மதுர ஜில்லா... மச்சானே!-44
அத்தியாயம்-44
ஹாஸ்பிடலில் இருந்து புறப்பட்டதிலிருந்து வீட்டுக்கு வந்தப்பொழுதும் அகிலன் அமைதியாக மற்ற வேலைகளை பார்த்தான்.
அவனுக்கு காவ்யாவிடம் பேச வேண்டும். ஆனாலும் தயக்கம் அதை விட அதிகம் இருந்தது.
ஏதாவது பேசினால் எப்படி எடுத்துக் கொள்வாளென்ற எண்ணம். அப்படியொன்றும் அவளை பற்றி பெரிதாக தெரியாதே.
அகிலன் சிந்தனையில் ஆழ்ந்திருக்க, "என்னப்பா... ஏதோ யோசனையில் இருக்க" என்று மீனாட்சி கேட்டார்.
"எப்ப அம்மா வந்திங்க?" என்று கேட்டான்.
"சரிதான்... உங்கப்பா சொன்ன மாதிரி நீ ஏதோ யோசனையில தான் கிடக்கியா? நாங்க வந்தது கூட தெரியலை." என்றார்.
"சாரிம்மா கவனிக்கலை. தூரிகா வரலை?'' என்று கேட்டான்.
"மதுரா கூட இருக்கேன்னுட்டா. இளையமதி மதினியிடம் மதுரா சரியா பேச மாட்டேங்கறா. வேல்விழி கூடயிருந்தா ஏதாவது குழந்தை கலைந்ததை பற்றி கேட்பாங்களோனு மதுரா யோசிக்கா.
தூரிகா இருந்தா அவளிடம் மனம் விட்டு பேசுவா. ஹாஸ்பிடல்ல இருக்கற வரை தானே கூடயிருக்க முடியும்னு இருந்துட்டுவானு சொல்லிட்டேன்.
நிலானி எல்லாம் சின்னபுள்ள அவ எதுக்கு ஹாஸ்பிடல்ல." என்றார்.
அகிலனோ அதுவும் சரிதான் என்பது போல ஆமோதித்து கொண்டான்.
"அகிலா... உங்க பெரிப்பா.. ஹாஸ்பிடல்ல வச்சி என்னிடம் மன்னிப்பு கேட்டார். சொத்து பிரச்சனையில தள்ளி விட்டார்ல அதுக்கு. உங்கப்பாவுக்கும் எனக்கும் ஆச்சரியம் தாளல.
ஏதோ அந்த கர்மா தான் மதுராவே அவ வாரிசு அழித்ததா அவர் நம்பறார்.
எம்புட்டு வருஷம் கழிச்சு மனுஷன் மன்னிப்பு கேட்டுட்டார்.
ஆனா ஏதோ நிம்மதியா இருக்குப்பா. உன் கல்யாணத்துக்கு வந்ததும், இந்த மன்னிப்பும் என் மனசுல ரொம்ப காலம் இருந்த வேதனையை குறைச்சிடுச்சு.
ஆனா மதுராவுக்கு இப்படி ஆனதுல மனசுல வலியாகிடுச்சு. அந்த புள்ளைக்கு ஒரு நல்லது நடந்திருக்கலாம்." என்று பெருமூச்சு விட்டார்.
அதியமான் வந்ததும், "சம்பந்தி வந்துட்டாரா?" என்று கேட்டார்.
"இல்லைப்பா.. அவங்க அப்படியே மதுரை கோவிலுக்கு போயிட்டு அப்படியே சில கோவிலுக்கு சுற்றுலா மாதிரி போயிருக்கார். இன்னும் ஞில நாள் தானே இந்தியாவுல இருக்க முடியும். பிறகு அங்க போகணுமாம்.
திரும்ப இங்கயே வருவதற்கான பார்மாலிடிஸ் முடிக்கணும்னு சொன்னார்." என்றான்.
