மதுர ஜில்லா... மச்சானே!-12
அத்தியாயம்-12
காலம் தாழ்த்தாமல், அடுத்த வாரத்தில், ஒரு மாலை சூரியன் மந்தமாய் சாய ஆரம்பித்த நேரம். அகிலன் ஊரில் இல்லாத சமயம் அருளாளான் குடும்பத்தார் இளையமதி வீட்டுக்கு வந்தார்கள்.
ஏதோ ஊர் விவகாரமாக அகிலன் டவுனுக்கு சென்ற தருணம். கல்யாணசுந்தரம் வீட்டின் முன் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. இளையமதி வெளியே பார்த்தவர் சற்று திகைத்தார். வாசலுக்கு முன் அருளாளன், அவருடன் அண்ணி வேல்விழி, எழிலரசன் இனியன்.
வேல்விழி கையில் பழத்தட்டு, மல்லிகைப்பூ, வெற்றிலை, பாக்கு என்று பரிசம் போட வந்த சுவடு தெரிந்தது.
இளையமதி உடனே, "என்ன அண்ணே... இது?" என்று அதிசயமாய் கேட்டார்.
அருளாளன் சிரித்தார். "இரண்டு பசங்களை வச்சிட்டு இருக்கற அண்ணன்காரன் தங்கை வீட்டுக்கு பூ பழத்தட்டு எல்லாம் எதுக்கு எடுத்துட்டு வருவாங்க. எல்லாம் உள்ள போய் பேசலாம் தங்கச்சி." என்றார்.
வீட்டுக்குள் வந்ததும் கல்யாணசுந்தரம் கூட குழப்பமாக பார்த்தார். "என்ன மச்சான் விசேஷம்?" என்றார்.
அருளாளன் சுற்றி பார்த்தார். மதுரவாணி சமையலறை அருகே நின்றிருந்தாள். அவளுக்கு ஏதோ உள்ளே கலக்கம். இனியன் வேறு எட்டியெட்டி பார்வை அம்பு வீசவது சரியாகபடவில்லையே.
அருளாளன் தங்கை கணவரிடம் சொன்னார். "மச்சான்... சுத்தி வளைச்சு பேச என்ன இருக்கு? பழதட்டு பூ புடவை கொண்டு வந்ததே சொல்லலையா? நம்ம மதுராவை... இனியனுக்கு கட்டிக்கொடுக்க நினைக்கிறேன்." என்றார்.
அந்த வார்த்தை மதுரவாணியின் வீட்டையே அமைதியாக்கியது. மதுரா கையில் இருந்த டம்ளர் நடுங்கி தவறவிட்டாள்.
இளையமதியும் அதிர்ச்சியாய்,
"என்ன அண்ணா சொல்றிங்க?" என்றதும் அருளாளன் உடனே சிரித்தார். "இதுல அதிர்ச்சி அடைய என்ன இருக்கும்மா. நம்ம வீட்டு பையன் வெளிநாட்ல படிச்சு முடிச்சு ஊருக்கு வந்துட்டான். நம்ம வீட்டு பொண்ணு சடங்காகி வீட்டோட இருக்கு. இரண்டு பேருக்கும் கல்யாண வயசு. இரண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்திட்டா, சொந்தம் இன்னும் நெருங்கும்." என்றதும், கல்யாணசுந்தரம் ஏதேதோ யோசித்திருந்தார்.
அருளாளன் தடையின்றி பேச ஆரம்பித்தார். "மச்சான் எங்க வீட்ல பணம் இருக்கு, வசதி இருக்கு. ஆனா எங்களுக்குனு பொம்பள பிள்ளை இல்லையே.
உங்க வீட்ல வசதி இல்லை என்றாலும், மதுராவை நாங்க பெண்ணா பார்த்துக்கறோம். நீங்க நகை நட்டுனு கூட போட வேண்டாம். மதுரவாணியை மட்டும் அனுப்புங்க." என்றார்.
