Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-26

7 Posts
7 Users
1 Reactions
99 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#371]

அத்தியாயம்-26

சாரதிக்கு 'தான் விடுமுறை எடுத்ததை முத்து அண்ணாவால் அன்னை காஞ்சனாவுக்கு தெரிந்துவிட்டது' என்பது வரை புரிந்துவிட்டது. இதில் பொய் சொல்லி ஊர் சுத்த சென்றதாக மட்டுமே அன்னை முகம் தூக்கி வைத்ததாக நினைத்தான். 

அதற்குமேல் காஞ்சனா நேரடியாகத் அவனிடம் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவனும் அன்னையிடம் மூச்சுவிடவில்லை.

எப்பொழுதும் போலவே எழுந்து வேலைக்குத் தயாரானான்.

காஞ்சனா டீயும் சாப்பாடும் செய்து வைத்திருந்தார். ஆனால் வழக்கமாக மகனை எழுப்பும்போது, 'கண்ணா... ராஜா... சாரதி...' என்று அன்போடு அழைக்கும் அந்தக் குரல் இன்று இல்லை.

சாப்பாடை எடுத்து வந்து வைத்திருந்தாலும், வார்த்தைகள் மட்டும் அவருக்குள் சிக்கிக் கொண்டிருந்தன.

சாரதியும் அதை உணர்ந்தான்.

அன்னையின் கோபத்தைவிட, அந்த அமைதிதான் அவனுக்கு அதிகமாக வலித்தது.

எதுவும் பேசாமல் டீயைக் குடித்தான். சாப்பாட்டை எடுத்துக் கொண்டவன்,

''போயிட்டு வர்றேன்மா." என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

வாசலைத் தாண்டி அவன் செல்லும் பைக் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, காஞ்சனாவால் அதற்கு மேல் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை.

அவர் உடைந்து போனார். 'பையன் காதலிக்கறான். அதனால தான் வேலைக்கு லீவு போட்டிருக்கான். இதுல என்னிடமே பொய் சொல்லிட்டான்.

இப்ப... எனக்கு அவன் லீவு போட்டது தெரிஞ்சிருக்கு, நான் அவன்கிட்ட பேசாம இருக்கறதும் அவனுக்குப் புரிஞ்சிருக்கு. அதையும் புரிஞ்சுக்கிட்டு எதுவும் பேசாம போயிட்டானே.' என்று கணவர் சண்முகத்தின் புகைப்படத்தைப் பார்த்தபடி வேதனையாகக் கூறினார்.

"நீங்க இருந்திருந்தா... இந்தப் பையனை இப்படித் தனியா சமாளிக்க வேண்டியிருக்காதுல்ல."என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

அதே நேரம் சாரதியும் மனம் சரியில்லாமல் தான் டிப்போவுக்கு வந்தான்.

அவனைப் பார்த்த முத்து அண்ணா, "என்ன சாரதி... இன்னும் உடம்பு சரியில்லையா? முகமே வாடிக் கிடக்கு?"என்று கேட்டார்.

சாரதி சிரிக்க முயன்றான். ஆனால் அந்தச் சிரிப்பு முகத்தில் தங்கவே இல்லை.

'உண்மையிலேயே உடம்பும் மனசும் சரியில்லாத மாதிரிதான் இருக்கு...' என்று தனக்குள் துவண்டான். அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் லாவண்யா.

அவளோடு பேசினாலே மனதுக்குள் இருந்த பாரம் கொஞ்சம் குறைந்துவிடும்.

அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

சிறிது நேரத்திலேயே பதிலும் வந்தது. "ஊர்ல கல்யாண வேலை இருக்கு சாரதி. நான் கல்யாணம் முடியுற வரைக்கும் கொஞ்சமாதான் பேசுவேன். நீ ரிப்ளை வரலைன்னு பதறாத. அப்பறம்... பார்த்து மெசேஜ் பண்ணு. உனக்குச் சொல்ல வேண்டியதில்லை." அவளது மெசேஜைப் படித்ததும் சாரதியின் முகத்தில் சிறிய புன்னகை வந்தது.

