மதுர ஜில்லா... மச்சானே!-16
அத்தியாயம்-16
அதிகாலை முதல் ஊரே விழித்திருந்தது.
ஒருபக்கம் பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
மறுபக்கம் இனியன்-மதுரவாணி திருமணம்.
இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதால், ஊரே இரண்டு பரபரப்புகளுக்குள் சிக்கியிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இளைஞர்களும் அரசியல்இல் விருப்பமுள்ள மக்கள் கூட்டமும் அலைமோதியது. ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படும்போது, அகிலன் முன்னிலையில் இருந்தான்.
அகிலன் வெற்றி பெறுகின்ற சத்தங்கள் தொடர்ந்து ஒலிப்பெருக்கியில் கேட்டுக் கொண்டேயிருந்தன.
ரகு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
ஊரில் உள்ள மக்கள் தொகையை வைத்து வெற்றி கனியை தெரிந்திட, "டேய் மச்சான்... நாம ஜெயிச்சிட்டோம்டா!" என்று அகிலனை கட்டிப்பிடித்தான்.
அதியமான் கண்கள் கலங்கின.
எத்தனை பேர் கேலி செய்தார்கள். எத்தனை பேர் அருளாளனுக்கு பிறகு அருளாளன் மகன் இனியன் என்று கூறி அகிலனை தோற்றுப்போவான் என்றார்கள்.
அனைத்தையும் தாண்டி மகன் இன்று ஊரின் தலைவனாக நின்றிருந்தான். அதனால் கண்ணாற கண்டுவிட்டு புறப்பட்டார்.
ஆனால்... அந்த வெற்றியின் நடுவில் அகிலன் மட்டும் அந்த வெற்றியை ரசிக்கவில்லை.
என்ன தான் கையில் வெற்றி மாலை. கழுத்தில் துண்டு.
சுற்றிலும் வாழ்த்து சொல்பவர்கள் என்றாலும் அவன் இழந்தது அவன் நேசித்த ஒருத்தியை.
இனியன் முன்கூட்டியே தேர்தலில் தோற்பது உறுதியாக தெரிய, மதுராவை தன்னிடமிருந்து பிரித்து, இருக்கின்றான். இல்லையென்றால் இதே முகூர்த்த நேரத்தை குறித்திருப்பானா? ஆக இங்கு தோல்வி அவனுக்கானதாக எண்ணினால், அகிலனுக்கு வாழ்க்கையில் தோல்வியை இனியன் தந்திருப்பதை கண்டு ஓடிந்துவிட்டான்.
அகிலன் மனக்கண் கல்யாண கோலத்தில் மதுராவின் வலியை உணர்ந்தவனாக துவண்டான். ரகு கூட 'விடுடா... இந்தளவு வன்மம் வச்சிட்டான். மதுராவாவது உன்னை தேடி வந்திருக்கலாம். ஏன் நீ வரலைன்னா அவ வரக்கூடாதா? அவ தலையில இனியன்னு எழுதியிருக்கு'' என்று நண்பனை தேற்றுவதாக எண்ணினான்.
மௌனமாக வெற்றி பெற்று கழுத்தில் விழுந்த மாலைகளை எல்லாம் களைந்தவனாக, வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிய இளைஞர்களிடம் கூட கைகுலுக்கி, பெரியவர்களுக்கு வணக்கம் வைத்து வெளியேறினான்.
---
அதே நேரத்தில் இனியன், ஊரின் பெரிய திருமண மண்டபத்தில், வண்ண விளக்குகளில் ஜொலித்துக் கொண்டிருக்க, வாசல் முழுவதும் மல்லிகை, ரோஜா, சம்பங்கி மாலைகள் அலங்கரித்து, நாதஸ்வர இசை காற்றில் மிதக்க கல்யாண கனவில் வெற்றி அடைந்ததில் மிதந்தான்.
மண்டபத்தின் நடுவே பொற்கலர் அலங்கார மேடை.
அதன் மையத்தில் மணப்பெண் இருக்கை. அந்த இருக்கையில் பொம்மை போல அமர்ந்திருந்தாள் மதுரவாணி.
காஞ்சிபுரம் பட்டுச் சேலையின் கனத்தை தாண்டி, மனத்தின் பாரத்திலும் தலை குனிந்திருந்தாள்.
