மதுர ஜில்லா... மச்சானே!-34
அத்தியாயம்-34
அகிலன் மறுப்பாகத் தலையசைத்த அடுத்த நொடியே... "வேண்டாம் அண்ணா..." என்று தூரிகா சட்டென்று முன்னே வந்தாள்.
அனைவரின் பார்வையும் அவள் மீது திரும்பியது.
அகிலனை நேராகப் பார்த்தவள், "இது சரிவராது அண்ணா..." என்றாள். இத்தனை நாட்கள் மதுரா மணமுடித்து இதுவரை தன்னிடம் பேசாத தங்கை வாய்திறக்க அவளை ஏறிட்டான்.
தூரிகாவோ காவ்யாவை நோக்கித் திரும்பினாள்.
"நீங்க சொல்றது எதுவுமே எனக்கு நம்பிக்கையா இல்ல." என்றதும், காவ்யாவின் புருவம் சுருங்கியது.
காவ்யாவோ "என்ன சொல்ற?" என்றாள் அமைதியாக.
"என் அண்ணனை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றதுக்குப் பின்னாடி வேற ஏதோ பிளான் இருக்கு." என்றாள். "தூரிகா..." என்று அதியமான் அதட்டினார்.
"இல்லப்பா... நான் பேசணும்."
என்று கூறியவள் மீண்டும் காவ்யாவைப் பார்த்தாள்.
"இனியன் அண்ணா தான் உங்களை இங்கே அனுப்பினாரா?" அந்தக் கேள்வியில் அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.
"என்ன?" என்று காவ்யா புரியாமல் பார்த்தாள்.
"என் அண்ணன் உடைஞ்சு போகாம இருக்கான். அவனை முழுசா உடைக்கணும்னு... நீங்க வந்திருக்கீங்களோன்னு எனக்கு தோணுது. இல்லைன்னா.. காதலிச்ச இனியன் அண்ணனை விட்டுட்டு சட்டுனு அகிலன் அண்ணனை ஏன் கட்டிக்க யோசிக்கணும். அதுவும் இப்ப தானே எங்கண்ணாவை சந்திச்சிருக்கிங்க. அதெப்படி உங்க வாழ்க்கையையே தூக்கி தர தோன்றும்." என்றதும் காவ்யா மறுப்பாகத் தலையசைத்தாள்.
ஆனால் தூரிகா நிற்கவில்லை.
"நீங்க சொல்ற மாதிரி எல்லாமே எதேச்சையா நடந்ததா? ரோட்ல சந்திச்சது... எங்க வீட்டுக்கு வந்தது... இங்க தங்கினது... அப்புறம் இனியன் அண்ணாவை சந்திச்சது... இப்ப என் அண்ணனையே கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றது... இதெல்லாம் பார்த்தா... இது எதுவுமே சாதாரணமா தெரியல." என்றாள்.
காவ்யாவின் முகம் இறுகியது.
தூரிகாவின் குரல் இன்னும் கூர்மையானது. "முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு... யாராவது இவ்வளவு இயல்பா வந்து தங்குவாங்களா? என் அண்ணன் நல்ல மனசுக்காக வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.
அதை நீங்க இப்படி பயன்படுத்திக்கிட்டீங்க. சொல்லப்போனா இது வெல் பிளான். இனியன் அண்ணா தான் எங்க அண்ணன் மனசை உடைச்சுக் காட்டு... அதான் வெத்து பத்திரத்துல மதுராவிடம் சைன் வாங்கியாச்சு. அகிலனை மறுபடியும் ஏமாத்தினா, இனியனே உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஏதாவது சொன்னாரா? என் அண்ணனை அவமானப்படுத்த அனுப்பி வச்சிருக்கார் அப்படி தானே?" என்று கேட்டாள்.
அங்கே ஒரு நொடி அமைதி நிலவியது.
காவ்யா மெதுவாகத் தலையசைத்தாள். "நீ... என் மேல அபாண்டமா பழி சுமத்தி பேசற. மதுரா அகிலன் காதலை பத்தி ஞொன்னதே நீ தான். அப்ப எல்லாம் நல்லா தானே பேசின." அவளது குரலில் முதல் முறையாக கோபம் வெளிப்பட்டது.
"இனியன் என்னை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. அதோட நான் அவன் முகத்தையே இனிமே பார்க்க விருப்பமில்லாம இருக்கேன்.
அவன் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன். அவன் பேசினாலும் நான் கேட்க மாட்டேன். என் வாழ்க்கையிலிருந்து அவனை வெளியே மொத்தமா தூக்கி எறிந்துட்டேன். நான் இங்கே வந்தது... அவனைத் திட்டி என் மனசுல இருந்த கோபத்தை இறக்கத்தான்.
