Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-3

12 Posts
10 Users
4 Reactions
177 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#166]

🔥தகிக்கும் நிலவொன்று🌜

அத்தியாயம்-3

காலங்கள் மெதுவாக நகர்ந்தன. சிறைச்சாலைக்குள் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தொடங்கினாலும், ஷ்ரத்தாவுக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வலியை சுமந்து வந்தது.

அதிகாலை விசில் ஒலித்ததும் இரும்புக் கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டன.

"எல்லாரும் வெளிய வாங்க..." என்று பெண்காவலர்களின் குரல் ஒலிக்க, கைதிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளுக்காக வரிசையாக வெளியே வந்தனர்.

யாரோ துணி மடித்துக் கொண்டிருந்தனர். யாரோ பேப்பர் கவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். சிலர் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

சிலர் சிறை நூலகத்தில் பழைய புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

   கர்ப்பிணியாக இருந்ததால் ஷ்ரத்தாவுக்கு கடினமான வேலைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

   சிறை அலுவலகத்திற்குச் செல்லும் நடைபாதையில் இருந்த சிறிய அறையில் பழைய கோப்புகளை அடுக்குவது, கைதிகள் தயாரித்த பொருட்களை எண்ணி பதிவு செய்வது போன்ற இலகுவான வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

ஆனால் வேலை மட்டும் லேசாக இருந்தது. அதைச் செய்யும் மனம் மட்டும் கனமாக இருந்தது.

அவள் வேலை செய்துக் கொண்டிருந்தாலும், அவளது மனம் மட்டும் எப்போதும் வேறொரு இடத்தில் சுற்றிக் கொண்டே இருந்தது.

மாதங்கள் மெதுவாக நகர்ந்தன.

வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வந்தது.

அந்த மாற்றம் கண்ணாடியில் தெரியவில்லை. அவள் அணியும் சிறைச் சீருடையிலேயே தெரிந்தது.

ஒரு நாள் வேலை முடிந்து அறைக்குள் வந்தவள் சுவரில் தொங்கியிருந்த சிறிய காலண்டரை பார்த்தாள். கடந்தமுறை சீருடை தந்த போது இந்த சிறு காலண்டரும் அதிலிருந்தது. அதை தான் சுவற்றில் ஒட்டியிருந்தாள். 

மெதுவாக விரலால் தேதிகளை எண்ண ஆரம்பித்தாள்.

"ஒன்று, இரண்டு, மூன்று..." என்று எண்ணிக்கொண்டே வந்தவள் ஏழாவது மாதத்தைத் தொட்டபோது கை நடுங்கியது.

அவ்வளவு நாட்களா கடந்துவிட்டது?

சத்ரியன் இல்லாமல் இவ்வளவு நாள் வாழ்ந்து விட்டாளா?

அவளுக்கே நம்ப முடியவில்லை. மெதுவாக வயிற்றை வருடினாள்.

"இன்னும் கொஞ்ச நாள்ல... நீ வெளியே வந்துடுவ." என்று குழந்தையிடம் பேச முயன்றாள்.

ஆனால் அதற்குப் பிறகு வார்த்தை வரவில்லை. கண்ணீர் மட்டும் வந்தது.

அதை விரைவாகத் துடைத்துக் கொண்டாள். இப்போது அழுவதைக் கூட ஷ்ரத்தா பழக்கமாக்க விரும்பவில்லை.

ஏனென்றால் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை தன் அழுகையை உணரக் கூடாது என்று நினைத்தாள்.

வினோத்தும் ஹரிணியும் வந்தது கூட பல நாட்கள் ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை எப்படியாவது வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

இப்போது அவர்களாலும் வர முடியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை. அவரவர் பொறுப்பு உள்ளதே. அவர்களையே குறை சொல்ல முடியாது. 'இனிமேல்...

எல்லாத்தையும் நான் தனியா தான் சமாளிக்கணும்.' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

அந்த எண்ணமே மனதை இன்னும் வெறுமையாக்கியது.

அன்றைய மதியம் சிறை நிர்வாக அலுவலகம் வழக்கத்திற்கு மாறாக சற்று பரபரப்பாக இருந்தது. ஜெயிலர் அறைக்குள் மூவர் வந்து கொண்டிருந்தனர்.