அடர் மெரூன் நிற பட்டுப்புடவை. அதில் தங்க ஜரிகை வேலைப்பாடுகள் கொண்டு, கழுத்து நிறைய நகைகள், கைகளில் வளையல்கள், நெற்றியில் குங்குமம். முடி முழுவதும் மல்லிகை பூச்சூடி, வெளியில் பார்த்தால் தேவதைக்கு நிகராக நின்றாள் மதுரவாணி.
சம்பந்தபட்டவர்கள் பார்த்தால் உயிரிழந்த சிலை என்று கூறிவிடுவார்கள். அவள் கண்களில் ஒளியே இல்லை.
அருளாளன் மட்டும் பெருமையோடு வாசலில் நின்றிருந்தார். வருபவர்களை எல்லாம் வரவேற்றார். "வாங்க... வாங்க... எம் பெரிய பையன் இனியன் கல்யாணம்... எல்லாரும் சாப்பிட்டு வாழ்த்திட்டு தான் போகணும்."என்று வரவேற்றார்.
தங்கை இளையமதியும் புன்னகை முகத்துடன் நின்றிருந்தார். வந்தவர்களில் சிலர் ஒவ்வொருவரும் ஒரு கேள்வி கேட்டார்கள்.
"என்னம்மா... சின்ன அண்ணன் குடும்பம் வரலையா?" என்றார்கள்.
"அதியமான் எங்க?" "மீனாட்சி வரலையா?" என்று கேளாமல் இல்லை.
இளையமதி "அதெல்லாம் ஒன்றுமில்லை. மதுராவை பெரியண்ணன் பையனுக்கு கொடுக்கறதால கொஞ்சம் மனசு வருத்தமாம். அதான் முகம் காட்ட மாட்டேங்கறாங்க." என்று சோகத்தை தாங்கி உரைத்தார்.
அதை கேட்ட கூட்டம் உடனே கிசுகிசுக்க ஆரம்பித்தது.
"அட... அதியமான் அந்தளவுக்கு பண்ணுவாரா?"
"தங்கச்சி பொண்ணு தானே..."
"இவ்வளவு வருஷம் கழிச்சும் பெரியவர் மேல கோபமா? அருளாளன் அவரா போய் பத்திரிக்கை வச்சதா கேள்விப்பட்டோம்." என்று பேசிக்கொண்டார்கள்.
உண்மை நிலை யாருக்கும் தெரியவில்லை. வேல்விழி கூட, 'ம்கூம் அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி தான்' என்று முனங்கிக் கொண்டார். எழிலரசனோ "அம்மா... சித்தப்பா கார் வருது. அகிலன் அண்ணா வர்றாரோ என்னவோ?" என்று கிசுகிசுத்தான்.
மண்டப வாசலில் ஒரு கார் வந்து நின்றதும், அதிலிருந்து அதியமான் இறங்கினார்.
அவரோடு தூரிகா வந்திருந்தாள். மீனாட்சி வரவில்லை. அகிலனும் வரவில்லை.
இளையமதி ஒரு நொடி எதிர்பார்ப்புடன் பார்த்தார்.
"அண்ணி வரலையா அண்ணா?" என்று கேட்டார்.
அதியமான் மெதுவாக, "அவளுக்கு மனசும் உடலும் சரியில்லைம்மா..." என்றார்.
அதற்கு மேல் இளையமதி எதுவும் கேட்கவில்லை. அகிலன் வராதது நல்லதென இளையமதி நினைத்தார்.
எப்போதும் போல கல்யாண சுந்தரத்தை பார்த்தும் பார்க்காதவர் போலவே அதியமான் நடந்தார்.
அவரும் எதுவும் பேசவில்லை. வேல்விழியோ கொழுந்தனாரை 'வாங்க' என்று வரவேற்று, தூரிகாவை கைப்பிடித்துக் கொண்டார். முன்பும் சொத்து பிரச்சனையால் கணவர் காரசாரமாக பேசும் போது மீனாட்சி குறுக்கே வந்ததில் தள்ளி விட்டதில் மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்ட ஜீவன். ஓரளவு கணவரின் குணமறிந்தாலும், வேறொரு வகையில் இவர் தவறானவராக போகவில்லை.
அருளாளனை கண்டதும் அண்ணன் தம்பி பார்த்துக் கொண்டனர். அருளாளனுக்கு அமைதியான பகை இன்னும் உயிரோடு இருந்தது. நிலானி வேறு மதுராவிடம், "அக்கா.. அதியமான் மாமாவும், தூரிகா மதினியும் வந்திருக்காங்க" என்று சுட்டிக்காட்டினாள்.
