மதுர ஜில்லா... மச்சானே!-11
அத்தியாயம்-11
மதுரா வீட்டில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள். மழையில் நனைந்ததால் ஈரமான முடியை துடைத்தாள். ஆனால் மனம் மாலை நடந்த சூழ்நிலைக்குள் சிக்கி கண்களை மூடினாள்.
நினைவில் வந்தது அகிலன். அவன் வந்த பொழுது, வழுக்கி விழுந்த தருணம், தன் இடுப்பை தாங்கிய கைகளும். 'பார்த்து வர மாட்டியா?' என்ற அகிலனின் குரலும் தித்திப்பாய் மனதை நிறைத்தது.
மதுரா அவளறியாமல் நினைத்து நினைத்து பார்த்து சிரித்தாள். தன் இடுப்பை தானாக மெதுவாக தொட்டாள். அங்கே இன்னும் அகிலனின் விரல் அழுத்தம் இருப்பது போல மாயை தருவித்தது.
"மதுரா... ஏய் மதுரா" இளையமதி அழைத்ததும் திடுக்கிட்டு எழுந்தாள்.
"என்னம்மா?"
"என்னடி தனியா சிரிச்சிட்டு இருக்க?" என்று அதட்டினார்.
"ஒன்னுமில்லைம்மா" என்று கூறிட கன்னங்கள் மட்டும் சிவந்திருந்தது.
"போ.. நிலானி வீட்டை கூட்டி பெருக்கிட்டா... நீ அந்த காமாட்சி அம்மன் விளக்கை ஏத்து" என்று கட்டளையிட, சரியென்று தலையாட்டினாள்.
"காலகாலத்துக்கு கல்யாணம் செய்திருந்தா இந்நேரம் மாமியார் வீட்ல விளக்கு ஏத்தி நின்றியிருப்ப. இங்க கிணத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து தனியா சிரிக்கா?' என்று புலம்பினார்.
---
இங்கே அருளாளன் இனியன் பேசுவதை கேட்டு வேல்விழி ஒரு பெண்ணாய் மதுராவின் மனம் அறிந்தவராக, அடிக்கடி தடையிட்டு பேச, அருளாளன் அதட்டிவிட்டார். அதனால் தோப்புக்குள் மாலை ஒளி மெதுவாக கரைந்து கொண்டிருந்த தருணம் அங்கே தந்தை மகன் வந்து சவகாசமாக விட்ட திட்டத்தை மீண்டும் தெளிவாக பேச வந்தனர்.
தென்னை மரங்களின் இடைவெளியில் புகுந்த காற்று கூட அந்த நேரம் அமைதியாக இருந்தது.
அருளாளன் முன்னால் நடந்தார். இனியன் பின்னால் வந்தான். சில நொடிகள் இருவரும் பேசவில்லை.
அருளாளன் தான் முதலில் நின்றார். "சரி... இப்ப சொல்லு. நல்லா யோசிச்சு தான் சம்மதம் சொன்னியா?" என்றார். மகன் முன்னுக்கு பின்னாக முரணாக பேசக்கூடாதே.
இனியன் கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தான்.
தலை குனிந்து சில நொடிகள் மண்ணை பார்த்தான்.
பிறகு முடிவெடுத்தவனாக,
"ஆமாப்பா." என்றான். அருளாளன் கண்களில் வெற்றி மின்னியது. அவர் ஆசைப்பட்டது அது தான். அகிலனை வீழ்த்திட மதுராவை பகடையாக்கிட முடிவெடுத்தார். அவருக்கு மதுரவாணியின் மனம் என்னாகுமென்ற எண்ணம் கூட போகவில்லை. பொட்டப்பிள்ளை மனசை மாத்திக்கும் என்ற எண்ணம்.
