Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-38

7 Posts
7 Users
0 Reactions
78 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#384]

அத்தியாயம்-38

காஞ்சனா வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்த லாவண்யாவின் மனதிற்குள் பயமும் படபடப்பும் ஓடிக்கொண்டிருந்தது.

'ஆன்ட்டியே போன் போட்டு என்னை வரச் சொல்லியிருக்காங்க. அவர் வேற வேலைக்கு போயிருப்பாரே. இந்த நேரம் போறது சரிவருமா? இல்லை என்‌ பையனை காதலிக்கறியா, அன்னிக்கு முத்தமிட்டு அவன் கைக்குள்ள இருக்க அசிங்கமாயில்லையா' என்றெல்லாம் திட்டுவாரோ என்று எண்ணி அப்படியே நடுரோட்டில் நின்றாள்.

இல்லை.. அவருடைய குரலில் கோபம் இல்லையென்றது நினைவு வந்தது.

அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு காஞ்சனாவை நேருக்கு நேர் சந்திப்பதே லாவண்யாவுக்குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்று அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால் இன்றைய அந்த ஒரு அழைப்பில்... லாவண்யா வருகின்றாள்.
'நான் தான் மா... சாரதியோட அம்மா.' என்று அவர் சொன்ன விதத்தில் கோபமோ, வெறுப்போ எதுவுமே இல்லை.

அதனால் குறுட்டு தைரியத்தில் நடந்தாள். அவளால் வீட்டிலும் இருக்க முடியவில்லை‌. பைத்தியம் பிடிக்காத குறையாக லாவண்யா இருக்க, காஞ்சனா அழைப்பில் தானாக வந்துவிட்டாள்.
வீட்டு வாசலை அடைந்ததும் ஒரு நொடி நின்றாள்.

உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்தவள், மெதுவாக "ஆன்ட்டி' என்றாள்.

"வா மா.." உள்ளிருந்து காஞ்சனாவின் குரல் கேட்டதும் லாவண்யா எச்சியை விழுங்கி உள்ளே வந்தாள்.

காஞ்சனா தையல் இயந்திரத்தின் அருகே உட்கார்ந்திருந்தார். லாவண்யாவைப் பார்த்ததும் முகத்தில் ஒரு சிறிய தயக்கம்.

அதே தயக்கம் லாவண்யாவின் முகத்திலும். இருவருமே சில நொடிகள் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிறகு காஞ்சனாதான் மெதுவாக எழுந்தார். "வா... உள்ள வந்து உட்காரு." என்றார்.

"பரவாயில்லை ஆன்ட்டி... சுடிதார் வாங்கிட்டு பே பண்ணிட்டு கிளம்பறேன்" என்றாள்.

"அதுக்காகத்தான் கூப்பிட்டேன். ஆனா..." என்று சொல்லி சிறிது தயங்கியவர், தையல் இயந்திரத்தின் மீது இருந்த கவரை எடுத்தார்.

அதை லாவண்யாவிடம் கொடுக்கும்போது அவருடைய பார்வை மன்னிப்பை கேட்டு யாசித்தது.

லாவண்யா கவரை வாங்கிக் கொண்டாள். "தேங்க்ஸ் ஆன்ட்டி. ஜிபே பண்ணிடறேன்" என்றாள்.

"முதல்ல பிரிச்சுப் பாரு." என்றதும் லாவண்யா ஒரு நொடி காஞ்சனாவைப் பார்த்தாள்.

பிறகு கவரைத் திறந்தாள். உள்ளே இருந்த சுடிதாரை பார்த்தவளின் கண்கள் அப்படியே நின்றுவிட்டன.

அவள் கொடுத்த துணி தான்  ஆனால் அதில் இருந்த வேலை அவள் எதிர்பார்த்ததைவிட அழகாக இருந்தது.

கழுத்துப் பகுதியில் சிறிய கற்கள். கைகளில் அழகான வேலைப்பாடு. முழுவதுமே மிகவும் நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்தது.

லாவண்யா அதை விரல்களால் மெதுவாக வருடிப் பார்த்தாள்.

"ரொம்ப அழகா இருக்கு ஆன்ட்டி." அவளுடைய குரலில் உண்மையான சந்தோஷம் இருந்தது.

