Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-20

1 Posts
1 Users
0 Reactions
2 Views
(@praveena-thangaraj)
Posts: 184
Member Admin
Topic starter
 
[#250]

அத்தியாயம்–20

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும்... ருத்ரனால் புல்லட்டை நேராக ஓட்ட முடியவில்லை.

மனம் முழுக்க ஷ்ரத்தாவின் வார்த்தைகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

'நான் வாழ்ந்தாலும்... செத்தாலும்... சத்ரியனோட பொண்டாட்டி... மைண்ட் இட்...' அவள் அறைந்த கன்னத்தை விட, அந்த வார்த்தைகள் தான் அவனுக்கு அதிகமாக எரித்தது.

வீட்டின் முன் புல்லட் வந்து நின்ற சத்தம் கேட்டு கீர்த்தனா வாசலுக்கு ஓடி வந்தார்.

சில நாட்களாக மகனோடு மீண்டும் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தார். அவன் கல்யாணத்தைப் பற்றி பிடிவாதமாக இருந்தாலும், மகன் என்பதால் முற்றிலும் விலகியும் இருக்க முடியவில்லை.

ஆனால் இப்போது ருத்ரனின் முகத்தை பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

"என்னடா... என்னாச்சு?" என்று பதறி கேட்டார். ருத்ரன் சோர்வாக சோபாவில் அமர்ந்தான்.

"ஷ்ரத்தாவை பார்க்க போயிருந்தேன் மா..." என்ற ஒரே வார்த்தையில் கீர்த்தனாவின் முகம் சுருங்கியது.

"உனக்கு இதே வேலையா போச்சு?" என்று கோபப்பட நினைத்தவர், மகனின் உடைந்த முகத்தை பார்த்ததும் அமைதியாகி விட்டார்.

"என்னடா... ஏதோ மாதிரி இருக்க?" என்று மெதுவாக கேட்டார்.

ருத்ரன் வெறுமையாக சிரித்தான். "அவ... இன்னைக்கு ரிலீஸ் ஆகிட்டா அம்மா" என்றான். கீர்த்தனாவின் இதயம் ஒரு நொடி நின்றது.

'ரிலீஸ் ஆயிட்டாளா...? இனி என் பையன் மனசை மாத்திக்க யோசிப்பானே.‌ ஜெயில்ல இருந்தப்பவே சொல்லறதை மீறி போய் பார்த்தான்.' என்று பயத்துடன் நினைத்தார்.

ஆனால் ருத்ரனின் முகத்தில் இருந்த வேதனை அதை பொய்யாக்கியது. "அதுக்கும்... உன் கோலத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.

ருத்ரன் நடந்ததையெல்லாம் ஆரம்பத்திலிருந்து சொன்னான்.

இவன் சிறைக்கு சென்றது, அங்கே ஷ்ரத்தா இல்லை என்று தெரிந்தது. கார்த்திகாவிடம் கேட்டதும், அவள் ரிலீஸ் ஆனதால் யதுநந்தன் அவளை கூட்டிச் சென்றது.

திவாகர் வீட்டில் பார்த்தது, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

இறுதியில் "என் மேல அவளுக்கு கோபம். நல்ல அபிப்பிராயம் இல்லைம்மா. 

   யதுநந்தனிடம் மட்டும் அவ ரிலீஸ் ஆனதை சொல்லியிருக்க. அவனும் அவளை அழைச்சிட்டு போனதை வச்சி, உனக்கு என்னை பிடிக்கலை, அவனை தான் பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டேன்." என்றவன் கசப்பாக சிரித்தான். 

கீர்த்தனாவோ இதென்ன கோபப்படுத்தும் பேச்சாயிற்றே என்று மகனை பார்வையிட்டார்.

"அவ அதுக்கு என்னை அறைஞ்சிட்டா மா." என்றான். கீர்த்தனா அமைதியாக பார்த்தார். பின்ன வேறென்ன செய்வாளென்றது போல இருந்தது அன்னையின் பார்வை.

ருத்ரன் தலை குனிந்தான். 'அவளுக்கு... நான் எந்த அர்த்தத்துல அவளிடம் பழக முயற்சி பண்றேன்னு ரொம்ப நாளாவே தெரிஞ்சிருக்கும்மா.

அதனால தான்.. என்னை விட்டு ஒதுங்கி இருந்திருக்கா. நான் தான்... முட்டாள் மாதிரி... அவ இன்னும் என்னைப் பார்த்து பயந்து பேசுறான்னு... பதில் சொல்ல தடுமாறுறான்னு நினைச்சுட்டு.. அவ பின்னாடியே சுத்தியிருக்கேன்." என்று வருத்தமாய் உரைத்தான். 

