Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-4

2 Posts
2 Users
0 Reactions
102 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#128]

அத்தியாயம்-4

  பத்து வருடத்திற்கு முன்....

தலையில் விறகு சுமந்து வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த மாட்டு தொழுவத்தில் அதை இறக்கி வைத்தார் ஜானகி.

  "வர்ஷினி... வர்ஷினி" என்று கூப்பாடு போட்டு, "கழுதை இன்னும் வீட்டுக்கு வரலை." என்று மண்அடுப்பில் விறகை நுழைத்து மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார்.

  அதில் புகை மண்டலமாக மாறி இருமினார்.

  "எத்தனை முறை சொல்லறது? கேஸ் ஸ்டாவ் இருக்கு இன்டக்ஸ் ஸ்டவ் இருக்கு, அதுலயே அப்பாவுக்கு சுடதண்ணி வைம்மானு. இன்னமும் கேஸை மிச்சப்படுந்தறேன், கரண்ட் பில்லை மிச்சப்படுத்தறேன்னு கரிஅடுப்புல உட்கார்ந்துட்டு இருக்கிங்க." என்று அம்மாவை திட்டியபடி, வர்ஷினி வந்தாள்.

  "ஏன்டி... இருமலுக்கு மாத்திரை கேட்டேன். வாங்கி வந்தியா இல்லையா? வந்ததும் வராததும் ஆரம்பிக்கற?" என்று ஜானகி சலித்தார்.‌

  ''நான் பி.பார்ம் படிச்சது யாருக்கு வசதியோ இல்லையோ, உனக்கு நல்லா வசதியா போச்சு. இருமல், தலைவலி, மேல்வலி, கால்வலி, வயிற்றுவலினு என்னிடமே மாத்திரை வாங்கிட்டு வர சொல்லற. அதுவும் நான் வேலைப் பார்க்கற இடத்துலயே எடுத்துட்டு வர சொல்லற." என்று மாத்திரையை அங்கே அன்னை முன் வைத்துவிட்டு, முகமலம்பி கைகால் கழுவினாள் வர்ஷினி.

  "இந்த கேஸ் விலை எவ்வளோ தெரியுமா? ஆயிரத்துக்கு ரவுண்டா கொண்டாந்துட்டான்.‌ கரண்ட் பில்லு... ஏதோ சொந்த வீடுன்னு குறைவா இருக்கு. இதே வாடகை வீடுன்னு வை. அவ்ளோ தான்.

  கழினி காட்டுக்கு காலார நடந்து போயிட்டு, வர்றப்ப விறகு பொறுக்கிட்டு வந்தா இதுலயே சுடத்தண்ணி வச்சிடுவேன். கால் காசு செலவு இல்லை.
இந்த தண்ணில குளிக்கறது ஒரு சுகம். உங்கப்பா கால் வலிக்க பாடம் நடத்திட்டு வந்து இந்த தண்ணில குளிச்சார்னு வை. உடம்பு வலியெல்லாமா அப்படியே பறந்துடும்." என்று கூற வர்ஷினி அன்னையை முறைத்து கொண்டு, "நான் வேலைப் பார்க்குற மருந்துக்கடைக்கு பக்கத்துல, டாக்டர் வி.வர்ஷினி எம்பிபிஎஸ் இருக்கு. அவங்க அப்பா விஸ்வநாதன்.
ஆனா அது நான் இல்லை. நான் வி.வர்ஷினி வரதராஜன். என்னமோ மாத்திரை போட்டா சரியாகிடும்னு என்னை டாக்டர் படிக்காம உனக்கு வைத்தியம் பண்ண வைக்காத. என்ன தான் இந்த வலிக்கு இந்த மாத்திரைன்னு எனக்கு தெரிந்தாலும், டாக்டரிடம் காட்டி அதுக்கு ஏற்றது போல தான் மாத்திரை மருந்தை எடுத்துக்கணும்." என்று கறித்துக் கொட்டி உடை மாற்ற சென்றாள்.

   "ஆமா... அங்க போனா ஒன்னும் இருக்காது. டாக்டர் பீஸ் அழுவணும். போடி" என்று ஜானகி கரி அடுப்பிற்கு தீயை திகுதிகுவென எரிய வைத்தார்.

