மதுர ஜில்லா மச்சானே!-23
அத்தியாயம்-23
வீட்டை விட்டு வெளியே வந்த இனியன், எங்கே போகிறோம் என்ற இலக்கே இல்லாமல் பைக்கை வேகமாக ஓட்டினான்.
மதுரவாணி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் காதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
'எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க... என்னை தொடாதீங்க.'
பைக் ஹாண்டிலை இறுகப் பற்றினான். இதில் அகிலனை வேறு இழுத்து விட்ட தன் நாக்கை என்னவென்று உதைப்பது. அவளுக்கு தன் திட்டம் தெரிந்ததால் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால் அகிலன் உடைவதை காணாமல் இருப்பது அவஸ்தையாக இருந்தது.
'என்னடா... நான் மட்டும் தானா இப்படி அவஸ்தைப்படணும்?' என்று பற்களைக் கடித்தான்.
ஊரின் எல்லைப்புறம் வந்தபோது கூட்டம் ஒன்று தெரிந்தது. சிலர் மண்வெட்டி கொண்டு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். சிலர் மரக்கன்றுகளை அடுக்கி வைத்திருந்தனர்.
நடுவில் வெள்ளை வேஷ்டி சட்டையில் நின்று எல்லோருக்கும் வேலை சொல்லிக் கொண்டிருந்தான் அகிலன்.
"இன்னும் இரண்டு அடி ஆழமா தோண்டுங்க அண்ண" என்ற குரலில் இனியன் அவ்விடத்தை கடந்து செல்லாமல் நிறுத்தினான்.
"ரகு... அந்த வேப்பமரக் கன்றை எடு." என்றான். ரகு இனியன் வந்ததை கவனித்து அகிலன் பேச்சை கேளாது, புங்கை மரக் கன்றை நீட்டினான்.
"அந்த புங்கை மரத்தை பள்ளிக்கூடம் பக்கம் வைப்போம் ரகு. வேப்பங்கன்று கேட்டேன்" என்றான் அகிலன்.
ஒருவருக்கு ஒருவர் கட்டளை கொடுத்தபடி வேலையை முன்னெடுத்துச் சென்றான்.
அதை தூரத்திலிருந்து பார்த்த இனியனின் புருவம் சுருங்கியது.
'இவனை பழிவாங்கத்தான் மதுராவை கட்டினேன்...
இவன் என்னடான்னா ஜம்முன்னு வேலை பார்த்துட்டு இருக்கான். நான் மட்டும் இன்னும் அந்த பொண்ணை சமாளிக்க முடியாம திணறிட்டு இருக்கேன்' என்றவன் அவன் பார்வை முழுவதும் அகிலனிலேயே நிலைத்தது.
அப்போது ரகு, இனியன் நின்றிருப்பதை, அகிலனின் அருகே சென்று மெதுவாக,
"டேய்... மாப்பிள்ளை இனியன் வந்து உன்னையே பார்த்துட்டு இருக்கான். எதிர்தாப்ல தான்" என்றான். அகிலன் கையில் இருந்த மண்வெட்டியை கீழே வைத்தான்.
ஒரு நொடி கூட திரும்பிப் பார்க்கவில்லை.
"ரகு..." என்று அழைக்க
"சொல்லு மாப்பிள்ளை" என்றான் நண்பன்.
"இனியனை பார்க்கற தெம்பு எனக்கில்லை." அகிலன் குரல் மெலிந்தது. "நான் கிளம்பறேன். மீதி வேலையை நீ பார்த்துக்கோ." என்று கைகளை கழுவிக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான்.
இனியன் விடுவானா? "என்ன அகிலா... பார்த்தும் பார்க்காத மாதிரி போற" என்ற இனியனின் குரல் அவனை நிறுத்தியது.
"வந்ததைக் கூட கவனிக்காம போற... இல்ல... வந்தது தெரிஞ்சே ஓடறியா?" என்று மாற்றி மாற்றி பேச்சில் கொக்கி போட, அகிலன் கண்களை ஒரு முறை மூடிக் கொண்டான்.
தவிர்க்க முடியாது என்று புரிந்ததும் திரும்பினான்.
முகத்தில் இயல்பை வரவழைத்து சிரிக்க முயன்றான். "சொல்லு இனியா.. சாரி கவனிக்கலை" என்று பொய்யுரைத்தான்.
"ஊருக்கு வர்றப்ப கல்யாணத்துக்கு பத்திரிக்கை வை... கண்டிப்பா வர்றேன்னு சொன்ன. ஆனா நேத்து என் கல்யாணம் உன்னை ஆளையே காணோம்." என்றதும் அகிலன் மெதுவாகச் சிரிக்க முயன்றான்.
