மதுர ஜில்லா... மச்சானே!-27
அத்தியாயம்–27
இனியன் வீட்டில் புயல் அடித்து ஓய்ந்த வீடு போல, ஒரு கனத்த அமைதி நிலவியது.
வாசலில் யாராவது வந்தாலும் அவர்கள் பேசுவது ஒரே விஷயம். "நேத்து கல்யாண சுந்தரம் பெண் போலீஸை கூட்டிட்டு வந்தாராமே." என்ற அந்த சம்பவம் ஊர் முழுக்க பேசு பொருளாக மாறியிருந்தது.
வீட்டிற்குள்ளும் அதே பதற்றம்.
அருளாளன் முகம் கோபத்தில் இறுகியபடி முன்னுக்கு பின்னாக நடந்து கொண்டிருந்தார்.
இனியன் அமைதியாக கூடத்தில் நின்றிருந்தான். திடீரென அவன் மீது திரும்பியவர், "என்னடா இது?" என்று சீறினார். அவரால் ஊராரின் புரளியை சகிக்க முடியவில்லை.
"அடிக்கறியா... அறைக்குள்ள அடி. திட்டறியா... அதையும் கதவு சாத்தி முடிச்சிடணும். இப்ப பாரு... நேத்து ஹால்ல நடந்த ஒரு விஷயத்துக்கு போலீஸே வீட்டுக்கு வந்துட்டாங்க. நேத்து வரைக்கும் என்னை எதிர்த்து பேச யோசிச்ச கல்யாண சுந்தரம்... இன்னைக்கு போலீஸை கூட்டிட்டு வர்ற அளவுக்கு தைரியம் வந்துருக்கு." அவர் பார்வை மதுராவை நோக்கித் திரும்பியது.
"எல்லாம் இவளை சொல்லணும். வாழ வந்த ஒன்றரை மாசத்துல இந்த குடும்பத்தோட மரியாதையையே சந்தி சிரிக்க வச்சுட்டா." என்று அவர் அவளை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தார். எப்பொழுது ஏதாவது அதட்டினால் இரண்டடி பின்னால் நகர்ந்து பதுங்கும் மதுரா இந்த முறை பின்வாங்கவில்லை.
அமைதியாகவே தைரியமாக நின்றாள். "எனக்கும் பேச தெரியும் மாமா." என்று மெதுவாக ஆரம்பித்தவள்.
''எல்லாத்துக்கும் நியாயம் தர்மம்னு ஒண்ணு இருக்கு மாமா" அருளாளன் புருவம் சுருங்கியது. இதுவரை தான் இருக்கும் போது வார்த்தை விடாமல், ஏன் இருக்குமிடம் கூட தெரியாமல் இருப்பவள் பேசுகின்றாள்.
"எங்கப்பா பெண் போலீஸை கூட்டிட்டு வந்தப்போ... உங்க பையன் பண்ணினதெல்லாம் சொல்லியிருந்தா... இல்லை... ஒரு நிமிஷம் காயத்தை காட்டியிருந்தா கூட போதும். உங்க பையனை ஜெயிலில் உள்ள தள்ள?" என்ற அந்த வார்த்தை இனியனையே அதிர வைத்தது.
மதுரா தொடர்ந்தாள். "ஆனா நான் அப்படி செய்யல. ஏன்னா இந்த கல்யாணத்துல உங்களோட சதி திட்டம் மட்டும் இல்ல. எங்கப்பா... எங்கம்மாவோட பேராசையும் இருக்கு. அவங்களும் தானே என் வாழ்க்கையை இஷ்டத்துக்கு சிக்கலாக்கிட்டாங்க. அப்படி இருக்கும்போது... தண்டனை உங்க பையனுக்கு மட்டும் கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதனாலதான்... அதுக்காக மட்டும் தான் வாயை மூடிக்கிட்டேன்." என்றதும் அவ்வறையே அமைதியாகியது.
மதுராவின் குரல் மட்டும் ஒலித்தது. "எனக்கும் குடும்ப கௌரவம் இருக்கு. அதை காப்பாத்தத்தான். என் வாழ்க்கையையே பலி கொடுத்துட்டு இருக்கேன். எங்கப்பா அம்மாவுக்கு அது தண்டனை. உங்களுக்கான தண்டனை காலம் கொடுக்கும்." என்றவள் குரல் அடைத்தது. அருளாளனின் முகம் இறுகியது.