கழுத்தில் பத்திரிக்கையாளருக்கான அடையாள அட்டைகள்.

கையில் கேமராக்கள், மைக், நோட்டுப் புத்தகங்கள் என்று வந்திருந்தனர் செய்தியாளர்கள்.

அவர்களுடன் காக்கி சீருடையில் ருத்ரனும் உள்ளே வந்தான்.

"மேடம்... நாங்க பெண் சிறைக்கைதிகளோட மனநிலை, வாழ்வியல், குற்றம் செய்த தருணம். இப்ப அவங்க உணர்வு அதெல்லாம் பேட்டி எடுக்க வந்தோம். 

   அந்த கிங்பின் காதலனையே போட்டு தள்ளிய ஷ்ரத்தாவை பத்து நிமிஷம் மட்டும் பார்த்து பேசணும்." என்று ஒரு செய்தியாளர் கூறினார்.

ஜெயிலர் சில நொடிகள் யோசித்தார். "அவங்க மனநிலை சரியில்லை. வேற யாரையாவது பேட்டி எடுத்துக்கோங்க" என்றார்.

"நாங்க வற்புறுத்த மாட்டோம் மேடம். அவங்களோட பேசிட்டு போக தான் வந்ததே. என்னயிருந்தாலும் சாதாரண கைதியை விட அவங்க ஸ்பெஷல் ஆச்சே" என்றதும், 

சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

"குறைவான நேர்ததை எடுத்துக்கோங்க. அவங்க மறுத்தா வற்புறுத்தாதிங்க" என்று கூறினார் வார்டன் பெண்மணி. 

"எந்த தனிப்பட்ட கேள்வியும் கேட்கக்கூடாது." என்று கூறி அனுமதி வழங்கினார்.

ஆனால் அங்கே நின்றிருந்த ருத்ரனின் உதட்டில் மட்டும் ஒரு மர்மமான சிரிப்பு தோன்றியது.

'தனிப்பட்ட கேள்வி கேட்கக் கூடாதா?' என்று மனதிற்குள் ஏளனம் கொண்டான்.

அதே சிறை நிர்வாகக் கட்டிடத்தின் பின்புறம் இருந்த சிறிய சந்திப்பு அறை. நடுவில் ஒரு மேசை. அதைச் சுற்றி சில நாற்காலிகள். ஒரு மூலையில் வீடியோ கேமரா. கையில் மைக் பிடித்தபடி ஒரு செய்தியாளர்கள் நின்றிருந்தனர்.

கதவு திறந்ததும் பெண்காவலர் ஒருத்தி ஷ்ரத்தாவை உள்ளே அழைத்து வந்தாள்.

மெதுவாக நடந்து வந்தவள், கர்ப்பத்தின் பாரம் காரணமாக ஒரு கையால் வயிற்றை தாங்கிக் கொண்டே நின்றாள்.

அவள் முகத்தில் வழக்கமான அமைதியே. ஆனால் அந்த அமைதிக்குள் புதைந்திருந்தது ஆயிரம் வலிகள்.

"உட்காருங்க மேடம்..." என்றார் ஒருவர். அமைதியாக ருத்ரனை கண்டு அமர்ந்தாள்.

கேமரா ஆன் செய்யப்பட்டது.

"மேடம்... நாங்க ஒரு ஆவணப்படம் எடுக்கறோம். தொழிலதிபர் சத்ரியனோட வாழ்க்கையைப் பற்றியும்." 

உடனே மற்றொருவன் குறுக்கிட்டான்.

"தொழிலதிபரா...? அன்டர் வேர்ல்டோட கிங்பின்."

மூன்றாமவன் சிரித்தான்.

"இரண்டுமே உண்மைதான்."

பிறகு ஷ்ரத்தாவை நோக்கி, "அவரோட கூட வாழ்ந்தது நீங்க தான். அவர் எப்படி இருந்தார்? 

உலகம் பார்க்காத சத்ரியனை எங்களுக்கு சொல்லுங்க." என்று கேட்டான்.

