மதுர ஜில்லா... மச்சானே!-45
அத்தியாயம்-45
அகிலன் இந்த சட்டென்ற மாறிய வானிலை போல நிகழ்ந்த 'கன்னத்து முத்தம்' எதிர்பார்க்கவில்லை. அதுவும், இன்னமும் காவ்யாவின் பட்டு போன்ற இதழ்கள் அவனது கன்னத்திலிருந்து விடுபடாமல் ஒட்டிக்கொண்டிருக்க, உடலெல்லாம் சிலிர்ப்பு ஏற்பட்டது.
"அகிலன் எங்கங்க." என்ற அன்னையின் குரலில் ''ம்மா." என்று விலக நினைத்து சட்டென்று நகர, காவ்யா அவனது பனியனை பிடித்த பிடியை இன்னமும் தளரவிடாமல் பிடித்து அவள் பக்கமே இழுத்திருந்தாள்.
அதன் காரணமாக அகிலன் விலக நினைத்து லேசாக விடுபட்ட கன்னம் மீண்டும் அவளது இதழிலேயே உரசியது.
"அ.. அம்மா கூப்பிடறாங்க" என்றான்.
"தெரியுது... ஆனா விடமனசில்லை. நீங்களா கையை தட்டி விட்டுட்டு போங்களேன்" என்றாள்.
அகிலனுக்கோ 'ஏதே.. தட்டி விட்டுட்டா... அப்பறம் ஆயுசுக்கும் என்னைக்காவது இது சண்டையா வந்தா? ஏற்கனவே பைக்ல ஒத்தப்பக்கம் கால் போடுனு சொல்லவே மூஞ்சி தூக்கின ஆளு.' என்று மனம் அடித்துக் கொண்டது.
இன்னும் கொஞ்சம் நேரம் விட்டால் அன்னை கதவு திறந்திருக்க அறைக்கு வந்தாலும் வந்திடுவார்கள். என்ன செய்ய என்று மின்னல் வேகத்தில் மூளை செயல்பட, மூளை அந்த நேரம் எவ்விதமான சிந்தனைக்குள்ளும் சிக்கவில்லை. மாறாக மனமோ அதிவேகமாக துடித்தது.
மூளைக்கு எதுவும் பளிச்சிடாமல் போக மனமோ, 'ரிட்டர்ன் கிப்ட்' கொடுத்துடு அகிலா வேறவழியில்லை' என்றது.
அவன் பார்வைக்கு அவளது சங்கு கழுத்து தான் தென்பட்டது. அதிலிருந்த சிறுதுளி வேர்வை, வைரம் போல மின்னியது.
நொடியும் தாமதிக்காமல், அவளது கழுத்தில் மீசை பட்டும் படாமலும் ஒரு குறுகுறுப்பை தருவித்து முடிக்க, காவ்யா பிடி நழுவியது.
அகிலன் எதிர்பார்த்த நழுவல் வேலை செய்யவே "ரிட்டர்ன் கிஃப்ட்" என்று புன்னகைத்து விட்டு "அம்மா" என்று ஓட்டமெடுத்து ஓடினான்.
அவன் அன்னை எதிர்பார்த்தது போலவே இவனை தேடி கதவருகே வந்தவரை இடிக்காமல் காலில் தரையை ஊன்றி நின்றிட, "இங்க தான் இருக்கியா. யாரோ வேளாண்மை துறை அதிகாரிகள் வந்திருக்காங்கப்பா.
நீ ஏதோ மண் டெஸ்ட் எடுத்து, தரிசு நிலத்திலும் பயிரை செழிக்க வைக்க வரச்சொல்லியிருந்ததா ரகு கூட்டிட்டு வந்திருக்கான்." என்றார்.
"வந்துட்டேன்மா உட்கார சொல்லுங்க. டீ காபி கேட்டு கொடுங்கம்மா. இப்ப வந்துடறேன்." என்று அனுப்பினான். அப்பொழுது தான் அவன் சட்டை அணியாமல் இருப்பதை கவனித்து 'சரிப்பா' என்று சென்றார்.
