Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-3

2 Posts
2 Users
1 Reactions
107 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#127]

அத்தியாயம்-3

செழியன் 'வர்ஷினிக்கு கல்யாணமாகிடுச்சா' என்று ஆர்யனிடம் கேட்க,ஆர்யனோ "அதெல்லாம் தெரியலையேடா. அந்த புள்ள படிக்க உதவி கேட்டது பத்து வருஷத்துக்கு முன்ன. அதுவும் அவ அப்பா தான் வந்தார். எங்கப்பா கொஞ்சம் படிப்புக்கு என்றதும் மெடிக்கல் சீட் வாங்கி தர சொன்னார். நான் உதவியது.
   அதுக்கு பிறகு இதே போல இரண்டு கான்பரன்ஸ்ல பார்த்தேன். இது மூனாவது முறை. அந்த பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சான்னு எல்லாம் நான் கேட்டதில்லையே. அவ நம்பர் எல்லாம் நான் சேவ் கூட பண்ணிவைக்கலை. வர்ஷினி கூட வந்த பொண்ணு அனிதாவிடம் கேளு சொல்வா. ஒரு வேளை சொல்லலாம்" என்று கூறியவன் யோசனை சட்டென சுடரிட்டது.

  "செழியன்... அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா?" என்று கேட்க, செழியன் வலியோடு ஆமென்றான்.

  "என்னடா நீ... இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணின ஓகே. இப்ப என்ன தடுக்குது. அந்த பொண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல? என்னிடம் வந்து கேட்கற. சரியான முட்டாள்டா நீ" என்று திட்டினான்.

  செழியனோ "நான் கிளம்பறேன் ஆர்யன். அவளுமே டேபோடில்ஸ் பேரடைஸ்ல ஸ்டே பண்ணியதா பேச்சு வாக்குல சொன்னா. நான் முடிஞ்சா இன்னொரு முறை சந்திச்சு பேசறேன்." என்று மகிழ்ச்சியாக கிளம்பினான்.

  ஆர்யனோ "என்னவென்றாலும் எனக்கு போன் பண்ணுடா" என்று கூறி வழியனுப்பினான் ஆர்யன்.

செழியன் அவனுக்கான கேப் புக் செய்து காரில் ஏறியதும், "ரூம் நம்பரை கூட கேட்கலை?' என்று மனதோடு புலம்பினான்.

  இங்கு காலையில் வந்தப்பொழுது இருந்த மனநிலைக்கு மாறாக, இன்று அவளோடு உணவருந்திய தருணத்தை நினைத்து நினைத்து பார்த்து மகிழ்ந்தான். வாழ்நாள் எல்லாம் உன்னோட உட்கார்ந்து உன் கையால சமைச்ச சாப்பாட்டை சாப்பிடணும்.' என்ற வார்த்தைகள் எல்லாம் கனவில் நடந்தது போல பெருமூச்சை வெளியிட்டான். அவளோடு இணக்கமாக பேசியது எல்லாம் போன ஜென்மத்தில் நடந்தது போல அல்லவா காலம் மாற்றிவிட்டது. இப்பொழுது யாரோ எவரோ என்ற ரீதியில் அல்லவா பேசி சென்றுவிட்டாள். அப்படியெனில், அவளுக்கு திருமணம் நடந்து முடிந்திருந்தால்... மனசாட்சி இதையே சொல்லி மிரட்டி பிறகு அதுவே, 'முதலில் அவளிடம் பேசி தெளிவு பெற்றுக்கொள்' என்றது.

  அவசரமாய் தங்கிய ஹோட்டலில் நுழைந்தவன், கீழே ரிசப்ஷனில் அவளது பெயரை கூறி, அவளது ரூம் நம்பரை விசாரிக்க, "சாரி சார்.. எந்த கஸ்டமரோட டீட்டெயிலும் நாங்க தரக்கூடாது" என்று கூற தயங்கினார்கள் ஹோட்டல் நிர்வாகிகள். 

  செழியனோ விடாமல்,''அந்த பொண்ணு பேரு வர்ஷினி. அவளும் டாக்டர் நானும் டாக்டர்.
  அவளும் நானும் ஒரே கான்பிரன்ஸ்கு  தான் போனோம்‌. சந்திச்சு பேசினோம்‌. பட் போன் நம்பர் வாங்க மறந்துட்டேன்" என்று கெஞ்சாத குறையாக கேட்க, அப்பொழுதும் கொடுக்க மறுத்தனர்.

