வெளிச்சம் - 29
அத்தியாயம் 29
தேவ் பேசிச் சென்றதைக் கேட்டு அதிர்ச்சியாக நின்றிருந்தாள் சிவன்யா. என்ன பேசுகிறான் என்று அவளுக்கு புரியவில்லை. சிறிது நேரம் கழித்து தன் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் சொன்ன அறைக்கு வந்து கட்டிலில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
யோசிக்க யோசிக்க அவன் தன்னை தனியே அறையில் இருக்கச் சொன்னது ஏன் என்று புரியவில்லை. யாரும் இல்லாத காட்டுக்குள் தனியாக வந்து நிற்பது போல் இருந்தது அவளுக்கு. ஏதோ ஒரு அழுத்தம் அவளது தொண்டையை அழுத்த, கண்களில் கண்ணீர் தானாக வடிந்தது.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவள், வீட்டிற்கு இன்னும் சொல்லவில்லை என்று தோன்றியதால் ஃபோன் செய்யலாம் என்று எடுத்தவள், யாருக்கு செய்வது என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாள். தேவ் பேசாமல் இவள் மட்டும் பேசினால் எல்லோருக்குமே வருத்தமாக இருக்குமே என்று யோசித்து, ஒரு வழியாக அதிகம் கேள்வி கேட்காமல் இருக்கும் தன் தாய்க்கு ஃபோன் செய்து, தான் பத்திரமாக வீடு வந்து விட்டதாக கூறி, விமான பயணத்தினால் களைப்பாக இருப்பதாகவும், சற்று நேரம் தூங்கப்போகாதவாகவும், எழுந்ததும் தானே எல்லோருக்கும் ஃபோன் செய்கிறேன் என்று கூறி, ஃபோனை வைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
எப்படி யோசித்தாலும் தேவ் செயல்களிலேயே வந்து நின்றது அவளது மனது. இவர் ஏன் இப்படி செய்கிறார்? பிடிக்கவில்லை என்றால் என்ன இங்கு வராமலேயே இருக்க வைத்திருக்கலாமே? இங்கு வந்த பிறகு என்னிடம் சரியாமல் பேசவில்லை என்றால் என்ன செய்ய? என்று அவள் மனதிற்குள் பலவித குழப்பங்கள் ஓடிக்கொண்டே இருந்தது.
பல சிந்தனைகளாலும் பயணக் களைப்பாலும் அவளுக்கு தலைவலிப்பது போல் இருந்தது. கண்டதையும் யோசிக்காதே சிவன்யா. பார் தலைவலி வந்துவிட்டது. சற்று நேரம் அமைதியாக ஓய்வெடு, என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு இறுக்கமாக கண்களை மூடி அப்படியே அமைதியாக படுத்து விட்டாள்.
நாம் நினைத்தது போல் நம் மனது உடனே தன் யோசனை திறமையை நிறுத்தி விடுமா என்ன? படுத்த பிறகும் பல சிந்தனைகள் அவள் தலைக்குள் ஓடிக்கொண்டே இருக்க தன்னையும் அறியாமல் ஒரு கட்டத்தில் உறங்கி விட்டாள் சிவன்யா.
நன்றாக தூங்கி எழுந்ததும் மனது சற்று நிம்மதி அடைந்தது போல் இருந்தது. கல்யாணம் முடிந்த நாளிலிருந்து இன்று வரை அவன் அப்படித்தானே நடந்துகொண்டு இருக்கிறான். அதை நினைத்து இனிமேல் கலங்கக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தன்னை தேற்றிக்கொண்டாள்.
நன்கு குளித்து புத்துணருடன் அறையை விட்டு வெளியே வந்தாள் சிவன்யா. அங்கு தேவ்வும் உன்னிகிருஷ்ணன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அருகில் ஒரு அமெரிக்ககாரன் அமர்ந்திருந்தான்.
சிவன்யாவை பார்த்ததும் உன்னிகிருஷ்ணன் புன்னகைத்து "நன்றாக ஓய்வு எடுத்தாயாம்மா?" என்றான்.
"ஆமாம் அண்ணா" என்று உன்னிகிருஷ்ணனுக்கு சொல்லிவிட்டு, அங்கிருந்த புதியவனை பார்த்தாள்.
உடனே தேவ் "இது ஜோர்கன் ரமோன்" என்று சிவன்யாவிடமும், "ஜோ, இது சிவன்யா" என்று அந்த அமெரிக்கனிடமும் அறிமுகப்படுத்தினான் தேவ்.
