Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-4

4 Posts
4 Users
1 Reactions
38 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#124]

அத்தியாயம்-4

அல்லாஹ்விடம் நம்பிக்கை வையுங்கள்; அவனே போதுமானவன்.

  -குர்ஆன் 65:3

மக்களிடம் நன்றி சொல்லாதவன் அல்லாஹ்வுக்கும் நன்றி சொல்லமாட்டான்.

   -நபிகள்

ஸ்டாப் அக்கமோடேஷன் அறை கதவை மெதுவாகத் தள்ளி உள்ளே வந்தான் பிரணவ்.
அறை உள்ளே மங்கலான வெளிச்சம். பேனின் சத்தம் மட்டும். சூர்யா படுக்கையில் நீளமாக படுத்திருந்தான்.

'ஹும்' என்று திரும்பிக் கொண்டான். ஆனா முழுமையாகவும் தூங்கவில்லை. பிரணவ் களைப்புடன் வந்து
சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே பெருமூச்சை விட்டான்.

"வந்துட்டியா" என்று சூர்யா கண்களை திறக்காமலேயே கேட்டான்.
"ம்ம்ம்… இப்ப தான். உடம்பு எப்படியிருக்கு" என்று
பிரணவ் நேற்று சூர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கேட்டான்.

"மச் பெட்டர் பிரணவ். முதல் நாள் எப்படி போச்சு?" என சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்.

"பயத்தோட போச்சு. இதுக்கு முன்ன சென்னையில் பெரிய ஹோட்டலில் தான் வேலை செய்தேன். ஆனா இந்தளவு  இல்லை. இங்க கூடுதலா ஆட்கள், கரண்டியை கீழே வச்சிட்டு ரிலாக்ஸாகி, தண்ணி கூட குடிக்க முடியலை. ஆர்டர் வந்துட்டே இருக்கு. ஒன்னு மாத்தி ஒன்னு உடனுக்குடன் கண்முன்ன ஸ்பெஷலா செய்யறது இட்ஸ் அமைசிங். எங்க நியூ ஜாயின்னு ஏதாவது சொதப்பி திட்டு வாங்குவேனோனு பயந்தேன். லேசா சொதப்பவும் செய்தேன். சூப்பர் வைசர் பார்த்தார். பட்... ஒன்னும் சொல்லலை. தட்டி கொடுத்துட்டு போயிட்டார்.

   வெஜிடேரியன் செய்ய எத்தனை பேர் எத்தனை விதமான ஆட்கள். தமிழர்களை தவிர்த்து வேற வேற மொழி பேசற இந்திய மனிதர்கள், வேற நாட்டை சார்ந்தவர்களும் இருந்தாங்க. இத்தனை விதமான ஆட்கள் வெஜிடேரியன் வெரைட்டி சமையல் செய்வதை பார்க்கவே ஆர்வமா இருந்தது. இங்க எல்லா நாட்டு சமையலும் கத்துக்கணும். ஏற்கனவே வெவ்வேறு நாட்டு சமையல் செய்வேன். இருந்தாலும் பேசி பழகி நுணுக்கமா இங்கயும் சிறந்த செஃப்பா கத்துக்கிட்டே இருக்கணும்." என்று பிரணவ் நிறைய  பேசினான். சூர்யா அதற்கெல்லாம் சிரித்தான்.

பிரணவ் டிரஸ்ஸை மாற்றிக் கொண்டான். முகம் கழுவி வந்து படுக்கையில் உட்கார்ந்தான்.

  "நான் சொன்னேன்ல நீ அட்ஜஸ்ட் ஆகிடுவ" என்று சூர்யா எழுந்து எதிரே அமர்ந்தான்.

