Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 35

2 Posts
2 Users
2 Reactions
114 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#274]

அத்தியாயம் 35 

 

சிவன்யா எப்படி விமானத்தில் ஏறினாள்? எப்படி பயணித்தாள்? என்று ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை. இரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது அவள் வந்த விமானம். 

 

விமானத்திலிருந்து எப்படி வெளியே வந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. 

விமான நிலையத்தின் வெளியே வந்து தன் ட்ராலியுடன் நின்று கொண்டிருந்த சிவன்யாவின் கைப்பையில் இருந்த அவளது ஃபோன் ஒலித்தது. 

 

ஃபோனை எடுத்து யார் என்று பார்க்க உன்னிகிருஷ்ணன் தான் அழைத்திருந்தான். அவள் எடுத்து எதுவும் பேசாமல் காதில் வைக்க, "சிவன்யா" என்றான்.

"ம்ம்" என்று மட்டும் அவள் கூற, "உன்னோட ஃபோன்ல இருந்து டாக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு போ" என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னால் எப்படி கார் புக் பண்ண முடியும்? என் ஃபோன்தான் இங்கு வேலை செய்யாதே!" என்றாள், ஃபோனில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று கூட தெரியாமல். 

 

"உன்னோட இந்தியா சிம் தான் உன் ஃபோனில் போட்டு இருக்கேன். நீ எப்போதும் போல புக் பண்ணு" என்றான் "சரி" என்று ஃபோனை வைத்துவிட்டு, டாக்ஸி புக் செய்து வந்ததும் காரில் ஏறி அமர்ந்தாள். 

 

அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஃபோன் செய்து "காரில் ஏறிட்டியா?" என்றான். ஆமாம் என்றவளிடம், "வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ணி சொல்லு, சரியா?" என்றான். 

 

"ம்ம்" என்று மட்டும் சொல்லி ஃபோனை வைத்துவிட்டு, அப்படியே தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து விட்டாள். 

 

அவர்கள் தெருவிற்கு கார் வந்ததும் "மேடம் இந்த வீடா?" என்றான் அவர்களின் வீட்டை காண்பித்து. 

 

ஆமாம் என்று தலையாட்டிய சிவன்யா, கார் நின்றதும் தன் உடமைகளை எடுத்து வைத்து அவனுக்கு எப்படி பணம் கொடுப்பது என்று யோசிப்பதற்குள், மீண்டும் ஃபோன் வந்தது. உன்னிகிருஷ்ணன் தான் ஃபோன் செய்தான். "வீட்டிற்கு போயிட்டியாம்மா?" என்றான். 

"வந்துட்டேண்ணா" என்றதும், 

"உன் கையபையில் இந்திய பணம் இருக்கும்" என்று சொல்லிவிட்டு "அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு முடிந்தால் எனக்கு போன் பண்ண சொல்லு" என்ற சொல்லிவிட்டு, சில விநாடிகள் கழித்து "முடிந்தால் எல்லாவற்றையும் மறந்திடுமா" என்று சொல்லி ஃபோனை வைத்தான் உன்னி கிருஷ்ணன். 

 

அவன் ஃபோன் வைத்ததும் கைப்பையை திறந்து ஓட்டுநருக்கு தேவையான பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு தன் உடைமைகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடித்தாள் சிவன்யா. 

 

காலிங் பெல் சத்தத்தில் முதலில் கண்விழித்தது சிவன்யாவின் தாய்தான். இந்நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று எழுந்து கதவை திறக்க வருவதற்குள், மேகநாதன் எழுந்து வந்து விட்டான். 

"நீங்கள் ஏனம்மா எழுந்தீர்கள்? நான் பார்க்கிறேன்" என்று சொல்லி "யார்?" என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தான் மேகநாதன். 

 

தங்கையை கண்டதும் அதிர்ந்து பின்னர் மகிழ்ந்தான், "வா சிவன்யா" என்று அவளை தோளோடு நினைத்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மகளைப் பார்த்ததும், "குட்டிமா" என்று கூறி அவளை இறுக்கமாக அணைத்து அவளின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தம் பதித்து மகிழ்ந்தார் சிவகாமி. 