"நல்லதுப்பா.. அப்பறம்.. உன் பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்துக்கிட்டியா? நாங்க அங்க உடனடியா வரமுடியாது. அவங்க ஊர்ல ரிசப்ஷன் வைக்கறது உனக்கு சௌகரியமா இருக்கும். அப்படியே ஹனிமூன் முடிச்சிட்டு வா." என்று கூற, "போறதுக்கான ஏற்பாடு ஒரு பக்கம் பார்க்கறேன்பா" என்றான் அகிலன்.
"ஆமா.. காவ்யா எங்க? ரூம்ல இருக்காளா?" என்று கேட்க, ஆம் என்பதாக தலையாட்டினான்.
"அங்கயே சொல்ல கூடாதுன்னு நிதானமா விட்டுட்டேன்.
இனியனை 'டா' போட்டு பேசறது சரியா இருக்காது. அதை காவ்யாவிடம் சொல்லணும். சம்பந்தி இருந்தா அவரிடம் சொல்லி தெரிவிக்கலாம். அவரும் இல்லை. நீ நல்லபடியா இருக்கறப்ப சொல்லிப்பாரு." என்றார்.
''நானும் அதை தான் சொல்ல வந்தேங்க" என்றார் மீனாட்சி.
''நான் ஆல்ரெடி அதை எப்படி சொல்லறதுனு தான் யோசனையா இருக்குப்பா. ஆனா சொல்லி பார்க்கறேன்." என்றான்.
"சரிய்யா... நீயும் போய் சாப்பிட்டு ஓய்வெடுத்து தூங்கறதா இருந்தா தூங்கு." என்று கூறிவிட்டு சென்றார்.
அகிலனோ அன்னை தந்தை சென்றதும், காவ்யாவிடம் எப்படி சொல்வதென்று அறைக்குள் வந்தான்.
அகிலன் வரவும் மெத்தையில் முதுகு சாய்த்து இருந்தவள் முட்டி கட்டி அமர்ந்தாள்.
அகிலன் சட்டை பட்டனை கழட்ட முனைந்தவன் கூச்சத்தில் மீண்டும் பட்டனை மாட்டிக் கொண்டான்.
இதை காவ்யா கவனித்து விட்டாள். "ஜல்லிக்கட்டு திருவிழா அப்ப, ஊரே பார்க்க பனியன் மட்டும் போட்டு சட்டையை உங்க பிரெண்ட்.. அந்த ரகு அண்ணாவிடம் தந்துட்டு வேஷ்டி மடிச்சி கட்டி காளையை அடக்கினிங்க. அப்ப ஊர்ல இருக்கற அத்தனை பேர் உங்களையும் தான் பார்த்தாங்க. அதுல எவ எவ கண்ணு வச்சாளோ?
இங்க நான் மட்டும் தான் இருக்கேன். கூச்சப்படாம அஸ்யூஸ்வலா இருக்க ட்ரை பண்ணுங்க" என்றாள்.
அகிலனோ தன்னை கவனிப்பதை அறிந்து மீண்டும் ஷர்ட் பட்டனை கழட்டி சட்டையை ஹாங்கரில் மாட்டினான்.
"உங்க தங்கச்சி வரலையா?" என்று கேட்டாள்.
"இல்லை... மதுராவுக்கு துணையா இருக்கேன்னு அம்மாவிடம் சொல்லியிருக்கா" என்றான்.
"உங்க தங்கச்சிக்கு என் மேல இன்னும் நம்பிக்கை வரலை. இனியனோட பேசறப்ப எல்லாம் ஏதோ வில்லியை பார்க்கற மாதிரி பார்க்கறாங்க. எனக்கு அது பிடிக்கலை." என்றாள்.
கல்யாணமாகி அடுத்த நாளே நாத்தனாரை பற்றி குறையா? என்று தான் அகிலனுக்கு தோன்றியது.
அதன்பிறகு தங்கையை பற்றி தன்னிடமே குறை சொல்லும் அளவிற்கு காவ்யா தன்னிடம் உரிமையை பெற்றிருக்க தான் மட்டும் அவளிடம் தயங்குவது அப்பொழுது தான் பளிச்சென புரிந்தது.
