பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
அத்தியாயம்-14
மதியம் சாரதி பேருந்தில் ஏறிய லாவண்யாவோ, அவனையோ விழுங்க, சாரதி அவளிருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.
ஆனால் அவள் அண்ணாநகரில் ஏறிய பொழுது கவனித்தான். பேருந்தின் கடைசி பின்னிருக்கையில் அமரவும் அந்தபக்கமே திரும்பாது தவிர்த்தான்.
லாவண்யா தான் அவனையே பார்த்து 'பார்க்கவே மாட்டேங்கறார். ரொம்ப காயப்படுத்திட்டேனோ?' என்று தவித்து தேவியிடம் கேட்டாள்.
"அம்மா தாயே... நீயும் அந்தண்ணாவும் பேசறதையே என்னால இன்னும் ஜீரணிக்க முடியலை. இதுல அவரை நீ விரும்பற மாதிரி இருக்கு. எனக்கு என்ன சொல்லறது தெரியலை.
பிராக்டிகல்லா ஒன்னு சொல்லவா? நீ டிகிரி படிச்சு முடிக்க இந்த காலேஜ்ல படிக்க வந்திருக்க. ஆனா அவர்... கண்டெக்டர். இதை நான் சொல்லலைடி... நீ தான் நேத்து... அவரை சொன்ன. ஆப்ட்ரால் கண்டெக்டர்னு குறிப்பிட்ட. இப்ப என்னடான்னா... காலையில இருந்து ஒரு மார்க்கமா யோசிக்கற.
இப்ப இப்படி பார்க்கற." என்றதும், "அவர் அதனால தான் என்னை கவனிக்காத மாதிரி நடிக்கறார்.
நான் அவரிடம் பேசணும்" என்றாள்.
தேவியோ "உதைப்பட போற... முதல்ல இது சரிப்பட்டு வருமானு யோசி." என்றாள்.
லாவண்யாவோ 'இதுல யோசிக்க என்னயிருக்கு. நான் அவரை கவனிச்சதுல இருந்து, நல்ல கேரக்டரா தான் தெரியறார்.' என்று மனதில் கூறிக் கொண்டாள்.
டிப்போ வரும் வரை சாரதியையே பார்வையிட, அவன் திரும்பாமல் இருந்தான். "பின்னாடி யாராவது டிக்கெட் வாங்கணும்னா கொடுத்து விடுங்க." என்று குரல் கொடுத்தான்.
"பஸ் பாஸ் இருக்கறவங்க நீங்களே டிக் பண்ணிக்கோங்கம்மா" என்று அடுத்து அதையும் தெரிவிக்க, இறக்கும் நேரம் கடைசியில் இறங்க முடிவெடுத்தாள்.
"ஏங்க.. என்னங்க" என்று லாவண்யா கூப்பிட, தேவியோ "லாவண்யா என்ன பண்ணற. பஸ்லயிருந்து எல்லாரும் இறங்கிட்டாங்க. இறங்கு" என்று கூற, "முத்து அண்ணா... ஸ்மோக் பண்ண போறிங்களா... எனக்கு தொண்டை கட்டியிருக்கு.. ஒரு தூதுவளை மிட்டாய் வாங்க வர்றேன்" என்று கூடவே சென்றான்.
"வேண்டுமின்னே அவாய்ட் பண்ணறார்" என்று லாவண்யா வருந்திட, "இவ வேற... வாடி" என்று லாவண்யாவை இழுத்துக் கொண்டுச் சென்றாள்.
லாவண்யா சோகமாய் வரவும், "உங்க வீட்ல துப்பட்டா இல்லாத சுடிதாரே வாங்க மாட்டாங்க. அப்படி துப்பட்டா போடாம ஆம்பள எதிர வந்தா, உங்கம்மா அதுக்கே அடி வெளுத்துடுவாங்கனு சொல்வ. காதலிக்கறதுக்கு மட்டும் திட்ட மாட்டாங்களா? ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசி." என்று தேவி அவள் வீட்டிற்கு சென்றிட, லாவண்யா வீட்டிற்கு வந்தப்பொழுது தாத்தா ஆவுடையப்பன், டிவியை பார்த்தபடி இருந்தார்.
