இப்படி தூக்க சொன்னதா கேள்விப்பட்டேன்.
நல்லா விசாரிங்க பேனர் வச்சது அகிலன் மச்சானா.. இல்லை.. காவ்யாவானு" என்று கூறினாள்.
இனியனுக்குமே அகிலன் தன்னிடம் மோத இப்படி ஆசைப்பட மாட்டான். காவ்யா தான் தன்னை வெறுப்பேற்ற செய்தது' என்று புரியவும் சற்று தணிந்தான்.
அதோட வாயை மூடினால் அது இனியனாக இருக்காதே. "அதென்னடி இன்னும் மச்சான் அகிலன் மச்சான்.?" என்று பல்லை கடிக்க, மதுராவோ "அவரும் சின்ன மாமன் மகன் தான். அந்த உறவு முறையில மச்சான் தான். உங்க நினைப்பு அசிங்கமா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை." என்றாள் வெடுக்கென.
"ஓ... அப்ப உங்க மச்சான் கல்யாணத்துக்கு போக மேடம் ரெடியா இருக்கிங்க" என்றான்.
மதுரா நிதானமாக அவன் கழட்டி எறிந்த உடையை எடுத்து துவைக்க போடும் கூடையில் போட்டு, "நீங்க போகணும்னா சொல்லுங்க. உங்க துணியை இஸ்த்திரி போட்டு வைக்கேன். எனக்கு போற நினைப்பு இல்லை... போதுமா" என்றாள்.
இனியனால் மதுராவை காயப்படுத்த முடியாது நின்றான்.
குளித்து முடித்தவன் நகம் கடித்து திருமணத்திற்கு செல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டியலிட்டான்.
தந்தையிடம் கேட்டதற்கு உன் கல்யாணத்துக்கு அதியமானும் தூரிகாவும் வந்தாங்க. நாம இப்ப போகலைன்னா ஊர்ல ஏதாவது ஏசுவாங்கனு யோசனையா இருக்கு. அந்த நேரம் முடிவு பண்ணுவோம்." என்று முடித்து விட்டார்.
அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது.
அதிகாலை மூன்று மணி இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதியமான் வீட்டிலும், திருமண மண்டபத்திலும் இரவு முடிந்து பகல் தொடங்கியதுபோல் பரபரப்பு ஆரம்பமாகி விட்டது.
மண்டப வாசல் முழுவதும் மாமர இலைத் தோரணங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. இரண்டு பக்கமும் வெட்டிய வாழைமரங்கள். நடுவே வண்ண விளக்குகள் மின்னிக்கொண்டேறிருந்தது.
வாசல் முழுவதும் மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
அதிகாலைக் குளிரில் அந்த பூக்களின் மணம் மண்டபம் முழுவதும் பரவி, வந்தவர்களை வரவேற்றது.
சமையல் கூடத்தில் ஏற்கனவே பத்து பதினைந்து பேராக வேலை ஓடிக் கொண்டிருந்தது.
பெரிய அடுப்புகளில் வெண்பொங்கல் கொதித்தது.
ஒருபக்கம் சாம்பார்.
மற்றொரு பக்கம் சட்னி.
பூரிக்கு மாவு உருட்டும் பெண்கள். வடை தட்டும் ஆண்கள். அடுத்த அடுப்பில் அக்காரவடிசல் மெதுவாக கிளறப்பட்டது.
நெய்யின் மணம் காற்றோடு கலந்து அனைவரின் பசியையும் தூண்டியது.
"சாம்பார்ல உப்பு பார்த்தீங்களா?"
"ஜாங்கிரி பாகு ரெடியா?"
"வாழை இலையை இன்னும் நூறு எடுத்துட்டு வாங்க." என்று சமையல்காரரின் குரல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது
மண்டப மேடையில் நாதஸ்வரக் கலைஞர்கள் ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருந்தனர். இசையால் மெதுவாக திருமண சூழலை உருவாக்க ஆரம்பித்தனர்.
அதற்கு இணையாக தவிலும் முழங்கியது. அந்த இசை கிராமத்தின் காலையையே புனிதமாக மாற்றியது.
மாப்பிள்ளை அறையில் வெள்ளை பட்டு வேஷ்டி.
அதற்கு பொருத்தமான சட்டை.
நெற்றியில் சந்தனம். கழுத்தில் மல்லிகை மாலை. அகிலன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
சுற்றிலும் ரகு, நண்பர்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தனர். அவன் மட்டும் வழக்கம்போல அமைதியாக இருந்தான்.
