Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 34

1 Posts
1 Users
1 Reactions
33 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#273]

அத்தியாயம் 34

 

காலை விடியல் மிகவும் மகிழ்ச்சியாக விடிந்தது சிவன்யாவிற்கு. நீண்ட நாள் கழித்து நேற்று உன்னிகிருஷ்ணன் சொன்னது போல் நிம்மதியாக உறங்கி இருந்தாள். 

 

காலையில் மகிழ்ச்சியாக எழுந்து காலை வேலைகளை முடித்தாள். இன்று மதியத்துக்கு மேல் தேவ் வீட்டிற்கு வந்து விடுவான் என்று நேற்று அவனது அலுவலகத்தில் கூறியதாக உன்னி கிருஷ்ணன் சொல்லியிருந்தான். 

ஆகையால் இன்று அவனுக்கு பிடித்தது போல் சமையல் செய்யலாம் என்று மதிய உணவிற்காக காலை 7 மணியிலிருந்து சமையல் செய்ய தொடங்கி விட்டாள். 

 

இன்று இரவு ஜோவிற்கு விமானம் என்பதால் அவனும் இறுதிக்கட்ட பேக்கிங் முடித்து பெட்டிகள் அனைத்தையும் தயாராக வைத்தான். சிவன்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் வந்து "இன்று இரவு நான் ஊருக்கு போய்விடுவேன்" என்று கூற, 

அவளும் அவனுக்கு காபி கலக்கி கொடுத்துவிட்டு "பத்திரமா போயிட்டு வாங்க" என்றாள். 

 

அவள் கூறியதும் அவளிடம், "ஐ அம் சாரி" என்று மன்னிப்பு வேண்டினான். 

 

"எதற்கு சாரி சொல்றீங்க?" என்று அவனைப் பார்த்தாள் சிவன்யா. அவனோ பதில் ஏதும் சொல்லாமல் அவனது அறைக்குச் சென்று விட்டான். 

இவளும் தோள்களை குலுக்கி விட்டு வேலை அனைத்தையும் முடித்து உன்னிகிருஷ்ணனுக்கு போன் செய்தாள். 

 

"சமையல் வேலை அனைத்தும் முடிந்து விட்டது. அவர் எப்ப வருவார் என்று ஏதாவது சொன்னார்களா?" என்றாள். 

 

"அனைத்து வேலைகளும் முடித்து வர, எப்படியும் சாயங்காலமாகும் என்று சற்று முன்புதான் சொன்னாங்க" என்று கூறி "நான் நாளைக்கு ஊருக்கு செல்வதால் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும். அதனால் நான் கடைக்குச் செல்கிறேன். அதனால் பின்னர் அழைக்கிறேன்" கூறி வைத்தான். 

 

வேலை அனைத்தும் முடிந்ததாலும், ஜோவும் அவனது அறையை விட்டு வெளியே வராதாலும், தனியே இருக்க சிவன்யாவிற்கு போர் அடித்ததால், 

ஏற்கனவே உன்னிகிருஷ்ணன் ஊருக்கச் செல்லும் பொழுது சில பொருட்கள் வாங்கி தருவதாகவும். அவன் ஊருக்குச் சென்றதும் அவற்றை தங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுமாறும் கேட்டிருந்தாள். இந்த பத்து நாட்களும் தேவின் விஷயமாகவே அலைந்திருந்ததால் அதைப் பற்றி சுத்தமாக மறந்திருந்தாள். இப்பொழுது தேவ் எப்படியும் நேரம் ஆகும் என்பதால், உன்னிகிருஷ்ணனுடன் சென்று தேவையானவற்றை வாங்கி அவனிடமே கொடுத்து அனுப்பி விடலாம் என்று நினைத்து, மீண்டும் அவனுக்கு அழைத்து விஷயத்தை கூற அவனும் சரி தயாராக இரு சென்று வருவோம் என்று சொல்லிவிட்டான்.  

 

சரியாக நேரம் அவளது தாயும் அவளுக்கு ஃபோன் செய்ய, அவரிடமும் மிகவும் மகிழ்வாக பேசினாள். 

"என்ன சிவன்யா? இன்று உன் குரல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! ஏதாவது விசேஷமா?" என்ற சிவகாமி மகிழ்ச்சியாக. 