ஷ்ரத்தா மெதுவாக தலையை குனிந்தாள். "ப்ளீஸ்... என்னால அவரை பற்றி பேச முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க." என்று மென்மையாகக் கூறினாள்.

அதுவரை அமைதியாக சுவரில் சாய்ந்து நின்றிருந்த ருத்ரன் சிரித்தான்.

"ஏன்...? ஒரு அயோக்கியனைப் பத்தி கேட்கறாங்க. அவன் செஞ்ச அட்டூழியத்தை சொல்ல வேண்டியது தானே. ஏன் மறைக்கற? அவனோட யோக்கியதனம் உலகத்துக்குத் தெரிய வேண்டாமா? இல்லை... சத்ரியனோட பராக்கிரமத்தை சொல்லு‌" என்றான் குரலை உயர்த்தி. ஷ்ரத்தாவின் முகம் மெதுவாக உயர்ந்தது.

அவள் கண்களில் முதல் முறையாக கோபம் மின்னியது.

"ஆபீசர்... இன்னொரு முறை... சத்ரியனை அயோக்கியன்னு சொன்னீங்க... நான்.... உங்களை கொல்லவும் தயங்க மாட்டேன்." என்றதும் அறை முழுவதும் அமைதியானது.

ருத்ரன் ஒரு நொடி சிரித்தான்.

"என்னடி சொன்ன? அவன் உன் உயிரா?" ஷ்ரத்தா எழுந்து நின்றாள்.

வயிற்றைத் தாங்கியபடி "ஆமாம். அவர் என் உயிர். என் உலகம். என் மூச்சு. எல்லாமே அவர் தான்." என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ருத்ரனின் கோபத்தை அதிகப்படுத்தியது.

"அதுதான் எனக்கு புரியலை."

அவன் சட்டைப்பையில் இருந்த மொபைலை எடுத்தான்.

ஒரு வீடியோவை திறந்து மேசையில் வைத்தான்.

"பாரு." என்றான். 

முன்பு பிறந்த நாளிற்காக ஹோட்டல் உணவகம் ஒன்றில் மனிஷா கனியுடன்  சாப்பிட்டுவிட்டு அவர்கள் சென்றதும் சத்ரியன் 

எதிரே அமர்ந்திருந்து பேசிய வீடியோ. சத்ரியன் துப்பாக்கியை அவளிடம் நீட்டுகிறான். அவள் குறி பார்க்கிறாள். ஆனால் எதிரே இருந்தவனை சுட முயன்று, ஹோட்டலின் கண்ணாடியை சுட்டுவிடுகிறாள். வீடியோ முடிந்தது.

ருத்ரன் அவளை நேராக பார்த்தான். "இந்த ஃபுட்டேஜ்... இதுல... பக்கத்தால இருக்கறவனையே உன்னால சுட முடியலை. இதுல பத்தடி தூரத்துல இருந்த சத்ரியனை சுட முடியுமா.? சொல்லு."

ஷ்ரத்தா வீடியோவிலிருந்து பார்வையைப் பிரிக்கவில்லை.

மெல்ல சொன்னாள். "அவர்... எனக்கு... துப்பாக்கி சுட கத்துக் கொடுத்தார்." என்றதும் ருத்ரன் சிரித்தான்.

"ஓ... அதோட... போலீஸ்கிட்ட எப்படி பொய் சொல்லணும். எப்படியெல்லாம் மழுப்பணும்னு. அதையும் கத்துக் கொடுத்தானா?" என்று அருகே வந்தான்.

இருவருக்கும் இடையில் ஒரு அடி தூரம் கூட இல்லை.

பற்களை கடித்தபடி மெதுவாக கேட்டான்.

"சொல்லுடி... சத்ரியன் உயிரோட தானே இருக்கான்?" என்று கேட்க ஷ்ரத்தாவின் முகம் வெளிறியது.

"இல்ல... இல்ல... இல்ல..." என்று தலையை ஆட்டினாள். ருத்ரன் நம்பவில்லை.

