Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-6

2 Posts
2 Users
0 Reactions
109 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#130]

அத்தியாயம்-6

    செழியனுக்கு பேரதிர்ச்சி என்றாலும், அவன் தற்பொழுது விரும்புவது வர்ஷினி என்பவளை தானே தவிர அவள் டாக்டர் பட்டம் படித்தவள் என்பதற்காக அல்ல.

"மாமா... முதல்ல அழறதை நிறுத்துங்க. எல்லாரும் என்ன ஏதுனு சூழ்ந்திட போறாங்க.

  இந்த கல்யாணம் நடக்கும். நான் விரும்பறது உங்க பொண்ணை தான்.
   அவ டாக்டர் படிச்சிருந்தா அது எனக்கு எக்ஸ்ட்ரா நிறையா இருக்கும். அதுக்காக ப்ததிரிக்கை வரை அடிக்க வந்துட்டு, கல்யாணத்தை நிறுத்த மாட்டேன். அவளோட வாழ்ந்துட்டு இருக்கேன் மாமா. அபசகுணமா ஏதும் வார்த்தை விடாதிங்க. நிதானமா இருங்க." என்று ஆசுவசப்படுத்தினான்.

  அதன் பின் ஜாதகம் மட்டும் டாக்டர் படித்த வர்ஷினி விஸ்வநாதனோடு, வர்ஷினி வரதராஜனின் புகைப்படம் தன்னிடம் உள்ளதை விவரித்தான்.

  வரதராஜனோ, "எம் மக டாக்டர் இல்லை மாப்பிள்ளை‌. நாங்க டாக்டர் மாப்பிள்ளைக்கும் ஆசைப்படலை. நல்லவனா என் மகளை கல்யாணம் செய்தா காலம் முழுக்க காப்பாத்தி அன்பா பார்த்துக்கிட்டா போதும்." என்று தழுதழுத்தார்.

  அவர் குரலே மொத்தமாய் மாறிவிட்டது.

  "எங்க வீட்ல அம்மா அப்பா டாக்டர் பொண்ணை கல்யாணம் பண்ணப்போறதா கனவு கண்டுட்டு இருக்காங்க. இப்ப போய் நான் இதை சொன்னா அவங்க கல்யாணத்தை நிறுத்த வாய்ப்புண்டு.

  நீங்க பேசாம செழியன் எம்.பி.பி.எஸ்.எம்டி. என்றும், வர்ஷினி பி.பார்ம் போட்டும் பத்திரிக்கை அடிங்க.

   எங்க வீட்ல வர்ஷினி படிப்பு பத்தி இப்ப சொல்ல வேண்டாம். கல்யாணம் முடிந்ததும் சொல்லிப்போம்.

  எங்க வீட்டை பொறுத்தவரை படிப்பு இது தான்னா அதுக்கு அர்த்தம் கூட தெரியாது. ஆனாலும் எம்.பி.பி.எஸ் என்பதை அம்மா மைண்ட்ல பிக்ஸ் பண்ணியதால் அவங்க அடிக்கற பத்திரிக்கையில் அப்படியே போட்டுக்கிடட்டும். எங்க சொந்தக்காரங்க யாரு என்னனு படிப்பை அவ்வளவா கவனிக்க மாட்டாங்க." என்றான்.

  "இது பின்னாடி தெரிந்தா பிராடு தனம்னு சொல்வாங்க மாப்பிள்ளை" என்று மறுத்தார். கல்லூரி பேராசிரியர் அல்லவா.

  "அய்யோ மாமா.. எங்க வீட்ல தெரிந்தா கல்யாணம் நின்றிடும். நான் சொல்லறதை கேளுங்க. என் பிரெண்ட்ஸுக்கு நான் அடிக்கற பத்திரிகையில் நான் பி.பார்ம் என்று போட்டுக்கறேன். என்னைக்காவது பிராடு அதுயிதுன்னா, அம்மா அப்பா தான் கவனிக்காம தப்பா பிரிண்ட் பண்ணிட்டதா நானே சொல்லறேன்." என்றான்.‌

  அவனுக்கு வர்ஷினியை கரம் பற்றுவது தான் முதல். மற்றவை எல்லாம் அவன் யோசிக்கவேயில்லை.

