பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-27
அத்தியாயம்-27
வேலூரில் மாலதியின் ரிசப்ஷன் மாலை நேரத்தில் களைகட்டிக் கொண்டிருந்தது.
மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, மேடையின் பின்னணியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணப்பெண்ணான மாலதி, விக்னேஷின் அருகில் வெட்கமும் சந்தோஷமும் கலந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளது அருகில் அலமேலு புருஷோத்தமன், மகள் இத்தனை நாளாகக் காத்திருந்த நாளை கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தார். மகளின் திருமணம் என்ற சந்தோஷம் முகம் முழுவதும் தெரிந்தாலும், அவ்வப்போது கண்களில் நீர் தேங்கியது.
புருஷோத்தமனும் வந்திருந்த உறவினர்களை வரவேற்று, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
இஷிதா மட்டும் அந்தக் கூட்டத்தில் ஒரு நிமிடமும் அமைதியாக இருக்கவில்லை.
ஒரு பக்கம் உறவினர்களிடம் ஓடுவது. இன்னொரு பக்கம் மண்டப அலங்காரத்தை வேடிக்கை பார்ப்பது.
இடையில் யாராவது கையில் இனிப்பு இருந்தால் அதையும் வாங்கிக்கொள்வது என்று அவளுக்கென்று தனி உலகம் இருந்தது.
இலக்கியா சுரேஷும் தன் பங்குக்கு உறவினர்களுடன் பேசிக்கொண்டு, மாலதிக்குத் தேவையானவற்றை கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் லாவண்யாவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தாள்.
அக்காவின் ரிசப்ஷன் என்பதால், அவளது முகத்திலும் தனி சந்தோஷம்.
வாய்ப்பு கிடைத்தாலும் போனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாரதி அனுப்பியிருந்த அந்த இதய எமோஜியைப் பார்த்ததும் அவளது உதடுகளில் தானாகவே புன்னகை மலர்ந்தது.
அவனை நினைத்துக்கொண்டே மீண்டும் போனை பையில் வைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள்... மாலதியின் திருமணத்திற்கான பரபரப்பு இன்னும் அதிகமாகியது.
காலையிலிருந்தே கல்யாண மண்டபம் முழுவதும் உறவினர்களின் குரல்கள்.
வாசலில் வந்து நின்று கொண்டிருந்த உறவினர்கள். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்கள்.
அதற்கு நடுவில் மணப்பெண்ணான மாலதியை அலங்கரிக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டிருந்தன.
திருமணத்துக்காக மணப்பெண்ணிற்கு நிகராக லாவண்யாவும் அழகான சேலை கட்டிக் கொண்டாள்.
சேலைக்கு ஏற்றவாறு நகைகள் தேர்வு செய்யப்பட்டன. கூந்தலைச் சுற்றி பூக்கள் சூட்டப்பட்டன.
கண்களுக்கு மையிட்டு, முகத்தில் லேசான அலங்காரம் செய்து முடித்ததும், கண்ணாடி முன் நின்றவள் தன்னைத் தானே பார்த்தாள்.
நேற்று லெஹங்காவில் இருந்த பெண், இன்று சேலையில் இன்னும் அழகாக மாறியிருந்தாள். அவள் புகைப்படம் எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தேவி வந்துச் சேர்ந்தாள்.
"ஹேய் லாவண்யா!" என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள், தேவியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
"நீ வந்துட்டியா?"
"நான் வராம எப்படி? கல்யாணத்துக்கு நீயே கூப்பிட்டிருக்கியே!" என்று தேவி சிரித்தபடி அவளைச் சுற்றி வந்து பார்த்தாள்.
"தனியாவா வந்த. ஆன்ட்டி அங்கிள்... உங்கக்கா யாரும் வரலையா?" என்று அதிசயத்து கேட்க, "அட இப்ப வந்துட்டு இன்னிக்கு ஈவினிங் கிளம்ப போறேன். அவங்க வரலைனு சொல்லிட்டாங்க." என்றாள்.
