பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-42
அத்தியாயம்-42
அலமேலு மகளுக்கு எல்லா வசதியும் பார்த்து ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு செய்து முடித்தார்.
வார்டனிடம் மகளை பார்த்துக்க கூறி பேசி வந்தார். மகளிடமோ "அந்த கிழவன் சீண்டறான்னு சொன்ன. அந்த இடத்துலயிருந்து இங்க ஹாஸ்டல்ல கொண்டு வந்து விட்டாச்சு. இனியும் ஏதாவது யோசிக்காத. ஏதாவது அந்தாளு பத்தின கெட்ட சம்பவம் இருந்தாலும் மனசுலயிருந்து தூக்கிப் போட்டுட்டு படிப்பை கவனி. வேற எந்த எழரையையுமா இழுக்காத.
அப்பறம் உங்கப்பா பார்த்த வரன் குயிவில தான் இருக்கு. கல்யாணத்தை முடிஞ்சிடுவேன்" என்று அதட்ட, 'சரிம்மா சரிம்மா' என்று தலையாட்டினாள்.
"போனை பிடுங்கிட்டு போயிடலாம்னு இருக்கு. ஆனா திருட்டு கழுதை இந்த போன் இல்லைன்னா பிரெண்ட் போன்ல பேசினாலும் பேசுவ. அதனால போன் உன்கிட்ட விட்டு வச்சிருக்கேன். ஏன் தேவி.. இதெல்லாம் தப்புனு சொல்ல மாட்டியா?" என்று கூற, லாவண்யாவோ "ம்ம்ம்" என்று 'ம்' கொட்டினாள்.
"அதுவந்து ஆன்ட்டி.. அவ காதலிக்கறதே எனக்கு தெரியாது. அந்த தாத்தா பத்தி கூட இப்ப தான் பஸ்ல வர்றப்ப சொன்னா." என்று பல்டி அடித்தாள். உண்மையும் அது தானே. தாத்தாவை பற்றி தேவியிடம் கூட கூறவில்லையே.
"என்னவோ.... நான் ஊருக்கு போறேன். உங்கக்காவை பார்க்காம உன் கூட சுத்திட்டேன். என்ன செய்ய எது முக்கியம்னு யோசிச்சா, உன்னை ஒருத்தன் தப்பா தொட முயன்றதுக்கு வீட்டை காலி பண்ணணும்னு மட்டும் யோசிச்சிட்டேன். இனி தான் அவளையே பார்க்க ஓடணும்." என்று பெருமூச்சை வெளியிட்டு, செலவுக்கு பணத்தை தந்துவிட்டு ஊருக்கு அப்படியே புறப்பட்டார்.
ஹாஸ்டல் கேட் வரை வந்து வழியனுப்பிட, தேவியும் "நானும் கிளம்பறேன் லாவண்யா. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். காலேஜ் போக வர்றப்ப பஸ்ல நீ இல்லாம கஷ்டமாயிருக்கும். தினமும் உங்க சித்தி வீட்ல மாடில உட்கார்ந்து பேசறதும் எழுதி படிக்கறதும் கூட மிஸ் பண்ணுவேன்" என்று கூற, லாவண்யா கட்டிக் கொண்டாள்.
பிறகு தேவியும் சென்றப்பின், அறையில் கூட தங்கும் பெண், ஒருத்தி மட்டுமே. அவளும் தற்போது வேலைக்கு சென்றதால், தனியாக அமர்ந்திருந்தாள்.