"ஏய்... நல்லபடியா உங்கக்கா கல்யாணம் முடிச்சு ஃப்ரீ ஆகு. அப்பறம் ரிலாக்ஸா பேசலாம். அங்க போன் பேசி மாட்டிக்காத."என்று அவளுக்கு பதில் அனுப்பினான்.

மாலதி திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்ததால், வீட்டில் வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் குவிந்துக் கொண்டிருந்தன.

பியூட்டிஷனிடம் பேசுவது, வாடகை நகைகளுக்கான அலங்காரம் பார்ப்பது, திருமணத்துக்கான சிறுசிறு பொருட்கள் வாங்குவது என்று லாவண்யாவுக்கும் ஓய்வே இல்லை.

மாலதி கொடுத்திருந்த பிளவுஸ்களில் ஆரி வேலைப்பாடுகள் செய்ய வேண்டி கொடுத்திருக்க, அதை வாங்க அதற்காகவும் வெளியே சென்று வந்தாள்.

அம்மா, அப்பாவுடன் பாத்திரம், பண்டம், பர்னிச்சர் என்று வாங்க அலைய வேண்டியிருந்தது.மாலதியுடன் இருந்து அவளுக்குத் தேவையானவற்றைச் செய்துக் கொடுத்தாள்.

கூடுதலாக இஷிதாவுடன் பைக்கை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி நேரம் ஓட்டுவதும் இருந்தது. அதனால் லாவண்யா உண்மையிலேயே பிஸியாக இருந்தாள்.

ஆனால் அவளுக்குக் கிடைக்கும் அந்தச் சிறு இடைவெளியில்கூட சாரதியை மறக்கவில்லை.

அவளிடமிருந்து வரும் ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் சாரதி, தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதையே மறந்துபோய் தனியாக நின்று படித்துச் சிரிப்பான்.

சில நேரம் டிப்போவில் யாராவது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் சட்டென முகத்தைச் சீராக்கிக் கொள்வான்.

ஆனால் போனில் அவளது பெயர் தெரிந்துவிட்டால், அந்தச் சிரிப்பை மறைப்பது மட்டும் அவனால் முடியவில்லை.

இப்படியே இரண்டு நாட்கள் கடந்தன.

ஆனால் காஞ்சனாவின் மனக்கசப்பு மட்டும் குறையவில்லை. இரண்டு நாட்களாக சரியாகச் சாப்பிடாமல், இரவு நேரத்திலும் உணவைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த சாரதியால் மனம் கேட்கவில்லை.

"அம்மா... ஏன்மா சாப்பிட மாட்டேங்கற?" என்று கேட்டான்.

காஞ்சனா அவனைப் பார்க்காமலேயே, "நான் சாப்பிட்டா என்ன, சாப்பிடலைன்னா உனக்கென்ன? உன் வேலையைப் பாரு." என்றார்.

அந்த வார்த்தை சாரதியின் நெஞ்சைத் தாக்கியது.

"ஏன்மா... இப்படி பேசற?" என்று வேதனையாகக் கேட்டான்.

"ஏன் பேசக்கூடாதா?" என்று திரும்பிப் பார்த்தவர், கண்களில் இருந்த கண்ணீரை மறைக்க முடியாமல்,

"உங்கப்பா ஜம்முனு டிக்கெட் வாங்கிட்டார். நான் இங்க அல்லாடறேன். எனக்கும் உங்கப்பா கூடவே போகணும்னு ஆசை வந்துடுச்சு. நீங்க வளர்ந்துட்டிங்க. உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு." என்றார். அவரும் இரண்டு மூன்று நாட்களாய் மனதில் படும் அவஸ்தையால், இனியும் தாங்கயியலாது வார்த்தையில் கொட்டினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட சாரதியின் மனம் இறுகியது.

இன்று எப்படியாவது அன்னையிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துத் தான் அவன் வந்திருந்தான்.

அதற்காக ஏற்கனவே ஒரு நம்பிக்கைக்குரிய பொய்யையும் தயாராக வைத்திருந்தான்.