லாவண்யாவை மெலிருந்து கீழ்வரை பார்த்து, "அடேங்கப்பா... மேடம் இன்னைக்கு வேற லெவல்!" என்றாள் தேவி லாவண்யா வெட்கத்துடன் சிரித்தாள்.
"போதும் டி... தங்கற மாதிரி வந்திருக்கலாம்ல?"
"அதெல்லாம் விடமாட்டாங்கடி. அதை விடு.. ஆமா எங்க சாரதி அண்ணா இந்த லுக்கைப் பார்த்தா..." என்று தேவி வேண்டுமென்றே பாதியில் நிறுத்தினாள்.
லாவண்யாவின் முகம் உடனே சிவந்தது.
"தேவி!"
"சரி சரி... சொல்ல மாட்டேன்." என்று சிரித்தபடி அவளை போட்டோ எடுக்கத் தொடங்கினாள்.
சில புகைப்படங்களை இருவரும் சேர்ந்தே எடுத்துக் கொண்டார்கள். அந்தக் காலையும் நினைவுகளால் நிரம்பியது.
பிறகு திருமண நேரம் நெருங்கியது.
மணமேடையில் மாலதியும் விக்னேஷும் அமர்ந்திருக்க, சுற்றிலும் உறவினர்களின் கூட்டம்.
நாதஸ்வரத்தின் இசை மெல்ல உயர்ந்தது. மங்கள மேடையில் ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளி மணப்பெண்ணின் முகத்தில் விழுந்தது.
அலமேலுவின் கண்கள் மகளை விட்டு அகலவில்லை. புருஷோத்தமன் பெருமையோடு அருகில் நின்றிருந்தார்.
இஷிதா மற்ற குழந்தைகளோடு சேர்ந்து எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இலக்கியா உறவினர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
தேவியோ லாவண்யாவின் அருகிலேயே நின்று, அவ்வப்போது அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
மேடையில் பலரும் வரிசையாக முறுக்கு மீசையோடு அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி யாரென தேவி கேட்க, "எல்லாம் சங்கத்து ஆட்கள். அதுல பெரிய மீசையுமா பெரிய துண்டும் போட்டு நடுவுல உட்கார்ந்து இருக்காரே அவர் தான் கல்யாணத்தை நடத்தப் போறார்." என்றாள் லாவண்யா.
"யூ மீன் சாதி சங்க தலைவர்" என்றதற்கு, லாவண்யா ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
'சாரதி அண்ணா' என்று தேவி அவனை நினைத்து அந்த கல்யாணத்தை கண்டாள். லாவண்யா கூறியது போல மைக்கை பிடித்து சாதி பெருமையை பேசி, நாலு கைதட்டலை வாங்கிய பிறகு தாலி எடுத்துக் கொடுக்க, மாலதி கழுத்தில் தாலி ஏறிய அந்த நொடியில் சுற்றிலும் இருந்தவர்கள் கைத்தட்டியும், சந்தோஷமாக வாழ்த்தியும் கொண்டனர்.
அந்தக் கணத்தில் லாவண்யாவின் முகத்திலும் புன்னகை இருந்தது.
தன் அக்காவின் வாழ்க்கை ஒரு புதிய திருமண பாதையில் தொடங்கிய சந்தோஷம்.
அதே நேரத்தில் தன் வாழ்க்கையிலும் ஒருநாள் இதேபோன்ற ஒரு தருணம் வருமா? என்ற எண்ணம் அவளது மனதின் ஓரத்தில் மெல்ல வந்துச் சென்றது. அந்த எண்ணம் வந்தவுடனே, அவளது நினைவில் சாரதியின் முகம் தோன்றியது. அவனிடம் எந்த சாதி என்று கூட அவள் கேட்டதில்லை. மனதில் லேசான திகில் பரவியது.
---
அதே நேரத்தில் சென்னையில், காலையிலிருந்தே சாரதியின் மனதில் லாவண்யா தான்.
அவள் நேற்று அனுப்பிய புகைப்படத்தை எத்தனை முறை பார்த்தான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.
வேலைக்குத் தயாராகும்போது ஒரு முறை. சாப்பிடும்போது ஒரு முறை. பைக்கை எடுத்தபோது ஒரு முறை. டிப்போவுக்கு வந்த பிறகு இன்னும் பல முறை.
