பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-39
அத்தியாயம்-39
காஞ்சனாவோ அனைத்தும் கேட்டு ஆறுதல்படுத்திவிட்டு, "நீ போ... நான் சாரதியிடம் பக்குவமா சொல்லறேன். லீவுக்காக ஊருக்குப் போறதா சொன்ன தானே?" என்று கேட்கவும், அழுது முடித்து சற்று தெளிவாக அமர்ந்திருந்த லாவண்யா தலையசைத்தாள்.
"ஆமா அத்தை... முன்ன நாலு நாள், ஐந்து நாளுக்காக எல்லாம் ஊருக்குப் போகணுமானு இருக்கும். அதோட சாரதியைப் பார்க்காம இருக்க முடியாதுனு வேற... ஏதாவது லீவு தொடர்ச்சியா வந்தா கூட போகாம, எழுத வேலை இருக்குனு அம்மா அப்பாவிடம் சொல்லிடுவேன். இப்ப அங்க போனா நிம்மதியா இருக்கும்னு தோணுது. சாரதியை எல்லாம் எங்க போனாலும் பிரிய மாட்டேன்." அவள் சொன்ன விதத்தைப் பார்த்து காஞ்சனா லேசாகப் புன்னகைத்தார்.
"என்ன பொசுக்குனு 'அம்மா' கூப்பிட்டு, அப்புறம் 'ஆன்ட்டி'யிலிருந்து 'அத்தை'க்கு மாறிட்ட?"
லாவண்யாவும் தயக்கமாகச் சிரித்தாள். "தெரியலை அத்தை... நீங்க 'அத்தை இல்லை, அம்மானு கூப்பிடு'ன்னு சொல்லவும்... நீண்ட நாள் கழிச்சு அந்த மனபாரம் பட்டுனு களைய, அழுதுட்டு அம்மானு சொல்லிட்டேன். அம்மா என்றதும் அதுவொரு மாயம் பண்ணிடுச்சு'' என்றாள்.
"அம்மா இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது மா. நீ அம்மானு கூப்பிட வேண்டாம். அத்தைன்னே சொல்லு." லாவண்யா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
"அப்புறம் சாரதியிடம் நான் பேசறேன். ஆனா நீ லீவுக்கு போனதும் உங்க அம்மாவிடம் அந்தாளைப் பத்தி சொல்லு. எதுக்கும் பயப்படாத" என்றார். இந்த மாதிரி விஷயத்தில் ஒருவர் ஆறுதலாக பயப்படாத என்று கூறி, ஆறுதலாக பேச செவி சாய்த்து நின்றதே திடமாக இருந்தது.
"சொல்லறேன் அத்தை. ஆனா அந்தாளு நான் சாரதியை காதலிப்பதால அவரை தப்பா சொன்னதா சொன்னா" என்றாள். "எதுனாலும் பார்த்துக்கலாம். அந்தாளால தான் சாரதி பத்தி உங்க வீட்ல தெரியணும்னு தலையெழுத்து இருந்தா மாத்தவா முடியும்." என்று காஞ்சனா அழுத்தமாகச் சொன்னார்.
"சரிங்க அத்தை." காஞ்சனா அவளுக்கு டீ போட்டு கொடுத்தார். அழுது அழுது களைத்திருந்த முகத்தை தண்ணீரால் கழுவி வரச் சொன்னார்.
லாவண்யா முகம் கழுவிவிட்டு வந்ததும், காஞ்சனா அவளைப் பார்த்தபடியே இருந்தார். மகனது அறையில் துண்டை எடுத்து கொடுத்தார், லாவண்யாவோ, சாரதியின் அறைக்குள் அவளது துப்பட்டாவை கண்டாள். முன்பு அப்படியே முத்தமிட்டதை காஞ்சனா பார்க்க சாரதி கையில் சுற்றியிருந்த துப்பட்டாவை வாங்கி செல்லாமல் அப்படியே ஓடினாளே அதே துப்பட்டா.
மெத்தையின் மீது இருந்தது.
அதைப் பார்த்தவள் ஒரு நொடி திகைத்தாள்.
