Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 43

1 Posts
1 Users
0 Reactions
76 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#332]

அத்தியாயம் 43 

 

பார்வதி கைகூப்பி மன்னிப்பு கேட்டதும் அவரது கைகளை பிடித்துக்கொண்ட சிவன்யா "ப்ளீஸ் ஆண்ட்டி இப்படி செய்து என்னை தர்ம சங்கடத்திற்குள் ஆளாக்காதீர்கள். நடந்தது நடந்து முடிந்து விட்டது. இதில் யார் தவறு என்று இனி ஆராய்ச்சி பண்ண அவசியம் இல்லை. இன்றுடன் அனைத்தும் முடிந்துவிடும். இதை அப்படியே விட்டு விடுங்கள்" என்று கூறினாள். 

 

அவளையே பார்த்துக் கொண்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நளினியை கண்டு புன்னகையுடன் தலையசைத்து தன்னிடம் வருமாறு அழைத்தாள் சிவன்யா. 

 

இவ்வளவு நேரம் தாயும் அன்னையும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டே நின்றிருந்த நளினி அண்ணி அழைத்ததும் வேகமாக அவளது அருகில் வந்து நின்று, அவளை கட்டி அணைக்க முயன்றாள். 

 

ஆனால் அவளின் வேகத்திற்கு தடையாக அவளது வயிறு இருவருகளுக்கு இடையும் முட்டிக்கொண்டு நிற்க, அதை பார்த்து புன்னகைத்த சிவன்யா அவளை தன்னுடன் தோளுடன் அழைத்துக்கொண்டு, "எப்படி இருக்கிற நளினி. குட்டி பையன் என்ன சொல்றான்" என்று அவளின் வயிற்றைப் பார்த்துக் கொண்டே அவளது வயிற்றில் கை வைத்து கேட்டாள். 

 

"நான் நல்லா இருக்கேன் அண்ணி, நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாலும் அவளது நிலைமை தான் கண்கூடாக தெரிகிறதே. மெலிந்த தேகம். ஒளி இழந்த கண்கள். இவை அனைத்துக்கும் காரணம் அவர்களுக்கு நடந்த திருமணம். அது நளினியின் கண்களிலும் வருத்தத்தை தோற்றுவிக்க, அவள் கைகளில் மெதுவாக அழுத்தம் கொடுத்து "நான் நல்லா இருக்கேன்" என்றாள் வெற்றுப் புன்னகையுடன். 

 

அதற்குள் இரு குடும்பங்களும் ஒருவருக்கு ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நல விசாரிப்புக்குள்ளுடன் அமைதியாக இருக்க, அதை கலைக்க விரும்பிய மேகநாதன் "எல்லோரும் காலையில சாப்டீங்களா?" என்றான் பொதுவாக. 

 

பெரியவர்கள் அமைதியாக இருக்க, "இல்லை அத்தான்" என்றாள் நளினி வேகமாக. 

 

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நளினியை பார்த்த மேகநாதன், இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்ன செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு, அவரது கணவனை பார்த்து "ஏதாவது வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று சொல்லி, "சரி வாருங்கள் சாப்பிட போகலாம்" என்றான். 

 

பெரியவர்கள் "வேண்டாம் தம்பி" என்று மறுத்தனர். ஆனால் மேகநாதனோ பார்வதியையும் நளினியும் அவள் கணவனையும் அருகில் உள்ள ஹோட்டலில் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்று பிடிவாதமாக அழைத்துச் சென்றான். 

 

 காலையிலேயே சிவன்யா மேகநாதனிடம் சொல்லிவிட்டாள். வழக்கு விசாரணையின் போது நளினியும் பார்வதியும் அங்கு இருக்க வேண்டாம் என்று. அதனால் தான் மேகநாதன் அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அதுபோலவே அவர்கள் சென்றதும் வக்கீல் சிவன்யாவை உள்ளே அழைத்தார், அடுத்தது அவர்கள் கேஸ் தான் என்று.

 

நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த பெண் நீதிபதிக்கு வணக்கம் கூறி, கேஸ் பற்றிய விவரங்களை கூறி, சிவன்யாவையும் தேவ் சார்பாக வந்திருக்கும் அவனது தந்தை விஸ்வநாதனையும் முன்னிறுத்தினார் வக்கீல். 

