வெளிச்சம் - 40
அத்தியாயம் 40
விஸ்வநாதன் வந்திருப்பதைப் பற்றி சிவன்யாவிடம் சொல்லிவிட்டு "எப்படியும் அவர்கள் உன்னிடம் பேச வேண்டும் என்று தான் சொல்வார்கள் சிவன்யா. தைரியமாக பேசு. மனதில் இருப்பதை தெளிவாக சொல்லிவிடு, சரியா?" என்று சொல்லிவிட்டு ஆறிப்போன காபியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மேகநாதன்.
சிவன்யாவின் அறையை விட்டு மேகநாதன் வரவும், தங்களது ஓய்வறையை விட்டு விஸ்வநாதன் வெளியே வரவும் சரியாக இருக்க, சோபாவில் அமர்ந்திருந்த சிவநேசன், விஸ்வநாதனை தர்மசங்கரத்துடன் பார்த்து எழுந்து "வாங்க" என்று வரவேற்றார்.
தங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு வேண்டாத சம்பவம் பெரியவர்களுக்குள் பேசுவதற்கு தடையாக இருந்தது. "ஆமாம் சம்மந்தி" என்று சொல்லிக்கொண்டு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தார் விஸ்வநாதன்.
"சம்மந்தி என்று சொல்வதை முதலில் விடுங்கள் அங்கிள்" என்றான் மேகநாதன், தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டே.
மாமா என்று இதுவரை அழைத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அங்கிள் என்று மூன்றாம் நபர் போல் அழைப்பதை கவனத்தில் கொண்ட விஸ்வநாதன், "அப்படி இல்லை தம்பி, ஏதோ ஒரு சிறு மனஸ்தவம் தானே. நாம் பேசி புரிய வைக்கலாம். தேவ் என்ன தவறு செய்தான் என்று சொல்லுங்கள், அவனை எப்படியாவது திருத்த முயற்சி செய்கிறேன்" என்றார் ஒரு தந்தையாக தன் மகனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாவதை தடுக்கும் பொருட்டு.
"இது பேசி புரிய வைக்கும் விசயம் இல்லை விஸ்வநாதன்" என்றார்.
விஸ்வநாதனா! என்று அதிர்ச்சியாக பார்த்தார் விஸ்வநாதன்.
ஏற்கனவே அப்பா அவரை சம்மந்தி என்று கூப்பிடாமல் பெயர் சொல்லி கூப்பிட்டது ஆச்சரியமாக தந்தையை பார்த்துவிட்டு, எதிரில் இருந்த விஸ்வநாதனை பார்த்தான் மேகநாதன்.
அவரின் அதிர்ந்த முகத்தை கண்டதும் அவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்று புரிந்து கொண்டான். ஆனால் இனி அதுதானே உண்மை என்று நினைத்து, "அப்பா சொன்னது உண்மைதான் அங்கிள். இது பேசி புரிய வைக்கும் விஷயம் அல்ல, உங்கள் மகனுக்கு சிவன்யாவை பிடிக்கவில்லையாம். ஜோவைதான் பிடித்திருக்கிறதாம்" என்றான் வெறுமையான குரலில்.
அவன் சொன்னதை கேட்டதும், ஜோவுடன் தன் மகன் நண்பனாக இருப்பது சிவன்யாவிற்கு பிடிக்கவில்லை போல என்று புரிந்து கொண்டு, "அவன் சொன்னால் புரிந்து கொள்வான் தம்பி. அங்கு தனியாக இருக்கும் போது உதவியதால் அவன் பிரண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அது தவறுதான், இருந்தாலும் அவனிடம் நான் பேசுகிறேன்" என்றார் மொட்டையாக.
மேகநாதனும் சிவநேசனும் முறைச்சொல்லி கூப்பிடாத போது தான் மட்டும் எப்படி சம்பந்தி மாப்பிள்ளை என்று கூப்பிடுவதற்கு சங்கடமாக இருந்தது.
அவர் பேசியதும் விரக்தியாக சிரித்தான் மேகநாதன். "உங்களுக்கு புரியல அங்கிள்" என்று சொல்லிவிட்டு நளினியின் கணவனை பார்த்து, "தேவ்வும் ஜோவும் ரிலேஷன்ஷிப்ல இருக்காங்க" என்று கூறி "இது உங்களுக்காவது புரிகிறதா?" என்று அவன் முகம் பார்த்தான்.
அதைக் கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. தலையை புரிகிறது என்று ஆட்டினாலும் "என்ன சொல்றீங்க?" என்ற வார்த்தை அவன் வாயில் அதிர்ச்சியாக வந்தது.
ஆமாம் என்று தலையாட்டிய மேகநாதன், சிவன்யா கூறிய அனைத்தையும் கூறி "அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம். நீங்களே சொல்லுங்கள் ஒரு பெண் இரு ஆண்களை அந்த நிலைமையில் பார்த்த பிறகு அவளால் அங்கு இருக்க முடியுமா?" என்று வேதனையா கவலையா கோவமா என்று பிரித்துப் பார்க்க முடியாத உணர்வில் கேட்டான் மேகநாதன்.
நளினியின் கணவன் தன் மாமனாரை பார்க்க, அவரோ அதிர்ந்து அமர்ந்து இருந்தார். "என்ன சொல்றீங்க சம்மந்தி?" என்று நடுங்கும் குரலில் கேட்டார்.
நெற்றியில் வியர்வை துளிகள் உருவாக தன் கைக்குட்டையால் முகத்தை ஒற்றி எடுத்துக் கொண்ட "என்னால் புரிஞ்சுக்க முடியலையே!" என்றார் படபடப்பாக.
