பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-37
அத்தியாயம்-37
அடுத்தடுத்த நாட்களிலும் லாவண்யாவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவள் எப்போதும் போல கல்லூரிக்குச் சென்றாள்.
எப்போதும் போல தேவியுடன் பேருந்தில் ஏறினாள். எப்போதும் போல வகுப்பில் அமர்ந்தாள். ஆனால் அவள் முன்பு இருந்த ஆனந்தமும் குதூகலமும் கொண்ட பெண்ணாக தற்போது இல்லை.
தேவிக்கு அது நாளுக்கு நாள் தெளிவாகத் தெரிந்தது. ஒருநாள் பேருந்தில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தபோது, தேவி நீண்ட நேரம் லாவண்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஏன்டி இப்படி இருக்க?" லாவண்யா ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நானும் பார்க்கறேன்... உனக்கு உடம்பு சூடா எல்லாம் இல்லை. தலைவலி இருக்கிற மாதிரியும் தெரியலை." லாவண்யா தன் பயத்தை மறைத்தாள்.
"பஸ்ல வர்றப்ப தூங்கிட்டே வர்ற. காலேஜ்ல கூட அரைத் தூக்கத்துல இருக்க." என்று சொல்லிவிட்டு, அவளுடைய முகத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
"இங்க பாரு..." என்று திருப்ப, லாவண்யா மெதுவாக அவளைப் பார்த்தாள்.
"சாரதி அண்ணாவோட சாட் பண்றதை கொஞ்சம் குறைச்சிக்கோ." லாவண்யாவின் புருவம் சற்றே சுருங்கியது.
"கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு." தேவி கிண்டலாகச் சொன்னாலும், அவளுடைய குரலில் உண்மையான அக்கறை இருந்தது. இந்த தூக்கமின்மைக்கும், சோர்வுக்கும் சாரதியிடம் இரவெல்லாம் பேசுவதாக தேவி நினைத்து கொண்டாள்.
லாவண்யா எதுவும் சொல்லாமல் மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவளுடைய அந்த அமைதிதான் தேவிக்கு கோபத்தை வரவழைத்தது.
"என்னடி? நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன். நீ ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கற." லாவண்யா மெதுவாக, "என்ன சொல்ல?" என்றாள்.
"என்ன சொல்லன்னா... என்ன பிரச்சனைன்னு சொல்லு." என்றாள்.
"ஒண்ணுமில்லை."
"ஒண்ணுமில்லைன்னா இப்படி இருப்பியா?" லாவண்யா மீண்டும் அமைதியாகிவிட்டாள். எங்கே ஏதாவது பேசி வார்த்தை விடுவோமோ என்ற பயம்.
தேவி பெருமூச்சு விட்டாள். அவள் மனதுக்குள், 'இவகிட்ட எதுவும் கேட்க முடியலையே...' என்று நினைத்துக் கொண்டாள்.
மறுபுறம் சாரதியும் லாவண்யாவின் மாற்றத்தை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவன்தான் அடிக்கடி மெசேஜ் அனுப்பினான்.
"சாப்பிட்டியா?"
"காலேஜ் போய்ட்டியா?"
"என்ன பண்ற?" என்று இரண்டு மூன்று முறை மெசேஜ் அனுப்புவான். லாவண்யா பதில் சொல்வாள்.
ஆனால் அவளாக எந்த மெசேஜையும் தொடங்குவதில்லை.
போனில் பேசினாலும், "ம்ம்ம்..."
"சரி..."
"ஓகே..." என்று சுருக்கமாகவே பேசினாள்.
முன்பு ஒரு விஷயத்தை எடுத்தால் அதை அரை மணி நேரம் பேசிக்கொண்டிருப்பவள்.
இப்போது இரண்டு நிமிடத்துக்குள் போனை வைத்துவிடுகிறாள்.
சாரதிக்கு அது புரிந்தது. ஆனால் அவன் அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டிருந்தான். 'அம்மா அன்னைக்கு வெட்கம் கெட்டவனு முன்னாடி பேசினதை நினைச்சு இன்னும் ஃபீல் பண்றா போல...' என்று நினைத்தான்.
அவள் இன்னும் காஞ்சனாவின் வார்த்தைகளிலிருந்து வெளியில் வரவில்லை என்று நினைத்தவன், அதைப் பற்றி நேரடியாகக் கேட்கவும் தயங்கினான்.