வேல்விழி கூட அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
அருளாளனே தொடர்ந்தார்.
"அதோட.... நிலானியும் ஸ்கூல் படிக்கு... அதுவும் காலேஜ் முடிச்சி வரட்டும். நம்ம எழிலரசனுக்கு பார்க்கலாம்." என்றார்.
"ஒரே வீட்டுக்கு இரண்டு பொண்ணு வந்தா நம்ம உறவு இன்னும் நெருங்கும்ல." என்று ஆசைக்காட்டினார்.
இளையமதி கண்களில் ஏதோ மின்னியது. அவருக்கு எப்போதுமே இரண்டு மகளும் நல்ல வசதியான வீட்டில் கட்டி கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது.
அருளாளன் அதைத்தான் குறிப்பார்த்து தொட்டார்.
இளையமதி மெதுவாக,
"ஆனா... சின்ன அண்ணன் வீட்ல அகிலன்ன்ன்" என்று இழுத்தார். இளையமதி எதிர்பார்த்தது இது போல பூப்பழத்தட்டை மீனாட்சி அண்ணியும் தூரிகாவும் எடுத்து வந்து, அதியமான் அண்ணா அகிலனுக்காக பரிசம் போட வருவார்கள் என்று தான். ஆனால் வந்ததோ அருளாளன் அண்ணன்.
அருளாளன் அதியமான் பேச்சை வெட்டும் விதமாக, "அட அகிலனை விட இனியன் மாசக்கணக்கில பெரியவன். எப்படியும் இனியன் கல்யாணம் தான் முடிவாகும். அகிலன் வேற நிறம் கம்மி. பெண்ணு கிடைக்க நாளாகும். இனியனுக்கு நம்ம மதுரான்னா உசுரு. ஊர்ல வந்ததிலருந்து மதுராவை பத்தி தான் பேச்சு. அவனாவே கட்டி வையுங்கனு வாயை திறந்து மனசுல இருப்பதை சொல்லிட்டான். அதை மீறி நாளை கடத்த முடியுமா?" என்று அருளாளன் தட்டை முன்னால் வைத்தார்.
இளையமதி கல்யாண சுந்தரத்தை யோசிக்க விடவில்லை. "இப்போ பூ வைச்சுக்கலாம். வெளிய சொல்ல வேண்டாம். தேர்தல் அன்னிக்கு நம்ம ஊர் கோவிலில் கல்யாணத்தை சிம்பிளா முடிப்போம். இல்லை.. சின்ன அண்ணன் தான் பெருசா." என்றார் சிறு கோபமாக.
மதுரா உடனே "அம்மா.. அம்மா.." என்று அழைத்தாள். அகிலனை காதலிக்கும் மதுராவுக்கு இனியனை மணக்க பேசும் இந்த விஷயம் பாகற்காயாக இறங்கியது. இதில் அன்னை தந்தை பேசாமல் நிற்க, மதுரா பயந்து விட்டாள். அகிலனை தவிர யாரையும் மணக்க அவள் மனம் தயாராகவில்லை.
அதனால் அன்னையை அழைத்தாள்.
"மதுரா பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல சும்மாயிரு." என்று கல்யாண சுந்தரம் அதட்டவும் தவகப்புடன் அமைதியாகி விட்டாள்.
கல்யாண சுந்தரம் அந்தளவு இளையமதியை சரியாக பார்த்திடாமல், பணத்தை விரயம் செய்து சிலபல நகையை விற்று வாழ்ந்திருக்க அதியமான் தங்கை கணவரான கல்யாண சுந்தரத்திற்கு மரியாதை தரமாட்டார். அதனாலோ என்னவோ அருளாளன் உட்கார வைத்து பேசவும், மகளை பெரிய மச்சானின் மகனுக்கு மணக்க யோசனை சென்றது.