"பொய். உன் கண்ணு வேற கதை சொல்லுது. அவன் உயிரோட இருக்கான். எங்க ஒளிச்சு வச்சிருக்க?" என்றவன் குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. ஷ்ரத்தாவை வேறு புஜத்தை தொட்டு திருப்பி கேட்டான்.

ஷ்ரத்தா கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த நொடி மெதுவாகத் திறந்தாள்.

"அவர்... இப்ப உயிரோட இருந்திருந்தா... நீங்க... என் மேல கை வைக்க கூட தைரியம் வந்திருக்காது. அவர் கூட இருந்தப்ப... அவரோட பாடிகார்ட்ஸ் கூட... என் நிழலை தொட பயப்படுவாங்க." என்றாள்.

அந்த வார்த்தை ருத்ரனின் பொறுமையை உடைத்தது.

"அவ்வளவு காதலிச்ச.. அவனை... ஏன் கொன்ன? அந்த கதையை தான் ஆவணமா எடுக்க கேட்கறாங்க சொல்லு" அந்த கேள்வியில் ஷ்ரத்தா உடைந்து போனாள்.

வயிற்றை இருகைகளாலும் பற்றிக் கொண்டாள்.

கண்களில் நீர் பெருகியது.

"என் குழந்தைக்காக... எனக்கு... என் குழந்தை வேணும்... அதை அழிக்க முடிவு பண்ணினார். அதனால கொன்னுட்டேன்.. கொன்னுட்டேன் கொன்னுட்டேன்" என்ற அதே பதில். கோர்ட்டில் கூறிய அதே பதில்.

ருத்ரன் வெறுப்புடன் கையை உதறினான்.

"பொய்!" அவன் கை பட்ட வேகத்தில் சமநிலையை இழந்த ஷ்ரத்தா பின்னால் தடுமாறி கீழே விழுந்தாள்.

"அம்மா..." என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியால் சுருண்டாள்.

"ஷ்ரத்தா!" பெண்காவலர்கள் பதறி ஓடி வந்தனர்.

"ஆபீசர்! இது என்ன நடத்தை?"

என்று ருத்ரனை கடிந்து கொண்டனர். கூடவே, "சார்.. நாங்க தான் சொன்னோமே.. இந்த பெண்கைதி வேண்டாம். வேற ஏதாவது பெண் கைதிகளோட கலந்துரையாடுங்க" என்று செய்தியாளர்களையும் விரட்டிவிட்டார்.

ருத்ரன் சில நொடிகள் அவளைப் பார்த்தான். பிறகு கோபத்தோடு கதவைத் தள்ளி வெளியேறினான்.

வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னான்.

"இந்த ஷ்ரத்தா ஏதோ மறைக்கிறா."அவன் கண்களில் சந்தேகம் மட்டும் இன்னும் உயிரோடு இருந்தது.

ருத்ரனும் செய்தியாளர்களும் வெளியேறிய பிறகும், அந்த சந்திப்பு அறையின் காற்றில் பதற்றம் இன்னும் கரையவில்லை.

தரையில் அமர்ந்திருந்த ஷ்ரத்தா, வயிற்றை இருகைகளாலும் அணைத்தபடி கண்களை மூடியிருந்தாள்.

"தண்ணீர் கொண்டு வாங்க..." என்று பெண்காவலர் ஒருவர் பதற்றமாகக் கூற, மற்றொருவர் அவளை மெதுவாக எழுப்பினார்.

"எதுவும் இல்லம்மா... பயப்படாத..." என்று ஆறுதல் கூறினாலும், ஷ்ரத்தாவின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது.

சிறையில் இருந்த பெண்மணி வந்து ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.

"பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு... ரெஸ்ட் எடுக்கட்டும்." என்று கூறிவிட்டு சென்றார்.

  ருத்ரனோடு வந்த செய்தியாளரில் ஒருவனோ, ருத்ரனை தவிர்த்து தனியாக வந்தான். 

   அங்கிருந்து யாருக்கோ செல்லில் அழைத்தான். 