    "ஜானகி ஜானகி" என்று கூப்பிட்டபடி வரதராஜன் வந்தார்.‌

  "இந்தா இங்க இருக்கேங்க. வெண்ணீ ரெடி. குளிக்க கொண்டு போய் ஊத்தவாங்க" என்று கேட்க, தோட்டத்துக்கே வந்து நின்றார் வரதராஜன்.‌

  "வெந்நீரை அப்பறம் கலக்கு. நம்ம பாப்பாவோட போட்டோ, நல்லா இருந்தா கொண்டுவா. நம்ம பி.டி வாத்தியார் கேட்டார். எப்பவும் போல மதியம் சாப்பாடு சாப்பிட்டு பேசிட்டு இருந்தேன். நம்ம பொண்ணு படிச்சி முடிச்சி வேலைக்கு போகுது. நல்ல இடம் வந்தா கல்யாணம் செய்து கொடுக்கலாம்னு பேச்சு போக, அவருக்கு தெரிந்தவங்க ஒருத்தங்க இருக்காங்க. நம்ம சாதி சனம் தான். பிடி வாத்தியார் நம்ம வர்ஷினிக்கு அந்த வரன் செட்டாகும்ன்னு போட்டோ கேட்டார். அவர் வெளியே தான் இருக்கார்." என்று கூற, "அட என்னங்க நீங்க.. எல்லாம் நெஞ்சுவரை இருக்கற போட்டோவா இல்லை இருக்கு. முழுசா இல்லை... பரவாயில்லை இருங்க அதை கொண்டாந்து தர்றேன். " என்று அவசரமாய் ஓடினார்.

  ''ஏதோ ஒன்னு கொண்டுவா." என்று அவசரம் காட்டினார். பிடி வாத்தியார் வண்டியை கூட அணைக்காமல் வாசலில் நிற்பதால்...

  அறைக்குள் சுடிதாரை கழட்டி, நைட்டி அணிந்த வர்ஷினி காதில் துல்லியமாக இவர்கள் பேச்சுவிழ அவசரமாய் 'போட்டோ கொடுக்காதிங்க' என்று கூற நினைத்தாள். ஆனால் அம்மா வேகம் அப்பா அவசரத்தில்  போட்டோ பிடி வாத்தியார் உதவியால் கொடுக்கப்பட, அவரும் அவளது போட்டோவும் அங்கிருந்து சென்று விட்டது.

  "யாரை கேட்டு என் போட்டோ கொடுத்திங்க? இப்ப நான் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டேனா?" என்று கடுகு போல பொரிந்து வந்தாள் வர்ஷினி.

  "யாரை கேட்கணும்... கல்யாண வயசு ஆயிடுச்சு... படிச்சு முடிச்சி வேலையில் சேர்ந்துட்ட. ஒரே பொண்ணு.. இன்னமும் என்ன?" என்று ஜானகி கேட்க, "நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறேன்னே" என்று தந்தை அருகே அமர்ந்தாள்.

  அவரோ சட்டையை ஹாங்கரில் மாட்டி, "அம்மாவுக்கு பிபி ஏற்றி விளையாடாத" என்று கண்டித்து குளிக்க சென்றார் வரதராஜன்.‌

  "உண்மையா சொல்லறேன்ப்பா. நான் விளையாடலை." என்று வர்ஷினி கத்தினாள்.‌

  "ஆங்... மொசைப்பிடிக்கற மூஞ்சு, மூஞ்சியை பார்த்தா தெரியும். நீ காதலிக்க போறியா. இத்தனை வருஷம் வராத காதல், இப்ப கல்யாண பேச்சு எடுத்ததும் தொபுக்கடீர்னு வந்துடும். போடி அங்குட்டு" என்று ஜானகி டீ போட சென்றார்.

  குளித்து முடித்து வந்ததும் வரதராஜனுக்கு சூடான டீ கையில் கொடுத்திடுவது ஜானகி வழக்கம்.

  "அம்மா." என்று அன்னையின் முந்தானை பின்னால் சென்றாள் வர்ஷினி.

  "இந்த டீயையும் கரி அடுப்புல வைக்க வேண்டியது தானே." என்று அன்னை வெந்நீர் மட்டும் அதில் பயன்படுத்த இடக்காய் பேசினாள்.

  "டீ வச்சிடலாம்... ஆனா கரிப்புகை வாடை, டீயில வரும். உங்காப்பாவுக்கு டீ குடிக்கிற சுவையே மறந்துடும்." என்று சூடாக ஆற்றினார்.‌

  வரதராஜன் வரவும், கையில் கொடுத்துவிட்டு அம்மா மகள் என்று அழகான குடும்பமாக கேலி கிண்டலுடன் படம் பார்த்து சிரித்து, தோசை ஊற்றி சாப்பிட்டு வெட்டியாக வானத்தை பார்த்து ஊர்க்கதை பேசி முடித்து உறங்குவார்கள்.

  அழகான அளவான குடும்பம். மிகவும் ரம்மியமாக வாழ்ந்து வந்தார்கள்.

