மதுர ஜில்லா... மச்சானே!-30
அத்தியாயம் -30.
இனியன் வீட்டில் அந்த நாள் முழுவதும் ஒரு விதமான கனத்த சூழல் நிலவியது.
காவ்யா வந்து வீட்டின் நடுவில் நின்று கன்னத்தில் அறைந்த சம்பவம்... அவன் மனதை விட்டு அகலவில்லை. அவள் காரில் ஏறிச் சென்ற அடுத்த நிமிடத்திலிருந்தே கைபேசியை எடுத்தவன், அவளது எண்ணை மீண்டும் மீண்டும் அழைத்தான்.
"The number you are trying to reach is busy..." மறுபடியும்... மறுபடியும்... அதே பதில். சில நேரங்களில் அழைப்பு போனாலும், அவள் பார்த்தவுடனே நிராகரித்தாள்.
பத்து முறை... பதினைந்து முறை... இருபது முறைக்கு மேல் முயன்ற பிறகுதான், கைபேசியை சோபாவில் எறிந்து விட்டான். "ச்சே..." என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் சமையலறையில் இருந்து காபி கொண்டு வந்த மதுரா, வழக்கம்போல அவன் அருகில் வைத்து விட்டு எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.
அவளுடைய முகத்தில் கோபமோ... கிண்டலோ...
சந்தோஷமோ... எதுவுமே இல்லை. எப்போதும் இருப்பது போலவே இருந்தாள்.
அதுதான் இனியனை இன்னும் அதிகமாகக் குழப்பியது.
'ஒருத்தி வந்து தன் புருஷனை அறைஞ்சுட்டுப் போயிருக்கா... இவளுக்கு அதுல எந்த உணர்வுமே இல்லையா? இதுல அவ தமிழ்ல தானே பேசினா. அவளை நான் காதலிச்சதா எல்லாம் பேசினாளே. அதுக்கெல்லாம் ஒரு ரியாக்ஷனும் இல்லை' என்று அவளையே கவனிக்க ஆரம்பித்தான்.
மதுராவோ தனது வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அருளாளனுக்கு மட்டும் அந்த அவமானம் தாங்கவே முடியவில்லை. கூடத்தில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று வேல்விழியை நோக்கித் திரும்பினார்.
"பார்த்தியா...? எவளோ ஒருத்தி வந்து எம் பையனை வீட்டுக்குள்ள நின்னு அடிச்சிட்டு போறா... இந்த வீட்டுல ஒரு மருமக இருந்தும், என் புருஷனை யாருடி கை நீட்டறது?'ன்னு கேட்காம... வேடிக்கை பார்த்துட்டு நிற்கறா." என்று மதுராவை நோக்கி வெறுப்புடன் பார்த்தார்.
"இவளை கட்டி வச்சா அவளை மறந்துடுவான்னு நினைச்சேன். ஆனா... இது ஆவறதுக்கு இல்ல. நாளைக்கே அந்த பொண்ணு பின்னாடி போயிட்டான்னா, இவ வாழா வெட்டியா அவங்கப்பா வீட்டுல போய் உட்காரணும். இதுக்காகத் தானா இவ்வளவு திட்டம் போட்டேன்?
எவளோ ஒருத்தி இந்த வீட்டு மருமகளா வரவும். எம் பையன் வெளிநாட்டுலயே குடியேறி, பெத்தவங்களையே மறக்கவும், நான் இத்தனையும் செய்தேனா?" என்று ஆத்திரத்தில் கத்தினார்.
வேல்விழிக்கும் அன்றைய சம்பவம் மனதில் ஓடியது.
மெதுவாக.. "அதை தான் நானும் யோசிக்கிறேன். அந்த பொண்ணையே கட்டி வச்சிருந்தா கூட இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இந்த பழிவாங்குற திட்டமெல்லாம் தேவையா?" என்று கணவனையே கடிந்து கொண்டார்.
அருளாளன் பாம்பை போல சீறி திரும்பினார். "அட கூறு கெட்டவளே... அடிச்சாலும் பிடிச்சாலும்... என் தங்கச்சி மக... எம் பையனோட வாழணும்னு தானே இந்த கல்யாணத்தை முடிச்சேன். அவ என்ன தேமேன்னு இருக்கா?" என்று எரிச்சலோடு கூறினார்.