இஷிதா இன்னமும் பள்ளியிலிருந்து வர தாமதமாகும். இலக்கியாவோ நாளை சமையலுக்கு என்று, முருங்கை கீரையை ஆய்ந்துக் கொண்டிருந்தார்.
லாவண்யா வந்ததும் டிபன் பாக்ஸை கிச்சனில் கழுவி வைத்து விட்டு, முகமலம்பினாள்.
நைட்டியை மாற்ற நினைத்தவள், ஏதோ தோன்றவும், அப்படியே சுடிதாரே இருக்கட்டுமென வெளிவந்தாள்.
"நான் கீரையை ஆயட்டுமா சித்தி" என்று கேட்க, "முடிஞ்சுதும்மா." என்று எந்திரித்தாள்.
பெரும்பாலும் லாவண்யா அவளது உடையை காலையிலேயே துவைத்து விடுவாள். இலக்கியாவுக்கு உதவியாக சமையலில் காய்கறி நறுக்கி தந்து, உதவுவாள். பாத்திரம் கழுவுவாள்.
வீட்டை பெருக்கி கூட்டி, இஷிதாவுக்கு தலைவாறி என்று இலக்கியாவுக்கு பாதி வேலையை குறைத்து விட்டிருந்தாள்.
கல்லூரியிலிருந்து வந்ததும், மாடியில் தேவியோடு பேசியபடி துணியையும் மடித்து வைத்திடுவாள். அத்துடன் லாவண்யா வந்ததிலிருந்து, இஷிதாவும் அவளோடு உறங்குவதால், இலக்கியா சுரேஷுற்கும் தனிமை கிடைக்கின்றது என்றுகூட சொல்லலாம்.
லாவண்யா ஏதேதோ யோசிக்க தேவி வந்து நின்றாள்.
"சித்தி மாடில துணி எடுத்துட்டு மடிச்சிட்டு வந்துடறேன்." என்று இருவரும் சென்றார்கள்.
இலக்கியாவோ "ஏன்டி.. காலையிலருந்து இப்பவரை சேர்ந்து பேசிட்டு திரியறிங்க. அப்படி என்ன தான் பேசுவிங்க" என்று சலித்திட தேவியோ "பிரெண்ட்ஸ்னா ஆயிரம் இருக்கும். பேசவா கன்டென்டுக்கு பஞ்சம்." என்று சிரித்து மாடிக்கு நடந்தார்கள்.
"முடிவு பண்ணிட்டேன் தேவி." என்றாள். தேவியோ "என்னனு." என்று குழம்ப, "பார்க் போகலாமா? நான் அவரிடம் பேசணும்." என்று துணைக்கு அழைத்தாள்.
தேவியோ "விளையாடறியா?" என்று கேட்டு மறுக்க, "ப்ளீஸ் ஒரே ஒருமுறை நான் அவரிடம் சாரி மட்டுமாவது கேட்டுடறேன்." என்றாள்.
"உன் சாரியை டிப்போல பஸ் ஏறுறப்ப சொல்லு. 'அண்ணா அண்ணா.. நான் அன்னிக்கு 'ஆப்ட்ரால் கண்டெக்டர்'னு பேசிட்டேன். அதை மனசுல வச்சிக்காதிங்கனு சொல்லு. சொல்லணும்னு கூட அவசியமில்லை.... நீ பாட்டுக்கு பஸ்ல ஏறினமா படிக்க வந்தம்மானு இரு." என்று கூற, லாவண்யாவோ "நான் சாரதியை அண்ணானு எல்லாம் சொல்ல மாட்டேன். நான் அவரை அண்ணாவா பார்க்கலை" என்றாள் தலைகுனிந்து.
தேவியோ லாவண்யாவின் கண் கலங்க நின்ற கோலத்தை கவனித்து "அண்ணாவா பார்க்கலையா... ஜோலி முடிஞ்சுது... வந்து தொலையறேன். உங்க சித்தியிடம் பார்க் போயிட்டு வர்றேன்னு சொல்லு" என்றாள்.