ஒருநாள் போனில் பேசும்போது, "லாவண்யா..."
"ம்ம்ம்..."
"அன்னைக்கு அம்மா வெளியே போனு பேசினதை நினைச்சு இன்னும் டல்லா இருக்கியா?" என்றான்.
"இல்ல..." என்று மெதுவாகச் சொன்னாள்.
"அம்மா ஏதாவது பேசினதை மறந்துடு. நார்மலா இருடி" என்றான்.
"ம்ம்ம்..."
"நான் பேசிப் பேசித்தான் உன்னை நார்மலாக்கணும்னு நினைக்கிறேன்." என்று அவன் சிரிக்க முயன்றான்.
அவளிடமிருந்து சிறிய சிரிப்பு கூட வரவில்லை.
சாரதியின் மனம் சற்றே கனத்தது. 'நேர்ல பார்த்து பேசினாதான் சரியாகும்.' என்று முடிவு செய்தான். ஆனால் அதற்குள் பரீட்சை தேதி வந்துவிட்டது. லாவண்யாவும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், சாரதியும் அவளைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், 'பரீட்சை முடிஞ்சதும் நிதானமா பேசிக்கலாம்.' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
பரீட்சைகளும் தொடங்கின. அந்த நாட்களில் லாவண்யாவுக்கு சாரதியைப் பார்க்கவே முடியவில்லை.
அவன் வேலை பார்க்கும் பேருந்தில் ஏற வேண்டிய நேரம் கிடைக்கவில்லை. பேருந்தில் வேறு கண்டக்டர்.
அவள் எப்போதும் உட்காரும் ஜன்னலோர இருக்கை மட்டும் அப்படியே இருந்தது.
ஆனால் அங்கே சாரதி இல்லை. அந்த வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டே பலமுறை அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தேவி அதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் பேருந்திலிருந்து இறங்கியதும், தேவிக்கு இனியும் அமைதியாக இருக்க முடியவில்லை.
வீட்டுக்கு போனதும் போனை எடுத்து சாரதிக்கு அழைத்தாள்.
"அண்ணா... சாரதி அண்ணா" என்றதும் சாரதி "சொல்லும்மா லாவண்யா இருக்காளா? ஏதாவது பிரச்சனையா" என்றான்.
"இல்லை அண்ணா.. அவயில்லை. நான் தான் உங்களிடம் பேசலாம்னு போட்டேன். அண்ணா லாவண்யா முன்ன மாதிரி இல்லைண்ணா." சாரதியின் முகம் உடனே மாறியது.
"சரியா பேச மாட்டேங்கறா. எப்ப பாரு எதையோ இழந்த மாதிரி இருக்கா. பஸ்ல நீங்க இல்லன்னா தூங்கிட்டே வர்றா. காலேஜ்ல கூட அரைத் தூக்கத்துலதான் இருக்கா." சாரதியின் மனதுக்குள் ஏதோ ஒரு வலி எழுந்தது.
"கொஞ்சம் நைட் சாட் எல்லாம் பண்ணாம தூங்கச் சொல்லுங்கண்ணா." என்றாள்.
"ரொம்ப டல்லா இருக்கா." சாரதிக்கு 'அம்மா பேசியதை நினைச்சுதான் இப்படி இருக்கா... ஆனா நான் நைட் சாட் பண்ணறதில்லையே' என்று ஓடியது.
லாவண்யாவின் உண்மையான பயத்தை அவன் அறிந்திருக்கவில்லை.
"அவளிடம் பேசறேன்மா. இதை பத்தி" என்றான்
"சரி அண்ணா." என்று சொல்லிவிட்டு தேவி அணைத்தாள்.
அப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. பரீட்சைகள் முடிந்தன. ஆனால் லாவண்யாவின் மனநிலை மட்டும் மாறவில்லை.
சாரதியும் காஞ்சனாவிடம் வழக்கம் போலவே பேசினான்.
அம்மா சமைத்ததை சாப்பிட்டான். வேலைக்குச் சென்றான், திரும்பி வந்தான். எல்லாமே வழக்கம் போலத்தான் இருந்தது.
ஆனால் காஞ்சனாவுக்கு மட்டும் ஒரு விஷயம் வலித்தது. மகன் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறானா? அவன் சந்தோஷம் தன்னால் மாயமாகின்றதா என்று கவலைக்கொண்டார்.
