Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-17

1 Posts
1 Users
0 Reactions
2 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#234]

அத்தியாயம்-17

   ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.

'இன்னும் இரண்டு அடி..' நெருங்கினால் போதும். குழந்தையோடு இருந்த ஷ்ரத்தாவை ஒரே குத்தில் முடித்துவிடலாம்.

அந்த நேரம் "ஆஷா." என்ற கார்த்திகாவின் குரல் பின்னால் ஒலித்தது. ஆஷா திடுக்கிட்டு திரும்பினாள்.

ஒரு நொடி பதறியவள், எதுவும் தெரியாதது போல கத்தியை மறைக்க முயன்றாள்.

ஆனால் கார்த்திகாவின் கண்கள் அதற்குள் அதை பார்த்துவிட்டிருந்தது.

"என்ன மறைக்கிற?" என்று மெதுவாக நடந்து வந்தாள்.

ஆஷா ஒரு கணம் தயங்கினாள்.

அடுத்த நொடியே அட்டம்ட் பெயிலானால் அதுவேறு தனக்கு இழிவென, கார்த்திகாவை புறம் தள்ளி 'சாவுடி!" என்று கத்திக்கொண்டு நேராக ஷ்ரத்தாவை நோக்கி பாய்ந்தாள்.

அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அடுத்த நொடியில் மூன்று பெண் கைதிகள் ஒரே நேரத்தில் ஷ்ரத்தாவின் முன்னால் சுவராக வந்து நின்றனர். கிட்டதட்ட அரணாக.

ஒருத்தி ஆஷாவின் கையை முறுக்கினாள். மற்றொருத்தி அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தாள். மூன்றாவது கைதி அவளது கால்களை வாரிவிட,

ஆஷா சமநிலை இழந்து தரையில் விழுந்தாள். எழுந்திருக்க முயன்றவளை மூவரும் சேர்ந்து மண்டியிட வைத்தனர். அவளது கையில் இருந்த கத்தி தரையில் விழுந்து உருண்டது.

அந்த நேரம் கார்த்திகா மெதுவாக அருகில் வந்தாள்.

அவளது முகத்தில் கோபமோ பதற்றமோ எதுவுமில்லை.

மாறாக பதட்டமில்லாத அமைதி மட்டும் இருந்தது.

ஆஷாவின் முகத்தை பார்த்தவள் மெதுவாக குனிந்தாள். "என்ன போட்டு தள்ள வந்தியா?" என்று கேட்டாள்.

ஆஷா மாட்டிக் கொண்டதற்கிணங்க நிற்க "முதல்ல.. இந்த ஜெயிலுக்குள்ள யாரை கொல்ல வர்றேன்னு தெரிஞ்சிட்டு வரணும். ஆங்" என்று அதட்டினாள்.

பிறகு அந்த மூன்று கைதிகளையும் பார்த்து கண் காட்டியபடி, "பாத்ரூம்ல... கால் தடுக்கி கீழ விழுந்து... பின்மண்டை உடைஞ்சு செத்திருக்கணும். டெத் ரிப்போர்ட் எடுத்தா.. அப்படித்தான் வரணும். காட் இட்" என்றதும் மூவரும் அமைதியாக தலையசைத்தனர்.

ஆஷாவின் வாயை இறுக பொத்தி இழுத்துச் சென்றனர்.

ஆஷா இதற்கு தண்டனை தான் வரும பார்த்தால் மரணமா? என்று பயந்தாள். ஆனால் கதறல் கூட வெளியில் கேட்கவில்லை.

அத்தனை நேரமும் தள்ளி நின்றபடி ராயனுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா மட்டும் ஒன்றும் நடக்காதது போல அமைதியாக இருந்தாள்.

குழந்தை பால் குடித்து முடித்ததும், அவனை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி கார்த்திகாவை நோக்கி நடந்தாள்.

"தேங்க்ஸ்..." என்றாள். கார்த்திகா திரும்பிப் பார்த்தாள்.

"எதுக்கு?" என்று புருவம் சுருக்கினாள். 

"எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்தது. இன்னைக்கு புது கைதி ஆஷா வந்து அதை தீர்ந்து வச்சிட்டாங்க." என்றாள். 

