மதுர ஜில்லா... மச்சானே!-42
அத்தியாயம்-42
காலை அகிலன் மெதுவாக கண் விழித்தான். இரவு முழுவதும் சரியாகத் தூங்கியதாலோ என்னவோ, மனம் சற்று லேசாக இருந்தது.
எழுந்திருக்க முயன்றவன், அடுத்த நொடியே அப்படியே உறைந்தான்.
காவ்யாவின் ஒரு கால் அவன் இடுப்பின் மீது இருந்தது.
ஒரு கை அவன் நெஞ்சைச் சுற்றிக் கட்டியிருந்தது.
அவள் முகம் அவன் தோளில் புதைந்திருந்தது. அவளது நீண்ட கூந்தல் அவன் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தது.
'அய்யய்யோ.' என்று மனதிற்குள் அலறியவன், அசையவும் முடியாமல் படுத்திருந்தான்.
'இவங்களை எழுப்பலாமா? இல்லை... கையை விலக்கலாமா? அதுவும் முடியவில்லை.
அவள் இன்னும் நெருங்கி உரசியதும் 'ஆண்டவா... ஏதாவது ஒரு ரூபத்துல வந்து என்னைக் காப்பாத்து." என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.
அந்த நேரத்தில் வெளியே, "மாஅஅஅஅ." என்று மாடு கத்தியது. அகிலன் முகத்தைச் சுளித்தான். மாட்டின் சத்தம் கேட்டதும் காவ்யா தூக்கக் கலக்கத்தில் 'ம்ம்ம்...' என்று முனகியபடி இன்னும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவள் அணைத்த வேகத்தில் முன்னழகு, தேகத்தில் உரசிட, அகிலனும் நெளிய காவ்யா கண் திறந்தாள்.
தான் அவனை கட்டிப்பிடித்து படுத்திருப்பதைப் பார்த்ததும் சட்டென்று விலகினாள்.
"சாரி." என்று வெட்கத்துடன் சிரித்தாள். "எனக்கு எப்பவும் பில்லோவ கட்டிப்பிடிச்சுதான் தூக்கம் வரும்.. இன்னிக்கு..."
அவனைப் பார்த்து சிரித்தவள்,
"பில்லோவுக்கு பதிலா உங்களை கட்டிப் பிடிச்சிருக்கேன் போல." என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
"பட்... கம்ஃபர்டபிளாத்தான் இருந்தது. பாவம்.. நீங்க தான் பயந்திருப்பிங்க " என்றாள்.
அந்த ஒரு வார்த்தைக்கே அகிலனின் இதயம் வேகமாகத் துடித்தது.
அதற்குப் பிறகு "நான் குளிச்சிட்டு வர்றேன்." என்று காவ்யா பாத்ரூமுக்குள் சென்றாள்.
சில நிமிடங்களில் சுடிதார் டிரஸ்ஸிலேயே வெளியே வந்தாள். "சேரி கட்டணும்னா மறுபடியும் தூரிகாவை தான் கூப்பிடணும். அவங்க அடிக்கடி உதவி கேட்கவும் நல்லாயில்லை. சுடிதாரே போட்டுக்கறேன் உங்களுக்கு ஓகே தானே?."என்று தோளைச் சுருக்கினாள்.
அகிலனும் நல்லதென மென்னகைத்தான். அவனும் வேகமாய் குளிக்க சென்று வந்து நிற்கும் பொழுது காவ்யா தலை எல்லாம் சின்ன க்ளிப்பில் கொஞ்ச முடியை மட்டும் அடக்கிவிட்டு மீதியை சுதந்திரமாக அலைப்பாய வைத்தாள்.
அகிலன் எப்பவும் போல தன்னறையில் துண்டை அணிந்து வந்த கோலம் புரிய, அவசரமாய் பாத்ரூமிற்குள் நுழைந்து தப்பிக்க பார்த்தான்.
"இந்த ஷர்ட் இந்த வேஷ்டி எடுத்து வச்சியிருக்கேன். உங்களுக்கு ஓகே தானே?" என்றதும் அவன் வேஷ்டியை அணிந்து நின்றான். சட்டை அவளது சுடிதார் உடைக்கு பொருத்தமாக எடுத்து வைத்திருப்பதை கவனித்தான்.