மடமடவென சட்டையை எடுத்து பட்டனை அணிந்தான்.
காவ்யாவுக்கு அவன் வெளியே செல்லப் போவதை புரிந்துக் கொண்டாள். ஆனாலும் அவன் ஊர்வலம் செலுத்திய கழுத்து பகுதியோ இன்னமும் கூச்சத்தை தரவும் அவனையே ஏறிட்டாள்.
"வெளியே போக வேண்டிய வேலை வந்துடுச்சு. வந்துடறேன்" என்று கூறிவிட்டு சென்றான். காவ்யா அழகாக வெட்கப்பட்டு தலையாட்டிடவும் புன்சிரிப்பில் வெளிவந்தான்.
ஹாலில், "வாழ்த்துகள் தம்பி.. நேத்து தான் கல்யாணம் ஆனதா அம்மா சொன்னாங்க. சாரி.. இடைஞ்சல் பண்ணிட்டோமா?" என்றார் வந்தவர்.
ஏற்கனவே சந்தித்து பேசியதால் எதார்த்தமாக கேட்டார்.
"அச்சோ.. பரவாயில்லைங்க. இது சம்பந்தம்மா ஏற்கனவே பேசியதால வேலை தடைப் படக்கூடாதுனு நான் தான் தேதியை மாத்தாம உங்களை வரச்சொல்லிட்டேன்." என்றான்.
ஆளாளுக்கு டீயை பருகிவிட்டு, அப்ப பஞ்சாயத்து ஆபிஸுக்கு வாங்க. அங்க தரிசு நிலத்தை வச்சிட்டு எதுவும் சாகுபடி பண்ணாம இருக்கற சில விவசாயிகளை வரச்சொல்லியிருந்தேன். பார்த்துட்டு பேசுங்க" என்று உடனடியாக ஆளாளுக்கு வந்த காரில் புறப்பட, அகிலனும் தனது இருசக்கர வாகனத்தை இயக்கினான்.
லேசான புன்முறுவல் அவன் முகத்தில் கூடியது.
வழிநெடுக, கன்னத்தில் சில்லென்ற பனிக்கட்டி இன்னமும் சில்லிட்டது போல தோன்றியது.
'நினைப்பு பிழைப்பை கெடுத்துடக்கூடாது' என்று சொல்லிக் கொண்டாலும் காவ்யாவை நினைத்துக் கொண்டு தான் பயணித்தான்.
அங்கே இவன் எதிர்பார்த்த சில விவசாயிகள் வந்திருந்தனர்.
என்ன தான் விவசாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்னாலும் அது பாகற்காயாக தள்ளிவிட்டு காதில் வாங்காத உலகத்தில் தான் இருக்கின்றோம்.
அதனால் சிலர் தரிசு நிலத்தையும் விளை நிலமாக மாற்ற யாராவது எடுத்து சொல்ல ஆள் வந்தால் அகிலனை போல முயற்சிப்பார்களென்று வரவழைத்திருந்தான்.
அந்த கூட்டத்திற்கு மத்தியில் தான் அழைத்து வந்த வேளாண்மை துறை அதிகாரிகள் சிலரை மேடையில் அமர வைத்தான். பிறகு புரஜெக்டர் எல்லாம் ஏற்பாடு செய்து, வைத்து, மைக்கில் "நம்மூர் மக்களுக்கு வணக்கம். நம்ம ஊர்ல தரிசா கிடக்குற சில நிலத்தை இந்த வருஷம் சாகுபடிக்குக் கொண்டு வரணும். வேளாண்மை அதிகாரியை வரவழைக்கிறேன்னு சொல்லியிருந்தேன். இந்தா.. கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு மதிப்பளித்து, எங்கவூருக்கு வந்த அதிகாரிகளுக்கு வணக்கம்." என்று அமர்ந்திருந்தவர்களுக்கு வணக்கம் வைத்து மீண்டும் பேசினான்.
