மதுர ஜில்லா... மச்சானே!-10
அத்தியாயம்-10
இளையமதி வீட்டில் அந்த மதியம் வழக்கத்தை விட சத்தம் அதிகமாக இருந்தது.
மதுரவாணியை பார்த்து பேசிவிட்டு விடுமுறை என்பதால், தூரிகா அங்கு தான் இருந்தாள்.
"தூரிகா.. நில்லு ஏய் தூரிகா ..." என்று மதுரவாணி கத்திக்கொண்டு ஓட, "போ மதுரா. இந்த வளையல் எனக்கு தான்" என்று தூரிகா சிரித்தபடி கூறினாள்.
நிலானி ஓரமாய் அமர்ந்து, "ரெண்டு பேரும் கொஞ்ச நேரமாவது அமைதியா இருக்க முடியாதா? நான் படிச்சிட்டு இருக்கேன்" என்று அலுத்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் வாசலில் நிழல் விழுந்தது. "அத்தை..." என்ற ஆண் குரலில் மூவரும் திரும்பினர்.
வாசலில் இனியன் நின்றிருந்தான். வெள்ளை சட்டை, ஜீன்ஸ். வழக்கம்போல மொழுமொழு கன்னம் ட்ரிம் செய்த மீசை.
இனியனை கண்டதும் மதுரா இயல்பாகவே கொஞ்சம் தயங்கினாள்."வாங்க மச்சான்..." என்றாள் மெதுவாக.
இனியனோ "அம்மா டிபன் பாக்ஸ் குடுத்து அனுப்பினாங்க. அத்தைகிட்ட குடுத்துட்டு வர சொன்னாங்க." என்றான். அன்று சீம்பால் தந்து விட்ட பாத்திரத்தை கொண்டு வந்திருந்தான்.
உண்மையான காரணம் இதை கொடுக்கும் சாக்கில் மதுரவாணியை காணவே வந்தான்.
மதுரவாணியோ "அம்மா உள்ள குளிச்சிட்டு இருக்காங்க. உட்காருங்க மச்சான்." என்று வாங்கிக்கொண்டாள்.
இனியன் உள்ளே வந்தான்.
அவன் பார்வை இயல்பாக வீட்டை சுற்றியது.
"ஹேய் நிலானி மாமா இல்லை." என்று கேட்க அவளோ உள்ளாற இருக்கார் கூப்பிடறேன் மச்சான்" என்று ஓடினாள்.
தூரிகா இருக்கவும், "நீ... அகிலன் தங்கச்சி தூரிகா தானே இல்லை... மதுரவாணியோட பிரெண்டா?" என்று கேட்டான்.
தூரிகாவை நினைவுயிருந்தும் சந்தேகமாய் தான் கேட்டான். ஒருவேளை தோழியாக இருக்குமோ என்று வினாவாக கேட்டான்.
"இனியன் அண்ணா... நான் தூரிகா தான். அகிலன் தங்கச்சி மட்டுமில்லை... உங்களுக்கும் தான். மதுராவுக்கு தோழியும் கூட.. இரண்டு மூன்று வயசு தானே வித்தியாசம்" என்றாள்.
அவன் மெதுவாக சிரித்தான்.
அந்த நேரம் மதுராவின் தந்தை வெளியே வந்தார். "வாப்பா இனியா. நீ வந்ததா அத்தை சொன்னா." என்றார். "நல்லாயிருக்கிங்களா மாமா..." என்று மரியாதைக்காக எழுந்தான். இருவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்தனர்.
அதில் விவசாயம், ஊரை பற்றி, வரப்போகும் பஞ்சாயத்து தேர்தல். பற்றி, புதிதாக பேருந்து நிலையம் கட்டி தந்ததை பற்றி என்று இப்படி பேச்சு போய்க் கொண்டிருந்தது.
இளையமதி குளித்து துவைத்துக் கொண்டிருப்பதால் மதுரவாணியே காபி கலக்கி கொண்டிருந்தாள்.
சூடாக ஆற்றி இனியன் முன் வைக்க, அதை இனியன் மதுராவை பார்த்தபடி எடுக்கும் நேரம் புல்லட் சத்தம் வாசலில் கேட்டது.
மதுராவின் இதயம் தானாக அச்சத்தத்திற்கு பழகியது போல திரும்பினாள். அது அகிலனின் வண்டி சத்தம் கேட்டே, கண்டறிந்த அடையாளமாக இனியன் கவனித்தான்.
வாசலுக்கு வெளியே புல்லட்டை நிறுத்தினான் அகிலன்.
