மதுர ஜில்லா... மச்சானே!-13
அத்தியாயம்-13
அகிலனின் முகம் கல்லாய் இறுகியிருந்தது. தூரிகா கோபத்தில் பைக் பின்னால் அமர்ந்திருந்தாள். காற்று வேகமாக முகத்தில் அடித்தாலும், அவன் மனதுக்குள் எழுந்த புயலை அடக்க முடியவில்லை. தூரிகாவே பொறுக்க முடியாமல், "அண்ணா... மதுரா எல்லாம் இனியன் அண்ணாவை கட்டிக்க சம்மதிக்கலை. அத்த பொய் சொல்லுது." என்றாள்.
அகிலனுக்கு அது தெரியாதா? மதுராவுக்கு தான் அகிலன் என்றால் உயிராயிற்றே!
"உண்மை அண்ணா... நான் அங்க போனப்ப மதுரா அழுது அழுது கண்ணு வீங்கி நின்னா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன்னை தான் கேட்டுச்சு. 'அகிலன் மச்சானிடம் சொல்லு... என்னை காப்பாத்த சொல்லு...'ன்னு கதறுச்சு." அகிலனின் கை இறுகியது.
"நீ திரும்பி வந்திருக்க கூடாதுண்ணா. நேரா போயிருக்கணும்." என்று தூரிகா ஆத்திரப்பட்டாள். அகிலன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
"இல்ல தூரிகா... அத்தைகிட்ட இதுவரைக்கும் நான் எதிர்த்து பேசியதே இல்லை. இப்ப நான் போனா, இனியனுக்கு எதிரா போட்டிக்கு வந்ததா பேசுறாங்க.. ஏற்கனவே அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் பிரச்சனை இருக்கு. இப்ப நான் போய் நின்னா, குடும்பத்தையே உடைக்க வந்தவன்னு சொல்லிடுவாங்க."
தூரிகாவுக்கு கோபம் இன்னும் அதிகமானது.
"அப்படின்னா மதுராவை விட்டுடுவியா?" என்றாள்"
அகிலன் "அப்பா அம்மாவிடம் போய் பேசி அவரை அழைச்சிட்டு வருவோம். அத்தைக்கு அப்பான்னா கொஞ்சம் நிதானமா பேசலாம்" என்றான்.
தூரிகாவும் 'ஒருவேளை அப்பா அம்மா சேர்ந்து வந்து பேசினால் அத்தை யோசிக்கும் என்று சாந்தமானாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அகிலன் நேராக அன்னை தந்தையிடம் வந்தான். அவன் முகத்தை பார்த்தவுடனே மீனாட்சிக்கு புரிந்தது. அதியமானும் அமைதியாக மகனை பார்த்தார்.
"அப்பா... மதுராவை இனியனுக்கு பரிசம் போட்டதா அத்தை என்னென்னவோ பேசறாங்க. எனக்கு மதுரா மேல ஆசை இருக்குப்பா. எனக்காக வந்து பேசுங்க" என்றான்.
அந்த வார்த்தை வீட்டையே அமைதியாக்கியது. மீனாட்சியின் கண்கள் ஒரு நொடி கலங்கின. அவருக்கு இது புதிதல்ல. மகன் பார்வை மாறுவதை பல நாட்களாக கவனித்திருந்தார்.
அதியமான் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவாக, "நாம என்னய்யா பேசறது? தடுக்கறது?" என்றார். எப்பொழுதும் அருளாளனுக்கு எதிராக எதையும் செய்யாமல் தவிர்க்க நினைப்பவர்.
இன்றும் என்ன செய்வதென்று தவித்தார். மகன் ஆசைப்படுவதாக கூற சட்டென முடிவெடுக்காத நிலையில் குழம்பினார்.