"வேல்விழி மதுரவாணிக்கு பூ வச்சி நம்ம வீட்டு பொண்ணா சம்பந்தம் முடிச்சி விடு" என்றதும் வேல்விழி மூன்று மொழம் பூவை எடுத்து மதுரவாணியை நெருங்கி வந்து வைத்தார். அருளாளன் மதுராவையோ மற்றவரையோ பேசவிடாமல் காய் நகர்த்தினார்.
மதுரா நின்றுகொண்டே இருந்தாள். மறுப்பாய் தலையசைத்து, தன் கருத்தை முன்வைக்க நினைத்தாள். ஆனால் தாய் தந்தை இருவரும் பேசவிடாமல் கண்ணாலேயே மிரட்டி அதட்டி விட்டனர். இதில் அருளாளன் மாமாவுக்கு தனது பிடித்தமின்மை தெரிந்தும் தனது வெறுப்பை கருத்தில் பதியாமல் பேசுவது எரிச்சலானது.
இதில் வேல்விழி மௌனமாக பூவை சூட, "அத்தை.. இதெல்லாம் எதுக்கு. நான் இனியன் மச்சானுக்கு சரியான ஜோடி இல்லை. அவர் படிச்சவர் நான் படிக்காதவ. அவர் வெளிநாட்ல வாழ்ந்தவர். நான் நம்ம மதுரையை கூட தாண்டாதவ. நீங்க மச்சானுக்கு வேற நல்ல பொண்ணை பார்க்கலாம்" என்று பேச்சில் மறுப்பை தெரிவித்தாள்..
இதையே தான் வேல்விழி தன் கணவர் அருளாளனிடம் சொன்னது. அதை கேட்க மறுத்து ஏதோ திட்டமிடுவதை அறிந்தே வந்திருக்க பேச முடியுமா?
"ஏன் இனியனை கட்டிக்கிட்டு நின்றாலும் அம்சமா இருப்படி." என்று பூவை வைத்தார்.
மதுரவாணியின் கண்ணில் கண்ணீர் மட்டும் அருவியாக பொழிந்தது.
இனியன் வேறு, அருகே வந்து, அவளது நெற்றியில் குங்குமம் இட்டு, புன்னகைக்க மதுராவுக்குள் பூகம்பம் சுனாமி எல்லாம் வந்து சென்றது. அவள் மனதில் 'அகிலன் அகிலன் மச்சான்' என்று தாளமிட்டது.
எழிலரசனும் வந்திருக்க வேடிக்கை பார்த்தான். நிலானிக்கு நடப்பது எல்லாம் புதிராக கண்ணுற்றாள்.
இனியன் வேறு அன்றே ஒரு கழுத்து சங்கிலியை மதுராவுக்கு அணிவித்தான். மதுரா மிரள, அதை அணிவித்த பொழுது, அருளாளனோ 'ஐந்து பவுன் சங்கிலி... கழுத்து வலிச்சா கழட்டி வைம்மா" என்று பெருமை பேச, கல்யாண சுந்தரம் அதை கண்டு வாய் பிளந்தார். தங்கம் விற்கும் விலைக்கு மதுராவுக்கு வந்த யோகமென பெருமைப்பட்டார். இளையமதிக்கும் கணவர் ஆமோதிப்பதாக நிற்க, தான் மகளது வாழ்வை தடையிட கூடாதென மௌனித்தார்.
அருளாளன் குடும்பத்தார் செல்வதாக புறப்பட்டதும், மதுரா சங்கிலியை கழட்டி விட்டு, "எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்." என்று அழுதாள்.
"ஏன்... எங்கண்ணன் பையனுக்கு என்னடி குறைச்சல். நல்ல உசரமா நிறமா, திடக்காத்திரமா, பட்டணத்துல படிச்சவரு இல்லை. வெளிநாட்ல படிச்சுட்டு வந்தவன். வேண்டாம்னு சொல்ல என்ன காரணம் இருக்கு" என்று கடிந்தார்.