வேல்விழி எதுவும் பேசவில்லை.
அதே கேள்வி அவருக்குள்ளும் இருந்தது. அந்த நேரம்...
சமையலறையில் அம்மிக்கல்லில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த மதுராவிடம் மெதுவாக சென்றார்.
"மதுரா..." என்று அழைத்தார்.
"என்ன அத்தை?" என்று அதே சாந்தமான பேச்சு.
"உனக்கு இனியன் யாரையோ விரும்பறான்னு முன்னாடியே தெரியுமா?" அம்மிக்கல்லில் ஓடிய கை நின்றது.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள். பிறகு மெல்ல சிரித்தாள். அந்த சிரிப்பில் வலி மட்டுமே இருந்தது.
"உங்க பையன் கல்யாணம் முடிந்ததும், முதலிரவுல வெத்து பத்திரத்துல என் கையெழுத்து வாங்கிட்டாரு அத்தை. அப்ப புரியலை. எதுக்கு வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கினார்னு." வேல்விழி அதிர்ந்து போனார்.
"என்ன?" என்று அதிர்ந்தார்.
"ஆமா... அப்ப எதுக்குன்னு நிஜமா புரியல. ஒருநாள் மாமாவோட பேசும்போது, அவளை அத்துவிட்றேன்'ன்னு கோபத்துல சொல்லிட்டார். அப்பதான் வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கினதும் நினைவுக்கு வந்துச்சு. அப்பவும் காரணம் புரியல. ஆனா... மச்சான் மனசுல ஒருத்தி இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சுடுச்சு." என்றதும் வேல்விழியின் முகம் மாறியது.
மதுரா தொடர்ந்து பேசினாள்.
"என்னை பழிவாங்கத்தான் இந்த கல்யாணம். அப்ப... இந்த வாழ்க்கை நிலைக்காது. எப்ப வேணாலும் உடைஞ்சிடும்னு... அன்னைக்கே புரிஞ்சுடுச்சு."
என்று அவள் அமைதியாக சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அந்த நேரத்தில் படிக்கட்டு அருகே நின்றிருந்த இனியனின் காதில் தெளிவாக விழுந்தது.
அவன் அறியாமலேயே நின்று விட்டான். மதுராவுக்கு எல்லாம் தெரிந்தே தான் வலியையும் வேதனையையும் ஏற்கின்றாளென்று அறிந்தவன் திகைத்தான். இப்படியும் ஒரு முட்டாள் பெண் இருப்பாளா? என்று தான் எண்ணினான்.
காவ்யா அறைந்த இடம் இன்னும் சிவந்து வீங்கியிருந்தது. மதுரா அமைதியாக வெளியே சென்று சில பச்சிலைகளைப் பறித்து வந்து அம்மிக்கல்லில் அரைத்து முடித்ததை, சிறிய கிண்ணத்தில் வைத்து, அவன் முன்னால் நீட்டினாள்.
"என்னதிது?" என்று எரிச்சலுடன் கேட்டான்.
"வீக்கம் வத்த இந்த இலையை அரைச்சி பத்து போட்டா சரியாயிடும். எப்பவும் எனக்கு அடிபட்டா நான் இதைத்தான் போட்டுப்பேன். வேணும்னா... நான் பூசி விடுறேன். இல்ல... ஆயின்மென்ட் இருந்தா அதைப் பூசிக்கோங்க." என்று அமைதியாகச் சொன்னாள். இனியனுக்கு அது நக்கலாக தேன்றியது. உனக்கெல்லாம் அடி வேண்டுமென்ற வேண்டுதல் போல அல்லவா காவ்யா அடித்த போது கற்சிலையாக நின்றுயிருந்தாள் .
அடுத்த நொடியே இனியன் அந்தக் கிண்ணத்தை அவள் கையிலிருந்து தட்டிவிட்டான்.
பச்சிலை விழுது வாசல் வரை போய் கிண்ணம் விழுந்தது. மழைநீரில் அடித்து சிதறி ஓடியது. மதுரா ஒரு நொடி அதையே பார்த்தாள்.
எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். இனியன் மீண்டும் கைபேசியை எடுத்தான்.
காவ்யாவுக்கு தான் அழைத்தான். ஆனால்... ஒரு அழைப்பைக் கூட அவள் ஏற்கவில்லை. அவள் தான் அகிலன் வீட்டில் பொருந்திக் கொள்ளும் விதமாக இருந்தாளே.
அன்று இரவு அறைக்குள் வந்த மதுரா வழக்கம்போல் படுப்பதற்கு தயாரானாள்.
இனியன் கட்டிலில் படுத்திருந்தான். தூக்கம் மட்டும் வரவில்லை. மதுரா அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
"நான்... இன்னிக்கும் தேவையா?" என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டாள்.
இனியன் பதில் சொல்லவில்லை. தலையணையை திருப்பிப் போட்டு அவளுக்கு முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டான்.
மதுரா மெல்ல சிரித்தாள்.
"தேவைப்பட்டா... எப்பவும் போல எழுப்புங்க முழிச்சுட்டுதான் கிடப்பேன்." என்று நக்கலாகச் சொல்லிவிட்டு, தள்ளி கொண்டாள்.
அந்த வார்த்தை இனியனின் காதில் நெருப்பாய் விழுந்தது. ஆனால் அவனால் திரும்பிப் பார்க்கவே முடியவில்லை.
அடுத்த நாள் காலை, அகிலனின் வீட்டில் காவ்யா மகிழ்ச்சியாக தூரிகாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அந்த தகவல் அகிலன் வீட்டில் ஒரு பெண்ணும் அவளது தந்தையும் இருப்பதாக, இனியனின் காதை எட்டியது. அவள் பார்க்க எப்படியிருப்பாளென்று கேட்க காவ்யாவின் தோற்றத்தையும் ராஜாராமின் தோற்றத்தையும் விளக்கியிருக்க, 'காவ்யாவா?அகிலன் வீட்டுல தங்கியிருக்காளா?' என்று இனியனுக்கு அந்த ஒரு செய்தியே, அவனது முகத்தை மாற்றி விட்டது.
"அவ எதுக்கு அவன் வீட்டுல?" என்று பற்களைக் கடித்தான்.
இதில் காவ்யா ஊரை சுற்றி பார்க்க வேண்டும் யாராவது துணைக்கு வரமுடியுமா? என்று கேட்டாள். ஏற்கனவே தூரிகாவுக்கு செமஸ்டர் என்று படிக்க போவதாக மறுத்துவிட, அங்கே தனித்து நின்றதென்னவோ அகிலன் தான்.
அவனும் மீனாட்சியை தான் பார்த்து மறுப்பாக முழித்தான்.
ராஜாராமோ பக்கத்து கோவிலுக்கு அதியமானோடு கிளம்புவதற்கு தயாராகியிருக்க, மீனாட்சியே "கூட்டிட்டு போப்பா.. கிராமத்தை பார்த்திருக்க மாட்டாங்கல்ல." என்று கோர்த்து விட்டார்.
அகிலனும் வேறு வழியின்றி உரமூட்டையை தூவ செல்வதால் அழைத்துக் கொண்டான். காரிலிருந்து உரமூட்டையை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு செல்ல, ஊரில் சிலர் கண்ணுக்கு அகிலன் ஏதோ ஒரு பெண்ணுடன் செல்வதை பார்த்தார்கள். அதென்னவோ இனியன் காதுக்கும் அந்த செய்தியும் செல்லவும், இப்படியாவது அவளை சந்திக்க வாய்ப்பு அமைகின்றதென அவளை சந்திக்க பறந்தான்.
அகிலனுடன் டிராக்டரில் வெள்ளை உடையில் கிளம்பி வந்தவள் ஊரில் உள்ள இயற்கை காட்சியை ரசித்தாள். இரவு முழுவதும் பெய்த மழையால், கிராமம் பச்சைப் போர்வை போர்த்தியது போல இருந்தது. மண்ணின் மணம் காற்றில் கலந்திருந்தது.
வயல்களில் தண்ணீர் தேங்கி, சூரிய ஒளி அதில் பட்டு வெள்ளி துகள்களைச் சிதறடித்தது.
