மதுர ஜில்லா... மச்சானே-43
அத்தியாயம்-43
இனியன் பார்வை அகிலனை ஊடுருவவும் அகிலன் நடை மெதுவாகியது.
"என்னாச்சு வாங்க" என்று காவ்யா தான் இழுத்தாள்.
அகிலன் இனியனை கண்டு தயங்கி நிற்க, ''மதுரா எங்கடா?" என்று இனியனிடம் தான் அதிகாரமாய் கேட்டாள் காவ்யா.
அவனோ லேசாக பாதிக்கு மேல் மூடியிருந்த அறையை சுட்டிக் காட்டினான். அவனை அவள் 'டா' போட்டு விளித்ததில் அகிலன் தான் ஆடிப்போனான். என்ன தான் மாதத்தில் பெரியவனாக இருந்தாலும் இனியனை அண்ணன் என்றும் அழைத்ததில்லை. அதே நேரம் வாடாபோடா என்றும் அகிலன் பேசியதில்லை. ஆனால் காவ்யா 'டா' போட்டதில் அந்த இடத்தில் இருந்தவர்கள் யாவரும் அதை கவனித்தனர். இதில் இனியன் டா' போட்டதற்கு கவலையும் பட்டது போல தெரியவில்லை. இல்லையேல் அவனுக்கு மதுராவை தவிர காவ்யா விளித்தது பெரிதாக தோன்றாமல் மாறியிருக்கலாம்.
அகிலன் உள்ளே செல்ல தயங்க, காவ்யா அவள் பாட்டிற்கு இழுத்து நடந்தாள்.
சோர்வாக மருத்துவமனை மெத்தையில் படுத்திருந்தவள் கையில் ட்ரிப்ஸ் ஏறியிருக்க, தூரிகா தான் மதுரா கையை பற்றி அழுதிருப்பதை கவனித்தாள்.
'ம்கூம்.. என்னை அங்க நல்லா முறைச்சிட்டே சுத்தறது. இங்க பெரியண்ணன் பொண்டாட்டி மேல பாசத்தை பொழியறது. இந்த கஸின் இரண்டு பேரும் திக் பிரெண்ட்ஸா இருப்பாங்களோ?' என்று மனவோட்டம் ஓடியது.
மதுரா அகிலனை ஏறிட தயங்கி காவ்யாவை கண்டாள்.
காவ்யாவும் மதுராவை கண்டு நிற்க ''கண்டதும் தின்னு, வயித்துல தங்கின உசுரை இவளே வளர விடாம அழிச்சிருக்கா." என்றார் வேல்விழி.
காவ்யா புரியாமல் மீனாட்சியை பார்வையிட, இந்த சில நாளில் அவளுக்கு புரியாவிட்டால் காவ்யா தன்னை காண்பதை அறிந்த மீனாட்சி, "நம்ம ஊர்ல உணவே மருந்துனு சொல்வாங்க. சில நோயுக்கு சில காய்கறி பழம் உணவு முறையிலேயே எடுத்துக்கிட்டா சரியாகும். அது போல சில உணவு கர்ப்பமா இருக்கறச்ச எடுத்துக்க கூடாது. கர்ப்பமா இருக்கறப்பனு இல்லை. புதுசா கல்யாணமானவங்க குழந்தை தங்கணும்னா சில உணவை நிராகரிச்சிடுவாங்க. அப்படி நிராகரிக்க வேண்டியதை திண்ணுயிருக்கா. தினமும் பப்பாளி பழம் அறுத்து சாப்பிட்டு இருக்கா. தினமும் எள்ளு பர்பி சாப்பிட்டு இருக்கா. சிலருக்கு சூடு பிடிச்சி மாதவிலக்கு வந்துடும். மதுரா குழந்தை தங்க கூடாதுனு இதெல்லாம் திண்ணுருக்கானு அக்கா சொல்லறாங்க" என்றார் மீனாட்சி. சொல்லும் போதே அழுதுவிட்டார்.
"இதெல்லாம் சாப்பிட்டா அப்படி நடக்கும்னு அர்த்தமில்லை. ஆனா சிலருக்கு அது அப்படி அமைஞ்சிடும். மதுராவுக்கு அப்படி ஆகிடுச்சு'' என்று விளக்கமும் தந்தார்.
காவ்யாவோ "ஏன் இப்படி பண்ணிட்டிங்க? இது பெரிய தப்பில்லையா? ஒரு உயிரை உலகத்துக்கு வரவிடாம பண்ணியது.. அதுவும் அம்மாவே பண்ணறது தப்பு தானே?" என்றாள்.
