மதுர ஜில்லா... மச்சானே!-31
அத்தியாயம்-31
வயலில் நடந்த அந்த உரையாடலுக்குப் பிறகு இனியனின் மனம் முழுவதும் கொதித்துக் கொண்டே இருந்தது.
காரை ஓட்டியபடியே, ஸ்டியரிங்கை பலமாகப் பிடித்தான். 'எல்லாமே கெட்டுப் போச்சு...!' என்று பற்களைக் கடித்தான். காவ்யா தன்னை வெறுப்புடன் பார்த்த பார்வை...
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் மோதியது.
'மேரிட்டல் ரேப்..'
'மனுஷனாடா நீ.' என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன.
"ச்சே..." என்று ஸ்டியரிங்கில் குத்தினான்.
இந்த அகிலன் எதுக்கு அவளை வீட்டுல தங்க வச்சிருக்கான்? வேண்டும்னே பண்ணுறான். என்னை காயப்படுத்தத்தான் அவளை வயல் வரப்புக்கு இழுத்துட்டு வந்திருக்கான். எப்பவும் என் வாழ்க்கையில குறுக்க வர்றதையே வேலையா வச்சிருக்கான். ஒரு வேளை ரிவேன்ஜ் எடுக்கறானா?' என்று அவனுடைய கோபம் முழுவதும் அகிலன் மீதே திரும்பியது.
வீட்டுக்கு வந்ததும் "என்னைப் பத்தி... காவ்யாவுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. இனி வெளிநாட்டுல கம்பெனி ஆரம்பிக்கணும்னு நான் கண்ட கனவு... அவளோட சேர்ந்து வாழணும்னு நினைச்ச வாழ்க்கை... எல்லாமே போச்சு. எல்லாம் போச்சு" என்று காரை எட்டி உதைத்து வீட்டுக்குள் நுழைந்தது.
வாசலில் அமர்ந்திருந்த அருளாளன் தலைநிமிர்ந்து பார்த்தார். இனியனின் முகமே சிவந்து இருந்தது. அவன் நேராக உள்ளே வந்து, "எல்லாம் உன்னால... உன்னாலடி..." என்று கத்த ஆரம்பித்தான்.
அவன் பார்வை முழுவதும் மதுரா மீது விழுந்தது. மதுரா அப்போது சமையலறையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவன் முன் தான் வந்தாள்.
அவனை ஒரு நொடி பார்த்தவள். மிக அமைதியாக,
"ஏங்க." என்றாள் பதிபக்தியுடன்.
"நாம ரூமுக்குள்ள போயிடலாமா?" என்று கிசுகிசுப்பாய் கேட்க, இனியன் புருவம் சுருக்கினான்.
"எதுக்கு?" என்றான். ஏனெனில் அவளது கிசுகிசுப்பான குரலில் அவனது எண்ணம் படுக்கயறைக்கு செல்லும் சங்கதிக்கு சென்றது. எப்பொழுதும் அவன் தானே இழுத்து செல்வான். இன்று அவளாக ரூமுக்கு போகலாமா என்று கேட்டதும் குழம்பிவிட்டான்.
"நீங்க இப்படி ஹால்ல நின்னு கத்துனா..." என்று சுற்றிசுற்றி பார்த்தாள். "அத்தை... மாமா... எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க." பிறகு எழிலரசனை நோக்கிப் பார்த்தாள்.
"உங்க தம்பியும் நம்மளை தான் கவனிச்சுட்டு இருக்கார்." என்றாள்.
அடுத்த நொடி வாசலைக் காட்டினாள். "வெளியே ரோட்ல போறவங்க கூட கேட்பாங்க. அப்புறம் வழக்கம் போல..." என்று உதட்டைச் சுழித்தாள்.
"'எல்லாம் இவ சொன்னதால... இவளால...னு உன்னால... உன்னால...'ன்னு பாட்டு பாடுவீங்க." என்று சிரித்தாள். இனியன் நிலைமை சிரிப்பாக போவதை அவள் தான் கண்டுக் கொண்டாளே!
அருளாளனையும் இனியனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"அதனால..மாமா சொன்னாப்ல நாலு சுவருக்குள்ள கதவை சாத்திக்கிட்டு, கத்துங்க.. கதறுங்க.. என்ன ஏதாவது இம்சை செய்யணுமா... செய்யுங்க. நீங்க என்ன செஞ்சாலும் வெளியே தெரியாது வாங்க." என்று மிகவும் சாதாரணமாகச் சொல்லிவிட்டு கையை பிடித்து இழுத்து திரும்பினாள்.