"எல்லாருக்கும் அவங்க அவங்க நிலத்தோட மண் பரிசோதனை பண்ணி, எந்த நிலத்துக்கு என்ன உரம் வேணும்னு பார்த்து, கூட்டுறவு சங்கம் மூலமா மானிய உரம் வாங்கித் தர்றதுக்கு ஏற்பாடு பண்ண தான் இந்த கூட்டம்.
பெரிய அதிகாரிங்க இப்ப பேசுவாங்க. அப்பவும் புரியாம இருந்தா தான் இந்த படம். படம் மூலமா எளிமையா விளக்கமளிப்பாங்க. ஏதாவதுனு என்கிட்ட கேளுங்க" என்று பேசி முடித்தான்.
அதிகாரிகளில் நால்வர் வந்திருக்க, அவர்களில் இருவர், விவசாயிகளுக்கு அரசு மானிய உரம் (யூரியா, DAP, பொட்டாஷ்) கிடைக்க வேளாண்மைத் துறையுடன் பேசி ஏற்பாடு செய்வது பற்றியும், தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வர மண் பரிசோதனை (Soil Test) நடத்துவது எப்படி என்பதையும், மண் பரிசோதனை அறிக்கையின்படி எந்த உரம், எந்த சத்துக்குறை உள்ளது என்று விவசாயிகளுக்கு விளக்கினார்கள்.
இயற்கை உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்தனர். விதைகள், நாற்றுகள், வேளாண் கருவிகள் போன்றவற்றை மானிய விலையில் வாங்கித் தர உதவுவதாகவும் பேசி முடித்தனர்.
இவ்வாறான வேளாண்மை அதிகாரிகளை ஊருக்கு வரவழைத்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தினான்.
அதிலேயே பாதி நேரம் கழிய, பிறகு அவரவர் நிலத்தில் உள்ள மண்ணை டெஸ்டிற்கு தந்துவிட்டு சென்றனர்.
அதையெல்லாம் கலெக்ட் செய்து பெட்டியில் எடுத்துக் கொண்டனர்.
"சார் அப்படியே வாங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போங்க" என்றார்.
முதலில் மறுக்க பிறகு கல்யாண சாப்பாடு விட்டு சென்றதாக கூறி இன்று சாப்பிட அழைத்தான். அவர்களும் முதலில் மறுப்பு தெரிவித்து பிறகு அகிலனின் வற்புறுத்ததில் வந்தனர்.
வீட்டுக்கு வந்ததும், மீனாட்சி பரிமாறினார்.
காவ்யா வேடிக்கை பார்த்தபடி, சுடிதாரை முடிச்சிட்டு இருந்தாள்.
"அம்மா.. காவ்யா சாப்பிட்டாங்களா?" என்று கேட்க, 'ம்ம் சாப்பிட்டாச்சு." என்று கூறினார்.
"இதென்ன அகிலன் மரியாதையா 'ங்க' போட்டு கூப்பிடறிங்க'' என்று காரணம் கேட்க "அது.." என்று இழுத்து ராகம் பாடியவனுக்கு ரகுவோ, "அதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் தயவால பொட்டப்பிள்ளையை சில நேரம் மரியாதை தந்து கூப்பிடறது தான். தூரிகாவையே சமயத்துல அப்படி தான். எங்கம்மா இருக்கேன்னு கேட்பான்" என்று வாய்க்கு வந்ததை சமாளிக்க, "ஏன் மச்சி மனசு விட்டு பேசி தங்கச்சியிடம் ஒன்னும் மண்ணா இருந்தா இந்த மரியாதை இல்லாம பேச்சு வரும். பாரு.. இடத்தை மறந்து பேசற. யாராவது கவனிச்சு நைட்டு ஒனனும் நடக்கலைனு கணிக்கவா?" என்று கிசுகிசுக்க 'சும்மாயிருக்க மாட்டியாடா." என்று கண்டித்தான்.
காவ்யாவோ மாலை வரை அறைக்குள் இருந்தால், மற்றவர்கள் வந்து சென்றப்பின் அகிலன் அறைக்குள் வந்த நேரம் காவ்யா உறங்கியிருந்தாள்.