"அதுக்கு முன்ன என் மக டாக்டர் இல்லைன்னு யார் மூலமாவது தெரிந்துவிடும் மாப்பிள்ளை‌" என்றார்.

"மாமா... அதெல்லாம் தெரியாது. கொஞ்சம் யோசிங்க.. முன்னனா அது வேற. இப்ப என் மனசுல வர்ஷூ மனைவியா வாழறா. அவ மனசுல நான் புருஷனா நினைக்கறா. இப்ப போய் ஏதாவது காரணத்துல கல்யாணம் சண்டை சச்சரவோட நடந்தா பரவாயில்லை‌... ஆனா கல்யாணம் நின்றுட்டா? என்னாலயும் வர்ஷினியாலையும் தாங்க முடியாது மாமா." என்று கூற, வரதராஜனோ மகளின் மனநிலையில் சிந்தித்தார்.

  செழியனை கணவனாக எண்ணி கனவில் மிதப்பவளை படுகுழியில் தள்ளிவிடுவது போல அல்லவா மாறும். செழியன் தான் இந்தளவு சொல்கின்றாரே என்று நிதானித்தார்.

  "இது சரிவருமா மாப்பிள்ளை." என்று பயந்து கேட்டார்.

"சரிவரும் மாமா. கோவில்ல வச்சி சத்தியம் பண்ணி சொல்லறேன். இந்த ஜென்மத்துல உங்க பொண்ணு வர்ஷினி தான் என்‌ மனைவி அதை யாராலையும் மாற்ற முடியாது." என்று நம்பிக்கை தந்தான்.

  கோவில் மணி அடிக்க வரதராஜனுக்கு செழியனின் இந்த வாக்கு தேவவாக்காக ஏற்றுக்கொண்டார்.

  வரதராஜனுக்கு நம்பிக்கை அளித்து வழியனுப்பினான் செழியன்.
  அதன் பின் பேச்சு வாக்கில் 'மெடிக்கல் ஷாப் உன்னோட கடையாச்சே. ஆப்டர் மேரேஜ் என்ன செய்வ?" என்று முதல் முறையாக கேட்க, "இதுவரை அதை பத்தி யோசிக்கலைங்க.. நல்லா வியாபாரம் வரும். அப்படியே விட மனசில்லை. என்‌ பிரெண்ட் ஒருத்தி தற்காலிகமா பார்ட்னரா சேர்த்துக்கலாமானு திட்டம் போட்டு வச்சிருக்கேன்." என்று கூறினாள்.

மருத்துவ தொழில் சார்ந்து பேசியிருந்தால் முதல் நாளே வர்ஷினி டாக்டர் இல்லை என்று கண்டறிந்திருக்கலாம். எல்லாம் விதி. ஆனாலும் வர்ஷினியை ஏற்ற இதயம் மற்றவளை நாடாதே.

வரதராஜனும் தன் கஷ்டம் தன்னோடு போகட்டும். இந்த விஷயம் ஜானகிக்கோ அல்லது மகளுக்கோ தெரிய வந்தால் திருமணம் நடக்கும் வரை அவர்களும் அனல் மேல் நிற்பது போல தவிப்பார்கள் என்று இயல்பாக நடமாடினார்.

அதன்படி அடுத்தடுத்து பத்திரிக்கை கொடுக்க ஆயத்தமானார்கள். இந்த இடைப்பட்ட குழப்பத்தில், செழியனே அவர்கள் வீட்டு சார்பாக, பத்திரிக்கையில் பெயர் அச்சிடும் விவகாரத்தில் அவனே நின்று பத்திரிக்கை அடித்து தந்தையரிடம் கொடுத்துவிட்டான்.

  எப்படியும் தன் சொந்த பந்தம் டாக்டர் பெண் என்று எண்ணி கொள்வார்கள் தவிர வர்ஷினி பற்றி மணக்கோலத்தில் தானே பார்ப்பார்கள் தாலி கட்டிய நொடி எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாமென தெம்பானான்.

   பெரும்பாலும் ஊரில் திருமணம் என்றாலாவது படையே கூடும். சென்னை என்பதால் வீட்டுக்கு ஒருவர் என்று தலை காட்டி செல்லலாம் என்று கணித்தான்.

