வெளிச்சம் - 39
அத்தியாயம் 39
சிவன்யா சென்னைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்த நளினிக்கு, அங்கு சோகமாக அமர்ந்திருக்கும் தன் தாயைக் கண்டு குழப்பமாகியது.
"என்னாச்சும்மா? அண்ணி வந்திருக்காங்கன்னு இவர் சொன்னார், ஆனால் நீங்கள் கவலையாக உட்கார்ந்திருக்கிறீர்கள்!" என்று அவரின் அருகில் அமர்ந்தாள்.
அவளின் கேள்வியை வைத்தே, அவளிடம் இன்னும் எதுவும் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டார். "ஒன்னும் இல்லமா, தனியாக வந்திருக்கிறாள் அதுதான் கவலையாக இருக்கிறது" என்று மகளிடம் சொல்லிவிட்டு "வாங்க மாப்பிள்ளை" என்று மருமகனையும் வரவேற்றார்.
அவர்கள் வந்து சிறிது நேரத்திலேயே விஸ்வநாதனும் வந்துவிட, வந்ததும் வேகமாக சென்னை செல்வதற்கு கிளம்ப ஆயத்தமானார்.
அவரிடமும் நளினி "அப்பா, அண்ணியை பார்க்க நானும் வருகிறேன் அப்பா" என்று ஆரம்பிக்க,
"நீ இப்பொழுது பயணம் செய்ய வேண்டாம்மா. நானும் மாப்பிள்ளையும் முதலில் போய் வருகிறோம்" என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்கள்.
புகை வண்டியில் செல்லலாம் என்று நளினியின் கணவன் எவ்வளவு கூறியும், "இரவு 8 மணிக்கு மேல் தான் ட்ரெயின் இருக்கு மாப்பிள்ளை, இப்பவே போனோம்னா ஏதாவது பஸ் புடிச்சு புடிச்சு சீக்கிரம் போயிடலாம்" என்று அவரை அவசரப்படுத்தி, முதலில் மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.
அதுபோல் மதுரை வந்ததும் அங்கிருந்து உடனே நேரடியாக சென்னைக்குச் செல்லும் பஸ் ஏறிவிட, கிட்டத்தட்ட பத்து மணி நேரம் பயணம் செய்து காலை 3 மணி அளவில் சென்னை வந்து விட்டார்கள். அங்கிருந்து உடனே ஆட்டோ பிடித்து சிவன்யா வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகுதான் சிறிது நேரம் பேருந்து நிலையத்திலேயே இருந்து விட்டு வந்திருக்கலாமோ! இன்னும் விடிய கூட இல்லையே! இப்பொழுதே வந்து விட்டோமே என்று வருந்தினார் விஸ்வநாதன்.
வீட்டு வாசல் வரை வந்து விட்டு இப்பொழுது யோசித்து பயனில்லை என்று வீட்டின் அழைப்பு அணியை அழுத்தினார். சிறிது நேரத்திலேயே கதவு திறக்கப்பட்டது.
அங்கு நின்றிருந்தவர்களை இந்நேரத்தில் எதிர்பார்க்காத மேகநாதன், அவர்களை குழப்பமாக பார்த்து "வாங்க" என்று வரவேற்று, "இவ்வளவு காலையிலேயே வந்து விட்டீர்கள்!" என்று முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் கேட்டான்.
அவன் பேசுவதில் ஒட்டாத தன்மை இருப்பதைக் கண்ட விஸ்வநாதன் வருந்தி, "இல்ல தம்பி, அது வந்து, சிவன்யா" என்று தயங்கினார்.
என்னதான் தேவ்வின் மீது அவனுக்கு கோவம் இருந்தாலும், வயதானவரிடம் அதை காண்பிக்க அதனால் முடியவில்லை. "சரி, ரொம்ப தூரம் பயணித்து வந்திருக்கீங்க. கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க. எல்லோரும் தூங்கிக்கிட்டு தான் இருக்காங்க. விடிந்ததும் எல்லாவற்றையும் பேசிக்கலாம்" என்று அங்கிருந்த ஒரு அறையை காண்பித்து, இருவரையும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படி சொல்லி, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, அப்படியே ஹாலில் வந்து அமர்ந்து விட்டான்.