சாரதி நிதானமாக போனில் அழைத்தான். "சாரதி" என்று ஆரம்பிக்க, "ஹாஸ்டல் எப்படியிருக்கு? பிடிச்சிருக்கா? இப்ப நீ ஓகேவா? அத்தை இருக்காங்களா? இல்லை கிளம்பிட்டாங்களா? என்னை பத்தி கேட்டிருப்பாங்களே... போயும் போயும் கண்டெக்டரை காதலிச்சிட்டியேனு" என்று சிரித்தபடி கேட்க, "போ சாரதி.. கிண்டல் பண்ணாத. ஏன் சாரதி... படிச்சவன், படிக்காதவன், பணக்காரன், பணமில்லாதவன் நான் எதையும் யோசிக்கலை. என் பார்வைக்கு நீ நல்லவனா தெரிந்த. காதலிச்சேன். காதலிக்கறவன் கெட்டவனா இருக்க கூடாது. அவ்ளோ தான். இதுக்கு மேல நான் யோசிக்கலை. யோசிக்கற அளவுக்கு நான் மெச்சூரிட்டியான பெர்சனும் இல்லை போதுமா. காதலிச்ச உன்னை கடைசிவரை நேசிக்கணும். நான் அவ்ளோ தான். அதோட உன்னை சந்திச்ச நிகழ்வும், உன்னை என் மனசுல பதிந்த விதமும் நான் கவிதை போல ரசிக்கறேன்." என்றாள். சாரதி நக்கலாய் அல்லவா அவளை கேட்கின்றான்.
அன்னை கேட்டால் பரவாயில்லை. இவனே இப்படி பேசினால் அவளென்ன செய்வாள்.
"லூசு... சும்மா தானே ஓட்டினேன். சரி விடு. ரியலி சாரி. அத்தை இருக்காங்களா?" என்றான்.
லாவண்யாவோ "இல்லை.. அம்மா கிளம்பிட்டாங்க. இருந்தா பேச விடுவாங்களாடா? அக்கா வேற கன்சீவா இருக்கா. அவங்க அவளை கூட பார்க்க ஓடாம என்னை முதல்ல ஒருயிடமா பாதுகாப்பா பார்த்து வச்சிட்டு போறதுக்கு தான் இருந்தாங்க. போறப்ப லேசா ஒழுங்கா இருனு கண்டிப்பும் மிரட்டலுமா சொல்லிட்டே போனாங்க.
அப்பாவிடம் அம்மா நம்ம விஷயம் சொல்லிருக்க, இனி எப்படி நம்ம சேருவோம். முன்னயாவது நீ போறப்ப வர்றப்ப சந்திப்பேன். இப்ப உன்னை எப்படி பார்க்கறது சாரதி? நீ என்னை மிஸ் பண்ணுவியா?" என்றாள் வருத்தமாய் அழும் பொருட்டு.
சாரதியோ "இல்லை பஸ்ல எத்தனை அழகழகான பிகர்ஸ் வர்றாங்க போறாங்க. எனக்கு ஜாலியா இருக்கும் உன் நினைப்பு எல்லாம் கொஞ்சம் தான் வரும். முடிஞ்சா இங்க புதுசா ஒருத்தியை கரெக்ட் பண்ணிடலாமானு இருக்கேன். ஆப்டர்னூன் ரூட்ல போற எவளாவது செட்டாவாளானு பார்க்கணும்." என்று கூற லாவண்யாவோ "சாரதி." என்று அழாத குறையாக சிணுங்கினாள்.
"பின்ன என்ன லூசு. எனக்கும் உன்னை பிரிஞ்சி இருப்பது கஷ்டமா தான் இருக்கும். ஆனா இந்த பிரிவு நமக்கு தேவை. பக்கத்து பக்கத்துல இருந்துட்டு கண்ட்ரோல் இல்லாம கிஸ் பண்ணினோம். அது என் தப்பு தான். அதுக்கு மேல போகாம இருக்க, இந்த கேப் நல்லதாவே தோணுது.
சொல்லப்போனா இரண்டு பேர் வீட்ல இப்ப நம்ம காதல் விவகாரம் தெரிந்துயிருக்கு. எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டேன். அது நல்லது தானே. நாமளா சொல்லற வேலை மிச்சம். நெக்ஸ்ட் உங்க அப்பா அம்மா சம்மதிக்க காத்திருப்போம். எல்லா காதலும் போராடி தான் சேரும்" என்றான்.
லாவண்யாவுமே ஆமோதிப்பாய் 'ம்' கொட்ட, "சரி நான் வைக்கறேன் பஸ்ல டிக்கெட் கொடுக்க போகணும்." என்று அணைத்திட, லாவண்யாவோ போனையே அணைத்து வெறித்து பார்த்தாள்.
