நின் பார்வை தவமல்லவா!-2
அத்தியாயம்-2
நீண்ட நாட்களுக்கு பின், அல்ல.. அல்ல... நீண்ட வருடங்களுக்கு பின் செழியன் மனதார முறுவலித்து "அப்பா எப்படியிருக்கார்?" என்று ஆர்வமாய் கேட்டான்.
"அப்பா... மூனு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார்." என்று கூறியவள் தண்ணீரை பருகி முடித்தாள் வர்ஷினி.
செழியன் இதை எதிர்பார்க்கவில்லை. "சாரி." என்றான்.
"இட்ஸ் ஓகே. ரொம்ப வருஷம் கழிச்சு அப்பாவோட நலனை பத்தி விசாரிக்கவும், அவரை பத்தி பேசற வாய்ப்பு அமைந்தது." என்று கூறினாள். அவள் பேசியபடி தட்டிலிருந்த உணவை சுவைத்தவள், "சாப்பிடுங்க" என்று செழியனையும் சாப்பிட ஊக்கினாள்.
"ரொம்ப நல்ல மனிதர். அவரிடம் பழகிய சந்தர்ப்பம் குறைவு என்றாலும், நான் உயர்வா மதிப்பு வச்சியிருக்கற பட்டியலில் உங்கப்பாவும் ஒருத்தர்." என்று பெருமையாக பேசினான்.
அவன் பேசிவிட்ட பொழுதிலும், மனதிற்குள், இவ பேச்சுலர் ஆஃப் பார்மஸில படிச்சா? இப்ப டாக்டரா முன்னாடி வந்து நிற்கறா? அதை பத்தி கேட்போமா?' என்று மூளை கேட்டது. மனமோ 'அவ படிப்பை வச்சி தானே இத்தனையும்.. இதை வேற அவளிடம் கேட்கணுமா? இந்த இடைப்பட்ட பத்து வருடத்தில் எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்கா. இதை யூகிக்க முடியாதா? அதோட அவ படிச்சதுக்கு காரணம் வேற உனக்கு புளி போட்டு விளக்கணுமா?
ஒன்னும் ஒன்னும் இரண்டுனு கணக்கு போட தெரியாது' என்று திட்டாத குறையாக எடுத்தெறிந்து பேசியது.
அவன் இதயம் இந்த விஷயத்தில் எத்தனை அவமதிப்பாக கூறினாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில் மூளை கூட சில நேரம் மூளையற்று சிந்திக்கும். இந்த இதயம் என்றுமே நியாயமாய் பேசுமே என்று செழியனுக்குள் பேசிக்கொண்டிருக்க, எதிரே அமர்ந்தவள் மட்டும் என்ன தட்டில் உள்ள பன்னீரை ஸ்பூனால் குத்தி எதையும் மனதோடு பேசாமல் இருப்பாளா?!
'இவருக்கு கல்யாணமாகிடுச்சா? அவர் பெர்ஸனலை பற்றி கேட்டா தப்பா எடுத்துப்பாரா? அப்பவே அவருக்கு வலை வீசி பொண்ணு தேடினாங்க. இப்பவரை திருமணமாகாம விட்டு வைப்பாங்களா அந்த ஆன்ட்டி.
ஆன்ட்டி... என்று மரியாதை அதிகப்படியோ? தான் பார்க்கும் மருத்துவ தொழிலுக்கு அநாகரிகமாய் பெயர் வைக்க கூடாது.
'மற்றவர்கள் எப்படியோ, நம்ம விஷயத்தில் நாம நல்லவங்களா இருக்கணும் வர்ஷினி.' என்ற தந்தை வரதராஜனின் வார்த்தை இன்று ஒலிப்பது போல கேட்டது.
தந்தையை எண்ணியதும் முனுக்கென்ற கண்ணீர் துளி எட்டிப்பார்க்க, "சாரி" என்று அங்கிருந்த டிஸ்ஸு பேப்பரை எடுத்து, பட்டும் படாமலும் ஒற்றி எடுத்தாள் வர்ஷினி.
வர்ஷினி எழவும், "கிளம்பறியா?" என்று அவசரமாய் சற்று வார்த்தை பக்கத்து டேபிளில் இருப்பவர் காதுவரை கேட்டுவிட்டான்.