உங்க அண்ணனை சந்திச்சது... கோஇன்சிடெண்ட். ஆனா உங்கண்ணாவை நான் ஏற்கனவே ஒரு லோக்கல் சேனல்ல பார்த்திருக்கேன்.
உங்க வீட்டுக்கு வந்ததும்,
உங்க குடும்பத்தை தெரிஞ்சுக்கிட்டது, இது எல்லாமே தற்செயலா நடந்தது. என்ன... உங்கண்ணாவை எனக்கு தெரியும். அதை மறுக்க மாட்டேன்" என்று சிறிது இடைவெளி விட்டாள்.
"அவரைப் பற்றி இங்க வந்து நேர்ல அவரோட சில விஷயத்தை கவனிச்சு தெரிஞ்சுக்கிட்ட பிறகு... அவரை மதிக்க ஆரம்பிச்சது மட்டும்...
என்னோட முடிவு." என்று உறுதியாகச் சொன்னாள்.
அவள் கண்களில் இருந்த நேர்மையைப் பார்த்ததும்,
தூரிகாவால் கூட உடனே மறுத்துப் பேச முடியாமல் நின்றாள்.
தூரிகா மறுத்து பேச வேண்டுமென தடுமாறி பேச முயல, மீனாட்சியோ "நிறுத்து தூரிகா.. எனக்கு காவ்யா பேச்சுல எந்த தப்பும் தோணலை. உனக்கு மதுரா மீதான பாசம், காவ்யாவோட இந்த நேரிடையான பேச்சில பிடிக்காம பேசற. அதோட இனியன் அனுப்பி காவ்யா வந்ததா சொல்லறது வீண் பழி.
இந்த பொண்ணு கேட்பதுல என்ன தப்பிருக்கு. அகிலனை கட்டிக்க கேட்டிருக்கு. கல்யாணம் பண்ணட்டும்... மிஞ்சி மிஞ்சி போனா இனியனும் உங்க பெரிப்பாவும் முகத்தை தூக்கி வச்சிப்பாங்க. இல்லையா... இளையமதி மதினி நிலானியை கட்டிக்க சொல்லி கொஞ்ச நாள் முன்ன கேட்டாங்க. அவங்க அதனால முகம் திருப்பலாம்.
இரண்டு பேரும் முகம் திருப்பிக்கட்டும். வன்மம் வளர்த்துக்கட்டும். இப்ப மட்டும் என்ன உறவுக்கு முக்கியத்துவம் தந்தா அவங்க முடிவெடுத்தாங்க. நம்ம மனசை ரணமாக்கிட்டு தானே முடிவெடுத்து ஊரையே அழைச்சு இனியன்-மதுரவாணிக்கு கல்யாணம் நடத்தினாங்க.
நானும் நடத்தறேன் என் பிள்ளை அகிலனுக்கு. ஊர் கூடி சொந்தம் கூட்டி.. அகிலனுக்கும் காவ்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்." என்று கூறினார்.
ஒரு மகனின் வலியை தாய் தீர்த்து வைக்கும் பொருட்டு முடிவெடுத்து நின்றார் மீனாட்சி.
"அப்பா... அம்மா சொல்லறது நடக்காதுனு சொல்லுங்க" என்று தூரிகா கூற, அதியமானோ "ராஜாராமுக்கு எந்த சங்கடமும் இல்லைன்னா, காவ்யா விருப்பப்படி, உங்க அம்மா ஆசைப்படி நடத்திடலாமேமா. அகிலனுக்கும் கல்யாணம் செய்யறதுக்கு பொண்ணு தேடறோம். அந்த பொண்ணு காவ்யாவா இருந்துட்டு போகட்டும். எனக்கும் காவ்யா பேசியதில எந்த தப்பும் தெரியலை.
வீடு தேடி வந்து அந்த மதுரை மீனாட்சியே, நம்ம அகிலனுக்கு நல்லது செய்ய வந்திருக்கும் போது, நான் எப்படி விரட்ட முடியும். ஏற்கனவே மதுரவாணியை பரிசம் போட நாட்கள் கடத்தி இந்த நிலைமையில நாம நிற்கறோம். இனி அகிலன் முடிவெடுக்கட்டும். பெத்தவங்களா எங்க இரண்டு பேருக்கும் காவ்யாவை பிடிச்சிருக்கு." என்று கூறினார்.
தூரிகாவோ "அண்ணா... இந்த பொண்ணை வெளியே போக சொல்லு." என்று கூறினாள்.
அகிலன் அன்னை தந்தையை பார்க்க, அவர்களோ "என் மகனுக்கு நல்லது செய்யணும் தூரிகா. நீ இதுல தலையிடாத. பெத்த கடமை எங்களுக்கு இருக்கு. நாங்க பார்த்துப்போம் நீ நகரு" என்று அங்கிருந்த செடியில் வெற்றிலை கொடியை தேடி பிடித்து நான்கு வெற்றிலையை உடைத்தார்.