தன் மனதில் அகிலன் மச்சான் இருக்கின்றார் என்று கூற வந்த உதடு துடிக்க நின்றாள்.
"அகிலன் மாதிரி கருப்பாவா இருக்கான், அதுவும் இல்லை." என்று அகிலனை குறைவாய் மதிப்பிட, "அம்மா... அகிலன் மச்சான் ஒன்னும் கருப்பு இல்லை. அவரும் நல்ல நிறம் தான்" என்றாள்.
"அவன் நிறமா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இனியன் உன்னை கட்டிக்கறதா முதல்ல வந்து பரிசம் போட்டுட்டான். இதுல நிலானி படிப்பு முடிச்சி எழிலரசனுக்கு கட்டி கொடுப்பதா பெரியண்ணா பேசறார். இதுக்கு மேல என்ன வேண்டும்." என்றார்.
"அம்மா... என் மனசுல இனியன் மச்சான் இல்லை" என்றாள் மதுரவாணி.
"வேற... அகிலன் இருக்கானா?" என்று கேட்க, மதுரா பேசும் முன், கல்யாண சுந்தரம் அறைந்து முடித்து 'ஏதாவது பேசின பல்லை உடைச்சிடுவேன். இனியன் தான் இந்த வீட்டு மருமகன். நாலு இடம் போறப்ப அகிலன பார்த்தா, ஒரு மரியாதை இல்லாம அவன் பாட்டுக்கு அந்தயிடத்துல இருந்து நழுவிடுவான். அவனை நினைப்பியோ...?
அந்த அதியமான் எங்கயாவது ரோட்ல பார்த்தா தங்கை புருஷன்னு மரியாதை தர்றானா. ஏதோ முகத்தை மறைச்சிட்டு போவான்." என்றார் அவர்.
இளையமதிக்கும் இந்த எண்ணம் உண்டு. சின்ன அண்ணன் கல்யாண சுந்தரம் சரியில்லை என்று அவர் நலத்தை கூட கேட்டதில்லை. இதில் சின்ன அண்ணி மீனாட்சி, தூரிகா ஏதாவது ஏமாந்து போனதாக ஏதாவது காரியம் செய்தாள். 'உங்க அத்தை இளையமதி மாதிரி வந்து நிற்கற. அவளும் இப்படி தான் வாழ்க்கையே எல்லாவற்றிலும் ஏமாந்து நிற்பா' என்று தன்னை வைத்து வசைப்பாடுவார்.
இதில் இரண்டாவது மகளையும் கட்டிவைக்க இப்பொழுதே அச்சாணி போட்டு செல்ல, இரண்டு மகளது வாழ்வும் இங்கே நலமாக அமையுமென பெண்ணை பெத்தவளாக சிந்தித்தாள்.
ஒரெட்டு அதியமான் வீட்டில் இந்த விஷயத்தை போட்டு வைக்கவும் இளையமதி நினைத்தார். ஆனால் அருளாளன் அண்ணா 'உடனடியாக எதையும் தம்பியிடம் பேசாதே சண்டை பிடிக்க போறான்' என்று கூறியிருக்க, இரண்டு நாளில் நேரில் சென்று தெரிவிக்க நினைத்தார். அதனால் இளையமதி அன்றைய நாள் முழுவதும் அழுது கரைந்த மதுராவை மூளை சலவை செய்ய முற்பட்டார். கல்யாண சுந்தரமோ, 'இளையமதி கல்யாணம் வரை மகளை நீ கண் பார்வையிலயே கவனிச்சு வை.' என்று கூறினார்.
மதுரா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாமென்ற பிடிவாதத்தில் இருந்தாள்.
இளையமதி தான் பல்வேறு விதமாக பேசி, மதுராவை சம்மதிக்கும் வைக்கும் பொருட்டு, குடும்பத்தோடு இறப்பதாக உயிர் பயம் காட்டி வாயை அடைத்தார்.