"மச்சான்..." என்று ரகு தோளில் தட்டினான்.
"என்னடா?". சலித்தான் அகிலன்.
"இன்னைக்கு கல்யாணம் டா...
இப்ப கூட முகத்துல சிரிப்பே இல்ல." என்றதும் அகிலன் சிரிக்க முயன்றான்.
அந்த நேரம் மீனாட்சி உள்ளே வந்தார். மகனை பார்த்ததும், ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.
கண்களில் நீர் துளிர்த்தது.
"என்னம்மா..." என்று அகிலன் எழுந்தான்.
"ஒன்னுமில்லப்பா..." என்று சொல்லியபடியே நெற்றியில் திருஷ்டி கழித்தார். "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..." என்று சொல்ல...
அகிலன் தாயின் கையை பிடித்தான்.
"அழாதீங்கம்மா. உங்க ஆசைகாகும் அம்பா ஆசைக்கும் சேர்த்து தானே இந்த கல்யாணம்." என்றான்.
"இது அழுகை இல்லடா...
சந்தோஷம். அப்பறம்... பெத்தவங்க ஆசைக்காக இந்த கல்யாணம் ஆனாலும், இது உனக்கான வாழ்க்கை. ம்ம்.. புரிதா" என்று அவனை உச்சி முகர்ந்தார்.
மணப்பெண்ணின் அறையிலும் இதே கூத்து நிகழ்ந்தது.
காவ்யா கண்ணாடி முன் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவள் தலைமுழுவதும் மல்லிகை. நெற்றியில் சுட்டி.
காதில் ஜிமிக்கி, கழுத்தில் நகைகள் மின்னியது. அகிலன் தேர்ந்தெடுத்த மரகதப் பச்சை நிற பட்டுப்புடவை அவளை இன்னும் அழகாக்கியிருந்தது.
அலங்காரம் செய்த பெண் கூட "மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." என்றாள்.
காவ்யா மெதுவாக சிரித்தாள்.
ஆனால் அவள் மனதில் வேறு எண்ணம். "இன்னும் சில நிமிஷத்துல நான் அகிலனோட மனைவி." அந்த எண்ணமே அவள் இதயத்துடிப்பை வேகப்படுத்தியது.
அதே நேரம் ராஜாராம் உள்ளே வந்தார். மகளை பார்த்ததும் அவரது கால்கள் நின்ற இடத்திலேயே நின்று விட்டன.
"டாட்.. நான் எப்படி இருக்கேன்." என்று காவ்யா கேட்டாள்.
ராஜாராம் பேச முடியவில்லை.
"என்னாச்சு?"
"ஒன்னுமில்லடா..." என்று சொல்ல முயன்றார்.ஆனால் குரல் உடைந்து போனது.
"நேத்து வரைக்கும் என் விரலை பிடிச்சிட்டு நடந்த குழந்தை...
இன்னைக்கு கல்யாண பொண்ணா உட்கார்ந்திருக்க. அதுவும் தமிழ் முறைப்படி கல்யாணம் மதுரையில. நீ ஜேனட்டை விட அப்பா வழியில தமிழ் பொண்ணா தான் இருக்க." என்று சொல்ல காவ்யாவின் கண்களும் கலங்கின.
"டாட்..." என்று எழுந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
"ஹேய்... மேக்கப் எல்லாம் கலைஞ்சிடும்." என்று சிரிக்க முயன்றார் ராஜாராம்.
ஆனால் இருவர் கண்களில் இருந்த கண்ணீரை மறைக்க முடியவில்லை.
காலை ஏழு மணிக்குள் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்ப ஆரம்பித்தது.
உறவினர்கள், ஊர்க்காரர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து மணமக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
இங்கு யாருக்கும் இனியன் காதலித்த பெண்ணை அகிலன் மணப்பதாக தெரியாதே. அதே போல அகிலன் ஆசைப்பட்ட மதுராவை தான் இனியன் வலுக்கட்டாயமாக மணந்த கதையும் அறியாது இருந்தனரே. அதனால் வெகு இயல்பாக வதந்திகள் பரவாமல் நிகழ்ந்தது.
முகூர்த்த நேரம் நெருங்க வாசலில் அதியமான் தனது அண்ணன் அண்ணியை எதிர்பார்த்தார்.
இளையமதியுடன் கல்யாண சுந்தரமும் நிலானியும் வந்திருக்க, அருளாளன்-வேல்விழி எழிலரசன் மூவரும் வந்திருந்தனர். இனியன் மதுரா மட்டும் வரவில்லை.