அகிலன் டிராக்டரின் பின்னால் கட்டியிருந்த உர மூட்டைகளை வயலுக்கு வந்ததும் இறக்கிக் கொண்டிருந்தான்.
உரம் எல்லாம் இறக்கி வைத்ததும், 'இன்னைக்கு தூவலாமா?' என்று வானத்தை பார்த்தான். மழை பொழிந்து நின்றதும் இதுதான் நல்ல நேரம் என்பதால் உரத்தை தூவவும் ஏற்பாடு நடந்தது.
காவ்யா அகிலனுக்கு தொந்தரவு செய்யாமல் நடந்து வந்தாள். வெள்ளை நிற காட்டன் சுடிதார், தலைமுடியை உயரமாக கட்டியிருந்தாள்.
கழுத்தில் கேமரா... கையில் மொபைல்.. என்று வந்தபடியே சுற்றியிருந்த வயல்களை ரசித்தாள்.
"வாவ்... இது செம்ம பியூட்டிஃபுல்லா இருக்கு."என்று சொல்லிக் கொண்டே வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.
வரப்பின் மேல் நடந்தாள். வாய்க்காலில் ஓடிய தண்ணீரை படம் பிடித்தாள். தூரத்தில் நாற்று நடும் பெண்களை ரசித்தாள். தென்னை மரங்கள் காற்றில் ஆடிய காட்சியையும் பதிவு செய்தாள். எல்லாம் அரதபழைய விஷயங்களாக, வெளிநாட்டில் இருந்து வந்த மேதாவிகள் செய்யும் வேலையை அவளுமே துல்லியமாக செய்தாள்.
"இப்படி ஒரு லைஃப் இருக்கும்னே தெரியல." என்று குழந்தை போல மகிழ்ந்தாள்.
அகிலன் அவளைப் பார்த்து மெதுவாக சிரித்தான். "எங்களுக்கு தினமும் பார்ப்பதால சாதாரணமா தெரியுது. புதுசா பார்க்குற உங்களுக்கு அதிசயம் தெரியுது." என்றான்.
"மேபீ." என்று சிரித்தாள் காவ்யா.
அந்த நேரம் தொலைவில் ஒரு கார் வந்து நின்றது.
காரிலிருந்து வேகமாக இறங்கினான் இனியன்.
அவனைப் பார்த்தவுடன் காவ்யாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது.
கேமராவை கீழே இறக்கினாள்.
"எங்கடா வந்த?" என்று நேரடியாகக் கேட்டாள்.
இனியன் அகிலனை ஒரு பார்வை பார்த்தான்.
அகிலன் இருப்பது இனியனுக்கு சங்கடமாக இருந்தது.
அதைப் புரிந்து கொண்ட அகிலன் அந்த பக்கம் போய் மூட்டையை இறக்க நடந்து சென்றான். கொஞ்ச தூரம் அவ்விடத்தில் இருந்து சற்று தள்ளி நகர்ந்துக் கொண்டான். எனலாம். ஆனால் முழுவதுமாக அங்கிருந்து செல்லவில்லை. அவன் வயலில் அவன் வேலை பார்த்தபடியே இருந்தான் அகிலன்.
இனியன் மெதுவாக காவ்யாவை நோக்கி வந்தான்.
"காவ்யா... ப்ளீஸ்... ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு." என்றான்.
"சொல்லு.. நீ சொல்லற கதையை கேட்க நிறைய நேரமிருக்கு." என்று குளிர்ந்த குரலில் கூறினாள்.
"நீ நினைக்கிற மாதிரி இல்ல. எதுவுமே இல்ல. அந்த கல்யாணம்... ஒரு வருஷத்துக்கு மட்டும்தான்." என்றதும் காவ்யாவின் புருவம் சுருங்கியது.
இனியன் தொடர்ந்து பேசினான்.