அவனும் புன்னகையுடன் சிவன்யாவிற்கு கை கொடுத்து லேசாக அணைத்து விடுத்தான். இப்பொழுது தேவ் ஜோவை முறைதான்
அறிமுகத்தின் போது தோள் அணைப்பு இப்பொழுது பெரிய விஷயமாக இல்லையென்றாலும் தேவ் முறைத்ததை சிவன்யாவும் பார்த்தாள். அவனின் அந்த முறைப்பு சுகன்யாவிற்கு பயமாக இருந்தாலும், அவனுக்கு தன் மேல் சிறு அக்கறை இருப்பதால்தான் ஜோவை முறைப்பதாக நினைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு "நாளைக்கு வேலைக்கு போகணும்மா, அதனால் கிளம்புகிறேன். எதுவும் பேச வேண்டும் என்றால் எனக்கு ஃபோன் செய், சரியா?" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு, தேவ்விடமும் ஜோவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான் உன்னி கிருஷ்ணன்.
அவன் கிளம்பிய பிறகு இரவு உணவு முடிந்ததும் "நீ நன்றாக ஓய்வெடு" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு ஜோவுடன் அவனது அறைக்குச் சென்று விட்டான் தேவ்.
'இவர் என்ன இத்தனை காலம் கழித்து வந்திருக்கும் என்னுடன் நேரம் செலவழிக்காமல், அவரது நண்பனுடன் அறைக்கு செல்கிறாரே என்று நினைத்துக் கொண்டாள். பின்னர் ஒரு வெளிநாட்டு நண்பன் இருக்கும் பொழுது தன் மனைவியின் அறைக்கு செல்வதில் சங்கடப்படுகிறார் போலிருக்கிறது என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள்.
அவளுக்குள் தோன்றும் பல கேள்விகளுக்கு, அவளாகவே பல சமாதான பதில்களை கூறிக்கொண்டு, தான் இருந்த அறைக்கு வந்து மீண்டும் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தாள். கண்டதையும் யோசித்துக்கொண்டு இருந்த சிவன்யா எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கியும் விட்டாள்.
நன்கு உறங்கிய சிவன்யாவிற்கு முகத்தில் வெளிச்சம் படவே, கண்கள் கூச மெதுவாக கண்களை திறந்தாள். அறை முழுவதும் நல்ல வெளிச்சமாக இருக்க திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து மணியை பார்த்தாள். மணியோ காலை 11.30 என்று காண்பித்ததில் பதறி எழுந்து தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர, வீடு நிசப்தமாக இருந்தது.
தேவ் வேலைக்கு சென்று விட்டான் போலிருக்கிறது என்று நினைத்து சமையலறை சென்று பார்த்தாள். சிறிய ஹாட் பேக் மூடி இருந்தது. திறந்தால் அதில் பொங்கல் இருந்தது. இவருக்கு சமைக்க கூட தெரியும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே காலை உணவை முடித்துவிட்டு, காபி போட்டுக் கொண்டு அமர்ந்து, தனது ஃபோனை எடுத்தால், வீட்டிலிருந்து அனைவருமே அவளை அழைத்திருக்கின்றார்கள். நேத்து சைலன்ட் மோடில் போட்டதை எடுக்க மறந்ததால் அனைத்தும் மிஸ்டுகாலில் கிடந்தது.
முதலில் தன் தாய்க்கு அழைத்த சிவன்யா, தான் உறங்கி விட்டதாகவும் அவர் காலை உணவு செய்து வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டதாகவும் கூறினாள்.
மகளை கவனமாக இருக்கச் சொல்லி கண்டித்தார். பின்னர் அனைவரும் அவளிடம் பேச, விஸ்வநாதனுக்கு மருமகனின் பேச்சிலிருந்து மகனின் குணம் தெரிந்தது. சரி முதல் நாள் தானே போகப் போக சரியாகும் என்று நினைத்து மருமகளுக்கு ஆதரவாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, அவர்களும் ஊருக்கு செல்வதாக கூறினார்.
"நீங்கள் எதுவும் நினைத்து வருந்தாதீர்கள் மாமா. நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அங்கு ஊருக்கு பத்திரமாக போயிட்டு வாருங்கள். நளினியையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி ஃபோன் பண்ணுங்க" என்று அவர்களின் நலனில் அக்கரையாக பேசி, அனைவரையும் விசாரித்து விட்டு ஃபோனை வைத்தாள் சிவன்யா.
மகனின் செயல்களும் நடவடிக்கையும் நினைத்து கவலைப்பட்டாலும், மருமகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக சென்னையில் மருமகளின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விடை பெற்று தங்களது ஊருக்கு கிளம்பினார்கள் தேவ்வின் குடும்பத்தினர்.