"பஞ்சாயத்து தேர்தல் ரிசல்ட் வந்த நேரம். அதுக்கப்புறம் நிறைய வேலை சேர்ந்துடுச்சு.
அதான் வர முடியல.
அப்பாவும் தங்கச்சியும் வந்திருந்தாங்களே." என்றான் மழுப்பலாக.
"சித்தப்பா வந்தாங்க... தங்கச்சி தான் நாத்தனார் முடிச்சி போட்டுச்சு" என்று தலையசைத்த இனியன் "ஆனா... நீ வருவேன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். உன்னையும் காணோம் சித்தியையும் காணோம்." என்றான்.
"சாரி அம்மாவுக்கு தூரிகாவுக்கு முன்ன ஒரு உசுரு போச்சுல.. அதுலயிருந்து பெரிப்பா மேல கோபம் குறையலை. என்னால உண்மையாவே வர முடியல." என்றான். இதெல்லாம் இனியனுக்கும் தெரியுமே.
இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதி நிலவியது.
அந்த அமைதியை உடைத்தது இனியனே. "என்னை விட..."
என்று இடைவெளி விட்டவன்,
"மதுரவாணி தான் உன்னை தேடியிருப்பாளோ?" என்று ஆழம் பார்த்தான்.
அகிலன் ஒரு கணம் அவனைப் பார்த்தான். பிறகு வேண்டுமென்றே இனியன் மதுரவாணியை மணப்பதை அறிந்ததால், வார்த்தையில் சிக்காமல், மிகவும் அமைதியாக, "அவ இனிமேல் என்னை தேடுற வாய்ப்பே இல்லை." என்றான்.
"நீதான்... அவளை நல்லா பார்த்துக்கணும்." அந்த வார்த்தைகள் இனியனின் மார்புக்குள் ஏதோ எரிய விட்டது. நாசூக்காய் இனி 'அவளுக்கு நீ தான்' என்று இனியனுக்கு கூறுவது போலவே தனக்கும் சொல்லிக் கொண்டான் அகிலன்.
அகிலன் மேலும் எதுவும் பேசவில்லை. "சரி நான் கிளம்பறேன் இனியன். கொஞ்சம் தேர்தல் அப்ப கொடுத்த வாக்குறுதிக்கான வேலைகள் இருக்கு" என்று பைக்கில் ஏறினான்.
இனியன் அங்கேயே நின்றிருந்தான்.
பைக் சில அடி தூரம் சென்றபோது... அகிலன் இடது கையால் கண்களை வேகமாக சட்டையில் துடைத்துக் கொண்டான்.அதை இனியன் தெளிவாகப் பார்த்துவிட்டான்.
அவன் உதட்டில் மெதுவாக ஒரு வெற்றிப் புன்னகை விரிந்தது.
'அப்போ மதுரவாணியை நான் கட்டிக்கிட்டது உனக்கு வலிக்குதா... அதை வெளியே மட்டும் காட்டாம நடிக்கற. நல்லா குத்தட்டும்.' அந்த எண்ணமே அவனுக்கு விசித்திரமான திருப்தியைத் தந்தது. அதுவரை இருந்த மனக்கசப்பு கொஞ்சம் குறைந்தது.
வீட்டிற்குத் திரும்பியவன் நிம்மதியாக உணவு உண்டான்.
ஆனால்... அவனது பார்வை மட்டும் அடிக்கடி மதுராவையே தேடிக் கொண்டிருந்தது.
அவளும் அழுதழுது உணவை மறுக்க, இம்முறை அவனுக்கு கெஞ்சும் அவசியமில்லை. வேல்விழியும் மருமகளுக்கு சாப்பாடு கொண்டு மாடிக்கு ஏறவில்லை. அருளாளன் 'பசிச்சா கழுதை கீழே வந்து திங்கட்டும். ஒன்னும் இல்லாத வக்கத்தவளுக்கு நீ எதுக்கு சேவை செய்யணும்' என்று கடிந்துவிட்டார். அருளாளன் இல்லாத போது மதுராவை தாங்கினால் தெரியாது. இரவு அவர் இருக்க தாங்கினால் தனக்கும் அதிகபட்ச திட்டும் விழுமென அமைதியானார் வேல்விழி.
நேராக எட்டு மணிக்கே வந்து கதவை சாற்றி விட்டான் இனியன். மதுரவாணி திடுக்கிட்டு திரும்பி பார்த்து மூக்குறிந்தாள். அகிலனை காயப்படுத்தவே தன்னை மணந்துள்ள இனியனை வைத்தும், அவளுக்கு இனியனை பற்றிய நல்ல அபிப்ராயம் போனது. முன்பாவது பெரிய மாமா தான் அப்படி என்ற எண்ணமுண்டு. இனி தாலி கட்டியவனே அந்த ரகத்துக்குரியவன் என்றதில் மாபெரும் அதிருப்தி. இனி தன் வாழ்வு பழிவாங்கும் நோக்கத்துடன் தான் ஒவ்வொரு நொடியும் அடியெடுத்து வைக்குமென மணமாகி இரண்டாவது நாளே அறிந்துக் கொண்டாள்.