அப்பொழுது கூட அகிலன் மச்சானிடம் ஒரு வார்த்தை பேசினால் அவளது மனம் மாறும் ஆனால் அதற்கு வழியில்லாமல் கல்யாண சுந்தரம் முழுநேரம் காவல் காத்தார்.
எப்படியும் சின்ன அண்ணனிடம் இவ்விஷயம் பகிரவேண்டுமென எண்ணி மூன்றாம் நாள் அதியமான் வீட்டுக்கு வந்தார் இளையமதி.
அன்றும் அகிலன் இல்லாமல் போனான். அதியமான் வீட்டுக்கு இளையமதி வந்து மதுராவை பரிசம் போட்டுவிட்டதாக கூறி மகிழ்ந்தாள்.
தங்கை சொன்னதை கேட்டதும் அதியமான் அதிர்ந்தார்.
"என்னம்மா சொல்ற?" என்றதும்
மீனாட்சி முகம் வெளிறியது
இளையமதி மெதுவாக, "பெரிய அண்ணன் வீடு, நல்ல இடம், மதுராவுக்கும் நல்ல எதிர்காலம் அமையுது. தானா வந்த வரன் வேற. மதுராவும் எத்தனை வருஷமா வீட்டோட இருப்பா அண்ணா. யாரும் பொண்ணு கேட்டு வரலையே. பெரியண்ணா தானே முதல்ல வந்து கேட்கறார்." என்று சொல்ல மீனாட்சியால் பேசவே முடியவில்லை.
ஏதோ தங்கள் வீட்டில் மதுராவை முதலில் பெண் கேட்கவில்லை என்ற குற்ற சாட்டும் அதில் இருந்தது.
"மதுராவிடம் கலந்து பேசினியா" என்று அதியமான் கேட்டார்.
"கேட்டாச்சுன்னா... அதுக்கு முதல்ல இஷ்டமில்லை. அப்பறம் அத்தோட நிலானியையும் எழிலரசனுக்கு கட்டி வைப்பதா அண்ணா பேசிட்டார். ஒரே வீட்ல இரண்டு பொண்ணுங்க வாழப்போறதா இருக்கட்டும் என்றதும் கேட்டுக்கிட்டா.
இல்லைன்னா கொஞ்ச நாளில் நிலானியை கூட அகிலனுக்கு கட்டி வைக்க யோசிப்போம்" என்று பேசவும், மீனாட்சியோ "இந்தா... நீ ஒன்னும் கலந்து ஆலோசிக்க வரலையே. முடிவெடுத்து பரிசம் போட்டு தானே பேசற. பொண்ணுக்கு பெரிய இடம் கிடைச்சதா நல்லது... சந்தோஷமா கட்டி வை அதுக்காக எம் பையனுக்கு நீயா பாவம் பார்த்து நிலானியை கட்டி தர வேண்டாம்." என்று கோபித்துக் கொண்டார்.
அதியமான் தான் பேச இயலாது துடித்தார். ஒருபக்கம் அண்ணன் மகன் இனியனுக்கு தான் தங்கை மகள் மதுராவை பேசியதால் குழம்பியிருந்தார். அகிலன் மனதில் என்ன உள்ளது? மதுராவுக்கு இனியனை மணக்க சம்மதம் இருக்குமா? என்று தவறாக எண்ணி மௌனமானார்கள்.
இளையமதியோ "ஏதோ சின்ன அண்ணன் அண்ணி என்று நல்லது பொல்லது எப்பவும் சொல்வேன். இன்னிக்கும் சொல்லிட்டேன். எங்க வீட்டுக்காரர் கூட இந்த கல்யாணத்தினால குடும்பத்தை நல்லபடியா பார்க்கறார். வேறென்ன வேண்டும் அண்ணா. நம்ம இனியன் தானே. ஏன் அண்ணா.. எல்லாத்துக்கும் வம்புக்கு நிற்கற மாதிரி அகிலன் இதுலயும் போட்டிக்கு வருவானா?" என்று கேட்க, அதியமான் என்ன பதில் சொல்வார்.
