Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 41

1 Posts
1 Users
0 Reactions
25 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#330]

அத்தியாயம் 41 

 

விஸ்வநாதனே புரிந்து கொண்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் மேகநாதன். 

 

"முதலில் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் விஸ்வநாதன். அனைத்தையும் செய்யத்தான் போகிறோம் அதனால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்" என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டு, 

"சாப்பாடு தயாராகி விட்டதா?" என்று மனைவியை பார்த்தார் சிவநேசன். அனைத்தையும் எடுத்து உணவு மேஜையில் வைத்து "சாப்பிடலாம் வாங்க" என்றார் சிவகாமியும். 

 

இருவரையும் சாப்பிட வரும்படி கூறி எழுந்த சிவநேசனிடம் "எனக்கு இப்பொழுது எதுவும் வேண்டாம்" என்றார் விஸ்வநாதன். 

அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காலை உணவை கொடுத்து "எல்லாம் நம் கைமீறி போகிவிட்டது விஸ்வநாதன். அதை நினைத்து நாம் நம் உடல் நிலையை கெடுத்துக்க வேண்டாம். நன்றாக சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொண்டால் தான் நடப்பவற்றை தாங்கிக் கொள்ள முடியும்" என்றார். 

தாங்கள் பார்த்து பார்த்து செய்து வைத்த கல்யாணம் முடிவுக்கு வருவது நினைத்து அனைவருக்குமே அது வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். மனதும் உடம்பும் தாங்க வேண்டும், அதற்காவது சிறிது சாப்பிட வேண்டும் என்று கூறி அனைவரையும் சாப்பிடும்படி கூறினார். 

 

ஆண்கள் சாப்பிட சிவனியாவிற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டார் சிவகாமி. அவள் உணவு உண்ண மறுக்க வற்புறுத்தி உணவை கொடுத்தார். 

"இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார்ந்திருக்க போகிறாய்? எல்லோரும் வந்து இருக்கிறார்கள் அல்லவா! அவர்களிடம் பேச வேண்டாமா?" என்றார் மகளை பார்த்து. 

 

நான் அவர்களை எப்படி அம்மா பார்ப்பேன்?" என்று கலங்கினாள் சிவன்யா. 

 

"நீ ஏன் பயப்படுகிறாய்? நீ எந்த தவறும் செய்யவில்லை, தைரியமாக இரு. எல்லோரும் சாப்பிட்டு முடித்து இருப்பார்கள். நீ வெளியே வா" என்று அவளை வற்புறுத்தி அழைத்து வந்தார். 

 

சொன்னது போலவே அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சிவன்யாவை பார்த்ததும் வேகமாக எழுந்து வந்த விஸ்வநாதன், அவளின் கையை பற்றி கொண்டு, 

"சாரிமா, எனக்கு தேவ்வை பற்றி எதுவும் தெரியாது. நான் அவசரப்பட்டு உங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். தவறும் முழுவதும் என்னுடையதுதான். தயவுசெய்து என்னை மன்னித்து விடுமா" என்று கூறி அவளது காலில் விழப் பார்த்தார். 

 

அவர் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அனைவரும் எழுந்து அங்கு வந்து நின்றனர். கடைசியில் அவர் செய்யும் செயலில் சிவன்யா பயந்து விலகப் பார்க்க, மேகநாதன் அவரை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான். 

 

"என்ன செய்றீங்க அங்கிள்? அவள் சின்ன பிள்ளை, அவள் காலில் போய் விழப் போறீங்க?" என்றான் சற்று கோபமாக. 

 

அதற்குள் சிவகாமியோ பதறிவிட்டார். "ஏன்ண்ணா இப்படி செய்கிறீர்கள்? என்ன பாவம் செய்தோமோ, எங்கள் மகள் வாழ்க்கை இப்படி இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அவளது காலில் பெரியவர்களான நீங்க விழுந்து அதுவும் என் மகள் தலையில் தான் விழும்" என்று வாயை பொத்தி அழுதபடி கூறினார். 

 

"எனக்கு எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை, அதுதான்" என்ற விஸ்வநாதன், "மன்னிக்கும் படியான நிகழ்வுகள் உன் வாழ்க்கையில் நடக்கவில்லை மா. தயவுசெய்து எப்படியாவது எங்களை மன்னித்து விட்டு, இதை மறந்துவிடுமா" என்றார் வேதனையாக. 

