Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 38

1 Posts
1 Users
1 Reactions
29 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#301]

அத்தியாயம் 38 

 

இன்றைய விடியல் மகனின் வார்த்தையில் இடியாக இறங்கியது விஸ்வநாதனுக்கு. 

அதிர்ந்து அமர்ந்திருந்த கணவனின் தோளைத் தொட்டு "என்னங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி இடிஞ்சுபோய் உட்கார்ந்து இருக்கீங்க? தேவ் என்ன சென்னான்?" என்று கணவனின் நிலை கண்டு பயந்தபடி கேட்டார் பார்வதி. 

 

"என்னன்னு சொல்ல, என்ன காரணம் என்று சொல்லமாட்றான். விவாகரத்து செய்ய போறானாம்!" என்றார் அதிர்ந்து. 

 

"என்னங்க சொல்றீங்க?. விவாகரத்தா!" என்று அதிர்ந்தார் பார்வதியும். 

 

"ஆமாம் பார்வதி, ஏன் நம் குடும்பத்தில் இப்படி நடக்கிறது. நாம் என்ன பாவம் செய்தோம். கடவுளே அவர்களுக்கு என்னதான் நடந்தது, இருவரும் நலமாக வாழவேண்டும் என்று தானே திருமணம் செய்து வைத்தேன். ஆனால் இவன் இப்படி சொல்றானே" என்று தன் நிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தார். 

 

நடுங்கும் அவரை கண்டு பயந்தார் பார்வதி. "ஒன்றும் இல்லைங்க, நீங்க கவலை படாதீங்க. என்ன என்று இருவரிடமும் பேசுவோம். சிவன்யா நல்ல பொண்ணுங்க. சொன்னா புரிஞ்சுக்குவா. நீங்க கலங்காதீங்க. தைரியமா இருங்க" என்று கணவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தார். 

 

பின்னர் "நான் வேண்டுமென்றால் மருமகளுக்கு ஃபோன் செய்து பேசட்டா?" என்று கணவனின் முகம் பார்த்தார். 

 

"வேண்டாம் பார்வதி. நிச்சயம் துபாயில் ஏதோ பெரிதாக நடந்திருக்கும். அதனால் தான் மருமகள் அப்படி சொல்லி இருக்கிறாள். இன்று தான் அவள் வந்து இருக்கிறாள். நடந்ததை எல்லாம் அம்மா அப்பாவிடம் சொல்லி அழுது இருப்பாள். 

இப்போ தூங்க வைத்திருப்பார்கள். உன் மகன் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறான். இல்லையெனில் சம்மந்தி இவ்வளவு காலையில் ஃபோன் செய்திருக்க மாட்டார். 

மேகநாதன் பேசுனதை கவனித்தாயா? ஒரு முறை கூட மாமா என்று உறவு முறை சொல்லி கூப்பிடவில்லை. அதிலேயே தெரிகிறது அவர்களுக்கு சிவன்யா தேவ்வுடன் வாழ்வதில் விருப்பம் இல்லை என்று. ஆகையால் இப்பொழுது அவளை தொந்தரவு செய்ய வேண்டாம். முடிந்தால் நான் அவளை நேரில் சென்று பார்த்துவிட்டு வருகிறேன், அதன்பிறகு என்ன என்று யோசிப்போம்" என்றார் அமைதியாக. 

 

"நீங்கள் சொல்வதும் சரிதாங்க, நானும் உங்க கூட வருகிறேன்" என்றார் பார்வதி. 

 

"இல்லை பார்வதி, நான் மட்டும் போயிட்டு வாரேன். நீயும் வந்தால் நளினி அவளும் வருவேன் என்று சொல்வாள். இந்த நேரம் அதிக பயணம் வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார்கள் இல்லையா?" என்றார் யோசனையாக. 

 

"ஆமாங்க, ஆனால் நீங்கள் மட்டும் தனியாக எப்படி போவீங்க. வேண்டுமென்றால் மாப்பிள்ளையிடம் சொல்வோம். அவரும் நீங்களும் போயிட்டு வாங்களேன்" என்றார் ஆலோசனையாக. 

 

"சரி பார்வதி, நன்றாக விடியட்டும். அதன் பிறகு நளினிக்கு ஃபோன் செய்வோம். காலையிலேயே அவளையும் கஷ்டப்படுத்த வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அப்படியே கண் மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். 