"அப்பறம்... மாமான்னு ஒரு மரியாதை இன்னும் இருக்கு. அதை நீங்களாவது காப்பாத்திக்கோங்க." அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
மதுரா சொல்ல விடாமல் "சொந்த தம்பிக்கிட்ட சொத்தை பிடுங்கினவரு... கர்ப்பமா இருந்த சின்ன அத்தையை பேச்சுவாக்குல தள்ளி விட்டதால குழந்தை போனதுக்கும் காரணமானவரு.
தன்னை விட தம்பியும் தம்பி குடும்பமும் வளரவே கூடாதுனு வன்மத்துல வாழ்றவருன்னு. எனக்கு நல்லாவே தெரியும்." என்ற ஒவ்வொரு வார்த்தையும்
அருளாளனின் இதயத்தையே குத்தியது.
மதுரவாணி பேச்சை முடிக்காமல். "அதெல்லாம் உங்களோட வச்சிக்கோங்க மாமா. ஒரு விஷயம் மட்டும் நினைவு வச்சிக்கோங்க. ஏதாவது ரொம்ப பண்ணினா ரொம்ப சுளுவா சோத்துல விஷம் கலந்துடுவேன். அப்பறம் குடும்பத்தோட பேயா அலைவிங்க. அதையே நீங்க பண்ணினாலும், இந்த மதுராவுக்கு எந்த கவலையும் இல்லை. ஏன்னா.. எனக்குனு கவலைப்பட யாருமில்லை. அதனால... எனக்கு எதுவும் ஆகாம பார்த்துக்கறது... உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்ற நினைப்பும் இனிமே உங்க பொறுப்பு."என்று சொல்லிவிட்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து நடந்தாள்.
வேல்விழி கூட மதுரா பேசும் போது இடையில் தடுக்கவில்லை. கணவருக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவை தான் என்றது அவருள்ளம்.
மதுரா சென்ற பிறகும்... யாராலும் பேச முடியவில்லை.
அருளாளனின் நெற்றியில் வியர்வை முத்துக்கள். 'இது... மதுராவா...?' என்று அவருக்கே நம்ப முடியவில்லை.
இனியனும் முதல் முறையாக... மதுராவை வேறு ஒரு கோணத்தில் பார்த்தான். இதுவரை தனது குரலுக்கு அஞ்சி டீ காபி சாப்பாடு என்று தட்டில் பதி பக்தியாக பரிமாறும் குணம். தன் தேக தேவை ஏற்பட்டால் அவளது கையை பிடித்து இழுத்து அறைக்கதவை சாற்றினால் சத்தமின்றி தன் ஆசைக்கு இணங்கும் அடிமை போல அல்லவா இருந்தாள். இன்று பேசியது அவனை யோசிக்க வைத்துவிட்டது.
---
இங்கு இளையமதியின் வீட்டிலும் அமைதி இல்லை.
கல்யாண சுந்தரம் ஆத்திரமாக நடந்து கொண்டிருந்தார். இனியன் வீட்டிலிருந்து வந்ததும் போலீஸ் பெண்மணி கண்டபடி திட்டிவிட்டார். 'உங்க பொண்ணே ஒன்னுமில்லைனு சொல்லுது. சரியா விசாரிக்காம கூப்பிடுவிங்களா? அரசாங்கத்தை அலையவிடாதிங்க சார்' என்று கத்திவிட்டார்.
அந்த கோபத்தை மனைவியிடம் ஆரம்பித்தார். "என்ன புள்ள இது? மதுரா இனியன் மேல புகார் கொடுத்திருக்க வேண்டியது தானே? போலீஸ் வந்திருக்காங்க... அவன் ஜெயில் உள்ள போயிருப்பான். அவனுக்காவது புத்தி வந்திருக்கும். மதுரா ஒன்னும் வேண்டாம்னு பேசி அனுப்பிட்டா. ஏன் இப்படினு கேட்டதுக்கு, உங்க பேராசையால தானே கல்யாணம் நடந்தது. நான் கஷ்டப்பட்டா சந்தோஷப்படுங்கனு பேசறா. இதுக்காடி கட்டி வச்சது?" என்று கூற இளையமதி மெதுவாக அழுதார்.
"உண்மை தானே.. அப்படி பண்ணிட்டா... நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்? நாமதான்... அவளை இந்த வாழ்க்கைக்குள்ள தள்ளிட்டோம். இப்ப... அவ வாழ்றதையும் கெடுக்க முடியுமா? எனக்கு எப்படி இந்த வீடே தலையெழுத்துனு இருக்கோ. அவளுக்கு தலலயெழுத்து அங்க தான்னு எழுதியிருக்கு." என்றதும் கல்யாண சுந்தரம் தான் கூட இளையமதிக்கு பெரிய சந்தோஷமான வாழ்க்கை கொடுக்கவில்லை என்பதால், அந்த வார்த்தைக்கு மேல் பேச அவரால் முடியவில்லை அமைதியானார்.