ஒவ்வொரு முறை போனைத் திறக்கும்போதும் அதே புகைப்படம் தான்.
அதிலும் தற்பொழுது அனுப்பிய புகைப்படத்தில் சேலை கட்டி,, தலை நிறைய பூ வைத்து, அந்தச் சேலைக்கு மேட்சிங்காக நகைகளையும் அலங்காரத்தையும் அணிந்து. அவள் நின்றிருந்த விதமே அவனது கண்களுக்குள் பதிந்திருந்தது.
"செம அழகு லயா..." என்று அவன் நேற்றே சொல்லியிருந்தாலும், இன்றும் அவனுக்குள் அதே வார்த்தைதான் ஓடிக் கொண்டிருந்தது.
போனை மீண்டும் திறந்து புகைப்படத்தைப் பார்த்தபடி இருந்த நேரத்தில்தான் முத்து அண்ணா அங்கே வந்தார்.
"என்ன சாரதி போனையே பார்த்துக்கிட்டு இருக்க?" என்ற குரல் கேட்டதும் அவன் சட்டென போனை அணைத்துவிட்டு வைத்தான்.
"ஒண்ணுமில்லைண்ணா."
"வா... சாப்பிடலாம்." என்று முத்து அண்ணா அழைக்க, சாரதியும் அவசரமாகப் போனைப் பாக்கெட்டில் வைத்துவிட்டு அவருடன் சென்று அமர்ந்தான்.
இருவரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, முத்து அண்ணா திடீரென்று பேசத் தொடங்கினார்.
"ஏன் சாரதி... புட்பால் கோச்சிங் போறதா இருந்தா போலாமேடா." சாரதி அவரைப் பார்த்தான்.
"சொந்த வீடு இருக்கு. படிச்சிருக்க. இப்ப வீட்டைக் கவனிக்கத்தான் உங்கம்மா ஏதோ தையல் வேலையில சம்பாதிக்குதே." சாரதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"நீ புட்பால் கோச்சிங் சேர்ந்து பழகுடா. உங்கப்பா இருந்தா உன்னை அதுல தான்டா போக விட்டிருப்பார். இப்படிக் கண்டெக்டரா நிற்க வச்சி அழகு பார்க்க மாட்டார்." என்றார்.
சாரதிக்கு முத்து அண்ணா ஏன் இப்போது இப்படிப் பேசுகிறார் என்று புரியவில்லை.
"ஏன் அண்ணா... இப்ப திடீர்னு?" என்று கேட்டான்.
முத்து அண்ணா பெருமூச்சு விட்டார். "உங்கம்மா காஞ்சனா இந்த வாரத்துல ரெண்டு முறை எனக்குக் கால் பண்ணிடுச்சு." சாரதி சாப்பிட்டுக் கொண்டிருந்த கை அப்படியே நின்றது.
"எதுக்கு?"
"அதான்... 'நீங்க சொல்லிப் பாருங்கண்ணா'ன்னு சொல்லுச்சு." சாரதியின் மனதுக்குள் ஒரு நொடி பதற்றம் ஓடியது.
அம்மா தன்னிடம் பேசாமல் புரிந்திருந்தாலும், முத்து அண்ணாவிடம் இப்படி நேரடியாகப் கோச்சிங் பற்றியே பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், பிறகு மெதுவாகச் சொன்னான்.
"இல்லை முத்து அண்ணா... நான் ஆசைப்பட்டது என்னவோ புட்பால் சாம்பியனாகத்தான். ஆனா அது இனி செட்டாகாது." என்றான்.
"ஏம்பா?"
"மாசம் மாசம் அதுக்குன்னு செலவு ஆகும். அதோட நேரமும் செலவழிக்கணும். நேரமும் பணமும் இப்ப இல்லை முத்து அண்ணா." அவன் குரல் அமைதியாக இருந்தது.
"அப்பா ஹாஸ்பிடல் செலவுக்கான கடனே போன வருஷம்தான் அடைச்சோம்."
