Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 42

1 Posts
1 Users
0 Reactions
18 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#331]

அத்தியாயம் 42 

 

தன்னால் சிவன்யாவின் வாழ்க்கையில் பெரும் குழப்பமும் கஷ்டமும் வந்துவிட்டதை நினைத்து வருத்திக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார் விஸ்வநாதன். 

 

நளினியும் பார்வதியும் "என்ன ஆச்சு? சிவன்யா என்ன சொல்கிறாள்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். 

 

"உன் மகனுக்கு சிவன்யாவுடன் வாழ பிடிக்கவில்லையாம். அதனால் விவாகரத்து வேண்டுமாம்" என்று மட்டும் கூறினார். 

 

"என்னங்க சொல்றீங்க? நான் வேண்டும் என்றால் தேவ்விடம் பேசுகிறேன். நல்ல பொண்ணுங்க" என்று தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்று கணவனிடம் கேட்டார் பார்வதி. 

 

"நீ எதுவும் பேச வேண்டாம். அவன் முடிவு எடுத்து விட்டான், அவன் இஷ்டம் போல் இருக்கட்டும். நாம் வற்புறுத்தி சேர்த்து வைத்தாலும் அவர்கள் வாழ மாட்டார்கள். அதற்கு விவாகரத்து வாங்கி விட்டாலாவது, சிவன்யா வேறு கல்யாணம் முடித்து சந்தோஷமாக இருப்பாள்" என்று சொல்லிவிட்டு "நான் விவாகரத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன், விரைவில் விவாகரத்தும் கிடைத்துவிடும்" என்று சொல்லி வேலைக்கு கிளம்ப ஆயத்தம் ஆனார். 

 

நளினியும் பார்வதியும் அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றனர். நளினியின் கணவனோ அவளிடத்தில் "நானும் இப்பொழுது வேலைக்கு போகிறேன். சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டு போகிறேன்" என்று சொல்லிவிட்டு "எதைப்பற்றியும் யோசிக்காதீங்க அத்தை" என்று மாமியாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.  

 

ஆண்கள் இருவரும் பேசியதை கேட்ட பெண்கள் அதிர்ந்து நின்றனர். "என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே நளினி. இரண்டு பேரும் இப்படி சொல்லிட்டு போறாங்க. தேவ் ஏன் சிவனியாவை வேண்டாம் என்றான்? அவளை விட நல்ல பெண் அவனுக்கு கிடைக்குமா! ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை இப்படி கெடுத்துக் கொள்கிறான்?" என்று புலம்பியபடி அமர்ந்து விட்டார். 

 

நந்தினிக்கும் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. "கவலைப்படாதீங்க அம்மா, ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கும். அப்பா நம்மிடம் சொல்ல மறுக்கிறார் என்று நினைக்கிறேன். அவர்களை சேர்த்து வைத்தால், இருவரது வாழ்க்கையும் வீணாக போய்விடும் என்று அப்பா சொல்கிறார் அல்லவா? அதனால் இருவரும் பிரிவதே மேல் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நடப்பது நடக்கட்டும் அம்மா நீங்கள் கவலைப்படாதீர்கள்!" என்று தனக்கு தெரிந்த வகையில் தாய்க்கு ஆறுதல் கூறினாள். 

 

"நான் சிவன்யா கிட்ட இப்பவே பேசுறேன். என்ன நடந்ததுன்னு கேட்கிறேன்!" என்று ஃபோனை எடுத்தார். 

பள்ளிக்கூடம் செல்ல தயாராகி வந்த விஸ்வநாதன், மனைவி கையிலிருந்த ஃபோனை பிடுங்கி, "அவசரப்பட்டு சிவன்யாவிடம் பேசி அவளை சங்கடத்திற்கு உள்ளாக்காதே. கொஞ்சம் பொறுமையாக இருந்து. அந்தப் பிள்ளையின் நிலையும் யோசித்து பார், வேண்டாம் என்று சொன்னவுடன் வாழ முடியுமா? நான் சொல்வதை சொல்லிவிட்டேன். அதற்கு மேல் உன் இஷ்டம், என் சொல்பேச்சு கேட்டு நடப்பதும் நடக்காததும்" என்று சொல்லிவிட்டு ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டு வேகமாக வெளியேறினார். 