சூர்யா கண்களை சுருக்கிப் பார்த்தான். "ஏதாவது வேற இன்ட்ரஸ்டிங்கா நடந்துச்சா?" என்றதும் பிரணவ் சற்று சிரித்தான்.
"ரிசப்ஷன் பொண்ணுக்கிட்ட பேசினேன். நல்லா பேசினா." என்றான்.‌
"ஓ.. இதுவேறயா.. நான் ஏதோ வேலை விஷயமா கேட்டேன். ம்ம்ம." என்று ஆர்வமாக சூர்யா கேலி செய்ய, "இல்ல அப்படி எதுவும் இல்ல. இவங்களும் வேலை விஷயமா தான் சொல்ல வந்தேன்." என்று பிரணவ் தலையை அசைத்தான்.
  சூர்யாவின் உடல்மொழி ஏதோ கேலியாக ஆர்ப்பரித்தது.
"சரி… பொண்ணு பேரு?" என்று சூர்யா நேரடியாக கேட்டான்.
பிரணவ் "தியானா'' என்றான்.
சூர்யா உடனே எழுந்து உட்கார்ந்தான்.

"அட சும்மா தான் கேட்டேன். பெயர் தெரியாதுனு சொல்வனு பார்த்தா? இவ்வளவு சீக்கிரமா ஆரம்பிச்சுட்டியா?"

"ஏய்… அதெல்லாம் இல்ல ரிசப்ஷன் பெண் என்பதால பேட்ஜ்ல பெயரை பார்த்தேன். அப்பவே பெயரை நோட் பண்ணினேன். அறிமுகம் ஆனதும் இன்னிக்கு பெயரை சொன்னாங்க" என்று
பிரணவ் சிரித்தான்.

"நேத்து ஓகே.. இன்னிக்கு எப்படி அந்தபக்கம் போன?"

"அதுதான் சொல்ல வந்தேன். ஹோட்டல் ரிசப்ஷன்ல இருக்குறவ நேத்து மேனேஜரை பார்க்க பேசினேன்ல, இன்னிக்கு தெரியாம வொர்க்கன்ஸ் எக்ஸிட்ல வராம டிரஸ் மாத்திட்டு லாபி வழியா வந்துட்டேன். அப்பறம் அந்த பக்கம் போகக்கூடாதுனு வொர்க்கஸ் எக்ஸிட் வழியா சுத்தி வந்தேன். அப்ப அவளையும் மறுபுறம் பார்த்தேன். நேத்து பேசினதால
இன்னிக்கும் பார்த்து பேசினேன். அவ்ளோ தான்" என்றான் பிரணவ்.

"ஹும்" சூர்யா கண்களை குறுகச் செய்தான்.

அப்படியே பேசி சிரித்து இரவு உணவை சாப்பிட்டு உறங்கி வழிந்தார்கள்.

காலை அலாரம் அடிக்கும்போது, இந்த முறை பிரணவ் திடுக்கிடவில்லை.
நேற்றைய பயம் இன்னும் இருந்தாலும், அதற்குள் ஒரு தீர்மானம் கலந்திருந்தது.

'இன்னிக்கு நிதானமா பண்ணணும்' என்று அவன் மனசுக்குள் சொன்னான்.
சூர்யாவும் இன்று வேலைக்கு தயராகிக் கொண்டிருந்தான்.

பிரணவும் மெதுவாக எழுந்து ரெடியானான். காலை நேரம் வீண் அரட்டையை தவிர்த்து புறப்படவே சரியாக இருந்தது.

ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்
இன்றைய காலை அவனுக்கு புதிதாக தோன்றவில்லை.

நேற்று பார்த்த அதே வழி… இன்றோ அவன் அங்கே சேர்ந்தவனாக மாறியிருந்தான்.

கிச்சன் டோர் திறந்தவுடன்,
நேற்றைய அதே சூடு அவனை வரவேற்றது. அதே ஓட்டம் 'ஓடத்தயாராகு' என்று சொல்லாமல் சொன்னது.

"குட் மார்னிங் செஃப்…" என்று
பிரணவ் மரியாதையாக சொன்னான். சீனியர் செஃப் ஒரு நொடிக்கு அவனை பார்த்தார்.

"ஆஹா… நியூ பாய் வந்துட்டானா… லேட் இல்ல… குட்." என்று அவரும் பிரணவை போலவே சுறுசுறுப்பாக உரைத்தார்.

அந்த ஒரு பாராட்டு வார்த்தை
பிரணவ் மனசுக்குள் ஒரு சிறிய நிம்மதியை ஈட்டியது.