  ஒருவர் அனுமதியில்லாமல் ஹோட்டல் நிர்வாகம் தரயியலாதே. "சார்... அவங்களிடம் நாங்க பேசி அவங்களா உங்களிடம் நம்பர் தர சொன்னா அப்ப தர்றோம்" என்றார்கள். தங்கியிருந்த அறைக்கு போனில் அழைக்க, அங்கே அனிதா பேசியபடி இருந்ததால் எடுக்கமுடியாமல் சதி செய்தது.

  ''அந்த மேடம் போன் எடுத்தா, உங்களை பற்றி சொல்லறேன். உங்க நம்பருக்கு கனெக்ட் பண்ணி கூட தர்றோம்" என்று கூறிடவும் சம்மதமாய் செழியன் அறைக்கு சென்றான்.‌

  அனிதாவோடு காரில் ஏறிய வர்ஷினி செழியனை சந்தித்த ஆனந்தத்தோடு ஒருவித சோகமும் கலந்து வந்தாள்.

  "ஏதோ எங்க ஊர் வந்தா எனக்கு நடுக்கும், அங்க யாராவது பார்த்தா வருந்தமா இருக்கும். நீ என் கூடவேயிருப்பியா அனிதானு கேட்ட. இன்னிக்கு சாப்பிடும் போது அந்த செழியனோட போனது. ரிட்டர்ன் வரும் வரை மேடம் டீப்பா அந்த பர்டிக்குலர் டாக்டர் கூட மட்டும் பேசின. யார் அவரு?" என்று கேட்டாள்.

  "தெரிந்தவர்... அப்பாவுக்கு தெரிந்தவர்" என்று கூறவும் அனிதா அதன் பின் காரில் வாய்திறக்கவில்லை. வர்ஷினி அப்பா என்ற வார்த்தை எடுத்தாலே அமைதியாகிவிடுவாள்.
  அதனால் தந்தை என்ற டாபிக்கை பேசும் போது அனிதாவும் தவிர்த்து கொள்பவள்.

  இப்பொழுது அறைக்கு வந்தப்பின்னும் அதையே கடைப்பிடித்தாள்.

   அனிதாவுக்கு அவளது குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் வந்ததிலிருந்து பேச, வர்ஷினி அவளுக்கான அறைக்குள் வந்தாள்.

   'அவர் இங்க தான் தங்கியிருக்கார். அவருக்கு இன்னமும் கல்யாணமாகலை. அவரிடம் அதிகமா பேசினா, என்னை மீறி அவர் தோளில் சாய்ந்து அழுதுடுவேன்.
   உடனே ஓடி வந்தது தான் சரி." என்று முடிவெடுத்தாள்.

   செழியனோ அறைக்கு வந்தவன், 'இங்க தான் ஏதோவொரு ரூம்ல வர்ஷினி இருக்கா. அவளிடம் மறுபடியும் பேசணும்.' என்றவன்  இன்விடேஷனை தேடினான்.
   அதில் கலந்துக்கொள்ள வந்தவரின் பெயர் பட்டியலை வாசித்தான்.

  'V.Varshini M.B.B.S M.D என்ற பெயரை கவனித்தான்.

  இந்த பெயரால் எத்தனை குழப்பம். முதலில் அவளது எண்ணை எப்படி கண்டறிய?' என்றவனுக்கு சிரமம் கொடுக்காமல் வர்ஷனியே அழைத்து விட்டாள்.

  அவளுக்கு ஆர்யனின் எண் அவளது அலைப்பேசியில் பதிவு செய்திருந்ததால், உடனடியாக ஆர்யனுக்கே நம்பரை போட்டு, செழியன் எண்ணை கேட்டு இதோ அழைத்துவிட்டாள்.
ஆர்யனுக்கு இவளது எண் தெரியாது. அதனால் செழியன் கேட்டப்போது கொடுக்க முடியவில்லை‌. தற்போது வர்ஷினியே கேட்டதும் ஆர்யன் ஏன்? எதுக்கு? என்ற காரணமின்றி கொடுத்துவிட்டான். அவன் தான் செழியனின் விவரம் அறிந்தவன் ஆயிற்றே.