இனியனும் மதுராவும் வரவில்லை என்றதில் மீனாட்சி கூட சுணங்கினார்.
அதற்காக அருளாளனை வரவேற்கவும் தயங்கிவிட்டு, வேல்விழியையும் எழிலரசனையும் மனதார வரவேற்றார்.
மதினி இளையமதி குடும்பத்தையும் மரியாதை தரும் பொருட்டு சபையில் அழைத்து வந்தார்.
தூரிகாவோ மதுரவாணி வராமல் போகவும் முகம் வாட நின்றாள். "பெரிம்மா.. அண்ணா அண்ணி வரலை?" என்று கேட்க, வேல்விழி சங்கடமாய் நின்றார். அதிலே புரிந்துக் கொண்டார்கள், இனியன் திருமணத்திற்கு அகிலன் வரவில்லையே. அதனால் இனியன் மதுரா வராததை தவிர்த்துவிட்டனர்
முகூர்த்த நேரம் நெருங்க, பெண்ணை அழைஞ்சிட்டு வாங்க என்றதும் மாப்பிள்ளை அகிலனோ மெதுவாக காவ்யாவின் வருகையை ஏறிட்டான்.
காவ்யாவோ மீனாட்சி சொல்ல சொல்ல 'சபைக்கு இரண்டு கையை குவித்து வணக்கம் வைத்து, அவர் சொல்படி கேட்டு நடந்து வந்தாள்.
அகிலன் அருகே வந்து அமரவும், லேசான புன்னகை உதிர்க்க, அகிலன் அமைதியாக புன்னகைக்க முயன்று உதடு மட்டும் விரிந்தது.
மந்திரங்கள் ஒலிக்க, அதியமானோ "அண்ணே... நீங்களும் அண்ணியும் தாலி எடுத்து கொடுங்க. வீட்டுக்கு பெரியவங்க நீங்க தானே'' என்றார்.
அருளாளனோ திடுக்கிட்டு நிற்க சபையில் மறுக்க முடியாது, தடுமாறி நின்றவரை அவ்வூர் பெரியவர்கள் முன்னே நகர்த்தவும், வேல்விழியும் 'முன்னே போங்க' என்ற விதமாக தள்ள, தாலி எடுத்து கொடுக்கும் பொறுப்பில் நின்றார். அகிலனை கண்டு தாலி எடுத்து கொடுக்க, அவனுமே வாங்க பெரிப்பா வாங்க பெரிம்மா" என்று அழைத்தான். 'கெட்டி மேளம் கெட்டி மெளம' என்ற சப்தத்தில் அகிலன் பெரிப்பா நீட்டிய தாலியை புன்னகை முகமாக வாங்கி கொண்டவன், காவ்யாவை தன் சரிபாதியாக ஏற்றுக் கொள்ள இரண்டு முடிச்சிட்டான்.
மூன்றாவது முடிச்சை தூரிகா போட அழைக்க, அவளோ அண்ணனை பார்த்து தவிர்க்க இயலாமல், காவ்யாவை பார்த்
து மூன்றாவது முடிச்சிட்டு எழுந்தாள்.
தாலி இதயத்தில் தவழ, அகிலன் கையை காவ்யா ஒரு ஆதரவுக்கு பற்றினாள். அகிலனுமே அவளது சில்லென்ற கையில் அவளது பதட்டம் தெரிய கையை விடுவிக்கவில்லை.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 38)
ஐய்.. ஒருவழியா அகிலன் காவ்யா கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு.
இதுல ஹைலைட்டே என்னன்னா
அகிலனோட அப்பா, தன்னோட அண்ணா அண்ணியை வீட்டுக்கு பெரியவங்கன்னு தாலி எடுத்துக் கொடுக்கச் சொல்லி சபை மரியாதையை நிறைவேத்தி தன்னோட வெற்றியை பறைசாற்றியது தான்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல்
அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 38)
ஐய்.. ஒருவழியா அகிலன் காவ்யா கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு.
இதுல ஹைலைட்டே என்னன்னா
அகிலனோட அப்பா, தன்னோட அண்ணா அண்ணியை வீட்டுக்கு பெரியவங்கன்னு தாலி எடுத்துக் கொடுக்கச் சொல்லி சபை மரியாதையை நிறைவேத்தி தன்னோட வெற்றியை பறைசாற்றியது தான்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல்
அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