  ரிஷப்ஷன் அவ்வாறு தான் நடந்தது.
  பெரிதாக ஆடம்பரமின்றி அவன் கூட படித்த பெண்கள் ஆண்கள் என்று டாக்டர்கள் வந்து வாழ்த்து கூறி கைகுலுக்கி செல்ல, சுகந்தி எல்லாம் ஒதுங்கி கொண்டார். ஜானகியோடு 'எல்லாம் டாக்டர் படிச்ச ஆட்களா வர்றாங்க‌. நமக்கு யார் என்னனு ஒன்னும் தெரியலை சம்பந்தி" என்று குறைப்பட்டுக்கொண்டார்.

  சொந்தக்காரர்கள் எல்லாம் ரிஷப்ஷனுக்கு வந்து மலைத்து போட்டோவுக்கு போஸ் தந்து ஒரமாய் கதை அளந்தனர்.

  செழியனோ "பதட்டம் இல்லாம இருங்க மாமா‌. நாளை ஒரு நாள்." என்று செழியன் வரதராஜனுக்கு ஆறுதல் தர, அவருமே நிம்மதியாக சுவாசித்தார்.

  அன்றிரவு ரிஷப்ஷன் முடிந்தது. அவரவர் அடுத்த நாள் நடைப்பெறும் திருமணத்திற்கு நேரத்திற்கு எழுந்து தயாராகும் பொருட்டு உறங்கியிருந்தனர்.‌

சுகந்தி மட்டும் பத்ரகாளி போல வீற்றிருந்தார்.

  "இங்க பாரு சுகந்தி, அந்த பொண்ணு டாக்டர் எல்லாம் இல்லை. பி.பார்ம். அந்த டாக்டர் வர்ஷினி டூயூட்டி பார்க்கற மருத்துவமனைக்கு பக்கத்துல மெடிக்கல் ஷாப் வச்சியிருக்கற மருத்துகடை பொண்ணு.
  நீயும் உன் புருஷனும் வேர்வையை சிந்தி, உழைச்சி செழியனை படிக்க வச்சியிருக்கிங்க. இதுல எப்படி கோட்டை விட்டிங்க. செழியன் எல்லாம் இப்பவே அவளை தாங்கு தாங்குன்னு தாங்குறான்.‌ இவ்ளோ தூரம் வந்தாச்சு... கல்யாணம் எல்லாம் நிற்காது. நீ வேண்டுமின்னா வரதட்சனை கேட்டு பாரு. அட்லீஸ்ட் வந்தவரை லாபமா இருக்கும்." என்று போதித்து, வரதராஜன் அடித்த பத்திரிக்கையையும், செழியன் அவனது நண்பனுக்காக கொடுத்த பத்திரிக்கையையும், இவர்களுக்கு செழியன் அடித்து கொடுத்த கல்யாண பத்திரிக்கையையும் மூன்றும் கையில் வைத்து நகர்ந்தார் ஒருத்தர்.
'படிக்காத தற்குறின்னு பெத்த பையனே ஏமாத்தறான்.' என்று கிலுக்கி சிரித்து வேறு சென்றனர்.

  சுகந்திக்கு இதற்கு மேல் உறக்கம் வருமா? நேராக பொண்ணு வீட்டு ஆட்கள் முன் வந்து நின்றார்.

  வர்ஷினியை நேரத்திற்கு படுக்க கூறியதால் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

  சுகந்தி ஜானகியை எழுப்பி, உங்க மக டாக்டர் படிக்காமலையே டாக்டர்னு பொய் சொல்லி என் மகனுக்கு கட்டி வைக்கறிங்க. உங்களுக்கு எப்படி நிம்மதியா தூக்கம் வருது?" என்று கேட்க, ஜானகி புரியாது விழித்தார்.‌