"தூரிகா..." என்று அழைத்தபடி உள்ளே வந்தான் அகிலன்.
தூரிகா முகம் மலர்ந்தது.
"அண்ணா வந்துட்டாரே. நான் நீ தச்ச ஜாக்கெட்டை எடுத்துட்டு வந்துடறேன்" என்று மதுராவின் அறைக்குள் நுழைந்தாள் தூரிகா.
மதுராவோ வேகமாய் துள்ளிக் குதிக்காத குறையாக வாசலுக்கு ஓடுவதை கவனித்தபடி மாமாவிடம் பேசி காபியை சுவைத்தான் இனியன்.
கோடை மழை பெய்ததால தரை லேசாக ஈரமாக இருந்தது.
அவள் கவனிக்கவில்லை. மதுரா ஓடிவரவும், கால் வழுக்கியது.
"அம்மா" என்று பதறி விழ பார்க்க, உடம்பு பின்னால் சாயந்தது.
அடுத்த நொடி அகிலனின் கை மதுரவாணியின் இடுப்பை தாங்கியது.
மற்றொரு கை தோளை பிடித்தது. மதுரா மூச்சே நின்றது.
அகிலன் அவளை முழுக்க விழாமல் நிறுத்தியிருந்தான்.
அவன் கை அவள் இடையை தாங்கியிருந்தது. இருவருக்கும் இடையே சில அங்குலம் தான். மதுராவின் கண்கள் பெரியதாகியது. அகிலன் புருவம் சுருக்கினான்.
"பார்த்து வர மாட்டியா?" என்று கடிய, அவள் இன்னும் பேசவில்லை. "கால் மடங்கியிருக்கா?" என்று மெதுவாக கேட்டான். ''இ... இல்லை..." என்றாள்.
அகிலன் மெதுவாக அவளை நேராக நிறுத்தினான். மதுரா உடனே விலகவில்லை.
"எப்பவும் ஓடிட்டே இருப்பியா. சுத்தி என்ன நடக்குனு பார்க்கறதில்லை." என்று கடிந்தான்.
"இப்ப நான் வரலைன்னா கீழே விழுந்து இடிப்பை உடைச்சிருப்ப." என்றதும், அவன் கை இடிப்பில் இருக்க, அவசரமாய் எடுத்தான்.
மதுரா வெட்கத்தோடு இமை தாழ்த்தி கீழே பார்த்தாள்.
வீட்டின் உள்ளே இருந்து இதையெல்லாம் பார்த்த இனியன் முகம் மெதுவாக இறுகியது.
அவன் நின்ற இடத்தில் இருந்து ஜன்னல் வழியாக தெளிவாக தெரிந்தது.
அகிலனின் கை மதுராவின் இடையில் அழுத்தி எடுக்கப்பட்டது. மதுராவின் முகம் அகிலனின் நெருக்கம் கண்டு, தந்தை அருளாளன் சொன்ன வார்த்தைகள் தலையில் ஒலித்தது.
'அவன் மனசு முழுக்க மதுரா தான் இருக்கா' என்ற ஓலம் .
"சிமெண்ட் வச்ச வீட்லயே வழுக்கிட்டு கிடக்க. டைல்ஸ் வச்ச வீட்ல மருமகளா வந்தா, ஒரு நாளைக்கு எத்தனை தடவை விழுவியோ தெரியல. அத்தை எல்லாம் எப்படி தான் உன்னை வளர்க்கறாங்களோ?" என்று பேசினான்.
இந்த ஊரில் அகிலன் வீடு தான் டைல்ஸ் போட்டிருக்க, தன்னை மருமகளாக மனைவியாக அவன் வீட்டில் வந்தப்பின் விழுவதை பேசுவதாக எண்ணி பூரித்தாள்.
அந்த வார்த்தையில் மதுரா முகமே சிவந்தது. இனியன் அந்த காட்சியை பார்த்தபடி நின்றான்.
முதல் முறையாக இனியனுக்குள் ஏதோ ஒன்று இறுக ஆரம்பித்தது.
"வாசல்ல இனியன் பைக் இருக்கு. உள்ளாற இருக்கானா என்ன?" என்று கேட்க, தூரிகா மதுரா தைத்து தந்த ஜாக்கெட் சுடிதாரை எடுத்து வந்து, "நான் வந்துட்டேன் அண்ணா." என்றாள்.
மதுராவோ "இனியன் மச்சான் இருக்கார். அன்னிக்கு தந்த சீம்பால் பாத்திரத்தை தர வந்திருக்கார். அம்மா குளிக்கு. அதனால அப்பாவிடம் பேசறார்." என்றாள்.