இனியன் கட்டிலில் படுத்து ஏசியை கூட்டினான். இரண்டு மூன்று முறை மதுரவாணியை கவனித்து படுக்கையில் புரண்டவன், தெனாவட்டாக எழுந்து, "பீவர் இல்லை தானே... பெட்ல வந்து படு. ஐ நீட் யூ" என்றான்.
ஆங்கிலம் சற்று கவனிக்காமல் தள்ளாடியவள், அவனது இழுப்புக்கு அர்த்தம் புரிந்ததால் மறுத்து நின்றாள்.
"தாலி கட்டியிருக்கேன். படுக்க கூப்பிட்டா வரமாட்ட?" என்று இழுக்க, "இதெல்லாம் தப்புனு தெரியாது." என்றாள்.
"அடிங்க.. சரி தப்பு எதுனு நீ சொல்ல தேவையில்லை." என்று துச்சானின் வேலையை சரியாக ஆரம்பித்தான். அதன்பிறகு மதுரவாணியின் உணர்வுக்கு அங்கே மதிப்பேது?!
---
இங்கு அகிலன் இனியனை கண்டதால் வீட்டிற்கும் செல்ல தோன்றாமல், நேராக நகரில் தனக்குத் தெரிந்த கண் மருத்துவரின் மருத்துவமனைக்குச் சென்றான்.
"டாக்டர்... எங்க ஊர்ல இலவச கண் பரிசோதனை முகாம் போன முறை நடத்தியிருந்திங்க. இப்ப இந்த முறையும் நடத்தணும். வயசானவங்க நிறைய பேர் கஷ்டப்படுறாங்க." என்று கேட்டான்.
மருத்துவர் சிறிது யோசித்துவிட்டு,
"அடுத்த பத்து நாள்ல ஒரு ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீ இருக்கு அகிலன்.. அன்னைக்கு டீம் எடுத்துட்டு வந்துடுறோம்."
என்றார். அகிலனின் முகத்தில் சிறு நிம்மதி தெரிந்தது.
"ரொம்ப நன்றி டாக்டர்." என்று மனதாரக் கைகூப்பினான்.
"அட... இதெல்லாம் நல்லதுக்கு செய்யறோம். இதிலென்ன" என்று விடைக்கொடுத்தார்.
பிறகு வீட்டிற்கு வந்தபோதும், "தூரிகா... நீ கேட்டியே பிரம்மகமலம் பூ அது நர்சரில இருந்தது உனக்காக வாங்கியிருக்கு." என்று கூற, தூரிகா அவனிடம் பேசவே இல்லை.
மீனாட்சியும் அதியமானும் மட்டும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அகிலன் மெதுவாக தங்கையின் அருகே சென்றான். "தூரிகா... அண்ணன் சொன்னது காதுல கேட்கலை?" என்று கேட்க அவள் திரும்பவே இல்லை.
"அண்ணன் என்ன தப்புப் பண்ணினேன்மா? ஏன் என்கிட்ட பேசாம தவிர்க்கற?" என்று கேட்டான்.
தூரிகா ஒரு நொடி நின்றாள். பிறகு "பூ போல மனசுக் கொண்ட மதுரவாணியை பத்தி சமயத்துல யோசிக்கலை. இப்ப பூவை வாங்கிட்டு வந்து என்ன புரோஜனம். அங்க ஒருத்தியோட மனசு வாடி வதங்கி போயிருக்கும்" என்று கூறி அங்கிருந்து நடந்து சென்றாள்.
அவள் விலகிச் செல்லவும் முதுகைப் பார்த்தபடி...
அகிலன் மட்டும் அங்கேயே அமைதியாக நின்றான். அவன் இழந்தது காதலை மட்டுமல்ல... தன் வீட்டின் பழைய நிம்மதியையும் என்பது போல் அந்த மௌனம் கனமாக அவனைச் சூழ்ந்தது.
இதில் தங்கை தன்னிடம் பேசாமல் தண்டிப்பது வேறு வாட்டியது.
உண்மை தானே... மதுரவாணிக்கு சமயத்தில் போய் அவளை ஏற்கும் வல்லமை இருந்தும், தவறவிட்டு விட்டது தானே. நான் நினைத்திருந்தால் மதுராவை கட்டிக் கொண்டு இனியன் முகத்தில் கரிபூசியிருக்க முடியும். ஆனால் நிகழ்த்தவில்லையே.