"இது..." என்று தயங்க, "உன்னோடது தான்" என்றார்.
"நீ போனதும் அடுத்த நாள் இதை பார்த்து முதல்ல கோபத்துல கீழே வீசினேன். அப்படியே அடுத்த நாளும் மெத்தையில கிடந்தது.
திரும்ப சுருட்டி அவன் டிரஸ்ல சொருகி வச்சேன். அடுத்த நாளும் பெட்ல தான் கிடந்தது.
அதுக்கு அடுத்த நாள் மடிச்சு பீரோல வச்சேன். அடுத்த நாளும் மெத்தையில வந்துடுச்சு."
லாவண்யாவின் முகம் முழுவதும் சிரிப்பு.
"இப்பல்லாம் தலைகாணி, பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வைக்கும்போது, இதையும் மடிச்சு அப்படியே இங்கே வச்சிடறது." காஞ்சனா துப்பட்டாவை கையில் எடுத்துப் பார்த்தார்.
"இந்த துப்பட்டாவை கையில சுத்திக்கிட்டு, அதை மோந்துட்டு தூங்கிட்டு இருப்பான்." லாவண்யாவின் கன்னங்கள் சிவந்தன.
"முன்ன என் சேலை முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்துவான். இப்ப..." என்று சொல்லி லாவண்யாவைப் பார்த்தார்.
லேசான பொறாமையுடன் உதட்டைக் கோணித்துச் சிரித்தார். அந்த சிரிப்பைப் பார்த்த லாவண்யாவும் சிரித்தாள்.
சில நொடிகள் இருவருக்கும் இடையில் இருந்த அந்நியத்தனம் முழுவதுமாக மறைந்தது.
"நல்லாதான் இருக்க... என் பையனை நீ தான் காதலிச்சியாம். அதுவும் அவன் படிச்சவனா இல்லையானு தெரியாதப்பவே காதலிச்சிருக்க." என்றதும் லாவண்யா துப்பட்டாவை மீண்டும் மெதுவாக மடித்தாள்.
"தெரியலை அத்தை... அவரோட அழகான எதிர்பாராத சந்திப்புதான் அறிமுகம் கிடைச்சது. அவர் நல்ல பக்கத்தைப் பார்த்திருக்கேன். பிடிச்சிருந்தது. வெட்கம் விட்டு சொல்லிட்டேன். ஆனா அவர் ஓகே சொல்லறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாயிருந்தது."
பிறகு காஞ்சனாவை நேராகப் பார்த்தாள். "இப்ப உங்க ஆசீர்வாதமும் அன்பும் கிடைச்சிருக்கு. எங்க வீட்டுலயும் அதெல்லாம் கிடைக்கணும். அப்பா அம்மாவை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலை." என்றார்.
காஞ்சனா அவளது கையை மெதுவாகப் பற்றினார்.
"சமாளிக்கலாம். நீ இப்ப போ. நேரமாச்சு கிளம்பு. உங்கம்மாவிடம் காதலை சொல்லாம அந்த கிழவனை பத்தி சொல்லு." என்றார்.
லாவண்யா எழுந்து செல்லும் முன் காஞ்சனாவை ஒரு முறை கட்டிப்பிடித்தாள்.
காஞ்சனாவும் அவளது முதுகைத் தடவி, "பத்திரமா போ." என்று அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்ததும் நேராக தன் அறைக்குள் சென்ற லாவண்யா கதவை மூடிக்கொண்டாள்.
காஞ்சனா கொடுத்த சுடிதாரை மீண்டும் எடுத்துப் பார்த்தாள்.
அதை அணிந்து கண்ணாடி முன் நின்றபோது, அவளுக்கே தன்னைப் பார்த்து ஒரு விதமான வெட்கம் வந்தது.
சாரதி தைத்த உடை... அவள் முகத்தில் தானாகவே புன்னகை வந்தது. உடனே கைப்பேசியை எடுத்தாள்.
சில செல்ஃபிகள் எடுத்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்த ஒன்றை சாரதிக்கு அனுப்பினாள்.
அந்த நேரத்தில் பிராட்வே வந்து பேருந்தை டிப்போவில் நிறுத்தியிருந்த சாரதியின் கைப்பேசி அதிர்ந்தது.