மதுராவோ விரக்தியாக "வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு தந்திருக்கேன். என் வாழ்க்கையே அந்தரத்துல இருக்கறப்ப இன்னொரு ஜீவன் எதுக்கு? நாளைப்பிறவு அத்து விட்டா நான் ஏதாவது பூச்சி மருந்து குடிச்சி செத்துடறது சுலபம். அதே என்னை நம்பி ஏதாவது உசுரு இருந்தா.. நான் எப்படி சாகறது? இல்லை இன்னொரு உசுரு கண் முன்ன கை கால் முளைச்சு வந்துட்டப் பிறகு எப்படி சாகடிக்க தோணும். அதுக்கு இப்பவே உருவமில்லாம கிடக்கறச்ச ரத்தத்தோட ரத்தமா கலைச்சிடறது நல்லது தானே" என்று பதில் தந்தாள்.
மதுரா ஏதாவது பழிவாங்க என்று காரணம் சொன்னால் திட்ட நினைத்த காவ்யா, இதுவும் கிட்டதட்ட இனியனை பழிவாங்கிய முறை தான். ஆனால் மதுராவின் இந்த பதிலில் அமைதியாகி விட்டாள்.
அவரவர் நியாயம் அவரவருக்கு. அப்படியிருக்க மதுராவின் பதில் காவ்யாவுக்கு நியாயமானதாக தான் தெரிந்தது. ஆனால் இந்த தண்டனை இவளுக்கும் அல்லவா வலிக்கும் என்று அமைதிக்காத்தாள்.
அகிலன் காவ்யா பின்னால் இதை கேட்டு, கண்ணீர் துளிர்க்க நின்றியிருந்தான்.
காவ்யாவோ அகிலனை காணவும், கண்ணீரை துடைத்து, சட்டையில் இருந்த குங்குமத்தை எடுத்து, "குலதெய்வ கோவில்ல வாங்கிட்டு வந்தது.. வச்சி விடுங்க" என்று மதுராவை காட்டி கூற, காவ்யாவும், வாங்கி வைத்துவிட்டாள்.
கூடவே, "இங்க வர்றதுக்கு முன்ன குலதெய்வ கோவிலுக்கு போயிருந்தோம். அந்த குங்குமம்" என்று வைத்துவிட, மதுரா காவ்யாவை விசித்திரமாக பார்த்தாள்.
"எனக்கு அட்வைஸ் சொல்லற அளவுக்கு இந்த விஷயத்துல மெச்சூரிட்டி இருக்கானு தெரியலை. பட் பீ ஸ்ட்ராங்." என்று மதுரவாணி கையை தீண்டினாள்.
மதுராவும் லேசாக புன்னகைக்க, தூரிகாவோ 'இவ நல்லவளா கெட்டவளா.' என்று அதே ஆராயும் பார்வை தான் வீசினாள்.
மதுராவோ காவ்யா கையை பற்றி, "திருமண நாள் நல்வாழ்த்துகள். என்னால கல்யாணத்துக்கு வரமுடியலை. ஆனா உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன். என்ன நேர்ல கல்யாண ஜோடியா பார்க்கற கொடுப்பினை அமையலை. இன்னிக்கு திருப்தியா பார்த்துட்டேன். ஒருநாள் விருந்துக்கு வாங்க. என் கையல சமைச்சி போடுறேன்." என்றாள் மதுரவாணி.
காவ்யாவோ "கண்டிப்பா. உடம்பையும் மனசையும் மீட்டு எடுங்க. இப்ப அதான் முக்கியம்" என்றவளோ அகிலனை கண்டு இனியனை பார்த்தாள். இனியன் பார்வையோ மதுரவாணி மீது அழுத்தமாய் பதிந்தது. சொல்லப் போனால் கொலை வெறியில் பார்த்திருந்தான்.
நர்ஸ் வேறு வந்து, "ஏங்க நேத்துலயிருந்து சொல்லறேன். ஒருத்தர் மட்டும் பேஷண்ட் கூட இருங்க. மொத்தமா இங்க வராதிங்கன்னு. சொல்லறதையே கேட்க மாட்டிங்களா?" என்று கத்தவும், ஆளாளுக்கு வெளியே இருப்பதாக சென்றார்கள்.