சட்டை பட்டனை கழட்டி, கடிகாரத்தை மேஜையில் வைத்தவன், 'இந்த உறவு சரியா தவறா என்று யோசிக்கறதுக்கு முன்ன கல்யாணமே முடிஞ்சிடுச்சு. இதுல முத்தம் வேற. ரொம்ப தான் தைரியம் இந்த புள்ளைக்கு." என்று புன்னகை பூத்தான்.
காவ்யா புரண்டு படுக்க, அகிலன் மெத்தையில் இருந்து எந்திரிக்கவும் சரியாக இருந்தது.
"எப்ப வந்திங்க?" என்று கேட்க, "மதியமே" என்றான்.
"மதியம் சாப்பிட வந்ததை கேட்கலை. ரூமுக்கு எப்ப வந்திங்கனு கேட்டேன்." என்று சிகையை அள்ளி முடித்தாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்ன" என்றான்.
"ரிசப்ஷனுக்கு கோர்ட் கலர்" என்று நீட்ட, அதில் அவனது முகமும் உடையும் சேர்த்து அவளாக இணைத்து வைத்து, ஒரு மாடலை உருவாக்கி காட்டவும், அவளை பார்த்துவிட்டு, "நல்லாயிருக்கு
உங்களோட கவுன்" என்றான்.
"உன்னோட கவுன்னு கேளுங்களேன்" என்றாள்.
அகிலனோ மதியம் பேசியதை கேட்டுயிருப்பாளோ என்னவோ என்று "உன்னோட கவுன்" என்று கேட்டான்.
அதையும் அவள் வடிவமைத்து அணிந்திருப்பதை காட்டினாள்.
''ஏஐ வந்ததிலருந்து எல்லாமே அதோட ஆதிக்கமா போச்சோ. இந்த டிரஸ்ல எப்படியிருப்போம்னு ஒரு முன்மாதிரி காட்டுது" என்று கேட்டான்.
தோளைக்குலுக்கி சிரிக்க, "அம்மா அப்பா தூரிகா வரமுடியாம போகும். அதான் கவலை." என்றான்.
"ஏன் உங்க தங்கச்சியாவது வரசொல்லலாமே" என்றாள்.
"இப்ப அவளுமே வரமாட்டா" என்று பேசினான்.
"ஏன் அவ வரமாட்டா?" என்று கேட்டாள்.
"மதுராவை விட்டு வந்ததும், ஏதாவது மனசுல போட்டு உழப்புவா. மதுரா தூரிகா நல்ல தோழிங்க. இப்ப கூட வராம அங்கனயே இருக்கு." என்று கூறினான்.
"நல்ல பிரெண்ட்ஸ்... அந்த பொண்ணு மதுரா உங்களை மேரேஜ் பண்ணிருந்தா இன்னமும் நல்ல பிரெண்ட்ஸா இருந்திருக்க வாய்ப்புண்டு." என்றாள்.
"நீ சாப்பிட்டியா? ஈவினிங் டீ காபி குடிக்கலையா?" என்றான்.
"பேச்சை மாத்தாதிங்க" என்றாள்.
"முடிந்ததை பேசி ஆகப்போறது இல்லை காவ்யா." என்றான்.
"எப்பவும் பேச மாட்டிங்களா?" என்று கேட்டாள் காவ்யா.
"சொல்லணும் நினைச்சேன்... அதென்ன.. முத்தம் கித்தம் கொடுத்தா கதவு திறந்திருக்குனு பார்க்கறதில்லையா? இதுல பிடிவாதம் வேற. உடும்பு மாதிரி பனியனை பிடிச்சிட்டு" என்றான்.
காவ்யா வெட்கம் கொண்டவளாக நிற்க, "நீங்க தான் எஸ்கேப் ஆகறிங்களே" என்றாள்.