  அப்படி சென்றுக் கொண்டிருக்கும் தருணம், பிடி வாத்தியார் கொண்டு சென்ற புகைப்படம் திரும்பி வரவில்லை ஆனால் மாப்பிள்ளையை விட வர்ஷினி உயரம் என்று நிராகரிக்கப்பட்டது.

  அதில் உச்சப்பட்ச கோபமாக 'இனி யாருக்காவது போட்டோ தந்திங்க அவ்ளோ தான்' என்று அதட்டினாள்.

    அதன் பின் தரகர் மூலமாக வரன்கள் பார்க்கப்பட்டது.
  இந்த பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு கல்யாணத்திற்கு என்று மகளது வயது நெருங்கும் வரை அதை பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால் யாரேனும் பொண்ணு பார்த்தோ அல்லது திருமணத்திற்கு கேட்டு நிராகரிக்கப்பட்டாலோ, அடுத்த வரன் அமையுமோ அமையாதோ என்ற அச்சம் பிறக்க, தரகரிடம் இஷ்டத்திற்கு மகளின் ஜாதகத்தை கொடுத்து திணிப்பார்கள். தரகர்களுமே ஒரு ஜாதகம் கை மாற்றிவிட பணத்தை கறந்துவிடுவார்கள். அந்த ஜாதகம் முடிவாகின்றதோ இல்லையோ அது பெற்றவர்களின் தலையெழுத்து.

இப்படி தான் வர்ஷினி ஜாதகம் பறந்தது.

அப்படி பறந்து வந்ததில் தான் செழியன் வீட்டு டீப்பாயில் நிறைந்தது.

அதில் சிறு மாற்றமாக, வர்ஷினி மருந்துக்கடையில் வேலைபார்க்கும் பக்கத்தில் உள்ள டாக்டர் ஜாதகமும் வந்திருந்தது.

  "என்ன தரகர்யா.. என் பையனுக்கு வாயை கட்டி வயித்தை கட்டி, டாக்டர் படிக்க வச்சிருக்கேன். அவனுக்கு ஏற்றவளா டாக்டர் படிச்ச பொண்ணு தான் வேண்டும். இந்த ஜாதகம் வேண்டாம்" என்று வர்ஷினி வரதராஜன் என்ற பெயரை நிராகரித்துவிட்டார்கள். ஆனால் வர்ஷினிபோட்டோ டாக்டர் வர்ஷினியின் ஜாதகத்தோடு இணைந்துக்கொண்டது.

   "நம்ம செழியனுக்கு இந்த பொண்ணை தான் பார்க்கணும். ஏற்கனவே அந்த சுற்றுவட்டார இடத்துல டாக்டர் வர்ஷினி எப்படினு விசாரிச்சு வைக்கணும்" என்று சுகந்தி அள்ளி முடித்த கூந்தலை கொண்டயிட்டார்.

  சுகந்தி பற்றி சிறு அறிமுகம். மழைக்கு கூட பள்ளிக்கூடம்  ஒதுங்காத படிப்பறிவு இல்லாத தாயார். பையன் நன்றாக படிக்கவும் அதுவும் டாக்டர் ஆக வேண்டும் கலெக்டர் ஆகவேண்டுமென்று, கணினியில் கைகள் விளையாட வேண்டும் என்று ஏக்கத்துக்கு கணக்கிட்டு கனவுக்காணும் பெண்.
  மகன் டாக்டர் படிக்க முடிவெடுத்ததும் நகை நட்டு விற்று, படிக்க வைத்ததில் மும்முரமாக இருந்தார்.

   அனைத்தையும் வட்டி முதலுமாக மருமகளிடம் வாங்கிடலாமென்ற மிதப்பு. அப்படியில்லை என்றாலும் மகனை போலவே மருமகளையும் டாக்டராகவே பார்த்து மணம் முடித்திடும் கணக்கு.

   கிருபானந்தன் ஓரளவு பத்தாவது படித்தவர். அந்தக்காலத்தில் அவரது பரம்பரையில் அதிகம் படித்தவராக மதிக்கப்பட்டவர். ஆனாலும் பெரும்பாலான உறவுகள் எல்லாம் படிப்பறிவு அதிகமில்லாதவர்கள்.
   அதன் காரணமோ என்னவோ மகனிடம் டாக்டர் வர்ஷினியை பற்றி கூறியதோடு சரி. போட்டோவுக்கு பின்னால் போன் நம்பர் இருந்திடவும் அவனாக வரதராஜனுக்கு அழைத்தார்.