மறுக்காமல் அதையே அணிந்துக் கொண்டான்.
வெளியே காவ்யா அகிலன் வந்த பொழுது மீனாட்சி, அதியமான், தூரிகா மூவரும் ஏதோ பதட்டமாக நின்றிருந்தனர்.
"என்னம்மா என்னாச்சு?" என்று அகிலன் கேட்டான்.
மீனாட்சியால் சொல்லவே முடியவில்லை.
"நேத்து... நம்ம மதுரா கிச்சன்ல மயங்கிட்டா போல. இனியன் பதறிப் போய் ஹாஸ்பிடலுக்கு சேர்த்திருக்கான்." என்றார்.
காவ்யா அதிர்ச்சியாக, "அவங்களுக்கு என்னாச்சு?" என்றாள். ஒரு நொடி கூட யோசிக்காமல்,
"இனியன் மறுபடியும் அடிச்சிட்டாரா?" என்று கேட்டுவிட்டாள்.
அங்கிருந்த அனைவரும் அவளைப் பார்த்தனர்.
மீனாட்சி மெதுவாக,
"இல்லம்மா... கர்ப்பமா இருந்திருக்கா போல... மயங்கி விழுந்திருக்கா." என்றதும் அகிலன் முகம் லேசாக ஆனந்தம் கொள்ள, காவ்யாவுமே ''நல்ல விஷயம் தானே?" என்றாள்.
மீனாட்சி எப்படி சொல்வார்.. ஆனால் சொல்ல வேண்டுமே. "நல்ல விஷயம் தான். ஆனா இனியன் தான் ஹாஸ்பிடல்ல சேர்க்கறதுக்கு முன்னவே அவ கரு கலைந்துடுச்சு போல. நேத்தே இளையமதி அழுதுட்டு போனதுக்கு இதுதான் காரணம்னு இப்ப புரியுது. நான் கூட மக வாழவேண்டிய இடம்னு அழுததானு நினைச்சிட்டேன். மதுராவுக்கு இப்ப கர்ப்பம் கலைந்து ஹாஸ்பிடலில் இருக்கா" என்றார்.
அகிலனின் மனம் அடுத்த கணமே துடித்தது.
'நானும் போய் பார்க்கலாமா.?
ஆனால்... இனியன் என்ன நினைப்பான்?' என்று அமைதியாக நின்றான். இது நெருப்பில் நடக்கும் நிலை என்று புரிந்து சிந்தித்தான். தன் திருமண நாள் அதுவுமா இப்படி நடக்க வேண்டும் என்று உள்ளுக்குள் துடித்தான்.
காவ்யாவே, "ஒ... அப்ப இங்கயே இருக்கிங்க. முதல்ல நாம போவோம் அத்தை." என்றாள்.
"இல்லைம்மா.. கல்யாணம் ஆனா ஜோடி அடுத்த நாளே ஹாஸ்பிடலுக்கு வந்தா நல்லாயிருக்காது." என்றார்.
அகிலனுக்கு இதெல்லாம் ஊரில் பார்ப்பார்கள் என்றதால், அன்னை சொல்வதை ஏற்றவனாக மதுராவுக்காக வருத்தப்பட, காவ்யாவோ, "அட அதெல்லாம் நம்ம மனசு தான் காரணம். ரொம்ப யோசிக்காதிங்க. நாங்க ரெண்டு பேரும் வந்துடுறோம்." என்று சொன்னாள்.
ராஜாராமோ "காவ்யா.. உங்கத்தை சொன்னா கேளும்மா. புது ஜோடி ஒன்னு ஏதாவது கல்யாணத்துக்கு போவாங்க. இல்லையா.. கோவிலுக்கு போவாங்க. இங்க இருக்குற வழக்கம் அப்படித்தான்" என்றார்.
"டேடி.. அதெல்லாம் பார்க்க முடியுமா?" என்று வாதம் செய்ய, அதியமானும், "இல்லைம்மா.. நாங்க மூன்று பேர் போறோம். நீங்க இருங்க." என்றார்.