அவன் திரையைப் பார்த்தான்.
லாவண்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் புகைப்படம் அனுப்பியிருந்தாள். உடனே அதை டவுன்லோட் செய்தவன், புகைப்படத்தைப் பார்த்ததும் அவன் கண்கள் விரிந்தன.
அவன் தைத்த சுடிதார். அவன் முகத்தில் சந்தோஷம் அப்படியே மலர்ந்தது.
'அம்மா அவளிடம் பேசி தந்துட்டாங்க..' அடுத்த நொடி அவன் மனம் இன்னும் வேகமாகத் துடித்தது.
'அப்படின்னா... அம்மா என் காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்க' என்று நினைத்தவன் உடனே லாவண்யாவுக்கு அழைத்தான்.
அழைப்பு எடுக்கப்பட்டதும், "நான் தைச்ச சுடிதார்" என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டான்.
மறுபுறம் லாவண்யா சிரித்தாள்.
"ம்ம்ம்... அத்தை சொன்னாங்க." என்றாள்.
"பார்ரா... அத்தையா?" சாரதியின் குரலில் சந்தோஷம் பொங்கியது.
"ம்ம்ம்... அம்மா நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லிட்டாங்களா?" என்றான்.
"ம்ம்ம்." என்றாள்.
"என்ன சொன்னாங்க?" லாவண்யா வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள். "மாமியாரும் மருமகளும் நிறைய பேசினோம். உனக்கென்ன?" என்றாள்.
"அடடா..." சாரதி சிரித்தான்.
"அந்த சுடிதார்... அளவெல்லாம் எடுத்து நானே தைச்சேன். நல்லா இறுக்கமா... நானே கட்டிப்பிடிச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கா?" என்றான் கல்மிஷமாய்.
"சாரதி!" என்று லாவண்யா அக்கம் பக்கம் பார்த்தாள்.
"பஸ்ட் கிஸ் தந்துட்டு அதை பத்தி பிறகு பேசவே முடியலை. இப்பவாது சொல்லு... எப்படியிருந்தது" என்றான்.
கதவு இன்னமும் மூடியிருந்ததை உறுதி செய்துகொண்டு, "சாரதி.. போதும் போதும். நடந்ததை பேசாத. வெட்கமா வருது.. நான் டிரஸ் கழட்டிட்டு மடிச்சு வைக்கணும்." என்றாள்.
"நான் வேண்டுமின்னா வீடியோ கால் வரவா?" என்றான் சாரதி. அன்னை காதலுக்கு சம்மதித்ததும், ஏற்பட்ட ஆனந்தம். வார்த்தையும் கட்டுப்பாடின்றி அவனிடமிருந்து வந்தது.
"ம்கூம் ஆசை தோசை..." என்றவள் சிரித்தாள்.
அந்த சிரிப்பு சாரதியின் காதில் விழுந்ததும் அவனும் சிரித்தான். சில நொடிகள் இருவருமே எதுவும் பேசவில்லை.
"ஒரு மாதிரி மனசுல இருந்த பாரமே போச்சு." என்று லாவண்யா மெதுவாகச் சொன்னாள்.
சாரதி அவள் சொன்னதை வேறு விதமாகப் புரிந்துக் கொண்டான். 'அம்மா தங்கள் காதலுக்கு சம்மதித்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் தான் இப்படி சொல்கிறாள்' என்று.
அவன் புன்னகையுடன், "உங்கப்பா அம்மாகிட்டயும் சம்மதம் வாங்கணும். இந்த கண்டக்டரை ஏத்துக்க ரொம்ப யோசிப்பாங்க." என்றான்.
"போடா... எதுவும் சொல்லாத... நான் நல்ல மூட்ல இருக்கேன் கெடுத்துடாத."
"சரி சரி... நான் வைக்கறேன். என்ஜாய்." என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
லாவண்யா உடையை மாற்றிக்கொண்டாள்.
இப்போது அவளுக்கு ஒரே ஆசை. ஊருக்குப் போகணும்... நிம்மதியா தூங்கணும்... அம்மாவிடம் அந்த ஆவுடையப்பனைப் பற்றிநேரம் பார்த்து சொல்லணும்.