  செழியன் புது எண் என்று போனை எடுத்ததும். "ஹலோ டாக்டர் செழியன் இயர்" என்றதும், "நான் வர்ஷினி பேசறேன். ஆர்யன் அண்ணாவிடமிருந்து நம்பரை வாங்கினேன்." என்று படபடவென உரைத்தாள்.

  "வர்ஷினி... இது உன் நம்பரா?" என்று கனவா நினைவா என்பதாக கேட்டான்.‌

  முன்பு போலவே "ஆமா... என் நம்பர். பழைய நம்பர் நான் உபயோகப்படுத்தறது இல்லை." என்றாள். அது தான் செழியனுக்கு நன்றாக தெரியுமே. எத்தனை முறை அழைத்து பார்த்து, சலித்து, அவள் மட்டுமாவது நன்றாக இருக்கட்டுமென்று நினைத்தான்.

   "சாரி... பேசிட்டே இருந்துட்டு அப்படியே அனிதா கூப்பிடவும் வந்துட்டேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க." என்று மன்னிப்பு கேட்டாள் வர்ஷினி.

  "பரவாயில்லை... நீயும் இங்க தானே தங்கியிருக்க? சந்திக்கலாமா?" என்றான்‌ செழியன்.

  அவளிடம் பேசியபின்னே தவறாக கேட்டுவிட்டோமோ? அவளுக்கு கணவன், குழந்தை என்று இருந்தால்?

  ஆனால் தான் தவறாக எண்ணி சந்திப்பை நாடவில்லை என்ற உண்மையும் எடுத்துரைத்தது‌ மனம். நீண்ட வருடமாக பார்க்காதவளை பார்த்ததில் செழியன் கேட்டதில் தவறில்லையே. அவன் வாழும் இந்த உப்பு சப்பில்லாத வாழ்க்கை, இந்த சந்திப்பால், மாறினாலும் மாறுமே.

  வர்ஷினியோ "அதுவந்து... ஈவினிங் வேண்டுமின்னா சந்திக்கலாம். இப்ப உடனே உடனேனா... அனிதா என்னை ஆயிரம் கேள்வி கேட்பா" என்று தன்னிலையும் விவரித்தாள்.
 
 செழியனும் அவளது நிலைமை புரிந்து, "இட்ஸ் ஓகே... நாம ஈவினிங் சந்திக்கலாம்." என்று கூறி, பரஸ்பரமாக போனை துண்டித்து கொண்டனர்.

வர்ஷினி போனை துண்டித்தப்பின், 'இதுக்கு முன்ன எத்தனை முறை அவரிடம் உரிமையா பேசியிருக்கேன்.  அப்ப எல்லாம் பட்டர்பிளை பறக்கற மௌமெண்ட்ஸ்.
   எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சியிருக்க, எப்படியெல்லாம் பேசியிருக்கோம். அதெல்லாம் மறந்து சாதாரணமா அவரிடம் என்னால எப்படி பேச முடிந்தது.

  கல்யாணம் குழந்தை... அதுவும் இரண்டு குழந்தை வேண்டும்னு அவர் எவ்ளோ ஆசையா என்னிடம் கேட்டு பேசியிருக்கார்.

தானுமே வெட்கமில்லாமல் 'செழியன் நீங்க ரொம்ப மோசம்  போனை வையுங்க' என்று சிணுங்கி உச்சரித்து போனை துண்டிக்காமல் குழைவாக கிறக்கமாக எத்தனை கதை பேசியது. அந்த நாட்கள் எல்லாம் மறந்து, அவரை மறந்து இத்தனை வருடம் எப்படி கடத்தினேன்.' என்று கண்ணாடியில் தன் பிம்பத்தை கண்டாள்.

அனிதாவுக்கு தனியறை, தனக்கும் தனியறை என்பதால் தன்னிலை யாருமறியாது மனதோடு அல்லவா உறவாடுகின்றது.

  இன்று அளவிற்கு அதிகமாக உன் முகம் ஆனந்தம் கொள்கின்றது. கனவில் உறவாடி பேசி மகிழ்ந்தவனோடு நேரில் நீண்ட வருடம் கழித்து பேசினேன். ஏனோ மனம் இறகு போல இதமாக உணர்கின்றது.

   அவருக்கு இன்னமும் மணமாகவில்லை.' என்று மகிழ, அடுத்த நொடியே 'எப்படி திருமணம் அமையும். அவரது வாழ்க்கையை தான் மேடை போட்டு அவமானம் படுத்திவிட்டாயே' என்று எண்ண அங்கிருந்த மேஜையில் அமர்ந்து குலுங்கி அழுதாள்.