வர்ஷினி "இ..இல்லை.. பன்னீர் டிஸ் வாங்க எழுந்தேன்" என்று சமாளித்தாள். அவளுமே ஒரு ஞாபகத்தில் எழுந்துவிட்டாள். ஆனால் சாப்பிடாமல் கொள்ளாமல் எழுந்து சொல்வதாக காட்டிக்கொண்டால் 'இவள் எதையும் மறக்கவில்லை' என்று செழியன் நினைக்க வாய்ப்புண்டு என்று சமாளித்தாள்.
செழியன் ஒரு புன்னகை உதிர்க்க அவள் பஃப்பே இடம் நோக்கி நடந்தாள்.
இப்படியே பார்த்து முடித்தால் போதுமா? அவள் எழுந்து இதே போல சென்றுவிட்டாள் என்ன செய்ய போகின்றாய். அவள் எங்கே இருக்கின்றாளென்று கேட்டு வை' என்று மனசாட்சி அவசரப்படுத்தியது.
வெகு இயல்பாய் காட்டிக்கொள்ள செழியன் மெனக்கெட, வர்சினியும் அவ்வாறே தன்னிலையை சமன்படுத்த துவங்கினாள்.
அவர் முன்ன அழுது தொலைக்காதே இதயமே என்று இறைஞ்சிக் கொண்டாள்.
வர்சினி வரவும், "எங்க இருக்க? அதே வீட்லயா?" என்று கேட்டான்.
வர்சினியோ, "இல்லை... அந்த வீட்டை விற்றுட்டோம். வீடுன்னு இல்லை... அங்க இருந்த நிலமும் விற்றுட்டோம். வீடு, நிலம், சேவிங்க்ஸ்ல போட்ட பணம், கல்யாணத்துக்கு வாங்கின நகை" என்றவள் எச்சிலை விழுங்கி "எல்லாத்தையும் வச்சி தான் அப்பா டாக்டருக்கு படிக்க வச்சார்.
எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைக்க யார் யார் கால்லயோ விழுந்தார். அப்ப தான் ஆர்யன் அண்ணாவை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ஆர்யன் அண்ணா தான் மெடிக்கல் படிக்க சீட் வாங்கி தந்து உதவினார்.
மற்றது எல்லாம் அப்பா பார்த்துக்கிட்டார். அப்பா நினைச்ச மாதிரியே என்னை டாக்டர் படிக்க வச்சிட்டார். அதுக்கு பிறகு தான் இறந்துட்டார்.
ஒருவேளை வைராக்கியமா படிக்க வைக்க ஆசைப்பட்டதை நடத்தி காட்டிட்டு, இனி வாழ்வது போதும்னு போயிட்டார்.
என்னை தனியா விட்டுட்டு போயிட்டார்." என்றவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது டிஸ்ஸு பேப்பரால் துடைத்தாள்.
"சாரி... நானும் அழக்கூடாதுன்னு தான் முயற்சி பண்ணறேன். ஆனா முடியலை. அப்பா இறப்பு அந்தளவு மனசோட ஒன்றிடுச்சு.
என்ன கேட்டிங்க... எங்க தங்கியிருக்கிக்கன்னா.. சென்னையில ஓரகடத்து இருக்கேன். என்னை பத்தி விடுங்க. உங்களை பத்தி சொல்லுங்க." என்று உற்சாகமாக மாற முயன்றாள்.
"நான் சென்னை திருமங்கலத்துல இருக்கேன்." என்றான்.
இடத்தை மட்டும் கூறிவிட்டு உணவை சுவைக்க, "ம்ம்ம் குடும்பம்... குழந்தை.. ஆ..ஆன்ட்டி எப்படியிருக்காங்க. அங்கிள் எல்லாம் இங்க இருக்காங்களா? இல்லை உங்களோட சென்னையில இருக்காங்களா?" என்று ஆவலாக கேட்டாள்.
அவள் கேட்ட தோரணையில் அவனை பற்றி அறியும் ஆவல் அதிகமாக இருந்தது.
அழகான மனைவி அன்பான குடும்பம், எட்டு வயதிற்குள், செழியனின் முக அமைப்பில், ஒரு குழந்தையை எதிர்பார்த்து ஆசையாக கேட்டாள்.
