Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-18

4 Posts
4 Users
1 Reactions
11 Views
(@praveena-thangaraj)
Posts: 180
Member Admin
Topic starter
 
[#239]

அத்தியாயம்-18

காலம் அமைதியாக நகர்ந்து கொண்டே இருந்தது.

ராயனின் சிரிப்பு... அவன் குறும்பு... அவன் ஓட்டம்...

அந்த சிறைச்சாலையின் சோகத்தையே மறக்க வைத்திருந்தது.

அன்று காலை சிறை கண்காணிப்பாளர் அதிகாரி முன் மேசையில் ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் வந்து இறங்கியது.

அதை திறந்து பார்த்தவர்

முகத்தில் மெதுவாக புன்னகைத்தார். "கார்த்திகா..."

என்று அழைத்தார். கார்த்திகா உள்ளே வந்தாள்.

"இதை பாரு." அவளிடம் அந்த ஆணையை நீட்டினார்.

அரசு முத்திரையுடன் வந்திருந்த அந்த உத்தரவில் 'கைதி ஷ்ரத்தா... நல்லொழுக்க அடிப்படையில் ஆறு மாத தண்டனைக் குறைப்பு (Sentence Remission) வழங்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்.' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கார்த்திகா அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்தாள்.

அவளது உதடுகளில் தன்னையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.

"மேம்... ஷ்ரத்தாவுக்கு இந்த விடுதலை கிடைக்கணும்னு தான் நினைச்சேன்." என்றாள்.

சிறை கண்காணிப்பாளர் மற்றும் அங்கிருந்த டாக்டர் சங்கரியும் தலையசைத்தார்.

"மூணு வருஷத்துல... ஒரு நாள் கூட ஒழுங்கு மீறல. ஒரு கைதியோட கூட சண்டை இல்ல.

குழந்தையை வளர்த்த விதமும்... அவளோட நடத்தையும்... எல்லாமே சிறப்பா இருந்தது. இந்த ரெமிஷன் அவளுக்கு சரியான பரிசு." என்றார்.

அன்று மாலை... ஷ்ரத்தா ராயனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

"ரியன்... வாய திற." என்று சொல்ல, அவனோ தலையை மறுப்பாய் ஆட்டினான்.

"வேணாம்..." என்று ஓட ஆரம்பித்தான்.

"ராயன்..." என்று பின்னால் ஷ்ரத்தா ஓட, அவன் நேராக கார்த்திகாவின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

"காப்பாத்து..." என்று அவளது கால்களை கட்டிக் கொண்டான்.

கார்த்திகா சிரித்தாள்.

"என்ன மேம்... எங்க போலீஸ் பாதுகாப்பு கேட்டு எங்ககிட்ட வந்துட்டாரு." என்று ராயனை தூக்கிக் கொண்டாள்.

"சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கறான்." என்றாள் ஷ்ரத்தா.

"ராயன் சாப்பிடலன்னா...

போலீஸ் ஜீப்புல கூட்டிட்டு போயிடுவேன்." என்று கார்த்திகா பயமுறுத்த,

"நானும் போலீஸ்.. எனக்கு ஜாலியா இருக்கும்." என்று அவன் சிரித்தான்.

அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து கார்த்திகா மற்றும் டாக்டர் சங்கரி இருவரும் ஷ்ரத்தா முன் நெருக்கமாய் வந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஷ்ரத்தா எழுந்து நின்றாள். என்ன மேம்?" என்று கேட்டாள்.

டாக்டர் சங்கரி கையில் இருந்த ஆணையை அவளிடம் நீட்டினார்.

"வாழ்த்துக்கள் ஷ்ரத்தா."

என்றார். குழப்பத்துடன் வாங்கிப் பார்த்தாள்.

முதல் இரண்டு வரிகள் படித்தவுடனே... அவளது கண்கள் பெரிதானது. கைகள் நடுங்க ஆரம்பித்தது.

"எ... எனக்கு... விடுதலையா" என்று பேச முடியாமல் நின்றாள்.

"ஆமா." என்று கார்த்திகா புன்னகைத்தாள்.

"அரசாங்கம் நல்லொழுக்க அடிப்படையில் உனக்கு ஆறு மாதம் தண்டனைக் குறைப்பு கொடுத்திருக்காங்க. இன்னும் சில நடைமுறைகள் முடிஞ்சதும்... நீ விடுதலையாகிடலாம். " என்றதும் ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இத்தனை நாட்களாக.. மாதங்களாக... வருடங்கள் கடந்து, இரும்பு கம்பிகளுக்குள் அடைத்து வைத்திருந்த உயிர்.