வேல்விழிக்கு சிரிப்பு வந்தும் அடக்கிக் கொண்டார். அருளாளன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
இனியனோ "என்னடி... அவ வந்து என்னை அறைஞ்சதும் உனக்கு ஏத்தமா ஆகுதா?" என்று சீறினான்.
மதுரா நிதானமாக நின்றாள்.
"அவ." என்று காவ்யாவை நினைத்து பெருமூச்சு விட்டவன் "நான் விரும்பின பொண்ணு. அதனால அவளுக்கு என்னை கொல்லவோ அடிக்கவோ அந்த இடம். ஆனா நீ..." என்று மதுராவை விரல் நீட்டி,
"அப்படியில்லை. கை ஓங்கிப் பாரு... உடைச்சி விடுவேன்." என்று மிரட்டினான்.
மதுரா அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள்.
பிறகு... "எனக்கென்னவோ... காதலிச்ச பொண்ணு போயிட்டாளேன்னு நீங்க ஃபீல் பண்ணுற மாதிரி தெரியல. வெளிநாட்டுல கம்பெனி ஆரம்பிக்கற கனவு போயிடுச்சு வெளிநாட்டு வாழ்க்கை போச்சுனு தான் ரொம்ப வருத்தப்படுற மாதிரி தெரியுது." என்று "பாவம்ங்க நீங்க" என உச்சுக் கொட்டினாள்.
"சரி... நீங்க புலம்பிட்டு இருங்க. நான் சமைக்கற வேலையை பார்க்கறேன்." என்று அப்படியே நகர்ந்தாள்.
அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தான் இனியன். அருளாளன் தலையில் கை வைத்தார்.
"இதுக்குத்தான்... எவளும் வேண்டாம்னு சொன்னேன். அன்னைக்கே... காதலிச்ச பொண்ணுகிட்ட கல்யாணம் ஆச்சுன்னு முடிச்சிருக்கலாம். உன்னை யாருடா கமுக்கமா இருக்க சொன்னது? கல்யாணமானதை ஒரு வருஷம் மறைச்சு வைக்க முடியுமா?" என்று மகனைத் திட்டினார்.
வேல்விழியோ... மகனைப் பார்க்கவே இல்லை. அவரது பார்வை முழுவதும்...
சமையலறைக்குள் அமைதியாகச் சென்று வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மதுரா மீதே இருந்தது.
"இந்தப் பொண்ணு மனசுக்குள்ள என்னதான் ஓடுதோ..." என்று நினைத்து வருந்தினார்.
---
இங்கே இத்தனை களோபரத்தை உண்டாக்கிய காவ்யாவோ அகிலனின் வயலில் நீர்த்தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
உரமூட்டைகள் அனைத்தையும் தூவி முடித்திருந்தனர் அகிலன்.
வாய்க்காலில் கைகால்களை கழுவிக் கொண்டு திரும்பினான்.
திரும்பியவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
நீர்த்தொட்டியில் அகலமான பகுதியில்... இடுப்பளவு தண்ணீரில் காவ்யா நின்றிருந்தாள்.
இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி... குழந்தையைப் போல தன் மேல் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
"ஹேய்..." என்று சிரித்தபடியே திரும்பினாள். "செம்ம ஜில்லுனு இருக்கு." என்றதும் அகிலன் குழப்பமாகப் பார்த்தான்.
"என்னங்க இது?" என்றான் அகிலன். "லைஃப்ல காதலிச்சவனே உங்களுக்கு சொந்தம் இல்லன்னு நினைச்சு... ரொம்ப உடைஞ்சு இருப்பீங்கன்னு பார்த்தா... தண்ணிக்குள்ள இறங்கி விளையாடிட்டு இருக்கீங்க." என்று ஆச்சரியப்பட்டான்.
காவ்யா சிரித்தாள். "என்ன பார்த்தா எப்படி தெரியுது. இதுவொரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்." என்றாள். அகிலன் புரியாமல் குழம்ப, "இனியனால வந்த டென்ஷனை குறைக்க தண்ணில மனம் விட்டு ஸ்விம் பண்ணறது
மழையில நனையறதுக்கு சமம். என்னடா லூசு மாதிரி பேசுதுன்னு நினைக்காதீங்க." என்றதும் அகிலன் அப்படி நினைக்கவில்லை என்று தலையாட்டினான்.