 

சரியாக அந்நேரம் வீடியோ காலில் தேவ்வும் நீதிபதியிடம் பேசி, தன் நிலைமை அனைத்தையும் கூறி, தான் விவாகரத்து செய்ய விரும்புவதையும் தெளிவாக கூறினான். 

 

நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தேவ் பதில் கூற, அனைத்திற்கும் சம்மதமாய் என்று சிவன்யாவைக் கேட்டார் நீதிபதி. அவளும் சம்மதம் கூற இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக கூறிவிட்டார் நீதிபதி. 

 

அவருக்கு நன்றி கூறிய வக்கீல் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தும் முறைப்படி செய்து தொடங்கினார். அவர்கள் வெளியே வரவும் பார்வதியும் மேகநாதன் உணவு முடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது பார்வதியை பார்த்ததும் விவாகரத்து முடிந்து விட்டது என்று கூறினார் விஸ்வநாதன். 

 

அவர் கூறியதும் அவ்விடம் ஒருவித அமைதி நிலவ, ஒருவருக்கொருவர் முகத்தை வேதனையாக பார்த்துக் கொண்டனர். 

 

"நல்லது" என்று முதலில் பேச்சை ஆரம்பித்தார் விஸ்வநாதன். 

அவர் பேசியதும் அனைவரும் அவரது முகத்தை பார்க்க, அவரோ சிவன்யாவை பார்த்து, 

"நடந்தது நடந்து விட்டது இப்பொழுது, அது முடிந்தும் விட்டது. கடந்த வருடம் உன் வாழ்க்கையில் இல்லை என்று நினைத்துக் கொள். நீ இப்பொழுது பழையபடிக்கு வெறும் சிவன்யா சிவநேசன் தான். 

 

உன் ஆசை பிரகாரம் நன்கு படித்து உன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நடந்தவற்றையெல்லாம் மாற்ற முடியாது, ஆனால் அதை மறக்க முடியும். நடந்தவற்றை மறந்து, எங்களையும் மன்னித்து விடும்மா! இதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை" என்றார் கவலையாக. 

 

சிவன்யா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமைதியாக நின்று இருக்க, சிவகாமி மேகநாதனிடம் கண்களால் ஏதோ கூறினார். 

உடனே அவனும் "சரி இங்கு வந்த வேலை முடிந்து விட்டது. அடுத்து என்ன என்று பார்ப்போம். இங்கு நின்று பேச வேண்டாம், வாருங்கள்" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு வந்தான். 

 

அவனிடம் "நன்றி தம்பி, நாங்கள் இப்படியே கிளம்புகிறோம்" என்றார் விஸ்வநாதன். 

"சரி கிளம்பலாம் அங்கிள். உங்களுக்கு நான் கார் புக் செய்து இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே மேகநாதன் புக் செய்த கார் அங்கு வந்து நின்றது. அதில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தான். அவர்கள் கார் கிளம்பியதும் அவனும் காரை எடுத்துக்கொண்டு, தன் குடும்பத்தினருடன் கிளம்பினான். 

 

காரில் ஏறியதும் பார்வதி "ஏங்க இப்படி அவசரப்படுறீங்க. கொஞ்ச நேரம் இருந்து அவர்களிடம் பேசிவிட்டு வரலாம்ல, இப்படி உடனே கிளம்புகிறேன் என்று சொல்லிட்டீங்க" என்று வருத்தப்பட்டார். 

 

"இதற்கு மேல் அவர்களிடம் பேச என்ன இருக்கிறது பார்வதி. நாம் அவர்கள் கூட இருந்தால் அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். போதும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும். இனிமேலாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்" என்று கூறி கண்களை மூடி அமர்ந்து விட்டார் விஸ்வநாதன். 

 

நளினியின் கணவனும் "ஆமாம் அத்தை, மாமா சொல்லுவதும் சரிதான்" என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருக்கும் மனைவியை, தன் தொளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான். 

 

அனைவருமே சங்கடமான நிலையில் கண்மூடி அமர்ந்து விட்டனர். 

காரின் அசைவு நின்றதும்தான் அனைவருமே கண் விழித்து பார்க்க, கார் சிவன்யாவின் வீட்டின் முன் நின்றது. 