அகிலன் நிதானமாக அவளருகே அமர்ந்து, "நிறைய குழப்பம் இருக்கே காவ்யா. இந்த மனசுல நினைச்சவளுக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா பயந்து உள்மனசு 'நீ முன்ன போய் விசாரி'னு உந்துது. ஆனா அதுமாதிரி ஏதாவது செய்து 'இருக்கற கஷ்டத்தை கூட்டிடாத'னு புத்தி தடுத்து நிறுத்தது.
இதுல இனியன் கட்டிக்கிட்டதும், முறை வேற மாறிடுச்சுல. அத்தை பொண்ணு என்றதை தாண்டி அண்ணி முறை ஆகுது. இந்த நேரத்துல மனசுல ஏதாவது ஒரு அழுக்கு வந்து உசுரை வாங்கிடக் கூடாதுனு தான் பொண்ணு பார்க்க சொன்னேன். ஆனா நீயா வந்து கட்டிக்கறேன்னு கேட்டதும், அம்மா என்ன யோசிச்சுதோ, தப்பென்னனு கேட்டு முடிவெடுத்துட்டாங்க.
ஆனா வெளியே சிரிச்சு பேசினாலும், நீயுமே என்னை மாதிரி உள்ளுக்குள்ள சிக்கிட்டு தான் இருப்ப? அதுக்குள்ள ஆரம்பம் இல்லாம முடிவை நோக்கி போகமுடியாதே.
இதுல நீ அமெரிக்கா வெளிநாடுனு சுத்தினவ. நான் மதுர ஜில்லாக்குள்ள சுத்தினவன்.
இப்ப நீயும் நானும் வாழ்க்கையை நிரந்தரமா எங்க அமையும்னு பேசிக்கவேயில்லை. முதல்லயே சொல்லிடறேன். என்னை பெத்தா அப்பா அம்மா தங்கச்சி, ஊரை விட்டு என்னால பத்து நாளைக்கு மேல வெளிநாட்ல இருக்க முடியாது.
நீயும் இந்த மாதிரி யோசிக்கலாம். நாம இந்த சிக்கலை பேசிக்கவேயில்லை. ஊருக்கு இனியனை பார்த்து திட்டி தீர்த்து, இந்தியாவை சுத்தி பார்க்க வந்தவ நீ. இந்த இரண்டு மாசத்துல எல்லாமே மாறிடுச்சு. இப்ப அடுத்த வாரம் ரிசப்ஷனுக்கு அங்க கிளம்பற வரை வந்துட்டோம்.
நீ அங்கயே இருக்க ஆசைப்படுவியா? இல்லை இந்த மதுர உனக்கு செட்டாகுமா?" என்று வினாத்தொடுத்தான்.
"நான் இங்க வந்தப்பிறகு நீங்க இவ்ளோ லென்தியா பேசியதை இன்னிக்கு தான் பார்க்கறேன். ஆனா எல்லாத்தையும் மறந்துட்டிங்க. மறந்துட்டிங்களா.. இல்லை.. என் வாயால ஆமோதிப்பான பதில் வேண்டும்னு ஆசைப்படறிங்களா எனக்கு தெரியலை.
இங்க வந்தப்பவே கல்யாணத்தை பத்தி பேசறப்ப, இந்த உறவு சிக்கலை சொல்லிட்டேன். சோ.. உங்களுக்கு மதுரா அண்ணி முறை, நான் இனியனுக்கு தம்பி பொண்டாட்டி.. இதெல்லாம் தெரிந்து தான் கல்யாணம் நடந்துச்சு.
நீங்க எங்கப்பா பேசியதை கவனிக்கலை. அங்க போனதும் அங்கிருந்து நிரந்தரமா இங்க வர என்ன பார்மாலிடிஸ் இருக்கோ அதெல்லாம் பார்க்கணும்னு சொன்னார்.
தட் மீன்ஸ்... அவருக்கு இந்தியால இருக்க ஆசை வந்துடுச்சு.