"பாஸ்.. நான் செய்தியாளரா போய் ஷ்ரத்தாவை சந்திச்சேன். இந்த ருத்ரன் எமோஷனலா அதட்டி அந்த பொண்ணிடம் சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு கேட்டு தொல்லை பண்ணிட்டான். அந்த பொண்ணு கோர்ட்டில் சொன்னதையே தான் சொல்லுது. சத்ரியன் குழந்தையை அழிக்க வந்தான். நான் கொன்னுட்டேன்னு. அதோட சத்ரியன் உயிரோட இருந்தா எனக்கு இந்த நிலைமை இல்லைனும் அழறா. 

  ஒரு சில நேரம் யோசிக்கறப்ப அந்த பொண்ணு சொல்வது போல சத்ரியன் இறந்துட்டதா தெரியுது. ஆனா ருத்ரனோட சந்தேகத்தை பார்த்தா நாம ருத்ரனை பாலோவ் பண்ணியிருப்பது பெஸ்ட். எப்படியும் சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையா என்ற தீவிரமான தேடல் அவன் கண்ணில் இருக்கு." என்றான்.‌

மறுபக்கமோ என்ன பதில் இருந்ததோ 'ஓகே பாஸ் ருத்ரனையும் ஷ்ரத்தாவையும் இன்னும் ஒரு வருஷம் வரை கண்கானிக்க சரியான ஆட்களை ஏற்பாடு பண்ணறேன்." என்று கூறி அணைத்தான்.‌

அதே நேரம் சிறை அலுவலகத்திற்கு வெளியே, பெண்காவலர் ஒருவர் கைப்பேசியை காதில் வைத்திருந்தார்.

"ஹலோ... யதுநந்தன் சார் இருக்காங்களா?" என்று கேட்க, "ஆமாம்... சொல்லுங்க." என்றான்.

"சார்... நான் கார்த்திகா. ஷ்ரத்தா மேடத்தைப் பத்தி ஏதாவதுன்னா சொல்ல செல்லி நம்பர் தந்திங்களே." என்று கூற, "சொல்லுங்க.. நினைவுயிருக்கு" என்றான்.

"ஷ்ர்த்தா மேடத்தை பார்க்க ருத்ரன் சார் வந்திருந்தாரு. சில செய்தியாளர்களோட.  கொஞ்சம் அதிகமாவே பேசிட்டாரு. அவங்க ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க. கீழே கூட விழுந்துட்டாங்க." அந்த வார்த்தை கேட்டவுடன்...

"என்ன?" என்று யதுநந்தன் எழுந்து நின்றான்.

"இப்ப அவங்க எப்படி இருக்காங்க?" என்றான்.

"சிறைச்சாலையில் கைதிக்கு ஏதாவதுன்னா உதவிக்கு இருக்கற நர்ஸ் பார்த்துட்டாங்க. இப்ப ஷ்ர்த்தா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க." என்றாள் கார்த்திகா.

"நான் அரை மணி நேரத்துக்குள்ள வர்றேன்." என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

சிறிது நேரத்தில் கருப்பு நிற காரொன்று மகளிர் மத்திய சிறையின் வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து அவசரமாக இறங்கினான் யதுநந்தன்.

கையில் சிறிய காகிதப்பை. அதற்குள் சில புத்தகங்கள்.

சில பழங்கள். தேவையான அனுமதிகளைப் பெற்று, சிறை அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

ஜெயிலர் அவரை மரியாதையுடன் வரவேற்றார்.

"வாங்க சார். என்ன ஆச்சு?அதெல்லாம் ருத்ரன் சார் விசாரணைன்னு..."

ஜெயிலர் முடிக்கவில்லை.

யதுநந்தன் "ஷ்ரத்தாவை பார்க்கலாமா?" என்று அவசரமாக கேட்டான்.

"பாருங்க சார்." என்றார்.

சிறிது நேரத்தில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையின் வாசலில் நின்றிருந்தாள் ஷ்ரத்தா.

யதுநந்தனை பார்த்ததும், வாங்க சார்..." என்று மெதுவாகச் சொன்னாள்.

அவளது முகத்தில் அழுகையின் தடம் இன்னும் அழியவில்லை. "உட்காருங்க. என்று பெண்காவலர் நாற்காலியை இழுத்து வைத்தார்.