அகிலன் உடனே நிமிர்ந்தான். அதியமான் அடுத்த பெருமூச்சு விட்டார். "அண்ணனோட இத்தனை வருஷ உறவு ஏற்கனவே சரியில்ல. இப்ப தங்கை உறவும் போகணுமா? இதுல இனியனோட பரிசம் நடந்துடுச்சுனு இளையமதி சொன்னா. பரிசம் போட்டாலே நம்ம ஊர்ல பாதி பொண்டாட்டினு சொல்வாங்க. ஐந்து பவுன் செயின் எல்லாம் போட்டு தட்டு எல்லாம் மாத்தியப்பின்ன என்ன செய்யறது அகிலா?" என்றார்
மீனாட்சி உடனே பொறுக்காமல்,
"என்ன பேசுறீங்க? நம்ம பையன் மனசு முக்கியமில்லையா? இப்படி தான்.. நான் கர்ப்பமாக இருந்தப்ப உங்க சொத்து பிரச்சனையில் உங்கண்ணா என்னை தள்ளி விட்டார். அப்ப குழந்தை கலைஞ்சிடுச்சு. இப்ப.. என் பையன் வாழ்க்கையில விளையாடறார்." என்றார்.
அதியமானோ "அதுக்கு தானடி இத்தனை காலமா பேசாம கொள்ளாம இருக்கோம். போதாதா?" என்றார்.
மீனாட்சி கோபமாக தொடர்ந்தார். "ஆமா.. பேசாம கொள்ளாம இருக்கோம்னு தான் பேரு. ஆனா உங்கண்ணா என்ன செய்தாலும் பொறுத்துட்டு இருக்கிங்க. இதுல என் பையன் அகிலனையும் பொறுமையா இருக்க சொல்லிட்டிங்க. மாடு முட்டி எம்பையன் வயிற்றுல காயத்தோட இருந்தாலும் உங்களுக்கு என்ன?
அப்ப உடம்புல காயத்தை தர்றாங்க. இப்ப மனசுல காயத்தை தர நினைக்கறார்.
ஏன் இத்தனை நாள் இனியனுக்கு இங்க மதுரவாணினு ஒரு அத்தை மக இருப்பது தெரியுமா? உங்கண்ணா வேண்டுமின்னே என் மகனை வம்பிழுக்க தான் இப்படி பரிசம் போட்டுட்டு வந்திருப்பார்." என்று சரியாக தான் கணித்தார்.
தன் அண்ணனை சொன்னதும் அருளாளனுக்கு கோபம் பொங்கியது. ''ஏன்.. மதுராவுக்கே இந்த கல்யாணம் வேண்டாம்னு இருந்தா, அவளே நிறுத்த வேண்டியது தானே?" என்றார்.
மீனாட்சியோ "அதுக்கு உங்க தங்கை காது கொடுத்து கேட்கணுமே." அவரது குரலில் காயம் இருந்தது.
"இங்க பாரு மீனாட்சி, பரிசம் போட்டு தட்டு மாத்தாலைன்னா நானே போய் நம்ம அகிலனுக்கு கல்யாண முகூர்த்தம் குறிப்பேன். இப்ப அண்ணன் இனியனுக்கு மதுராவை பேசி முடிச்ச பிறகு, நான் போய் அகிலனுக்கு கேட்டா அது அசிங்கமா இருக்காது.
வேண்டுமின்னே பண்ணறதா தான் நினைப்பாங்க மீனாட்சி." என்றார்.
அகிலன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். தந்தை பேசுவதற்கு பெரும்பாலும் ஆமோதித்தே பழகியதால் சட்டென எனக்கு மதுரா வேண்டுமென கத்தி கூறவும் முடியாது நின்றான். என்ன செய்தால் மதுரா கிடைப்பாளென்று தெரியவில்லை.
'எனக்கு மதுரா வேண்டுமே.. அவளை நான் என்னில் பாதியாக அல்லவா கருதுகின்றேன்' என்பதை வெளியில் சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் பரிசம் போட்டு விட்டார்கள். சங்கிலி அணிவித்து தங்கள் வீட்டு பெண்ணாக தெரியப்படுத்தி விட்டார்கள். இந்த ஊரில் இதை தெரிவித்தாலே, பாதி சம்பந்தம் முடிந்துவிட்டது என்பார்கள்.
இனியன் உண்மையாகவே மதுராவை விரும்புகிறானோ?
அவனுக்கும் ஆசை இருக்கிறதோ? என்ற எண்ணம் கூட அகிலனை பின்னால் இழுத்தது.