  இதில் அவனை மறுத்ததையும் கூறினான். அதுவும் "அம்மா... உன் பையன்... ரிஜெக்டட் பீஸ் தெரியுமா?" கீர்த்தனாவின் கண்கள் கலங்கியது.

"ஒரு விடோ.. குழந்தை வேற... மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு சொன்ன... 

   நீ... ராயன் பெயர் வச்ச பிறகு.. அந்த குழந்தை முகத்தையே பார்க்க வரல. அதையும் அவ கண்டுபிடிச்சிட்டா. என்னை மொத்தமா ஒதுக்கிட்டா." என்று கூறியவன் நெஞ்சு விம்ம, "அதுவும்.. அவன் முன்னாடி... அந்த லாயர் யதுநந்தன் முன்னாடி அடி வாங்கிட்டேன்." என்று சுவரை நோக்கி ஓங்கி குத்தினான்.

"ருத்ரா...!" என்று கீர்த்தனா ஓடிவந்து தடுக்க முயன்றார். ஆனால் அவன் இன்னொரு முறை சுவரில் கையை குத்தினான். கைவிரல் முட்டிகளில் தோல் கிழிந்து. லேசாக ரத்தம் வழிந்தது.

"ஏன்டா...!" என்று அவனது கையை பிடித்து இழுத்து அமர வைத்தார். அவசரமாக முதலுதவி பெட்டியை எடுத்து வந்து ரத்தத்தை துடைத்து மருந்து போட்டார்.

மகனின் கையை பிடித்தபடியே, "ஏன்டா இப்படி பண்ற? நீ எனக்கு ஒரே பையன். இப்படி வலியும் வேதனையும் தர்ற காதல் உனக்கு தேவையா?

உனக்கு என்னடா குறை? நல்ல வேலையிருக்கு, சொந்த வீடு இருக்கு, நல்ல பேர் இருக்கு. ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறேன். அவளோட வாழுடா. ஷ்ரத்தா வேண்டாம்." என்றார்.

ருத்ரன் கண்களை மூடினான். "அம்மா... அந்த சத்ரியன் தான் செத்துட்டானே... அப்படியிருக்க... அவளும் ராயனும் தனியா இருக்கறப்ப... நான் அவங்க வாழ்க்கையில இடம் கேட்கறதுல என்ன தப்பு?" என்றான்.

கீர்த்தனா பெருமூச்சு விட்டார். "தப்பா சரியான்னு நான் சொல்ல வரலை. ஆனா விதவைக்கு வாழ்க்கை கொடுக்கறது, சொல்ற அளவுக்கு சுலபமில்லை.

இப்ப அவ மேல இருக்கற ஆசையில பேசுற. நாளைக்கு உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா, ராயன் உன் குழந்தை இல்லன்னு மனசு சொல்லும். நீயே சொல்லு ராயன் வளர்ந்த பிறகு அவன் அப்பா உன் அப்பாவை கொன்றவன்னு நினைவு வராதா?

இந்த காயம் எப்பவும் இருக்கும் ருத்ரா. அதனாலதான். இந்த காதல் வேண்டாம்னு சொல்றேன்." என்று எடுத்துரைக்க ருத்ரன் தலையை குனிந்தான்.

"அம்மா... உனக்கு சொன்னா புரியலம்மா." என்று மட்டும் சொன்னான். சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு திடீரென்று, "உன்னைப் பத்தி கூட கேட்டா. நீ வராததே... அவளுக்கு டவுட் ஆகியிருக்கு." என்றான்.

கீர்த்தனா அமைதியாக அவனை பார்த்தார்.

"நீயே சொல்லும்மா... ஏன் அவளை ஏத்துக்க யோசிக்கிற? குழந்தை ராயனை கூட பார்க்க வரல. அவனை நீதானே முதல்ல கையில வாங்கின. நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும்... மொத்தமா அவங்களையே ஒதுக்கிட்ட." என்று கேட்டான்.

கீர்த்தனா மெதுவாக தலையசைத்தார்.

"நான்... அப்பாவை கொன்றவனோட பொண்டாட்டின்னு  பார்க்கலைடா. அதனால இந்த கல்யாணத்தை தடுக்கலை. 

அவ மனசுல இன்னும் சத்ரியன் தான் இருக்கான். அந்த இடத்துல... நீ போய் நின்னா... நீயும் கஷ்டப்படுவ. அவளையும் கஷ்டப்படுத்துவ." என்றார்.

ருத்ரன் அமைதியாக இருந்தான். ஏனோ அன்னை இந்தளவு பேசியதே மனதில் ஆறுதலளித்தது. 

