வெளிச்சம் - 28
அத்தியாயம் 28
உன்னிகிருஷ்ணன் தான் துபாய் வந்த கதையை சொல்ல ஆரம்பித்தான். "நான் அவ்வளவாக படிக்கவில்லைம்மா. குடும்ப சூழ்நிலை தான் காரணம். எனக்கு இரு தங்கைகள். தந்தை தோட்டத்தில் கூலி வேலைதான் செய்து வந்தார். நான் படிக்கும்பொழுதே கட்டிட வேலைக்கு செல்வேன். அப்பொழுது எங்கள் ஊரில் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரின் மூலம் குடும்ப சூழ்நிலை காரணமாக 12 வது முடித்ததும் துபாய் வந்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு மிகவும் இங்கு இருப்பது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் என் வருமானத்தில் தங்கைகளை படிக்க வைக்க முடியும் என்று நினைக்கும் பொழுது அதை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டேன். தங்கைகள் இருவரையும் கல்லூரி படிப்பு படிக்க வைத்தேன். ஒரு பெரிய தங்கை ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறாள். சின்னவள் பள்ளிக்கூடத்தில் டீச்சராக வேலைக்கு சேர்ந்து விட்டாள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையா? ஆகையால் என் கஷ்டங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு என்னால் முடிந்த அளவிற்கு வேலை செய்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். என் இரு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது.
அதன் பிறகு என் தாய் தந்தையர் எனக்கும் மனம் முடிக்க வேண்டும் என்று சொல்ல, எனக்கு அதில் அவ்வளவு விருப்பமில்லை. திருமணம் முடித்து என் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் இங்கு தனியே இருந்து கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து வேண்டாம் என்றேன்.
ஆனால் தந்தையோ அந்தந்த வயதில் நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்த விட வேண்டும்ப்பா. பின்னர் காலம் தாழ்த்தி வருத்தப்படக்கூடாது என்று பிடிவாதமாக எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்து நல்லபடியாக திருமணத்தையும் முடித்துவிட்டார்.
என் மனைவி மிகவும் நல்லவள். அது மட்டும் அல்ல எங்களை விட சற்று வசதியானவர்களும் கூட. அவளின் ஊரில் அவர்களுக்கு ஒரு ஏக்கர் அளவிற்கு நிலம் இருக்கிறது.
அது அவள் பெயருக்கு தான் வரும். அதனால் அதில் ஒரு தங்கும் விடுதி மாதிரி கட்டலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதற்காகத்தான் இப்பொழுது பணம் சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். ஓரளவு முடியும் தருவாயில் இருக்கிறது. ஒரே நேரத்தில் 7, 8 குடும்பங்கள் வந்து தங்கும் அளவிற்கு இருக்கும். ஓரளவிற்கு கட்டிடங்கள் கட்டி விட்டோம். இன்னும் ஒரு இரண்டு வருடத்தில் முடிந்து விடும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இந்த வெளிநாட்டு வாழ்க்கை ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்" என்று புன்னகையாக அவள் முகத்தை பார்த்தான்.
"மேலும் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு நான்கு பிள்ளைகள்" என்றான் புன்னகையாக.
அவள் ஆச்சரியமாக அவனை பார்க்க, "எல்லாருமே ட்வின்ஸ். முதலில் இரண்டு பையன்கள். அடுத்த பிரசவத்தில் இரண்டு பெண்கள்" என்றான் புன்னகை முகமாக.
"பசங்க இப்போ யுகேஜி போறாங்க. பொண்ணுங்களுக்கு அடுத்த மாதம் ஃபர்ஸ்ட் பர்த்டே அதற்கு லீவு எடுத்துக்கொண்டு செல்லலாமா? அல்லது நிரந்தரமாக சென்று விடலாமா? என்று யோசிக்கிறேன்" என்று சத்தமாக சொல்லிவிட்டு, "இன்னும் ஒரு வருடம் இங்கு வேலை செய்தால் வரும் பணத்தை வைத்து அங்கு பிசினஸ் சூடு பிடிக்கும் வரை கஷ்டமில்லாமல் இருக்கலாம். அதையும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்" என்றான் மெதுவாக.
மகள்களின் பிறந்த நாளுக்கு ஊருக்கு போகும் மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. பிறகு கவலையும் தெரிய, வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நினைத்து வருந்தி அவனை பார்த்திருந்தாள் சிவன்யா.
பின்ன சிறிது நேரம் கழித்து அவனே பேச்சை ஆரம்பித்தான். "முதலில் நான் இங்கு வரும்பொழுது மிகவும் கஷ்டப்பட்டேன். நான் பின்னர் படிப்படியாக அனைத்தையும் பழகிக் கொண்டு, இப்பொழுது எனக்கு நிரந்தரமாக நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் அளவிற்கு வந்து விட்டேன்.
தேவ் இங்கு வரும்போது அவனுக்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்திருக்கும் ஆனால் அவன் வரும்போது நல்ல சம்பளம். அது மட்டுமல்லாது எல்லா இடத்திலும் நல்ல மதிப்பும் மரியாதையும் ஆகத்தான் கிடைத்தது. ஒரே ஒரு கவலை அவனுக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இங்கு இருப்பது தான்.