"சார் என்னுடைய பெயர் செழியன். நான் எம்.பி.பி.எஸ். எம்.டி முடிச்சிருக்கேன். வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. உங்க பொண்ணு ஜாதகம் போட்டோ அனுப்பியிருந்தாங்க. ஜாதகம் செட்டாகியிருக்கு" என்று அறிமுகமானான்.‌ கையில் வர்ஷினி போட்டோ வைத்திருந்தான். அவளை புகைப்படத்திலேயே செழியனுக்கு பிடித்துவிட்டது.

"தம்பி... டாக்டரா?" என்று வியந்தவருக்கு, தங்கள் நிலைமையை விட இந்த வரன் அதிகம் அல்லவா? என்று தோன்றியது.
 
  எதிர்தரப்பில் செழியன் அதற்கும் சேர்த்து, "டாக்டர் என்றதும் ரொம்ப பெரிய இடம்னு நினைச்சிடாதிங்க சார். அதெல்லாம் இல்லை. எங்க பேமிலில கஷ்டப்பட்டு படிக்கறேன்னு என்னை டாக்டர் படிக்க வச்சியிருக்காங்க. மத்தபடி நாங்களும் உங்க அளவுக்கு மிடில் கிளாஸ் பேமிலி." என்று பதில் தந்தான்.‌

  அதனால் தான் என்னவோ வரதராஜனுக்கு அந்த சந்தேகம் துளிர்க்கவில்லை.

டாக்டர் படித்தவர் பிபார்ம் படித்த பெண்ணை மணக்க முன் வந்துள்ளார் என்று நினைத்து கொண்டார்.

   "தம்பி நான் காலேஜ் பிள்ளைங்களுக்கு பாடம் நடத்தறவன். சொந்தமா வீடு வாசல் நிலம் இருக்கு. அதை தவிர பொண்ணை படிக்க வச்சியிருக்கேன். என்னால சீர்செனத்தி இவ்ளோ தான் செய்ய முடியும். ஜாதகம் கூட நாங்க பார்க்கறது இல்லை... நல்ல குடும்பத்து மனுஷங்களா என்பதை மட்டும் தான் விசாரிக்கறோம்" என்று பேசவும், செழியனுக்கு வரதராஜன் பேச்சு பிடித்திருந்தது.

  "சார்... நான் டாக்டர்னா வரதட்சனை கேட்பான்னு நீங்களா தப்பா எடுத்துக்கறிங்களே. எனக்கு உங்க பொண்ணை மட்டும் கொடுங்க." என்று பேசினான்.

   வரதராஜனுக்கு "போனில் பேசியதை காட்டிலும், அப்பா அம்மாவை நேரில் கூட்டிட்டு வாங்க தம்பி மற்றது பேசலாம்." என்று முடித்துக் கொண்டார்.

  செழியனுக்கு வர்ஷினியை பார்த்த பரவசம், அவளோடு மணக்கோலத்தில் கரம் பற்றிகனவுக் காண அடுத்த நாளே சென்னையிலிருந்து நேராக வருவதாக வாக்கு தந்தான்.

   வீட்டிலிருந்தவர்களில் அப்பா அம்மாவை மட்டும் அழைத்து கொண்டு பொண்டு பார்க்க சென்றான். மற்றவர்களை அழைத்து சென்றால் கண்ணுப்படும் என்று சுகந்தி, மகன் வந்ததும் அவனையும் கணவரோடு கமுக்கமாய் பொண்ணு பார்த்து பேசி வர புறப்பட்டார்கள்.

செழியன் கிளம்பும் போதே "உங்க பேச்சை குறைச்சுக்கோங்க. ஏதாவது தப்பும் தவறுமா, பேசி குழப்பப்படுத்தாதிங்க. அந்த பொண்ணிடம் டீசண்டா பிஹேவ் பண்ணுங்க. அவங்க அப்பா காலேஜ் லெக்சரர். மரியாதை இல்லாம பேசி வரனை தட்டி கழிக்காதிங்க" என்று சொல்லி அழைத்து வந்தான்.  வர்ஷினியை அவனுக்கு அந்தளவு பிடித்திருந்தது.

   தங்கள் வசதிக்கு டாக்டர் மருமகள் கிடைப்பதே அதிசயம். அதில் விரைவில் கிடைத்து விட்டாள். மகனுக்கும் பிடித்ததாக கூறிவிட்டான். ஏதேனும் பேசி தட்டிக் கழிக்காமல் மிதமாக பேசுவதாக வந்தார்கள். அவர்கள் செய்த தவறு அது தான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : July 3, 2026 3:50 am
(@crvs2797)
Posts: 102
Estimable Member
 

அட ராமா..! போட்டோவும் பேரும் தான் குளறுபடியாகிடுச்சோ...?

 

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 5:57 am

Scroll to Top