Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-8

2 Posts
2 Users
0 Reactions
96 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#96]

அத்தியாயம்-8

அடுத்த நாள் ரேணுகா சொல்லியதில் மாலினி நிலாவிடம் கேட்க தயங்கி தயங்கி நின்றாள்.
''என்ன மாலு ஒரு மாதிரி முழிச்சுட்டு இருக்க?''
''அதெல்லாம் ஒன்னுமில்லை... அடுத்த வாரம் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க...'' என்றாள்.

''வாவ் மாலினி சூப்பர்... எப்படி தெரிந்தவர்களா?''
''இல்லைம்மா உனக்கு பார்த்த மாதிரி தெரிந்தவர் ஒருத்தர் சொல்லி அப்பா ஓகே செய்தது... பொண்ணு பார்க்கறது போர்மாலிட்டீஸ்காக தான்.. அவங்க ஏற்கனவே என்னை பார்த்துட்டாங்களாம் நான் தான் பார்க்கலை'' என்றாள்.
நிலாவுக்கு 'தெரிந்தவர் சொல்லி அப்பா ஓகே செய்தது' என்றதும் மனம் ரூபனை எண்ணி கலங்கியது.

''காங்கிராட்ஸ் மாலினி சீக்கரம் நல்லது நடக்க'' என வாழ்த்தினாள்.
''தங்கநிலா... உங்கிட்ட ஒன்னு கேட்கணும்... நேற்று சுந்தரி சிஸ்டர் வேணி சிஸ்டர் பேசியதை பற்றி தான்''
''அதுக்கு என்ன அவங்க தெரியாம பேசினாங்க இப்போ புரிஞ்சுக்கிட்டாங்க''
''அவங்க தவறா பேசினாங்க நீ கோவப்பட்ட ஓகே ஆனா அவங்க பேசியதை நான் வேற மாதிரி கேட்கறேன் தவறா நீ எடுத்துக்காம எனக்கு பதில் சொல்லு நிலா'' என மாலினி கேட்க நிலா என்ன கேட்க போகின்றாள் என மாலினியை பார்த்தாள். 

''உன்னை பற்றி எனக்கு தெரியும் நிலா... ரூபன் இங்க அட்மிட் ஆனபொழுது, நீ ரொம்ப அழுத உன் கண்கள் ஆப்ரேஷன் தியேட்டர்ல கலங்கி போச்சு நான் பார்த்தேன். அவரை பிடிக்கலை என்று சொல்லிட்டு எதுக்கு அப்போ அழுத...?''
''இதுக்கான பதில் நேற்று நீயே சொன்னியே மாலு...'' என்றதும் புரியாமல் குழம்ப
''நீ நேற்று அவர்களுக்கு சொன்னியே என் அம்மா அப்பா பார்த்த வரன் அவன் என்று அந்த அக்கறை மட்டும் தான்''
''நிஜமா அது மட்டும் தானா?''
''வேற என்ன?'' என்றாள் தங்கநிலா.

''இல்லை அப்பா அம்மா பார்த்த பையன் என்று அவர் மீது உனக்கு கா..த..ல்..'' என்று கூறும் முன் ''அதெல்லாம் இல்லை மாலு ஒருத்தர் பிடிக்கலை என்று கூறியதும் மீண்டும் போய் தொந்தரவு செய்ய முடியாது. அவரவர் வேலையா இருக்கார் நாம நம்ம வேலையில் இருப்போம். எனக்கு இந்த சேவை பண்ணிட்டு இருக்கறது போதும்'' என நகர மாலினி குழம்பி போயிருந்தாள்.

நான் இவளுக்கு காதல் வந்துச்சா என்று தானே கேட்டேன்... இவ அவருக்கு பிடிக்கலை என சொல்லிட்டு போறா அப்போ இவளுக்கு பிடிச்சிருந்தா? இல்லை இன்னும் பிடிக்குதா? ரூபன் பிரகாஷ் பார்த்தால் எவளுக்கு தான் பிடிக்காது...? இங்கயிருந்த வரை எல்லா சிஸ்டரும் அவரை பற்றியே பேசிட்டு இருப்பாங்க... பட் நிலா கொஞ்சம் வித்தியாசம் தான். அவளுக்கு பிடிக்கணும். அவள் இப்போ என்ன மைண்ட்ல இருக்காளே புரியலை.' என வேலையினை கவனித்தாள்.

இரு தினம் செல்ல, மாலினி நிலா இருவரும் ஹாஸ்பிடல் இருந்து கிளம்பி கொண்டு இருந்தார்கள்.
ரூபன் பிரகாஷ் நிலா தனியாக வந்தால் அவளை இழுத்து கொண்டு பேச நேரம் பார்த்தான். அவளோ மாலினியோடு வரவும் அறியாமல் பின் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் மாலினி பிரிந்து தானே நிலா போக வேண்டும். ஆனால் பின் தொடர்ந்த கொஞ்ச நேரத்திலே தனக்கு முன் ஒருவன் அவ்விருவரையும் பின் தொடர்வதை கண்டான்.

இவன் யாரு? நடுவில அச்சச்சோ நிலா என் மேல இருக்கற கோவத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் லவ் எதாவது பண்ணி தொலைச்சிட்டாளா என இதயம் நின்று பின் 'சேசே ஹாஸ்பிடலில் அவள் தன்னை கவனித்துக் கொள்ளும் பொழுது அவள் பார்வை என் மீது ஒரு வித காதலில் இருந்தது' என்று யோசித்தவன் அவனை நிறுத்தி பேச செல்ல, அதே சமயம் மாலினி பைக் அங்கிருந்த போலீஸ் நிறுத்த சொல்ல நிறுத்தினாள். கூடவே நிலா கீழே இறங்க பின்னால் இருந்த அவனும் அப்படியே வண்டியை நிறுத்தினான்.