 

கணவன் கோபமாக சாப்பிடாமல் சென்றதும் பதட்டமான பார்வதி, "ஒரு நிமிஷம்ங்க, சாப்பிட்டு போங்க. நான் ஃபோன் பண்ண மாட்டேன்" என்று தான் செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவரை சாப்பிட வற்புறுத்தினார். 

 

அவர் சென்றதும் கணவன் சொன்னதை யோசித்தபடி அமர்ந்திருந்தார் பார்வதி. அவர் சாப்பிடாமல் இருந்ததால், நளினியும் சாப்பிடாமல் இருக்க வயிற்றுப் பிள்ளைக்காரி சாப்பிடாமல் இருக்க கூடாது என்று அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் உண்டார். 

 

"சிவன்யாவிடம் தானே பேசக்கூடாது என்று சொன்னார். நான் தேவ்க்கு ஃபோன் செய்து கேட்கவா?" என்று மகளிடம் கேட்டார் பார்வதி. 

 

"ம்மா, அப்பா கொஞ்ச நாள் அப்படியே விட சொல்லியிருக்கிறார்கள் இல்லையா? கொஞ்சம் பொறுமையாக தான் இருங்க அம்மா. எப்படியும் என்ன நடந்தது என்று அவர்கள் சொல்லத்தான் போகிறார்கள். அதற்குள் ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள்?" என்றார் தந்தையின் சொல் கேட்காமல் தமையனிடம் பேசி ஏதாவது பிரச்சனை தன் தாய் தந்தையருக்கு வந்து விடக்கூடாது என்று பயந்து. 

 

"இல்லை நளினி, எனக்கு மனசு ஆற மாட்டேன் என்கிறது. எவ்வளவு அருமையான பிள்ளை. அவளை போய் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறானே! என்று" வருத்தமாக சொல்லிக் கொண்ட, மகனுக்கு ஃபோன் செய்தார். 

 

ஆனால் தேவ் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் ஃபோன் செய்து களைத்து போய் அமர்ந்து விட்டார். "பேசினால் தானே நடந்தது என்று தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண முடியும்" என்றார் சோர்வாக. 

 

"விடுங்கம்மா, கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வரதானே செய்யும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னாலும் அவளுக்கு சிவன்யாவை நினைத்து கவலையாக தான் இருந்தது. வீட்டிற்கு சென்றதும் தன் கணவனிடம் கேட்டு அண்ணிக்கு ஃபோன் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டால் நளினி. 

 

அப்படியே நாள்கள் கடந்தது. சிறிது நாள் கழித்து பார்வதி சிவன்யாவுக்கு அழைத்து பேசினார். சாதாரணமாக பேசிய சிவன்யா அவரிடம் எதையும் சொல்லாமல் வைத்து விட்டாள். 

 

நளினி கணவனிடம் பேசிப் பேசி ஓரளவுக்கு விஷத்தை புரிந்து கொண்டாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை தாயிடம் சொல்ல முடியவில்லை. 

 

கேஸ் விஷயத்தை தவிர மற்றபடி தேவ் தந்தைக்கு ஃபோன் செய்வது இல்லை. அவன் நேரில் வர மறுத்து, என்ன சொல்ல வேண்டுமோ அதை ஃபோனிலேயே சொல்லி விவாகரத்து பெறுவதாக சொல்லி விட்டான். வக்கீலும் அதற்கு பர்மிஷன் வாங்கி அதை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார். 

 

சிவன்யாவை பார்ப்பதற்கு சென்னைக்கு நேரில் செல்ல வேண்டும் என்று கேட்ட பார்வதியையும் நளினியையும் விஸ்வநாதன் தடுத்துவிட்டார். 

 

வக்கீல் சொல்லும் நாள் விஸ்வநாதன் மட்டும் தான் சென்னைக்கு வருவார். இப்படியாக இரண்டு மூன்று தடவை கோர்ட்டுக்கு சென்று வந்தார். வழக்கு இன்று கடைசி ஹியரிங்க்கு வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும். 

 

நளினியும் பார்வதியும் விடாப்பிடியாக இன்று வருவேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்கள். காலையில் நேராக சிவன்யா வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார் பார்வதி. ஆனால் என்றைக்கு விவாகரத்திற்கு என்று முடிவு செய்தாரோ, அதன் பிறகு விஸ்வநாதன் சிவன்யாவின் வீட்டிற்கு வருவதில்லை. 