"அகிலனை தோற்கடிக்கணும் அப்பா. தேர்தல் எல்லாம் வெற்றி தருமா என்பது சந்தேகமா இருக்கு. நான் இந்த ஊருக்கு என்ன நல்லது செய்தாலும், நான் வெளிநாட்டுக்கு போய் படிக்க போனதால கிராமத்தை வழிநடத்த தெரியாதவனா தான் மக்கள் பார்க்கறாங்க. ஆனா இந்த முறை அந்த தோல்வி கிடைச்சா கூட ஓகே. ஆனா மதுராவை கல்யாணம் கட்டி அகிலனை வீழ்த்தணும். அது தான் வேண்டும்" என்று இனியன் ஆணித்தரமாக கூறினான். இனியனும் இங்கு வந்து மக்களுக்கு பல நல்லதை சொந்த பணத்தில் செய்தும், என்னயிருந்தாலும் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு எப்ப வேண்டுமென்றாலும் போயிடுவார்பா. அரசனை நம்பி புருஷனை கைவிடக்கூடாது என்று அகிலனையே உயர்த்தி ஆதரவாய் இருப்பதை யூகித்து விட்டானே இனியன்.
அருளாளன் இனியன் அருகே வந்தார். "நல்ல முடிவு." என்று மகன் தோளைத் தட்டினார். இனியனுக்கு மகிழ்ச்சி அடையவில்லை.
"அப்பா.. ஆனா..." என்று இனியன் இழுத்தான். அருளாளன் புருவம் சுருக்கினார்.
"என்னப்பா?" என்று கேட்க, இனியன் ஆழமாய் மூச்சை இழுத்தான்.
"நான் மதுராவை விரும்பி இந்த முடிவு எடுக்கலை." என்று தெளிவுப்படுத்தினான்.
"தெரியும்." என்றார் அருளாளன். வெளிநாட்டில் படித்த இனியன் எங்கே. பிளஸ்டூ தாண்டாத மதுரவாணி எங்கே? அவளை இவனுக்கு பிடிக்குமா? என்று தான் எண்ணினார்.
இனியன் தயங்கியபடி, "நான் காவ்யாவை தான் மனசார காதலிக்கறேன்." என்றதும், அருளாளன் முகம் சற்றே மாறியது.
"அந்த பொண்ணு விஷயத்தை மறந்துடு." இனியன் உடனே மறுப்பாய் தலையசைத்தான்.
"முடியாது அப்பா." என்றான்.
"இனியா.. இதென்ன பேச்சு. மதுராவை கட்டிக்கறதா சொல்லிட்டு, எவளோ ஒருத்தியை காதலிக்கறேன்னு இனி சொல்லாத." என்றார்.
"இல்லப்பா நான் காவ்யாவை காதலிக்கறேன். அவளையும் விட்டுட முடியாது." அருளாளன் முகம் சுளிந்தது. கிராமத்தில் வளர்ந்தவருக்கு இந்த பேச்சு கசப்பை தந்தது.
"அப்ப இந்த கல்யாணம்? என்ன பேசற இனியா? எனக்கு புரியலை" என்றார்.
இனியன் பார்வை தந்திர நரியின் திட்டமாக மாறியது. சில விநாடிகள் அமைதியாக நின்றவன் மெதுவாக சொன்னான்.
"இந்த கல்யாணம் நடக்கும் உங்களுக்காக... அகிலன் விரும்புற மதுராவை நான் கட்டிக்கிட்டா, அவன் உடைந்து போவான். அவன் தோற்பான்" அருளாளன் முழுக்க மகனை கவனமாக பார்த்தார், உதட்டில் மெதுவான சிரிப்பு கூடியது.
"அதுக்கு தான் சொல்வது. நீ காதலிக்கறவ வேண்டாம்." என்றார். அவருக்கு மகன் காதலிப்பதே பிடிக்கவில்லை.
இனியன் பார்வை தந்தையை நோக்கியது. "இல்லப்பா... ஒரு வருஷம் காவ்யாவிடம் எனக்கும் மதுரவாணிக்கும் நடக்கற கல்யணாத்தை சொல்லாம, உங்களிடம் காவ்யாவை கல்யாணம் செய்வதற்கு, மேரேஜுக்கு பர்மிஷன் வாங்கறதா சொல்லி என்னால மேனேஜ் பண்ண முடியும். அவளுமே ஒன் இயர் வெயிட் பண்ணுவா. என் கல்யாணத்தை மறைச்சிடுவேன்." என்றான்.