"அம்மா... அன்னிக்கு லீவு போட்டுட்டேன். அதுக்குத் தானே என்னிடம் பேச மாட்டேங்கற?"என்று மெதுவாக ஆரம்பித்தான்.

காஞ்சனா எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார்.

"அன்னிக்கு லோக்கல்ல புட்பால் மேட்ச் நடந்துச்சு, பார்க்கப் போனேன் மா. உன்கிட்ட சொன்னா, என்னால புட்பால் ஆட முடியலைன்னு நீ வருத்தப்படுவியேனு... நானா தான் சொல்லாம போயிட்டு வந்தேன்." என்றான்.

காஞ்சனா அதிர்ந்து போனார்.

"நீ புட்பால் விளையாடப் போனியா?" என்றார் அதிர்ச்சியாக. 

"இல்லை... பார்க்கப் போனேன்."என்றான் சாரதி.

மகன் இப்படியொரு காரணத்தைக் கூறுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

'அப்படின்னா... நான் இவனைப் பற்றி தப்பா நினைச்சுட்டேனா?'என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. ஆனால் அடுத்த நொடியே அவரது நினைவில் அந்தச் சுடிதார் கவர் வந்தது.

"அப்ப அந்த கவர் யாருக்கு?"என்று கேட்டவர், "அதுல இருந்த சுடிதார் யாருக்கு?" என்றார்.

சாரதி அதிர்ந்தான். அம்மா லாவண்யாவுக்கு வாங்கிய உடையை கவனித்துவிட்டாரா என்ற பயம், ஒரு நொடியில் அவனை ஆட்கொண்டது.

உடனே சமாளித்தான். "என்ன கவர்மா? என்ன சுடிதார்?" என்று ஒன்றும் தெரியாதவனைப் போலக் கேட்டான்.

காஞ்சனா வேகமாக சாரதியின் கப்போர்டைத் திறந்தார்.

அன்று பார்த்த அந்தச் சுடிதார் கவர் அங்கே இல்லை.

துணிமணிகளை ஒவ்வொன்றாக அலசியவர்,

'அன்னிக்கு இங்க தானே அந்தக் கவரைப் பார்த்தேன்' என்று குழம்பினார்.

அதே நேரம் சாரதியின் மனதில் ''நல்லவேளை... அன்னிக்கு அம்மா கிச்சன்ல இருந்தாங்க. கவரை எடுத்துட்டு அன்னிக்கே லாவண்யாகிட்ட கொடுத்துட்டேன்.

ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்ததும் தர நினைச்சிருந்தேன். நல்லவேளை... வகையா மாட்டியிருப்பேன்.' என்ற நிம்மதி வந்தது.

"என்னதும்மா தேடற? என்று கேட்டவன், அன்னையைத் திசைதிருப்பும் விதமாக,

"சுடிதார் கவர் உன்னோட தையல் மெஷின் ரூம்ல தான் செல்ஃப்ல இருக்கும்மா. என்னோடதுல தேடற? நான் என்னோட ஷூ வைக்கத்தான் கவர் வச்சிருக்கேன்." என்று கூறியபடி, புட்பால் விளையாடும்போது அணியும் ஷூவை எடுத்துக் காட்டினான்.

அது அட்டைப்பெட்டியிலிருந்து கவரில் சுற்றப்பட்டு செல்ஃபில் இருந்தது. 

காஞ்சனாவுக்கு நொடியில் குழப்பம். 'அன்னிக்கு பார்த்தேனே... இன்று இல்லையே.' என்று யோசித்தார்.

சாரதி அதற்குள், "ஏன்மா... புட்பால் பார்க்கப் போனது தப்பா? என்னால ஆட முடியாது. அட்லீஸ்ட் என் ஃபிரெண்ட்ஸ் கூப்பிட்டதும் போனேன். உன்கிட்ட சொல்லாம போனது தப்புதான்." என்று வருந்தினான்.

மகன் முகம் வாடிப் பேசுவதைப் பார்த்த காஞ்சனாவுக்கே குற்றவுணர்வு தோன்றியது. 