சில நொடிகள் இருவரும் பேசவில்லை. ஷ்ரத்தாவை தான் கவனித்தான். பிறகு அமைதியை உடைத்தவன் யதுநந்தனே. "உடம்பு எப்படி இருக்கு?" என்றான்.‌

"நல்லா இருக்கேன் சார்." அந்த பதிலைக் கேட்டவன் சிரித்தான்.

"பொய்." ஷ்ரத்தா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நல்லா இருக்கற முகமா இது? ருத்ரன் வந்து ஏதோ பிரச்சனை பண்ணியதா கேள்விப்பட்டேன்"

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

"ருத்ரன் ஏதாவது அதிகமா பேசிட்டாரா?" என்று மெதுவாகக் கேட்டான்.

ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.

"ருத்ரனுக்கு... சத்ரியன் உயிரோட இருக்கார்னு சந்தேகம்." யதுநந்தன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"திரும்ப திரும்ப... அதே கேள்விய தான் கேட்கறாரு. சத்ரியன் உயிரோட இருக்காரான்னு" அவள் குரல் உடைந்தது.

"ஷ்ரத்தா... நானும் கேட்கறேனு தப்பா நினைக்காதிங்க. ருத்ரன் சந்தேகப்படுவதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். ஏதாவது மறைக்கறதா இருந்தா சொல்லுங்க." என்றான் யதுநந்தன்.

   "எப்ப பாரு.. இதே கேள்வி எல்லாரும் கேட்கறிங்க. அவர் இருந்தா நான் ஏன் இந்த நிலையில் இருக்கேன்." என்று அழுதாள். அந்த வேகத்தில் மூச்சு வாங்க முடியாமல் போனது.

"ஷ்ரத்தா... காம் டவுன்..." என்று யதுநந்தன் மெதுவாகச் சொன்னான்.

"இந்த நிலையில இப்படி பதட்டப்படக் கூடாது." அவள் கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தாள்.

"ருத்ரனிடம் நான் பேசுறேன். இனிமேல் தேவையில்லாம உங்களை தொந்தரவு பண்ண விடமாட்டேன். எனக்கென்னனா அவன் ஒரு போலீஸ்காரன் தேவையில்லாம சந்தேகத்தோட கேட்டுட்டே இருக்க மாட்டானே. உங்கப்பா எப்படி ஒரு நீதி நெறி தவறாதவரோ அதே போல ருத்ரனும் கடமை தவறாதவன்‌ அவன் ஏன் சந்தேகப்படறான்னு தெரியலை. எதுவான்னாலும் கண்டிக்கறேன்." என்று உறுதியுடன் கூறினான்.

பிறகு கையில் இருந்த காகிதப்பையை மேசை மீது வைத்தான்.

"இதுல கொஞ்சம் புத்தகங்கள் இருக்கு. ஜெயிலர் பர்மிஷன் வாங்கிட்டு தான் கொண்டு வந்தேன். ஓய்வாயிருந்தா படிங்க. மனசை ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துங்க" என்றான்.

ஷ்ரத்தாவின் பார்வை புத்தகங்களின் மீது விழுந்தது.

அவை எல்லாம் பொதுஅறிவு, வாழ்க்கை முன்னேற்றம், மருத்துவம் பற்றிய எளிய விளக்கப் புத்தகங்கள்.

அவற்றை மெதுவாகத் தொட்டாள். 

"சார் ஒரு உதவி கேட்கலாமா?"

"தாராளமா கேளுங்க."

"எனக்கு.. மெடிக்கல் புத்தகங்கள் படிக்கணும்."

யதுநந்தன் புருவம் சுருக்கியான்.

"மெடிக்கல் புக்ஸா"

"ஆமா. எப்படியும்... என் குழந்தை பிறந்து... நான் வெளியே வர இன்னும் வருஷங்கள் ஆகும். அதுவரைக்கும். நான் படிச்சதை மறந்துடக் கூடாது. புத்தகம் படிச்சாவது. என்னோட கனவை உயிரோட வச்சிக்கணும். தேர்ட் இயர் புக்ஸ் கிடைக்குமா?"

அவள் சொல்லும் போது...

அந்த வார்த்தைகளில் சத்ரியன் இல்லை.