சிவன்யா வந்ததிலிருந்து அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஏதாவது பேசினாலே உடனே அழுது விடுகிறாள். சிவநேசன் அவளிடம் இப்போது எதையும் பேச வேண்டாம் என்று சொன்னதால், தாயும் மகனும் அவளிடம் எதைப் பற்றியும் பேசுவது இல்லை. சிவகாமி மகளுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்க, அதையும் சாப்பிட மறுத்தாள் சிவன்யா.
அதட்டி உருட்டி அவளை எப்படியாவது சாப்பிடு வைத்து விடுவார் சிவகாமி. அவளாகவே நடந்தவற்றில் இருந்து வெளியே வரட்டும் என்று வீட்டில் இருந்தவர்களுக்கு அமைதியாக இருந்தனர்.
மகளின் முன் தங்கள் சோகத்தை காண்பிக்காமல் இருந்தாலும், அவர்களும் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலை இருந்தது. அதை நினைத்து அவர்கள் உறக்கமும் போக, மகள் வந்து இரண்டு நாளிலேயே ஐந்து வயது கூடியது போல் ஆகிவிட்டனர் அவளது பெற்றவர்கள்.
அதை பார்த்து கவலை பட்ட மேகநாதன் முதலில் அவர்கள் நன்றாக உறங்கட்டும் என்று, நேற்று இரவு அவர்கள் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டான். மாத்திரையின் விளைவாக சிவநேசனும் சிவகாமியும் நன்கு உறக்கத்தில் இருக்கும் பொழுது தான், விஸ்வநாதனும் அவர் மருமகனும் வந்திருக்கிறார்கள்.
இப்பொழுது பெற்றோரின் உறக்கத்தை கெடுக்க முடியாது. ஆகையால் வந்திருப்பவர்களை சிறிது நேரம் ஓய்வு எடுக்க அனுப்பிவிட்டான். விடிந்ததும் அவர்கள் சிவன்யாவை பார்ப்பார்கள். அவள் இவர்களை எப்படி எதிர்கொள்வாள். பார்த்த பிறகு எந்த நிலைமையில் இருப்பாள் என்று தெரியவில்லையே. அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று யோசனையோடு, ஹாலிலேயே அமர்ந்து விட்டான் மேகநாதன்.
விஸ்வநாதனுக்கும் பயணப்பட்டு வந்தது அலுப்பாக இருக்க, மேகநாதன் படுக்கச் சொன்னதும் உறக்கம் வருமா என்று யோசனையோடு தான் படுத்தார். ஆனால் அசதியில் நன்றாகவே உறங்கி விட்டார்.
சிவகாமியும் அவராக கண் விழிக்கும் போது மணி ஆறைக் கடந்து விட்டது. கண்களை கசக்கி 'என்ன? இன்று இவ்வளவு நேரம் உறங்கி விட்டோம்' என்று கணவனை பார்க்க, அவரும் உறங்கிக் கொண்டு இருந்தார்.
பின்னர் எழுந்து தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வர, ஹாலில் இருந்த பெரிய சோபாவில் மேகநாதன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான்.
"என்ன இவன். ஹாலிலேயே உறங்குகிறான். அவனது அறைக்கும் சொல்லவில்லையா? என்று நினைத்துக் கொண்டு, "மேக.." என்று முழுப்பெயர் சொல்வதற்குள்ளாக, அவன் கண் விழித்து பார்த்தான்.
"என்னம்மா? அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்க. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே" என்று எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டான்.
"நீயேன்ப்பா இங்கேயே படுத்து விட்டாய். அறைக்குச் சென்று நன்றாக உறங்கி இருக்கலாமே!"
"சும்மா இங்கே உட்கார்ந்து இருந்தேன்ம்மா. அப்படியே உறக்கம் வந்துவிட்டது" என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்று. வேகமாக காலை வேளைகளை முடித்து, குளித்துவிட்டு வந்தான். அவன் வந்ததும் சிவநேசனும் வர, இருவதற்கும் குடிப்பதற்கு காபியை கொடுத்துவிட்டு, சிவன்யா அறைக்கு சென்றார் சிவகாமி.
அவளும் விழித்து தான் இருந்தாள். கட்டில் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்து, எங்கோ இலக்கில்லாமல் பார்த்து தொண்டு இருந்தாள். அவள் முகமே அவள் சரியாக உறங்கவில்லை என்று கூறியது. மகளின் தலையை மென்மையாக கோதிவிட்டு, "காபி குடி டா" என்று கொடுத்தார். பதில் ஏதும் கூறாமல் தாயின் கையில் இருந்த கப்பை வாங்கிக் கொண்டாள் சிவன்யா.