சில நொடிகள் கழித்து... இளையமதி மீண்டும் பேச ஆரம்பித்தார். "மதியம் நீங்க அருளாளன் அண்ணா வீட்டுக்கு போனது போல நான் அதியமான் அண்ணா வீட்ல இருந்தேன். நிலானியையாவது அகிலனுக்கு கட்டி வைக்கலாம்னு கேட்டேன். மீனாட்சி மதினி வேண்டாம்னு சொல்லாத குறை. உன் பொண்ணு படிக்கட்டும்... அவசரப்பட்டு இன்னொரு தப்பும் செய்யாதீங்கன்னு... அறிவுரை சொல்லி அனுப்பிட்டாங்க." அதை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நிலானி
எதுவும் பேச முடியாமல், இரு கைகளையும் இறுகப் பிசைந்தாள்.
இளையமதியோ "அகிலனும் அங்க தான் இருந்தான். எதுவும் பேசமுடியாம பாவம் துடிச்சி கிடக்கான். அவனுமே நிலானியை படிக்க வையுங்க. அது குழந்தை. கல்யாணம் எல்லாம் இப்ப பண்ணாதிங்கனு சொல்லிட்டான். மதுரா குரல் கேட்டதும் மதுரா தெளிவா தான் பேசுது அத்தை. அதெல்லாம் சமாளிக்கும்னு தேற்றி அனுப்பினான். அந்த பிள்ளையை தேற்றுவதற்கு முடியலை" என்று அழுதார். மகளை விரும்பியவனுக்கு கட்டி தந்திருந்தால் இந்நேரம் ராணியாக வாழ்ந்திருப்பாள் என்ற வருத்தத்துடன் இருந்தனர்.
---
இப்படியே சில நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
கல்யாண சுந்தரம் நிலானியை நல்ல கல்லூரியில் சேர்க்க ஓடி ஓடி அலைந்தார். இறுதியில்
அவளுக்கு, அவள் விரும்பிய கல்லூரியிலேயே இடம் கிடைத்தது.
அன்று சேர்க்கை வேலைகளை முடிக்க தந்தையும் மகளும் கல்லூரி வளாகத்தில் நின்றிருந்தனர். கல்லூரி எல்லாம் மிகவும் வசதியாக இருந்தது. அகிலன் படித்து முடித்த அதே கல்லூரி. அந்த வளாகத்திற்குள் காலடி வைத்தபோது, நிலானிக்கு காரணமே இல்லாமல் ஒரு நம்பிக்கை தோன்றியது.
தற்போது அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எழிலரசன் தொலைவிலிருந்து அவர்களைப் பார்த்தான். நண்பர்கள் வேறு உசுப்பேற்ற, சில நொடிகள் தயங்கியவன் மெதுவாக அருகே பேச வந்தான்.
"மாமா... எப்படி இருக்கிங்க. நிலானியும் இதே காலேஜில தான் சேர்த்திருக்கிங்களா?" என்று மரியாதையோடு அழைத்தான்.
ஆனால் கல்யாண சுந்தரம் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
எழிலரசனுக்கு புரிந்தது. வீட்டில் நடந்த அனைத்தும்... வேல்விழி முலமாகவும் அரசபுரசலாக தெரிந்ததே. அதன் காரணமாக தங்கள் வீட்டாள் மீதான மரியாதை, இவரது மனதை மாற்றிவிட்டது புரிய வேறெதுவும் பேசாமல்...
அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
அதைப் பார்த்த நிலானியின் மனமும் கனத்தது. அவளும் தான் பஸ் ஸ்டாப்பில் இவனை பேசி காயப்படுத்தியிருந்தாள். ஆனாலும் ஏனோ தந்தை பேசாதது வருத்தமளித்தது.
இதற்கு தான் சிலர் சொந்தத்தில் பெண் எடுக்கவே யோசிக்கின்றனரோ என்று கூட மலைத்தாள். பாவம் அக்கா என்ன செய்கின்றாளே என்று நினைத்தாலும் படிப்பு தான் தனது துடுப்பு என்றதை உணர்ந்தாள்.
அதையே கல்யாண சுந்தரமும் உரைத்தார். "இந்தா நிலானி உங்கக்காவை படிக்க வைக்காம தப்பு பண்ணிட்டேன். போதாதுக்கு அவசரப்பட்டும் கல்யாணம் கட்டி தந்துட்டேன். ஆனா நீ நல்லா படிக்கணும்னு அகிலன் படிச்ச காலேஜிலயே சேர்த்துயிருக்கேன். இவன் இங்க இருப்பதை மறந்துட்டேன். சொந்தம்னு பேசி பழக வேண்டாம். நல்லதா படிச்சி முடி" என்று கூற தலையாட்டினாள்.