 

"உங்கள் மீதும் என்ன தவறு? எல்லாம் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, அதான் நடந்து விட்டது" என்றாள் சோகமாக. தேவ் உடன் அவளுடைய வாழ்க்கை இனிமேல் இல்லை என்பதால் அவரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் வெறுமனே தன் வார்த்தையை முடித்துக் கொண்டாள். 

 

அதைப் புரிந்து கொண்ட விஸ்வநாதன் "நீயும் என்னை மேகநாதன் போல் அங்கிள் என்றே கூப்பிடுமா. இப்படி யாரோ ஒருவருடன் பேசுவது போல் பேசாதே" என்று மென்மையாக கூறிவிட்டு, 

மேகநாதனிடம் "இங்கு உங்களுக்கு தெரிந்த வக்கீல் யாராவது இருந்தால் சொல்லுப்பா, போய் பார்ப்போம்" என்றார். 

 

மேகநாதனும் சிவநேசனும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பேசி சென்னையின் பிரபல வக்கீல் ஒருவரிடம் போகலாம் என்று முடிவு செய்தனர். அதன்படியே தியாகராஜ நகரில் இருந்த அவரது அலுவலகத்திற்குச் சென்று, தேவ் சிவன்யா திருமணம் பற்றி அனைத்தையும் கூறி, இன்று நடந்தது வரை அனைத்தையும் சொல்லி, 

"இருவருக்கும் விவாகரத்துச் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அதன்படியே நாங்களும் நடந்து கொள்வோம்" என்றார் விஸ்வநாதன். 

 

"இருவரும் ஒரு மனதாக பிரிய வேண்டும் என்று நினைப்பதால் விவாகரத்து கிடைத்துவிடும். ஆனால் குறைந்தது ஒரு வருடங்களாவது தனித்து வாழ்ந்திருக்க வேண்டுமென்று தான் சொல்வாங்க. ஆனால் தேவ் விஷயம் பற்றி யோசிக்கும் பொழுது விவாகரத்து சீக்கிரம் கிடைத்து விடும் என்று தான் தோன்றுகிறது" என்று கூறி இருவரிடமும் தேவையானவற்றை வாங்கி அன்றே நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு பதிவு செய்தனர் அவர்கள் வக்கீல். 

 

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். தைரியமாக செல்லுங்கள். தேவ் இங்கு வருவது போல் இருக்கும். அவர் எப்பொழுது நேரில் வருவார் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்" என்று சொல்லி அவர்களை அனுப்பினார் வக்கீல். 

 

அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு வர சாயங்காலம் ஆகிவிட்டது. வந்ததும் இருவரும் குளித்து முடித்து உடனே ஊருக்கு கிளம்புவதாக கூற, இரவு உணவு உண்டு விட்டு செல்லும்படி கூறினார் சிவகாமி. 

 

அவரிடம் "இல்லம்மா உடனே கிளம்புகிறோம்" என்று தயக்கமாக கூறினார் விஸ்வநாதன். 

 

"பரவாயில்ல அங்கிள், உங்களுக்கு நான் டிக்கெட் போட்டுட்டேன். எட்டு மணிக்கு தான் ட்ரெயின். 7 மணிக்கு இங்க இருந்து கிளம்பினால் போதும். கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க" என்று சொல்லிவிட்டு, 

"அம்மா, நீங்கள் அவர்களுக்கு இரவு உணவு தயார் செய்யுங்கள்" என்று கூறினான் மேகநாதன். 

 

சொன்னது போலவே 7:00 மணிக்கு அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து அவனே அழைத்துச் செல்ல தயாராக இருந்தான். காலையில் சிவன்யாவை பார்த்தது தான். சாயங்காலம் வந்ததிலிருந்து அவள் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. 

 

தயக்கமாக "சிவன்யாவிடம் கொஞ்சம் பேசட்டுமா?" என்று சிவநேசனை பார்த்தார். அவரும் சரி என்று தலையாட்டி சிவன்யாவின் அறையை காண்பித்தார். 

 

சிவன்யாவின் அறைக் கதவைத் கட்டிக் கொண்டு, உள்ளே வந்த விஸ்வநாதன் கட்டிலில் சோகமாக அமர்ந்திருக்கும் சிவன்யாவை கண்டு வருந்தினார். 