 

இனிமேல் அவருக்கு உறக்கம் வருமோ என்று தெரியவில்லை. தேவ் என்ன செய்திருப்பான் என்று குழப்பமாகவே இருந்தது. அவரை பொருத்தவரையில் இருவருமே தங்கமான பிள்ளைகள் தான். அவர் செய்த ஒரே தவறு தங்கை கல்யாணம் என்று வந்தவனுக்கு திருமணம் செய்து வைத்தது தான்.

 

முதலில் மறுத்தாலும் திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்வான் என்று தான் நினைத்தார். சிவன்யாவின் குடும்பமும் மிகவும் நல்ல குடும்பமாக இருந்ததால் மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக தான் இருந்தார். 

 

ஆனால் இன்று இருவரும் திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்கு விவாகரத்தை பற்றி பேசுவது வருத்தமாக இருந்தது. 

என்ன நடந்திருக்கும் என்று யோசித்தபடியே கண்மூடி அமர்ந்திருந்தார் விஸ்வநாதன். 

 

ஏற்கனவே சுகரும் பிரஷரும் இருப்பதால் விடியல் காலையில் ஃபோன் அடித்து எழுந்ததில் பார்வதிக்கு உடலுக்கு அசதியாக தலை சுற்றுவது போல் இருக்க, "நான் கொஞ்ச நேரம் படுத்து எழந்துட்டு வரேன்ங்க" என்று சொல்லிவிட்டு படுக்கையில் சென்று படுத்து விட்டார். 

 

படுத்து கண் மூடினாலும் அவருக்கு சிவன்யாவின் நினைவு தான் ஓடியது. திருமணம் முடிந்து இங்கு வந்திருந்த பொழுது தன் குடும்பத்தினருடன் எவ்வளவு சகஜமாக பழகினாள். நளினியின் திருமணத்திற்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். 

 

தேவ் ஊருக்கு போகும் வரை அவளிடம் சரியாக கூட பேசவில்லை. ஆனால் அதை எதையுமே அவள் முகத்தில் காண்பித்துக் கொள்ளவே இல்லை. போகப்போக தேவ் சரியாகி விடுவான் என்று தான் நினைத்தது போலத்தான் சிவன்யாவும் நினைத்து அவனுடன் வாழ்ந்தாள். 

 

அப்படி இருக்கும் போது, இப்பொழுது இருவரும் பிரிவதாக முடிவு செய்திருப்பதில் மிகவும் வருத்தமாக இருக்க, கணவன் வேறு தேவ் மீதுதான் தவறி இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார். 

 

தன் மகனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விட்டதோ என்றும் வருத்தமாக இருக்க, அவருக்கு தலை வலிப்பது போல் இருந்தது. எதையும் யோசிக்காமல் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தான் நல்லது என்று, கடவுளிடம் இருவரது வாழ்க்கையையும் சரிபடுத்தும் படி வேண்டிக் கொண்டே படுத்திருந்த பார்வதி தன்னையும் அறியாமல் உறங்கி விட்டார். 

 

ஆனால் உறக்கம் இல்லாமல் கண் மூடி சாய்ந்திருந்த விஸ்வநாதன், நன்கு விடிந்ததும் மெதுவாக கண் திறந்து, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். பார்வதி சொன்னது போல நளினியின் கணவனை சென்னைக்கு அழைத்துச் செல்லலாமா? அது சரியா வருமா என்றும் யோசித்தார். 

 

காலையிலேயே சிவன்யா தனியாக சென்னை வந்த செய்தியை கூறினால் நளினி பதட்டப்படுவாளே! என்ன செய்வது? என்றும் யோசித்தார். ஆனால் இது மறைத்துச் செய்யும் விஷயம் இல்லை. எப்படியும் எல்லோருக்கும் ஒரு நாள் தெரிந்து விடும். ஆகையால் நளினியின் கணவனிடம் சொல்லி விடலாம் என்று அவருக்கு ஃபோன் செய்தார் விஸ்வநாதன். 