லாவண்யா தலையாட்டி நடக்க, "இ...இஷிதாவை அனுப்புவாங்களே" என்று தேவி லாவண்யாவிடம் கேட்க, "அவளுக்கு டெஸ்ட் இருக்கு. சித்தி தமிழ் சொல்லி கொடுக்கறப்ப இரண்டடி போடுவாங்க. நான் தடுப்பேன். அதனால படிக்கறப்ப நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட கூடாதுனு சொல்லிட்டு கிளம்பலாம்" என்றாள் லாவண்யா.
'காதலிச்சா பொய் பேசுவாங்கனு சொல்வாங்க. இப்ப தான் பார்த்துட்டு இருக்கேன்.' என்று முனங்கி தேவி நடக்க, லாவண்யாவோ ''சித்தி இஷிதாவுக்கு தமிழ் சொல்லி தரப்போறிங்களா? எனக்கு எக்ஸாம் முடிந்ததால தேவியோட பார்க் மட்டும் போய் நடந்துட்டு வர்றோம்" என்றாள்.
''ஏன்டி தேவி.. உங்க அக்கா தானே ஜிம்முக்கு போறா... நீ என்ன பார்க்குல நடக்குற. நீயும் ஜிம்ல சேர்ந்துக்க வேண்டியது தானே?" என்றார் இலக்கியா.
"அவ வேலைக்கு போய் பணம் வச்சிருக்கா ஆன்ட்டி. எனக்கு அப்படியா. அதுவும் இல்லாம கதையடிக்க போறேன். நான் ஏன் உடம்பை குறைக்கணும். அவ குறைக்கணும்னா அது அவ தலையெழுத்து" என்றாள்.
தேவி லாவண்யா பார்க் போவதாக சொல்லவும், இஷிதாவோ தமிழ் புத்தகத்தை வைத்து பாவமாக பார்த்து வைத்தாள்.
லாவண்யா தேவி இருவருமே பார்க்கிற்கு செல்லாமல் வெளியே உள்ள இடத்தில் நின்றியிருந்தனர்.
"இப்படி தேவையில்லாம இந்த ரோட்ல நிற்பேன்னு கனவுல கூட நினைக்கல" என்று தேவி போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தாள்.
"இந்த நேரம் தானே டூயூட்டி முடிஞ்சு அவர் போவாரு? ஏன் இன்னும் காணோம்'' என்று லாவண்யா தேவியிடம் கேட்க, "அந்தண்ணா எப்ப போகும் வரும்னு நான் எங்கடி தெரிந்து வச்சிருந்தேன். ஏதோ பேசறப்ப கவனிச்சேன் சொன்னேன்." என்றாள்.
தேவியிடம் எது பேசினாலும் அலுத்துக் கொள்வதை லாவண்யாவுக்கு புரிந்தது.
தான் தவறான பாதையில் செல்கின்றோமோ? அதனால் கோபப்படுகின்றாளா? என்று கூட கேட்டாள்.
"ஆங்." என்று முறைத்துக் கொண்டிருக்க, "அவர் வர்றார்." என்று சாலையில் பார்த்தாள்.
சாரதி பைக்கில் தான் வந்துக் கொண்டிருந்தான்.
தேவி லாவண்யாவை கண்டதும், மெதுவாக வண்டியை விடுத்தான். லாவண்யா ஏதோ பேச வருவது போல தயங்க, சாரதி நிற்காமல் சென்றான்.
ஏதேனும் நின்று அவளிடம் கேட்டு, அவள் தங்கை அங்கே விளையாடியபடி இருந்தாள். இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்று மனசாட்சியே கேட்குமென அவளை தாண்டி வண்டியை இயக்கி சென்றான்.
தேவியோ ''அப்பாடி அவர் போயிட்டார். நீ இங்க நிற்கவும் அவரும் எப்படி இங்க நின்று உன்னிடம் பேச வருவார்.