"ஒரு வருஷம் காத்திருந்து"
அருளாளன் முகம் சுருங்கியது. அவருக்கு நிஜமாகவே மகன் கூற வருவது புரியவில்லை
"என்னடா சொல்ல வர்ற புரியலை." என்றார். இனியன் அமைதியாக சொன்னான்.
"மதுராவை கல்யாணம் செய்து அவளிடம் அவளுக்கு தெரியாம டிவோர்ஸ் பேப்பரில் சைன் வாங்கிடுவேன். கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் அவளை வச்சி அகிலனை காயப்படுத்துவேன். இதுக்கு நடுவுல காவ்யாவிடம் கல்யாணத்தை அப்பா ஒரு வருஷம் கழிச்சு நடத்த சம்மதிக்கறாரு சொல்லி, மதுராவை கட்டிக்கிட்டதை மறைச்சு, காவ்யாவை அந்த நாட்ல போய் கல்யாணம் பண்ணிக்கிறேன். உங்களுக்கு தேவை அகிலன் கஷ்டப்படணும். எனக்கு அவன் தோல்வியடைந்து அடிப்பணியணும். இந்த மதுரா.. நான் இருக்கறப்ப அவனை பார்த்தது பிடிக்கலை. என்னை விட அவன் என்ன உசத்தி? அவளுக்கும் தண்டனை வேண்டும். எப்படியும் மதுரா எல்லாம் மறுகல்யாணம் பண்ணிக்க மாட்டா. அகிலனும் நான் எச்சி பண்ணினவளை கட்ட பிடிக்காது. வேற பொண்ணை தான் தேடணும்." என்றதும் அருளாளன் சில விநாடிகள் பேசவே இல்லை.
அவருக்கு கூட அந்த யோசனை ஒரு நொடி அதிர்ச்சியை தந்தது.
"அப்ப அந்த மதுரவாணியை அத்து விட்டுடுவியா?" என்றதும்
இனியன் தோளைக் குலுக்கினான்.
"படிக்காதவ.. என் டேஸ்டுக்கு சரிப்பட்டு வரமாட்டானு அத்தை மாமாவிடம் சொல்லிடுவேன். எனக்கு அகிலன் என்னிடம் தோற்கணும்." என்றான்.
அருளாளன் மெதுவாக சிரித்தார். அந்த சிரிப்பில் கொஞ்சம் குரூரம் இருந்தது. ஜல்லிக்கட்டு நடந்த அன்று மதுரா அவள் அணிந்த தாவணியை அல்லவா கிழித்து அகிலனின் இடையில் கட்டி நின்றாள். இதில் அகிலன் ஜெயித்ததும் அப்படி குதித்து ஆடினாளே. அதனாலே தங்கையின் மகளை மகனிடம் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தார். ஆனால் இந்தளவு இல்லை. இதற்கு இப்பொழுது மறுத்தால் மகன் தன் திட்டத்திற்கு அடிப்பணிய தயங்குவானென எண்ணினார். எப்படியும் மதுரா சமார்த்தியசாலி பையனை விட்டுவிட மாட்டாளேன்றும் நினைத்தார்.
"என்னவோ செய். ஆனா அந்த அகிலன் நொறுங்கி போகணும் கஷ்டப்படணும்" என்று தந்தையும் மகனும் திட்டமிட்டு முடித்தனர். ஏனோ தம்பி மகன் மீது இந்தளவு வெறுப்பை சமீபக்காலமாக விதைத்து அறுவடைக்கு காத்திருக்கின்றார்.