அப்போது தாய்தந்தை பேசுவதை தாளாமல் தூரிகா வெடித்தாள்.
"அண்ணா... நீ அப்பா அம்மா சொல்றதை கேட்காத. அவங்களுக்கு உன் மனசும் மதுரா மனசை பத்தி என்ன தெரியும்?" என்று பொங்கினாள். மதுரா மனதில் அகிலன் இருப்பதை தூரிகா நன்றாக அறிவாளே. அதனால் இவ்வாறு கூறினாள்.
அகிலன் அவளை பார்த்தான். "என்ன அண்ணா யோசிக்கற. நேரா போய் மதுராவை தாலி கட்டி கூட்டிட்டு வா." என்று பேசினாள்.
"தூரிகா!" என்று அதியமான் அதட்டினார். ஆனால் அவள் நிற்கவில்லை.
"இனியன் அண்ணா முகம் கருத்து போகட்டும். தேர்தல்ல தோற்கட்டும். அவனுக்கு இங்க என்ன வேலை? வெளிநாட்டுல போய் செட்டில் ஆகட்டும். இந்த பெரிப்பா அவமானப்பட்டு அசிங்கப்பட்டு வீட்ல இருக்கட்டும்." என்று கோவமாக கத்தினாள்.
அதியமான் பட்டென்று மகளை அறைந்துவிட்டார். ''சின்ன பொண்ணு... என்னயென்ன பேசற. பெரியவங்களை சாபமிடற அளவுக்கு வளர்ந்துட்டியா? எல்லாம் இவளை சொல்லணும். பொட்டக்கழுதைக்கு வாய் நீளும் பொழுது எல்லாம் செல்லம் கொடுத்து விட்டது. இப்ப பாரு.... உறவுகளோட அருமை தெரியாம இருக்கா. உங்கண்ணன் அகிலனுக்காக நீ பேசற. எங்கண்ணனுக்காக நான் யோசிக்கறேன்.
ஏன்... ஊர்ல உலகத்துல பொண்ணா இல்லை. சொந்தத்துல கட்டி கொடுத்து ஏதாவது நோயை இழுத்து வைக்கவா? எம்புள்ளைக்கு என்ன குறை? மதுராவுக்கு கொடுப்பினை இல்லைனு விட்டு தொலைங்க.
அகிலன் தேர்தல்ல இப்ப தான் முன்னேறிட்டு இருக்கான். அதுவே பெரியவருக்கு பிடிக்கலை. நான் அப்பவே சொன்னேன். நீயும் பட்டணத்துக்கு போ படினு. இல்லை வெளிநாட்டுல கூட படிக்க வைக்கறேன்னு சொன்னேன். உங்கண்ணா தான் படிப்பு இங்கனவே பார்த்துக்கறேன்னு விட்டுட்டான்.
இப்ப... என் தங்கச்சி வீட்டுக்காரன் கேட்கறானே.. எம்பொண்ணுக்கு வெளிநாட்ல படிச்ச மாப்பிள்ளையே பரிசம் போட வீடு தேடி வந்துட்டான்னு பெருமை பேசறான்.
இத்தனை காலமா குடிகாரன் அங்கயும் இங்கயும் சுத்திட்டு இருந்தவன். என் முன்ன வந்து இப்படி பேசறான். எனக்கும் தான் வலிக்கு.
எங்கண்ணா ஒரு வீம்பு பிடிக்கறார்னா, உங்க மாமா கல்யாண சுந்தரம் வீம்புக்குனே நிற்கறான்.