ஜெயில் போன்ற அறை, இனி இது மட்டும் தான். மாடிக்கோ கிச்சனுக்கோ பக்கத்து அறை என்றோ எங்கும் செல்ல முடியாது.
இப்படியாக நேரத்தை கழித்தாள். மாலையில் ஒரு பெண் ரூம்மேட் என்று வந்தாள். வேலைக்கு சென்ற பெண் என்பதால் சாதாரண நலன் விசாரிப்பும், அறிமுகத்துடன் அலுவலக நட்புடன் பேச ஆரம்பிக்க, லாவண்யா புத்தகம் தாண்டி வேறு வழியின்றி இருந்தாள்.
அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பினாள். தேவியிடம் புலம்பாத குறை.
'ஹாஸ்டல்ல சாப்பாடு சுமார் தான். கொசு கடிக்கு தேவி... எவ்ளோ பெருசு தெரியுமா? ஈ அளவுக்கு இருக்கு.
ரொம்ப போரடிக்கு..." என்றாள்.
தேவியோ "பழகிடும்டி. யோசிச்சு பாரு. அந்த கிழவன் என்ன செய்வானோ ஏது செய்வானோனு பயமில்லாம தூங்குவ" என்று கூறி வகுப்பை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
எல்லாம் இயல்பாக தான் கடந்தது. மாலதியை சென்று புருஷோத்தமன் அலமேலு இருவரும் பார்த்து வந்தனர்
எங்கயும் அலைச்சல் வேண்டாமென மாலதியை பிறந்தகம் கூட அனுப்பவில்லை மாமியார் மாமனார்.
விக்னேஷும் "உங்க வீட்டுக்கு போனாலும் ரெஸ்ட் எடுக்க போற. அதையே இங்க எடு." என்று கூறிவிட்டார்.
அலமேலு தான் மகளை விசாரித்து உடல்நிலையை கேட்க, "பரவாயில்லையம்மா.. இந்த வாமிட் தான் முடியலை. வாமிட் எடுத்துட்டு தூங்கிட்டா நல்லா இருக்கு. அத்தை அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. காலையில அவர் ஆபிஸ் கிளம்பறப்ப மட்டும் கூடமாட வேலை செய்ய கூப்பிடுவாங்க. டிபன் பாக்ஸ் கட்ட, காய்கறி கட் பண்ணனு இருப்பேன். தாளிச்சா வாடை ஒத்துக்கலை.." என்று கூறினாள்.
"அப்படி தான் இருக்கும்" என்று ஏகப்பட்ட புத்திமதியோடு அலமேலு புருஷோத்தமன் திரும்பினார்கள்.
எல்லாம் ஒரு மாதம் நன்றாக செல்வது போல தோன்றியது. சாரதியிடம் காலையில் கல்லூரிக்கு போகும் நேரம் குறைவானதால் போனில் பேசுவாள்.
செகண்ட் காலில் அலமேலு பிடித்து விட்டால், 'யாரிடம் டி போன்ல பேசிட்டு இருக்க? கால் பண்ணறப்ப எல்லாம் பிசினு வருது." என்று அதட்ட, "அம்மா... தேவி கூட பேசினேன்." என்று பொய்யுரைத்திட, பொய் சொல்லிட்டு திரிஞ்ச, போன்ல யாரிடம் பேசி வைக்கறனு பில் வந்தா மாட்டுவ. அதுக்காவது நல்லவளா இருந்து பிழைச்சுக்கோ" என்று கூற, அலமேலுவிடம் 'சரிம்மா சரிம்மா' என்று லாவண்யா கூறிவிட்டு, சாரதியிடமும் தெரிவித்துவிட்டு சுணங்குவாள்.
சாரதியோ காலையில் எழுந்ததும் பல் விலக்கியபடி, "இம்புட்டு கட்டன் ரைட் இருந்தும் நீ காதலிச்சிருக்க பாரு.. உன்னை எல்லாம் மியூசியம்ல வைக்கணும்." என்பான்.
"போடா." என்பாள்.
"எங்க போக? சாரதினு ஒரு நல்லவனை முத்தமெல்லாம் கொடுக்கற அளவுக்கு கெட்டவனா கெடுத்த பெருமை உன்னையே சாரும்" என்றான்.
