Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-8

2 Posts
2 Users
0 Reactions
110 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#132]

அத்தியாயம்-8

செழியன் அன்னை தந்தையை விரட்டாத குறையாக நாகர்கோவிலில் துரத்திவிட்டான். அதிலும் சுகந்தி மீது அடக்கப்படாத சினம் துளிர்க்க, 'என் வர்ஷூவை மட்டும் எனக்கு அவங்க கட்டிக் கொடுக்கலை. இனி உங்களிடம் பேச மாட்டேன்" என்று திருநெல்வேலி வந்தான்.

  கல்யாண வீடோ அலங்கோலமாக காட்சி அளிக்க, "மாமா" என்று அழைத்து வீட்டுக்குள் நுழைய அங்கே ஜானகி பிணமாக நடுக்கூடத்தில் இருந்தார்.

   வரதராஜன் வர்ஷினி அவனை எதுவும் சொல்லவில்லை. மாறாக அவனை கண்டு வர்ஷினி பிணமாக இருந்த அன்னையை கண்டு அழுதாள்.

  ஊர்காரர்களோ செழியனை திட்டி பேசி, வெளியேற கூறினார்கள்.

   ஆளாளுக்கு வெளியே செல்ல கூறி, கத்த, வரதராஜனோ, "நீங்க கிளம்புங்க தம்பி. இனி எல்லாம் முடிஞ்சிடுச்சு. உங்களை மாப்பிள்ளையா அடையற தகுதியை நான் இழந்துட்டேன்." என்று குலுங்கி குலுங்கி அழுதார்.

   ''ஏன் மாமா இப்படி பேசறிங்க" என்று கூறியவனின் சட்டையை பிடித்து, "ஏன் இங்க வந்திங்க... போங்க... என்‌ அம்மாவை எனக்கு இல்லாம பண்ணிட்டிங்கள்ல. போங்க... எனக்கு நீங்களும் வேண்டாம். கல்யாணமும் வேண்டாம்" என்று அழுதாள்.

  அங்கிருந்த மூத்த பெண்மணிகள் சிலரோ, வர்ஷினியை அழைத்து வந்து அன்னை அருகே அமர வைக்க, செழியனோ இந்த நிலையில் எது பேசினாலும் தவறாக பதியும் என்று மற்றவர் விரட்ட வெளியேறினான். அப்படி விரட்டினாலும் இடுகாடு வரை வந்து கடைசி ஆளாக தான் சென்றான்.

   ஒரிரு மாதம் வரதராஜனிடமும் , வர்ஷினியிடமும் பேச முயன்றான். வர்ஷினி மருந்துக்கடையை மூடி வைத்து விட்டு உள்ளே உட்கார்ந்து அழ, வெளியே வரும் நேரமும், "ப்ளீஸ்... உங்களை பார்த்தா என்‌ அம்மாவை என்னிடமிருந்து பிரிச்சிங்கன்ற நினைப்பு தான் வருது. என்னை தொந்தரவு பண்ணாதிங்க" என்று அழுத்தமாய் உரைத்தாள்.

  வரதராஜனிடம் பேசி புரிய வைக்க கல்லூரி சென்றான் செழியன். ''வேண்டாம் தம்பி... என் பொண்ணு இனியும் உங்க வீட்டு மருமகளா என்னால கொடுக்க முடியாது." என்று கூறிவிட்டார்.

செழியன் அங்கும் இங்கும் சில மாதம் நடைப்பிணமாக அவளுக்காக அலைந்தான்.

  அதோடு நாகர்கோவில் வந்தாலே 'வரதட்சனை கேட்ட மாப்பிள்ளை' என்று அடைமொழி வேறு செய்து சிலர் கேலி செய்தனர். ஊர்காரர்கள் பலரும் ஆங்காங்கே அமர்ந்து இது போல ஊர்கதை பேசினாலும், ஏனோ முற்றிலும் ஊருக்கு வருவதையே தவிர்ந்தான்.

   மருத்துவ துறையில் தன் மீது தவறில்லை என்று பெண்ணின் அப்பாவே கைப்பட எழுதி தந்ததை வைத்து மீண்டும் இணைந்து கொண்டான். அதோடு அதே மருத்துவமனை வேண்டாமென்று மீனாட்சி மருத்துவமனைக்கு மாற்றம் வாங்கி கொண்டான்.‌

   சுகந்தியோடு அதன் பின் சுத்தமாக பேசுவது கிடையாது. அவராக மகனை பார்க்க வந்தாலும் 'வாங்க என்றோ உபசரிப்போ துளியும் கொடுக்காமல் அறைக்குள் முடங்குவான்.
 