 

அதில் அதிர்ந்த விஸ்வநாதன், கார் ஓட்டியிடம் "என்னப்பா? இங்கே வந்திருக்க? **** ஹோட்டலுக்கு தானே போகணும்" என்றார். 

 

அதிர்ந்த அவர் முகத்தைப் பார்த்த ஓட்டுநர், "இல்லை சார், இங்கே தான் புக் பண்ணி இருக்காங்க!" என்று குழப்பமாக சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது, 

மேகநாதனின் காரும் அங்கே வந்தது. காரில் இருந்து இறங்கிய சிவநேசனும் சிவகாமியும் அவர்களை வீட்டுக்குள் வரும்படி அழைத்தனர். 

 

பெரியவர்கள் தயங்கி நிற்க, "வாங்க விஸ்வநாதன்" என்று அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றார் சிவநேசன். 

தயங்கியபடியே அனைவரும் வீட்டிற்குள் வந்தனர். 

வந்ததும் அவர்கள் அனைவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் சிவன்யா. 

 

"சிவன்யா, நளினியை உன் அறைக்கு அழைத்துச் செல். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும். காலையிலிருந்து நின்று கொண்டே இருக்கிறாள்" என்றான் மேகநாதன். 

சரி என்று தலையாட்டிய சிவன்யா நளினியை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு சென்றதும், விஸ்வநாதனின் கண்கள் கலங்கிவிட்டது. 

 

மீண்டும் கைகூப்பி கண்ணீர் மல்க "எங்களை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்த ஒருவனது குடும்பத்தை இப்படி கவனித்துக் கொள்கிறீர்களே" என்றார் மனசார. 

 

அவர் கையைப் பிடித்து இறக்கி விட்ட சிவநேசன், "போதும் விஸ்வநாதன், நீங்கள் மன்னிப்பு கேட்டதெல்லாம் போதும். சிவன்யா யாரின் மீதும் குற்றமோ, குறையோ சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டாள். அவளே அதை வேண்டாம் என்று சொல்லும் பொழுது, நாங்கள் ஏன் அதைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். 

 

அதுவும் இல்லாமல் உங்கள் எல்லோருக்குமே சிவன்யாவின் மீது இருந்த பாசம் உண்மையானது என்பதை தான் நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோமே! நளினி எப்படி சிவன்யாவின் மீது உயிராக இருந்தால் என்று எங்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவள் நிறை மாதமாக இருக்கும் பொழுது இங்கு இவ்வளவு தூரம் பயணித்து, அவளுக்காக வந்திருக்கிறாள். அவளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதைத்தான் நாங்கள் செய்கிறோம்" என்றார் அமைதியாக குரலில். 

 

"ஆமாம் அண்ணா, எதைப் பற்றியும் யோசித்து உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன்பு போல் உரிமையாக இனிமேல் பேச முடியாட்டாலும், நட்பாக பேசிக்கொள்ள முயற்சி செய்வோம். 

 

நாங்களும் சிவன்யாவை அப்படியே விட்டுவிட போறதில்லை. அவள் விருப்பப்படி அவள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கிறாளோ, அதன்படி நாங்களும் அவளுக்கு உறுதுணையாக இருப்போம். 

 

உங்கள் வீட்டில் நல்லது கெட்டது நடந்தால் எங்களுக்கு சொல்லுங்கள். அது போல் எங்கள் வீட்டில் நல்லது கெட்டதுஎல்லா விஷயத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறோம். முடிந்தால் கலந்து கொள்ளலாம்" என்று பார்வதியின் கையைப் பிடித்துக் கொண்டே பேசி முடித்தார் சிவகாமி. 

 

"சரி சிவகாமி, வந்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டது, தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறோம். சாப்பாடு எல்லாம் தயாரா? சாப்பிடலாமா? என்றார் சிவநேசன். 

 

"எல்லாம் தயார் தாங்க. நான் காலையில் கிளம்பும்போது சொல்லிவிட்டு தான் சென்றேன். எல்லாம் செய்து உணவு மேஜையில் வைத்திருக்கிறாள். வாருங்கள் சாப்பிடலாம்" என்று அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் சிவகாமி. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 25, 2026 7:35 pm

Scroll to Top