 

சென்னை வரும் பொழுதெல்லாம் ஹோட்டலில் தான் தங்குவார். அதுபோலவே இன்று தனக்கும் தன் மகளுக்கும் ஆக இரண்டு அறை எடுத்து அங்கு தான் அழைத்துச் சென்றார் மனைவியையும் மகளையும். 

 

"சிவன்யாவை நேரில் பார்த்து விடலாம் என்று வந்தால், இப்படி ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க" என்று கணவனிடம் வருத்தப்பட்ட பார்வதி வேகமாக குளித்து தயாரானார். 

 

அதே சுறுசுறுப்பு தான் நளினிடமும் இருந்தது. சீக்கிரம் தயாராகிவிட்டால் அண்ணி வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்தாள். பெண்கள் இருவரும் சீக்கிரம் குளித்து தயாராகி ஆண்கள் இருவரையும் அவசரப்படுத்தினர், சிவனியாவின் வீட்டிற்கு செல்லலாம் என்று. 

 

நளினியின் கணவனோ மாமா என்ன சொல்றாங்களோ அப்படித்தான் நடக்கணும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான். 

 

அனைவரும் தயாராகியதும் நேராக நீதிமன்ற வளாகத்திற்கு தான் அழைத்து வந்தார் விஸ்வநாதன். அது பெண்கள் இருவருக்கும் வருத்தமாக இருந்தாலும் சிவன்யாவை நேரில் பார்ப்பதற்காக ஆர்வமாகவே இருந்தனர். 

 

அங்கு வந்ததும் மருமகளைத்தான் தேடியது பார்வதியின் கண்கள். தூரத்தில் வேப்பமரத்தின் அடியில் இருந்த ஒரு கல்லில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்த சிவன்யா அவரது கண்களுக்கு தெரிந்தாள். வேகமாக அவள் இருப்பிடம் நோக்கி நடந்தார் பார்வதி. தன் ஒன்பது மாத வயிற்றை தூக்கிக் கொண்டு தாயின் வேகத்திற்கு இணை கொடுக்க முடியாமல் மெதுவாக அவர் சென்ற திசையை நோக்கி நடந்தாள் நளினி. 

 

"சிவன்யா" என்று சத்தமாக அழைத்தபடி ஓடி வந்த பார்வதியை கண்டு அதிர்ந்து எழுந்து நின்றாள் சிவன்யா. ஓடி வந்த வேகத்தில் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். 

இவ்வளவு நாள் மனதில் இருந்த குமுறலில் உடல் குலுங்கி அழுதார் பார்வதி. அவர் அழுததும் தன்னை சமாளித்துக் கொண்ட சிவன்யா, அவர் முதுகை ஆதரவாக தடவி "ரிலாக்ஸாக இருங்க ஆன்ட்டி" என்றாள். 

 

ஏற்கனவே சிவன்யா ஒல்லியாக தான் இருப்பாள். ஆனால் முகம் களையாக பொலிவுடன் எப்பொழுதும் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் இருப்பாள். ஆனால் இன்று முகத்தில் ஜீவனே இல்லாமல் இருப்பதை கண்டு தான் அழுதார் பார்வதி. 

 

"என்னம்மா இப்படி இருக்கிற? உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அவரும் சொல்லவில்லை. தேவ் இதுவரை என்னிடம் பேசவில்லை. உன்னிடம் எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். ஆனால் நீ ஏன் அம்மா இப்படி ஒளி இழந்து போய் இருக்கிறாய்? என்னால் இதை தாங்க முடியவில்லையே. இதற்கு காரணம் என் மகன் அல்லவா. 

 

ஒரு பெண்ணின் வாழ்க்கையை விளையாடிய ஒருவன் எனக்கு மகனே இல்லை. இனி அவனுடன் நான் பேசப் போவது இல்லை. அவன் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்று மட்டும் எனக்கு தெரிகிறது. அதனால் உன் வாழ்க்கை வீணாகிவிட்டது. அவனுக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் அம்மா. 

 

நாங்கள் அவசரப்பட்டு உன் வாழ்க்கையை கெடுத்து விட்டோம்" என்று கதறி அழுதபடி கைகூப்பி அவளிடம் மன்னிப்பு வேண்டினார் பார்வதி. 

 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 25, 2026 7:27 pm

Scroll to Top