"இல்லை... அது..." என்று தடுமாறியவர், "அன்னிக்கு விளையாட்டைப் பார்க்கத்தான் போனியா?" என்று மீண்டும் கேட்டார்.

"ஆமாம்மா. உன்கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு நினைச்சேன். ஆனா நீ போகச் சொல்வ.. பீல் பண்ணுவியேனு சொல்லாம போனேன். ஏன்மா... பொய் சொன்னதால என் மேல பேச மாட்டேங்கறியா? தப்பு பண்ணிட்டேன்னா சாரி கேட்கவா?" என்று கேட்டான்.

காஞ்சனாவின் மனம் மேலும் இளகியது. "அதெல்லாம் வேண்டாம்டா." என்று மறுத்தவர், சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'அந்த கவரு... துணின்னு... அதை பார்த்து நான்.' என்று சொல்லாமல் நிறுத்திக்கொண்டார்.

சாரதி உடனே, "தைக்க வந்த துணில ஏதாவது என் ரூம்ல வச்சி ஏதாவது காணாம போச்சா அம்மா?" என்று கேட்டான்.

காஞ்சனா அவனைப் பார்த்தார்.

'ஆமாம்... ஒரு சுடிதார் இருந்தது. உன்னை சந்தேகப்பட்டேன். நீ யாரையாவது காதலிக்கறாயா?'ன்னு கேட்க மனம் வந்தது.

ஆனால் வார்த்தைகள் வெளியே வரவில்லை. 'அவன் காதலிக்காம இருந்தா? அப்படிக் கேட்டு அவன் மனசை நானே கஷ்டப்படுத்திடுவோமே.' என்ற எண்ணம் அவரைத் தடுத்தது.

குழப்பத்தில் தத்தளித்த காஞ்சனா, "சாரிடா... ஏதேதோ குழப்பம். இப்ப நிறைய முகூர்த்த நேரம் பாரு... சேலை, சுடிதார் கவர்னு கண்ணுல தெரியுது.

நீ லீவு போட்டதா முத்து அண்ணா சொல்லவும் மனசு பக்குனு ஆச்சு. நீ வேற மறைக்கறியா... அம்மாவுக்கு மனசு ஆறலை. புட்பால் கோச்சிங் தான் போனியா?" என்று கேட்டார்.

"ஆமாம்மா.' என்றான் சாரதி.

அந்த ஒரு பதிலில் காஞ்சனாவின் மனம் கொஞ்சம் சமாதானமானது.

"சரி... நீ சாப்பிட்டியா? அந்த பாக்ஸ்ல நொறுக்குத்தீனி, சீவல் செஞ்சிருக்கேன் பாரு. எடுத்து சாப்பிடு போ." என்றார்.

''இப்ப பசிக்கலைம்மா. அப்பறம் சாப்பிடறேன்." என்று கூறிவிட்டு சாரதி எழுந்துக் கொண்டான்.

தனது அறைக்குள் வந்தவன் கதவைச் சாத்திவிட்டு சில நொடிகள் அப்படியே நின்றான்.

அன்னையிடம் சொல்லிய பொய் அவனது மனதை அழுத்தியது.

இதற்கு முன் சாரதி பொய் பேசியதே இல்லை என்று இல்லை. கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, கோச்சிங் செல்வதாகக் கூறி கல்லூரிக்குச் சென்றதாக பலமுறை சொல்லியிருக்கிறான்.

அதையெல்லாம் தந்தை சண்முகம் வந்து அன்னையிடம் கூறும்போது கூட, காஞ்சனா இவ்வளவு மனம் உடைந்ததில்லை. ஆனால் இன்று தன்னுடைய காதலை மறைக்க, அன்னையையே குழப்பி விட்டிருக்கிறான்.

தன்னைப் பற்றித் தவறாக எண்ணியதாக அன்னையையே குற்றவுணர்வில் தள்ள வைத்திருக்கிறான்.

கண்ணாடி முன் சென்று நின்றவன், தன் முகத்தையே பார்த்தான்.

