மொஹபத் முதல் நிக்காஹ் வரை-7
அத்தியாயம்–7
அறைக்குள் நுழைந்த சூர்யா இன்னும் பிரணவ் சொன்னதை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"டேய்... நிஜமா தான் சொல்லறியா?"
"ம்ம்ம"
"ஒரு பொண்ணு... அதுவும் அவளாவே உன்கிட்ட போன் நம்பர் கொடுத்திருக்கா."
பிரணவ் தண்ணீர் பாட்டிலை மூடி வைத்து அவனைப் பார்த்தான்.
"ஆமா." என்றான் பிரணவ்.
"உனக்கு இது சாதாரணமா தெரியுதா?" என்று சூர்யா ஆச்சரியப்பட்டான்.
"இதுல என்னடா?" என்று மழுப்ப முயன்றான் பிரணவ்.
"என்னடாவா? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பொண்ணுங்க நம்பர் தர்றதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிப்பாங்க. அதுவும் வெளிநாட்டுல வேலை பார்க்கற பொண்ணு. அவளே வந்து தந்திருக்கா." என்று பெரிதாக கூறினான்.
பிரணவ் லேசான புன்னகையுடன் "அதுக்காக?" என்று கேட்டான்.
"மச்சி... இப்பவே ஒரு 'ஹாய்' அனுப்பு." என்றான்.
"வேண்டாம்." என்று மறுத்தான்.
"ஏன்?" என்று சூர்யா திகைத்தான்.
"இப்ப எதுக்கு?"
"எதுக்கா? அதுக்குத்தான் நம்பர் கொடுத்திருப்பா." என்று தியானாவை பற்றி தவறாக எண்ணினான்.
பிரணவ் மெதுவாக தலையசைத்தான். "இல்லடா சூர்யா... அவ என்னை நம்பி தான் நம்பர் கொடுத்திருக்கா. அந்த நம்பிக்கையை நான் உடனே போன் பண்ணி, மெசேஜ் பண்ணி, டிஸ்டர்ப் பண்ணி கெடுக்க விரும்பல." என்று மறுத்தான்.
சூர்யா சிரித்தான். "டேய்... ஒரு பொண்ணு நம்பர் கொடுத்தா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டான்.
"என்ன?"
"அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு." பிரணவ் உடனே சிரிப்பை நிறுத்தினான்.
"ஏத்திவிடாத சூர்யா" என்று மறுத்தான்.
"டேய்... சீரியஸா சொல்றேன்."
அவன் குரல் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருந்தது.
"ஒரு பெண் ஒரு ஆண்கிட்ட போன் நம்பர் கொடுக்கறதுன்னா... அந்த ஆளை நம்பறானு அர்த்தம். அவ்வளவு தான்." சூர்யா அமைதியாக அவனைப் பார்த்தான்.
"அந்த நம்பிக்கைக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். அதுக்கு முன்னாடியே தப்பா ஏதும் சொல்ல ஆரம்பிச்சா... அது அவளை அவமானப்படுத்துற மாதிரி ஆயிடும்." என்றான்.
"ஹும்..." என்று சூர்யா பெருமூச்சு விட்டான்.
"எனக்கு அவளை பிடிக்கும்." சூர்யா கண்களை பெரிதாக்கினான்.
"பிடிக்கும்...ன்னா?" என்று ஆர்வமாய் கதை கேட்டான்.
"நல்ல பொண்ணுனு பிடிக்கும். பேசுற விதம் பிடிக்கும். மரியாதை பிடிக்கும். வேறென்ன இன்னும் எனக்கே தெரியலை." சில நொடிகள் அறை முழுக்க அமைதி.
"அதனால கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும். இந்த நட்பு எங்க கொண்டு போகுதுன்னு பார்ப்போம்." என்று கூற சூர்யா மெதுவாக அவன் தோளைத் தட்டினான்.
"சரி மச்சி... நான் எதுவும் சொல்லலை."
அப்படியே சாப்பிடற வேலையை பார்ப்போம்." என்றனர்
--
அதே நேரம்... தியானா வீட்டுக்குள் நுழைந்ததும்,
"அஸ்ஸலாமு அலைக்கும்."
"வஅலைக்கும் சலாம் மொளே."
பாதிமா சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.
"கைகளை கழுவிட்டு வா."
"சரிம்மா." என்றாள். அந்த நேரம் நஸீரும் வேலை முடித்து வந்திருந்தார்.
சஹ்ராவும் புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தாள்.
"அக்கா... இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட."
"ஆமாம்." என்றவள் முகம் அலம்பி உடை மாற்றி வந்தாள்.
நால்வரும் டைனிங் மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.