   எத்தகைய அவமானம் ஒரு ஆண்மகனை அந்த இடத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்தியிருக்க கூடாது.

   அவர் அதை அவமானமாக கருதினாலும், தன்னை ஒருவார்த்தை கடியவில்லையே. தன் தந்தையை உயர்த்தி மதிக்கின்றார். ஆனால் அவரது குடும்பத்தோடு வாழவில்லை என்றாரே. அவருடைய அம்மாவிடம் பேசி பத்து வருடத்திற்கு மேலானது என்றாரே ஏன்?

  பத்து வருடமென்றால் அது என்னால் மட்டுமே. இதுக்கூட புரியாதவளா நான்.

   இந்நேரம் செழியன் சந்தோஷமாக வாழ்வார் என்று எண்ணியதற்கு மாறாக அவரும் என்னை போல மனம் வருந்தி வாழ்ந்து வருகின்றாரோ. எங்களை ஏன் இந்த விதி மீண்டும் சந்திக்க வைத்தது.
  நானும் அவரும் பேசியதை அவர் அம்மா அறிந்தால், பிரச்சனை மீண்டும் வெடிக்குமோ?
  
  என்னயிருந்தாலும் அன்று கடைசியாக அவர் பேச்சை கேளாது இறங்கி வந்தது நான்.

  அவர் வீட்டுக்கு வந்தப்பொழுது அப்பாவிடம் பேசிய நேரம், "என்னை என் பெயரிட்டு அழைத்தார். அப்பொழுதும் வெளிவராமல் புதைந்து கொண்டது நான். அம்மா இறப்பில் அவரை திட்டி அனுப்பி இருந்தேன்.

   என்‌ மீது தான் தவறு. அவர் வாழ்வு இத்தனை காலம் மலராமல் வாடியதற்கு நான் மட்டுமே காரணம் என்று துடித்தாள்.

கண்ணாடியில் இருந்த அவளது உருவமோ கேலியாக நகைத்து, "அவர் வாழ்க்கை தனிமரமாக நிற்கறார்னு புலம்பறியே, இங்கே உன் வாழ்க்கை மட்டும் வசந்தமாய் அல்லவா மணக்கின்றது. நீயுமே கடனே என்று கடமைக்கு என்று வாழ்கின்றாய். நீயும் தான் தனிமரமாய் தவ வாழ்வில் மிதக்கின்றாய்.

  இந்த இடைப்பட்ட காலத்தில் காதல் என்று அருகே வந்தவர்களிடம் கூட, 'ப்ளீஸ் நான் யார் காதலையும் ஏற்க முடியாது.' என்று மறுத்துவிட்டாயே.
 
  கல்லூரியில் மட்டுமா? இதோ பணிப்புரியும் இடத்தில் கூட, 'நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா வர்ஷினி?' என்று மொய்தீன் கேட்டார்.

  மதத்தை காரணம் காட்டி அழகாக தப்பிக்க பார்த்தாயே. ஏன்.. ஏன்... செழியனை தவிர வேறொருவனை ஏற்க மனமின்றி இப்பொழுது வரை தனியாக நின்று கண்ணாடியோடு பிதற்றுகின்றாய்.' என்று மனசாட்சி அதட்டியது.

  காலம் முழுக்க தனியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அவர் ஏன் தனியாக வாழணும். எனக்கு தான் அதட்டி மிரட்டி கல்யாணத்தை செய்து வைக்க தந்தை இல்லை. அவருக்கு தாய் தந்தை இருந்தும், அவர்கள் என்ன செய்கின்றார்கள்.

  அந்த பெரிய மண்டபத்தில் வாய் கிழிய பேசி எங்களை பிரித்தவருக்கு மகனின் வாழ்க்கைக்கு அவரிடம் மல்லுக்கட்டி பேசியிருக்க வேண்டாமா? பத்து வருடம்... பத்துவருடம் சாதாரண விஷயமா? என்றவளுக்கு பழைய நினைவுகள் வரிசை கட்டி வந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : July 3, 2026 3:48 am
(@crvs2797)
Posts: 101
Estimable Member
 

விதி போகும் பாதையை யார் அறிவார்..?

அது போறபோக்குலத் தானே நாமளும் போகணும்.

 

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 5:47 am

Scroll to Top