அந்த முகம் அவனுக்கே பிடிக்கவில்லை. 'காதல் வந்தால் பொய் வரும்' என்று எங்கோ கேள்விப்பட்டிருந்தான்.

காதலில் விழுந்தவர்கள் தங்களுக்குப் பிடித்தவரை காப்பாற்றவும், தங்கள் காதலை மறைக்கவும் சகஜமாகப் பொய் சொல்ல நேரிடும் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறான்.

ஆனால்... அது தனக்கு இவ்வளவு வலிக்கும் என்று அவன் நினைத்ததில்லை.

ஆனாலும் இப்போதே அன்னையிடம் சொல்லிவிட முடியாது. லாவண்யா பைனல் இயரில் இருந்தாலாவது பரவாயில்லை.

அவள் இப்போதுதான் முதலாண்டை முடிக்கப் போகிறாள்.

இந்த நேரத்தில் லாவண்யாவைப் பற்றி அன்னையிடம் அறிவிக்காமல் இருப்பதுதான் நல்லது.

ஆனாலும்... இந்த மூன்று மாதங்களாக அவன் காதலை மறைத்துக்கொண்டே நடித்திருக்கிறானே!

'முதலில் இதைப் பெரிதாக்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும் காதலிக்காதவர்கள் உலகில் உண்டா? அல்லது காதலிப்பதை வீட்டில் பொசுக்கென சொல்ல தான் முடியுமா?.' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

கடந்த இரண்டு நாட்களாக அன்னை தன்னிடம் பேசாமல் இருந்ததே அவனுக்கு இவ்வளவு வலித்தது.

இதில் தான் காதலிப்பது தெரிந்துவிட்டால் இன்னொரு புதிய பிரச்சனை முளைக்குமா?

எதுவாயினும், பிரச்சனை கொஞ்ச காலம் கழித்து வந்தால் நல்லது என்று முடிவெடுத்தான்.

அதன்பிறகு வெளியே வந்தவன், அன்னையுடன் ஹாலில் அமர்ந்து படம் பார்க்கத் தொடங்கினான்.

காஞ்சனா ஜாக்கெட் பிளவுஸுக்குக் கொக்கி தைத்தபடியே மகனை அடிக்கடி கவனித்தார்.

காதலில் விழுந்தவர்கள் போனை தங்கள் உயிரைப் போல வைத்திருப்பார்கள் என்று அவர் நினைத்திருந்தார்.

ஆனால் சாரதியோ போனை டிவியின் பக்கத்தில் வைத்துவிட்டு, காலை ஆட்டியபடி டிவியில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனால் காஞ்சனாவின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

இன்று மட்டுமல்ல... கடந்த இரண்டு நாட்களாகவே சாரதி துள்ளலாகக் கிளம்பி வேலைக்குச் செல்கிறான். மாலை வந்ததும் உடை மாற்றிக்கொண்டு டிவியில் மூழ்கிவிடுகிறான்.

இதில் டிவியில் பிகில் படம் வேறு ஓடிக்கொண்டிருந்தது.

புட்பால் சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், நகைச்சுவையாகவும் இருந்ததாலும் சாரதி அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மகனைப் பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனா,

"ஏன் சாரதி... புட்பால் கோச்சிங் வேண்டும்னா மறுபடியும் போறியா?" என்று கேட்டார்.

சாரதி டிவியிலிருந்து பார்வையை விலக்காமல்,

"அம்மா... அதுக்கு நேரம் செலவழிக்க முடியாதும்மா. எல்லாரும் பிராக்டிஸ் வர்ற டைமுக்கு என்னால போக முடியாது. அதோட என்னால கண்டெக்டர் வேலையை விட முடியாது. ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா."என்றான்.

காஞ்சனா கவலை தோய்ந்த முகத்தோடு மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அதே நேரம் வேலூரில்...மாலதியின் ரிசப்ஷனுக்காக லாவண்யா லெஹங்காவை தாவணி முறையில் கட்டியிருந்தாள்.