நஸீர் தட்டுகளை அருகே இழுத்துவைத்து,
"பிஸ்மில்லாஹ்." என்று மெதுவாகச் சொல்லி உணவை உண்ண ஆரம்பித்தார்.
மற்றவர்களும் அதையே சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
"இன்னிக்கு ஹோட்டல் வேலை எப்படி இருந்தது?" என்று நஸீர் கேட்டார்.
"வழக்கம் போலவே வாப்பா."
"கெஸ்ட் அதிகமா?" ம்ம்ம்... கொஞ்சம் ரொம்ப நேரம் நிற்கறது கால் வலிக்கு." என்றாள்
சஹ்ரா நடுவில், "அக்கா... நாளைக்கு என் ப்ராஜெக்டுக்கு ஹெல்ப் பண்ணணும்." என்றாள்.
"சரி." என்று சிரித்தாள்.
பாதிமா தியானாவை பார்த்து "உனக்கு சோர்வா இருந்தாலும், இவளுக்கு மட்டும் இல்லன்னு சொல்ல மாட்ட." என்று பெருமைப்பட்டார்.
"என் தங்கச்சி தானே உம்மா." என்று கொஞ்சினாள்.
வீட்டில் சின்னச் சின்ன பேச்சுகள் மேலும் நீண்டது.
"கிடங்குல வேலை எப்படி போகுது வாப்பா? மேனேஜருக்கு மேலுக்கு முடியலைனு சொன்னிங்க'' என்று தியானா கேட்டாள்.
"இன்னிக்கு ஒரு ஷிப்மெண்ட் வந்துச்சு. அதான் லேட்டாச்சு. மேனேஜர் உடம்புக்கு இப்ப பரவாயில்லை." என்றார்.
"நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்க வாப்பா. இப்பலாம் அதிகம் மேலுக்கு முடியலைன்னு சொல்லறிங்க" என்றாள் அக்கறையாக.
"அல்லாஹ் இருக்கான்." என்று அவர் மேலே கைகாட்டினார்.
பாதிமா இடையில், "நாளைக்கு மார்க்கெட் போகணும். சஹ்ராவுக்கு சில புத்தகமும் வாங்கணும்."
தியானா அமைதியாக கேட்டுக்கொண்டே சாப்பிட்டாள்.
இன்று மட்டும் ஏனோ அவள் மனம் அந்த மேசையில் இல்லை.
எப்போதாவது கைபேசியின் குறுஞ்செய்தி ஒலி கேட்டதா என்று அவளது செவிகள் கவனித்துக்கொண்டே இருந்தன.
இரவு அறையில். சஹ்ரா ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்தாள்.
தியானா மட்டும் படுக்கையில் திரும்பித் திரும்பி படுத்தாள்.
அவள் தலையணைக்கு அருகே இருந்த அலைபேசியை எடுத்தாள். திரை ஒளிர்ந்தது.
எந்த அறிவிப்பும் இல்லை.
அவள் ஒரு நொடி அமைதியாக பார்த்தாள். மீண்டும் வைத்தாள். 'நல்லவேளை...' என்று நினைத்தாள்.
'வாப்பா கண்ணுல பட்டிருந்தா... தேவையில்லாம கேள்வி கேட்பாங்க.' ஒரு நிம்மதி உருவானது.
இரண்டு நிமிடம் கடக்கவும், மீண்டும் கை அலைபேசியைத் தேடியது.
திரையைத் திறந்தாள். இப்போதும் எதுவும் இல்லை.
இந்த முறை உதட்டில் இருந்த சின்ன புன்னகை மெதுவாக மறைந்தது.
'ஏன்... ஒரு ஹாய் கூட அனுப்பலையே...?' என்றது அவள் மனம். அடுத்த நொடியே அவள் தன்னையே கடிந்துகொண்டாள்.
'நான் ஏன் எதிர்பார்க்கறேன்?'
'நான்தானே நம்பர் கொடுத்தேன்... அதுக்காக உடனே மெசேஜ் பண்ணணும்னு எந்த விதியும் இல்ல. அவர் அப்படி பண்ணாதது நல்ல விஷயம் தானே.' அந்த எண்ணம் அவளுக்கு நிம்மதியைத் தந்தது. வாப்பா உம்மா கவனித்தால் திட்டு விழுமே.
ஆனால்... அதே நிம்மதிக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் ஒளிந்து கிடந்தது. 'அப்படின்னா... எனக்கு ஏன் இந்த ஏமாற்றம்...?' என்றவளுக்குள் பதில் இல்லை.
பிரணவ் முகம் மட்டும் நினைவுக்கு வந்தது. அவன் பதட்டமாக சிரிப்பது... தன்னை "தியானா" என்று அழைத்தது...
போன் நம்பர் சேமிக்கும்போது அவன் கையில் இருந்த லேசான நடுக்கம்... எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஓடியது.