"சாரதி" என்பாள்.
காஞ்சனாவோ "சாரதி... இட்லி சூடாயிருக்கு சாப்பிடவாடா" என்றதும் "வர்றேன்மா" என்று எழுந்தான்.
"ஓடு ஓடு" என்று சிரிப்பாள்.
இப்படி பிரிந்து இருந்தாலும் பார்க்காவிட்டாலும் காதலுடன் திரிந்தனர்.
அன்று இலக்கியா காலையிலேயே அலமேலுவிற்கு அழைத்து, "அக்கா... ஆவுடையப்பன் மாமா இறந்துட்டார்" என்ற துக்க செய்தியை தெரிவித்திட, "எ..என்னாச்சு?" என்று கேட்க, "வயசாகிடுச்சு... அதோட அவர் சரியா சாப்பிடாம கொள்ளாம ரூமுக்குள்ளயே இருந்தார். இன்னிக்கு இவர் போய் டீயை கொடுக்க போனப்ப தான் தெரிந்தது உடம்பு சில்லிட்டு போயிருக்க இறந்துட்டார்னு தெரிந்தது.
எங்க அண்ணனுக்கு கால் பண்ணினா ரிங் போகலை என்று இவர் சொன்னார். உங்களுக்கு போட்டேன். வருவிங்க தானே.. இல்லை லாவண்யா விஷயத்தால வரமாட்டிங்களா" என்று சுரேஷ் சொல்ல சொல்ல, இலக்கியா கூறவும், "வர்றோம்மா அவரிடம் சொல்லி கூட்டிட்டு வர்றேன். வரலைன்னா ஏன் எதுக்குனு தேவையில்லாம கேள்வி வரும். அதுக்கு அங்க வந்து தலைக்காட்டிட்டு வந்துடறது நல்லது" என்று அணைத்தார் அலமேலு.
புருஷோத்தமனை கூப்பிட்டு கிளம்ப, மாலதியும் விக்னேஷும் அப்படியே வருவதாக கூறிட கிளம்பினார்கள்.
லாவண்யாவிடமும் இலக்கியா தெரிவிக்க, "சித்தி ஆல்ரெடி எனக்கு டெங்கு இருக்கு. ஒரு வாரமா காலேஜ் கூட போகலையே சித்தி. தனியா வரமுடியுமா தெரியலை. அம்மாவிடம் கேட்டுட்டு சொல்லறேன். " என்று கூறினாள்.
"சரி பார்த்து மூன்று மணிக்கு தான் எடுக்கோம். உங்கம்மா அப்பா வர்றாங்க" என்று தெரிவித்து இலக்கியா அணைத்தார்.
லாவண்யா அலமேலுவிடம் போன் போட்டு இதை பற்றி தெரிவித்து கேட்க, "நானும் அப்பாவும் இப்ப தான் பஸ் ஏறினோம். நீ நிதானமா எழுந்து, ஆட்டோ கேப் புக் பண்ணி வர்றியா? நீ ஒரு வருஷம் அங்க இருந்த. இப்ப இறந்ததுக்கு வரலைன்னா ஏன் எதுக்குனு உங்க மாலதிக்காவே கேட்பா. சித்தி வீட்டு ஆளுங்க கேட்கலாம். மாலதியிடமே நாங்க எதுவும் சொல்லாம வச்சிருக்கோம். அதனால வந்துடு" என்றார்.
"அம்மா... காய்ச்சல் இப்ப தான் விட்டிருக்கு. காய்ச்சல் இல்லாவிட்டாலும், வாமிட் இருக்கும்மா" என்றாள்.
"வாந்தி எடுத்தாலும் வாடி. அங்க போய் பார்த்துக்கலாம்." என்று கூறிவிட்டார். ரொம்ப முடியாவிட்டால் தங்களோடு அழைத்து வந்திடலாமா என்று தான் அலமேலு யோசித்தார்.
ஆனாலும் லாவண்யாவுக்கு முடியாமல் நிதானமாக தான் எழுந்தாள்.