இனியன் நிலானி பேசியதை கேட்டு சித்தப்பாவையும் தங்கையையும் பார்த்து பின்னால் அகிலன் வருகின்றானா என்று ஆர்வமாக பார்த்தான். அகிலன் நொடிந்து இருப்பதை கண்டு நேரில் ஆனந்தமடைய நினைத்தான். அகிலன் வரவில்லை என்றதும், மதுராவை கட்டிக்கிட்டதால அவனுக்கு வலிக்குதா இல்லையா? என்ற யோசனைக்குள் சென்றான்.
மணமேடையில் சடங்குகள் ஆரம்பமானது. அதனால் சில எண்ணத்தை தவிர்த்தான். முகூர்த்த நேரம் நெருங்க அப்போது ஒருத்தி வந்து, "மூணாவது முடிச்சிக்கு நாத்தனார் வேணும்." என்று கூறினார்.
வேல்விழி சுற்றிப் பார்த்தார். பிறகு தூரிகாவை அழைத்தார்.
"வாம்மா..." தூரிகாவின் இதயம் உடைந்தது. ஆனால் வெளியே காட்டவில்லை. பெரிம்மாவே கையை பிடித்து அழைத்து செல்லவும், தந்தையை காண அவரோ, ''அண்ணியோட போம்மா" என்றார். என்னயிருந்தாலும் இனியனுக்கும் தூரிகா தானே தங்கை. தந்தை வழி உறவென்பதால் அவள் முக்கிய பங்கு தானே.
இத்தனை செய்தும் பெரிப்பாவுக்கான மரியாதை, பெரிம்மாவுக்கான மரியாதை என்று தந்தை தருவது ஆச்சரியப்படுத்தியது தூரிகாவுக்கு.
அதே நினைப்புடன் மெல்ல மதுராவின் அருகில் வந்து நின்றாள் தூரிகா.
மதுராவை கண்டதும் நெஞ்சடைத்தது. அந்த நொடியில் இருவர் கண்முன் பல நினைவுகள் ஓடின.
"மதுரா... உன் கல்யாணத்துல நாத்தனார் முடிச்சி நான் தான் போடுவேன். அதனால எப்பவும் என்னிடம் சண்டை வச்சிக்காத" என்று சிரித்த நாட்கள்.
"ம்கூம்.. நான் மருமகளா வீட்டுக்கு வந்துட்டா, உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணறேன் இரு'' என்று மதுராவும் கிண்டல் செய்து மகிழ்ந்த தருணங்கள், எல்லாம் ஒரு கணத்தில் நினைவுக்கு வந்தது.
மதுரா தலையை உயர்த்தி தூரிகாவை பார்த்தாள்.
அந்த பார்வையில் ஆயிரம் சொல்லயியலாத கண்ணீர் வலிகள் இருந்தன. அகிலனை நினைத்து உருகாத நாளேயில்லை மதுராவுக்கு. தூரிகாவை காண வந்தால் அண்ணனை தானே நோட்டமிடுவாளென்று அறிவாள். இன்று அப்படியே தலைகீழாக மாறியதே.
இரண்டு முடிச்சிட்டு இனியன் கையை எடுத்திட, தூரிகா நடுங்கிய கைகளால் மூன்றாம் முடிச்சியை போட்டாள்.
பிறகு தன் கையில் வைத்திருந்த சிறிய பெட்டியை திறந்தாள்.
அதிலிருந்து மெல்லிய தங்க வளையலை எடுத்தாள்.
மதுராவின் கையில் உரிமையாக மாட்டிவிட்டாள்.
தூரிகா குரல் உடைந்து போனது. "என் வாக்குல நான் சரியா இருக்கேன் அண்ணி... உன் கல்யாணத்துல நாத்தனார் முடிச்சி போட்டுட்டேன்... சந்தோஷமா இரு" என்றாள்.
மதுராவின் கண்கள் குளம் கட்டியிருந்தவை தற்போது வடிந்து கன்னத்தை நிரப்பின.
"நீயும் அண்.." என்றவள் அண்ணன் என்று கூறவந்து தயங்கி "கடவுள் யாருக்கு யாருனு மாற்றிட்டாரே." என்று சொல்லிவிட்டு திரும்பி நின்றாள். ஏனெனில் இன்னும் ஒரு நொடி அங்கே நின்றால் தூரிகா அழுதுவிடுவாள்.