காவ்யா தொடர்ந்தாள் "இனியன் கல்யாணம் பண்ணிக்கிட்டத... நான் இங்க வர்றதுக்கு முன்னாடியே தெரிந்துக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் டிக்கெட் புக் பண்ணி, அமெரிக்காவிலிருந்து இங்க வர, பதினைந்து நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள... சிலபல கோபம் பாதி குறைஞ்சிடுச்சு. காதல் வலியும் கொஞ்சம் பறந்துடுச்சு. என் சாட்டிஸ்பெக்ஷனுக்காக நேர்ல திட்டி... ஒரு அறை விட்டுட்டு போனா தான் மனசு லைட்டாகும்னு வந்தேன். அதுதான்." என்றதும் அகிலன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"சரி... இப்ப எப்படி வீட்டுக்கு போவீங்க?" என்று தயக்கத்துடன் கேட்டான்.
காவ்யா புரியாமல் பார்த்தாள்.
"ஏன்? எப்படி வந்தேன்னோ அப்படி தான்" அகிலனோ சங்கடமாக முகத்தைத் திருப்பினான்.
"டிரஸ்... வெள்ளை கலர்... உடம்போட ஒட்டிக்கிடக்குது." என்று மெதுவாகச் சொன்னான்.
"அதனால என்ன? நோ ப்ராப்ளம்." என்றாள். அகிலனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.
"வீட்டுக்கு போகலாமா?" என்று மட்டும் மறுமுறை கேட்டு அழைத்தான்.
"ஓகே." என்று தண்ணீரிலிருந்து வெளியே வந்தாள் காவ்யா.
அவள் வெளியே வந்த பிறகுதான்... அகிலன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அவளுக்கோ... அதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் அகிலனுக்குத்தான் சங்கடமாக இருந்தது.
'நான் தப்பா பார்க்கலை... ஆனா ஊர்க்காரங்க... இவங்களோட இப்படியே போனா என்ன நினைப்பாங்க' என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் நண்பன் ரகு பைக்கில் அங்கே வந்தான்.
"என்ன மாப்ள... உரமூட்டை எல்லாம் தூவியாச்சா?" என்று கேட்டுக் கொண்டே...
காவ்யாவை இரண்டு முறை பார்த்தான்.
"யாருடா?" என்று கேட்டான். அகிலன் உடனே,
"தெரிஞ்சவங்க." என்று சுருக்கமாக முடித்தான். அதற்குள் அவர்களை கடந்து சென்ற பெண்மணிகள் சிலர் காவ்யாவை திரும்பி பார்த்தனர்.
"சரி மாப்ள... வீட்டுக்கு போ. அப்புறம் பேசிக்கலாம்." என்று ரகு சென்றுவிட்டான்.
ரகு சென்ற பிறகுதான் காவ்யா மெதுவாகக் கேட்டாள்.
"ஏன் எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்கறாங்க?" என்றாள்.
அகிலன் சில நொடிகள் தயங்கினான். பிறகு "உங்க டிரஸ்.. தண்ணியில நனைஞ்சதால... உள்ள போட்டிருக்கற டிரஸ் நிறம் தெரியுது." என்றான்.
காவ்யா உடனே தன்னையே பார்த்தாள். அப்போதுதான்... நிலைமை புரிந்தது.
"ஓ..." என்று நெற்றியில் கை வைத்தாள்.
"இப்ப என்ன செய்ய? அமெரிக்காவுல இதெல்லாம் யாரும் உத்து உத்து பார்க்க மாட்டாங்க. இங்க ஒரு மாதிரி லுக்கு விடறாங்களே" என்று கேட்டாள்.
"அது அமெரிக்கா.. இது மதுரங்க" என்றவன் ஒரு நொடி யோசித்தான்.
பிறகு... தான் அணிந்திருந்த சட்டையை மெதுவாகக் கழற்றி...
அவள் பக்கம் நீட்டினான். "இத... மேல போட்டுக்கோங்க." என்றான்.
அதைச் சொல்லும்போதே...
அவனுக்கே சங்கடமாக இருந்தது. காவ்யா அவனை சில நொடிகள் பார்த்தாள்.
அவன் பார்வையில் எந்தத் தவறான எண்ணமும் இல்லை.
மரியாதை மட்டுமே இருந்தது.
மெல்ல புன்னகைத்தவள் "தேங்க்யூ." என்று சொல்லி... அந்தச் சட்டையை அணிந்து கொண்டாள்.
அதன் பிறகுதான்... அகிலன் நிம்மதியாக டிராக்டரில் ஏறி... என்ஜினை ஸ்டார்ட் செய்தான்.
காவ்யாவோ அகிலனை பார்வையிட்டாள். இதற்கு முன்னும் முதல் முதலில் அவனை பார்த்த பொழுதும் இப்படி தான் பனியன் வேஷ்டி என்று காளையை அடக்க போட்டியில் நின்றியிருந்தான். அப்பொழுது அவனது முகம், மிகுந்த மலர்ச்சியுடன், அதே நேரம் வீரத்தை வெல்லும் நோக்கத்துடன் காளையை அடக்கும் வேகம் கவனம் என்று இருந்தான்.