முத்து அண்ணா எதுவும் பேசவில்லை. "சொந்த வீடு இருக்கு தான். ஆனா சொத்துன்னு வேற எதுவும் சேர்த்து வைக்கலை." சாரதி சிறிது நேரம் தலையைக் குனிந்து சாப்பிட்டான்.
"அதோட... எனக்கு அந்த ஆசையும் போயிடுச்சு." அவன் சொன்ன அந்த வார்த்தையில் முத்து அண்ணா அவனை உற்றுப் பார்த்தார்.
"அதுல சேர்ந்தா உடலை கவனிக்கணும். நேரம் போதாது. நான் கனவுன்னு ஒரு பட்டத்தைப் பிடிச்சுக்கிட்டு பறக்க ஆசைப்படலை அண்ணா." மெதுவாகத் தொடர்ந்தான்.
"நான் அப்பாவை தான் இழந்துட்டேன்." அந்த ஒரு வார்த்தை முத்து அண்ணாவின் முகத்தையே மாற்றியது.
"அம்மாவையும் எதுக்காகவும் இழக்க விரும்பலை. அவங்களுக்கு எந்த நேரமும் பிளவுஸ்ல சம்பாரிக்க முடியும். அதெல்லாம் மாச சம்பளமா செட்டாகாது அண்ணா. ஏதாவது வாங்கிக்க உதவும் அவ்வளவு தான். அம்மா உடல்நிலையும் பார்க்கணும்ல. அவங்களுக்கும் வயசு ஆகுது." சாரதியின் குரல் இன்னும் மென்மையானது.
"அம்மா கூடவேயிருக்கணும். அவங்கள அன்பா பார்த்துக்கணும்." அவன் கண்களில் இப்போது எந்தக் கனவும் இல்லை
"எங்கயாவது வேலை விஷயமா போயிட்டு... நேரமில்லாம சாப்பிட்டிங்களாம்மானு போன்ல கேட்கறதுக்கு பதிலா... தினமும் அவங்க கூடயிருந்து, சேர்ந்து சாப்பிடறப்ப, அவங்களுக்கு விக்கிடுச்சுன்னா சட்டுனு தண்ணி எடுத்து அவங்க முன்ன நீட்டணும். அதுக்கு நான் அவங்க கூடவே இருக்கணும்." முத்து அண்ணாவின் கண்கள் கலங்கின.
"இந்த வாழ்க்கை போதும் அவ்ளோதான்." சாரதி இயல்பாகச் சொன்னான்.
"அந்த வாழ்க்கையே எவ்வளவு சந்தோஷத்தைத் தரும் தெரியுமா அண்ணா..." அந்த வார்த்தைகளைக் கேட்ட முத்து அண்ணாவால் தன் கண்களில் தேங்கிய நீரை மறைக்க முடியவில்லை.
அவருடைய சொந்த மகன் கூட தன்னிடம் இப்படிப் பேசி பல நாட்கள் ஆகியிருந்தது. சாரதி கூறியது போல வேலைக்கு சென்றதும் சாப்பிட்டியா என்று கேட்கவும் நேரமில்லை யாருக்கும்.
தன் முன்னால் அமர்ந்திருக்கும் இந்தப் பையன்... தன் அம்மாவுக்காக இவ்வளவு பெரிய கனவையே விட்டுவிட்டானே என்று நினைத்ததும் அவரது நெஞ்சு கனத்தது
"ஏம்பா..." என்று தொடங்கியவர் குரலைச் சரி செய்துகொண்டார்.
"உனக்குனு கல்யாணம் ஆகணும். கண்டெக்டர்னு பொண்ணு அமைய லேட்டாகலாம். வர்றவளும் அனுசரிச்சுப் போற மாதிரி அமையணும். இதெல்லாமும் இருக்கு." சண்முகம் இருந்தா சொல்லறது தான். நான் சொல்கின்றேன் என்பது போல பேசினார்.
சாரதி சின்னதாகச் சிரித்தான். "அதெல்லாம் அமையும் அண்ணா."
"எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ற?"
"அமையற மாதிரி வர்றவளை மாத்திக்கறேன். ஒருவேளை எனக்காக அவ எதையும் பேஸ் பண்ணறவளா இருக்கலாம்" என்றான்.