மாலதியும் விக்னேஷும் அவர்கள் ஊரிலிருந்து, காரில் வந்துக் கொண்டிருந்தார்கள்.
காஞ்சனாவுமே விஷயம் தெரிந்து, சாரதியிடம் கூறினார்.
"லீவு போடு சாரதி" என்றார்.
"நான் எதுக்கும்மா லீவு போடணும். அந்தாளு எனக்கென்ன தாத்தாவா? அவன் செய்த வேலைக்கு நானே மிதிச்சு கொன்றுயிருப்பேன்" என்று கேட்டிட, "அதுக்கில்லைடா லாவண்யாவை விரும்பற. ஏதாவது நல்லதுக்கு போகலைன்னாலும் கெட்டதுக்கு போகணுமே. லீவு போட்டு பார்த்துட்டு வர்றது நல்லது தானே" என்றதும் மறுப்பாக தலையசைத்தான்.
காஞ்சனாவோ ''உங்கப்பா இறந்ததுக்கு சுரேஷ் எல்லாம் வந்தார்டா. இலக்கியா கூட வந்துட்டு போச்சு. அதோட இலக்கியா வேற நீ லாவண்யாவை காதலிப்பதை தெரிந்தும், உன்னை பத்தி விசாரிச்சு பேசினா. நாளைக்கு லாவண்யாவை கட்டிக் கொடுக்க கேட்கறப்ப, இலக்கியா உதவி தேவைப்படும்ல." என்றதும் சாரதி சிந்தனையாக, "சரிம்மா... லீவு சொல்லறேன்" என்றான்.
தன் தந்தை இறப்புக்கு வந்ததால் இன்று சுரேஷின் தந்தையான ஆவுடையப்பன் இறப்புக்கு செல்ல விடுமுறை கூறினான்.
காஞ்சனாவோ "அப்படியே ஒரு மாலை மட்டும் வாங்கிட்டு வந்துடு சாரதி." என்றார்.
"பச்.. அம்மா. அந்தாளுக்கு அதுவொன்னு தான் குறைச்சல்" என்று சலிக்க, "டேய்.. அவர் செய்த விஷயம் சுத்தியிருக்கற யாருக்கும் தெரியாது. நாம செய்யறதை செய்துடலாம்" என்று கூறவும், "சரி வாங்கி தொலையறேன்" என்றான்.
அதனால் பூமாலை வாங்க சென்றான்.
அங்கே மாலை கட்டிக் கொண்டு இருந்தவரிடம், "அண்ணா... ரோஜா மாலை சின்னதா எதுவும் காணோம்." என்றார்.
"எல்லாம் பெருசு தான் விலைக்கு போகுது தம்பி. சின்னது கேட்டா செஞ்சு கொடுக்கறது தான்." என்றார்.
"அப்படியா... சின்னதா ரோஜா மாலை செய்யுங்க. ஒரு அரை மடி நேரத்துல வந்து வாங்கிக்கறேன்." என்று அகலும் நேரம், "ரொம்ப விலை சொல்லறியேப்பா." என்ற குரல் கேட்டது.
"யோவ் வாங்கினா வாங்கு இல்லை கிளம்புயா. காலையிலேயே வந்துட்ட.. இந்த மாலை பெருசு. ரேட்டு மட்டும் குறைவாவா இருக்கும்" என்றதற்கு, "காலையிலேயே அநியாயத்துக்கு விலையை கூட்டி சொன்னா எப்படிப்பா. எங்களுக்கும் பெரிய மாலை எவ்ளோ சின்னது எவ்ளோனு தெரியுமே" என்றதற்கு, "ஏங்க ஏதோ ஒரு மாலை வாங்கிட்டு வாங்க.. பேரம் பேசிட்டு" என்ற குரலை கேட்டு சாரதி திரும்பினான்.
அங்கே அலமேலு நின்றிருந்தார்.
சாரதி மாமியார் அலமேலுவை கண்டு மாமனாரை பார்த்தான்.