கட்டுகட்டான தேகம், வேர்வை பூத்திருக்க காளையை அடக்கிவிட்டு சிரித்த சிரிப்பில் காவ்யாவுக்கு கூட அன்று இதே போல புன்னகை அரும்பியது.
ஏன் நேரில் இல்லாவிட்டாலும் கைதட்டி வீடியோவை கண்டு களித்திருந்தாள்.
அதற்குப்பின்னும் குழாய் உடைந்ததாக இறங்கி வேலை செய்த பொழுதும் இதே கோலம். அதற்கு பிறகு நம்ம மதுர' சேனலில் பார்க்கவில்லை. கொஞ்சம் தாமதமாக தான் தேர்தலில் வெற்றி பெற்று மாலையும் கழுத்துமாய் இருந்தவன் தோற்றத்தை கண்டவளுக்கு தான் ஏன் ஜெயித்தும் இப்படி உம்முனு டல்லா இருக்கார்னு யோசனை ஓடியது. அப்படி உன்னிப்பாக காணும் நேரம் தான் இனியன் மணக்கோலத்தில் அகப்பட்டது.
உண்மையில் தேர்தலில் வெற்றி வாகை சூடியும் ஏன் உம்மென்று இருந்தானென காவ்யாவுக்கு அப்பொழுது கூட புரியவில்லை. தற்போது இனியன் மணந்த பெண் மதுரவாணியை இவன் நேசித்ததாக தெரியவும் அகிலனை தான் பாவமாக பார்த்தாள்.
தான் நேசித்த பெண்ணை போட்டிக்கும் வன்மத்திற்காக மட்டுமே இனியன் மணந்திருப்பதை கண்டு இனியன் மீது மீண்டும் கோபம் உண்டானது. கிட்டதட்ட இவளது நிலை தான் அகிலனுக்கும். ஆனால் இவளை விட கொடிய நிலை. நேசித்த பெண்ணை அண்ணன் மனந்துக் கொண்டால் அது அவலநிலை அல்லவா.?!
அகிலனையே பார்வையிட்டு வந்தவளுக்கு அந்த நேரம் மற்றவர்கள் தன்னையும் அகிலனையும் சேர்த்து பார்க்கும் பார்வையை கவனிக்க தவறினாள். அகிலன் தான் காவ்யாவை கவனிக்க சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.
அகிலன் காவ்யாவை சுற்றி மழைக்குப் பிறகான கிராமத்து காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
அகிலனுக்கு காவ்யா தாங்க ஜோடி. அதுல மாற்றமில்லை.
ஷ்ரத்தா கதை அடுத்து பதிவிடறேன் வாசிங்க
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 31)
நினைச்சேன், நினைச்சேன்...
இப்படித்தான் கொண்டு வந்து கோர்த்து விடுவிங்கன்னு தெரியும். ஆனாலும் இது கொஞ்சம் ஆவ்கர்ட்டா (awkard) தெரியுதே. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவனா கொண்டு போயிடுவான்னு சொல்லுவாங்க.
ஆனால் நீங்க இப்படித்தான் அகிலன் காதலிச்ச பொண்ணை அண்ணனனோட கோர்த்து விட்டிங்க, இப்ப இனியன் காதலிச்ச பொண்ணை தம்பியோட கோர்த்து விடறிங்க. நாளைப் பின்னே ஒருத்தருக்கொருத்தர் முகத்தைப் பார்த்து உறவு வைச்சு கூப்பிட வேண்டாமா...? சரி அது தான் போகட்டும் மதுரவாவது கிராமத்துப் பொண்ணு, இனியனோட கோர்த்து விட்டிங்க.
பட், காவ்யா அமெரிக்காப் பொண்ணு அவளைப் போய் அகிலனோட கோர்த்து விட்டிங்கன்னா, அவ என்ன அவனோட சேர்ந்து வயக்காட்டுல வேலை செய்வாளா, இல்லை கிச்சன்ல சமைச்சுப் போடுவாளா, தவிர அந்த நாட்டு சீதோஷ்ணம் வேற, இந்த நாட்டு சீதோஷ்ணம் எல்லாம் வேற தானே...? எப்படி
சிவகாசிக்கும் சிங்கப்பூர்க்கும் முடிச்சுப் போடுவீங்க,..? இது என்னவோ மொட்டைத்தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போடற மாதிரியிருக்கு. சரியான ரீசன் சொல்லாமல் நாங்க காவ்யாவை இந்த நாட்டு மருமகளா ஏத்துக்க மாட்டோம், டோம், ம்...!
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