நானா சாரதி விஷயத்தை சொல்லாம இருக்கணும் ஆனால்... இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது? என்று நினைத்தவளுக்கு மீண்டும் தலை சுற்றியது.
இருந்தாலும் இந்த வீட்டை விட்டு சில நாட்கள் தன் வீட்டில் இருந்தால் மனம் கொஞ்சம் தெளிவாகும் என்று எண்ணி, ஊருக்குச் செல்லும் உடைகளை எடுத்துப் பையில் அடுக்க ஆரம்பித்தாள்.
அப்போது இலக்கியா அறைக்குள் வந்தார். "என்ன லாவண்யா... ஊருக்குப் போக கிளம்பறியா?"
"ஆமா சித்தி."
"ஊர்ல இருந்து வர்றப்ப அக்காவை ஊறுகாய் போட்டு கொடுக்கச் சொல்லு. உங்க சித்தப்பா சில நேரம் அதை வச்சி கூட சமாளிச்சிடுவாரு." என்றதும் லாவண்யா சிரித்தாள்.
"சரிங்க சித்தி." அந்த நேரத்தில் வாசல் பக்கம் இருந்து ஆவுடையப்பன் லாவண்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவள் முகத்தில் பல நாட்களுக்குப் பிறகு தெரிந்த தெளிவான புன்னகையைப் பார்த்ததும் அவருடைய முகத்தில் லேசான அதிருப்தி.
'இத்தனை நாள் உம்முனு இருந்தவ... இன்னைக்கு என்ன இவ்வளவு தெளிவா இருக்கா? ஊருக்குப் போகும் சந்தோஷம் தான்' என்று நினைத்துக் கொண்டார்.
அப்போது வெளியிலிருந்து, "ஏய் லாவண்யா" என்று தேவியின் குரல் கேட்டது.
அடுத்த நொடி மூச்சு வாங்கியபடி தேவி உள்ளே வந்தாள். "எங்க அக்காவுக்கு வேலை கிடைச்சிடுச்சுடி" என்று குதித்தபடியே இனிப்பு பெட்டியை நீட்டினாள்.
லாவண்யாவின் முகம் மலர்ந்தது. "என்னடி சொல்ற கங்கிராட்ஸ்" என்றாள்.
"எங்க சரிகா அக்கா... சப்-இன்ஸ்பெக்டரா ஆகிட்டாளே!" தேவி பெருமையுடன் சொன்னாள்.
"அக்கா போலீஸா?" லாவண்யா சந்தோஷமாக அவளைப் பார்த்தாள்.
"சரிகா அக்காவுக்கு கங்கிராட்ஸ் சொல்லணுமே!"
லாவண்யா சில நாட்களாகக் கேட்டு வந்தது சரிகா ஜிம்முக்குச் செல்கிறாள், உடலைக் குறைக்க முயற்சி செய்கிறாள் என்பதுதான்.
போலீஸ் வேலை கிடைத்தால் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவோம்.
இல்லையென்றால் அப்படியே மூடி மறைத்துவிடலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆனால் இன்று போலீஸ் வேலை கிடைத்துவிட்டது என்ற செய்தியைச் சொல்லி தேவி இப்படி துள்ளிக் குதித்துக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் லாவண்யாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
"ஆமா... இனிமேல் பொறுக்கி பசங்களை சீண்டினா புகார் தரலாம் போலயே!" என்று சொல்லியபடி அவள் பார்வை ஆவுடையப்பன் பக்கம் சென்றது.
அவர் முகத்தைப் பார்த்ததும் அவளுடைய சிரிப்பு சற்றே மாறியது. உடனே தேவி கொண்டு வந்த இனிப்புப் பெட்டியை இலக்கியாவிடம் நீட்டினாள்.
"ஆன்ட்டி... எடுத்துக்கோங்க." பிறகு ஆவுடையப்பனைப் பார்த்து, "தாத்தா... உங்க வயசுக்கு ஸ்வீட் சாப்பிடலாமா? எடுத்துக்கோங்க." என்று கிண்டலாகச் சொன்னாள்.