அகிலனோ "இப்ப நான் போகவா.. பேசவா?" என்று கேட்டான்.
மதுராவோ "அது உங்க இஷ்டம் மச்சான். பேசிட்டு போனிங்கன்னா.. கூடுதலா பத்து நிமிஷம் இருப்பிங்க" என்றாள்.
அகிலனோ "அப்ப தலையை காட்டிட்டு போறேன்" என்று நுழைந்தான்.
மதுராவோ "நான் இஞ்சி டீ போடப்போறேன்." என்று கிச்சன் அறைக்கு ஓடினாள்.
தூரிகாவோ "இந்தா மதியத்துல இருந்து இருக்கேன். எனக்கு ஒரு சூடான காபி டீ இல்லை. மச்சானுக்கு என்றதும் ஆளா பறப்பா" என்று வர, இனியன் தூரிகா பேச்சை கேட்டவனாக அகிலனை வரவேற்றான்.
"எப்படி போகுது இனியா... ஊரெல்லாம் பிடிச்சிருக்கா. மறுக்கா வெளிநாடு போறதில்லைனு கேள்விப்பட்டேன்." என்று அகிலனே ஆரம்பித்தான்.
இனியனோ "ஆமா அப்பாவுக்கு வயசாயிடுச்சு. இனி கூட மாட இருக்கணும்ல. அதோட தேர்தல்ல உனக்கு போட்டியா நிற்கறதா முடிவு பண்ணி வேலை வேற போகுது." என்றவன் காபி டம்ளரை கீழே வைத்து, "உனக்கு அதுல அப்ஜெக்ஷன் இல்லையா?" என்றான். உனக்கு போட்டியாக வரப்போகின்றேன் என்ற ஆராயும் பார்வை வீசினான்.
அகிலனுக்கு மதுரா டீயை நீட்ட வாங்கி புன்னகைத்தவன், "போட்டியில்லாம தேர்தல்ல வெற்றி அடைஞ்சா என்னத்த கிக்கு இருக்கும் இனியா. அதனால யாரு வேண்டுமென்றாலும் போட்டில நிற்கலாம். அதனால என்ன வந்துடப் போகுது." என்று சிரித்தான்.
இனியனுக்கு அந்த நேரம் சுறுக்கென்றது. போட்டியில் எப்படியும் அகிலன் வெற்றி வாகை சூடுவான்ற பேச்சு அல்லவா.
கல்யாண சுந்தரமோ "மாப்பிள்ளைகளா... பஞ்சாயத்து தேர்தலை விடுங்க. கல்யாண சாப்பாடு யார் போடபோறிங்க." என்றதும் மதுரா அகிலனை ஏறிட்டாள். அவனுமே "என்ன அவசரம் மாமா. தேர்தல் முடியவும் அம்மா அப்பா முடிவெடுப்பாங்க" என்றான்.
இனியனோ "விரைவில் அதுக்கான வேலையும் பார்த்திட்டு இருக்கேன் மாமா." என்று கூறினான்.
அந்த நேரம் அகிலன் "வாவ் சூப்பர் ப்ரோ.. நம்ம ஊர் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும். வெளிநாட்டு பிள்ளையா வந்துட்டா இங்க இருக்க வசதி பத்தாது. எந்த ஊரு பொண்ணா இருந்தாலும் பத்திரிக்கை வையு. இந்த அகிலன் தம்பி முறையா வந்து தலைக்காட்டுவான்." என்று பேச, தூரிகாவோ "அண்ணா... போதும் நேரமாச்சு." என்று அகிலனை கூப்பிட, அகிலனும் "சரிங்க மாமா தூரிகாவை கூப்பிட தான் வந்தேன் கொஞ்சம் வேலை வேற கிடக்கு." என்று எழுந்தான். "இனியா வரட்டா" என்று கைகுலுக்கி செல்ல, கல்யாண சுந்தரமும் விடைக் கொடுத்தார்.
மதுராவோ 'அப்ப என்னை பார்க்க வரலை' என்று ஒழுங்கு காட்டி சிறுப்பிள்ளையாக முகம் திருப்பினாள்.
"நிலானி... டீ நல்லாயிருக்கு." என்றான். நிலானியோ 'டீ அக்கா இல்ல போட்டுச்சு.' என்று முனங்கி நின்றாள்.
இனியனோ அனைத்தையும் வேடிக்கை பார்த்தவனாக சினத்தை அடக்கினான்.