இனி வெளியே போகப் போகிறது. அவள் ராயனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

"ரியன்... நாம வீட்டுக்கு போறோம்டா. அங்க போய்..  உன்னை படிக்க வைக்கணும். ஆளாக்கணும்." என்று அழுதபடியே முத்தமிட்டாள்.

"ஷ்ரத்தா.. நீயுமே விட்ட உன்னோட மருத்துவ படிப்பை முடிக்கணும். இந்த மருத்துவத்திற்கான சீட்டோட விலை எவ்வளவுனு தெரியும் தானே? அதனால ஒன்று மாற்றி ஒன்னு வந்து நீ இப்ப இங்க நிற்கறனு புரிதா? அதனால மருத்துவ படிப்பை தொடரணும்" என்று கார்த்திகா கூற ஷ்ரத்தா தலையாட்டினாள். 

ராயனுக்கு ஒன்றும் புரியவில்லை. "வீடா?" என்று சிரித்தான்.

  அவனை பொறுத்தவரை அவனிருக்கும் அறை அவனது அறை. யதுநந்தன் ருத்ரன் வாங்கி தந்த பொருட்கள் எல்லாம் கார்த்திகா புண்ணியத்தில் அழகாக அடுக்கி விளையாடவும் அந்த அறையே அவனுக்கு பிடித்திருந்தது. 

குழந்தைக்கு சிறைசாலை, வீடு என்றால் புரியுமா? 

   ஒருபக்கம் விடுதலைக்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்தது.

சிறை வாசலுக்கு வெளியே... யதுநந்தன் காத்திருந்தான்.

வெள்ளை நிற காரின் அருகில் சாய்ந்து நின்றவன், சிறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்.

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு...

ஷ்ரத்தா... ராயனை கையில் தூக்கி வைத்தபடி சிறை வாசலை விட்டு வெளியே வந்தாள். இங்கு வரும் பொழுது கர்ப்பம் தரித்திருந்தாள். 

அவள் முதலில் வானத்தை பார்த்தாள், கம்பிகள் இல்லாத சுதந்திர வானம்.

அவளது கண்கள் கலங்கின.

யதுநந்தன் மெதுவாக அருகே வந்தான்.

"ஹாய் ராயன். என்கிட்ட வர்றிங்களா?' என்று கேட்க, குழந்தை அடிக்கடி பார்த்தாலும் ஏனோ வரமறுத்தான். 

"அவனுக்கு இன்னமும் என்னை அடையாளம் தெரியலை. நீங்க வாங்க..." என்றான்.

ஷ்ரத்தா சுற்றிப் பார்த்தாள்.

"எங்க போறோம் யது சார்?"

"உங்க வீட்டுக்கு. என்றான். அவள் திடுக்கிட்டாள்.

"என்னோட வீடா?"

"ஆமா. திவாகர் சார் வீடு. நான் சுத்தம் பண்ணி... எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்." என்றான். அங்கு பாதுகாப்பு உண்டா என்று தெரிரவில்லையே? அந்த பயமிருந்தாலும் தனது வீட்டை தேடி தான் சென்றாள். 

அவளால் பேச முடியவில்லை.

காரில் ஏறியவள், சிறைச்சாலையை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

இந்த இரண்டரை வருடங்கள்...

அவளது வாழ்க்கையை மாற்றியிருந்தது. ஆனால்... இனி தொடங்கப் போகும் வாழ்க்கை...

எத்தகைய புயலை தன்னுள் வைத்திருக்கிறது என்பதை  அவள் இன்னும் அறிந்திருக்கவில்லை. மனம் ரோட்டில் செல்லும் சாதாரண காட்சியை எல்லாம் முறுவலுடன் ஏறிட்டது. 

   இதெல்லாம் கூட அவள் சிறையில் பாராத பக்கங்கள் தானே. அத்துடன் ராயனுக்கு இந்த வெளி உலகம் இன்னும் சுவாரசியம் தந்தது. வேடிக்கை பார்த்தபடி வந்தான். 

யதுநந்தன் காரில் ராயனின் பொம்மை துணி மணி இதுவே நிறைந்திருந்தது. 

ராயனையும் ஷ்ரத்தாவையும் அழைத்துக் கொண்டு யதுநந்தன் கிளம்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வழக்கம்போல் ருத்ரன் சிறைக்கு வந்தான்.

கையில் ராயனுக்காக வாங்கி வந்த சாக்லேட், ஒரு சின்ன கார் பொம்மை. வாசலில் இருந்த காவலரிடம், "ஷ்ரத்தாவை பார்க்கணும்." என்றான்.

காவலர் ஒரு நொடி தயங்கினார்.

"சார்... உங்களுக்கு தெரியாதா?" என்றதும் ருத்ரன் புருவம் சுருக்கினான்.