"மதுராகிட்ட வெற்று பத்திரத்துல ஏற்கனவே சைன் வாங்கியிருக்கேன். ஒரு வருஷம் முடிஞ்சதும்... டிவோர்ஸ் கொடுத்துடுவேன். அடுத்த நிமிஷம்... நான் உன்னைத்தான் தேடி வர நினைச்சேன்.. டிரஸ்ட் மீ." என்று கூற காவ்யா அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இனியன் இன்னும் அருகே வந்தான். "என்னால தேர்தல்ல ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சதும்... அப்பாதான் இந்த ஐடியா கொடுத்தார். அவளை கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு. நானும் ஒரு வருஷம் மட்டும் வீட்டுல வச்சிருப்பேன். அப்புறம் டிவோர்ஸ் பண்ணிட்டு என் வாழ்க்கையை பார்த்துக்கறேன்.'ன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணேன்.
மதுரா அந்த பத்திரத்துல சைன் போட்டுட்டா. அவளால எதுவும் செய்ய முடியாது. ப்ளீஸ் காவ்யா... இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்." என்றதும், காவ்யா அவனை வெறித்துப் பார்த்தாள்.
"இவ்வளவு கேவலமானவனாடா நீ?" என்று மெதுவாகக் கேட்டாள்.
இனியன் அவசரமாக, "காவ்யா..." என்று கூப்பிட "சீ வாயை மூடு." என்று அவள் கத்தினாள்.
அந்த சத்தம் தள்ளி நின்ற அகிலனின் காதிலும் தெளிவாக விழுந்தது. அவன் அறியாமலே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
"ஒரு வருஷமா? அந்த ஒரு வருஷம் அந்த பொண்ணோட வாழ்க்கை இல்லையா? அவளுக்குனு மனசு இல்லையா? உனக்கு ரிவெஞ்ச் எடுக்க... ஒரு பொண்ணோட வாழ்க்கை தான் கிடைச்சுதா? அவ என்ன உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற பொம்மையா?" என்று மதுராவுக்காக பேச பேச இனியன் தடுமாறினான்.
"இல்ல... நான் அவளை... தொட கூட செய்யலை." என்று அபான்டமான பொய்யை வாறியிறைக்க முயன்றான்.
"ச்சீ..." என்று அருவருப்புடன் இடைமறித்தாள் காவ்யா.
"அந்த பொய்யை வேற யார்கிட்டயாவது போய் சொல்லு. தூரிகா எல்லாத்தையும் சொல்லிட்டா. நீ மதுராவை என்னென்ன பண்ணிருக்கேன்னு... மதுராவோட அம்மாவே சொல்லியிருக்காங்க.
கொதிக்கிற டீயை மதுரா மேல ஊத்தியிருக்க, அவளை அடிச்ச. மிரட்டியிருக்க, அவ விருப்பமில்லாம... கணவன் என்ற பெயர்ல அவளை சிதைச்சிருக்க. இதுக்கெல்லாம் என்ன பேரு தெரியுமா?" என்றதும் இனியன் முகம் வெளிறியது.
"கல்யாணம் என்ற பெயர்ல 'மேரிட்டல் ரேப்' பண்ணியிருக்க. மனுஷனாடா நீ உன்னை அந்த பொண்ணு ஜெயில்ல களித்திண்ண வச்சியிருக்கணும்?
என்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டு... என்னை தொட்டு கூட பேச பயந்த. ஆனா... உனக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணை... இப்படி கொடுமைப்படுத்தியிருக்க. இதுக்கு அப்புறமும்... என்னை கல்யாணம் பண்ணிக்க ஐடியா சொல்லிட்டு நிற்கற? உனக்கு வெட்கமா இல்ல?" என்றாள்.
இனியன் பேச வாயெடுத்தான். "காவ்யா...நம்ம காதல்... " என்று முட்டுக்கொடுக்க முனைந்தான்.
"நம்ம காதலா? அது செத்துப் போயிடுச்சு." அவள் உறுதியாகச் சொன்னாள்.
"எப்ப தெரியுமா? நீ... மதுராவுக்கு பரிசம் போட்ட அன்னைக்கே. என்ன... எனக்கு அது அப்ப தெரியல. இப்பதான் தெரியுது. உண்மையை மறைச்சது நீ. உன்னை நம்பினது நான். ஆனா... அந்த பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியேடா. மன்னிக்க முடியாத குற்றம் தெரியுமா?" காவ்யாவின் கண்கள் சிவந்தன.
