Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 36

1 Posts
1 Users
0 Reactions
26 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#299]

அத்தியாயம் 36

 

தேவ்வின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தால் அவர்கள் வருந்துவார்கள் என்று கூறிய சிவன்யாவை முறைதான் மேகநாதன். 

 

"அவர்களை சொல்லி என்ன செய்வது, அவங்க சொன்னாங்க என்று அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சோம்ல. நம்மளதான் சொல்லணும், படிச்சு முடிச்ச உடனே அடுத்து மேல் கொண்டு படிக்க விரும்புரியா என்னன்னு உன்கிட்ட கேட்காம, அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க இல்ல, இவங்கள சொல்லணும்" என்று தன் பெற்றோர் மீது தன் தன் கோபத்தை திருப்பினான் மேகநாதன். 

 

"அண்ணா ப்ளீஸ், அப்பா அம்மாவையும் எதுவும் சொல்லாதீங்க. அவங்க என்ன எனக்கு கெடுதல் நடக்கணும் என்றா செஞ்சிருப்பாங்க. நான் நல்லா வாழனும் என்று தானே நினைத்திருப்பாங்க. ப்ளீஸ் அண்ணா அப்பாவையும் அம்மாவையும் திட்டாதீங்க" என்று தாயை அணைத்துக் கொண்டு அழுதாள் சிவன்யா.  

 

சிவநேசனுக்கும் சிவகாமிக்கும் மகன் கூறிய வார்த்தை வலித்தாலும், அதுதானே உண்மை. படித்து முடித்த உடனே அவசரமாக நடந்தது போல் தானே இருந்தது கல்யாணம் என்று வருந்தினார்கள். அவர்களது வருத்தம் அவர்களது முகத்தில் பிரதிபலிக்க, தான் அவசரப்பட்டு பேசியதை உணர்ந்து வருந்தினான் மேகநாதன். 

 

"சாரிப்பா, கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க" என்று பொதுவாக சொன்னாலும் தாயின் கையை பற்றி கொண்டான்.  

 

"அம்மா, தங்கையின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நாமும் ஒரு விதத்தில் காரணம் தானே?" என்றான் கவலையாக. 

 

ஆம், திருமணம் முடிந்ததில் இருந்து தேவ் தங்களுடன் சரியாக பேசாமல் இருக்கும் பொழுதே சிவகாமிக்கு அந்த எண்ணம், அவரது மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கும். இப்பொழுது மகள் அழுது கொண்டு வந்த பிறகு அந்த எண்ணம் வராமல் இருக்குமா? அவர் மௌனமாக இருக்க, 

"நாம் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் அம்மா" என்றான் வருத்தமாக. 

 

எல்லோருக்குமே சிவன்யாவின் வாழ்க்கை குறித்து கவலையும் வருத்தமும் நிறைய இருந்தது. ஆனால் நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க யோசிக்க என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 

இதை எப்படி விஸ்வநாதனிடம் தெரிவிப்பது என்ற குழப்பமாக இருந்தது சிவநேசனுக்கு. அதை வார்த்தையாக தன் மகனிடம் தெரிவிக்க, 

"இப்படி மற்றவர் வருந்துவார்கள் என்று இனிமேலும் யோசித்துக்கொண்டு நம் தங்கையின் வாழ்க்கையை இன்னும் சிக்கல் ஆக்கி விடக்கூடாது அப்பா" என்று முடிவாக சொல்லிவிட்டான். 

 

"அவனுடன் வாழ முடியாது என்று சிவன்யாவும் சொல்லிவிட்டாள். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தி விட்டால் தான் நல்லது. அப்பொழுதுதான் அவளுக்கு நம் வேறொரு நல்ல வாழ்க்கையை தேட முடியும்" என்றான்.  

 

"எனக்கு வேறு வாழ்க்கை எதுவும் தேவையில்லை" என்று தாயைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சிவன்யா. 

 

"என்ன தேவையில்லை? உனக்கு என்ன வயசு ஆயிற்று? என்ன வாழ்ந்து விட்டாய் என்று வேறு வாழ்க்கை வேண்டாம் என்று சொல்கிறாய்?" என்றான் கோபமாக தன் தங்கையின் கையை பற்றி. 

 

"தயவு செய்து கோபப்படாதே மேகநாதா. முதலில் இதற்கு என்ன முடிவு என்று பார்ப்போம். அதன் பிறகு மற்றதை பற்றி யோசிப்போம். அவளுக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இல்லையா?" என்று மகனை கண்டித்து விட்டு, 

 

மகளின் கையைப் பற்றிக் கொண்ட சிவநேசன் "உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை அம்மா. உன் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டது போல் இருக்கிறது" என்றார் கண்ணீர் மல்க. 

 

"அப்பா" என்று அவரை வயிற்றுடன் அணைத்துக் கொண்டு "உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லைப்பா. எனக்கு நல்லது செய்யத்தான் நினைத்தீர்கள். என் தலையெழுத்து எப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது" என்று அழுதாள். 

 

"போதுமா, இனிமேல் அழாதே. நடந்தவற்றில் ஒரு தவறு கூட உன்னால் நடந்தது கிடையாது. தவறு செய்யாத நீ எதற்கு அழுது கலங்கி நிற்கிறாய்? எல்லாவற்றையும் மறந்துவிடு" என்று அவளின் தலையை மென்மையாக தடவி விட்டார்.  

 

பின்னர் "இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருக்கிறாய். போய் கொஞ்ச நேரம் தூங்கி எழு" என்று மகளிடம் சொல்லிவிட்டு, "அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து, அவளை தூங்க வை" என்று மனைவியிடம் முடித்தார். 