அதியமான் அருகில் நின்று எல்லாவற்றையும் பார்த்தார்.
ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. என்னயிருந்தாலும் மதுரா தங்கை மகள். அவளுக்கு அகிலன் என்றால் உயிரென மீனாட்சி சொல்லியிருக்க, 'இந்த புள்ள அகிலனை நினைச்சிட்டு இனியனோட வாழறது நரகமாச்சே' என்று கலங்கினார்.
புகைப்படக்காரனோ "சார்... கொஞ்சம் சிரிங்க." என்று சொல்ல முகவாட்டத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு இறங்கினார்.
அவரால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை. மகன் அகிலன் இருக்க வேண்டிய இடமாயிற்றே.
அதே நேரம் இனியனுக்கு மதுராவை கட்டி வைத்தப்பின்னும் அருளாளனின் முகத்தில் சந்தோஷம் முழுமையாக இல்லை.
இன்று அதே நாளில் அகிலன் தேர்தலில் வெற்றி பெற்று விட்டான். அந்த செய்தி ஏற்கனவே மண்டபம் முழுவதும் பரவியிருந்ததே. 'அகிலன் ஜெயிச்சிட்டானாம்.'இனியனுக்கு எல்லாம் ஊர் தேர்தல் பெருசில்லைங்க. அதை பெருசா நினைச்சா இதே நாள்லயா கல்யாணம் வைப்பாரு' என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அருளாளனின் உள்ளம் எரிந்தது. மதுராவை இனியனுக்கு கட்டி வைத்துவிட்டார். ஆனால் அகிலனை தோற்கடிக்க முடியவில்லை. மணமேடையில் அமர்ந்திருந்த இனியனும் அந்த செய்தியை கேட்டிருந்தான். அவன் யூகித்தது தான்.
அவனது பார்வை அடிக்கடி கூட்டத்துக்குள் அகிலனை தேடியது.
அகிலன் வருவானோ திடீரென்று வந்து மதுராவை கட்டிக்கொண்டப் பின்னும் ஜம்பமாய் திரிந்தால்? என்ற பதட்டம் அவனை விட்டுப் போகவில்லை. அதைமீறி மதுராவால் துவண்டிருப்பான் என்றும் ஆனந்தம் கொண்டான்.
புகைப்படக்காரன், "சார்... மணப்பெண்ணை பாருங்க." என்று கூறினான்.
இனியன் மதுராவை நோக்கி திரும்பினான். இதுவரை அவள் முகத்தை பார்த்தாலே மென்மையாக மாறிய அவனது முகம்... இப்போது ஏதோ கடினமாயிற்று.
மதுராவின் கண்கள் வெறுமையாக இருந்தன. அவள் அருகில் இருந்தாலும்... அவள் கண்கள் தூரிகா செல்லும் பாதையில் இருக்க, மனமும் வேறு இடத்தில் இருப்பதை அவன் உணர்ந்தான்.
அதுவே இனியனின் உள்ளத்தில் ஒரு புதிய கோபத்தை விதைத்தது.
"அங்க என்ன பார்வை. நீ என் மனைவி. கொஞ்சம் கல்யாண போட்டோவுக்கு போஸ் தர்றியா? தூரிகா எல்லாம் சாப்பிடாம கிளம்பறது ஒன்னும் புதுசு இல்லை." என்றான்.
தூரிகா மட்டுமா அதியமான் கூட அப்படி தான் சாப்பிடாமல் கிளம்பினார். அதெப்படி உணவில் கைவைக்க தோன்றும் நெஞ்சடைக்கும் உணர்வல்லவா?!
அதியமான் செல்லவும் இளையமதி நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள். சின்ன அண்ணனை நிறுத்தி சாப்பிட அழைத்து செல்லவும் இல்லை.
நிலானி தான் ''சாப்பிட்டு போங்க மாமா. அண்ணி நீங்களும்" என்று கூப்பிட, தூரிகா மறுத்துவிட்டாள்.
கல்யாணசுந்தரத்திற்கு அதுவும் பொறுக்க முடியாது ''ஏ நிலானி இங்கவா." என்று அழைத்து விட்டார்.