கூடவே அதியமான் மதியம் சாப்பிட்டு பாக்கு போட வைத்த அஜந்தாபாக்கு பாக்கெட் பாக்கெட்டில் எஞ்சி இருக்க அதை எடுத்தார்.
அவசரமாய் ரோஜா மலரை பறித்து, அங்கே காய்ந்த கொய்யா கனியை பறித்து, ராஜாராம் முன் மீனாட்சி நின்று, கணவரையும் அழைத்து, "வெத்திலை பாக்கு பூ பழம் இருக்கு. உங்க பொண்ணை கட்டி வைக்க விரும்பினிங்கன்னா மேற்கொண்டு பேசலாம் இது மாப்பிள்ளை வீட்டு சார்பா நாங்க முன்னெடுத்து வைக்கறோம்" என்று கூறிட அகிலன் அன்னையின் செயலில் ஆடிப்போனான்.
அன்னை இவ்வாறு அவசரப்பட்டாலும் அகிலன் தடுக்கவில்லை. வேடிக்கை பார்க்கும் நிலையுமின்றி தவித்தான்.
ராஜாராமோ, கொய்யாவை எடுத்து சுவைக்க, காவ்யாவோ ரோஜா மலரை சூட முயன்று, "ஆன்ட்டி நீங்களே வச்சிவிடுங்க" என்று உரிமையாக கூறினாள்.
மீனாட்சி மலர்ந்த முகமாய் பூவை சூடி அழகு பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ராஜாராமோ அதியமான் கையை பிடித்து, "நேத்து மதியம் கூட சிநேகிதர் போல பேசிக்கிட்டோம். ஆனா பாருங்க இப்ப சம்பந்தியா மாற இறைவன் அருள் புரிந்திருக்கான்." என்று பேச தூரிகாவோ வெடுக்கென முகம்காட்டி அவளுக்கான அறைக்குள் வந்தடைந்தாள்.
அகிலனோ ஏதோ சிற்சில நேரத்தில் தனக்கான வாழ்க்கை முடிவை தேர்ந்தெடுத்து நிற்க, அதை எப்படி எடுத்துக் கொள்வதென அறியாது விதி வசத்தில் விட்டு விட்டான்.
அதன்பிறகு பெரியவர்கள் காவ்யா அகிலனின் திருமணத்தை எப்படி நடத்தலாமென்று கூடத்தில் பேச ஆரம்பித்தனர்.
ராஜாராம் அமெரிக்காவில் வேலை செய்த பொழுது அமெரிக்க பெண்மணியான 'ஜேனட்' என்பவரை மணந்து கொண்டார். ஜேனட்டும் செஸ்ட் கேன்சரில் இறந்து விட்டதாலும், அவர்களது வழியில் உறவுகளை விட வணிக நோக்கத்தில் நண்பர்களே அதிகம் என்றார் ராஜாராம்.
ராஜாராமின் உறவினர்கள் முன்பே தாய் தகப்பன் இருந்த பொழுதே குறைந்து விட்டதால் அதிக போக்குவரத்து இல்லாமல் உறவுகள் இந்தியாவில் இல்லை என்றார். அதனால் இங்கே முறைப்படி திருமணமும், அமெரிக்காவில் ஒரு ரிஸப்ஷனும் வைக்க விருப்பப்பட்டனர்.
அதுக்கூட திருமணம் முடித்து, யார் யாரிடம் பாஸ்போர்ட் விசா இருக்கின்றது என்று தயார் செய்து செல்ல முடிவெடுத்தனர். அதற்கு காலம் இருக்கின்றன என்றும், திருமணம் மட்டும் இந்த மாதத்தில் முடித்திடலாமா? என்றவரை பேசினார்கள்.
அகிலனுக்கு தான் ஒரே நாளில் மலைப்பு தோன்றியது.
சில நேரம் ஜாதகம் பார்க்கப்படும் போது, இவருக்கு அஷ்டமத்தில் சனி எந்த காரியம் தொட்டாலும் அப்படி தான் சரியாக அமையாது என்பார்கள். ஆனால் அதே குரு சுக்கிர திசையில் வந்துவிட்டால் எந்த தடங்கல் வந்தாலும், நமக்கான நல்லது நம்மை தேடி வரும் என்று கூறுவார்களே அப்படி தான் அகிலனுக்கு நல்லது வரிசையாக வந்தது.
அகிலன் யாருக்கோ கல்யாணம் என்பது போல தங்கையை சமாதானம் செய்ய முயன்றான். அத்துடன் அவ்விடத்தில் நிற்க தயங்கினான் என்பதே உண்மை.