அவளை போலவே நிதானமாக, "அப்பா அம்மா என் கூடயில்லை. பத்து வருஷத்துக்கு முன்னவே அவங்களை சில காரணத்தால் விலகி நிறுத்திட்டேன். அப்பாவோட மந்த்லி இரண்டு முறை பேசுவேன். அம்மாவிடம் பேசி பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. ஏன் இங்க வந்தும் பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. இப்ப தான் வர்றேன். 'மலர் பேரடைஸ்ல தங்கியிருக்கேன். இந்த காண்பரான்ஸ் முடியவும் இன்னிக்கு நைட் கிளம்பணும்" என்றான். நாசூக்காய் அவன் அம்மாவுக்கு அவனால் வழங்கப்பட்ட தண்டனையை எடுத்துரைத்தான்.
வர்ஷினி சிறிது நேரம் பேசுவதை நிறுத்தினாள். பத்து வருடம் முன் நிகழ்ந்ததுக்கு இப்பொழுது வரை பேசாமல் இருக்கின்றாரா? அப்படியெனில் அதற்கு காரணம்? என்று நெஞ்சை தொட்டு இருக்கையில் சாய்ந்தாள்.
"குழந்தை எல்லாம் இல்லை." என்றான் மொட்டையாக.
''ஏன்." என்றாள்.
'குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு இரண்டு குழந்தை வேணும் வர்ஷூ' என்றானே குழைவாக. அந்த குரல் இன்னமும் தன்னை ஆட்கொண்டு வதைக்குமே.
''ஏன்னா... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் பண்ணாம குழந்தை இல்லையே." என்றான் செழியன்.
அதிர்ச்சிக்காட்டி "ஏன்" என்று விழிகளை உருட்டி கவலைத்தோய்ந்து கேட்டாள்.
"ஏன்னா... தெரியலை.. மனசுல கல்யாண ஆசையே ஓடிப்போயிடுச்சு" என்று விரக்தியாக சிரித்தான்.
இம்முறை தன்னை சமாளிக்க, "ஹாண்ட்வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்" என்று காலி தட்டை காட்டி வைத்துவிட்டு வருவதாக உரைத்தான் செழியன்.
சாப்பிட்ட தட்டை அதற்குண்டான இடத்தில் வைத்துவிட்டு, ரெஸ்ட் ரூம் வந்தான்.
எதிரே பெரிய கண்ணாடி இருந்தது. முகத்தை கண்டான். நீண்ட வருடம் கழித்து முகம் தெளிவாக இருப்பதாக உணர்ந்தான்.
'அவளுக்கு கல்யாணமாகிடுச்சான்னு தெரியலையே" என்று கையை அலம்பி, அங்கே உடனடியாக கையை உலரவைப்பதற்கு டிரையரில் கையை நீட்டினான்.
நொடியில் சிறு சப்தம் கொடீத்து கையை ஈலர வைத்தது அந்த இயந்திரம்.
தன் கையை பேண்ட் பேக்கெட்டில் நுழைத்து, வர்ஷினி நோக்கி வந்தான்.
அவளுக்குமே சாப்பிட பிடிக்காமல் தட்டை அதன் இடத்தில் வைத்து ஸ்பூனால் அள்ளி விழுங்கியதால் டிஸ்ஸு பேப்பரால் உதட்டை துடைத்து நீரை அருந்தினாள்.
கழுத்து பகுதி தூக்கியபடி தண்ணீர் பொத்தனிலிருந்து தண்ணீரை குடிக்க, அவளது சங்கு கழுத்தில் தாலியை தேடினான்.
ஸ்வீட் பீடா, இனிப்பு சீரகமும் கொடுக்க, அவனோ அவளுக்கென்று பனிக்கூழை கொண்டு வந்து நீட்டினான்.
'உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?' என்று உடனடியாக கேட்க சங்கடமாய் இருந்தது. அதனால் "ஒரகடத்துல யார் இருக்கா?" என்றான்.
கணவர் குழந்தையோட இருப்பதாக உரைப்பாளென்று கேட்க அவளோ ''அங்க தான் சாரதா ஹாஸ்பிடல்ல ஒன் ஆஃப் த டூயூட்டி டாக்டரா ஒர்க் பண்ணறேன்" என்றாள்.