"எனக்கு கூட ஒரு விஷயம் பிடிக்கலை." என்றான்.
"என்னது?" என்றாள்.
''இனியன் என்னை விட ஆறு மாசம் பெரியவன். அப்ப கூட அவனை இனியன்னு பேசியிருக்கேன். அவன் இவன்னு சொல்லியிருக்கேன். ஆனா யார் முன்னவும் 'டா' போட்டதில்லை.
அது அவனுக்கு தர்ற மரியாதை. இன்னிக்கு நீங்க அங்க ஹாஸ்பிடல்ல இரண்டு மூன்று முறை 'டா' போட்டு பேசினிங்க. அவன் அதை பெருசா எடுத்துக்கலை. ஆனாலும் வயசுக்கு மரியாதை தரணும். அதோட அவன் எனக்கு அண்ணன்" என்றான்.
"ஓ மை காட். அவன் எனக்கு சீனியர். காலேஜ்ல சீனியர்னு கூப்பிடுவோம். இல்லையா பெயர் சொல்லி தான் கூப்பிட்டுப்போம். அங்க பெரியவங்க சின்னவங்க எல்லாம் இல்லை. எல்லாருமே பெயரிட்டு பேசறது பொதுவான விஷயம்.
ஜஸ்ட் லைக் தட். நான் அந்த கண்டோட்டத்தில பேசியது." என்றாள்.
"அது உங்க ஊரு. இது நம்ம மதுர ஜில்லா. இங்க உறவுமுறை சொல்லில கூப்பிடணும்." என்றான்.
"என்னனு கூப்பிடணும்?" என்று நெற்றி சுருக்கினாள்.
"பெரியவன்.. எனக்கு அண்ணன்னா உனக்கு மச்சான் முறை வரும். மதுரா கூப்பிடற மாதிரி." என்றான்.
"மதுரா.. உங்கண்ணாவை கட்டியிருக்க, அப்ப அண்ணி முறையில்ல ஆகும். உங்க தங்கை எல்லாம் அண்ணினு தான் கூப்பிட்டா. நீங்க மட்டும் இன்னும் மதுரானு கூப்பிடறிங்க?" என்று எதிர் கேள்வி கேட்டாள்.
அகிலனுக்கு காவ்யா சொல்வது சரியாக தோன்றியது.
''அது பழகிடுச்சு." என்று கூற, "எனக்குமே இனியனை இனியன்னு கூப்பிட்டு பழகிடுச்சு." என்றாள்.
அகிலனிடம் இவ்வாறு பேசவும், அடுத்து பேச யோசித்தான்.
அதிருப்தியுடன் எழுந்துக் கொள்ள, "ஹலோ... ஏதாவது பதில் பேசுங்க. எதிர்த்து பேசறதா கூட கேட்கலாம். அதை விட்டு ஓடறிங்க?" என்றாள்.
"இல்லை.. நானுமே மாத்த முயற்சி பண்ணணும்." என்றான்.
"சேம் டூ யூ... அப்பறம்.. ரிசப்ஷனுக்கு இங்கிருந்தே கோட் சூட் கலர் பார்க்கறிங்களா?" என்று கேட்டாள்.
"நீங்களே பாருங்களேன். நான் பேண்ட் ஷர்ட் டீஷர்ட் போட்டிருக்கேன். பட்.. கோர்ட்.. இங்க யூஸ் பண்ண வாய்ப்பு அமையலை. நீங்க எப்படி சேலையே கட்டியதில்லையோ. அதே மாதிரி நான் கோட்சூட் போட வாய்ப்பில்லாம வாங்கலை. அதனால என் நிறத்துக்கு எது சூட்டபிள்னு பாருங்க" என்றான்.
"பக்கத்துல வந்து பார்க்கலாமே. இப்படி பேசறதுக்கு காரணமிருந்தும் தள்ளி போயிட்டு இருந்தா அப்பறம் எப்படி பேசறதாம்.. பழகறதாம்?" என்றாள்.