தூரிகாவும் மதுராவும் நல்ல சிநேகிதிகள். அதனால் அதிகம் எதிர்பார்த்திருந்து தன்னை போலவே ஏமாற்றம் கொண்டதாக புரிந்துக் கொண்டான்.
தங்கை ஒன்றை மறந்துவிட்டால்... மதுராவை போலவே தானும் வலியுடன் வாழ்வதை தூரிகாவுக்கு தெரியவில்லையே.
என்னவோ நேற்று போலவே வேதனை வாட்டிட, அரை வயிற்றுடன் சாப்பிட்டு உறங்க வந்தான். முழுதாக உணவை தவிர்க்க நினைத்தால் மீனாட்சி தான் மனம் தாளாமல் வந்து விடுகின்றார். சற்று அன்னை தந்தையின் பாரத்தையாவது களையவே சாப்பிட்டான்.
தூரிகாவுக்கோ ஒரு பெண் காதல் வலியுடன் மற்றொருவனோடு வாழ்வது நெருப்போடு வாழ்வதற்கு சமமென அவள் நினைப்பு. மதுரா அங்கே எப்படி வாழ்கின்றாளோ என்று துடித்தாள்.
இதெல்லாம் இளையமதி கவலைக் கொள்ளும் விஷயம். அதற்காக இளையமதி மகளின் மனதை நினைக்காமல் இல்லை.
அவர்களுமே 'இவ ஏன் அகிலனை நினைச்சிட்டே கிடக்கா. எல்லா நலனும் வசதியும் இருக்கற குடும்பத்துல கட்டி வச்சியிருக்கு. நாளைக்கு நிலானிக்கும் ஒரு புகலிடம் இருக்கு. அப்படியிருக்க தேவையா இது?' என்று எண்ணினார்.
கல்யாண சுந்தரமோ, ''அட நீ வேறம்மா... அவளுக்கு உச்சம் தொடரற சாதகம். இவளா இழுத்து வைக்கறது.' என்று கூறிட இளையமதியோ மகள் நன்றாக தான் இருப்பாளென்று தேற்றிக் கொண்டார். ஆனால் மகள் தங்கள் கிளம்பும் நேரம் மாடிக்கு அல்லவா ஓடினாள்.
அவளுக்கு இந்த சாதாரண விஷயமே அலைக் கழித்தது. அவளது உடல்காயத்தை எல்லாம் கண்டிருந்தால் எப்படி நினைப்பாரே?
எப்படியாவது அகிலனை மறந்து இனியனோடு இணக்கமாகி, குழந்தை குட்டி என்று சரியானால் கூட போதுமென்று வேண்டினார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Thooriga Madhura oda vali unnoda manasuku aachum.theriyuthu aana unga annan vali um athuku koranchathu illayae atha neyum purinchikama ipadi hurt pannurathu seri illa.
Iniyan unna partha la yae rombha kadupu aaguthu ithula indha illamadhi avanga ellam enna amma chai petha ponnu manasu ah pathi ippo kooda yosikama aval yae korai solli kitu irukaga ah
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 23)
இந்த புழைப்பு புழைக்கிறதுக்கு பேசாமல் இனியன் தூக்குல தொங்கிடலாம். மதுரவாணியை காதலிச்ச அகிலனும் அவளை நினைக்கலை, அகிலனை காதலிச்ச மதுராவும் அவனை நினைக்கலை. ஆனால், மதுராவை கட்டிக்கிட்ட இந்த இனியன் என்னடான்னா, இருபத்து நாலு மணி நேரமும் அகிலனையே நினைச்சுக்கிட்டு, அவன் பேரையே ஜபிச்சுக்கிட்டு, மதுரா கூடயே குப்பையை கொட்றான்னா..
இவனையெல்லாம் எதுல சேர்க்குறது. மதுராவையும் அகிலனையும் வருத்தப்பட வைக்குறதா நினைச்சுக்கிட்டு.. தன் பொண்டாட்டி மதுராவையே சீண்டி விடறான், குத்தி காட்டி பேசுறான், அவ கூடவே படுத்து வலுக்கட்டாயமா உறவை ஏற்படுத்தி அவ மனசையும், உடலையும் புண்ணாக்கிறதோட, இனியன் தன் வாழ்க்கையை தானே பாழாக்கிக்கிறான்.
குரங்கை நினைக்காமல் மருந்தை குடின்னு இவன் கிட்ட யார் போய் சொல்றது...? போடா, போடா...
புண்ணாக்குத் தலையா !
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 2 Online
- 329 Members