காவ்யாவும் வெளியே இருப்பதாக கூறி விடைப் பெற்றாள். அகிலனும் ''உடம்பை பார்த்துக்க மதுரா" என்றான் உடைந்த குரலில்.
மதுரவாணியோ சரியென்று தலை மட்டும் ஆட்டினாள்.
இனியன் மட்டும் போகாமல் நிற்க, "சார் படிச்ச முட்டாளா இருக்காதிங்க. அதான் ஒருத்தரை தவிர எல்லாரும் போங்கனு சொல்லிட்டேன். நீங்க அப்படியே கல்லு மாதிரி இருந்தா என்ன அர்த்தம்." என்று கடிய, தூரிகாவோ "அண்ணா.. நான் அண்ணி கூட இருக்கேன் நீங்க போங்க." என்றாள். அதனால் இனியன் மெதுவாக மதுராவை முறைத்தபடி வெளியேறினான்.
நிலானி வேறு இங்கிருக்க வேண்டாமென கல்லூரிக்கு செல்ல கூறியிருக்க, எழிலரசனுடன் தான் காலையில் சென்றாள்.
எழிலரசன் வீட்டில் சென்று விட்டுவிட்டு, கல்லூரிக்கு தயாராக இருக்க சொல்லிவிட்டு, மீண்டும் வந்து அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அதனால் காலையிலேயே கல்லூரிக்கு செல்ல சாதமும் ரசமும் உருளைகிழங்கு வறுவலும் செய்து முடித்து தயாராகி இருக்க, எழிலரசன் வரவும் அவனோடு வந்து ஹாஸ்பிடலில் அன்னை தந்தையிடம் உணவை தந்துவிட்டாள்.
அப்படியே எழிலரசனுடன் தான் கல்லூரிக்கு சென்றிருந்தாள்.
அதுவேறு பேசும் பொருளாக கல்லூரியில் மாறியது. ஆனால் நிலானியோ எழிலரசன் பேச வந்தாலே, ரத்தின சுருக்கமாக பதில் தந்து அவனிடம் பேச்சை வளர்க்காமல் நிறுத்தி கொண்டாள். எல்லாம் அக்காவின் நிலையை கண்டு வந்த வேதனை.
எழிலரசன் எல்லாம் இறங்கும் போது பேச முயன்றிட "உங்க குடும்பத்துக்கே ஒரு கும்பிடு. பழிக்கு பழின்னு என் உசுரை வேற காவு வாங்கிடாதிங்க. எங்கம்மா தெரியாத்தனமா அக்காவுக்கு இனியன் மச்சான், என்னை உங்களுக்குனு கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டதா வாயை விட்டுடுச்சு. இப்ப எல்லாத்தையும் கண் எதிர்ல பார்த்தப்பிறகு எங்கம்மாவுக்கு எங்கக்காவை என்னை வீட்லயே வச்சிக்கிட்ட கூட சரின்னு இருக்குமே தவிர வேற யோசிக்காது.
அதோட எங்கக்கா அளவுக்கு நான் திடம் கிடையாது" என்று கூறிவிட்டாள்.
எழிலரசன் வேறு அதையே நினைத்து கவலைக் கொண்டான். முதலில் அவனுக்கு நிலானி மீது என்ன பற்று உள்ளது என்றும் தெரியவில்லை. இவளுக்குமே அதே எண்ணம் மட்டுமே. ஆனாலும் அக்காவின் வாழ்க்கையை கண்டதும், சாதாரணமான உறவாக கூட பார்க்க தோன்றாமல், பெரிய மாமா குடும்பத்திற்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டாள்.
வேல்விழியோ "நிலானி ரசம் உருளை கொண்டாந்தா. அதை கொடுத்து பார்க்கணும்." என்று மீனாட்சியிடம் தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வேல்விழி மீனாட்சி பேசிக்கொண்டு இருந்தனர்.
அருளாளன் அதியமான் கூட, டீ குடிக்க செல்வதாக அண்ணன் தம்பி இருவரும் நடையிட்டனர்.
இனியன் கோபமாய் வெளியே வந்து அமர்ந்தான்.
புஸுபுஸுவென மூச்சு வாங்க சீற்றத்துடன் இருந்தான்.
காவ்யாவோ "நான் அவனிடம் பேசிட்டு வர்றேன்." என்று நகர, அகிலன் சங்கடமாகவே தலையாட்டி நின்றான்.
காவ்யா இனியன் பக்கத்தில் ஒரு ஆள் அமரும் வகையில் தள்ளி அமர்ந்தாள்.