அகிலன் ஸ்தம்பித்து நிற்க, "என்னடா இந்த பொண்ணு வாயை திறந்து கேட்குதுனு பார்க்காதிங்க. வாயுள்ள பிள்ளை தான் பொழைக்கும். அதுவுமில்லாம எங்கப்பா எனக்கு என்ன தேவையோ, என் விருப்பத்தையோ தெளிவா சொல்ல கத்து கொடுத்திருக்கார்.
அதனால தான் கல்யாணம் பண்ண அப்பாவிடம் உங்களை சுட்டி காட்டி நின்றது." என்றாள்.
அகிலனோ அவள் பேசவும், 'நம்ம பக்கம் தான் முன்னேற வழியில்லாம தயங்கறோமோ?' என்று நினைத்தான்.
"அது.. இதுவரை எந்த பொட்டபிள்ளையிடமும் நானா பேசியது இல்லைங்க. சட்டுனு ஒருத்தி வந்து கைகாட்டி கட்டிக்கறேன்னு பேச, வீட்லயும் கட்டி வைக்கவும், நான் தயங்கி தயங்கி தான் இருக்கேன்னு புரிது." என்றான் தலையை சொரிந்து.
மேலும், சாதாரணமா ஒரு பெண்ணிடமே பேச தயக்கமிருக்கும். இதுல நீங்க இனியனை விரும்பியிருக்கிங்க. நான் மதுராவை விரும்பினேன்.
இந்த ஜோடி மாறியதில உறவுமுறையும் சிக்கலா இருக்கு. நாம பழகவும் தயக்கமா இருக்குங்க" என்றான்.
காவ்யாவோ "கஷ்டம் தான். ஆனா ஒன்னு சொல்லவா.. எங்க நாட்ல.. ஸ்டெப் மதர் ஸ்டெப் பாதர் இரண்டு பேரும் சர்வ சாதாரணம். அதுல ஒரு பொண்ணு ஸ்டெப் மதரோட பையனிடம் அண்ணன் முறையா எல்லாம் பழகணும்னு அவசியம் இருக்காது. ஏன் டேட்டிங் கூட பண்ணுவாங்க. அதே போல ஸ்டெப் பாதர்னும் யோசிக்க மாட்டாங்க. தன் பொண்ணே அவரோட பழகினாலும் ஈஸியா மூவ் ஆகற ஆட்களும் உண்டு. உறவுகள் வெளிநாட்ல பார்க்கறதோ பெருசா யோசிக்கறதோ இல்லை. இங்க தான்.. அப்பாவோட வெப்பாட்டியோட பொண்ணு இருந்தா கூட தங்கச்சினு முறை வச்சி மதிப்பு தருவோம்" என்று சிரிக்க, அகிலனுமே அவள் சொல்ல வரும் சாராம்சம் புரிந்தவனாக இருந்தான். அதாவது சிலதிற்கு அந்த நாட்டு முறை போல உறவுமுறையை பெரிதாக யோசிக்காதே அதே நேரத்தில் இந்த நாட்டு உறவுமுறைக்கு ஏற்றவிதமாக நடப்போமென்று.
அகிலன் அமைதியாக இருக்கவும், "சோ... ரொம்ப யோசிக்காதிங்க. மதுரா முன்ன உங்க லவ்வர். நடுவுல எக்ஸ். இப்ப இனியனோட பேர். சோ.. அண்ணி... அதை எல்லாம் தாண்டி அவ எப்பவும் உங்க அத்தை பொண்ணு. அந்த உறவை யோசிங்க" என்றாள்.
அகிலன் தெளிவடைய, "அதே போல தான்.. இனியன் முதல் முதல்ல என்க்கு சீனியர். நடுவுல என்னோட லவ்வர். இப்ப என் வீட்டுக்காரரோட அண்ணன். ஜஸ்ட் மச்சான். மச்சான்னு கூப்பிடறவரை அட்ஜஸ்ட் கரோ" என்றாள் சிரித்தபடி.