 

அவரின் உதட்டில் உப்பு நீரின் சுவை தெரிய, மகளின் முகத்தை ஏறிட்டு பார்த்து அவள் கண் கலங்கி இருப்பதில் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும், ஆனந்த கண்ணீராக இருக்கும் என்று நினைத்து "என்னடா ஏன் அழுகிறாய்?" என்றதும், 

"அம்மா" என்று கதறி இறுக்கமாக தன் தாயே அணைத்துக் கொண்டாள் சிவன்யா. 

 

மகளின் கதறலில் ஏதோ தவறாக பட மனதை திறப்படுத்திக் கொண்டு, "ஒன்றும் இல்லைடா" என்று அவள் முதுகை தடவி விட்டார் சிவகாமி. 

"என்னடா? என்ன ஆச்சு? மாப்பிள்ளை எங்கே? தனியாவா வந்த? இன்று காலை ஃபோன் பண்ணும்போது கூட வருகிறேன் என்று சொல்லவில்லையே!" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். 

 

மகளிடம் அழுகை மட்டுமே இருக்க, அவளை சோபாவில் அமர வைக்க, அவள் குடிப்பதற்கு தண்ணீரை எடுத்து வந்தான் மேகநாதன். அவளை தண்ணீர் குடிக்க வைத்து, கண்ணீரைத் துடைத்து விட்டான் அண்ணன். அதில் மேலும் கலங்கி தன் தாயின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள் சிவன்யா.  

 

சத்தம் கேட்டு கண்விழித்த சிவநேசன், ஹாலில் சிவன்யாவின் குரல் போல் கேட்கிறதே என்று யோசித்துக் கொண்டே வர, மனைவியின் மடியில் படுத்து மகள் அழுது கொண்டிருப்பதை கண்டதும் பதறிவிட்டார். 

"குட்டிமா வாடா, எப்படி வந்த? தனியாவா வந்த? ஏன் அழுகிறாய்?" என்று அவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க, தந்தையை கண்டதும் தாயை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சிவன்யா.  

 

அவள் அழுவது அனைவருக்குமே வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது. "என்ன ஆச்சு என்று சொல்லுமா?" என்ற அவர்களின் கேள்விக்கு அவளிடம் அழுகையைத் தவிர வேற பதில் இல்லை. 

"டேய் முதலில் மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு, என்ன என்று கேள்?" என்றார் சிவகாமி. 

 

"வேண்டாம்மா, அவருக்கு ஃபோன் பண்ணாதீங்க" என்று வாயை திறந்தாள் சிவன்யா.  

 

"என்னம்மா? ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா? அதுக்காக பேச வேண்டாம் என்கிறாயா? நாங்க என்னன்னு கேட்கிறோம்மா, எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் பேசிட்டா சரிப்படுத்திடலாம். நீ கவலைப்படாத, அண்ணன் பொறுமையா பேசுவாங்க, சரியா?" என்று ஏதோ சிறு சண்டையில் மகள் கோபித்து விட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு மகளிடம் கண்ணீரை துடைத்தபடி கூறினார் சிவகாமி. 

 

"இல்லை அம்மா, எங்களுக்குள்ள சண்டை எல்லாம் இல்லை. என்னால் அவர் கூட வாழ முடியாதும்மா" என்றாள். 

 

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது மட்டுமல்லாமல், வந்ததிலிருந்து அழுகை மட்டும்தான். அதில் பயந்து கொண்டு இருந்தவர்களின் தலையில் சிவன்யா கூறிய வார்த்தை பேரிடியாக விழுந்தது. 

"என்னம்மா சொல்ற?" என்று படபடக்கும் குரலில் கேட்டார் சிவநேசன். 

 

"என்னால அவர் கூட வாழ முடியாதுப்பா. என்ன விட்டுடுங்க, எதுவும் கேட்காதீர்கள்" என்று கூறி மீண்டும் தாயின் மடியில் படுத்துக் கொண்டாள். 