  ஏதோ சம்பவம் நடக்கும் பொழுது எல்லாம் கிருபானந்தன் இல்லாததாலும், சுகந்தி அளவிற்கு வார்த்தையை நெருப்பாய் வீசாததாலும் தந்தையிடம் மட்டும் பேசுவான் செழியன்.  நாளாக நாளாக தன் வீட்டிற்கும் சுகந்தி கிருபானந்தன் இருவரையும்  வரவிடாமல் தடுத்துவிட்டான்.

தன் சொந்த ஊருக்கும் பத்து வருடமாக வருவதில்லை.
  ஏதோவொரு இலக்கு இல்லா வாழ்வை வாழ்கின்றான் செழியன்.

   இன்று தான் பாலைவனத்தில் மழை பொழிந்தது போல வர்ஷினியை சந்தித்தான். அதுவும் அவளும் இவனை போலவே டாக்டர் என்ற அறிமுகத்துடன் அடையாளமாகவும் பத்து வருடம் அவமானப்பட்டவர்களுக்கு மாற்றம் தந்துள்ளதை கிரகித்தான்.

  நண்பன் ஆர்யன் தான் கூறினானே. வரதராஜன் மெடிக்கல் சீட் வாங்கி, வர்ஷினியை சேர்த்துவிட்டு, வீடு வாசல், நிலம், நகை, என்று விற்று டாக்டர் படிக்க வைத்திருப்பதை புரிந்துக் கொண்டான்.

   இன்று வர்ஷினியை பார்த்தும் மணமானவளா இல்லையா என்று அறியும் ஆவல் அவனுக்கு தோன்ற, சந்திப்பு அமைவதற்கு காத்திருந்தான். இத்தனை காலம் காத்திருந்தவனுக்கு நொடிகள் நகராமல் நரக வேதனை தர, அறைக்குள் குட்டி போட்ட பூனையாக சுற்றினான்.‌

  தன் உருவத்தை கண்ணாடியில் கவனித்து, வெள்ளை நரையை பார்த்து, சலித்தான்.
  அவள் காணும் நேரம் தன் தோற்றம் இப்படியா இருக்க வேண்டும் என்ற சலிப்பு. ஆனால் இந்த மருத்துவ மாநாடு மட்டும் இல்லாமல் போனால் இதை விட மோசமாக இருப்பான்.
  
   இந்த முகத்தில் அவளை மறந்த வலி வேதனை இல்லை என்று எண்ணுவாளோ என சிந்தித்தான்.

  அவனை அதிகம் காத்திருக்க வைத்தே சூரியன் மறைய துவங்கியது. மாலை வந்ததும் மின்னலாய் தன்னை தயார்படுத்தி, அங்கிருந்த உணவரங்கத்திற்கு வர சென்றான்.

ஹோட்டல் கிரவுண்ட் பிளோரில் கட்டமைத்து இருந்தனர். அதனால் பாதாள உலகம் போல படியில் சென்றான்.

ஏசி காற்று அவனை வரவேற்றது. மெல்லிய விளக்கொளிகள் டேபிளுக்கு மேல தொங்கவிடப்பட்டிருந்தது.
  அதில் அவனது தேவதை தனிமையாக பேசுவதற்கு தோதான இடத்தில் அமர்ந்திருந்தாள்.

  ஆனந்தமாக வந்தவன் "ரொம்ப நேரமாச்சா? சாரி.. இங்க வர தான் டிரஸ் எடுத்தேன்‌. எதை போட என்று கன்பியூஸ். இதுல நேர்த்திய கிளம்ப நேரம் ஓடிடுச்சு." என்று எதிரே அமர்ந்தான்.

  ஏற்கனவே சூடான வெஜ் கார்ன் சூப்பை ஆர்டர் தந்திருக்க அதனை கொண்டு வந்து வெயிட்டர் கொடுத்தார்.

  மேலும் என்ன உணவு வேண்டும் என்று கேட்க, எதை ஆர்டர் செய்வதென்று இருவருக்கும் தெரியவில்லை. 'முதலில் எங்களை பேச விடுங்களேன்' என்று இருவர் மனமும் உள்ளே கூச்சலிட்டு கொண்டிருந்தது.

  "இங்க ஸ்பெஷல் 'கிழிபரோட்டா' மேடம் கொண்டு வரவா?" என்று வெயிட்டரே கேட்க, அதையே இருவரும் ஆர்டர் தந்து வெயிட்டரை விரட்டினார்கள்.

  "இங்கே எத்தனை நாள் ஸ்டே?' என்று கேட்டான்.

  "இன்னிக்கு நைட் நைனோ க்ளாக் டிரையின்ல கிளம்பிடுவேன்." என்றாள்.

  லேசாக அதிர்ச்சி, அதனால் தான் அவளே இந்த நேரம் சந்திக்க அழைத்தாளா என்று மனதிற்குள் ஓடியது.