'இந்த வயசுலதான் உறவுமுறை கூட பார்க்காம எல்லா தப்பும் பண்ண பார்த்தாரே..' என்று லாவண்யா முணுமுணுத்தாள்.
"ஏய் இஷிதாவுக்கு எடுத்து வைடி. குட்டி பாப்பா லைக் பண்ணுவா." என்று பெட்டியை இலக்கியாவிடம் கொடுத்தாள்.
இலக்கியா சிரித்தபடி வாழ்த்து கூறி வாங்கிக் கொண்டார்.
"சரிகா வீட்ல இருக்காளா?" என்றார்.
"இல்ல ஆன்ட்டி... இன்னும் வரலை. போன் பண்ணி தான் சொன்னா. அம்மா அதுக்கே ஸ்வீட் செய்தாங்க. அப்பாதான் ஸ்வீட் வெளிய வாங்கினார். நான் லாவண்யாவுக்கு சொல்லிட்டு கொடுக்க வந்துட்டேன்." என்றாள்.
"உன் பிரெண்ட் ஈவினிங் ஊருக்குப் போறா.” என்று இலக்கியா சொன்னதும் தேவி லாவண்யாவைப் பார்த்தாள்.
"அப்படியா?" என்றாள்.
"ஆமா... அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்னு சொன்னா." தேவி லாவண்யாவின் தோளைத் தட்டினாள்.
"சரிடா... நான் வீட்டுக்குப் போறேன். போன்ல பேசறேன். ஈவினிங் தானே ஊருக்குப் போற?" என்றாள்
"ஆமா." என்றதும் தேவி சென்றுவிட்டாள். சாரதியை பார்த்ததை கூட கூறவில்லை.
அவள் வாசலைத் தாண்டிச் சென்றதும் லாவண்யா திடீரென்று இலக்கியாவைப் பார்த்தாள்
"சித்தி..."
"என்னம்மா"
"இஷிதாவை உங்க கூடத்தானே படுக்க வச்சுப்பீங்க?”
"ஆமா. ஏன்?"
"தனியா விடாதிங்க. பயந்துடுவா." இலக்கியா உடனே சிரித்தார்.
"அட... நீ இருந்தாதான் இருப்பா. தனியா விட்டா அலறிட்டு பேயுனு அழுவா." என்றார்.
'அப்பாடா.' என்று லாவண்யா மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
பிறகு ஆவுடையப்பனை நோக்கி ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
ஆவுடையப்பனோ அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
அவள் மீண்டும் துளிர் விட்டுவிட்டதாகவே நினைத்தார்.
இத்தனை நாள் யாரிடமும் சொல்லாதவள்... இனியும் சொல்லத் தயங்குவாள்.
அதுவும் ஊருக்குப் போகும் காரணம் கிடைத்துவிட்டதால், சில நாட்களுக்கு அவள் தன்னிடமிருந்து விலகிச் சென்றுவிடுவாள் என்றுதான் அவர் நினைத்தார்.
ஆனால்... அவர் அறியாத ஒன்று இருந்தது. இந்த முறை லாவண்யா பயந்து ஓடவில்லை.
உண்மையை அவள் அன்னையிடம் சொல்லுவதற்காகத் தான் அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 39)
அட..... வருங்கால மாமியார் கிட்ட பேசினவுடனே ரொம்ப தைரியம் வந்துடுச்சு போல இந்த லாவண்யாவுக்கு சூப்பர். இதே துணிச்சலோடப் போய் பெத்தவங்க கிட்ட சொல்லுவாளா, இல்ல தன்னோட காதல் குட்டு வெளிப்பட்டுடுமோன்னு தயங்கி மறுபடியும் பயந்து உட்கார்ந்திடுவாளோ ? பொறுத்திருந்துத் தான் பார்க்கணும். லாவண்யாவோட துணிச்சலை.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
56 seconds ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
22 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-43-44
32 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-42
52 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-33
22 hours ago
Currently viewing this topic 1 guest.
- 26 Forums
- 377 Topics
- 1,915 Posts
- 4 Online
- 442 Members