எழிலரசன் அவனது நண்பர்களோடு வெளியே நின்றவன், நிலானி தூரிகா சென்றதும் தந்தை அழைக்க, வாசலையும் தந்தையையும் மாறிமாறி பார்த்து நகர்வதை பார்த்தபடி, நண்பர்களுடன் அரட்டையில் மூழ்கினான்.
இனியன் செருக்குடன் நிற்க, மதுரா வலியுடன் அவ்விடத்தில் மணப்பெண்ணாக நின்றாள்.
மனதில் அகிலனின் காதலை பிரித்து வேடிக்கை காட்டிய போதும், மதுராவை கண்டால் நஞ்சாய் மாற ஆரம்பித்தான் இனியன். அவள் கைகளை பலமாக பிடித்து அழுத்தி, சபையில் ஜம்பமாய் நின்றான்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
ரீடர்ஸ் கமெண்ட்ஸ் பண்ணறவங்க லாகின் செய்து போடுங்க. இல்லைன்னா அனானிமஸ் பெயரா காட்டுது. ப்ளீஸ்.. உங்க பெயர் எனக்கு நினைவில் வரும். நிறைய பேர் முகநூலில் ரெக்வஸ்ட் வந்தா யாருனே தெரியாம இக்னோர் பண்ணறேன். அடிக்கடி கண்ணில் படும் பெயராக இருந்தா தானே நான் ஓ இவந்க நம்ம ரீடர்னு ரெக்வஸ்ட் அக்சப்ட் பண்ணுவேன். சோ கமெண்ட்ஸ்கு லாகின் பண்ணி பாருங்க.கஷ்டமான வேலை இல்லை. Save passw
ord தந்துட்டா லாகின்ல நீங்க கை வச்சாலே ஆட்டோமெடிக்கா யூஸர் நேம் பாஸ்வோர்ட் வந்து அதுவே நிரப்பிடும். க்ளிக் பண்ணி நீங்க கமெண்ட்ஸ் பண்ணலாம்.
Madhura unna pakka kastam ah than iruku aana ithu ku karanam unga appa vum ammavum than yen annan keta madhura akilan ah virumburathu therinchum suyanalam ah seiyuthaga ippo kooda iniyan ku avan kalyana tha vida akilan hurt aagi irupan ah illaya ah na ra thu than ah perusu ah theriyuthu
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)
அடிப்பாவி மக்கா ! இந்த மதுரா கடைசி வரைக்கும் அவ முடிவுல இருந்து இறங்கியே வரலையா ?
இவளை காப்பாத்த அகிலன் வருவான்னு நினைச்சாளா ?
ஏன், இவ ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டாளா ? அப்படின்னா அந்த வீணாப்போனவனையே கட்டிக்கிட்டு காலத்துக்கும் கண்ணீரிலே கரையட்டும்.
அங்க பாருங்க நம்ம ஹீரோ அகிலன் எம்புட்டு அழகா ஜெயிச்சிட்டு மாலையும் கழுத்துமா நிக்குறான்...? என்ன முகத்துல மட்டிம் சிரிப்பை காணோம். பரவாயில்லை, விட்டுத்தள்ளு அகிலா, நீ தலைவராயிட்டே, தலைவருக்கு ஏத்த தைரியமான பொண்ணுத்தான் உனக்கு துணைவியா தலைவியா வரணும்.
😃😃😃
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)
அடிப்பாவி மக்கா ! இந்த மதுரா கடைசி வரைக்கும் அவ முடிவுல இருந்து இறங்கியே வரலையா ?
இவளை காப்பாத்த அகிலன் வருவான்னு நினைச்சாளா ?
ஏன், இவ ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டாளா ? அப்படின்னா அந்த வீணாப்போனவனையே கட்டிக்கிட்டு காலத்துக்கும் கண்ணீரிலே கரையட்டும்.
அங்க பாருங்க நம்ம ஹீரோ அகிலன் எம்புட்டு அழகா ஜெயிச்சிட்டு மாலையும் கழுத்துமா நிக்குறான்...? என்ன முகத்துல மட்டிம் சிரிப்பை காணோம். பரவாயில்லை, விட்டுத்தள்ளு அகிலா, நீ தலைவராயிட்டே, தலைவருக்கு ஏத்த தைரியமான பொண்ணுத்தான் உனக்கு துணைவியா தலைவியா வரணும்.
😃😃😃
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
17 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 2 Online
- 329 Members