அதைப் பார்த்த காஞ்சனாவின் மனம் இன்னும் கொஞ்சம் கனத்தது.

'சின்ன பொண்ணிடம் என்னென்ன வார்த்தை பேசிவிட்டேன். என் பையனை இவள் உண்மையாக விரும்புகின்றாளா?' என்று நினைத்தவர், சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

ஜிபே எடுத்து பணத்தை செலுத்த முயன்றவளிடம், "இந்த டிரஸ் சாரதியே தச்சான்." என்றதும் லாவண்யாவின் கை அப்படியே நின்றது.

"அ..அவரா?" என்றாள் ஆச்சரியமாய்‌.

"ஆமா." காஞ்சனா மெதுவாக தலையசைத்தார். "நீ கொண்டு வந்த அன்னைக்கு நிறைய பேசிட்டேன். நீ போனதுக்கு பிறகு, அவனும் அவளை தப்பா பேசாதிங்கனு, என்ன மாதிரி ஒருத்தனை காதலிச்ச தப்பை தவிர அவ எந்த தப்பும் பண்ணலை. நீங்க ஏதாவது திட்டினா அது என்னை தான் திட்டறதா இருக்கும்னு சொன்னான். அதோட வேலைக்கு போயிட்டான்.
அடுத்த நாள் இந்த கவரை அவன் பக்கம் தள்ளி விடவும் எடுத்து, உடனே அவனே தைக்க ஆரம்பிச்சிட்டான்.
நான் தைப்பேனா இல்லையா என்று அவனுக்கு சந்தேகம்" என்றதும், லாவண்யா அந்த சுடிதாரை மீண்டும் பார்த்தாள்.

அவளுடைய கண்களில் சட்டென்று நீர் திரண்டது.

அந்த துணியை தன் கையில் வைத்துக்கொண்டபடியே நெஞ்சோடு அணைத்தாள். இது அவளது சாரதி தைத்த உடை என்பதால் ஆரதழுவினாள்.

அவள் மெதுவாக கேட்டாள்.
''அவர் நல்லா தைச்சிருக்காரே." அந்த வார்த்தையில் ஒரு சிறிய சிரிப்பு இருந்தது.

காஞ்சனாவுக்கும் அந்த சிரிப்பு நிம்மதிதர, "அவன் சின்ன வயசுல இருந்தே என் கூட தையல் வேலை பார்த்து வளர்ந்தவன் மா. நான் பக்கத்துல இருக்கும்போது துணி எடுத்து வைக்கறது, நூல் போடறது... இப்படியெல்லாம் செய்வான்.
உனக்காக மட்டும் அவ்வளவு அழகா தைச்சிருக்கான்." என்றார்.

லாவண்யா எதுவும் பேசவில்லை. அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கீழே விழுந்தது.

"அழாத மா."  என்று காஞ்சனா சொன்னதும் லாவண்யா உடனே கண்களைத் துடைத்தாள்.

"இல்ல ஆன்ட்டி நான் அழலை. ஆனா நெஞ்செல்லாம் ஏதோ பண்ணுது." என்றாள்

"அன்னைக்கு நான் உன்னிடம் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்." லாவண்யாவின் முகம் உடனே மாறியது.

காஞ்சனா அவளை நேராகப் பார்த்தார். "அதுக்காக... நீ என்னை தப்பா நினைச்சுக்காத." லாவண்யா உடனே தலையசைத்தாள்.

"இல்ல ஆன்ட்டி. நீங்க பெரியவங்க. அதுவுமில்லாம அன்னிக்கு நாங்க தப்பா தான் நடந்துக்கிட்டோம். யாராயிருந்தாலும் அப்படி தான் திட்டுவாங்க." என்று பணிவாக கூறினாள்.

காஞ்சனா அவளை நிறுத்தினார். "அப்படி சொல்லி நான் சொன்னது எல்லாமே சரின்னு ஆகிடாது." லாவண்யா அவரைப் பார்த்தபடியே இருந்தாள்.

"என் பையன் தானே உன்னிடம் அத்துமீறியது. திட்டறதா இருந்தா அவனை தான் திட்டியிருக்கணும். உன்னை கஷ்டப்படுத்திட்டேன்" காஞ்சனாவின் குரல் மெதுவாக உடைந்தது.