"நீங்க... வினோத் அண்ணா மூலமா... என்னை பார்த்துக்கணும்னு இங்க வேலைக்கு வந்தவங்க தானே? நீங்க... அந்த மூணு கைதிகளும், அதே காரணத்துக்காகத் தானே உள்ள இருக்கிங்க." என்று கேட்டாள்.

கார்த்திகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பிறகு தலையிலிருந்த தொப்பியை சரி செய்தவள்

"சாரி டூ சே... வினோத் சாரை... இப்ப யாராலயும் பார்க்க முடியாது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்கார்னு. ஹரிணி சொன்னாங்க. அதுக்கு மேல... எனக்கும் எதுவும் தெரியாது."

சிறிது இடைவெளி விட்டாள் "ஆனா... எங்க குடும்பத்தோட செட்டில்மெண்ட்... மாத வருமானம்... எல்லாமே முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு... அது யாருனு தனியா சொல்ல தேவையில்ல.. அதனால‌‌.. உங்களையும் உங்க குழந்தையையும் பாதுகாப்பா வைத்திருக்கறது. எங்க பொறுப்பு." என்று குரலை சற்றுக் கடினப்படுத்தினாள்.

"இதை அட்வான்டேஜா எடுத்துட்டு... என்னை கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதிங்க.. மத்தவங்களுக்கு எங்க மேல சந்தேகம் வராம இருக்கறதும்,  எங்க வேலைதான். சோ... நீங்க தள்ளியே நில்லுங்க மேம். நாங்க.. தள்ளி போகமாட்டோம். என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவள் சென்ற பின்பும், ஷ்ரத்தா அங்கேயே நின்றாள்.

தன்னையோ, தன் குழந்தையையோ, கொல்ல வந்தவர்கள் இங்கே இருப்பது கூட அவளுக்கு புதிதல்ல.

ஆனால் அவர்களை தடுக்க, ஏற்கனவே இத்தனை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருப்பது.

இன்று தான் முழுமையாக புரிந்தது. இதை செய்ய சத்ரியன் எந்தளவு யோசித்திருப்பான். ஐரீனை காப்பாற்ற முற்படும் முன்பே அதற்கு பின்னால் நேரும் ஆபத்தும் இழப்பும் அறிந்தவனாக பாதுகாப்பு செய்து விட்டு சென்றவனை எண்ணி வியந்தாள்.

அதன்பிறகு ராயனை வளர்ப்பதில் இருந்த பயம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. அவனை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு சில நேரமாவது நிம்மதியாக தூங்க கற்றுக்கொண்டாள்.

அடுத்த நாள் பேப்பரில் ஆஷா என்ற கைதி பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம் என்ற சின்னதான கட்ட செய்தியுடன் ஆஷா சேப்டர் முடிவடைந்தது.

நாட்கள்.. மாதங்களாக மாறின.

ராயன்... சின்ன சின்ன சிரிப்புகளை சிரிக்க ஆரம்பித்தான். கால்களை எட்டி உதைத்து விளையாடினான். குப்புற படுத்து தலையை தூக்க முயன்றான். அவன் செய்த ஒவ்வொரு அசைவும்...

ஷ்ரத்தாவுக்கு வாழ வேண்டிய காரணமாக மாறியது.

எல்லாருக்கும் அவன்...

'ராயன்.' என்றாலும் ஷ்ரத்தாவுக்கு மட்டும்...

'ரியன்.' ஆனான். சத்ரியனின் பெயரின் கடைசி ஒலி.

அவள் உயிராய் நேசித்த மனிதனின் நினைவு.

"ரியன்..." என்று அழைத்தாலே... சத்ரியனையே அழைப்பது போல இருந்தது.

அப்படியே... ராயன் உட்கார கற்றுக்கொண்டான்.

தவழ்ந்தான். பிறகு மெல்ல மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.

ஒவ்வொரு நாளும அவன் சிறைக்குள்ளே வளர்ந்தான். அவனோடு ஷ்ரத்தாவின் தாய்மையும் வளர்ந்தது.