 

இவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற சிவன்யாவிடம் "உட்காருமா" என்று அவளை கட்டிலில் உட்கார வைத்து, சற்று தள்ளி அவரும் அமர்ந்து கொண்டு, "நடந்ததை எல்லாம் மறந்து விட முயற்சி செய்ம்மா. நாங்கள் இன்று வக்கீலை பார்த்துவிட்டு வந்தோம். சீக்கிரம் உனக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்து விடும். அதன் பிறகு உன் விருப்பம் என்னவோ அதுபடி செய்ம்மா, எதற்கும் தயங்கி நிற்காதே. 

 

ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு திருமணமோ விவாகரத்தோ தடைக்கல்லாக இருக்கக் கூடாது. உனக்கு மேலும் படிக்க வேண்டுமென்றால் படி. இல்லை, வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் செல். கொஞ்ச காலம் உன் மனதை மாற்றிக் கொண்டு அடுத்து நல்லதாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்மா. அப்பொழுதுதான் எனக்கும் உங்க அத்.." அத்தைக்கும் என்று சொல்ல வந்து "பார்வதிக்கும் சங்கடம் இல்லாமல் இருக்கும். நிம்மதியாக இருப்போம், சரியா?" என்றார். 

 

படிப்பு வேலை எல்லாம் சரிதான். ஆனால் மற்றும் ஒரு திருமணமா? என்று பயந்தாள் சிவன்யா. 

"இல்லை அங்கிள், எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்" என்று தரையைப் பார்த்துக் கொண்டு கூறினாள் சிவன்யா. 

 

அவரும் பெருமூச்சு விட்டு "இப்பொழுது அதைப் பற்றி பேச வேண்டாம் சிவன்யா. முதலில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் படி, இல்லையென்றால் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் வேலைக்கு போ. இப்படியே வீட்டுக்குள் அடைந்து கிடைக்காதே, வெளியே சென்று அனைவருடனும் பழகினால் தான் தேவையில்லாதவற்றையெல்லாம் மறக்க முடியும், சரியா?" என்று சொல்லிவிட்டு, 

 

"நாங்கள் இன்று ஊருக்கு கிளம்புகிறோம். இனி வக்கீல் எப்பொழுது வர சொல்கிறாரோ அப்பொழுதுதான் வருவேன். நீ உன்னை நன்கு கவனித்துக் கொள்மா. நன்றாக சாப்பிடு, கண்டதையும் யோசிக்காமல் நன்கு தூங்கி ஓய்வெடு. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படு. 

 

உனக்கு இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நானும் பார்வதியும் என்றைக்கும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருப்போம்" என்று அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் விஸ்வநாதன். 

 

அவர் இன்றே கிளம்புவதாக கூறியதும் நளினிக்காக வாங்கி வந்தவற்றையெல்லாம், "இது நான் நளினிக்காகவும் உங்களுக்காகவும் வாங்கியது என்று" அவரிடம் கொடுத்தாள். 

 

அவர் அதை மறுக்கவில்லை. கண்களில் கண்ணீருடன் அதை வாங்கிக் கொண்டார். எவ்வளவு ஆசையாக அனைத்தையும் வாங்கி இருப்பாள் என்று அவருக்கு தெரியும். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பொழுது இதை கொடுக்கிறாள் என்றும் தெரியும். 

 

"கண்டிப்பாக நான் இதை நளினியிடம் கொடுக்கிறேன். ஆனால் என்னால் நளினியிடமும் பார்வதியிடமும் தேவ்வை பற்றி, இப்பொழுது சொல்ல முடியுமா என்று தெரியவில்லைம்மா" என்றார் கண்களில் கண்ணீருடன். 

 

"பரவாயில்லை, அவர்களிடம் எதையும் சொல்லத் தேவையில்லை. ஆண்டியை பார்த்துக்கோங்க" என்றாள் வெறுமையாக. 

 

"சரி மா, நீயும் கவனமாக இரு. தெளிவான முடிவெடு" என்று சொல்லிவிட்டு "நாங்கள் கிளம்புகிறோம்" என்று கூறி அவளிடம் விடைபெற்றார் விஸ்வநாதன். 

 

- தொடரும்..

 

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 25, 2026 7:20 pm

Scroll to Top