 

அவர் அப்படி கேட்டதும், அவளுக்கு இதுவரை கணவன் தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லையே என்ற வருத்தத்தையும் மீறி சிறிது வெட்கம் வந்தது. அதில் அவள் தாயிடம் "போங்கம்மா அதெல்லாம் ஒன்றுமில்லை, ஏன்? உங்கள் மகள் சந்தோஷமாக இருக்கக் கூடாதா?" என்றாள் கிண்டலாக. 

 

"நீ சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தானே நானும் அப்பாவும் தினமும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கோம்" என்ற தாயிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள். 

 

பின்னர் மகிழ்ச்சியாகவே உன்னிகிருஷ்ணனுடன் கிளம்பி தன் அம்மாவிற்காகவும் தன் குடும்பத்தினருக்காக மட்டுமல்லாது, நளினிக்காக குங்குமப்பூ, பேரீச்சம்பழம் போன்ற அனைத்தையும் வாங்கினாள். பின்னர் உன்னிகிருஷ்ணனின் மனைவி பிள்ளைகளுக்கும் சில பொருட்கள் வாங்கி அவனிடம் கொடுத்தாள். 

 

கை நிறைய பைகளையும், மனம் நிறைய மகிழ்ச்சியையும் சுமந்து கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள். 

"நாளைக்கு இந்நேரம் நான் ஏர்போர்ட்டுக்கு போயிருப்பேன்" என்று மகிழ்ச்சியாக கூறினான் உன்னிகிருஷ்ணன்.  

 

பின்னர் அவனது மனைவி குழந்தைகள் குடும்பம் என்று பேச்சு தொடர்ந்தது. அப்படியே இவளது குடும்பத்தின் பேச்சும் வர, "அண்ணா, நீங்கள் ஊருக்குச் சென்ற பிறகு, ஓய்வாக இருக்கும் பொழுது இவற்றை அனுப்பி விடுங்கள் போதும்" என்று மாமியார் வீட்டிற்கு ஒரு கவரும், தன் தாய் வீட்டிற்கு ஒரு கவரும் என்று இரு கவர்களை அவன் கையில் கொடுத்தாள். 

 

பின்னர் "நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டிற்கு என்று வாங்கியிருப்பீர்கள். அதனுடன் இதையும் எடுத்துச் செல்ல முடியுமா?" என்றா சந்தேகமாக. 

 

"அதெல்லாம் பரவாயில்லை, எடை அதிகமாக இருந்தால் அதற்குரிய பணம் கட்டிக் கொள்ளலாம், கவலைப்படாதே!" என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்களது வந்த டாக்ஸி அவர்கள் குடியிருப்புக்குள் நுழைந்தது. 

 

தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு டாக்ஸிக்கு பணம் செலுத்தினான் உன்னிகிருஷ்ணன். அந்நேரம் அவனுக்கு

ஃபோன் வந்தது. அவனது மனைவிதான் பேசினாள். உடனே "அண்ணி, கவலைப்படாதீர்கள், நாளைக்கு அண்ணன் அங்கு வந்துவிடுவார்" என்று கிண்டலாக சத்தமாக பேசிய சிவன்யா லிஃப்ட் நோக்கி நடந்தாள். 

 

அவளின் கிண்டலில் சிரித்தபடி ஃபோனில் மனைவியுடன் பேசிக்கொண்டே அவனும் மெதுவாக நடந்தான். முதலில் தங்கள் வீடு இருக்கும் தளத்திற்கு வந்தவள், கையில் இருந்த பைகளை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு, தன் கைப்பையில் இருந்து வீட்டுச் சாவியை எடுத்து திறந்த சிவன்யா, அங்கு கண்ட காட்சியில் அலறிவிட்டாள். 

 

அங்கே தேவ்வும் ஜோவும் அரைகுறை ஆடையில், அந்தரங்க நிலையில் இருந்தனர். அதை கண்ட சிவன்யா வேர்வை வழிய, உடல் நடுங்கியபடி தன் காலடியில் உள்ள பூமி பிளந்தது போல் கீழே விழ பார்த்தாள். அவளின் பின்னாடியே வந்த உன்னிகிருஷ்ணன் அவளை தாங்கி பிடிக்க, அவள் கண்ட காட்சியில் அருவருத்து அப்படியே வாந்தி எடுத்து விட்டாள். 