"நீங்க?" என்று கேட்டாள். செழியன் வீடு பக்கம் தானே‌. வீட்டுக்கு செல்வானோ என்று கேட்டாள். "நான் ஆல்ரெடி பிளைட்ல டிராவல் பண்ணி இப்ப சென்னையில் இறங்கியிருக்கணும். ஐ மீன் மாநாடு முடிஞ்சி உடனே கிளம்பறதா புக் பண்ணினேன். பட் சடனா கேன்ஸல் பண்ணிட்டேன்" என்றான் செழியன். அவன் பிளைட்டை கேன்சல் செய்தது அவளுக்காக தானே.

   "ஆப்டர்நூன் பேசின மாதிரி இருந்தது‌. ஆனாலும் பேசாதது போல ஒரு மாயை" என்று வர்ஷினி ஆரம்பித்தாள். அவள் ரயிலுக்கு செல்ல வேண்டுமே.

"ஆமா... எவ்ளோ பேசினாலும் பத்தலை." என்றவன் பெண்ணையே பாராதது போல அவளது கண்ணையே கவனித்தான்.

"எனக்குமே.. ஆக்சுவலி உங்களை எதிர்பார்க்கலை." என்றாள்.

  "சந்திப்பு அமையும்னு தெரிந்தா இங்க வந்திருக்க மாட்டியா வர்ஷினி" என்று கேட்டான். லேசாக வலிகள் கொண்ட வார்த்தை இருவருக்கும்.

"அப்படியில்லை... சந்திக்கவே கூடாதுன்னு நினைச்சா இந்த இடத்துக்கு கால் வச்சியிருக்க மாட்டேன்." என்று பேச, வெயிட்டர் இலையை சுற்றி வந்து 'கிழிபரோட்டாவை' பிளேட்டில் பரிமாற துவங்கினார்.

  அந்த நேரம், "நாங்களே சர்வ் பண்ணிக்கறோம்" என்று வர்ஷினி கூற, வெயிட்டர் அங்கே வைத்து அகன்றார்.

அந்த நேரம் கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி மட்டும் வர்ஷினி அணிந்திருக்க, கவனித்து விட்டான் செழியன்.

  செழியன் கண்கள் சென்ற திசையை கவனித்த வர்ஷினியோ, "எனக்கு டிரெயினுக்கு நேரமாகுது. ஏதோ பேச நினைச்சி போன்‌ நம்பர் வாங்கினேன். ஆனா சாரி... என்னால பேச முடியலை." என்றாள்.
 
"பரவாயில்லை எதுவும் பேசலைன்னாலும், சந்திப்பு அமைந்தது என் பாக்கியம்." என்றான்.

    "அம்மா இறந்தப் ரொம்ப திட்டி அனுப்பிட்டேன். இப்ப நினைச்சாலும் பீலிங் கில்ட்டி" என்றாள்.

  "சேசே கில்ட்டியாக அதுல எதுவும் இல்லை. நீ செய்தது சரி.
   நடந்தது எல்லாம் விதி..." என்று கையை மேலே காட்டினான்.
 
  "நான் கிளம்பறேன்" என்று எழுந்தாள்.

  "கிழிபரோட்டா.. இதை சாப்பிட்டு போலாமே. ஏன் என்னோட சாப்பிட கூடாதா வர்ஷூ" என்றதும், அமர்ந்துவிட்டாள்.

  அவன் அழைத்த 'வர்ஷூ' வேலைக்காட்டியது.

   கிழிபரோட்டா சாப்பிட்டவளின் கண்ணீல் மடை திறந்த கண்ணீர்.

   "ஏன் அழற?" என்றவனின் வார்த்தையிலும் சிறு கரகரப்பு.

  "கா..காரம்.‌ வேற ரீசன் இல்லை" என்றவள் டிஸுவை எடுத்து கண்ணீரை துடைத்தாள். தண்ணீரை எடுத்து குடிக்க நீட்டினான்.

   "நீ திருநெல்வேலி போகலையா?" என்று கேட்க, "அப்பா அம்மா இறந்துட்டாங்க. வேற யாரை பார்க்க போறது. டூயூட்டி வீடு இதே சரியா இருக்கு." என்றாள்.

  "நீங்க உங்க வீட்டுக்கு போகலாமே." என்றாள்.

"போக தோணலை. பத்து வருடமா யாரையும் மன்னிக்க மனசு வரலை. படிப்பறிவு இல்லை அதனால் அப்படி செய்தாங்கன்னு ஈஸியா எடுத்துக்க முடியலை. காமராஜர் எல்லாம் படிக்காதவர் தான். ஆனா செயல் மாஸா இருக்கும்ல.
   ஆனா இவங்க ஒரு மனுஷங்களா அந்த இடத்துல, இன்னொரு பொண்ணோட நிலைமை என்னாகும்னு யோசித்தாங்களா? பெத்தவங்க மனசு எப்படி துடிக்கும்னு நினைச்சாங்களா? அவங்களே ஒரு பேரண்ட்ஸ் தானே.