ஏதோ இந்த மட்டம் காபியையாவது மறுக்காமல் வாங்கிக் கொண்டாளே என்று நினைத்துக் கொண்டு வெளியேறினார் சிவகாமி.
அவர் ஹாலுக்கு வந்ததும் "தேவ்வோட அப்பாவும் மச்சானும் வந்திருக்கிறார்கள்" என்றான் மேகநாதன் பொதுவாக.
பெற்றோர் இருவரும் அவனே பார்க்க,
"என்னப்பா சொல்ற? எப்ப வந்தாங்க?" என்றார் சிவநேசன்.
"விடியற்காலையில் வந்தார்கள். கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்" என்று அவர்கள் இருக்கும் அறையைப் பார்த்தான். .
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த இருவரும் ஹாலில் இவர்கள் பேசும் சத்தம் கேட்டு எழுந்தனர். வேகமாக காலைக்கடன்களை முடித்துதனர் இருவரும்.
வந்தவர்களுக்கு உணவு சமைப்பதற்காக சிவகாமி சென்றுவிட, தந்தையும் மகனும் விஸ்வநாதனிடம் என்ன பேசுவது என்று கலந்தாலேசித்துக் கொண்டு இருந்தனர்.
"அப்பா, நீங்கள் அவர்களிடம் முடிவாக சொல்லிவிடுங்கள். விரைவாக விவாகரத்திற்கு ஏற்பாடு செய்வோம்" என்றான்.
"டேய் பொறுமையாக சொல்லலாம்"
"என்ன பொறுமையாக அப்பா? தங்கச்சியோட வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்" என்றான் சற்று கோபமாக.
"அவரும் வயதானவர்ப்பா, இத்தனை தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கிறார். கொஞ்சம் யோசித்து பொறுமையா சொல்லலாம் என்று தாண்டா சொல்றேன்"
"போதும்ப்பா, யார்யாருக்காகவும் யோசித்து யோசித்து செய்ததெல்லாம் போதும். சிவன்யா நிலைமையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதற்கு மேலும் என்ன பொறுமை வேண்டி கிடக்கு. அவரது மகனை பற்றி அனைத்தையுமே சொல்லி விடுங்கள் ப்ளீஸ். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்" என்றான்.
சிவன்யா வந்ததில் இருந்து. எதற்கெடுத்தாலும் கோபமாகவே பேசிக் கொண்டிருக்கிறான் மேகநாதன். அவனிடம் விஷயத்தை சொல்லச் சொன்னால் படபடவென்று எதையாவது சொல்லி, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த சிவநேசன், "சரி சரி, நீ ரொம்ப டென்ஷன் ஆகாத. நானே சொல்றேன். நீ முதலில் போய் சிவன்யாவிடம் அவர்கள் வந்திருப்பதை சொல்லிவிட்டு வா" என்றார் சிவனேசன்.
"ம்ம்" என்று பெருமூச்சு விட்ட மேகநாதன் "என்னமோ பண்ணுங்க" என்று எழுந்து தங்கையின் அறைக்குச் சென்றான். தாய் கொடுத்த காபியை கையில் வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சிவன்யா.
"என்னடா? காபி குடிக்கலையா?" என்று கேட்ட அண்ணனையும் தன் கையில் இருந்த காபியையும் பார்த்தாள். பின்னர் "இதோ" என்று குடிக்க போக,
"ஆறி போயிடுச்சு, இரு. நான் வேற எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி அவளிடம் இருந்து வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, "தேவ்வோட அப்பா வந்திருக்கிறார்" என்றான் அவளின் முகத்தை பார்த்தபடியே.
முதலில் அமைதியாக இருந்த சிவன்யாவிற்கு விஸ்வநாதனை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் வர, ஒரு வித படபடப்பு தோன்றியது அவளிடம்.
மென்மையாக அவள் கையைப் பற்றிக் கொண்டு, "ரொம்ப டென்ஷன் ஆகாத, அனைத்தையும் அவரிடம் சொல்வோம். நிச்சயம் அவர் புரிந்து கொள்வார். கவலைப்படாதே, இனிமேல் எல்லாம் நல்லதாக தான் நடக்கும் சரியா?" என்று மென்மையாக அவள் தலையை கோதி விட்டான் மேகநாதன்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 40
4 weeks ago
-
வெளிச்சம் - 38
4 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 5 Online
- 420 Members