அதியமான் பெரிதாக சண்டை பிடிக்காமல் உறைந்திடவே, தகவல் கூறிவிட்டு செல்வதாக நடையை கட்டினார் இளையமதி. மீனாட்சி தான் கண்ணீரோடு 'பெருசா நிலானியை கட்டி வைக்கிறேன்னு சமாதானம் சொல்லறா.' முனங்கிக் கொண்டே திரிந்தார்.
அகிலன் தாமதமாக தான் இரவு நேரம் வெளியிலிருந்து வந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. தூரிகாவுக்கும் கூட சரியாக தெரியாததால் இனியன் மதுரா விஷயம் அறியாமலே சாதாரணமாக. "என்னம்மா? அமைதியா இருக்க''
என்று கேட்டான்.
மீனாட்சி ஒன்னுமில்லை என்று முகம் திருப்பினார். அதியமான் மகன் முன் அகம் காட்டி கொடுக்குமென விரைவாக உறங்க செல்வதாக அறையில் பதுங்கிவிட்டார். மீனாட்சி தான் 'அகிலன் மனதில் மதுரா இருக்க வாய்ப்புண்டு. அதை தெரிந்து தான் உங்கண்ணா இனியனை மதுராவுக்கு கட்டி வைக்கிறார். எம்பையன் வாழ்க்கையில ஏதாவது வில்லங்கம் கூட்டவே பண்ணறார்' என்று கணவரிடம் கூறினார். அதியமானோ 'அப்படியிருக்காது நீயா ஏதாவது எங்கண்ணாவை குறை சொல்லாதே' என்று கண்டித்தார். ஆனால் அதுபோல இருக்குமோ என்றும் சிந்தித்தார்.
அடுத்த ஓரிரு வாரத்தில் தூரிகா மதுரவாணி வீட்டுக்கு வந்ததும், மதுரா பின்னாலிருந்த கிணறு அருகே நின்றிருந்தாள்.
கண்கள் வீங்கி, நெற்றி லேசாக சிவந்திருந்தது. அவள் அழுது கொண்டு கிணற்று சுவரில் சாய்ந்திருந்தாள்.
நிலானி வந்ததும் வராததும் விஷயத்தை போட்டு உடைக்க, தூரிகா கோபத்தில் வெடித்தாள்.
"உனக்கு அறிவே இல்லையா? என் அண்ணா அகிலனை விரும்பிட்டு இனியன் அண்ணாவை கட்டிக்க எப்படி ஒத்துக்கிட்ட?" என்று பாய்ந்தாள்.
மதுராவோ அழுதவள், "என் பேச்ச கேக்க இங்க யாருயிருக்கா. உங்கண்ணா அகிலன் என்னை விரும்புவதா சொல்லி பரிசம் போட வரச்சொல்லு. என்னை இந்த சிக்கல்ல இருந்து காப்பாத்த சொல்லு. அகிலன் மச்சானை சுமந்துட்டு இருக்கற மனசு வேற யாரையும் சுமக்காது. இங்க என்னை எங்கயும் போகவிடாம, எங்கப்பா பிடிச்சு வைக்குது." என்று நெஞ்சு வெடிக்க அழுது தீர்த்தாள்.
தூரிகா மெதுவாக அருகே வந்தாள். மதுரா அவளை பார்த்ததும் உடைந்தாள்.
"இப்பவே போறேன். எங்க அண்ணாவிடம் சொல்லறேன்" என்று வேக நடையிட்டாள்.
தூரிகா வந்து சென்றதை இளையமதி அறிந்து பாதி வழியிலேயே தடுத்து நின்றார்.
"தூரிகா... ஏ.. நில்லு. அங்க மதுராவிடம் என்ன பேசின." என்று நின்றார்.