"என் பையன் காதலிக்கறான் என்றதே எனக்கு அதிர்ச்சிம்மா. இதுல அதை ஜீரணிக்கறதுக்கு முன்னாடியே, என் முன்ன அவன் உன்னை...." அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.
லாவண்யா மெதுவாக அருகில் வந்தாள்.

"சாரி ஆன்ட்டி.." என்றாள்.

"நான் உன்னை இன்னும் எதுவும் கேட்கப் போறதில்லை. உங்க ரெண்டு பேருக்கும் என்ன பந்தம் இருக்குன்னு எனக்கு புரியுது." என்றார்.

"என் பையனை காதலிச்சி, யாராவது சொல்லிட்டாங்கனு விட்டுட்டு போயிடாத. விடவும் மாட்டான்.
அவனால உன்னை விட்டு இருக்க முடியாது. அவன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்." லாவண்யாவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

அவள் மெதுவாக, "சாரதி என்னை கைவிட்டா கூட நான் விடமாட்டேன் ஆன்ட்டி. நான் தான் சாரதியை விரும்பறதா சொன்னேன். நானா விலகி போக மாட்டேன். எனக்கு சாரதியை அவ்ளோ பிடிக்கும் ஆண்ட்டி." என்றாள். காஞ்சனா சிரிக்க முயன்றார்.

   "ஒரு நிமிஷம் வா." என்று லாவண்யாவை அழைத்துக் கொண்டு சண்முகத்தின் புகைப்படம் முன் நிறுத்தி, விளக்கேற்றினார்.

புகைப்படத்தை பார்த்து, "பொண்ணு நல்லா லட்சுமி கடாட்சமா இருக்காளா? உங்க பையன் சாரதி விரும்பறான்.
    உங்க பையனை, என்னை விட நீங்க நல்லா புரிஞ்சு வச்சியிருக்கிங்க‌. அடிக்கடி சொல்விங்களே.. 'அடிப்போடி.. உன் பையன் எல்லாம் நமக்கு பொண்ணு பார்க்கற வேலையை கூட வைக்க மாட்டான்னு... எனக்கு அந்த கஷ்டத்தை கூட கொடுக்கலை.
   நான் தான் கொஞ்சம் திட்டிட்டேன். எல்லாம் உங்க பையனால தான்.
   இப்ப எனக்கு இவளை பிடிச்சிருக்கு. பிடிக்காம போகுமா..‌. என் பையன் ஆசைப்பட்ட பொண்ணு." என்று கூறவும் காஞ்சனா கண்கள் கண்ணீரை உகுத்தியது.

    குங்குமமும் வைத்து, அழகுப்பார்க்க, லாவண்யா நொடியில் காஞ்சனா காலில் விழுந்தாள்.

"ஆன்ட்டி" என்று அழ, அவளை தூக்கி நிறுத்தி, "ஆன்ட்டி எல்லாம் இல்லை. அத்தை இல்லைன்னா அம்மானு கூப்பிடு" என்றதும், லாவண்யா காஞ்சனாவை கட்டிப்பிடித்து அழுதாள்.

  'அம்மா... அம்மா" என்று குலுங்கி குலுங்கி அழுதாள். காஞ்சனாவோ அன்பு மிகுதியில் திக்குமுக்காடி அழுவதாக நினைத்து, முதுகை நீவிவிட்டார்.

  "அம்மா... அம்மா." என்று உச்சரிக்க, காஞ்சனாவோ, "சரி ரொம்ப நேரமாச்சு.. உங்க சித்தி தேடப்போறாங்க‌" என்று கூற, லாவண்யா மறுப்பாய் தலையாட்டி, "எனக்கு அங்க போகவே பிடிக்கலைம்மா" என்று தேம்பினாள்.
 
  காஞ்சனாவோ புரியாமல் லாவண்யாவை பார்க்க, லாவண்யாவோ "அம்மா.. அங்க.. வீட்டுக்கு போகவே பயமாயிருக்கு. அங்க அவன் என்னை தப்பு தப்பா நடக்கறான்." என்று அழுதாள்.

காஞ்சனாவோ அவளது அழுகையையும், பேச்சையும் கண்டு, நிதானமாக லாவண்யாவை உட்கார வைத்தார்.