மருத்துவராக வேண்டும் என்ற திவாகரின் கனவு மட்டும் இருந்தது. யதுநந்தன் சில நொடிகள் யோசித்தான்.

"லைப்ரரில என்ன புத்தகம் இருக்குன்னு முதல்ல கேட்டுப் பார்க்கறேன். இல்லன்னா... ஜெயிலர் பர்மிஷன் வாங்கி உங்களுக்கு மெடிஸன் படிக்கற தேர்ட் இயர் புத்தகங்களையே வாங்கி தர்றேன். ஆனா அது சாத்தியமானு வாக்கு தரமுடியாது." அந்த வார்த்தையைக் கேட்டதும்...

பல நாட்களுக்குப் பிறகு...

ஷ்ரத்தாவின் உதட்டில் மிகச் சிறிய நம்பிக்கை கலந்த புன்னகை மலர்ந்தது

"தேங்க்ஸ் சார்.. சட்டத்துல சாத்தியம்னா எடுத்துட்டு வாங்க." என்று மெதுவாகச் சொன்னாள்.

ஷ்ரத்தாவின் புன்னகையை பார்த்த யதுநந்தனுக்கு, இந்த பெண் மீண்டு வரணும். அதற்கு நான் துணையா இருக்கணும்" என்ற எண்ணம் இன்னும் உறுதியாகியது.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 13, 2026 7:35 am
Kalidevi, muthupriyabalaji, Priyarajan and 1 people reacted
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Shardha sollurathum valid point than Chathriyan uyir oda irundha ava nizhal ah kooda yara yum.tho da vida matan than aana rudhran oda doubt ah yum ignore panna mudiyathu la parpom ennathan nadakuthu nu .


 
Posted : July 13, 2026 10:16 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👌 😍 ❤️ shrathava evalavu thollai pandraney endha rudhran kandipa evanuku orunaal eruku🧐 endha lawyer vera romba interest kaatraney ennava erukum🤔🧐🙄


 
Posted : July 13, 2026 10:26 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Books s the best diversion for you


 
Posted : July 13, 2026 11:30 am
(@priyarajan)
Posts: 11
Active Member
 

Nice waiting for nxt epi 👌🏼 


 
Posted : July 13, 2026 3:17 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)

அடங்கொப்புரானே..! ருத்ராவும் விடாக் கண்டனா இருக்கிறான், இவளும் எதையும் கொடாக் கண்டனா இருக்கிறாள். எங்களுக்கே சத்ரியன் இறந்துட்டான் என்கிறதை நம்ப முடியாதப்ப, ருத்ரன் மட்டும் நம்பிடுவானா என்ன? வருவான், வருவான் நிச்சயமா ஒருநாள் வருவான், வந்து எல்லாருக்கும் பதிலடி தருவான்.

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 13, 2026 3:27 pm
(@muthupriyabalaji)
Posts: 4
New Member
 

Oru chinna doubt sis, இந்த யது நடந்தன்தான் சத்ரியனா?


 
Posted : July 13, 2026 3:32 pm
(@muthupriyabalaji)
Posts: 4
New Member
 

ஒரு சின்ன சந்தேகம் சகி,  இந்த யது நந்தன் தான் சத்ரியனா இல்ல சத்ரியனின் கையால ஒரே கியூரியாசிட்டி தெரிஞ்சிக்கிறதுல சீக்கிரம் சத்திரியனுக்கு கொண்டாங்க


 
Posted : July 13, 2026 3:35 pm
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 

@muthupriyabalaji இல்லைப்பா... யதுநந்தன் லாயர். சத்ரியன் இல்லை.


 
Posted : July 13, 2026 5:22 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

s kandipa sharadha meenu varanum doctor aganum appa dhivagar husband chathriyan rendu peroda aasaium niravethanum


 
Posted : July 14, 2026 2:31 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

சத்ரியன் இருக்கனும்


 
Posted : July 22, 2026 1:31 am
(@krishna-krishna)
Posts: 8
Active Member
 

@kothaihari சூப்பர் மா வாழ்த்துக்கள்


 
Posted : July 26, 2026 3:15 pm

Scroll to Top