"என் கண் முன்னாடி இனிமே நிக்காத. மீறி வந்த... இங்க அகிலன் தான் ஜெயிக்கறான். அவனை விட நான் முன்னாடி இருக்கணும் என்ன
என்னவோ செய்தியே. அதெல்லாம் வேஸ்டா போகும்
அவர் முன்ன உனக்கு இன்னொரு செருப்படி விழும். என்னை அந்தளவுக்கு செய்ய வச்சிடாத." என்று விரலை நீட்டி எச்சரித்தாள்.
இனியனுக்குஅவள் கோபம் சில மணி நேரத்தில் தணிந்துவிடும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தான்.
அதனால் மேலும் எதுவும் பேசாமல் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
இந்த உரையாடல் முழுவதையும் தொலைவில் நின்றபடியே அகிலன் கேட்டுவிட்டான்.
காவ்யாவின் குரல் வயல் முழுக்க எதிரொலித்தது. நல்லவேளை வயலில் யாரும் வேலை செய்யவில்லை என்று நிம்மதிக் கொண்டான். பெரிப்பா மகனின் மானம் அந்தளவு காப்பாற்றப்பட்டுவிட்டது.
அவன் மனதில் 'மதுராவுக்காக... இவ்வளவு கொதித்துப் பேசும் ஒரு பெண்ணை முதல் முறையாக மரியாதையோடு பார்த்தான் அகிலன்.
வயலின் மீது வீசிய காற்று, காவ்யா மீதும் சில்லிட வைத்தது. புதிய உறவு ஒன்று மெல்ல துளிர்க்கப் போகிறதென அமைதியாகச் சொல்லி தழுவிச் சென்றது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
ஹாய் பத்து மணிக்கு திலீடர் கதையின் பார்ட் டூ தகிக்கும் நிலவொன்று கதையின் முதல் அத்தியாயம் வரும்.
கீப் சப்போர்டிங்.
Kindly Register & Login To Read
Share ur Valuable Comments
Thank u
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 30)
அடப்பாவி ! நீ எல்லாம் மனுசன் தானா..? மதுரா கூட ஒரு வருசம் வாழ வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கின சரி, அப்புறம் எதுக்குடா அவளை தொட்டே ? டைம் பாஸூக்கோ ? நீ எல்லாம் என்ன ஜென்மம் டா ?
இதுல எங்கப்பன் தான் இந்த கல்யாணத்துக்கு ப்ளான் போட்டு கொடுத்தாருன்னு ஜம்பமா வேற சொல்லிக்கிற, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே இல்லையாடா..?
உங்கப்பன் ஒரு கேப்மாரி, நீ ஒரு பேமானி.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறடா. உங்கப்பனும் உங்கம்மாவை இப்படித்தான் வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி கட்டியிருக்கிறானோ ? நீ இப்படி சொன்னச்சயே உன் வாய் மேல நாலு போட்டிருக்கணும்டா.
நீ நாளைக்கே இதே ஈனப்புத்தியை காவ்யா கிட்டயும் காட்ட மாட்டேன்னு என்ன நிச்சயம் ?
நீ எல்லாம் என்ன பிறப்புடா ?
நீ எல்லாம் பூமிக்கு பாரமா எதுக்குடா வேஸ்ட்டா ? பேசாமல் செத்துப் போ.
பெண் பாவம் பொல்லாததுன்னு உனக்கும் தெரியலை, உன் அப்பனுக்கும் தெரியலை. அப்பனும் பிள்ளையும் பொறாமையில எங்க வேணா
விளையாடிக்கோங்கடா, ஆனால் மதுரா வாழ்க்கையில விளையாடற உரிமையை யாருடா உங்களுக்கு கொடுத்தா ? உங்க பழி வாங்குற உணர்ச்சிக்கு அவளோட உணர்ச்சியோடயும், அவளோட வாழ்க்கையிலத்தான் விளையாடுவிங்களா ? இதுக்கே
அப்பனுக்கும், பிள்ளைக்கும் சரியான தண்டனை கிடைக்கணும்டா. என்னவொன்னு
உங்களுக்கு தண்டனை கிடைச்சாலும், உங்களை கட்டிக்கிட்டவங்கத்தான் பாதிக்கப்படப் போறாங்க, அந்த கண்றாவி வேற இருக்கு.
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