  வரதராஜனோ "சம்பந்தி அம்மா... மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும். வர்ஷினி என்ற பெயர் குழப்பத்திலையும், அந்த பொண்ணு ஜாதகம், என்‌ பொண்ணு போட்டோ அதோட இணைந்தில் இந்த அசம்பாவிதம் நடந்தது. பத்திரிக்கை அடிக்கறப்ப மாப்பிள்ளை இதை கவனித்தார். ஆனாலும் வர்ஷினியை கல்யாணம் செய்வதாக வாக்கு தந்தார். நீங்க வேண்டுமின்னா மாப்பிள்ளையை எழுப்பி கேளுங்க" என்று எடுத்துரைத்தார்.‌

  "எனக்கு அதெல்லாம் தெரியாது. டாக்டர் பையனுக்கு நாங்க டாக்டர் பொண்ணை தான் தேடினோம். இப்படி வந்து ஏமாத்திட்டிங்க. உங்க பொண்ணு அழகு தான். அதான் என் மகனை மயக்கி காரியமா வச்சிக்கிட்டா." என்று எதுவுமே அறியாத வர்ஷினியையும் குற்றம் சுமத்தினார்.

"அபாண்டமா பேசாதிங்க. நாங்க எங்க தரப்புல உண்மையா தான் இருக்கோம். நீங்க சம்பந்தியை கூப்பிடுங்க. அவரிடம் பேசிக்கறேன்" என்று வரதராஜன் கிருபானந்தனை கூப்பிட்டார்.

"இங்க பாருங்க... என் பையன் நல்லவன் தான். உங்க மகளை பிடிச்சிருக்குன்னு கட்டிக்க ரெடியா தான் மேடையில் நிற்கலாம். அதுக்காக பிச்சைக்காரியை எல்லாம் நான் மருமகளா ஏத்துக்க முடியாது." என்று வார்த்தையை விட்டார்.

"ஏங்க என் மக ஒன்னும் பிச்சைக்காரி இல்லை. பார்த்து பேசுங்க. அவளை நாங்க ராணி மாதிரி வாழ வச்சிருக்கோம்." என்று சுகந்தி தன் மகளை பற்றி குறைத்து கூறவும் ஜானகி பொங்கினார்.
 
  "அப்படின்னா உங்க மகளை கூட்டிட்டு இப்பவே நடையை கட்டுங்க. என் மகனுக்கு எங்க சொந்தத்துல கூட கல்யாணம் செய்து வச்சிக்கறேன்." என்று குண்டை தூக்கி போட்டார்.

"என்னம்மா... விளையாடறியா? மாப்பிள்ளையை கூப்பிடுங்க. நாங்க அவரிடம் பேசிக்கறோம். இல்லையா சம்பந்தியை வரச்சொல்லுங்க அவரிடம் விலாவரியா எடுத்து சொல்லறேன்." என்று வரதராஜனும் திடமாய் பேசினார்.

  சுகந்தியோ, "இதெல்லாம் வேலைக்கு ஆகாது. உன் மக என் பையனை மயக்கி வச்சிட்டு, இஷ்டத்துக்கு பேசறிங்க. என் வீட்டுக்காரர் எதுக்கு? ஒன்னு நடையை கட்டுங்க. இல்லையா.... நூறு சவரன் நகையை போடுங்க" என்று சட்டமாய் உரைத்தார். இது தான் முடிவு என்பதாக‌.

பொன் விற்கும் விலைக்கு அவர்கள் எங்கே போவார்கள். அதுவும் நூறு சவரனுக்கு? மகள் டாக்டர் என்று தவறாய் அவர்கள் நினைத்து கொண்டப்போது நாற்பது சவரன் தான் எங்களால் முடியும் என்றபோது அதுவே போதும் என்பதாக மலைத்தார்கள்.

  தற்போது நூறு சவரம் என்றால் எப்படி?

    ஜானகி கையிலும் கழுத்திலும் காதிலும் சேர்த்தால் கூட சேராது.

"ஏம்மா மனசாட்சி இல்லாம பேசறிங்களே... பையனை பெத்தாவங்கன்னா என்னவேன்னா பேசுவிங்களா? நகை விற்கற விலை தெரியுமா? 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,771 ரூபா. ஒரு சவரன் 70,168 ரூபாய் ஆகுது.
       