எங்களுக்கு கம்பெனியிலேயே இருப்பதற்கும் இடம் தந்தார்கள். நான் ஐந்து ஆறு பேருடன் இருக்கும் ஒரு அறையில் தங்கி இருந்தேன். எனக்கு பொதுவாக நிறைய பேருடன் தங்குவது பிடிக்காது. ஆனால் தனியாக வாடகைக்கு எடுத்து தங்கினால் அதிக செலவாகுமே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதுதான், தேவ் தனியாக வீடு எடுப்பதாக தன்னுடன் வந்து தங்கிக் கொள்ளும் படியும் ஒரு சிறிய தொகையை வாடகையாக தரும்படியும் கேட்டான்.
எனக்கு அது கைக்கடிக்காமல் இருந்ததால் சரி என்று ஒத்துக் கொண்டேன். இப்பொழுது தேவ் இருக்கும் வீட்டில் நாங்கள் இருவரும் தான் இருந்தோம் பின்னர் மற்றொரு நபரும் அங்கு வந்து தங்குவதாக தேவ் கூறினான். அவன் பெயர் ஜோர்கன் ரமோன். அமெரிக்கா காரன் அவனும் இங்கு நல்ல வேலையில் தான் இருக்கிறான்.
இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு தான் எடுத்திருந்தோம் எனக்கு ஏனோ ஜோவை பிடிக்கவில்லை. அதனால் நான் இப்பொழுது ஸ்டுடியோ ஃபிளாட் எடுத்து சென்று விட்டேன்" என்றான் முகத்தில் ஒரு வெறுப்புடன்.
"ஸ்டுடியோ ஃபிளாட்?" என்று அவள் கேள்வியாக அவனைப் பார்க்க,
"படுக்கை, பாத்ரூம் டாய்லெட், சிறிய கிச்சன் மேடை என்று அனைத்தும் ஒரே அறையில் இருக்கும். நானும் எனது நண்பன் ஒருவனும் அந்த அறையில் இப்பொழுது தங்கியிருக்கிறோம். தேவ் இருக்கும் அப்பார்ட்மெண்ட் இன் எதிர் அப்பார்ட்மெண்ட் தான்" என்று தங்களது துபாய் வாழ்க்கையை அவர்களது நட்பையும் பற்றி கூறி முடிக்க, அவர்கள் இருப்பிடமான சார்ஜாவின் ரோலா என்ற இடத்திற்கு அவன் குறிப்பிட்ட அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தது வண்டி.
கார் நின்றதும் உயர்ந்த கட்டிடங்களை பார்த்துக் கொண்டே இறங்கினாள் சிவன்யா.
அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு, காருக்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு, லிப்டில் ஐந்தாவது மாடிக்கு அழைத்து வந்தான். ஒரு வீட்டின் முன்பு என்று கதவை தட்டியதும், கதவை திறந்த தேவ் உன்னிகிருஷ்ணனிடம் "கரெக்டா கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துட்ட போலிருக்கு" என்று அவனை வரவேற்று சிரித்து பேசினான். அவனுடன் வந்த சிவன்யாவை அவன் வெரும் தலை அசைத்து உள்ளே வரும்படி சொன்னதோடு சரி. அதன் பிறகு அவளிடம் ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் கொடுத்த காபியை குடித்துவிட்டு உன்னிகிருஷ்ணன் கிளம்பினான்.
போகும்பொழுது சிவன்யாவை பார்த்து "ஏதும் உதவி வேண்டுமானால் எப்பொழுது வேண்டுமென்றாலும் எனக்கு ஃபோன் பண்ணுமா. பக்கத்தில் தான் என் வீடு, உடனே வருகிறேன், சரியா?" என்று சொல்லிவிட்டு, "என்னுடைய நம்பரை சிஸ்டருக்கு கொடுத்து விடு டா" என்று சொல்லிவிட்டு சிவன்யாவை ஒரு பரிதாப பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான். அந்தப் பார்வையில் அர்த்தம் அவளுக்கு என்ன என்று புரியவில்லை.
உன்னிகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்பியதும் கதவை சாத்திய தேவ், "ஒரு அறையை காண்பித்து, "அந்த அறையை நீ யூஸ் பண்ணிக்கோ" என்றான். அதில் குழப்பமாக அவனைப் பார்த்தாள் சிவன்யா.
அந்த அறை என்றால், அப்படி என்றால் என்ன அர்த்தம். அது அவனது அறை இல்லை போலவே, என்று அவளின் பார்வையை உணர்ந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
அவன் தன்னிடம் எதுவும் பேச மாட்டான் என்று புரிந்த சிவன்யா அவளாகவே "எப்படி இருக்கிறீங்க?" என்றாள்.
"நான் நல்லா இருக்கேன். அது கிச்சன், இப்போ சாப்பிடுவதற்கு இருக்கிறது. நாளிலிருந்து உனக்கு தேவையானதை சமைத்துக் கொள். வீட்டுக்கு ஃபோன் பண்ணி வந்து விட்டதா சொல்லிடு" என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் சொன்னதை முதலில் அவளுக்கு புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் ஆனது. அதன் பிறகு அவன் பேச்சில் இருந்த அந்நிய தன்மையில் அதிர்ந்து அப்படியே நின்று இருந்தாள் சிவன்யா.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 40
4 weeks ago
-
வெளிச்சம் - 39
4 weeks ago
- 25 Forums
- 325 Topics
- 1,578 Posts
- 0 Online
- 420 Members