'ஆஹா.. லாவண்யா அப்பா புருஷோத்தமனா?' என்றவன், பக்கத்து பூக்கடைக்காரரிடம் "பூக்கார அண்ண... விலையை சரியா சொல்லுங்க. சுரேஷ் அண்ணன் வீட்டுக்கு தான் மாலை வாங்க வந்திருக்காங்க. இஷ்டத்துக்கு ரேட்டை ஏத்தறிங்களா.. நியாயமான ரேட் என்னவோ அதையே அங்க சொல்லுங்க" என்றான்.
"ஏன்பா... நீயே வியாபாரத்தை தடுத்துடுவ போல" என்று கூறினாலும் சாரதிக்கு தெரிந்தவர் என்பதால், சரியான விலையை கூறவும் புருஷோத்தமன் பணத்தை தந்துவிட்டு சாரதியை நன்றியுடன் பார்த்தார்.
"யார் தம்பி நீங்க. இதுக்கு முன்ன பார்த்ததில்லையே. சுரேஷுக்கு சொந்தமா" என்று புருஷோத்தமன் ஆரம்பிக்க, "ஏங்க நேரமாச்சு என்ன பேச்சு வாங்க" என்று கையை பிடித்து அழைத்து செல்ல, சாரதியோ சிரிப்புடன் பைக்கை உதைத்தான்.
"அவன் தாங்க அந்த பையன். லாவண்யாவை விரும்பறவன். நீங்க என்னடான்னா அவனிடமே பேசறிங்க" என்று அலமேலு கூற, புருஷோத்தமன் சாரதியை திரும்பி பார்த்தார்.
"ஏன்டி... போனமுறை அவளை விட்டுட்டு வந்து, அந்த பையன் கண்டெக்டர்னு சொன்ன? பார்த்தா அப்படி தெரிலையே" என்றார்.
"ஆமா... கண்டெக்டர்னா இப்படி தான் இருக்கும்னு ஏதாவது இருக்கா?
அந்த பையன் கண்டெக்டர் தான். ஆனா பி.காம் முடிச்சிட்டு அவங்க அப்பா நினைவா கண்டெக்டரா இருக்கானாம். அன்னிக்கே எல்லாம் சொன்னேனே." என்று லாவண்யா கூறிய காரணத்தை கூற புருஷோத்தமன் அலமேலுவோடு நடந்தபடி, "ஆமா ஆமா.. சொன்ன." என்றவர் சாரதியை நினைத்து பார்த்தார்.
"ஆமா.. லாவண்யா வர்றாளா? சொல்லிட்டியா என்ன?" என்றார்.
"வருவா.. வருவா. டெங்கு என்பதால நிதானமா கிளம்பி கார்ல வரச்சொன்னேன். மூன்று மணிக்கு தானே எடுக்கறாங்க. அவளுக்கு ரொம்ப முடியலைன்னா.. ஊருக்கு கூட்டிட்டு போய் பார்ப்போம்" என்றார்.
புருஷோத்தமன் அலமேலு நடக்க, பைக்கில் சாரதி முன்னே செல்வதை பார்த்தார்.
சாரதி இந்த இருவரிடமும் பணிந்து சென்று காதலை ஏற்கும் விதமாக யாசிக்கவும் இல்லை.
அவன் லாவண்யாவுக்கு போன் போட்டு, "எங்க இருக்கடி" என்றான் உரிமையாக.
"பாடி சரவணா வந்துட்டேன் சாரதி. மெயின் ரோட்ல வந்து மறுபடியும் ஆட்டோ ஏதாவது பிடிக்கணும். மெயின் ரோட் வரை தான் இந்த கார் வருமாம்." என்றாள்.
"ஏன் நேரா வீட்ல வந்து இறங்கலை" என்றதும், "இல்லைடா... இந்த கார் அவசரத்துல பெருசா புக் பண்ணிட்டேன். அதோட மெயின் ரோட் லேண்ட் மார்க் போட்டுடேன். கூடுதலா சொன்னா வரமாட்டேன்னு சொல்லிட்டார்." என்று லாவண்யா கூறவும், "உடம்பு சரியில்லைனு சொன்னியா?" என்றான்.