உங்களுக்கு என்ன கோவிலுக்கு போகணும் அவ்ளோ தானே. ஓகே.. நீங்க மூன்று பேரும் கார்ல ஹாஸ்பிடல் போங்க. நாங்க ஜோடியா இந்த ஊர் கோவிலுக்கு போய் மதுரா பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணி வேண்டிட்டு வந்துடறோம். சிம்பிள்... கோவிலுக்கு போனது மாதிரியும் ஆச்சு. அப்படியே மதுராவை பார்க்க வர்றோம்" என்றாள்.
"என்ன சரி தானே?" என்று அகிலனிடம் அபிப்ராயம் கேட்டாள். அகிலனோ அவளது பேச்சில் மறுக்க முடியாது தானாக தலையாட்டினான்.
"ஆங்.. இவரே சொல்லிட்டார்" என்று கூற, மீனாட்சியோ நிதானமாக காவ்யாவிடம் புரிய வைக்க இயலாதென, சரியென்று தூரிகாவை அழைத்து கணவரோடு காரில் ஏறினார்.
காவ்யாவை அகிலனை சாப்பிட்டு வரக்கூறினார்.
ராஜாராம் மட்டும் அவரது இரு நண்பர்கள் இருக்க அவர்களை பார்த்து பேசி இருந்துக் கொள்வதாக உரைத்தார்.
பைக்கில் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்தவளை கண்டு, அகிலன் திரும்பி பார்த்து, "ஆங்... பட்டிக்காட்டான் ஏதோ ரப்பிஷா சொல்லறான்னு நினைக்காதிங்க. சிங்கிள் சைட் கால் போட்டு உட்காருறிங்களா. ப்ளிஸ்." என்றான்.
"உங்களுக்கு கம்பர்டபிளா இல்லையா?" என்று கேட்டாள்.
"இல்லை.. ஊர்ல" என்று மென்று முழுங்க, "சீ.. அகிலன். உங்களுக்கு கம்பர்டபிளா இல்லைன்னா சொல்லுங்க. மாத்திக்கறேன். ஊருக்காக மாத்த முடியாது." என்றாள்.
அகிலன் இரண்டு நொடி யோசித்து, "ம்ம்.. எனக்குமே... கம்பர்டபிளா இல்லைங்க" என்றான் உண்மையுடன்.
அடுத்த நிமிடமே காவ்யா இறங்கி சிங்கிள் சைட் காலை போட்டு அமர்ந்து கொண்டு, "கோவிலுக்கு போகலாம்" என்றாள்.
அகிலன் மெதுவாக வண்டியை இயக்க, மிகவும் தள்ளி அமர்ந்திருப்பது போல தான் அகிலனுக்கு தோன்றியது. தேவையற்று வாயை விட்டு தள்ளி நிறுத்திவிட்டோமோ' என்று நினைத்தான்.
ஊர் கோவில் முன் வண்டியை நிறுத்திவிட்டு, "நீங்களும் நானும் முதல்ல மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தான் முதல்ல அழைச்சிட்டு போகணும்னு அம்மா ஆசை. ஆனா அதுக்கு முன்ன நம்ம ஊர் கோவிலுக்கு வர்ற யோகம். நமக்கு இதான் குலதெய்வ கோவிலும்." என்று அம்மன் கோவிலுக்கு தான் அழைத்து வந்தான். காவ்யா பதிலுக்கு எவ்விதமான எதிர்வினை ஆற்றவில்லை. அகிலனுக்கு அதுவே உறுத்தியது.
கடவுளிடம் மதுராவுக்காக அகிலன் காவ்யா இருவருமே வேண்டினார்கள்.
கோவில் பூசாரி கூட, "என்ன தம்பி நேத்து கல்யாணம் முடிச்சு நேரா குலதெய்வத்தை பார்க்க அழைச்சிட்டு வந்துட்டிங்களா?" என்று கேட்டார்.
அகிலன் ஆமோதிப்பதாக சன்னமாக சிரிக்க முயன்றான்.
"நல்லது தான்.. அம்மன் அருள் எப்பவும் உங்க குடும்பத்துக்கு இருக்கும்" என்று ஆசி வழங்கி குலதெய்வ பெயரிலேயே அர்ச்சனை செய்தார்.
தீபாராதனை காட்டி காவ்யா முன்னே நீட்டவும் தொட்டு கும்பிட்டாள்.