அன்று ஒரு சனிக்கிழமை சாரதி தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் தூரத்திலிருந்து தேவி ஓடி வந்தாள்.
"ஹாய் அண்ணா!" சாரதி சிரித்தான்.
"ஹாய்... எப்படியிருக்கம்மா?" என்றவன் பார்வை லாவண்யாவை தேடியது.
"நல்லா இருக்கேன் அண்ணா." அவள் மூச்சைச் சரிசெய்து கொண்டபடி, "உங்களை பார்த்தேன்னு லாவண்யாகிட்ட சொன்னா குதிகுதின்னு குதிப்பா." என்று சிரித்தாள்.
சாரதியின் முகத்தில் உடனே ஒரு புன்னகை வந்தது. ''என்ன அண்ணா... உங்களைப் பார்க்கவே முடியலை." என்றாள்
"வேலை அப்படித் தானம்மா." என்றான்.
"எப்ப அண்ணா டே ஷிப்ட்டுக்கு வருவீங்க?" என்று கேட்டவள் உடனே, "நாங்க ஏறுற கண்டக்டர் வேற வள்ளு வள்ளுனு விழறார்." என்று முகத்தைச் சுளித்தாள்.
"நானும் லாவண்யாவும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்." சாரதி லேசாகச் சிரித்தான். அந்த வார்த்தை அவனுக்குள் ஒரு இனிமையான உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் தேவி அடுத்ததாக சொன்ன வார்த்தைகள் அந்தப் புன்னகையை மெல்ல குறைத்துவிட்டன.
"அண்ணா... அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏன் அண்ணா அவ முன்ன மாதிரி இல்லை அண்ணா. முன்ன மாதிரி பேச மாட்டேங்கறா. சிரிக்க மாட்டேங்கறா. இப்பவும் ஏதோ பறிகொடுத்தவ மாதிரி இருக்கா." சாரதியின் முகம் இறுகியது.
"என்னாச்சுனு கேட்டா சொல்ல மாட்டேங்கறா அண்ணா. அவ எப்படி ஜாலி கேரக்டர். எப்பவும் வாய் பேசிக்கிட்டே இருப்பா. இப்ப ஏதோ வாய் பேச முடியாத பொண்ணு மாதிரி ஒடுங்கி இருக்கா." அந்த நேரத்தில் தான் பின்னால் இருந்து காஞ்சனா வந்தார்.
"சாரதி..." என்று அழைத்தார். காஞ்சனாவுமே லாவண்யா வந்து தான் பேசுகின்றாளென வந்து பார்த்தார். ஆனால் வேறொரு பெண் என்றதும் சப்பென்று ஆனது.
தேவி உடனே காஞ்சனாவை திரும்பிப் பார்த்தாள். காஞ்சனா கையில் சில துணிகளை வைத்திருந்தார்.
"பிளவுஸ் தைச்சதுக்கு காசு தந்துட்டாங்க. புதுசு தைக்க தந்திருக்காங்க. மீதி நூறு ரூபாய் தரணும். என்னிடம் இப்ப இல்லை." என்று சாரதியிடம் கேட்டார். .
"நூறு ரூபாய் இருக்கா?" என்றதும் சாரதி உடனே பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.
தேவியின் முகம் பயத்தில் மாறியது.
அவள் காஞ்சனாவை பார்த்தபடி லேசாகக் கண்களை உருட்டினாள். 'ஆன்ட்டிக்கு நம்ம பேச்சு கேட்டுடுச்சா?' என்ற பயம் அவளுக்குள் வந்தது.
காஞ்சனா பணத்தை வாங்கிக்கொண்டு நகர முயன்றார். தேவி தயங்கியபடி,
"அண்ணா ஆன்ட்டி ஏதாவது கேட்டுட்டாங்களா?" சாரதி தேவியை பார்த்தான்.
அவளுடைய பயத்தைப் பார்த்ததும் சிரித்தான்.
"அவங்களுக்கு நானும் லாவண்யாவும் காதலிக்கறது தெரியும் மா." தேவியின் கண்கள் பெரிதானது.
"அம்மா கொஞ்சம் லாவண்யாவை திட்டிட்டாங்க." ஒரு நொடி தயங்கியவன், "அதனால கூட அவ அப்படி இருக்கலாம்." என்றான்.