நீ அவரை தான் பார்க்க வந்தேன்னு கூட அவருக்கு தெரியாது. இதுக்கு தான் சொன்னேன். பஸ் ஏறுறப்ப சாரி சொல்லி பேசிடுனு." என்று கூற லாவண்யாவோ தலைகுனிந்து வாடினாள்.
உண்மை தானே.. நானாக அவரிடம் பேச வந்ததை அவருக்கு எப்படி தெரியும்? என்று கலக்கத்துடன் ஒரெட்டு முன்னே வைக்கும் நேரம் சாரதியின் பைக் மீண்டும் யூடர்ன் போட்டு திரும்புவதை தேவி கவனித்தாள்.
லாவண்யாவின் புஜத்தை சுரண்டி, சாரதியை சுட்டிக் காட்டினாள்.
சாரதி லாவண்யாவை கண்டு பூங்காவினுள் செல்ல வண்டியை நிறுத்தினான். லாக் போடப்பட்டுள்ளதா என்று நன்றாக சரிப்பார்த்துக் கொண்டு, பூங்காவுக்குள் நுழைந்தான்.
பைக் நிறுத்தியதற்கு நேராக உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பைக்கை பார்த்து லாவண்யாவையும் கவனித்தான்.
லாவண்யா ''அவருக்கு நான் அவரிடம் பேச வந்திருக்கேன்னு புரிந்துடுச்சு" என்று தேவியை அழைத்து பூங்காவினுள் வந்தாள்.
தேவிக்கும் ஆச்சர்யம் தான். இந்த அண்ணா வந்து நிற்கின்றாரென.
லாவண்யா தேவி இருவரும் சாரதிக்கு நேர் எதிரில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.
லாவண்யா அவனை ஏறிட்டு, ''சாரி... ஆப்ட்ரால் கண்டெக்டர்னு உங்களை சொன்னது தப்பு தான். நீங்க டிரைவர் பிரேக் போட்டு என் மேல விழுந்த அன்னிலயிருந்து தான், இந்த மாதிரி அந்த எருமை மாடு என் முதுகு தோளை உரசியிருக்கான். என் இடுப்புல கையை வச்சியிருக்கான். நீங்க அன்னிக்கு ஈவினிங்கே சில்லரையை என் டிரஸ்குள்ள போட்டதும், தப்பா புரிஞ்சு நடந்த எல்லா தப்பும் நீங்களே செய்திருப்பிங்களோனு உங்களை யோசிக்காம திட்டிட்டேன்.
அடுத்து அவன் தான் தட்டினான்னு புரியவும், அவனை கண்டிச்சு கத்திட்டேன். என்னயிருந்தாலும், கோபத்துல ஆப்ட்ரால் கண்டெக்டர்னு திட்டியது ரொம்ப தப்பு. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க." என்றாள்.
"மன்னிச்சு... என்ன செய்ய என் மனகாயம் ஆறுமா?" என்று கேட்டவன், லாவண்யா கண்கள் கலங்கவும், அதை கண்டு, "சரி... மன்னிச்சிட்டேன் போதுமா. நான் போறேன்" என்று வெடுக்கென எழுந்தான்.
"சாரி கேட்க மட்டும் வரலை" என்று கூற சாரதி கால்கள் அடுத்த அடி நடக்காமல் அசையாது நின்றது. "நா...நா..நான்... உங்களை விரும்பறேன். அதை தெரியப்படுத்தவும் வந்தேன்." என்று கூறினாள். அந்த நேரம் பூங்காவில் உள்ள செக்கியூரிட்டியின் விசில் சத்தம் கேட்டது.
பெரும்பாலான திறந்தவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி பூங்காவின் மூடப்படும் நேரம் எட்டு அல்லது ஒன்பது மணி கூட இருக்கும்.
விதிவிலக்காக பூங்காவில் மிகக் குறைவான விளக்கு வசதிகள் இருந்தால், பாதுகாப்பு கருதி ஏழு மணிக்கு பூங்கா சீக்கிரம் மூடலாம். அல்லது சில குறிப்பிட்ட அசோசியேட் விதிமுறையின் அமைதிக்காகவும் சீக்கிரம் மூட முடிவு செய்திருப்பார்கள்.