முத்து அண்ணா அவனைப் பார்த்தபடி இருந்தார்.
சாரதி மீண்டும் சொன்னான். "அம்மா கேட்டா... சாரதி அவன் அப்பா பார்த்த வேலையை எக்காரணத்துக்காகவும் விடமாட்டானாம் என்று சொல்லிடுங்க." என்றான். அவன் முகத்தில் இப்போது ஒரு உறுதி.
"அதோட அம்மா கையால நைட்டு சாப்பிடற அந்தக் கொடுப்பினையையும் விடமாட்டேன்." என்றான்.
சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
"எனக்குன்னு ஒருத்தி வருவா. அவளும் என்னோட சேர்ந்துப்பா." முத்து அண்ணாவின் முகத்தில் மெதுவாகப் புன்னகை வந்தது.
"அதுவும் சரி." என்று சொல்லியவர், மனதுக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டார்.
மாலை காஞ்சனா பேசினால், சாரதி இப்படித்தான் நினைக்கிறான் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும்.
மகன் புட்பால் விளையாடுவதற்காக மட்டும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டியவன் இல்லை. அவனுக்குள் இன்னும் பெரிய ஒரு ஆசை இருந்தது.
அவன் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை. எத்தனை பெரிய ஜாம்பவான்கள் தொழிலில் உச்சத்தில் இருந்தாலும், அன்னையின் அன்பை மறந்தவனாக நின்று இறந்தப்பின் உச்சுக் கொட்டுவார்கள். அப்படியில்லாமல் அன்னை உயிரோடு இருக்கும் போது அன்பை செலுத்தும் முதிர்ச்சி இவனுக்கு உள்ளதே. அதை நினைத்தபடி முத்து அண்ணா அமைதியாகச் சாப்பிட்டு முடித்தனர்
சாரதியோ யாருக்கும் தெரியாமல் தன் பாக்கெட்டில் இருந்த போனைத் தொட்டுப் பார்த்தான்.
லாவண்யாவிடமிருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை. திருமணத்திற்கு என்று அரை மணி நேரத்திற்கு ஒரு புகைப்படம் அனுப்புகின்றாளே.
ஆனால் முத்து அண்ணா அருகில் இருப்பதால் போனை எடுக்கவில்லை. அ
க்கா கல்யாணம்னு இஷ்டத்துக்கு போட்டோவா எடுத்து தள்ளுவா. அதுவும் நான் பார்க்க எல்லாம் அனுப்புவா.' அந்த எண்ணமே அவனது முகத்தில் தெரியாமல் ஒரு சிறிய புன்னகையை வரவழைத்தது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 27)
சாரதியோட எண்ணம் சூப்பர்.
உண்மையிலயே இருக்கும்போது நிராதரவா தவிக்க விட்டுட்டு, போனப்பிறகு அவங்களோட போட்டோவை நடுக்கூடத்துல பெருசா ப்ரேம் போட்டு, மாலை போட்டு பூஜை பண்ணிட்டு, உசிரோட இருக்கிறச்ச இன்னும் நல்லா கவனிச்சிருக்கலாமோன்னு
காலம் கடந்தப் பிறகு வருந்துவதை விட, இருக்கும்போதே அன்பையும்,
அனுசரனையும், அருகாமையையும் காட்டி சந்தோஷமா வைச்சுக்கலாம் பெத்தவங்களை.
ஆனால் இந்த பொய்த்தான் கொஞ்சம் உறுத்துது. சாரதியோட அம்மா அப்படியொன்னும் சாதி பார்க்குறவங்க இல்லைன்னாலும் லாவண்யாவோட அப்பா
சாதி பார்ப்பாரு போலவே ?
ம்.. இந்த காதலால இன்னும் என்னென்ன பிரச்சினையெல்லாம்
வரப்போகுதோ தெரியலை போங்க.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
7 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
28 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-43-44
39 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-42
58 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-33
22 hours ago
Currently viewing this topic 1 guest.
- 26 Forums
- 377 Topics
- 1,915 Posts
- 3 Online
- 442 Members