ஊரில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு, வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள். இரண்டு படுக்கை அறைகள், ஹால், கிச்சன், இரண்டு படுக்கை அறைக்கும் பொதுவான பால்கனி என்று ஒரு குடும்பம் வாழ்வதற்கு சற்று வசதியான இடம் தான்.
இரண்டு ஆண்கள் இருக்கும் பேச்சுலர் அறை போல் அல்லாது வீடு மிகவும் சுத்தமாகவே இருந்தது. இருவரது துணியும் துவைக்கப்பட்டு நேர்த்தியாக உலர வைக்கப்பட்டு இருந்தது. காலையிலேயே சமையலையும் முடித்து துணியும் துவைத்து விட்டு சென்று விட்டாரா? மிகவும் பொறுப்பாகத்தான் இருக்கிறார் என்று தன் கணவனை நினைத்து சற்று பெருமையாக இருந்தது சிவன்யாவிற்கு.
வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தவளுக்கு, நேரம் போவது பெரிய விஷயமாக இருந்தது. வந்த முதல் நாளே இப்படி இருப்பதை மிகவும் வெறுத்தாள் சிவன்யா. வீட்டிற்கு ஃபோன் செய்தாலும் அம்மா வீணாக டென்ஷன் ஆவாங்க என்ற எண்ணம் தான் ஓடியது.
'சரி, இப்படியே இருக்காமல் சமையலையாவது செய்வோம் என்று இரவு உணவை நான்கு மணிக்கே சமைக்க தொடங்கினாள். வீட்டில் இருந்த காய்கறிகளை வைத்து சுவையான சைவ உணவு சமைத்து வைத்துவிட்டு, தன்னையும் லேசாக அலங்கரித்துக் கொண்டு தேவ்வின் வரவிற்காக காத்திருந்தாள் சிவன்யா.
தனது மொபைல் ஃபோனில் விளையாடிக்கொண்டே, கணவனின் வரவிற்காக ஒரு அக்மார்க் மனைவியாக காத்திருக்கும் தன்னை நினைத்து அவளுக்குள்ளே சிரிப்பும் வெட்கமும் கலந்து வந்தது. எத்தனை மணிக்கு வருவார் என்று தெரியவில்லையே? எதுவும் சொல்லாமல் போய்விட்டார். அவருக்கு ஃபோன் செய்வோமா? என்று ஒரு சிந்தனை வந்தாலும், இதுவரை அவன் நடந்து கொண்டதை வைத்து ஃபோன் செய்யவும் தயக்கமாக இருந்தது. இப்படியே இவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏழரை மணிவாக்கில் கதவை திறந்து சத்தமாக சிரித்து பேசிக் கொண்டே தேவ்வும் ஜோவும் வீட்டுக்குள் வந்தார்கள்.
அவர்கள் பேச்சு சத்தத்தில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சிவன்யாவை இருவருமே ஒன்று போல் பார்த்ததும் தங்களுக்குள் ஒரு அதிர்ச்சி தோன்ற, அதை சமாளித்து லேசாக புன்னகைத்துக்கொண்டு ஜோ தனது அறைக்குள் சென்று விட்டான்.
தேவ்வும் அமைதியாக புன்னகைத்து, தன் கையில் இருந்த பையை சோபாவில் வைத்துவிட்டு நேராக சமையலறைக்கு சென்றான். அவன் பின்னாலையே தயக்கமாக சிவன்யாவும் சென்றாள்.
உணவு மேஜையின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எல்லாம் திறந்து பார்த்துவிட்டு, "ஏன் இவ்வளவு சமைத்து இருக்கிறாய்?" என்று அவளை பார்த்தான்.
"எல்லோருக்கும் வேண்டுமே! மூன்று பேர் இருக்குமே!" என்று தயங்கி தயங்கி கூறினாள் சிவன்யா.
"நான்தான் நேற்று சொன்னே! உனக்கு தேவையானவற்றை மட்டும் சமைத்துக் கொள் என்று. ஜோவிற்கு நம்ம ஊரு சாப்பாடு எல்லாம் செட் ஆகாது, இவ்வளவு காரமா அவன் சாப்பிட மாட்டான். எங்க ரெண்டு பேருக்கும் நாங்க பார்த்துக்கிறோம். உனக்கு என்ன தேவையோ அதை மட்டும் நீ செய்து கொள்" என்று கட்டளையாக சொல்லிவிட்டு தனது அலுவலகப்பையை எடுத்துக்கொண்டு ஜோவின் அறைக்குள் நுழைந்து விட்டான் தேவ்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 40
4 weeks ago
-
வெளிச்சம் - 39
4 weeks ago
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 1 Online
- 420 Members