 

சிவகாமியும் கண்களை துடைத்துக்கொண்டு மகளுக்கு சாப்பாடு எடுத்து வர சமையலறை சென்றார். தாம் என்ன செய்தோம் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்று யோசித்து யோசித்து களைத்துப் போயிருந்த சிவன்யாவிற்கும் சற்று ஓய்வு தேவைப்பட, தந்தை கூறியதும் சரி என்று தலையாட்டி, அவளது அறைக்கு சென்றாள். 

 

சிவகாமியும் வேகமாக மகளுக்கு உணவு தயாரித்து, மகளின் அறைக்கு செல்ல போக, "அவளை எப்படியாவது சாப்பிட வைத்து, உறங்க வை. நீயும் அவள் கூடவே இரு" என்று மனைவிக்கு சொல்லிவிட்டு, தந்தையும் மகனும் விஸ்வநாதர்க்கு ஃபோன் செய்ய முடிவு செய்தனர்.  

 

வழக்கமாக இந்நேரத்தில் ஃபோன் செய்வது இல்லாததால் சந்தேகமாகவே போனை எடுத்தால் விஸ்வநாதன். "என்ன சம்பந்தி எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என்றார் பதட்டமாக. 

 

அவரது பதட்டத்தைக் கண்டதும் சிறிது நேரம் எதுவும் பேச முடியவில்லை சிவநேசனால்.  

மறுமுனையில் அமைதியாக இருக்க "சம்பந்தி, என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதும் பிரச்சனையா? இல்லை தங்கச்சிக்கு ஏதும் உடம்பு முடியலையா? என்று பதட்டமாக கேட்ட விஸ்வநாதனிடம், எப்படி விஷயத்தை சொல்வது என்றே ஒன்றும் புரியாமல் தயங்கினார். 

 

அந்தப் பக்கம் விஸ்வநாதனுக்கு பதட்டம் அதிகமாக, தந்தையும் பேச தயங்கி இருப்பதைக் கண்ட மேகநாதன், உடனே "யாருக்கும் உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றான். 

 

அப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட விஸ்வநாதன், "நல்லவேளை, காலையிலேயே ஃபோன் செய்து, சம்பந்தி பேசவில்லை என்றதும் ஏதோ தவறுதலாக நடந்து விட்டதோ! என்று நினைத்தேன்" என்று ஆசுவாசமாக மூச்சு எடுத்து விட்டார். 

 

"தவறு நடந்து தான் விட்டது. ஆனால் உடல் நிலையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை" என்றான். 

 

அதில் குழப்பமான, "என்ன என்று தெளிவாக சொல்லுங்கள் தம்பி, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பதட்டமாக இருக்கிறது" என்றார். 

 

"சிவன்யா வீட்டிற்கு வந்துவிட்டாள்" என்றான் மொட்டையாக. 

 

"என்ன தம்பி மருமகளா சென்னை வந்துவிட்டாளா? நேற்று பேசும் பொழுது கூட ஒன்றும் சொல்லவில்லையே! எப்பொழுது வந்தாள்? தேவ்வும் வந்திருக்கிறானா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, 

 

"அவள் உங்கள் வீட்டு மருமகளாக வரவில்லை, எங்கள் வீட்டு பெண்ணாக, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்" என்றான் பொறுமையாக. 

 

அவன் சொல்வதை புரிந்து கொள்வதற்கு அவருக்கு சிறிது நேரம் ஆனது. "என்னப்பா சொல்ற? உங்க வீட்டு பொண்ணா வந்துட்டாளா? அப்படி என்றால்?" என்றார் அதிர்ந்து. 

 

கணவன் பேசுவது சென்னையில் இருந்து ஃபோன் என்றதும் அவரது அருகில் வந்து நின்று அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கும் கணவனின் பதட்டமான முகத்தைக் கண்டு வருத்தமாக, "என்னாச்சுங்க? சம்பந்தி வீட்ல என்ன சொல்றாங்க?" என்றார். 

 

"ஃபோனை கொஞ்சம் ஸ்பீக்கரில் போடுங்க" என்றான் மேகநாதன். 

 

அவரும் சரிப்பா என்று உடனே ஸ்பீக்கரில் போட, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிவன்யா எங்க வீட்டுக்கு வந்துட்டா" என்றான். 

 

அதற்குள் தன்னை கொஞ்சம் சமாளித்து இருந்த விஸ்வநாதன் "என் மருமக பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளா? என் மகனால் எதுவும் தப்பு நடந்துருச்சா தம்பி? எது என்றாலும் சொல்லுங்க" 

 

"உங்க மகனால எந்த தப்பும் நடக்கல, உங்க மகனே தப்புதான். அவ்வளவுதான் என்னால இப்ப சொல்ல முடியும். இதுக்கு மேல எதுவும் தெரியனும்னா உங்க மகன்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுக்கோங்க. எங்க வீட்டு பொண்ணு வாழ்க்கையில் எப்படி சரிப்படுத்தனும்னு எங்களுக்கு யோசிக்கணும். தயவு செய்து எங்கள தொந்தரவு பண்ணாதீங்க. எது என்றாலும் உங்கள் மகனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று ஃபோனை வைத்து விட்டான் மேகநாதன். 

 

தேவ்வின் பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. இதுவரை அத்தை மாமா என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் மேகநாதன், இன்று ஒரு வார்த்தை கூட அத்தை என்றும் மாமா என்றும் சொல்லவில்லை. எங்கள் வீட்டு பெண்ணின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டும் என்று பேசியதில், வேறு பெரிய தவறு செய்து விட்டான் தேவ் என்று தான் தோன்றியது. உடனே மகனுக்கு ஃபோன் செய்தார் விஸ்வநாதன். 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 12, 2026 8:29 pm

Scroll to Top