பிரணவ் கைகளை கழுவினான். க்ளவுஸ் அணிந்து, கத்தியை எடுத்து காய்கறியை வெட்ட ஆரம்பித்தான்.
இந்த முறை கவனமாக,
ஒவ்வொரு வெட்டும் சரியான அளவில் விழ ஆரம்பித்தது.
அவன் மூச்சு சமமாக இருந்தது.

வேகமாக அதே நேரம் சுத்தமாக செய்பவனை செஃப் தூரத்திலிருந்து கவனித்தார்.

பல தரப்பட்ட ஆர்டர்களுக்கும் உதவி செய்தான். பிரணவ் வேகத்தை அதிகப்படுத்தினான்.
சில நேரத்திலேயே அவன் தயாரித்த பேஸ் கிரேவி செஃப் முன் வைக்கப்பட்டது.

செஃப் ஸ்பூன்ல எடுத்து ருசி பார்த்தார். ஒரு நொடி எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நின்றார்.  பிரணவ் இதயம் சற்று தடதடத்தது.
"ஹும்" அவர் மெதுவாக தலை அசைத்தார். "பெட்டர் டேஸ்ட் பிரணவ்" என்று பாராட்டினார்.

பிரணவுக்கு அது ஒரு விருது போல தோன்றியது. புதிதாக வந்த இடத்தில் பாராட்டினால் மகிழாமல் இருக்க முடியுமா?!

"தேங்க்யூ செஃப்" என்று நேற்றைய பயம் கொஞ்சம் குறைந்தது. பிரணவிற்கு இங்கே வரும்பொழுது நிறையவே பயமிருந்தது. இன்று இங்கே தானும் பொருந்தி போக முடியும்.' என்ற நம்பிக்கை உள்ளுக்குள் முளைத்தது.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.
இன்றும் வேலையில் வேகம் குறையவில்லை. இன்று பிரணவ் அந்த ஓட்டத்தோட சேர்ந்து ஓட ஆரம்பித்தான்.

இரவு ஷிப்ட் முடிந்து அவன் சோர்வுடன் வெளியே வந்தான். வொர்க்கஸ் வெளியேறும் வழியில் நடந்துக் கொண்டிருக்க அங்கே நேற்று போலவே தியானா இருந்தாள்.
அவள் யாரோடோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவன் அருகே வந்ததும்,
அவள் கண்கள் ஒரு நொடிக்கு அவனை பார்த்தது.

அந்த பார்வை.. இந்த முறை தெரிந்தவர் மீது விசப்படும் பார்வையாக மாறியது.

"நேத்தை விட… கொஞ்சம் பெட்டர்ங்க அப்பறம்..." என்றவன் இன்றைய நாளை அவள் கேளாமல் சொல்லிவிட்டு தயங்கி நிற்க, தியானா புருவம் உயர்த்தினாள்.

"சொல்லுங்க மிஸ்டர்" என்றதும், "இந்த மிஸ்டர் வேண்டாமே. மொழி தெரியாத ஊர்ல பார்க்கற முக்கால் வாசி பேர் அன்னியமா தான் தெரியறாங்க. தமிழ் பேசறதால ஏதோ சிலரிடம் அன்னியோன்யமா தெரியுது. அதுலயும் நீங்க... நான் இந்த பெரிய லக்ஸரி ஹோட்டலில் சந்தித்த முதல் பெண். தமிழ் பேசற பெண்.. தமிழ்நாட்டு பொண்ணு. பெயர் சொல்லியே என்னை கூப்பிடுங்க மேம்" என்றான்.‌
  
   "ரொம்ப தப்பு சார்" என்றாள் தியானா. ஏதாவது தவறாக சொல்லி விட்டோமோ? வந்த இரண்டாவது நாளிலேயே பெயரிட்டு கூப்பிட கூறி கோரிக்கை வைப்பது தவறோ என்று புரிந்து மன்னிப்பு வேண்டும் சமயம், தியானாவோ "நீங்க பெயர் சொல்லி கூப்பிடுனு சொல்லிட்டு என்னை மேம்னு சொன்னா ரொம்ப தப்பு சார்" என்றாள்.