தேவி உடனே, "அய்யோ..." என்று மெதுவாகச் சொன்னாள்.
"ஆனா என்கிட்ட அவ எதுவும் சொல்லலையே..." என்றாள்.
அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றபோது, காஞ்சனா மீண்டும் அவர்களிடம் வந்தார்.
"போலாமா?" என்று சாரதியிடம் கேட்டார்.
சாரதி தலையசைத்தான். பைக்கை நோக்கி நடந்தவன் தேவியைப் பார்த்து, "அம்மா... என் கூட ஸ்கூல் படிச்ச சரிகாவோட தங்கச்சி தேவி." என்று அறிமுகப்படுத்தினான்.
"நம்ம லாவண்யாவுக்கு பிரெண்ட்." காஞ்சனா தேவியைப் பார்த்தார்.
"என்னது?" என்று தேவி அதிர்ந்தாள். சரிகா அக்காவோட ஸ்கூல்மெட் சாரதி அண்ணாவா?' என்ற அதிர்ச்சி.
"சரிகா அக்கா உங்க ஸ்கூல் கிளாஸ்மெட்டா?" தேவி ஆச்சரியமாகக் கேட்டாள்.
"ஆமாம்மா." என்று சாரதி சொன்னான். காஞ்சனா லேசாக சிரிக்க முயன்றார். பிறகு சாரதியின் பைக்கில் ஏறினார். தேவியும் சொல்லிவிட்டு வேகமாய் ஒட்டமெடுத்தாள்.
சாரதி பைக் நகர்ந்தது. காஞ்சனா பின்னால் அமர்ந்திருந்தார். அவரது மனதில் தேவி சொன்ன வார்த்தைகள் தான் ஓடிக்கொண்டிருந்தன.
'அவ முன்ன மாதிரி இல்லை.. சிரிக்க மாட்டேங்கறா.. ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கா... என்னாச்சுனு கேட்டா சொல்ல மாட்டேங்கறா... வாய் பேச முடியாத பொண்ணு மாதிரி ஒடுங்கி இருக்கா..' காஞ்சனா கண்களை மூடிக்கொண்டார்.
அவருக்கு திடீரென்று ஒரு விஷயம் புரிந்தது. மகன் வீட்டில் தன்னிடம் பேசுகின்றான். ஆனாலும் முன்பு போல துடிப்பும் சிரிப்பும் குறைந்திருக்கின்றது.
காலையில் எழுந்ததும், டீ குடித்து சாப்பிடு கொஞ்ச நேரம் டிவிபார்த்து, குளித்து, வேலைக்குப் போறேன். அவ்வளவுதான். வீட்டுக்கு வந்ததும் அசதியோடு சாப்பிடுகிறான். பிறகு தூங்குகிறான். கதவை கூட முன்பு போல மூடவில்லை. அதிலிருந்தே மகன் அந்த பெண்ணிடம் இரவெல்லாம் பேசாதது அறிந்தவர். அப்படியிருக்க அந்த பொண்ணுக்கு கஷ்டமாக உள்ளதா? மகன் ஏதோ கைவிட்டுவிட்டானென பயந்துவிட்டாளா?
'இதெல்லாம் தன்னால தானா?' என்ற கேள்வி மனதைத் தைத்தது. 'நான் அவளை அப்படி திட்டினதாலதான்... மகன் மட்டும் இல்ல... அந்தப் பொண்ணும் இப்படி ஆகிட்டாளா?' என்று நினைத்தார்.
வீட்டிற்கு வந்ததும் சாரதி பைக்கை நிறுத்தினான்.
"நீங்க உள்ள போங்கம்மா. நான் வேலைக்குப் போறேன். என்று அவசரமாக கண்டெக்டர் உடையை எடுத்து அணிந்து புறப்பட்டான்.
மீண்டும் பைக்கை எடுக்கத் தயாரானான்.
காஞ்சனா அவனைப் பார்த்தார்.
"சரிப்பா." என்று மட்டும் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
சாரதி கிளம்பிவிட்டான். வீடு அமைதியானதும்... காஞ்சனா மெதுவாக தையல் மெஷின் அருகே சென்றார்.
ஹேங்கரில் மகன் லாவண்யாவுக்காக தைத்த அந்த சுடிதார் கவர் இன்னும் அங்கேயே இருந்தது.