"என்ன தெரியணும்?" என்று முழித்தான்.

"ஷ்ரத்தா மேம்... இன்னைக்கு ரிலீஸ் ஆகிட்டாங்க." என்றான்

ஒரே நொடி... ருத்ரனின் முகமே மலர்ந்து  உறைந்தது.

"என்னது? அவளுக்கு இன்னும் ஆறு மாசம் தண்டனை காலமிருக்கே" என்றான்.

  "நான் த் நல்லொழுக்க அடிப்படையில் காலையிலேயே ரிலீஸ் ஆர்டர் வந்தது சார். லாயர் யதுநந்தன் வந்து அழைச்சிட்டு போயிட்டாரு. உங்களுக்கு இதை பற்றி தெரியாதா?" என்று கேட்கவும், அடுத்த நொடி அவன் கையில் இருந்த பொம்மை தரையில் விழுந்தது.

'என்னிடம் ஒரு வார்த்தை கூட இந்த ஷ்ரத்தா சொல்லலையே?' என்று தனக்குத்தானே முணுமுணுத்தான்.

நேராக கார்த்திகாவை தேடிச் சென்றான். கார்த்திகா அலுவலகத்தில் சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கார்த்திகா!" அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

"சார்..."

"ஷ்ரத்தா ரிலீஸ் ஆகற விஷயம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா?" அவனது குரலில் கோபமும் ஏமாற்றமும் கலந்திருந்தது.

கார்த்திகா அமைதியாக எழுந்தாள். "சொல்லணும்னு எந்த ரூல்ஸ்லயும் இல்ல சார்." என்றாள்.

"நான் இத்தனை நாளா இங்க வந்துட்டு இருந்தேன்ல, அதுக்காககவாது சொல்லியிருக்கலாமே" என்றான்.

"நீங்க வந்தது உங்க விருப்பம். ஷ்ரத்தா சொல்லாம போனது அவங்க விருப்பமா இருக்கலாம்." அந்த பதில் ருத்ரனின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

'குறைந்தபட்சம் கிளம்புறதுக்கு முன்னாடி ஷ்ரத்தா சொல்லியிருக்கலாம்.' என்று அவன் மனம் வேதனையை அடக்கியது. 

ருத்ரன் பேச முடியாமல் நின்றான்.

கார்த்திகா மெதுவாக, "சார்... ஒரு கைதி ரிலீஸ் ஆகுறது அரசாங்க நடைமுறை. அதை யாருக்கெல்லாம் சொல்லணும்னு சட்டம் கிடையாது." என்றாள்.

ருத்ரன் எதுவும் பேசாமல் வெளியே வந்தான். அவன் மனம் முழுக்க ஒரே கேள்வி.

'என்னிடம் மட்டும் ஏன் சொல்லல?' அந்த யதுநந்தன் வந்து கூட்டிட்டு போயிருக்கான். இவளை...' என்று பல்லை கடித்து வந்தான்.‌

அதே நேரம்... திவாகர் வீட்டில்... வாசலை கடந்ததும் ஷ்ரத்தா சில நொடிகள் அமைதியாக நின்றாள்.

இரண்டரை வருடங்களுக்கு பிறகு... தன் வீட்டுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

ராயன் வீடு முழுக்க ஓட ஆரம்பித்தான்.

"அம்மா... பெரிய வீடு!" என்று கைத்தட்டினான்.

அதை பார்த்த ஷ்ரத்தா சிரித்தாள். இதுவே பெரிய வீடு என்றால், சத்ரியனும் ஷ்ரத்தாவும் வாழ்ந்த பங்களாவில் மகன் ஓடி விளையாடினால்... அதை என்ன சொல்வானோ?

 சில நேரம் கழித்து... "யது சார்..." என்று அழைத்தாள்.

"சொல்லுங்க ஷ்ரத்தா" என்றான்

"கீர்த்தனா அம்மா எப்படி இருக்காங்க? என்னை பார்க்க வர்றதேயில்லை. ஏன்னு ருத்ரனிடம் கேட்டேன் மழுப்பிட்டே இருக்கார். அவங்களுக்கு ஒன்னும் இல்லையே" என்று பயந்தாள். 

யதுநந்தன் வேறு சற்று தயங்கினான்.

"நல்லாத்தானே இருக்காங்க." என்று பயந்தே கேட்டாள். வயது முதிர்ந்த பெண்மணி என்ற கரிசணத்தில் உடலுக்கு ஏதாவது ஆனதோ என்ற கவலை.

"நல்லாயிருக்காங்க" என்றான். 

"என்னை பார்க்க ஏன் வரல?" அவன் மெதுவாக சிரித்தான்.