'கூட யாரிருக்கா?' என்று கேட்க கோபம் வந்தது. ஆனால் இருந்த ஒரே அப்பா என்ற உறவும் உன்னால் தொலைத்துவிட்டேன். யாரை கேட்கற?' என்று கத்தி விட்டால் செழியனால் தாங்க இயலாது.
"இப்ப எங்க தங்கியிருக்க?" என்றான் செழியன்.
"டாபோடில் பேரடைஸ் ஹோட்டல்ல தான். நேத்து ஈவினிங் வந்தேன்." என்றாள் தலை கவிழ்ந்து.
"ஏ... நானும் அங்க தான் தங்கியிருக்கேன். எப்படி பார்க்காம போனோம்" என்று ஆச்சரியப்பட்டு போனான்.
"நான் நேத்து அறைக்கு வந்துட்டு வெளியவே வரலை. காலையில் இயர்லி மார்னிங் அப்படியே சன் ரைஸ் பார்த்துட்டு குயிக்கா இங்க வந்துட்டேன்." என்றாள்.
"ஓ... நான் இன்னிக்கு மார்னிங் ஜஸ்ட் இங்க வருவதற்கு முன்ன தான் நாகர்கோவிலுக்குள்ளயே நுழைந்தேன்." என்றான்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க இன்னும் சிலர் நடுநடுவே வந்து கைகுலுக்கி பேசி சென்றனர். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் வர்ஷினி கழுத்தை கண்டவனுக்கு பெருத்த ஏமாற்றம். அவள் கழுத்தில் எந்த செயினும் அவன் கண்ணுக்கு தட்டுப்படாத வகையில் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது அவளது உடை.
சிலர் செமினார் முடியவும் அவரவர் செல்ல, இவளோடு வந்த அனிதாவோ, "ஏ ஹர்ஷு கேப் புக் பண்ணிடவா? இல்லை நேரமாகுமா?" என்று கேட்க, "பீக் பண்ணு அனிதா. இதோ சொல்லிட்டு வந்துடறேன்" என்று பேசியவள் செழியனிடம், "நான் கிளம்பறேன்.. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க." என்று சொல்லிவிட்டு நகர, தடுத்து நிறுத்தும் திறணியின்றி அவளுக்கு விடைக்கொடுத்து வேடிக்கை பார்த்தான் செழியன்.
வர்ஷினியோ ஆர்யனிடம் நன்றி நவில்ந்து புறப்பட்டாள். அப்படியிருந்தும் செழியனை திரும்பி திரும்பி பார்த்தே கேப்பில் ஏறினாள்.
"இன்னமும் வேடிக்கை தான் பார்ப்பியா? நீயும் கிளம்பு." என்று ஆர்யன் கூற, 'அதானே.. நானும் சேம் ஹோட்டலுக்கு இல்லை போகணும்.' என்றவன் "ஆர்யா... அவ யார் தெரியுமா?" என்று செழியன் நண்பனிடம் வர்ஷினி பற்றி கூற துடித்தான்.
"எங்க ஊரு பொண்ணு. கொஞ்ச வருஷம் முன்ன அப்பாவிடம் படிக்க உதவி கேட்டு வந்தார். உனக்கே தெரியுமே. எங்கப்பா படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கறவர்.
அதனால என்னிடம் மெடிக்கல் சீட் மட்டும் வாங்கி தர சொன்னார். செய்தேன். வேற விவரம் எதுவும் தெரியாது. அந்த பொண்ணு நன்றி கடனா கும்பிடும். அவ்ளோ தான். ஏன்ல.. உனக்கு தெரிந்த புள்ளையா?" என்று கேட்டான்.
ஆர்யன் செல்வாக்கு மிக்கவனின் பையன். அதோடு அவனுமே டாக்டர். கூடுதலாக வர்ஷினிக்கு உதவியதால் அந்த நன்றி கடனில் பார்ப்பாள்.
'அவ தான்... அவ தான் அவ' என்று செழியன் சொல்ல தவித்தவனாய் திணறினான்.
"ஆர்யன்... வர்ஷினிக்கு கல்யாணமாகிடுச்சா?" என்று நண்பனுக்கு தெரியுமோ என்னவோ என்று கேட்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
-
நின் பார்வை தவமல்லவா!-10 (முடிவுற்றது)
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-9
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-8
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-7
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-6
3 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 10 Online
- 329 Members