"குங்குமம் எடுத்துக்கோங்க" என்றதும் விழித்தாள்.
வீட்டில் இதுவரை மீனாட்சி தான் அவர்களாகவே திருநீறு குங்குமம் வைத்து அழகு பார்த்தது. அதனால் நிற்கவும், அகிலனே குங்குமம் எடுத்து அவளது வகிட்டில் வைத்து விட்டான்.
கூடவே நெற்றியிலும், தாலியை எடுத்து வைத்து விட்டான்.
காவ்யா அதையெல்லாம் பார்வையிட்டாள்.
"அது... தாலில குங்குமம் வச்சி.. புருஷனுக்கு நல்லதுனு சொல்வாங்க. நியூமேரிட்னு வச்சேன்." என்று சமாளித்தான்.
அவனுக்கு நேற்று திருமணம் முடித்து ஆர்டராக குங்குமம் வைத்தது போலவே செய்துவிட்டான். அதன்பின்னே அதிகபட்சமாக தெரியவும் அவனே விளக்கினான்.
அங்கிருந்த பேப்பரில் குங்குமத்தை மடித்து வைத்தான்.
காவ்யா சற்று அமர்ந்துவிட்டு, அரசமரத்தை வேடிக்கை பார்த்தாள். அங்கே சில கிளிகள் கத்திக் கொண்டிருந்தது.
புன்சிரிப்புடன் மேலேயே பார்த்து நிற்க, அகிலனோ 'மதுராவை பார்க்க இவளா வர்றா. அங்க இனியன் என்ன ஆடுவானோ' என்று பதட்டமாய் யோசித்தான்.
இதுவரை இனியன் நேரிடையாக தன்னையும் மதுராவையும் வைத்து பேசவில்லை. அவளிடம் தான் ஏதோ காயப்படுத்தும் விதமாக பேசுவதாக அறிந்தவன் சங்கடமாக தான் கிளம்பினான்.
பைக்கில் காவ்யா ஏறும் நேரம், "டபுள் சைட் கால் போட்டே உட்காருங்க" என்றான்.
"உங்களுக்கு கம்பர்டபிளா இருக்குமே" என்றாள்.
"உம்முனு இருக்கற உங்க முகத்தை கண்ணாடில பார்த்துட்டு வர்றது அதை விட கம்பர்டபிளா இல்லை. அதுக்கு இப்படி வர்றது பெட்டர். நான்.. நானும் என்னை மாத்திக்கணுமே" என்றான்.
காவ்யாவோ புன்னகைத்து அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஏறினாள்.
போகுமிடமெல்லாம் பச்சை வயல்களை தாண்டியே சாலையில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.
"செம காத்து... கண்ணுக்கு எட்டுற வரை க்ரீன் கலர்ல வயல். அப்படியே தலையாட்டிட்டு இருக்கறது பார்க்க நல்லா இருக்கு" என்று அகிலனின் தோளில் கையை போட்டு பேசினாள்.
அகிலனோ 'நைட்டு காலையே போட்டு படுத்திருக்கா. கை தானே நெளியாம வண்டியை ஓட்டுடா அகிலா' என்று தன்னை தானே சொல்லிக் கொண்டு விரைந்தான்.
சாலையென்றால் ஆங்காங்கே குண்டும் குழியும் இருக்க, வண்டி அதில் ஏறியிறங்கவும் காவ்யா அவன் மீதே மோதினாள்.
காவ்யாவோ 'அம்மாடி.. இதுக்கு தான் சிங்கிள் சைட்டே போட்டு உட்கார சொல்லியிருப்பாரோ. பட்.. இதுவும் நல்லாயிருக்கு' என்று அவனை நெருங்க, அகிலன் திக்குமுக்காடி மேடும் பள்ளம் குழியில் விடாமல் பார்த்து நிதானமாக வண்டியை இயக்க ஆரம்பித்தான்.
ஏதோ இப்பொழுது தான் வாகனத்தையே ஓட்டி பழகுபவன் போல இருந்தது அவனது செய்கை. அதற்கும் மனதில் காவ்யா சிரித்துக் கொண்டாள்.
'நல்லவனே.' என்று செல்லமாய் மனதில் வசைப்பாடினாள்.