"கார்ல வாந்தி வரவும் நிறுத்தி எடுத்தேன். அதெல்லாம் அந்த அண்ணாவுக்கு தெரியும். ஆனாலும் கார் வராதுனு சொல்லிட்டார். இல்லைன்னா ரேட் அதிகமா கேட்கறார்" என்று கூறினாள்.
சாரதி சில வினாடி யோசித்தவன், "சரி நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்." என்றான்.
"வேண்டாம்.. அப்பா அம்மா ரிலேட்டிவ் எல்லாரும் இருப்பாங்க." என்று பதறினாள்.
"ரொம்ப பண்ணாத.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன். என் கூட வா" என்று கூறியவன் பைக்கில் மெயின் ரோட்டிற்கு மீண்டும் பறந்தான்.
லாவண்யாவோ இறங்கும் போதே எதிரில் சாரதி இருந்தான்.
டெங்கு என்றதால் சோர்வில் இருக்க, "சாரதி... தேவி வீட்டுக்கிட்ட இறங்கிக்கறேன்" என்று ஏறினாள்.
ஆனால் சாரதி தேவி வீட்டை தாண்டி, பைக்கை செலுத்த, "சாரதி வண்டியை நிறுத்து. எல்லாரும் பார்ப்பாங்கடா." என்று சட்டையை இறுக பிடிக்க, "ஏன்டி இறங்கி இரண்டு நட நடந்தாலே மயங்கற மாதிரி இருக்க. இதுல தேவி எல்லாம் அங்க இருக்கா.
இந்த நேரம் எல்லாரும் அங்க ரோட்ல உட்கார்ந்து இருப்பாங்க லாவண்யா. உன்னோட நான் சேர்ந்து இறங்கறது சரியா வரும்" என்று அழைத்து செல்ல, 'டெங்கு ஜூரம் வேற இருக்கு. நீ இந்த நேரம் அடிவாங்கி தர்ற.' என்று புலம்பியபடி இறங்கினாள்.
சாரதி கூறியது போல அவன் பைக் நின்றதும் பலரும் லாவண்யாவை காண, அலமேலு பல்லை கடித்து நின்றார். புருஷோத்தமனோ மகளை பஸ்பமாக்காத குறையாக பார்க்க, லாவண்யா சாரதி சட்டையை பிடித்து பின்னால் மறைந்தாள்.
சாரதி லாவண்யா கையை பிடித்து அழைத்து வந்து தேவியருகே விட்டுவிட்டு "இரண்டெட்டு நடந்தாலே சோர்ந்து போறாம்மா. பார்த்துக்கோ" என்றவன் அன்னையை தேடினான்.
வரும் போது ரோஜா மாலையும் வாங்கி வந்திட, அன்னை நின்றதை பார்த்து, அவரோடு சேர்ந்து ஆவுடையப்பனுக்கு போட்டு விட்டு ஓரமாய நின்றான்.
"அம்மா.. மாலை ஓகேவா?" என்று கேட்க, "மாலை ஓகே. ஆனா அவளோட ஏன்டா வந்த?" என்று அதட்டினார்.
"தெரியட்டும் அம்மா.." என்றான்.
லாவண்யாவுமே தாத்தாவை தொட்டு கும்பிட்டு முடிக்க, அலமேலு லாவண்யா கையை பிடித்து அவர் பக்கம் இழுத்துக் கொண்டார்.
சாரதி காஞ்சனா வெளியே வந்தார். தேவியின் அன்னையோடு காஞ்சனா பேச, சாரதி சரிகாவோடு பேசியபடி இருந்தான்.
"என்ன சாரதி தேவி பிரெண்டை லவ் பண்ணறியாம். தேவி இப்ப தான் சொன்னா." என்று கேட்க, சிரித்து மறுக்காமல் ஆமென்றான்.
சரிகாவிடம் சிரித்து பேச, அலமேலு சாரதியை தான் உற்று நோக்கி கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து தான் லாவண்யா தனியாக செல்ல துடிக்க, "ஒருயிடமா நில்லுடி. வர்றப்பவே ஜோடியா வர்றது. இதுல ரோட்ல ஒரிடமா நிற்கறதில்லை" என்று மெதுவாக கத்த, சாரதி வேகமாய் வந்து, லாவண்யாவை முன் தண்ணீரை தர வாந்தி எடுத்து முடித்திருந்தாள்.