யதுநந்தன் மாதம் இரண்டு முறை தவறாமல் வந்தான். குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்தான்.

ஷ்ரத்தா எடுத்த புகைப்படங்களை ஹரிணிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். ஹரிணி அதற்கெல்லாம் பதில் கூட அனுப்பவில்லை. 

ருத்ரன் கூட வாரமிரு முறை வந்தான். ஆனால் ஷ்ரத்தா ருத்ரனிடம் அதிகம் பேசவில்லை. "கீர்த்தனா அம்மா வரலையா?" என்று மட்டும் கேட்பாள்.

கீர்த்தனா தான் ருத்ரனின் விருப்பம் தெரிந்து ஷ்ரத்தாவின் பெயரையே அவர் நினைவிலிருந்து மீட்க நினைத்தார். அதனால் சிறைக்கு வந்து பார்ப்பதை அறவே விட்டுவிட்டார்.‌

ருத்ரன் ஷ்ரத்தா கேட்கவும் "ரிலேட்டிவ் ஃபங்க்ஷனுக்கு போயிருக்காங்க."

"உடம்பு சரியில்ல."

"உன்னை பார்த்துட்டு வர சொல்லியிருந்தாங்க."

என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புது காரணம் சொல்லி சமாளித்தான்.

வாரம் ஒரு முறை ருத்ரனும், மாதம் இரண்டு முறை

யதுநந்தனும், இருவரும் மாறி மாறி வந்து சென்றனர்.

கீர்த்தனா மட்டும் வரவே இல்லை. அது ஷ்ரத்தாவுக்கு சிறிய சந்தேகத்தை கொடுத்தாலும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

குழந்தை ராயன் அவளது உலகம். அவனது உலகை காக்கா அங்கே மூன்று பெண் கைதி இருக்க, கார்த்திகா இருக்க சிறைசாலைக்குள்ளே அவளது வீடாக உணர்ந்தாள். 

ஒருநாள் கார்த்திகா கேட்டதற்கிணங்க, ஹரிணி மட்டும் வந்தாள். ஷ்ரத்தாவின் முதல் கேள்வியே... "வினோத் அண்ணா எங்க ஹரிணி?" என்று ஆசையாக கேட்க, ஹரிணியின் கண்கள் கலங்கின.

மெதுவாக 'ஒரு நாள் வெளியே போனார். அதுக்குப் பிறகு திரும்ப வரலை. அதனால தான் அவர் இல்லாம நான் வர தயங்கியது' என்ற வாசகத்தை தட்டச்சு செய்து காட்டினாள். 

  அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை மீண்டும் உடைத்தது.

பேச்சை மாற்றுவதற்காக ஹரிணியே, ஒரு தூரிகை புகைப்படத்தை எடுத்து நீட்டினாள் ஹரிணி.

அதில் ஷ்ரத்தா. ராயன் அவர்களுக்கு அருகில். 

சத்ரியன். உயிரோடு நின்றது போல தத்ரூபமாக வரையப்பட்டிருந்தான்.

"எப்படி வரைஞ்ச?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஷ்ரத்தா. ஹரிணி மெதுவாக விரக்தியாக சிரித்தாள்.

"சத்ரியன்... என்னை நெருங்கினப்ப, என்னால கத்த முடியல. ஆனா... அவரை பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு உருவத்தை... பத்து நிமிஷத்துக்கு மேல பார்த்தா... அதை அப்படியே வரைய முடியும். அதான்... அவரோட உணர்வையும் இதுல வரைஞ்சேன்." என்று போனில் தட்டச்சு செய்து கூறினாள். 

ஷ்ரத்தா அந்த ஓவியத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அதே நேரம்... ஹரிணியிடம் சத்ரியன் அத்துமீறிய நினைவும்... வினோத் மீண்டும் வருவாரா இல்லையா.. என்ற கேள்வியும் ஷ்ரத்தா மனதை மீண்டும் நொறுக்கியது.

ஹரிணி சென்ற பிறகு. அந்த ஓவியத்தை தனது உடமைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கச் சொல்லி சிறை அதிகாரியிடம் தந்துவிட்டாள். 