தண்ணீரை எடுத்து குடிக்க வைத்து, "என்ன சொல்லற. யார் தப்பா நடக்கறாங்க." என்று கேட்டதும், லாவண்யா தொடர்ச்சியாக அழவும், காஞ்சனாவோ, "இலக்கியாவோட புருஷன் சுரேஷா?" என்றார்.

லாவண்யாவோ வேகமாய் இல்லையென்று தலையாட்டினாள்.
"இ..இ...ல்லை.." என்றவள் "ஆவுடையப்பன்." என்றாள்.

காஞ்சனாவோ நெஞ்சை பிடித்து "அவர் உனக்கு தாத்தா இல்லை?" என்றார்.‌

"எங்க தாத்தாவோட தம்பி தான் ஆவுடையப்பன் தாத்தா. சொந்த தாத்தா இல்லையே..
   அன்னிக்கு... அன்னிக்கு... சாரதி என்னை கிஸ் பண்ணவும், நான் நானாவே இல்லை. நீங்க வந்து திட்டியதும், ப..பயந்துட்டேன். எங்க நீங்க சித்திக்கிட்ட வந்து சொல்லிடுவிங்களோனு, நினைச்சேன்.‌
   சாரதியோ 'எங்கம்மா என்னை மீறி அங்க வந்து எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னா பார்த்துக்கலாம் நீ பயப்படாத'னு சொன்னார். நான் அப்பவும் லேசா படபடப்பா இருந்தேன். நேரம் ஆகவும் நீங்க வரலை என்றதும் நிம்மதியா இருந்தேன்.
   சாரதி எனக்கு தந்த முதல் முத்தம்‌ அதை நினைச்சு நினைச்சு பார்த்த எனக்கு தூக்கமே வரலை‌.
   கண்ணை மூடி படுத்திருந்தேன். அ..அப்ப.. அந்த ஆவுடையப்பன் தாத்தா என் காலை தொட்டு தடவினார்.

நா..நான்..ன் என்‌ பக்கத்துல இஷிதா படுத்திருப்பா அவ தான் பாத்ரூம் போக தொடறானு இருந்தேன். ஆனா இஷிதா கை குட்டி. அந்த கை... ஆம்பளயோடதுனு உணரவும் சட்டுனு எந்திரிச்சு கத்த ட்ரை பண்ணினேன். ஆனா ஆவுடையப்பன் தாத்தா.. சீ தாத்தாவா அவன்.' என்று காறிஉமிழாத குறை.
   "அந்தாளு... நான் கத்தி ஊரை கூட்டினா நீயும் அந்த கண்டெக்டர் பயலும் காதலிச்சதை வெளிய சொல்லிடுவேன். அப்பறம் நீ என்னை பத்தி ஏதாவது உங்க வீட்ல சொன்னா கூட நம்ப மாட்டாங்க.
   உன்னை பெத்த அப்பா அம்மா கூட, நான் உன் காதலை சொல்லறதால, நீ என் மேல வீண் பழியை சொல்வதா நம்புவாங்களே தவிர, என்னை தப்பா நினைக்க மாட்டாங்க.
  உனக்கே தெரியும்... உன் அக்கா கல்யாணத்துலயே உன்னை பொண்ணு கேட்டு வரன் வந்துட்டு இருக்கு.
  நாளைப்பின்ன கண்டெக்டர் பையலை காதலிப்பதா உங்க வீட்ல தெரிந்தா உடனடியா உங்க வீட்ல யாரையாவது கட்டி வைப்பாங்க. என்னை பத்தி பேச்சு அப்படியே பொய்யுனு அமுங்கிடும்னு சொன்னார்.

  எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை.
  வீட்ல அந்த ஆவுடையப்பனை பத்தி சொன்னா அப்பா நம்புவாரா? அம்மா நம்புவாங்களானு எனக்கே சந்தேகம் வந்துடுச்சு.

    அக்கா கல்யாணத்தை ஒட்டி என்னை பொண்ணு கேட்டு சிலர் வந்தாங்க. அப்பா அம்மா தான் படிப்பு முடியட்டும்னு இருக்காங்க. இப்ப இதை சொன்னா உனக்கு தான் அசிங்கம்னு வேற சொன்னார்.