சில நொடிகள் கழித்து மீண்டும் பேசினான். "அவ இப்ப எங்க இருக்கா தெரியுமா? அவ அப்பா வீட்டுல. அந்த யதுநந்தன் தான் கூட்டிட்டு போய் விட்டிருக்கான்." என்றான். 

கீர்த்தனா சாதாரணமாக "அதுக்கு?" என்று கேட்டார்.

"அவனுக்கும் ஷ்ரத்தா மேல விருப்பம் இருக்கு அம்மா'' என்றான்.

கீர்த்தனா அதிர்ச்சியடைந்தார். "என்னடா சொல்ற?" என்றார்

"ஆமா. ஒரு ஆம்பளையோட  பார்வையை இன்னொரு ஆணால அர்த்தம் புரிந்துக்க முடியும். அவன் பார்வையே வேற மாதிரி இருந்துச்சு.

அவனும் ஷ்ரத்தாவை காதலிக்கிறான். இன்னும் அவளுக்கு அது புரியலை. புரியலையா இல்லை நழுவறாளா தெரியலை" என்று புலம்பினான்.

கீர்த்தனா நெற்றியை பிடித்துக் கொண்டார்.

பிறகு மகனை பார்த்து, "முதல்ல போய் டிரஸ் மாத்து. குளிச்சிட்டு வா. இந்த பிரச்சனையே முன்னாடியே முடியணும்னு நினைச்சேன். இன்னைக்கு அவளுக்கும் உன் மனசு தெரிஞ்சிடுச்சு. இனிமேலாவது அவளை நிம்மதியா வாழ விடு." என்று கண்டித்தார்.

ருத்ரன் எரிச்சலோடு கையை உதறிவிட்டு அறைக்குள் சென்றான். இத்தரை நேரம் பேசியும், அன்னைக்கு தன் காதல் புரியவில்லையே என்ற கடுப்பு. 

அதே நேரம்... யதுநந்தன் தனது வீட்டிற்கு வந்திருந்தான்.

உடை மாற்றியும்... மனம் மட்டும் அமைதியாகவில்லை. பால்கனியில் நின்றபடி. மீண்டும் மீண்டும் ஒரே காட்சி நினைவுக்கு வந்தது. அது ருத்ரனை பற்றி அல்ல.. 

சத்ரியனின் புகைப்படத்திற்கு மாலை போட முயன்றபோது, பதறியபடி ஓடி வந்து தடுத்த ஷ்ரத்தா. "யது சார்... சத்ரியன் போட்டோவுக்கு மாலை போடாதீங்க... அந்த பதற்றம்... அவள் குரலில் இருந்த நடுக்கம்... எல்லாமே அவன் நினைவில் சுற்றிக் கொண்டே இருந்தது.

'ஷ்ரத்தா... இன்னும் சத்ரியன் உயிரோட இருக்கிறான்னு நம்பறாளா? இல்ல... அவனை மனசால விட முடியாம தவிக்கறாளா?' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அவனுமே சில குழப்பத்தில் தான் அவசரம் காட்டாமல் ஷ்ரத்தாவிடம் பழகுகின்றான். ருத்ரனை போல சட்டென உணர்வை பிரதிபலிக்காமல் நாசூக்காய் இருக்கின்றான் வக்கீல்.

இதில் ருத்ரன் தன்னையும் ஷ்ரத்தாவையும் இணைத்து பேசியும் அமைதிக்காக்க, வேண்டியதாக நிலைமை. 

திவாகர் வீட்டில்... பல வருடங்களுக்குப் பிறகு, வீட்டை வட்டமடித்து ஓய்ந்த ஷ்ரத்தா, மகனிடம் தாத்தா போட்டோ காட்டி பேசினாள். 

   லாயர் திவாகர் தாத்தா. தாத்தா சொல்லு ரியன். ரியன் தாத்தா சொல்லு" என்று கெஞ்ச, "சத்ரியன் அப்பா. அப்பா" என்று அவன் தந்தையை தான் கேட்டான் குழந்தை. 

   மகன் ராயன் கணவனை கேட்டதும், அழுது அழுது களைத்துப் போனாள் ஷ்ரத்தா.  ராயனை மார்போடு அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

வெளியே... பெண் கைதிகளாக இருந்த தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் மாறி மாறி இரவு காவலில் இருந்தனர்.

"மேம் நிம்மதியா தூங்குங்க நாங்க பார்த்துக்கறோம்." என்று வாஞ்சையாக உறங்க கூறினார்கள். தனது பாதுகாப்பிற்காக கார்த்திகா அனுப்பியிருக்க மாட்டாள். இதுவும் சத்ரியன் ஏற்கனவே திட்டமிட்டது அல்லவா!?