 

என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் அவளை கைத்தாங்கலாக அமர வைத்த உன்னிகிருஷ்ணன் வேகமாக அடைத்த ஜோவின் அறையை வைத்து ஓரளவுக்கு யூகித்து விட்டான். அவனுக்கும் அது தர்ம சங்கடமாக இருக்க, அவளை கவலையாக பார்த்தான். அவளோ எங்கோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்க, "சிவன்யா" என்றான் மென்மையாக. 

 

அவள் சங்கடமாக உன்னிகிருஷ்ணனை பார்க்க, "உள்ளே போய் உட்காருமா" என்று அவளை தூக்கி விட குனியும் பொழுது, வேகமாக பின் நகர்ந்தாள் சிவன்யா. அவளது செயல் அவனுக்கு வருத்தமாக இருக்க, 

"நீ உள்ளே போமா, நான் இங்கே கிளீன் பண்ணிட்டு வாரேன்" என்று அவளை பார்க்க, வேகமாக எழுந்த சிவன்யா தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு கதறி அழுதாள் . 

 

அவள் அழும் சத்தம் வெளியே கேட்க, பெருமூச்சு விட்ட உன்னிகிருஷ்ணன் கொண்டு வந்த பைகளை எடுத்து வீட்டினுள் வைத்து விட்டு தரையை சுத்தப்படுத்தினான். 

 

அவன் வேலையை முடிக்கவும் தேவ் வெளியே வரவும் சரியாக இருக்க, "உனக்கு எத்தனை தடவை சொன்னேன், அவளிடம் சொல்லிவிடு என்று. கேட்டாயா! பார், எந்த நிலைமையில் அவளை வைத்திருக்கிறாய்" என்று சிவன்யாவின் அறையை காண்பித்து கோபமாக திட்டினான். 

 

தேவ் மௌனமாக தலை குனிந்து நின்றான். 

"உங்கள் சுயநலத்திற்காக, நீயும் உன் குடும்பமும் சேர்ந்து ஒரு சின்ன பெண்ணோட வாழ்க்கையை வீணடித்திருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு "இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்" என்றான் கோபமாக.  

 

"நான் என்னடா செய்வேன்? நான் சொல்வதை அப்பா கேட்டா தானே!" என்றான். 

 

"எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டாய்? கொஞ்சம் உன்னைப் பற்றி உன் அப்பா கிட்ட சொல்லி இருந்தா, இந்த கல்யாண பேச்சையே எடுத்து இருக்க மாட்டார் இல்ல, சிவன்யா வாழ்க்கையாவது தப்பித்து இருக்கும்" என்றான் அதற்கும் கோபமாக. 

 

"இதை எப்படிடா அப்பா கிட்ட சொல்றது? அவங்க எல்லாம் அந்த காலத்து ஆள். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" 

 

"அதை எப்படி நீ முடிவு செய்தாய்? அவர்களும் படித்தவர் தானே! நிச்சயம் புரிந்து இருப்பார். அட்லீஸ்ட் கல்யாணத்தையாவது நடத்தாமல் விட்டிருப்பார்" என்றான் சோகமாக. 

 

அவனுக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்களே என்ற ஆத்திரம். சிவன்யா இங்கு வந்ததிலிருந்து தேவ்விடம் எப்படியாவது அவளிடம் சொல்லி, சீக்கிரம் இங்கிருந்து அனுப்பு. அப்பத்தான் அவளுக்கு வேறு வாழ்க்கையாவது அவர்கள் வீட்டில் அமைத்துக் கொடுக்க முடியும். நாட்கள் சென்றால் இன்னொருவனோடு வாழ்ந்தவளுக்கு திருமணமா? என்று வரன்கள் தட்டிப் போகும் என்று, கூறிக் கொண்டே தான் இருந்தான். 

 

நேரம் பார்த்து சொல்வதாக தேவ்வும் சொல்லிக் கொண்டு இருக்க, கடைசியில் கண்கூடாக சிவன்யாவே பார்த்து விட்டாள். 

 

பெருமூச்சு விட்ட உன்னிகிருஷ்ணன், "இனி என்ன செய்வதாக உத்தேசம்" என்றான் தேவ்வை அழுத்தமாகப் பார்த்து. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 6, 2026 7:03 pm
Kalidevi reacted

Scroll to Top