 

காலையிலேயே மாமா ஃபோன் செய்ததும் குழப்பமாகவே ஃபோனை எடுத்த நளினியின் கணவன், "சொல்லுங்க மாமா, என்ன விஷயம்? இவ்வளவு காலையிலேயே ஃபோன் செய்கிறீர்கள்?" என்று யோசனையாக கேட்டான். 

 

"அது" என்று தயங்கி பின்னர் "சிவன்யா தனியாக சென்னை வந்திருக்கிறாளாம் மாப்பிள்ளை. ஏதோ பிரச்சனை இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன என்று நேரில் சென்று கேட்டு வரலாம் என்று யோசிக்கிறேன். பார்வதியும் என்னுடன் வருகிறேன் என்கின்றாள். பார்வதி வந்தால் நளினியும் வருவேன் என்று அடம்பிடிப்பாள். அதுதான் முதலில் நான் மட்டும் தனியாக சென்று வரலாம் என்று முடிவெடுத்தேன்" என்று அவர் முடிக்கும் முன்பே, 

 

"ஏன் மாமா தனியாக போகிறீர்கள்? நானும் வருகிறேன்! இன்று கிளம்பலாம், கவலைப்படாதீர்கள். நளினியை அத்தை பார்த்துக்கொள்வார்கள். எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு மதியத்துக்குள் வருகிறேன், சாயங்காலம் கிளம்பலாமா?" என்றான். 

 

"சரி மாப்பிள்ளை, பார்வதியும் உங்களைத்தான் கூட்டிக்கொண்டு செல்ல சொன்னாள். சரி நீங்கள் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள். எனக்கும் இன்று காலையில் முக்கியமான ஒரு வகுப்பு இருக்கிறது. அதை முடித்துவிட்டு விடுப்பு சொல்லிவிட்டு வருகிறேன், சாயங்காலம் கிளம்பலாம்" என்று கூறி வைத்தார். 

 

என்ன விஷயம் என்று கேட்ட தன் பெற்றோரிடம், மேலோட்டமாக விஷயத்தைச் சொல்லி, "நானும் மாமாவும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம் அம்மா. நளினியை அவர்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு நளினியிடமும் சிவன்யா சென்னை வந்திருப்பதாக கூறி, தானும் மாமாவும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம் என்றான். 

 

"ஐ, அண்ணி வந்திருக்காங்களா? அப்போ நானும் வருவேன்" என்று குதூகலமாக கூறினாள் நளினி. 

 

"உன்னை டாக்டர் ரொம்ப தூரம் பயணம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்காங்க, ஞாபகம் இருக்குதா!" என்றான். 

 

"அதெல்லாம் ஞாபகம் இருக்கு. அண்ணியை தானே பார்க்க போறேன். அதெல்லாம் ஒன்றும் ஆகாது" என்றாள் மகிழ்ச்சியாக. 

 

"முதலில் நானும் மாமாவும் போய் பார்த்துவிட்டு வருகிறோம். முடிந்தால் உன் அண்ணியையும் கூட்டிக்கொண்டு வருகிறோம், சரியா? இப்பொழுது மதியம் உங்க அம்மா வீட்டுக்கு போகணும், அதற்கு தயாராகு. சென்னைக்கு எல்லாம் உன்னை இப்பொழுது கூட்டிட்டு போக மாட்டேன்" என்று உறுதியாக கூறிவிட்டு தன் வேலைகளை முடித்து வர கிளம்பினான். 

 

 

சொன்னபடியே தன் வேலைகளை முடித்து, தன் நிறுவனத்தில் தனக்கான விடுப்பையும் சொல்லிவிட்டு, தன் மனைவியை அழைத்துக்கொண்டு மாமனாரின் வீட்டிற்கு வந்தான். 

 

வீட்டிற்கு வந்து தன் தாய் கண்டதும் "அம்மா, அண்ணி வந்திருக்கிறார்களாமே?" என்று சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைந்த நளினிக்கு, அங்கு சோகமாக அமர்ந்திருந்த தாயை கண்டதும் குழப்பமாகிவிட்டது. 

"என்னம்மா? அண்ணி வந்திருக்காங்க? நீங்க இப்படி சோகமா உட்கார்ந்து இருக்கீங்க?" என்று கேட்டபடி அவரின் அருகில் வந்து அமர்ந்தாள் நளினி. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 12, 2026 8:40 pm
Kalidevi reacted

Scroll to Top