கூந்தலை அழகாகச் சீரமைத்து, கண்களுக்கு மையிட்டு, உதட்டில் லேசான சாயம் பூசி, கண்ணாடி முன் நின்றவள் தன்னைத்தானே ஒருமுறை பார்த்தாள்.

அக்காவின் திருமண சந்தோஷம் முகத்தில் இருந்தாலும், அவளது நினைவின் ஒரு மூலையில் சாரதி இருந்துகொண்டே இருந்தான்.

அதனால் புகைப்படம் எடுத்ததும், அதை முதலில் அனுப்ப நினைத்தது அவனுக்குத்தான்.

புகைப்படத்தை அனுப்பிய சில நொடிகளில்...

"டிங்ங்!' என்று சாரதியின் போனில் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டது.

அவன் டிவியை மாற்றிவிட்டு நிதானமாக போனை எடுத்தான்.

திரையில் லாவண்யாவின் புகைப்படம் தெரிந்த அடுத்த நொடி அவனது கண்கள் விரிந்தன.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவனது முகம் சட்டென மலர்ந்தது.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடியே சில நொடிகள் அசையாமல் நின்றான்.

அன்னை எதிரே இருக்கிறார். தன் முகத்தில் பிரதிபலிக்கும் இந்த உணர்வை அவர் பார்த்துவிட்டால் கண்டுபிடித்துவிடுவார்.

என்று நினைத்தவன், சட்டென எழுந்து தனது அறைக்குள் பதுங்கினான்.

புட்பால் கோச்சிங் பற்றி மகன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த காஞ்சனா,

'அதனாலதான் இவ்வளவு சந்தோஷமா இருக்கானோ...'‌என்று நினைத்துக் கொண்டார்.

கடந்த இரண்டு நாட்களாக மகன் போனை அந்தளவுக்கு உபயோகிக்காததால் அவன் மீதான சந்தேகமும் கொஞ்சம் குறைந்திருந்தது.

ஆனால் அறைக்குள் சென்ற சாரதி, கதவைச் சாத்திக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தைத் திறந்தான். அவளைப் பார்த்ததும் அவனது முகத்தில் வந்த புன்னகையை அவனால் அடக்கவே முடியவில்லை.

"செம்ம அழகா இருக்க லயா.." என்று மெதுவாகச் சொல்லியவன், அவளது புகைப்படத்திற்கு ஒரு இதய எமோஜியைப் பறக்கவிட்டான்.

அந்த ஒரு புகைப்படம்... இரண்டு நாட்களாக மனதில் இருந்த அன்னையின் கோபத்தையும், தன் பொய்யின் குற்றவுணர்வையும், அவனுக்குள் இருந்த குழப்பத்தையும் ஒரு கணம் மறக்கச் செய்துவிட்டது.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : September 23, 2026 6:43 am
Kalidevi reacted
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26)

அடப்பாவி..! இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லி அம்மாவை டைவர்ட் பண்ணனும்.. இது தப்பில்லையா ?
அப்படியே உண்மையைச் சொன்னாத் தான் என்ன ? ஒருவேளை, சாதி பார்ப்பாங்களோ ? இவன் தப்புச் செய்துட்டு குற்றவுணர்வுல இருந்தால் கூட நியாயமிருக்கு.
இப்ப அநியாயத்திற்கு அம்மா வை ஃபீல் பண்ண வைச்சிட்டானே ?

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 23, 2026 7:38 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Sarathy u well trained for telling lie. But one day Kanchana will know the truth. Very intresting 


 
Posted : September 23, 2026 9:24 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy oda poi ippo avan ah kapathi iruku aana unmai theriya varum pothu nilamai ennavo


 
Posted : September 23, 2026 10:10 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

காதல் வந்தால் பொய் திருடு எல்லாமே வரும் 


 
Posted : October 4, 2026 7:24 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super 


 
Posted : October 7, 2026 4:49 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

KADHAL INTHA PADUTHURA PADU IRUKE ATHA YARALAIUM MATHA MUDIYATHU IPPADI THA POI SOLLAVUM VAIKUM ELLAM PANA VAIKUM


 
Posted : October 12, 2026 4:50 pm

Scroll to Top