எல்லாம் தம்பி அதியமான் ஒதுங்கி செல்வான். இந்த அகிலன் இடையே வந்து சீண்டி, சொத்தையும் இரண்டு மடங்காக மாற்றியதில் அளவுக்கடந்த வெறுப்பு. அதே வெறுப்பு தான் இனியனுக்கும். தன்னை விட அகிலன் தகுதி குறைவு என்று ஆர்ப்பரிப்பான். என்ன தான் உயரம், உடல் திடம், களையான முகமென்றாலும் அகிலன் நிறம் குறைவு என்று ஏசுவான். அது சிறு வயது. அகிலன் நிறத்துக்கு எல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை. அதே போல படிப்பும் அகிலனை விட இனியன் வெளிநாட்டில் படித்தும் அகிலன் இனியனை கண்டு ஏங்கவில்லை. எங்க படிச்சாலும் இந்த ஊருக்கு தான் நல்லது செய்வேன். ஊர் மண்ணை தாண்ட மாட்டேன் என்ற கொள்கையை பின்பற்றி மக்கள் மனதில் ஊன்றி விட்டான். அடுத்து அத்தை மகள் மதுராவுக்கு கூட தன்னை விட அகிலனை பிடிக்கின்றதே என்ற கோபம். அதற்கு இந்த ஆட்டம். சிறுவயது கோபம் பழிவெறி அருளாளனின் ரத்தம், எல்லாம் இனியனுக்கும் அகிலன் மீதான கோபத்தை பன்மடங்காகியது. ஊரில் இல்லாத போது இல்லாத பகை, ஊரில் இத்தனை நாள் இருந்ததும் அசுரத்தனமாக பகை பெரிதாக மனதோடு வளர்த்துக் கொண்டான் இனியன்.
அதே எண்ணத்துடன் வீட்டிற்கு வந்த இனியன் இரவு அறையில் காவ்யாவிடம் பேச தயாரானான்.
போன் அழைப்பை இவனாகவே போட்டு காத்திருந்தான்.
"ஹாய் இனியா... என்னப்பா டிஸ்டர்ப் பண்ணற. நான் தான் ஆலியா மேரேஜிக்கு போறதா சொல்லியிருந்தேனே. இப்ப கூட பப்ல டான்ஸ் பார்டி போகுது." என்று ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே காவ்யா பேசுவது கேட்டது.
இனியன் தன் திட்டத்தை மறைத்து, "காவ்யா... நம்ம கல்யாணத்துக்கு கொஞ்சம் டைம் ஆகும். அப்பா ஒரு வருஷத்துக்கு காத்திருந்தா திருமணம் நடத்திட சம்மதிக்க பார்க்கலாம்னு சொன்னார்." என்றான்.
"அட அதுக்காகவா போன் பண்ணின? நான் தான் ஓகேனு சொன்னேனே" என்று சிரித்தாள்.
"ஏற்கனவே ஆறு மாசம் வெயிட் பண்ண சொல்வாங்கனு யூகித்தேன்.. உங்கப்பா ஊர்க்காரர்ல அதனால சாதி மதம்,.. ப்ளா ப்ளா வேற நாடுனு எக்ஸ்ட்ரா காலத்தை கடத்த பார்க்கறார். இதெல்லாம் பெரிய விஷயமா. ஒன் இயர் தானே.. சொடக்கு போடற மாதிரி ஓடிடும். நீ நான் காலேஜில் சீனியர் ஜூனியர்னு காதலிச்சோம். இப்ப போன்ல காதலிப்போம். இதுல போரடிக்காது." என்றாள். இனியன் எதுவும் பேசவில்லை.
காவ்யா மீண்டும் "இனியா நான் உன்னை காதலிக்கறேன். ஒரு வருஷம் என்ன... தேவைப்பட்டா இன்னும் வெயிட் பண்றேன். அடுத்த ஜென்மம் கூட வரை காத்திருப்பேன். எங்கப்பா தான் நம்ம கல்யாணத்துக்கு அவசரப்பட்டு உன் வீட்ல சொல்லிட்டியானு கேட்டார். இப்ப நீ அதையும் சொல்லிட்டதுல அவருக்கு ஹாப்பி தான். ஆக்சுவலி அந்த இனியன் இருக்கற வரை காதலகச்சுட்டு ஏமாத்திடுவான்னு தான் அப்பா பயந்தது. இப்ப நீ உங்க வீட்ல நம்ம லவ் மேட்டர் சொல்லிட்டனு தெரிந்ததும், உன்னை அப்ரிஷேட் பண்ணினார்." என்றாள்.
இனியன் கண்களை மூடினான்.
அவனுக்குள் ஒரு நொடி குற்றவுணர்வு எழுந்தது.