"என்னிடம் கேட்டா என்ன சொல்ல ஷ்ரத்தா. அவங்க ருத்ரனோட அம்மா. ருத்ரனிடம் இதை நீங்க கேட்டுயிருக்கலாம்." என்றான்

"அவரிடம் பேசவே முடியலை." என்றவள் 'ஏதோ மாதிரி பேசறார்' என்பதால் ஷ்ரத்தா அமைதியாகிவிட்டாள்.

அந்த வீட்டில் கார்த்திகாவுடன் இருந்த மூன்று பெண் கைதிகளும் இருந்தனர்.

அவர்களுக்கும் நல்லொழுக்க அடிப்படையில் விடுதலை கிடைத்திருந்தது.

அவர்களை பார்த்து ஷ்ரத்தா ஆச்சரியப்பட்டாள்.

"நீங்க... எங்க இங்க?" என்று ஆச்சரியப்பட அவர்களில் ஒருத்தி முன் வந்து,. "ஆமா மேம். இப்ப நாங்க இங்கதான். வேலை பார்க்கறோம். எங்களுக்கு வேலை கிடைக்காதுனு கார்த்திகா மேமிடம் சொல்லி வச்சப்ப, யதுநந்தன் சாரிடம் உங்களையும் ராயனையும் பார்த்துக்க ரெகமெண்ட் சொன்னாங்க. சாரும் இங்க வந்து கூட இருந்தா பெட்டர்னு சேர்த்துட்டார்." என்றதும் ஷ்ரத்தா தனது பாதுகாப்பு இன்னும் தொடர கார்த்திகாவின் உதவி இது என்று புரிந்தது. 

ராயன் ஓடி வந்து, "அக்கா... என்னோட விளையாடுங்க." என்று கையை பிடித்து இழுத்தான். மூன்று பேரும் அவனோடு சிரித்தபடி சென்றனர். ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் ராயன் தயங்காமல் விளையாடினான்.

அவர்களை பார்த்த ஷ்ரத்தாவின் மனம் லேசானது.

இவ்வளவு நாட்கள் சிறையில் பாதுகாப்பாக இருந்தது போல... எப்போதும் யாரோ தன்னை பாதுகாத்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு அவளுக்குள் தோன்றியது. 

அந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியவனை நினைத்து மறுகினாள். 

  ஹரிணி வரைந்து தந்த, சத்ரியன் ஷ்ரத்தா ராயன் என்று மூவரும் இருந்த ஓவியத்தை ஹாலில் மாட்டினாள். 

  யதுநந்தனோ நேக்காக லாயர் திவாகரின் போட்டோவுக்கு பக்கத்தில் சத்ரியனின் தனி போட்டோவை வைத்தான்.‌

  அதில் கூடுதலாக திவாகர் புகைப்படத்திற்கு மாலை போட்டு வைத்திருக்க, சத்ரியனின் புகைப்படத்திற்கும் போட முனைந்தார். 

   ஆனால் ஷ்ரத்தா அதை கவனித்துவிட்டு, "யது சார்... சத்ரியன் பிக்ல எந்த மாலையும் போட வேண்டாம். ப்ளீஸ்." என்று அவசரமாக தட்டிவிட்டாள். 

  யதுநந்தன் அவளை தீர்க்கமாக பார்வையிட, ஷ்ரத்தாவும் யதுநந்தனை தான் பார்த்தாள். 

  அந்த காட்சி ஒருவரை ஒருவர் பார்வையிடுவதாக அங்கு வந்த ருத்ரன் கண்ணிற்கு பதிய,  கைதட்டி ஆவேசத்துடன் முன்னே வந்தான். 

-தொடரும் 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 28, 2026 3:41 am
(@kothaihari)
Posts: 56
Trusted Member
 

ருத்ரனுக்கு புரியல சத்ரியன் எவ்வளவு ஆழமா ஷ்ரத்தா மனதில் இருக்கான் என்று ... ஷ்ரத்தாவுக்கு சத்ரியன் ராயன் தான் உலகம். ... ருத்ரன் மனிதனே இல்லை ... காதல் என்பது என்னனு தெரியல 


 
Posted : July 28, 2026 3:51 am
(@guna-sundari)
Posts: 61
Trusted Member
 

Suepr super story starts now only. Chatriyian will.definitely come.  Ruthran ur anger is not worth. Very intresting sis. 


 
Posted : July 28, 2026 3:55 am
(@dharsinipriya)
Posts: 61
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 shratha release anadhu romba happy sis aana ini dhan ava romba careful ah erukanum 🙄😐 endha rudhran vera chathriyan kita adi vaangama erukka maatan pola🤔🙄


 
Posted : July 28, 2026 4:07 am

Scroll to Top