பிரணவ் உடனடியாக பயம் களைந்திட தியானா அவனது முகமாற்றத்தை கண்டு சிரித்தாள்.

  "அப்பறம்... பெயரிட்டு சொல்லணும்னா... நீங்களும் என்னை மேம் என்றதை விடணும் மிஸ்டர் பிரணவ்" என்றாள்.

  "கொஞ்சம் கஷ்டம் தானோ. யாராவது இதை கேட்டு பிரச்சனை வந்துடுமா" என்று நிஜமாகவே கேட்டான்.

  "கண்டிப்பா.. பிரச்சனை வரலாம். ஏன்னா... நான் தமிழ் பேசற தமிழ் பொண்ணு இல்ல. நான் தமிழ்நாட்டு பொண்ணே இல்லை சார். நான் ஶ்ரீலங்கா பொண்ணு" என்றாள் கூடுதல் தகவலாக.

"அட... அப்படியா? சாரி... நீங்க தமிழ் பேசவும் நான் தமிழ்நாட்டு பொண்ணுனு நினைச்சிட்டேன். ஶ்ரீலங்காவா?" என்று குரல் உள்ளுக்குள் சென்றது.

  "ஏன் சார்... ஶ்ரீலங்கா பொண்ணு தமிழ் பேசலாமே. சிங்களம் மட்டும் தான் பேசணுமா?." என்றாள்.

  "அது வேறங்க." என்று வருத்தமானான்.

"ஏன் என்னாச்சு? சோகமா பேசறிங்க" என்று டாக்ஸி பிடிக்குமிடம் வந்ததும் தனிதனியாக செல்லாமல் நின்று கேட்டாள்.

"இல்லை... தமிழ்நாட்டு பொண்ணு என்றதும் ஒரு... ஒரு" என்று இழுத்தான் பிரணவ். நெருக்கம் வந்ததே... இன்று இனி அது மிஸ்ஸாகும் என்ற கவலை.

"இங்க பாருங்க சார்... தமிழ் பேச தமிழ்நாட்டு பொண்ணு தான் வேண்டும்னு இல்லை. தமிழ் மொழியை, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, பாரதியார் எழுநிய கவிதைகளை, பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி எழுத்து, இப்படி எத்தனையோ தமிழ்  கதையை கவிதையை வாசித்தா யாராயிருந்தாலும் தமிழ் மேல நேசம் பிறந்திடும். பிறகு எந்த நாட்டை சேர்ந்தவங்கன்னாலும் தமிழ் பேசுவாங்க.

அப்படி தமிழ் பரவியதால தான் சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், மொரீஷியஸ், தாய்லாந்து இப்படி சொல்லிட்டே போகலாம்.
  தமிழ் மொழில கூட ஒரு கதை சொல்வாங்க. நல்லவங்களும் நல்லதும் ஒரேயிடத்தில இருக்காது. அது பரவிட்டே இருக்கும்.

   தமிழ் அவ்ளோ ஸ்பெஷல் சார். பெரும்பாலும் தமிழ் மொழி என்றதும் ஶ்ரீ லங்கா தமிழ் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. பட்... உண்மையில தமிழ்நாட்டில் பேசற பலவிதமான தமிழுக்கும் தமிழ் கவிதை கதைக்கும் எப்பவும் மவுஸ் உண்டு." என்றதும், பிரணவ் வாய் பிளந்து பார்வையிட்டவன், சமாளிக்கும் விதமாக சிரித்தான்.

"அப்பறம்... நான் கிளம்பட்டுமா பிரணவ்?" என்றதும், பிரணவ் தலையாட்ட, தியானா டாக்ஸியை பார்வையிட "இனி தியானானு கூப்பிடலாமா." என்று பர்மிஷன் கேட்டான்.‌

"தாராளமா" என்று புன்னகைத்து சென்றாள். பிரணவிற்கு அதன் பின் கால்கள் தரையில் இல்லை. அறைக்கு வந்து எப்படி சேர்ந்தானென்று கேட்டாலும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

   சூர்யாவிடம் தியானாவை பற்றி கூறிட, ஆர்வமாக இருந்தான்.