  அதோட... அவங்க பெத்த மகனான, நான் விரும்பின பொண்ணு, என் மனசு உடையும்னு கூட யோசிக்கலை.

  என்னை விடு... உங்கம்மா... இறந்துட்டாங்களே. என்னென்ன கவலைப்பட்டு மனசு வலியில் இறந்தாங்களோ? என்னை பொறுத்தவரை அது இயற்கை மரணமா எடுத்துக்க முடியலை. கொலை." என்றதும் வர்ஷூ  நிசப்தமாக கேட்டபடி, சிலையாக அமர்ந்தாள். கண்ணீரை துடைக்கும் நிலையை மறந்தாள்.

  செழியனே கைக்குட்டையால் துடைத்து தங்களை மற்றவர் பார்வையிடுகின்றனர் என்றதும், "ஐ அம் சாரி... ரியலி சாரி.. பழசை மறந்து தேறியிருப்ப. நான் அகைன் ஃபீல் பண்ண வஞ்சிட்டேன்." என்று மன்னிப்பு கேட்டான்.

வர்ஷினியோ, "நீங்க உங்க அம்மாவிடம் அதுக்கு பிறகு பேசலைன்னு தெரியுது? பட் அப்படி இருக்காதிங்க. அவங்களிடம் பேசுங்க.

  அவங்க என்ன செய்ய முடியும். அந்த நேரத்துல போலீஸ் வரும் என்று அங்க யாருக்கும் தெரியாது. அதோட சேனல்காரன் நியூஸ் கலெக்ட் பண்ண கேமிராவோட வருவதும் நம்ம யாருக்கும் தெரியாதே. 
  
  அவங்க இரண்டு பேரும் வராம இருந்திருந்தா எப்படியும் கல்யாண மேடையில் கல்யாணம் நடந்திருக்க வாய்ப்புண்டு.
‌சோ... நீங்க சொன்ன அதே விதி... அன்னைக்கு கல்யாணமே நடக்க கூடாதுன்னும் நீங்க போலீஸ் சேனல்ல வந்து அவமானப்படணும் என்றும், நாங்க கல்யாணம் நின்று, அம்மாவை இழந்து, டாக்டர் படிக்கணும்னு எழுதியிருக்கு.

  அதோட சொந்த ஊர்ல, சொந்தவீட்ல தலை காட்டாம இருந்தா, என்னவோ நீங்க தப்பு செய்ததா ஊரும் பேசும். நீங்க வாழ்ந்த ஊரை பார்த்து நீங்க ஏன் பயப்படணும்." என்றாள்.

   செழியனோ "எங்கம்மாவோட நான் பேசணுமா?" என்று ஆச்சரியமாக கேட்டான். வர்ஷினியின் வாழ்க்கையை சின்னபின்னமாக மாறியதே தன் அன்னையால், அப்படியிருக்க அவரிடமே பேச சொல்கின்றாளே என்ற ஆச்சரியம்.

"ஒருத்தங்க இருக்கும் போது அவங்க அருமை தெரியாது. இல்லாத போது தான் தெரியும். அதுவும் அம்மா என்ற உறவு, உணர்வோட வாழறது. முடிஞ்சா பேசுங்க. பிளைட் தான் கேன்சல் பண்ணிட்டதா சொன்னிங்க" என்று ஆலோசனை வழங்கினாள்‌

அவன் யோசிக்கும் முன், "நான் கிளம்பறேன். லேட்டானா டிரெயின் மிஸ் பண்ணிடுவேன். நாளைக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு. நான் சென்னையில் இருக்கணும். வர்றேங்க" என்றாள்.

   அவள் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை வைத்து விட்டு எழுந்தாள்.

  "என்னை விட்டுட்டு போறியா?" என்று உடைந்திடும் குரலில் கேட்டான் செழியன்.

  "நான் எப்பவோ உங்களை விட்டுட்டு போயிட்டேன். இந்த சந்திப்பு எதார்த்தமா நிகழ்ந்தது. மீண்டும் பிரியறோம். அவ்ளோ தான்" என்று திரும்பி பாராமல் நடந்தாள்.

செழியனோ வலியோடு அவளை பார்வையிட்டான்.

-தொடரும்.
 

பிரவீணா தங்கராஜ்

 

 


 
Posted : July 3, 2026 4:24 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

அட ராமா..! வர்ஷினி ஏன் இப்படி பேசறா ? எல்லாமே முடிஞ்சு போன மாதிரி...?

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 12:04 pm

Scroll to Top