ராயனின் கையை பிடித்தபடி,

மெதுவாக சிறைக் கம்பிகளை நோக்கி நடந்தாள்.

  இன்னமும் அவளது தண்டனை காலம் இருக்கின்றதே..!

நாட்கள் நகர, வெளியுலகில் ருத்ரனை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிய சேகர், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. 

ராயன் கொஞ்சம் வளர்ந்திருந்தான்.

சிறைக்குள் இருந்தாலும்...

அவன் சிரிப்பு மட்டும் அந்த இடத்தின் இருளையே விரட்டும் அளவுக்கு இருந்தது.

"ரியன்... ஓடாத!" என்று ஷ்ரத்தா கத்தினாள். ஆனால் அவனோ இப்பொழுது எல்லாம் கேட்பது போலவே இல்லை.

சிறை வளாகம் முழுக்க தளதளவென்று ஓடிக் கொண்டிருந்தான்.

பின்னால் இரண்டு பெண் கைதிகள், "டேய் குட்டி... நில்லுடா!" என்று சிரித்தபடி துரத்திக் கொண்டிருந்தனர்.

ராயன் மட்டும் கலகலவென்று சிரித்தபடி ஓடினான்.

நேராக கார்த்திகாவின் முன்னால் வந்து நின்றான்.

"கார்த்தி." என்று அவன் அழைக்க, "மேம் சொல்லு." என்று கம்பீரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கார்த்திகா.

"இல்ல." என்று தலையாட்டியவன், சட்டென்று அவளது போலீஸ் தொப்பியை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டான்.

"நான் போலீஸ்!" என்று கத்தினான். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

"அடேய்... ராயன் என் தொப்பியை குடு." என்று கார்த்திகா பிடிக்க வர, "என்னை பிடிக்கவே முடியாது." என்று மீண்டும் ஓடினான்.

ஓடிக்கொண்டே, "எல்லாரும் லைன்ல நில்லுங்க..." என்று கார்த்திகாவை போல கையை காட்டி கட்டளை போட்டான்.

பெண் கைதிகளும் அவனுக்காக வரிசையாக நின்றனர். "சார்... இப்போ போதுமா?" என்று ஒருவர் கேட்க,

ராயன் கம்பீரமாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நடந்தான்.

ஒவ்வொருவரையும் பார்த்து, நல்ல பிள்ளையா இருக்கணும். காட் இட்" என்று அறிவுரை சொல்ல, அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது.

அதே நேரம் கார்த்திகா பின்னாலிருந்து மெதுவாக வந்து, அவனை அப்படியே தூக்கிக் கொண்டாள்.

"அய்யோ... பிடிச்சிட்டாங்க! அம்மா" என்று ராயன் கத்த,

"போலீஸ்கிட்டயே போலீஸ் விளையாட்டு விளையாடுறியா?" என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.

"தொப்பி..." என்று அவள் கையை நீட்ட, "முத்தம் குடுத்துட்டு எடுத்துக்கோங்க." என்று பேரம் பேசினான்.

"அப்படியா?" என்று சிரித்த கார்த்திகா, அவன் இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். உடனே தொப்பியை கழற்றி அவளது தலையில் வைத்தான்.

"குட் பாய்." என்று கார்த்திகா சொல்ல, "நான் குட் பாய் இல்ல..." என்று தலையசைத்தான்.

"அப்ப?"

"நான்... சத்ரியன் அப்பாவோட லிட்டில் பாய்!" என்று பெருமையாக சொல்லிவிட்டு சிரித்தான்.

அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் கண்களை கலங்க வைத்தது. அவளுக்கே தெரியாமல் கண்கள் ஈரமானது.

கார்த்திகாவும் சில நொடிகள் அமைதியாக ராயனை பார்த்தாள்

அவனுக்கு தான் தந்தையின் முகமே தெரியாது.

ஆனால் தன் தாயின் வாயிலிருந்து தினமும் கேட்ட அந்த பெயரை மட்டும் பெருமையாக சொல்லக் கற்றுக் கொண்டிருந்தான்.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : July 27, 2026 7:40 am

Scroll to Top