அதைப் பார்த்ததும் அவரது விரல்கள் தானாக அதை எடுத்தன. மெதுவாக கவரைத் திறந்தார். சாரதி தைத்திருந்த அந்த சுடிதார் அப்படியே அழகாக இருந்தது.
அவன் செய்த ஸ்டோன் வேலை, அளவுக்கேற்ற தையல், ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது கண்கள் கலங்கின. 'என் மகன் சந்தோஷத்தைத் தவிர வேறென்ன பார்க்க?' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டார்.
அந்தக் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
லாவண்யாவை உடனே அழைக்க வேண்டும் என்று தோன்றியது. அவளிடம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க நினைத்தார்.
ஆனால் போனை எடுக்கவும் விரல்கள் தயங்கின. அவளை என்ன சொல்லி அழைப்பது?
'நான் திட்டினேனே... இப்ப ஏன் போன் பண்றேன்னு நினைப்பாளா?' என்று நினைத்தார்.
சில நொடிகள் போனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல லாவண்யாவின் எண்ணைத் தேடி அழுத்தினார்.
போன் ரிங் ஆனது. மூன்றாவது முறையில் அந்தப் பக்கம் போன் எடுக்கப்பட்டது.
"ஹலோ." லாவண்யாவின் குரல் கேட்டதும் காஞ்சனாவின் மனம் சற்றே துவண்டது. முதல் முதலில் தைக்க வந்தப்போது கணீரென்று. இருந்த குரல். இன்று கிணற்றுக்கடியில் கேட்கின்றதே.
சில நொடிகள் பேசாமல் இருந்தார். "ஹலோ." என்று மீண்டும் கேட்டாள் லாவண்யா.
காஞ்சனா மெதுவாக, "நான் தான் மா. சா..சாரதியோட அம்மா." என்றார்.
லாவண்யா உடனே அமைதியாகிவிட்டாள். காஞ்சனாவும் சில நொடிகள் பேசவில்லை. பிறகு மிகவும் சாதாரணமாக பேச முயன்று,
"நீ தைக்கக் கொடுத்த சுடிதார் தைச்சாச்சு." என்றார்.
லாவண்யாவின் இதயம் ஒரு கணம் துடித்தது. "சரிங்க ஆன்ட்டி." என்றாள்.
"வந்து வாங்கிக்கறியா." என்றதும் 'ம்' கொட்டினாள்.
சுடிதார் வாங்க வர சொல்லிவிட்டு காஞ்சனா போனை வைத்தார்.
போனை வைத்த பிறகும் சில நொடிகள் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனதில் ஒரே எண்ணம்தான்.
'அந்தப் பொண்ணை நான் இவ்வளவு காயப்படுத்திட்டேனா?' என்று யோசித்தார். அவள் வந்தால் எப்படி வினையாற்றுவதென்றும் புரியாது முழித்தார்.
மறுபுறம் போனை கையில் வைத்தபடியே லாவண்யா அசையாமல் நின்றாள்.
சாரதியின் அன்னை காஞ்சனாவின் குரல்... அந்தக் குரலில் இருந்த கோபமில்லாத தன்மை... அவளுக்குள் எதையோ உணர்த்தியது. கடிகாரத்தில் மணியை கவனித்தாள். சாரதி இந்நேரம் வேலைக்கு போயிருப்பானே. தனியாக அழைத்து திட்டுவாரோ? எதுவானாலும் போனில் கூறியதற்கு சென்று நிற்பது நல்லது என்று முடிவெடுத்தாள்.
சுடிதாரின் துப்பட்டாவை, ஏற்கனவே பின் குத்தி வைத்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை சரிசெய்துக் கொண்டாள்.
"சித்தி... நான் சுடிதார் வாங்கிட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.
-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 37)
அட.. இவ யார் கிட்டயாவது என்ன விஷயம், ஏது விஷயம்ன்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே ? இப்படி சொல்லாமல் மூடி மறைக்குறதால என்ன லாபம் ? ஒருவேளை, படிக்க விடாமல் திரும்ப ஊருக்கே வரச் சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்களோன்னு பயப்படுறாளோ...?
எனக்கென்னவோ, சாரதியோட அம்மா கிட்ட சொல்வாளோன்னுத் தோணுது.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
3 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
4 hours ago
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