   நாங்க இப்ப நாற்பது சவரன் போடுவதே, எம் பொண்ணும் என் வீட்டுக்காரரும் சம்பாரிச்சதை வாயை கட்டி வயிற்றை கட்டி, சிறுக சிறுக சேர்த்து வச்சதும்மா. நீ என்ன அசால்டா பேசற. உனக்கே நியாயமா இருக்கா?

  உங்க பிள்ளைக்கு தான் என்‌மக டாக்டர் இல்லைன்னு முன்னவே தெரியுமே‌. அப்பவே சொல்லிருந்தா கல்யாணத்தை நானே நிறுத்தியிருப்பேன்.
   இப்ப வந்து இரண்டு பேரும் உசுருக்கு உசுரா பேசி பழகிட்ட பிறகு பிரிக்க பார்க்கற." என்று ஜானகி வலியுடன் மகளுக்காக பேசினார்.‌
 
  வரதராஜனுக்கு எப்படியாவது செழியன் தூக்கத்திலிருந்து கண் திறந்து வந்து இந்த சுகந்தியை அதட்டி இழுத்து சென்றால் தேவலாம் போல தோன்றியது. அல்லது சம்பந்தி வந்தாலாவது நன்றாக இருக்கும்.

  சுகந்தி வாயுக்கு வந்ததை பேசும் போது அதை கேட்க மனதில் தெம்பின்றி துவண்டார்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு ஒத்த புள்ள பெத்து ராஜாவாட்டம் வளர்த்து, டாக்டர் படிக்க வச்சியிருக்கேன். நானும் தான் வேர்வை சிந்தி உழைச்சு படிக்க வச்சது." என்று வாதம் புரிந்தார்.

  "ஓ... அதான் உங்க பிள்ளைக்கு விலை நிர்ணையம் செய்து சந்தையில விற்கறிங்களா? உங்க பையனுக்கு நூறு சவரன் ரேட்டா." என்று ஜானகி கொதித்து எழ, ''ஜானகி.. வாயை மூடு. என்ன பேச்சு பேசற. நாளைக்கு மாப்பிள்ளையா அவர் நம்ம வீட்டுக்கு வந்தார்னா எந்த மூஞ்சை வச்சிட்டு அவருக்கு பரிமாறுவ?
  அந்தம்மா தான் படிக்காத தற்குறி இஷ்டத்துக்கு பேசுதுன்னா. நீயுமா? மண்டபத்துக்கு நாமளும் வாடகை தந்திருக்கோம். நீ போய் தூங்கு. எதுனாலும் மாப்பிள்ளை பேசட்டும்." என்று ஜானகியை விரட்டினார்.

  கணவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியாக ஜானகி செல்ல சுகந்தியோ, 'எல்லாம் எம்புள்ள கொடுக்குற இடம். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கறேன்' என்று கருவியபடி சுகந்தி சென்றார்.

  இதெல்லாம் அங்கே மண்டபத்தின் உரிமையாளரின் மகன், தந்தையை சந்திக்க வந்தான். அவன் ஒரு பத்திரிக்கையாளன்மற்றும் சேனல்காரன் என்பதால் சிகரெட்டை பற்ற வைத்து கேட்டுக் கொண்டிருந்தான்.
  "ஏன் அப்பா, கல்யாணம் நடக்குமா நடக்காதா?" என்று கேட்க, "தெரியலை டா... நம்ம கல்யாண சத்திரத்துக்கு வாடகை பணம் முழுசா அந்த டாக்டர் பையன் கொடுத்துட்டான். இனி கல்யாணம் நடந்தா என்ன நடக்காட்டி எனக்கென்ன?" என்று மொழிந்தார்.

மண்டபத்தின் உரிமையாளர் அவ்வாறு சொல்ல,  மகன் சேனல்காரனாயிற்றே, அவனுக்கான ஆதாயம் கிடைக்குமா என்று யோசித்தான்.

மின்னலாய் பளிச்சிட, நாளை இந்த குத்தை காண கேமிராவுடன் தயாரானான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : July 3, 2026 3:58 am
(@crvs2797)
Posts: 102
Estimable Member
 

அடப்பாவிங்களா..! எரியுற கொள்ளியில உருவுற வரைக்கும் லாபம்ன்னு பார்க்குறாங்களே.

 

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 11:45 am

Scroll to Top