அதன்பின்னே அலமேலு லாவண்யா கையை விட, "கையை விட்டா என்னவாம். இப்ப பாருங்க இங்கயே வாமிட் எடுத்துட்டேன். எப்ப பாரு பிடிச்சிக்கறது" என்று லாவண்யா எரிச்சலாய் நிற்க, "ஒன்னுமில்லை.. வாமிட் தானே எடுத்த. முதல்ல ரெப்பிரஷ் ஆகு" என்று அழைத்து வந்து முகம் வாயை துடைக்க சாரதி கைக்குட்டையை தந்தான். அதற்குள் இரண்டாவது முறையும் வாந்தி எடுத்து சாரதி உடையின் வலது புறம் துப்பியிருந்தாள்.
"சாரி சாரி சாரி சாரதி." என்று கூற, "இட்ஸ் ஓகே." என்று கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டு வாயை துடைத்து விட்டவன், நீரை குடிக்க கூறினான்.
தேவியோ "ஏன்டி வாந்தி எடுக்கறப்பவும் உஷாரு தான். உன் டிரஸை பாழ் பண்ணாம, அண்ணா டிரஸ்ல துப்பிட்ட. என்ன மாதுளையா சாப்பிட்டியா?" என்று சிரிக்க, அதற்குள் சாரதி வாந்தி எடுத்த இடம் ரோடாக இருந்தாலும் மண்ணை அள்ளிப்போட்டு, இஷிதாவிடம் தண்ணி வாங்கி, கை அலம்பி சட்டையை உதறினான்.
'அம்மா.. சாவி கொடு. டிரஸ் மாத்திட்டு வர்றேன்" என்று சாரதி செல்ல, மாலதியோ "யாருப்பா அவரு? நம்ம லாவண்யா வாந்தி எடுத்ததுக்கு மண்ணை அள்ளி போட்டுட்டு, அவர் டிரஸ்ல பாழ் ஆனாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம போறார்." என்று கேட்க, அலமேலு "அப்பறமா சொல்லறேன்" என்றார் கடுப்பாக.
"வர்றப்ப நான் கார்ல மசக்கை வாந்தி எடுத்துட்டேன் தெரியுமா. லேசா கார்ல பட்டுடுச்சு. அதுக்கு உன் மருமகன் லபோதிபோனு கத்திட்டார்.
லாவண்யாவுக்கு பார்த்த வரனா அம்மா." என்று தந்தை பேசாமல் சாரதியை பார்த்து நிற்கவும் தாயிடம் கேட்டாள்.
"கொஞ்சம் சும்மாயிருடி. அந்த மனுஷன் வேற இருக்கார்" என்று அலமேலு அதட்டினார்.
புருஷோத்தமனோ பெரிய மகள் கூறியதையும் அசைப் போட்டவராக, சாரதியை வந்ததிலிருந்து பார்த்து, அவன் செயலை நினைத்து, லாவண்யாவை பார்த்து நின்றார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 42)
அட.. லாவண்யாவை ஆஸ்டலுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களே என்கிற
ஏக்கத்துலயே தாத்தா போய் சேர்ந்துட்டாரோ...? போய் தொலையட்டும், இனி திரும்பவும் இலக்கியா சுரேஷ், லாவண்யாவை வீட்டுக்கு கூப்பிட்டுப்பாங்களோ ?
இந்த லாவண்யா என்ன ஆஸ்டலுக்குப் போன கொஞ்ச நாள்ல டெங்குவை வரவைச்சுக்கிட்டாளோ ?
ஆனால் இந்த சாரதிக்கு எங்கிருந்து இம்புட்டு தைரியம் வந்தது ? லாவண்யாவை பைக்ல கூட்டிட்டு வரான், அக்கறையா கவனிச்சுக்கிறான்., ஆனால், இந்த மாதிரி ஆட்டிட்யூட்லயே மாமனார் மெச்சிய மருமகனாகிடுவானோ ?
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
20 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
48 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
60 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
1 hour ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
2 hours ago
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