மருத்துவமனை வரவும் பார்க்கிங்கில் வண்டியை விட்டு இறங்கினார்கள்.
வேல்விழி அழுதபடியே,
"நம்ம வீட்டோட முதல் வாரிசு... கண்ணு முன்னாடியே போயிடுச்சு மீனாட்சி" என்று கதறினார்.
அதைப் பார்த்த மீனாட்சி கண்களும் கலங்கின. அவருக்கும் குழந்தை இழந்த சோகம் தெரியுமல்லவா! அதனால் அதை உணர்ந்தவராக வேதனை அடைந்தார்.
அருளாளன் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவாக தம்பி அருகே வந்தார். "மீனாட்சியை அன்னைக்கு நான் கோபத்துல படியில தள்ளினேன். அப்பவே என் வீட்டுக்கு இந்த பாவம் ஒட்டிக்கிட்டுச்சோன்னு இப்ப பயமா இருக்கு. என் மூத்த பையனோட முதல் குழந்தையே போயிடுச்சு" என்று குரல் உடைந்தது அவருக்கு. அவர் இவ்வாறு நினைத்து மன்னிப்பு வேண்டுவாரென அங்கிருந்தவர்களில் யாருமே நினைக்கவில்லை. எல்லாம் வேல்விழி தான் கணவரை சாடி பேசியது. 'நீங்க மீனாவுக்கு செய்த பாவம். இப்ப நம்ம பையனுக்கு வாரிசே வரக்கூடாதுனு மதுரா முடிவெடுத்துட்டா. போங்க.. கட்டாய தாலியா கட்டறிங்க. பிள்ளைய பெத்து தர்றவ முடிவெடுத்துட்டா.' என்று கொதித்து விட்டதன் விளைவு, அருளாளனுக்கு தன் தவறும் அதற்கான தண்டனை கண்முன் தெரிந்தது. அதனாலையே தம்பி மனைவி மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்டு நின்றார்.
அந்த இடத்தில் யாராலும் அவரை ஆறுதல் சொல்ல முடியவில்லை.
மீனாட்சியோ ''என்ன மச்சான் நீங்க.. அதையும் இதையும் சம்பந்தப்படுத்திக்கிட்டு. அதெல்லாம் அடுத்து மதுரா கருவுண்டாகி வாரிசை பெத்தெடுப்பா." என்று ஆறுதல் தந்தார். அதியமானுக்கு தன் மனைவி மீனாட்சி அண்ணனிடம் பேசியதில் நிம்மதியானார்.
தூரிகாவோ மதுரா கையை பிடித்து 'ஏன் இப்படி பண்ணிக்கிட்ட' என்பது போல கடிந்தாள்.
இளையமதி கல்யாண சுந்தரம் எல்லாம் மகளின் செயலில் உயிரற்ற ஜடமாக நின்றனர்.
நிலானி வாசலை கண்டு, "அம்மா.. அகிலன் மச்சான் வர்றார். கூடவே அந்தக்கா வருது" என்று சுட்டிக்காட்ட, இனியன் பார்வை அந்த வராண்டாவில் ஏறிட்டது.
அகிலன் நடந்து வர, கூடவே காவ்யா அகிலனின் கைகளை பற்றி ஒரே நிற உடையில் நடந்து வந்தார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 42)
சிவத் தானே, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்... முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..
என்கிறதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லையே...?
இனியாவது மதுராவை நல்லா பார்த்துக்கிட்டாள், அடுத்த வாரிசை அவளே பெத்து தரப்போறாள், அதுக்கு முன்னாடி அப்பனும் மகனும் அவ கிட்ட மனம் விட்டு மன்னிப்புக் கேட்கட்டும். கோடு போட்டு நிக்கச் சொல்லியே சீதை அன்னைக்கு நிக்கலை, இதுல மஞ்சக் கயிறை கட்டி இஷ்டத்துக்கு வளையச் சொன்னால் வளைஞ்சிடுவாளா என்ன ?
யாரா இருந்தாலும் அன்புக்குத் தான் அடங்குவாங்க, அந்த அன்பை வெளிப்படையா காட்டட்டும், அதோட விளைவு எப்படி தெரியுறதுன்னு அப்புறம் பார்க்கட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
38 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-41
5 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