என்னிடம் கூட பர்மிஷன் கேட்காம முடிவெடுத்துயிருக்கார். உங்களுக்கு சாதாகமா தானே. மதுரைல இருக்க போறாரா? இல்லை என்ன பிளான்னு தான் தெரியலை. பட் நீங்க அமெரிக்க மாப்பிள்ளையா அங்க எங்களோட தங்கப் போறதில்லை. நான் தான் மதுரைக்கு வந்து இந்த வீட்டு மருமகளா மாறி நிற்க போறேன்.
எனக்கு ஓகே தான். இங்க ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சுப்பேன்." என்றாள்.
அகிலன் காவ்யாவின் விழிகளை உற்று பார்த்து, ''என் மாமனார் உங்கூட கேட்காம முடிவெடுத்துட்டார். பட் இப்ப நான் கேட்கறேன். உன்னோட முடிவு சொல்லு. இங்க மதுரையில மருமகளா வாழ சம்மதமா? எதார்த்தமா இருக்குமா? என்னைக்காவது சண்டை வந்துட்டா" என்று கேட்டான்.
"ம்கூம்.. நானாவது தமிழ்நாட்டு பொண்ணு. அம்மா தான் ஜேனட் அமெரிக்க பெண்மணி. சில ஷாட்ஸ்ல பார்க்கலையா... வெளிநாட்டு பொண்ணுங்க தமிழ் பையனை கட்டிக்கிட்டு சேலை கட்டி ரீல்ஸ் போட்டு தமிழ் பேசுவதை எல்லாம் பார்க்கலையா? கொரியன் நாட்டு பொண்ணுங்க கூட இருக்காங்கப்பா. மனமிருந்தால் மார்க்கம் உண்டு." என்றாள்.
அகிலன் புன்னகைக்க அதில் தொலைந்த காவ்யாவோ, "அதென்னவோ தெரியலை.. நீங்க சிரிச்சா, கிட்ட வந்து... அந்த கன்னத்தை கடிக்கணும்னு தோணுது. ஷூட் ஐ பைட்?" என்று நெருங்கினாள்.
"வேம்பையருக்கு வாக்கப்பட்டா கடி வாங்கி தான் ஆகணுமா." என்று கேட்க, அதற்குள் காவ்யா கன்னத்தை கடித்து கொண்டிருந்தாள்.
"காவ்யா... வலிக்கு... கன்னத்துல பல்லு தடம் தெரியும்" என்று கூற கூற கன்னத்து கடிகள் முத்தங்களாக மாறியது. கூடுதலாக "இப்ப ஓகேவா?" என்று கண் சிமிட்டினாள்.
அகிலன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பே அவளுக்குத் தேவையான பதிலாக இருந்தது.
அவள் மெதுவாக அவன் தோளில் சாய்ந்து அமர, அகிலனும் தயக்கத்தை விட்டு அவளது விரல்களைத் தனது விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.
இருவரும் அதற்குப்பின் எதுவும் பேசவில்லை. ஆனால்அந்த அமைதியே, வார்த்தைகளை விட அவர்களுக்குள் லேசான நேசம் வேரூன்ற ஆரம்பித்து விட்டதை உணர்த்தியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 45)
நல்ல வேளை, உறவுகளையும், உறவு முறையையும் பேசி பேசி சிக்கலாக்கி கொள்ளாமல் தெளிவான எண்ணத்தோடே அணுகி அகிலன் காவ்யா
ரெண்டு பேருமே அழகா நகர்த்திட்டு போறாங்க. இந்த தெளிவு இருந்தாலே போதும் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா போயிடும்.
அது சரி, அந்த கிறுக்கன் இன்னுமா செஞ்ச தப்புக்கு மதுரா கிட்ட மன்னிப்பு கேட்கலை...?
வெறும் மன்னிப்புல சரி பண்ற தப்பையா பண்ணியிருக்கிறான், ஆனாலும் கேட்கணும் தானே ?
அதற்கப்புறமும் மன்னிக்கிறதும், மன்னிக்காததும் மதுராவோட விருப்பம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
41 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-41
5 days ago
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 1 Online
- 329 Members