  ருத்ரனை அடித்தாலும், அதிகம் பேசி அவனை விரட்டியதும் எல்லாத்தை விட, அந்த இரவு ஷ்ரத்தா நிம்மதியாக தூங்கினாள். அவளுக்கு அவளது கூட்டில் வந்துவிட்ட நிறைவு உண்டானது. 

  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஷ்ரத்தாவின் முகத்தில் திடீரென ஒரு மென்மையான காற்று வருடியது போல உணர்ந்தாள்.

மங்கலான வெளிச்சத்தில் அவள் கண்முன் நின்றான் சத்ரியன்.

அந்த முகம், அந்த பார்வை, அந்த சிரிப்பு எல்லாமே அவள் இதயத்தை ஒரு நொடி நிறுத்தியது.

"சத்ரியன்..." என்று அவள் உதடுகள் நடுங்கின. அவன் பதில் சொல்லவில்லை.

மெதுவாக ராயனின் அருகே குனிந்தான். தூக்கத்தில் சின்னதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

அந்த ஒரு முத்தத்தில் ராயனின் முகம் சாந்தமாகியது.

பிறகு சத்ரியன் ஷ்ரத்தாவை நோக்கி திரும்பினான்.

அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "நீ... நீ வந்துட்டியா?" என்று அவள் குரல் உடைந்தது.

அவன் ஒன்றும் பேசாமல் அவளை நோக்கி கைகளை நீட்டினான்.

அடுத்த நொடியே ஷ்ரத்தா அவன் மார்பில் விழுந்தாள். அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஏனோ பல யூகங்கள் பிரிந்தவர்களாக கட்டிக்கொண்டார்கள். 

அவள் சுமந்த பயம், வேதனை, ஏக்கம் எல்லாமே கரைந்து போனது போல இருந்தது.

"நான் இங்க தான் இருக்கேன், ஷ்ரத்தா..." என்று அவன் மெதுவாக அவள் செவிமடலில் சொன்னான். அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

"என்னை விட்டு போயிடாதீங்க... ப்ளீஸ்..." என்று கண்ணீர் வழிய கேட்டாள். சத்ரியன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, "இனி உன்னையும் ராயனையும் விட்டு எங்கும் போக மாட்டேன். நான் இங்க தான் இருக்கேன். எப்பவும் உங்களோட தான் இருப்பேன்" என்று உறுதியாக சொன்னான்.

அந்த வார்த்தைகள் அவள் மனதுக்குள் ஆறுதலாக இறங்கின. ஷ்ரத்தா அவன் முகத்தைத் தொட்டு பார்த்தாள்.

ஆனால் அடுத்த கணமே.. அவன் உருவம் மெல்ல மங்கத் தொடங்கியது. "சத்ரியன்... சத்ரியா.. சத்ரியா" என்று அவள் பதறினாள். அவன் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தான். "நான் இங்க தான் இருக்கேன்..." என்றவன் குரல் தூரத்திலிருந்து வருவது போல மெல்ல மங்கியது.

ஷ்ரத்தா அவனை இறுக்கமாக பிடிக்க முயன்றாள். ஆனால் அவள் கைகளுக்குள் இருந்த சத்ரியன் மெதுவாக காற்றில் கரைந்து, ஒளியாக மாறி, கனவாகவே மறைந்தான்.

"சத்ரியன்... வேண்டாம்... போயிடாதிங்க..." என்று அவள் உறக்கத்தில் இருத்து எழுந்து அழைத்தாள்.

கனவு.. என்றதும் ஷ்ரத்தா கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தலையணையில் விழுந்தது.

ஷ்ரத்தா திடுக்கிட்டு விழித்தாள்.

மார்பில் இன்னும் அந்த அணைப்பின் சூடு இருந்தது. நெற்றியில் இன்னும் அந்த முத்தத்தின் நினைவு இருந்தது.

ஆனால் அவள் முன்... சத்ரியன் இல்லை. அது கனவு மட்டுமே... நிஜமாக இருந்தால் சத்ரியன் இப்படி பார்த்து ரசிப்பானா? தன்னை வெறிக்கொண்டு அணைத்து தீர்க்க மாட்டான். தான் கண் விழித்தால் மறைந்து போவானா? மாட்டான்...

அவன் கண் விழித்தால் கட்டிபிடித்து முத்தங்களால் தன்னை குளிக்க வைத்திருப்பான் என்று புரிய கனவை எண்ணி குலுங்கி அழுதாள். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 

 

 


 
Posted : July 30, 2026 6:37 am

Scroll to Top