  சூர்யா க்ளினிங் வேலை முடித்து அறைக்கு தாமதமாக தான் வந்தான்.

அவனுக்கு உணவுகளை சமைத்து வைத்து பிரணவ் தயாராக இருக்க, குளித்து விட்டு புத்துணர்வுடன் அமர்ந்தார்கள்.

"என்ன பிரணவ்... ஹோட்டல் உணவுகள் போல வரிசையா அலங்கரிச்சு வச்சியிருக்கிங்க." என்று கேட்டதற்கு புன்னகை மலர, "தியானா என்னை பெயர் சொல்லி கூப்பிட சொன்னா." என்று கூறினான்.

சூர்யா மிகவும் ஆர்வமாக, "அவங்களா பெயர் சொல்லி கூப்பிட சொன்னாங்களா?" என்று கேட்க, "சேசே.. நான் தான் மிஸ்டர் பிரணவ்னு கூப்பிடாதிங்க... பிரணவ்னு பெயர் சொல்லி கூப்பிட ரெக்வஸ்ட் வச்சேன்.‌" என்றதும் 'அதானா' என்று சூர்யா லேசான ஏமாற்றத்துடன் முகம் மாறியது.

   "அப்பறம்... அந்த பொண்ணு ஶ்ரீலங்கா பொண்ணு. தமிழ்நாடு கிடையாது" என்று கூறிய பிரணவ் முகம் வாடியது.

  "ஆகமொத்தம்.. தமிழ் பேசுது" என்று சூர்யா அங்கலாய்க்க, "ம்ம்" என்றான் பிரணவ்.

"ஓகே.. சூர்யா... நான் அம்மாவுக்கு கால் பண்ணி பேசிட்டு தூங்கணும். நீ வீட்ல பேசிட்டியா?" என்று கேட்க, குழந்தை சீக்கிரமே தூங்கிடுச்சாம். அதனால ஒய்ஃப் கூட பேசிட்டு தூங்கணும். நீ அம்மாவிடம் பேசு. நான் லேட்டாகும். போன்லயே குடித்தணும் நடத்திட்டு தூங்கறேன்" என்று வெளிநாட்டில் வாழும் ஆணும், அவனே நம்பி ஊரில் வாழும் பெண்ணும் என்று போனில்  பேசி சிரித்து அன்பை பகிர்ந்து, போனிலேயே காதல் காமப்பேச்சை பேசி நேரத்தை கடத்தி உறங்குவதாக சொன்னான்.

பிரணவும் அன்னையிடம் பேசிவிட்டு, தியானா நினைவுடன் மெத்தையில் விழுந்தான்.

தமிழ் வச்சி என்னென்னமோ சொல்லுது. முதல்ல முஸ்லிம், இப்ப தமிழ்நாட்டு பொண்ணு இல்லை. தினமொரு தகவல் மாதிரி இருக்கு.' என்று அவளை நினைக்கும் பொழுது எல்லாம் உதட்டில் புன்னகை குடிப்பெயர்வதை அறியாது போனான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.


 
Posted : July 3, 2026 7:40 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 aha per solli kootitu nerungiyachu but edhu nallabadiya pona sari😘 


 
Posted : July 3, 2026 11:28 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)

பரவாயில்லை, நான் கூட பிரணவ் ஏதாவது சொதப்பிடுவானோன்னு
பயந்தேன், நல்லவேளை, நம்ம இந்தியாவோட மானத்தை, குறிப்பா தமிழ்நாட்டோட மானத்தை காப்பாத்திட்டான்.

ஆனா, தியானா, தியானான்னு அவளோட பேரையே தவமா உச்சரிக்கிறச்ச கோபம் தான் வருது. வந்த இடத்துல வேலையை பார்த்தோமா, சம்பாதிச்சோமான்னு இல்லாம..
எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்ன்னு நினைக்கத் தோணுது போங்க.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : July 3, 2026 12:08 pm
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Nice. Story going well.sis. very intresting chef work.style narrated very intresting sis


 
Posted : July 3, 2026 12:43 pm

Scroll to Top