அறைக்குள் வந்து "தூரிகா." என்று நெருங்க, "அண்ணா.. முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்து. நீ யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா இந்த காவ்யாவை மட்டும் கல்யாணம் கட்டிக்காத. எனக்கு அவளை சுத்தமா பிடிக்கலை." என்று அறிவுரையை அள்ளி தெளித்தாள்.
அகிலனோ "என் கல்யாணத்தை நானே முடிவெடுக்கற நிலையில் இல்லை தூரிகா. அம்மா அப்பா ஆசைப்படறாங்க
அதோட அம்மா அப்பா கவனிச்சவரை, அந்த பொண்ணு நல்ல பெட்டரா நினைக்கறாங்க. அந்த பொண்ணும் பொசுக்குன்னு இப்படி கேட்பாங்கனு எனக்கு என்ன தெரியும்."என்றான்.
தூரிகாவோ அந்த பொழுதிலும், "நீ மறுத்து பேசு அண்ணா. எவ எவளோ வந்து உன் வாழ்க்கையை முடிவு பண்ணறா." என்று எகத்தாளமாய் பேச, அகிலன் காவ்யாவை கண்டு பதிலளிக்க வந்து அவளது பார்வையில் வார்த்தையை விழுங்கினான்.
மீனாட்சியோ தூரிகாவிடம் "வாயை மூடுடி. உங்க அண்ணாவுக்கு வர்ற நல்ல வாழ்க்கை உன்னால கேட்டுச்சு நான் சும்மா விடமாட்டேன்." என்று கூற தூரிகா அனைவரையும் பார்த்தாள்.
தூரிகாவுக்கு அந்த நொடியே ஏதோ அன்னிய தன்மை உண்டானது. அவளுக்கு காவ்யாவை சுத்தமாக பிடிக்கவில்லை. மதுரவாணி இடத்தில் காவ்யாவை நிறுத்தி பார்க்க மனமும் ஒத்துழைக்கவில்லை.
இந்த காவ்யாவின் வரவும் செய்கையும் கூட, இனியன் அண்ணனின் ஏதாவதொரு திட்டமாக கூட இருக்கலாமென நம்பினாள்.
ஆனால் மீனாட்சி அதியமான் இருவருமே ராஜாராமிடமும் காவ்யாவிடமும் நல்விதமாக மேற்கொண்டதை பேச, அகிலன் தனித்து வந்து நின்றான்.
தூரிகாவோ இத்தனை நாளாக அண்ணனிடம் கோபித்துக் கொண்டு திரிந்தவள், அண்ணனை பின்தொடர்ந்து வந்து, "அண்ணா... அந்த பொண்ணு கல்யாண மேடை வரை வந்து உன்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னா என்ன செய்வ? இல்லை... ஊரெல்லாம் பத்திரிக்கை வச்சிட்டு கடைசி நிமிஷத்தில காணாம போயிட்டா அதோட பலன் நீ தான் அண்ணா அனுபவிக்கணும்.
இதை விடு.. இதுக்கும் மேல கல்யாணம் செய்து, அந்த இனியன் மாதியே உன்னிடம் விவாகரத்து வாங்கினா என்ன செய்வ!" என்று கேட்டு அடுக்க, அகிலன் சிறிது யோசிக்க செய்தான்.
சட்டென்று காவ்யாவின் கைகள் அகிலனது தோளில் தட்டி, "உங்களிடம் பேசணும்" என்றாள் உரிமையாக.
அகிலனுக்கு அதற்கே வேர்த்துவிட்டது. இவளென்ன தன் தோளில் தட்டி பேச கூப்பிடுகின்றாளென்று அதிர்ந்தான். தங்கை போகாதே என்ற போதும் அகிலன் கால்கள் காவ்யாவை தொடர்ந்தன.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 34)
அய்யய்யோ ..! கவுந்துட்டானே, கவுந்துட்டானே... இப்படி அழகான, அமெரிக்கா பொண்ணைப் பார்த்தவுடனே இப்படி கவுந்தடிச்சு விழுந்துட்டானே, விழுந்துட்டானே...?
இதுல தோளைத் தட்டி பேசணும்ன்னு தனியா வேற கூட்டிட்டு போறா, இனி அவ்வளவு தான் பையன் ப்ளாட், நாங்க விடறோம் ஜூட்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 34)
அய்யய்யோ ..! கவுந்துட்டானே, கவுந்துட்டானே... இப்படி அழகான, அமெரிக்கா பொண்ணைப் பார்த்தவுடனே இப்படி கவுந்தடிச்சு விழுந்துட்டானே, விழுந்துட்டானே...?
இதுல தோளைத் தட்டி பேசணும்ன்னு தனியா வேற கூட்டிட்டு போறா, இனி அவ்வளவு தான் பையன் ப்ளாட், நாங்க விடறோம் ஜூட்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