தங்கச்சியாவது அகிலனை யோசிப்பானு பேசினேன். அதுக்கு நிலானியை எழிலரசன் கட்டிக்கறதா பெரியண்ணி பேசுது. ஒரே வீட்ல பொண்ணை கொடுத்துட்டா, இரண்டும் ஒன்னுக்கொன்னு துணையா இருக்கும்னு சொல்லறா. எப்படி இதை மீறி எம்பையனுக்கு கட்டி வைனு கால்ல விழவா? சொல்லு... கால்ல விழவா?" என்று அதியமான் பேசவும், அகிலன் தங்கையை பார்த்தான். அவள் கண்களில் கோபம் மட்டுமில்லை. அண்ணனின் காதலுக்காக போராடும் தங்கையின் துடிப்பும் இருந்தது. ஆனால் தந்தை அத்தை இளையமதியிடம் தனக்காக பேசிமுடித்து, தோற்றவராக நிற்பதை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
தந்தை தனக்காக அவமானப்பட்டு தான் இங்கே தனக்கு மதுரா வேண்டாமென எகுறுவதை யூகித்தான். இல்லையென்றால், தனக்காக துடிக்காதவரா?
எந்தவிதமான முயற்சியும் செய்ய முடியாமல் அகிலன் இன்றே தோற்றவனாக உடைந்துப் போனான்.
தூரிகாவோ தான் அடிவாங்கி பேசியும், அண்ணன் தந்தை பேசியதை கேட்டு ஆடிப்போய் துவளவும், தூரிகா அறைக்குள் அடைந்தாள்.
மீனாட்சிக்குமே தன் கணவர் தனியாக இளையமதியிடம் பேசி முயன்று இருப்பதை புரிந்துக் கொண்டு அமைதியானார்.
அகிலனோ... தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முட்டுசுவரின் முன் நின்றவன் போல வழியின்றி உணர்ந்தான். இதுவரை எந்த முடிவையும் எடுக்கும்போது இவ்வளவு தயக்கம் வந்ததில்லை. தேர்தல் வேலை, ஊர் பிரச்சனை, சண்டை, பஞ்சாயத்து என்று எதிலும் துணிந்து நின்றவன், இன்று ஒரு பெண்ணின் கண்ணீருக்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைத்தான்.
மதுரா தன்னை விரும்புகிறாள்.
தூரிகா கூட தூக்கிட்டு வான்னா என்று சொல்லிவிட்டாள்.
ஆனால்... அவளை அழைத்துச் செல்லும் துணிவு மட்டும் ஏன் வரவில்லை?
காரணம் காதல் இல்லாததல்ல.
காதலை விட பெரியதாக குடும்பம் அவன் மனதில் வேரூன்றி இருந்தது.
அப்பா அதியமான் பேசும்போது அவரது குரலில் இருந்த வலியை அவனால் உணர முடிந்தது. தன்னைப் பெற்ற மனிதர்... தனக்காகவே அவரது தங்கையிடம் பேசி தோற்றுவிட்டு வந்திருக்கிறார்.
அவரது கண்களில் தெரிந்த அந்த தோல்வி, அகிலனின் நெஞ்சையே பிளந்தது.
"கால்ல விழவா சொல்லு..."
என்று அதியமான் கேட்ட வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
தந்தை தன் முன்னால் கெஞ்சும் நிலைக்கு போகக்கூடாது என்று நினைத்தவன். இப்போது தன் காதலுக்காக அதையே செய்ய சொல்ல முடியுமா? அகிலன் தான் எந்தவிதமான முடிவு எடுக்க இயலாது துடித்தான்.
ஒரு பக்கம் மதுராவின் வீட்டில் வேறொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
தூரிகா வந்து சென்ற பிறகு மதுராவின் மனதில் சிறிய நம்பிக்கை முளைத்திருந்தது.
இதுவரை முழுக்க இருளாக இருந்த மனதில் ஒரு தீபம் எரிந்தது. 'அகிலன் மச்சான் வருவார்.' அந்த எண்ணமே அவளுக்கு தைரியம் கொடுத்தது.
அழுகை கொஞ்சம் குறைந்தது.
கண்களில் உயிர் திரும்பியது.
அதை கவனித்த நிலானி,
"அக்கா... என்னாச்சு?" என்று கேட்டாள். மதுரா மெதுவாக சிரித்தாள். "ஒன்னுமில்லை தூரிகா வந்துட்டு போனால்ல.. அவ அகிலன் மச்சானிடம் எனக்காக பேசியிருப்பா.. மச்சான் வருவார்." என்று நம்பிக்கையுடன் இருந்தாள்.