தூரிகாவோ "வர்றேன் அண்ணா" என்று இனியனிடம் கூறிவிட்டு நகர, இனியன் தலையசைத்து, மதுராவை கண்டான்.
மதுராவோ அகிலன் புல்லட்டை உதைத்து ஏறி அமர்ந்து, அவன் செல்லும் தூரம் குறையும் வரை எட்டியெட்டி பார்வையிட, இளையமதி "வாப்பா இனியா. வராதவங்க வந்திருக்க. மதுரா காபி டீ போட்டு தந்தியா? அங்க என்னடி பார்வை?" என்று கேட்க, அகிலன் செல்வதை இமை கொட்டாமல் பார்க்க, இனியனோ "காபி டீ இரண்டும் போட்டு தந்தா அத்தை" என்றான்.
"எனக்கு காபி... அகிலனுக்கு டீ" என்றவன் மனதிற்குள் கனலை விழுங்கியவனாக 'இஞ்சி டீ' என்று சலித்தான்.
இங்கே மாமா கல்யாண சுந்தரம், அத்தை இளையமதி, நிலானி என்றியிருக்க மதுரவாணி பார்வை அகிலன் சென்ற திசையில் இருக்கவும், இளையமதி கேட்டதற்கு ஆம் இல்லை என்று ஒரிரு வார்த்தையில் பதில் தந்தான்.
இனியனும் பத்து நிமிடத்தில் புறப்பட, மதுராவிடம் கூறினான். அவளோ 'சரிங்க மச்சான்" என்றவள் நிற்கவும் இல்லாமல் அறைக்குள் புகுந்திட, அகிலன் வந்து சென்றதற்கும், தான் செல்வதற்கும் மதுராவின் வழியனுப்புதலை யோசித்தவனாக வீட்டை வந்து சேர்ந்தான்.
அன்றைய நாளும் அதற்கடுத்து வந்த சில நாளும், ஒரு முடிவோடு சிந்தித்தான்.
எடுக்கப்படும் முடிவு விஷப்பரீட்சை என்பதால் அதீத சிந்தனையில் திளைத்தான்.
வெளிநாட்டில் படித்து வந்து பணத்தை வாறி இறைத்தாலும், பஞ்சாயத்து தேர்தலில் அப்படியென்றும் தனக்கு ஆதரவு வராதென்று தாமதமாக இனியன் புத்திக்கு எட்ட, தந்தை அருளாளன் கூறிய வழியை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தான்.
மதுராவை தான் மணந்துக் கொண்டு, அகிலனை வீழ்த்தும் தந்திரம்.
சிறுவயது முதல் இனியன் தோல்வி தழுவுவதாக இருந்தால் ஏதேனும் காரணம் கூறி முன்கூட்டியே ஆட்டத்தை களைத்திடும் சாமர்த்தியசாலி.
இங்கு ஆட்ட நாயகனாக தானே அமர்ந்துவிட்டால் தந்தை சொன்னது போல அகிலனுக்கு படுவீழ்ச்சி. மீளமுடியாத காயம் என்று முடிவெடுத்தான்.
அருளாளனிடம் மதுராவை மணக்க சம்மதமென்று கூறிட வேல்விழி கூட திகைத்தார்.
"என்னப்பா செல்லற. அந்த மதுரவாணி படிக்காதவப்பா. நீ படிச்ச வெளிநாட்டு படிப்புக்கு ஏதாவது படிச்ச பொண்ணை கட்டுவனு பார்த்தேன்" என்று வேல்விழி ஆரம்பிக்க, அருளாளன் "செத்த சும்மாயிருக்கியா. அவன் சரியா தான் பேசறான். அகிலனை காயப்படுத்த மதுரவாணி தான் சரி. நான் இளையமதியிடம்.... இல்லை இல்லை.. மச்சான் கல்யாண சுந்தரத்திடம் நாசூக்கா பேசி மதுராவை இனியனுக்கு கட்டி வைப்பது தான் சரிப்படும்" என்று மனைவியை மிரட்டி அதட்டிவிட்டார்
''இல்லைங்க.. மதுரவாணி அகிலன் விரும்பினா அது நம்ம பையனுக்கு தான் கஷ்டம்." என்று கூற, "கூறு கெட்டவளே.. எங்களுக்கு தெரியும். நீ வாயை மூடிட்டு சும்மாயிரு" என்று திட்டியும் விட்டார்.
"இனியா.. உன்னிடம் பேசணும்" என்று அப்படியே தோப்புக்கு அழைத்து சென்றார் அருளாளன்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
1 hour ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
1 day ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 1 Online
- 329 Members