இங்கே இந்த பார்க் குறைவான மின்விளக்கு வசதியால் ஏழுமணிக்கு மூடப்படவும், மக்களும் குழந்தைகளும் வெளியேறினார்கள்
சாரதி லாவண்யாவை கண்டு, "லூசுத்தனமா யோசிக்காம பேசாத. தப்பா நினைச்சிட்டோமேனு நீ மன்னிப்பு கேட்கறது ஓகே.. அதுக்காக காதலிக்கறேன்னு சட்டுனு சொல்லாத. போய் ஆகற வேலையை பாரு.
நீ சொன்னது தப்பாவே இருந்தாலும்... நிஜம்.. நான் ஒரு ஆப்ட்ரால் கண்டெக்டர் தான். படிக்க வந்த இடத்துல படிக்கற வழியை பாரு.
தங்கச்சி.... லாவண்யாவுக்கு புரியவையுங்க.. கிளம்புங்க" என்று தேவியிடமும் கடைசியாக கூறி சென்றான்.
பைக்கில் சாவியை போட்டு திருகி அவன் ஒரு புறம் செல்ல, லாவண்யாவோ, கண்ணீரை உகுத்தினாள். அதை யாரும் காணாத வகையில் துடைத்துக் கொண்டாள்.
தேவியோ சாரதியையும் லாவண்யாவையும் மாறி மாறி பார்த்து அமைதியாக நடந்தாள்.
லவாண்யா சித்தி வீடு வரவும், தேவியோ "லாவண்யா... எதை பத்தியும் யோசிக்காத. இனனிக்கு தானே காதலை சொல்லிருக்க, அவகாசம் கொடு. அதுவரை காத்திரு." என்று கூறினாள்.
லாவண்யாவோ மனபாரத்துடன் சரியென தலையாட்டினாள்.
சாரதியோ வீட்டுக்கு வந்து பைக்கிற்கு கவரை போட்டுவிட்டு, அன்னை தந்த டீயை பருகினான்.
சாரதி இதயத்தில் அந்த டீயின் சுவை இதமாக தான் இருந்தது. லாவண்யா இவனை நேசிப்பதை அவளாக கூறியதை கேட்டு தடுமாறினாலும், ஒரு பெண் அவளாக வந்து, இரண்டு முறை சூழ்நிலை தவறாக சித்தரித்து இருந்தாலும், காதலிப்பதாக இவனிடமே கூறியிருக்கின்றாள் என்றால் அவனுக்கு இதமாக இருக்காதா? ஆனால் அவனுக்குள்ளும் தான் கண்டெக்டர், அந்த பொண்ணு அண்ணாநகர் கல்லூரியில் படிக்கின்றாள் என்றதே முரணாக தெரிந்தது.
அதனால் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அன்னை மடியில் வந்து படுத்துக் கொண்டான்.
சாரதி இப்படி அன்னை மடியில் படுப்பது வழக்கமென்பதால் அவன் சுருட்டை முடியை கோதி டிவியை பார்த்தார் காஞ்சனா.
அன்னையிடம் லாவண்யாவை பற்றி கூறலாமா என்று மனதில் தேன்றியது. நானே அவளோட காதலை ஏற்கலை. பிறகு
ஏன் அம்மாவிடம் சொல்லணும். எதுவும் தெரியாம போகட்டும்' என்று முடிவெடுத்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 14)
அட பரவாயில்லையே, சட்டுன்னு லவ்வை எக்ஸ்போஸ் பண்ணிட்டால்... ஆனால் இது சரி வருமா ? இப்பத்தானே முதல் வருசமே காலேஜ் ஜாயின் பண்ணியிருக்காள், அதுக்குள்ள காதலா ? படிக்கிறாங்களோ, இல்லையோ ஆனால் லவ் பண்ணிடனும் போலயிருக்கு.
தேவி சொன்ன மாதிரி, துப்பட்டா இல்லாம சுடிதாரைப் போட்டாலே
கத்துற அம்மா, லவ் பண்ணால் மட்டும் ஒத்துப்பாங்களா ?
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