நிலானி அக்கா அருகே அமர்ந்தாள். ''நீ நிஜமாவே அகிலன் மச்சானை விரும்பறியா?" என்று நேரடியாக கேட்டாள்.
அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. கண்ணீர் வழிய,
"ஆமா..." என்று தலையசைத்தாள்.
நிலானி வியப்பாக பார்த்தாள்.
"அப்படின்னா ஏன் இத்தனை நாள் சொல்லல? பேசாம பரிசம் போட்டு வச்சியிருக்கலாம்ல. இப்ப பாரு... இனியன் மச்சான் முந்திக்கிச்சு" என்றாள்.
மதுரா கசப்பாக சிரித்தாள். "அவரும் சொல்லல... நானும் சொல்லல... சொன்னா தான் நினைச்சிட்டு இருக்கோம்னு அர்த்தமா." என்றவள் வானத்தை பார்த்தாள்.
"எனக்கு தெரியும்... அகிலன் மச்சான் என்னை விட்டுட்டு போக மாட்டாரு. ஊரறிய பட்டுசீலை தட்ல வச்சி என்னை கண்ணாலம் கட்டி அழைச்சிட்டு போகும். " என்று அந்த வார்த்தையை சொல்லும்போது அவள் கண்களில் மீண்டும் நம்பிக்கை மலர்ந்தது.
அவள் இன்னமும் பெரிய மாமாவை, இனியனை பற்றி சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. இரீவருமே குறுக்கு புத்தி போட்டு காய் நகர்த்தி இவளை மணக்க வந்ததை.
அகிலனோ...
தன் காதலுக்காக போராடலாமா? அல்லது குடும்பத்திற்காக பின்வாங்கலாமா?
என்ற இரு வழிச்சாலையின் நடுவில் நின்று தவித்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதும் அப்பாவை எதிர்த்து நின்றதில்லை. இந்த முறை எதிர்த்து நின்றால் தன் வாழ்க்கை சீராகும். ஆனால் அப்பா அண்ணன் தங்கை என்ற இரண்டு உறவிலும் உடைந்து போயிருப்பதையும், மதுரா வீட்டில் அவளது பெற்றோர் தனக்கு ஆதரவாக நிற்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் நின்றான்.
'அகிலன் மச்சான் வருவார்.'
என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் மதுராவின் முகமும் நினைவுக்கு வந்தது.
அந்த நம்பிக்கையை உடைக்கவும் அவனால் முடியவில்லை. ஒரு பக்கம் தந்தை. மற்றொரு பக்கம் காதலி.
இரண்டு பக்கமும் அவனுக்கு உயிரானவர்கள்.
யாரை காப்பாற்றினாலும் இன்னொருவரை காயப்படுத்த வேண்டிய நிலை. அந்த இரவு முழுவதும் வீட்டின் மாடியில் தனியாக அமர்ந்திருந்தான் அகிலன்.
வானத்தில் நிலா அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் மனதில் மட்டும் புயல் ஓயவில்லை.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Omg sema twist. Madurai eagerly waiting for Akilan. But akilan what will do now? Wonderful narration sis.
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)அடப்பாவமே ..! மதுரா அகிலன் ரெண்டுப் பேருமே இரு தலைக்கொள்ளி எறும்பு மாதிரியே தவிக்குறாங்கப்பா. இந்த லஷ்ணத்துல இனியன் உண்மையான நேசத்துல மதுராவை கல்யாணம் பண்ணிக்க
நினைக்கலை, கல்யாணம் பண்ணி ஒரு வருசத்துக்கப்புறம் கை கழுவி விடற எண்ணத்துலத்தான் காயை நகர்த்தியிருக்கான்னு தெரிஞ்சா அகிலன் இன்னும் என்ன ஆவானோ...? இத்தனை நாளா பெரியப்பா மட்டும் தான் விரோதம் காட்டினாரு, இப்ப இந்தத் பிரச்சினையில எது பண்ணாலும் தங்கச்சி இளையமதி உறவையும்
Akilan than pavam ippo enna pannurathu nu theriyama rombha confusion la irukan
Akilan ippo enna pannurathu nu theriyama rombha confusion la irukan
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
17 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 2 Online
- 329 Members