"யா அல்லாஹ்..." என்று மெதுவாக முணுமுணுத்தவள்,
"இது என்ன உணர்வுன்னு எனக்கே புரியல..." என்று கண்களை மூடிக் கொண்டாள்.
இவளை போலவே பிரணவும், ஸ்டாப் அக்கமோடேஷனில்,
பிரணவின் அலைபேசியிலும் தியானாவின் பெயர் அமைதியாக ஒளிர்ந்து கொண்டே இருந்தது.
இருவரிடமும் அவரவர் அலைப்பேசி எண் இருந்தது. ஆனால்... முதலில் யார் பேசுவது என்ற தயக்கமோ, அவர்களுக்கிடையே அமைதியாக பாலம் கட்டிக் கொண்டிருந்தது.
முக்கியமாக பிரணவ் அவசரம் காட்டவில்லை.
அன்னையிடம் சாதாரணமாக பேசிவிட்டு அணைத்து விட்டான்.
இன்றே தியானாவிடம் பேச ஆரம்பித்தால் நம்பர் கிடைத்ததும் வழிகின்றான் என்ற அவபெயர் வந்துவிடுமோ, அதுவும் தியானாவிடமிருந்து என்று தவித்தான். தியானாவிடம் அத்தகைய அவப்பெயரை அவன் வாங்க விரும்பவில்லை. சூர்யாவிடம் இல்லை இல்லையென மறுத்தாலும், ஏதோவொன்று தியானாவிடம் ஈர்க்கின்றது அது அவனது மனசாட்சியிடம் மறைக்க முடியவில்லை.
இது தொடர்ந்தால் ஆபத்தும் வலியும் பிரணவிற்கு உண்டென நன்கறிவான்.
அதைமீறி தியானாவின் ஹிஜாப்பை தாண்டி அவளது கண்கள் அவனை ஆர்வமாக கவனிப்பது பிடித்திருந்தது.
லேசான கொட்டாவி வரவும் போனை தூரவைத்து உறங்கினான்.
அதிகாலை பாங்கு ஒலி காதில் விழுந்ததும், தியானா கண்களைத் திறந்தாள். உளூ செய்து தொழுகை விரிப்பை விரித்தவள், ஃபஜ்ர் தொழுகையை அமைதியாக நிறைவேற்றினாள். தொழுகை முடிந்ததும், குர்ஆனில் சில வசனங்களை வாசித்து, குடும்பத்திற்கும், தன் வாழ்க்கைக்கும், உலக நன்மைக்கும் இறைவனிடம் துஆ செய்தாள்.
நஸீர் பள்ளிவாசலுக்குச் சென்று ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினார். வீட்டில் பாத்திமாவும் தியானாவும் தங்களுக்கான தொழுகையை தொழுதுவிட்டு, காலை வேலைகளைத் தொடங்கினாள்.
பிரணவ் எழுந்ததும், ஒரு குர்ஆன் மெஸேஜை தேடி பிடித்து அனுப்பினான்.
'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமா?
-குர்ஆன் 39:9
இனிய காலை வணக்கம் தியானா' என்று அனுப்பியிருந்தான்.
தியானா சாப்பிட்டு முடித்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறிவிட்டு வாயை துடைத்து போனை பார்த்தாள்.
சிறு புன்னகை வந்து உதட்டில் ஒட்டிக் கொண்டது.
அதை வாப்பா உம்மா காணுவதற்குள் மறைத்தாள்.
சஹ்ராவோ "அக்கா பை" என்றதும் அவளுக்கு மை சஹ்ரா" டாட்டா காட்டிவிட்டு தனக்கான டிபன்பாக்ஸை எடுத்தாள்.
வாப்பா சஹ்ராவை அழைத்து சொன்றுவிடுவதால் உம்மாவிடம் முத்தம் வைத்து, "போயிட்டு வர்றேன் உம்மா என்று நடந்து சென்றவளுக்கு வழியெல்லாம் ஒரு மலர்ச்சி.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமா?
-குர்ஆன் 39:9 என்று அனுப்பியிருந்தான்.
வெளிப்படையாக பார்த்தால், இதில் "அறிந்தவர்கள்" என்பது கல்வி கற்றவர்கள், அனுபவம் பெற்றவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், இறை அறிவு பெற்றவர்கள் என்ற பொருள் விளங்கும்.
நம் அலைபாயும் நெஞ்சமதுவோ, பிரணவ் இவளுக்கு ஸ்பெஷலா அல்லது சாதாரண நட்பா என்று கேட்டதாக பதிய, பிரணவை மனதில் மெச்சிக் கொண்டாள்.
உண்மையில் இந்த குழப்பம் வந்தப்பின் தான் அவளுமே எண்ணை தாரை வார்த்தாள்.