  என்னால என்ன செய்யறதுனு தெரியலை.
நிஜமாவே... இதை நான் யாரிடம் சொல்லறதுனு தெரியலை.
   சாரதியை நான் ரெகுலரா பார்த்தா அவரே என் முகம் பார்த்து கண்டுபிடிச்சி என்ன ஏதுனு கேட்பார். ஆனா சாரதிக்கு டே ஷிப்ட் என்பதால என்னை பார்க்கறதே இல்லை‌. இதுக்கு நடுவுல நீங்க வேற என்னை திட்டவும், நான் அதுக்கு தான் ஒரு மாதிரி இருக்கேனு சாரதி நினைச்சிட்டார்.
 
நான் கொஞ்சம் வாய் துடுக்கு. தைரியசாலி தான். ஆனா அந்தாளு சொன்ன மாதிரி  சாரதியை விரும்பற விஷயம் தெரிந்து என்னை இங்கயிருந்து கூட்டிட்டு போய், அம்மா அப்பா நம்பாம கல்யாணம் பண்ணி வச்சிட்டா. என்னால சாரதி இல்லாம இருக்க முடியாது." என்று தேம்பி தேம்பி அழுதாள்.

காஞ்சனாவோ எச்சியை விழுங்கி, "அதுக்கு... அப்படியே விட்டுட்டியா?" என்று பதறினார்.

"நான் கதவை லாக் போட்டு படுத்தேன். ஆனா அந்தாளு லாக்கை உடைச்சி வச்சிருக்கார். என்னால தூங்க முடியலை. தூங்கவே பயமாயிருக்கு. அதனால ராத்திரி கண் முழிச்சே இருக்கேன். பஸ்ல போறப்ப வர்றப்ப தான் தூங்கினேன். அந்தாளு.. இதுக்கு முன்ன எல்லாம் என்னை தொட்டு தடவியிருக்கான். எனக்கு அதுக்கூட தூக்கத்துல தெரியலை. நல்லவேளை நான் இன்னும் சுத்தமா இருக்கேன். அது எனக்கு தெரியுது." என்றாள்.

"நானும் சாரதியிடம் இதை சொல்லணும்னு நினைப்பேன். தேவியிடம் சொல்லணும்னு நினைப்பேன். ஆனா முடியலை... இந்த ஒன்றரை மாசம் என்னால மூச்சு விட முடியலை. மனழுத்தம் அதிகமாயிடுச்சு. பைத்தியம் பிடிக்காத குறையா மைண்ட் முழுக்க பயம்.
  செத்துடலாம்னு கூட தோணுச்சு. ஆனா நான் என்ன பண்ணினேன். சாகறதுக்கு... அந்தாளை சாகடிச்சிட தோணுச்சு. ஒரு நாள் காம்பஸ் எடுத்துட்டு அந்தாளை குத்த போனேன். ஆனா கொலை செய்ய தைரியமும் வரலை." என்றாள். அழுகையோடு மொத்தமாக, காஞ்சனாவை 'அம்மா' என்ற அழைப்பில்... அணைப்பில்.. மொத்தமாய் கொட்டினாள்.
    "எ..எப்படியாவது.. சாரதியிடம் சொல்லணும்னு இருந்தேன். ஆனா இன்னிக்கு நீங்க கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு பேசவும், அம்மானு சொன்னதும் மொத்தமா மொத்தமா.. உலறிட்டேன்" என்றாள்.

காஞ்சனாவோ "சாரதியிடம் சொன்னா அவன் சும்மா விடமாட்டான்.‌ அவன் சண்டைக்கு போனா மண்டையை உடைச்சிடுவான்." என்றார்.

"ஃபுட்பால் கோச்சிங் அவங்க அப்பாவுக்கு பிடிக்காத காரணம் அது தான். மூர்க்கத்தனமான ஆவேசம் வந்துடும்.
  இப்ப இதை அவனிடம் சொன்னா நிச்சயம் ஏதாவது பண்ணிடுவான். இப்ப தான் இந்த நாலு வருஷமா சாதுவா அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருக்கான்." என்றவரோ "ஆனா இதை அவனுக்கு தெரியப்படுத்தறதும் முக்கியம். எத்தனை நாள் நீ தூங்காம இருப்ப? இப்பவே கண்ணெல்லாம் ஏதோ வீக்கமா இருக்கு. நான் கூட நீ என்னால, என்‌ பையனால இப்படி அவஸ்தைபடறனு நினைச்சேன்." என்றவர் லாவண்யாவை கட்டிக் கொண்டார்.