"எங்கண்ணாவை மதுரா விரும்புது. மதுராவையும் எங்க அண்ணா விரும்புது. அப்பறம் ஏன் இப்படி பண்றிங்க அத்தை" என்றாள்.
"இங்க பாரு தூரிகா... மதுராவுக்கு நல்லது நடக்க வழிவிடு ஏன் இனியனும் உனக்கு அண்ணா தானே." என்றார்.
கூடுதலாக இளையமதி மதுரவாணி-இனியன் மணந்தால், கூடவே நிலானி- எழிலரசன் திருமணமும் நிகழும். நீ ஏன் நடுவுல வர்ற. உனக்கென்ன வந்துச்சுங்கறேன்'' என்று தடுத்தார்.
"இல்லை அத்தை.. மதுராவுக்கு எங்கண்ணான்னா இஷ்டம். அவர் மதுராவை கட்டிப்பார். மதுராவால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியாது." என்றாள்.
"இத்தனை நாள் மதுரா இங்க இருந்தா, அப்ப எல்லாம் பரிசம் போட உங்கண்ணா வரலை. இப்ப இனியன் மதுரவாணியை விரும்பி கேட்டு பரிசம் போட்டு நிற்கவும், போட்டிக்கு அகிலன் வருவது நல்லாவா இருக்கும்.. இது நியாயமா" என்று அவனை குற்றவாளியாக மாற்றினார்.
அப்பொழுது தான் தூரிகாவும் அத்தையும் பேசுவதை கேட்டு வந்த அகிலன், இனியனுக்கு மதுராவை பரிசம் போட்டதை அறிந்தவனாக துடித்தான்.
"என்னது இனியனுக்கு மதுராவை பரிசம் போட்டிங்களா?" என்று அகிலன் கேட்டான்.
"கேளுன்னா." என்று தூரிகா தூண்டிவிட, "அத்தை நான் மதுராவை விரும்பறேன். அவளும் விரும்பறா. நாங்க இரண்டு பேரும் நேர்ல சொல்லிக்கலை என்றாலும் உண்மையா நேசிக்கறோம்" என்று கூற, இளையமதி "இதப்பாரு அகிலா... என் மக மனசை மாத்தி பேசி புரிய வச்சிருக்கேன். குழப்பி விடாத. இனியனை கட்டிக்க முழு மனசா சம்மதிச்சுட்டா. நடுவுல எந்த தடையும் செய்து, இதுவரை சின்ன அண்ணனுக்கு பெரிய அண்ணன் மட்டும் தான் பகைனு ஊர்ல பேச்சு. இனி தங்கை என்ற உறவையும் கெடுத்துடாத.' என்று பகடை வீசினார் இளையமதி.
அகிலனுக்கு என்ன செய்வதென்ற வழி புரியாமல் மதுராவை கண்டால் வழி தெரியும் என்று புரிய யோசித்தான். "அத்த.. மதுரா என்னை பார்த்து பேசட்டும். அப்பறம் நான் தடையா வரலை" என்றான்.
ஆனால் இளையமதி நந்தியாக நின்று, "ஏன் இப்படி பண்ணற அகிலா. இத்தனை நாள் உன்னை நல்லவனா நினைச்சேன். இப்ப பரிசம் போட்ட பிறகு வம்படியா இருக்க. இதுவொன்னும் மாடு பிடிக்கற விளையாட்டு இல்லை. போட்டிக்கு வந்து பெயரை கொடுத்து விளையாடறது.
நீ அவளிடம் நேரிடையாக கேட்டா, அவ மனசு தவிக்காது. இப்ப தான் இனியனிடம் பேசி பழகவே ஆரம்பிச்சிருக்கா. நீ வேற வந்து, பேசி குற்றவுணர்வா மாத்திடாத. அவ நிம்மதியா வாழ விடு." என்று கூறினார்.
அகிலன் அடுத்து பேசும் முன், இளையமதியோ வேகமாய் தன் வீட்டின் திசை நோக்கி நடந்தார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 1 Online
- 329 Members