ஆனால்... அடுத்த நொடி. அகிலன்-மதுராவின் காதல் விவாகாரம், தன்னை விடுத்து அகிலன் முன்னேறும் சில விஷயம், ஜல்லிக்கட்டு, ஊர் பாராட்டு. எல்லாம் ஞாபகம் வந்தது. இதில் புதிதாக மதுரா அகிலன் வெட்கத்துடன் பார்வை பரிமாற்றம் வேறு மனதை காய்ந்திட வைத்தது.
அந்த நினைவு வந்ததும் குற்றவுணர்வை தள்ளி நிறுத்தி, தான் செய்ய போகும் செயல் சரியென்று ஏற்றவனாக, மெதுவாக சொன்னான்.
"தேங்க்ஸ் காவ்யா." என்றவன் லவ் யூ என்றோ பறக்கும் முத்தங்களோ தராமல் போனை அணைந்தான்.
அன்றைய இரவில் இனியனுக்கு மதுராவை மணந்து அகிலன் முகத்தில் வேதனை ததும்ப, மணக்கோலத்தில் நின்று கர்வமாக சிரிக்கும் காட்சியை நினைத்து பார்த்தான்.
தன்னை தன் மனதை, மதுராவிடம் சொல்லப்படாத காதலுக்கு, பிரிவை ஏற்படுத்த இனியன் திட்டமிடுவதை அறியாத அகிலன், நெஞ்சுக்குள் மதுராவை போலவே காதலை எண்ணி கனவு கண்டான்.
மதுராவை இதற்கு முன் அருகருகே நின்று பார்த்திருக்கின்றான். சிலது அர்த்தத்துடன் பூடகமாக பேசியது உண்டு. இன்று போல தொட்டு பிடித்து நெருக்கம் கொண்டது இல்லை. ஏனோ கள்ளூண்ட போதையாக அகிலன் பரவசத்துடன் வீட்டில் உலாவினான்.
அவனுக்கு இந்த தேர்தல் முடியவும் மதுராவை மணக்க பேசுவதாக தந்தை அதியமான் அன்னை மீனாட்சியிடம் பேசியதை அறிந்ததால் அவனாக அவசரம் காட்டாமல் இருந்தான்.
என்ன தான் காதலித்ததாக வீட்டில் தெரிவித்து காட்டிக் கொண்டாலும், தாய் தந்தையரே பார்த்து முடித்து மணக்கும் திருமணத்தில் அகிலன் மனம் லயித்தது.
பெற்றவர்களுக்கு தரும் மரியாதையாக எண்ணினான். அதனால் அகிலன் மதுரவாணியை காதலிப்பதை அவளிடம் தெரிவிக்கவில்லை. மதுரவாணியுமே இவனிடம் காதலை பகிரவில்லையே.
தன்னை சுற்றி வலைப்பிண்ணி வீழ்த்த இனியன் நினைப்பானென்ற எண்ணம் துளியும் இல்லாமல் மிதந்தான்.
அகிலனை பொறுத்தவரை அருளாளன் பெரிப்பா 'இம்'என்றதும் ஏதோ அவமானத்தை உணர்ந்ததாக கடுப்புடன் ஓடிவிடுவார். இனியன் அப்படியல்ல, தன்னை கவனித்து கைகுலுக்கி நலம் விசாரித்து நாகரிகமாக கடந்து செல்வதாக நினைத்தான்.
அதனால் பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி அடைந்தாலும், வெளிநாட்டுக்கு திரும்பி அவன் அங்கே மீண்டும் பணிப்புரிய வாய்ப்புண்டே தவிர, இந்த பஞ்சாயத்து தேர்தல், இளைஞர் அணியில் நிற்பது, அருளாளன் பெரிப்பாவுக்காக, தற்காலிகமான இனியன் முடிவென்று நினைத்தான்.
அகிலன் அதை தாண்டி இனியனுக்கு தன் மீது வெறுப்பு எல்லையற்று உண்டு என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் காலம் தாழ்த்தாமல் மதுராவை பெண் கேட்டு முந்தியிருப்பான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 1 Online
- 329 Members