ட்ராபிக் போலீஸ் மற்ற பைக் சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் சரி பார்க்க ரூபன் முன் வந்தான்.
அவன் வருவதை கண்டு நிலா அவனையே பார்க்க மாலினி நிலாவை பார்த்தாள். அவர்களை பின் தொடர்ந்தவனோ மாலினியை பார்க்க ட்ராபிக் போலீஸ் ரூபனை இனம் கண்டு சல்யூட் அடிக்க தலையசைப்பில் ஏற்றவன். அங்கிருந்த காரின் மீது சாய்ந்து
''எதுக்கு அவங்களை பாலோவ் பண்ற?'' என்றதும் பின் தொடர்ந்தவன் பேய் முழி முழிக்க மாலினி நிலா அதற்கு மேல் குழம்பி பார்த்தார்கள்.

அவனோ அமைதியாக பேச பயந்து இருக்க ரூபனோ விடாது
''சொல்லு நானும் பார்த்துட்டு இருக்கேன் கால் மணி நேரமா இவங்க பின்னால் வந்துட்டு இருக்க என்ன விஷயம்?'' என்றதும் ட்ராபிக் போலீஸ் எல்லோரையும் பார்த்தார்.

''சார் இவங்களை இவங்களை பெண் பார்த்து எனக்கு முடிவு செய்தாங்க அவங்களுக்கு தெரியாம ஒரு தடவை பார்க்க வந்தேன் அவ்ளோ தான் சார்'' என்றதும் மாலினி தயங்கி தயங்கி ''சரவணன்...?'' என்று கேட்க
''ஆமா சரவணன் தான்'' என்று சொல்லியதும் ட்ராபிக் போலீசோ
''சார் சந்தேகமா இருந்தா நேம் அட்ரஸ் போன் நம்பர் வாங்கி வச்சிக்கலாம் சார்'' என்றதும் இதுவரை போக சொல்ல முடிவு செய்த ரூபன் அவளின் போன் நம்பர் கிடைக்கும் என்றதும் ''சரி '' என ஒப்புதல் அளித்தான்.

''பேர் என்னம்மா? என்றதும் மாலினி ரூபனை பார்த்து இவருக்கு தான் என்ன நிலாவை தெரியுமே அப்பறம் ஏன் இப்படி பண்றார்.' என மாலினி வயசு 24 மலர் ஹாஸ்பிடல்ல நர்ஸ் சார்.' என id நீட்ட குறித்துக்கொண்டார். அதே போல சரவணன் வயசு 28 சார் பாரதி ஸ்கூல்ல பிசிக்ஸ் எடுக்கறேன் சார் என போன் நம்பர் தர எழுதி கொண்டார். 

அடுத்து நிலா முறை வர ''நானும் சொல்லனுமா?'' என கேட்க ரூபனோ 'அடிப்பாவி நீ சொல்ல தாண்டி கேட்டதே' என மனதோடு புலம்பினான்.

பேர் தங்கநிலா.. வயது 23 நானும் மலர் ஹாஸ்பிடல்ல நர்ஸ்ஸா ஒர்க் பண்றேன் இது என் id என காட்டினாள். 

''மூர்த்தி அண்ணா நம்பர் கேட்டுக்கோங்க?'' என்றான். நிலா ரூபனை முறைத்து கொண்டே பத்து இலக்கை சொல்லி முடிக்க அவள் சொல்ல சொல்ல ரூபன் அவனின் போனில் ஏதோ அழுத்துவது மாலினி அறிந்தாள். நிலாவும் தான்.
''சார் போகலாமா?'' என சரவணன் கேட்க தலையாட்டினான்.

 மாலினி சரவணன் வண்டியை தள்ளிக்கொண்டே ஏதோ பேசியபடி செல்ல நிலா ரூபனை திரும்பி திரும்பி பார்க்க அவனோ பார்வை அகற்றாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

நிலாவோ வேண்டுமென்றே நிற்க வச்சி என் நம்பர் நோட் பண்ணி இருக்கார். ஆமா எதுக்கு அப்படி செய்தார். இதுல கால் மணி நேரமா இவரும் பாலோவ் பண்ணி இருக்கார்... எதுக்கு? நிலா அவனை பார்த்ததும் இந்த மனசாட்சி உன் பேச்சையே கேட்காது உஷாரா இரு' என்று நடக்க
''நிலா... நிலா.. உன்னை தான்'' என மாலினி அழைக்க 'ஙே' என விழித்தாள்.
''அவர் என்கூட பேசணுமாம்.. நான் அவரிடம் போகட்டுமா?'' என்றாள். 

''முதலில் அதை செய்.. நான் கிளம்பறேன் அண்ணா'' என நிலா வேகமாக விடை பெற்று ஹாஸ்டல் நோக்கி நடை போட்டாள்.

தொடரும் 

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : June 23, 2026 6:35 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

அடப்பாவி..! போலீஸா இருந்துக்கிட்டு ஸ்டாக்கிங் எல்லாம் பண்றானே...?

 

😃😃😃

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 6:09 pm

Scroll to Top