இனியனோ "என்ன ரிவேன்ஜா?" என்றான். இவள் வேறு ஏதாவது பேசி தொலைத்து, சொல்லிக் காட்ட போகின்றாளென்ற வேதனை.
"இந்த வெந்த புண்ல வேலை பாய்ச்சறது உன் வேலை. அதை நான் செய்ய மாட்டேன். ஏன் உங்க தம்பியும் செய்ததில்லை." என்று அகிலனின் நற்பண்பையும் நாசூக்காக சுட்டிக்காட்டினாள்.
"ப்ளீஸ்... இந்த அட்வைஸ் மண்ணாங்கட்டி எல்லாம் கொடுப்பதா இருந்தா கொட்டிட்டு போ." என்றான் ஆத்திரமாக.
காவ்யாவோ "அட்வைஸா... அது கேட்கறவங்களுக்குள்ல தருவேன். நீ தான் எப்படியும் நான் பேசறதை காதுல கூட வாங்காம சுத்தறவனாச்சே" என்றாள்.
இனியன் அதே கோபத்துடன் இருந்தான். தம்பி மனைவியாக வேறு நிற்கின்றாளே. முன்பு அவளிடம் 'பேபி ஹனி' என்று கொஞ்சி பேசியது எதுவும் நினைவு வரவில்லை. எல்லாமே மூளைக்குள் 'வாஷ் அவுட்' ஆகியிருந்தது.
இந்த நொடி அகிலனின் மனைவி காவ்யா என்றும், தன் மனைவி மதுரா மீது தான் அடக்கப்பட்ட கோபம்.
"தப்பு பண்ணிட்ட இனியன். ரொம்ப பெரிய தப்பு. ஒரு பொண்ணு... அவ வயிற்றுல உருவாகற குழந்தையை அவ்வளவு சுலபமா அழிக்க மாட்டா. அப்படியிருக்க மதுரவாணி அழிச்சிருக்கான்னா.. நீ எந்தளவு ரூடா அவளிடம் நடந்திருக்கனு தெரியுதா?
வெறும் லஸ்ட் மட்டும் கல்யாணம்னு நினைச்சிட்டியா? ஏன்டா.. இப்படி மாறிட்ட? நீ இப்படிப்பட்டவன் கிடையாதே.
கல்யாணத்தோட புனிதம் உனக்கு தெரியும் தானே? சரி... அவரை பழிவாங்க மதுராவை கட்டிக்கிட்ட.. கட்டிக்கிட்டவளிடம் வீராப்பு காட்டி என்ன யூஸ்." என்றாள்.
இனியனுக்குள் ஏதேதோ பேச்சு அசுரத்தனமாக கூச்சலில் கத்த தோன்றியது. ஆனால் நேற்றிலிருந்தே ஒரு முடிவுடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றான். அவன் கோபங்களை கொட்டப்பட வேண்டிய இடம் மதுரவாணி மட்டுமே. அவளிடம் தான் அவனுக்கான பேச்சும் கணக்கும் என்று நிதானமாக மதுரா இருக்கும் அறையை தான் வெறித்தான். அவன் இழந்தது அவனது உதிரத்தை மட்டுமா?!
காவ்யா மதுரா இருந்த அறையையே இனியன் பார்வையிடுவதையும், அவள் பேசுவதை கூட அறையும் குறையுமாக கேட்பானென்று புரிந்துக் கொண்டு, இனியன் தோளில் கைவைத்து, "அவ வீட்டுக்கு வந்தப்பிறகு நிதானமா பேசு. இப்பவரை நீ எப்படியோ.. இனியாவது அவளிடம் நல்ல பெயரை மீட்டு எடு. சொந்தங்களுக்குள்ள என்னடா பழிவெறி. இந்த பக்கம் பார்த்தா அவ உன் அத்தை பொண்ணு. அந்த பக்கம் பார்த்தா அவர் உன் சித்தப்பா பையன்.
அத்தை சித்தினு உறவுகளை வச்சிட்டு தேவையில்லாம வன்மத்தை சுமந்துட்டு இருக்காத. எந்த உறவும் இல்லாதவங்களுக்கு தான் உறவோட அருமை தெரியும். இதை நான் முன்னவே அறிவுறுத்தி இருக்கணும். ஆனா அன்னிக்கு நானுமே அவரை தேர்தல் விஷயத்துல தோற்கடிக்க காயப்படுத்துனு உனக்கு கொம்பு சீவி விட்டிருக்கேன்.