   "கிழட்டு நாயுக்கு என்ன ஒரு சபலம்." என்று பதறினார்.
"நீ இலக்கியாவிடம் சொன்னியா?" என்று கேட்க, லாவண்யா யாரிடமும் சொல்ல முடியலை அம்மா" என்றாள்.

காஞ்சனாவோ, "இந்த விஷயம் எல்லாம் பெத்தவளிடம் சொல்லணும் லாவண்யா. நீ காதலிச்சதுக்கு அவங்க ஏத்துப்பாங்களோ இல்லையோனு பயந்து இதை மறைக்க முடியாது. உனக்கு அங்க எப்படி உறக்கம் வரும். நிம்மதியா இருக்க முடியுமா? நீ பேத்தி முறை. உன்னிடம் அத்துமீறி என்னென்னவேனோ பேசியிருக்கான். உனக்கு நடந்த மாதிரி சொந்த பேத்தியிடம் ஏதாவது செய்தா அந்த பிஞ்சு குழந்தை மனநிலை என்னாகும்? பேப்பர்ல பார்த்ததில்லை." என்றார்.‌

  "அப்பா அம்மாவுக்கு தெரிந்தா என்னை படிக்க விடமாட்டாங்க. யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்க‌. நான் சொல்வதை நம்ப மாட்டாங்க. அந்த ஆளு சொன்னது போல ஏதோ அவரை பத்தி தப்பா சொல்லி பூசி மொழுகுவதா சொல்லலாம்" என்றாள் மீண்டும் மீண்டும்.

"அதெல்லாம் தப்பு செய்யற நாயுங்க, மிரட்ட ஆயிரம் வழி வச்சிருப்பாங்க. அதுக்குன்னு சொல்லாம இருக்க முடியுமா?" என்றார் காஞ்சனா.

   "நான் என்ன பண்ணறதுனு தெரியலையே" என்றாள்.

காஞ்சனாவோ மருமகளை வருடி தட்டிக் கொடுத்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

 
 

 

  
   
  


 
Posted : October 2, 2026 8:36 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Ada kodumaye.. Suresh nu nenacha keladu yellam yenna vela paranoia..  ethuku oru mudivu kattanum


 
Posted : October 2, 2026 9:55 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Omg stupid grandfather. How dare to do this? Kanchana accepts sarathy love. So happy. But laya u should tell to sarathy or elakkiya. Unexpected twist sis. Very intresting sis.


 
Posted : October 2, 2026 10:03 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 38)

நான் சொல்லலை, கண்டிப்பா
லாவண்யா காஞ்சனா அம்மா கிட்ட மனசை திறப்பாள்ன்னு... அதுவே நடந்திடுச்சு.

அடிப் போடி.. அதுக்குன்னு சொல்லாமலே இருக்கப் போறியா ? இன்னைக்கு உன்னைத் தொட்டு தடவுறவன் நாளைக்கே நீ கமுக்கமா கிளம்பி போயிட்டா, மருமகள் இலக்கியாவை தடவுவான், மருமகளாவது வயசுல பெரியவள் கொஞ்சம் பயம் இருக்கும், ஆனால் இஷிதாவை தொட்டால், அந்த பிஞ்சுக் குழந்தைக்கு எப்படி புரியும், புரியாமல் தாத்தா ஏதோ விளையாடுறாரோன்னோ, இல்ல அந்த குழந்தையும் அதை சொல்லத் தெரியாமல் தவிச்சா...?
தயவுசெய்து நீ வீட்ல சொல்லிடு, இந்த மாதிரி காமவெறி பிடிச்ச மிருகங்களையெல்லாம் கையை காலை அசைக்கவே முடியாத கூண்டுக்குள்ள அடைக்கணும்.

😴😴😴
CRVS (or) CRVS 2797


 
Posted : October 2, 2026 4:26 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Kanchana amma sonnathu correct than ah Lavanya thappu panna andha kizham meraturan ne bayandhu kita yae ipadi evolo nallaiku thookkam illa ma ipadi bayathoda thavichikitu irupu ah .


 
Posted : October 2, 2026 7:20 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

நான் நினைச்சேன் அந்த கிழவன் தான் இருக்கும் 


 
Posted : October 7, 2026 11:00 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

😭😭😭


 
Posted : October 8, 2026 2:03 pm

Scroll to Top