பிரணவ் அனுப்பிய குறுஞ்செய்தியை எத்தனை முறை பார்த்தாலென்று அவளுக்கே தெரியாது. எத்தனை முறை படித்தாலென்றும் அவளுக்கு கணக்கில்லை.
வீட்டிலிருந்து ஜப்ரான் ஹோட்டல் செல்லும் பாதையில் எல்லாம், பிரணவ் அனுப்பிய குறுஞ்சொய்தியை பார்த்கால், உதட்டில் சிரிப்பை கூட்டினால், போனை கீழே இறக்கினாள். சற்று வினாடி கூட கடந்திராது மீண்டும் அதையே பார்வையிட்டாள்.
பிரணவ் அனுப்பியதில் பதிலுக்கு ஏதேனும் அனுப்ப கை துறுதுறுவென ஆனது. ஆனால் என்ன பதில் அனுப்புவதென்று அவளுக்கு புரிப்படவில்லை.
யோசித்து யோசித்தா பார்த்து நேரங்கள் கரையவும், ஜப்ரான் ஹோட்டல் வேறு வந்துவிடுமென்று அவன் அனுப்பிது போலவே குர்ஆனில் ஏதாவது பதிலுக்கு காலை வணக்கம் அனுப்ப சென்றுவிட்டாள்.
ஆனால் பிரணவ் முஸ்லீம் இல்லையே.. அத்துடன் அவன் தனக்கு குர்ஆன் செய்தியை அனுப்பியது போல அவன் இந்து மதத்தில் அனுப்பினால் நன்றாக இருக்குமென யோசித்தாள். பொதுவாக குர்ஆன் நபிகள் நாயகத்தின் பொன்மொழியையும், தங்கள் மதத்தையும் தவிர்த்து சில நேரம் கீதை உபச்சாரம் வாசித்தது உண்டு. அதற்கு காரணம் உம்மா வாப்பாவுக்கு தெரியாமல் அவள் மற்றொரு காரியம் செய்கின்றாள்.
அதனால் கீதை உபச்சாரத்தின் ஒரு வாசகம் மூளையில் உதிக்க, சட்டென்று அதை பிரணவிற்கு அனுப்பி வைத்தாள்.
காலையிலிருந்தே தியானாவிடமிருந்து ஏதாவது பதில் குறுஞ்செய்தி வருமா வராதா என்ற ஆவலுடன் பிரணவ் ஏக்கத்துடன் அவன் போனையே பார்த்திருக்க, 'டிங்' என்ற சப்தத்துடன் கேட்டதும், அதுவும் தியானாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி என்றதும் ஆவலாக திறந்தான்.
'நீ எனக்கு மிகவும் பிரியமானவன், ஆகையால் உனக்கு நன்மையானதைச் சொல்கிறேன்.
-பகவத் கீதை 18:64
இனிய காலை வணக்கம் பிரணவ் என்று அனுப்பியிருக்க, இதுவும் பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறும் வசனம். ஆனாலும் நேசம் கொண்ட உள்ளம், சொல்வது போலவும் தோன்றியது.
'அய்யோ.. இந்த நேரம் சூர்யா இல்லையே.' என்று ஆனந்தப்பட்டுக் கொண்டான்
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 7)
அதானே..! சூர்யா சொன்ன மாதிரி ஒரு பொண்ணு தானே வந்து வலிய போன் நம்பர் கொடுக்கிறான்னா, அவளுக்கு அவன் மேல நம்பிக்கையிருக்கு என்கிறதையும் குறிக்கும், அவளுக்கு அவனை பிடிச்சிருக்கு என்கிறதையும் தானே குறிக்கும்.
அதுலயும் ரெண்டு பேரும் திரும்ப திரும்ப அலைபேசியையே பார்த்துக்கிறதுல இருந்து, ரெண்டு பேருக்குமே ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருக்குன்னுத்தானே அர்த்தமாகுது. ஆனால், முதல்ல பூனைக்கு யார் மணியை கட்டுறதுங்கிற தயக்கமும் இருக்குது அப்படித்தானே..? கடைசியில பிரணவ்வே முந்திக்கிட்டான் சூப்பர், இனி அடுத்தது அவளோட டர்ன்னா..?
போன் நம்பரை கொடுத்து முதல் அடியை தியானா எடுத்து வைச்சிட்டா, குர்ஆன் மெஸேஜை அனுப்பி அடுத்த ரெண்டாவது அடியை பிரணவ் எடுத்து வைச்சிட்டான், பகவத்கீதை வாசகம் அனுப்பி மூன்றாவது அடியை தியானா வைச்சிருக்காள்..
இப்படியே இன்னும் எத்தனை அடிகள் போகும் தெரியலையே..?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8
1 week ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-6
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-5
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-4
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-3
4 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