இப்ப அவரிடம் பழகிய கொஞ்ச நாளில்... அவரை புரிந்துக்கிட்டேன். பழிவெறி எல்லாம் பொண்டாட்டிக்கிட்ட காட்டாத.
டேக் கேர்" என்று தோளில் பதிந்த கையை தட்டி கொடுத்துவிட்டு அகிலன் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தாள்.
அகிலன் அருகே சென்றதும், "ஏன் தனியா நின்னுட்டிங்க. கூட வந்திருக்கலாம்ல?" என்று கேட்க, "இரண்டு சிநேகிதர்கள் பேசறப்ப நான் எதுக்குங்க நடுவுல" என்று கூறியவன் பைக் எடுத்துட்டு வந்துடறேன் என்று அன்னை பெரிம்மாவிடம் சொல்லிவிட்டு அகன்றான்.
இனியனோ 'தன்னிடம் இவள் பாட்டுக்கு தோளில் கை போட்டு பேசிவிட்டு செல்ல, அகிலன் என்ன நினைப்பானென' பயந்து நிற்க, அகிலன் கூறிய, 'இரண்டு சிநேகிதர்கள் பேசறப்ப நான் எதுக்குங்க' என்ற வார்த்தை இனியனின் கன்னத்தில் அறை வாங்கிய உணர்வுக்கு தள்ளியது.
இதே இனியன் இப்படி ஒரு சம்பவம் அகிலனுக்கு நிகழ்ந்தால், மதுராவிடம் வார்த்தையில் அமிலத்தை தேய்த்து, 'அவனிடம் என்னடி பேச்சு. அதுவும் தனியா. இதுல தோளை தட்டி தடவி பேசறியோ' என்று கத்தி போல வீசியிருப்போமோ என்று நினைத்து பார்த்தான். தன் தவறு லேசாக கோடிட்டு மனம் எடுத்துரைக்க, ஆனாலும் மதுரா மீதான கோபம் குறையாமல் அவனை வாட்டியது.
அவன் உதிரத்தை மொத்தமாய் கொன்றுவிட்டாளே.!
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
வாசிக்கறவங்க ரெஜிஸ்டர் செய்து ஆதரவு தாங்க. ஒரு முறை ரெஜிஸ்டர் பண்ணிட்டு அப்பறம் ப்ரீயா கூட படிங்க. ரெஜிஸ்டர் பண்ணறது அட இத்தனை பேர் வர்றாங்கனு ஒரு ஆனந்தம் தான். வேற ரீசன் இல்லை.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 43)
இந்த பொண்ணு காவ்யா வெனிநாட்டு பொண்ணா இருந்தாலும், ரொம்ப நல்ல பொண்ணா இருக்கிறாள். தான் இனியனை கொம்பு சீவி விட்டதையும் தப்புன்னு ஒத்துக்கிறாள், உறவுகளோட அருமை தெரிஞ்சவளா இருக்கிறாள். அதுவும் இல்லாமல் நட்புன்னா என்ன, காதல்ன்னா என்னன்னு ரொம்ப தெளிவாவும் இருக்கிறாள்.
மதுரா சொல்றதும் ஒருவிதத்துல நியாயமாத்தான் தெரியுது, அவ வாழ்க்கையே ஊசலாடறச்ச...
இதுல புதுசா ஒரு உறவெதுக்குன்னு நினைச்சிட்டாள். ஆனால் பாவம் அவளோட நிலைமை, இதுல இனியன் கிறுக்கன் வேற மதிவாவை காயப்படுத்த சமயம் பார்த்திட்டிருக்கான். இவன் செய்த தப்பை எல்லாம் இவனுக்கு யார் எடுத்துச் சொல்லுவாங்களாம் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👍 👌 😍 madhura kulla evlo vali erundha eppdi panniyirupa ava nelamaiyila erundha than theriyum endha iniyan chumma avamela kovathula erundha podhuma thannoda thavaraium thiruthikanum hmm eppo than maaruvaano🤔🧐 kavya and Akilan nalla purinjikita jodi pa super 😘
yarum illathavangaluku sontham oda arumai therium crt than ana athe sontham ippadi pali vanga ninaikavum seithe ithu mari yarum purinjika matanga . but kavya alaga pesi puriya vaika tryy pani iruka iniyanuku . madhura panthu thappu than aana avan sonnathu thappu illaye nalaiku ethathu na ava oru mudivu eduka mudium ithe kolanthai iruntha mudiyathu than
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-41
5 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