அகிலனும் புன்னகைக்க, காவ்யாவோ அகிலன் கையை பிடித்து, "நீங்களும் மச்சான் முறை தானே" என்று கேட்க, அவள் தீண்டியதை கண்டு, அவள் விழிகளோடு நுழைந்து ஆமென்றான்.
"உங்களை தான் இப்ப எப்படி கூப்பிடறதுனு மனசுல ஒரே குழப்பம்.
அகிலன்னு கூப்பிட்டா நிச்சயம் வீட்ல ஒருமாதிரி பார்ப்பாங்கனு தெரிது. அப்ப வாங்க போங்கனு ட்ரை பண்ணிக்கறேன். இந்த ரூம்ல என்னனு கூப்பிட?" என்று கேட்டாள். அவன் தோளை குவித்து தெரியலை என்ற விதமாக முழித்தான்.
"டேய்... அகிலானு கூப்பிடவா?" என்று பனியனின் ஒரு பகுதியை பிடித்து இழுத்து கேட்டாள்.
அகிலன் அவளது வேகத்தில் தடுமாற, "இல்லை... 'மதுர ஜில்லா மச்சானே'னு கூப்பிடவா?" என்று ரகசியம் போல கேட்டாள்.
அவளது இதழ்கள் அகிலனின் செவிமடலில் சூடேற்றி முடிக்க, அவன் கண்கள் அவளிதழில் நிலைக்க, "உன் இஷ்டம். நீ எப்படி கூப்பிட்டாலும் முன்ன வந்து என்னனு கேட்பேன்" என்றான்.
"என்னனு கேட்டு... என்ன செய்யறதாம். நாம நியூ மேரிட் தெரியுதா?." என்று கேட்டு சலித்தாள். 'எல்லாம் நானே சொல்லி தரணும்' என்று முனங்க, அகிலனோ அவள் கழுத்தில் கையை வைத்து தன் முன்னே நெருக்கினான்.
காவ்யா உடனே பதட்டத்துடன் 'ஓஎம்ஜி' என்று இறுக கண்ணை மூடினாள்.
சில நொடிகள் அவளது பயத்தை பதட்டத்தை வெளிப்படுத்தி நிற்க, ''காவ்யா.. நான் எதுவும் பண்ணலை... ஓபன் யுவர் ஐஸ்" என்றான் அகிலன்.
காவ்யா விழியை விரித்து திகிலுடன் காண, அகிலன் புன்னகையுடன், "நெருங்கி வர தெரியாம இல்லைங்க. நெருங்கி வந்தா உங்களுக்கும் இப்ப சஞ்சலம் தான். அப்பறம் நீங்களாம் சொல்லி தர அவசியமும் இருக்காது." என்றான்.
காவ்யா அசடு போல நின்றவள், பயத்தை கைவிட்டு, அகிலன் பார்வையில் குறும்பும் பாசமும் கலந்திருப்பதை உணர்ந்தாள். காவ்யாவின் உதட்டில் வெட்கப் புன்னகை மலர்ந்தது. ஒரு நொடி தயங்கியவள், அவன் தன்னை பயமுறுத்தியதில் பதட்டத்தைகூட்டவே, பனியனை மெதுவாகப் பற்றியபடி நெருங்கி, அவன் கன்னத்தில் மெல்ல முதல் முத்தம் பதித்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 44)
ஆமாமமா..! இனிமே பழக்கத்தை எல்லாம் மாத்தியாகணும். இதுல ஜோடி மாறினதுல உறவு முறையும் சிக்கலாயிடுச்சு போங்க. இனிமேல் தான் எல்லாத்தையும் மாத்தியாகணும். இந்த அகிலன் பாடு தான் ரொம்பவே பாவம். அடிக்கடி பாழாப்போன வெட்கம் வேற வருது, அநாவசியத்துக்கு தயக்கமும் வந்து தொலையுது.
காவ்யா அகிலனை 'மதுர ஜில்லா மச்சானே' கூப்பிடட்டும். அதான் நல்லா இருக்கு, ஸூட்டபிளாவும் இருக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
38 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-41
5 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