 

"இப்படி மொட்டைக்கட்டையா சொன்னா என்னம்மா அர்த்தம். என்ன நடந்துச்சுன்னு சொல்லு! அப்பா பேசுறேன் டா!" என்று அவள் தலையை கோதிவிட, தான் பார்த்ததை எப்படி தாய் தந்தையிடம் சொல்வது என்று புரியாமல் தவித்தாள் சிவன்யா. 

 

வார்த்தைகளை தேடி தேடி "அவருக்கு என் கூட வாழ முடியாதாம்ப்பா. அவருக்கு ஜோவை தான் பிடித்திருக்கிறது. அவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்" என்றாள். 

 

"என்னது? உன்ன விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ண போறானா? அதை நாங்க எல்லாம் பாத்துட்டு சும்மா இருப்போம்ன்னு நினைக்கிறானா? அவனை இங்கே வரவைத்து உண்டு இல்லை என்றுஆக்குகிறேன் பார்" என்ற மேகநாதனிடம் 

 

"ஜோ பொண்ணு இல்லண்ணா, பையன்" என்றாள் அருவருப்புடன் அழுது கொண்டு. 

 

முதலில் அவள் சொன்னது மேகநாதனுக்கு புரிவதற்கு சில நிமிடங்கள் ஆனது. "என்ன சொல்ற?" என்றான் மீண்டும் அதிர்ச்சியாக. 

 

ஆமாம் என்று தலையாட்டி சிவன்யா, "அவருக்கு என்னை திருமணம் செய்வதில் சிறிதும் விருப்பமே இல்லை. அவரது பெற்றோருக்காக தான் என்னை கல்யாணம் செய்து இருக்கிறார்" என்று தங்கள் திருமணத்திலிருந்து இன்று தான் கண்ட காட்சி வரை அனைத்தையும் அழுதழுது கூறி முடித்தாள் சிவன்யா. 

 

அதைக் கேட்டதும் சிவன்யாவின் குடும்பம் திகைத்து அதிர்ந்து அப்படியே அவரவர் இடத்தில் அமர்ந்திருந்தனர். 

வயதானவர்களான சிவநேசனும் சிவகாமிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்க, அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. சிவகாமியும் இது எப்படி சாத்தியம் என்று கணவரிடம் கேட்டார். சிவநேசனுக்கு சில இடங்களில் இப்படி நடப்பது பற்றி செய்தி கேட்டிருந்ததால், அவருக்கு தேவ்வின் நிலைமை புரிந்தது. ஆனால் தன் மகள் வாழ்வு இப்பொழுது கேள்விக்குறியாக நிற்பதில் அதிர்ந்து அமர்ந்திருந்தார். 

 

அதை முதலில் புரிந்து கொண்டது மேகநாதன் மட்டும்தான். "அவன் எந்த கன்றாவியோ செய்து கொண்டு போகட்டும், உன் வாழ்க்கையை ஏன் அவன் கெடுத்தான். 

 

அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதை முன்பே அவன் பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டாமா? இப்பொழுது உன்னுடைய வாழ்க்கை அல்லவா வீணாகிவிட்டது" என்று கூறி 

"இதை இப்படியே விடக்கூடாது. இப்பவே அவன் அம்மா அப்பாவிடம் கேட்கிறேன். மகனோட விருப்பு வெறுப்பு தெரியாம அவங்க இஷ்டத்துக்கு ஒரு பொண்ண கட்டி வைப்பாங்களா? இதை நான் சும்மா விடமாட்டேன்" என்று கோவமாக ஃபோனை எடுத்தான் மேகநாதன்.

 

"அவர்கள் என்னண்ணா செய்வாங்க, நீங்க பாட்டுக்கு கோவப்பட்டு ஏதாவது சொல்லிடாதீங்க. அவங்களால தாங்கிக்க முடியாது, பாவம் வயசானவங்க" என்றாள் சிவன்யா அழுது கொண்டே.

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன் 


 
Posted : August 6, 2026 7:09 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

ithu tthan apove therinjithe ivlo late ah kandu pidikira nee ithula purushana kapathura vera poi 


 
Posted : August 12, 2026 1:52 pm

Scroll to Top