---
அதே நேரத்தில் அமெரிக்காவில் ''டாட்... நாம இந்தியா போகலாம்." என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
அவளது தந்தை ராஜாராம் சிரித்தபடி, "இதுவரை இனியன் அவங்க குடும்பத்துல சம்மதம் வாங்கிய பிறகு போகலாம்னு சொன்ன. இப்படி திடீர்னு இந்தியா போகலாம்னா எப்படி?" என்று கேட்டார்.
"இனியன் வீட்டுலயும் உங்க காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்களா?" என்று சோபாவில் அமர்ந்து கேட்க, காவ்யா திருட்டு முழியில், "இனியன் வீட்லயும் சம்மதிச்சிட்டாங்க அப்பா. அதனால தான் பார்க்க போகலாம்னு கூப்பிடறேன்" என்று பொய்யை மிக இயல்பாகச் சொன்னாள்.
"இனியன்கிட்ட நாம வரப்போறதை பத்தி சொல்லிட்டியா என்ன?" என்று கேட்டார்.
"இ.. இல்லப்பா. சர்ப்ரைஸா இருக்கட்டும். நாம அங்க நேரா போகலாம்." என்று குறும்பாகச் சிரித்தாள்.
தாயற்ற மகளின் ஆசையை பெரிதாக நிவர்த்தி செய்து வாழும் ராஜாராமோ "சரி... சரி இந்தியாவுக்கு டிக்கெட் புக் பண்ணிடுறேன். நீ அப்பாவுக்கும் உனக்கும் டிரஸை எடுத்துவை.." என்று சம்மதித்தார்.
"வாவ்.. தேங்க்யூ சோ மச் டாடி. லவ் யூ." என்று கட்டிக்கொண்டு நன்றி உரைத்தாள் காவ்யா. ஏற்கனவே நாட்டை சுற்றி பார்த்து திரிவதற்காக மூன்று மாதத்திற்கு இந்தியாவிற்கு வருகை தர முடிவெடுத்தாள்.
ராஜாராமின் அந்த ஒரு சம்மதம்... தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் ஏற்கனவே சிக்கலாக இருந்த உறவுகளுக்குள்... அதுவும் குறிப்பாக இனியன் வாழ்வில்,
இன்னொரு புயலை அழைத்து வரப் போகிறது என்பதை...
அவர்களில் யாருமே அறிந்திருக்கவில்லை.
காவ்யாவோ 'இனியன் நான் உங்க மதுர ஜில்லாவுக்கு தான் வர்றேன். அப்பறம் இருக்குடி மச்சான் உனக்கு' என்று தனது போனில் இருந்தவனை பார்த்து பேசினாள்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Kindly Register & Login
To Read & Share u Valuables Comments
Thank U Readers
Madhura ne pesunathu yae highlight yae sothu la visham vachiduven nu sonna parthiya athu than pa super indha appan kum pillai kum dharalam ah vai kalam enna aatam aadunaga.
Iniyan madhura unnaku adimai ah enga ippo pesuna la yae appo ethachum solla vendiyathu than ah ne aval ah ethachum hurt panna onnu jail la kali thigonum illa na visham than unnaku .
Ezhil eppudi nu theriyala aana avanga appa vum annan um panna thuku kalyanam sundaram ivan kita mugatha thirupikitu poraru ethuvo onnu alteast nilani life aachum avasra pada ma irundha seri .
Iniyan adutha oppu on the way athuvum flight varuthu vegam kaviya va ma ne vandhu unnoda aasai machan oda latchanam tha paru adei akilan madhura oda love vanchagam ah piricha la ippo unnoda kadhal parandhu vandhu unna kizhi kizhi nu kizhika pora ah .
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 27)
மதுரா சொல்றதும் நியாயம் தான், இந்த கல்யாணத்துல அருளாளனோட சதி திட்டம் மட்டும் இல்லையே, அவளோட பெத்தவங்க பேராசையும் தானே
நிறைஞ்சிருந்தது.
நிலானி புள்ளை, நீயாவது அந்த அருளாளன் வாரிசு கிட்டு கொஞ்சம் தள்ளியே இரு பிள்ளை.
வரட்டும், வரட்டும் காவ்யா வரட்டும், காவ்யா வந்தாத்தான் இந்த இனியனோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும்.
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