அவரின் நிலையை பார்த்ததும் சிவநேசனுக்கு கவலையாகி விட்டது. "இங்கே பாருங்க விஸ்வநாதன். டென்ஷன் ஆகாதீங்க" என்று எழுந்து அவர் அருகில் அமர்ந்து நடுங்கும் அவர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
ஆண்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, தாம் சென்றால் சங்கடமாக இருக்கும் என்று சமையல் அறையிலேயே நின்று, இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த சிவகாமி விஸ்வநாதனின் நடுக்கத்தை பார்த்து விட்டார். வேகமாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்து, "கொஞ்சம் குடிக்க சொல்லுங்க" என்றார்.
மேகநாதனுக்கும் அவரின் நிலைமை புரிந்தது. நளினியின் கணவன் மாமனின் நிலையை கண்டு பயந்துவிட்டான். "மாமா, என்னாச்சு மாமா?" என்று அவரின் முதுகை தடவி விட்டான்.
"அங்கிள் டென்ஷன் ஆகாதீங்க, ரிலாக்ஸா இருங்க" என்று பதட்டமாக கூறிய மேகநாதன், தந்தை சொன்னது போல் பொறுமையாக அவரிடம் பேசி இருக்கலாம். தாம் அவசரப்பட்டு விஷயத்தை நேரடியாக சொன்னது தவறோ என்று உணர்ந்து, "சாரி அங்கிள், இதை எப்படி உங்களிடம் பொறுமையாக சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டிருப்பது சிவன்யாவின் வாழ்க்கை என்ற ஆதங்கத்தில் உங்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆக புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க" என்று கவலையாக அவரின் முகம் பார்த்தான்.
கொஞ்சம் கொஞ்சமா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் "சம்பந்தி நீங்க சொன்னதெல்லாம் உண்மைதானா" என்றார் சிவநேசனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
அவரும் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினார். விஸ்வநாதனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவருக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
இதுபோல் எத்தனையோ செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார். அப்பொழுதெல்லாம் இயற்கைக்கு மாறாக இப்படி இருப்பதை சட்டமும் சரி என்கிறதே என்று நினைப்பார். ஆனால் தங்கள் குடும்பத்தில் தன் மகனே இப்படி இருப்பதை கேட்டதும் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் அப்படியே அமைதியாக கண்களின் மூடி அமர்ந்து விட்டார்.
படித்தவரால் நடந்த நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. இயற்கைக்கு மாறாக நடப்பது தவறுதான் என்று அவருக்கு தெரிந்தாலும் அதை தடுக்கும் இடத்தில் அவர் இப்பொழுது இல்லை.
தன் மகனா என்று நினைத்து வருந்தினார். எப்படி அவனை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்? ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று பாடம் நடத்தினேன். என் பிள்ளை இப்படி ஒரு தவறை செய்திருக்கிறானே என்றும் வருந்தினார்.
அது தவறு இல்லை என்று சட்டம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரைப் போல் அவரும் இல்லை.
இது ஹார்மோன் செயல்பாடல் நடந்தது என்றாலும் கொஞ்சம் அவன் கவனமாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணம் ஓடியது. அவனது நிலைமை மற்றும் சட்டம் என்று அனைத்தும் அவரது அறிவுக்கு தெரிந்தது ஆனால் அவரது மனமோ இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து இல்வாழ்க்கையில் இணைவது அடுத்த தலைமுறை உருவாக்கத்தான். அந்த வாழ்க்கைச் சங்கலியை முறிப்பது போல் இப்படி நடக்கிறது என்று வருந்தினார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை அறிவு ஆட்சி செய்ய ஆரம்பித்தது. இனியும் அவனுக்காக வருந்துவது பயனில்லை என்பதை உணர்ந்தார். நல்ல வேளையாக இப்பொழுதாவது தெரிந்ததே! சிவன்யாவின் வாழ்க்கையாவது இனிமேல் நிம்மதியாக இருக்கட்டும்.
தேவ் சொன்னது போல் உடனே விவாகரத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்று நினைத்து தன்னை தெளிவு படுத்திக் கொண்டார். கண்மூடி அமர்ந்திருந்த விஸ்வநாதனின் கன்னங்களில் வடிந்த கண்ணீரே அவரின் மனப்போராட்டத்தை மற்றவர்களுக்கு உணர்த்தியது.
அவராகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சிவகாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று வருத்தமாக சமையலறை வாயிலில் இருந்து இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் மெதுவாக கண்களை திறந்தார். சிவநேசனின் கைகளை பிடித்துக் கொண்டு, "நடந்தது அனைத்திற்கும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சிவநேசன். தேவ் செய்த தவறுகளுக்காக தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள்.
எங்கள் மீதும் தவறுதான், நல்ல குடும்பத்தில் சம்பந்தம் வைத்தால் மகன் நலமாக வாழ்வான் என்று நினைத்தேனே தவிர, அவனுக்கு பிடித்திருக்கிறதா என்று ஒரு வார்த்தை கூட கேட்க தவறிவிட்டேன். என் தவறால் இன்று சிவன்யா இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது. அதை நானே சரி செய்கிறேன்" என்று தன் கன்னங்களை துடைத்துக் கொண்டு மேகநாதன் பார்த்தார்.
அவனும் அவரை பார்த்துக் கொண்டு இருக்க "உடனே விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் மேகநாதன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து செய்து விடலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். எங்கள் தரப்பில் இருந்து என்னென்ன வேண்டுமோ அனைத்தையுமே நான் உடனே செய்கிறேன். முடிந்தால் இன்றே ஒரு வக்கீலை பார்ப்போம்" என்று உறுதியாக கூறினார் விஸ்வநாதன்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 39
4 weeks ago
-
வெளிச்சம் - 38
4 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 5 Online
- 420 Members
