Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13

6 Posts
6 Users
0 Reactions
29 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#353]

அத்தியாயம்-13

அடுத்த நாள் பேருந்துக்குள் மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருந்தது.

பேருந்தில் லாவண்யா, தேவி, சாரதி மூவரும் இருந்தும், வழக்கமாக அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன பார்வைகளோ, புன்னகைகளோ, சாரதியின் விசில் சத்தத்தோடு கலந்த விளையாட்டுத்தனமோ எதுவுமே இல்லை.

சாரதியின் முகத்தில் குதூகலமோ, புன்னகையோ, சந்தோஷமோ எதுவும் இல்லை.

மாறாக... அவனது முகத்தில் நேற்று நடந்தவற்றின் வேதனை மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி, இயந்திரமாக டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

"ஸ்கூல் பசங்க கொஞ்சம் உள்ளே போங்க... காலேஜ் பசங்க படியில நிக்காதீங்க..." என்று வழக்கம்போல் பயணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவனது குரலில் கூட முன்பிருந்த உற்சாகம் இல்லை.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் விசில் அடித்தபடி முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தான்.

லாவண்யாவும் தேவியும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். அன்று லாவண்யாவுக்கு உட்கார இடமும் கிடைக்கவில்லை.

சாரதி அவளைக் கடந்து செல்லும் நேரத்தில், அவள் செவிகளை மூடிக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்.

எப்போதும் அவளுக்கு அருகில் வந்து விசில் கருவியால் விசிலை அடித்தால் அப்படி தான். அதிலும் கடைசியாக ஒருமுறை "அறிவில்லை..." என்று முறைத்துப் பார்த்திருக்க, அதனால் இந்த முறை அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தவன், விசிலை வாயில் வைக்காமல், வலது கையின் விரல்களை உதட்டில் குவித்து விசில் சத்தம் எழுப்பினான்.

ஆனால் அந்த நேரத்தில் யாரோ தன்னுடைய பின்பக்கத்தில் தட்டியது போல லாவண்யா உணர்ந்தாள். அவள் சட்டென்று திரும்பினாள்.

அங்கே சாரதிதான் நின்றிருந்தான். "எ.. என்னாச்சு?" என்று மனம் கேளாமல் சாரதி புரியாமல் கேட்டான். லாவண்யா பதில் சொல்லவில்லை. அவள் இமை மூடியபடி அப்படியே நின்றாள்.

அவளது மனதில் நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடின.

அவளைத் தீண்டிய கை, வலது கை. அதே நேரத்தில் சாரதி விசில் சத்தம் எழுப்பப் பயன்படுத்தியதும் வலது கை. அப்படியென்றால் சாரதி தன்னை இவ்வாறு செய்யவில்லை என்பது நூறு சதம் உறுதியானது.

அவளுடைய பார்வை சட்டென்று பேருந்தில் இருந்த ஆண்களை நோக்கிச் சென்றது.

அப்போது அவளது நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு பேருந்து ஏறியதும், தன்னிடம் காதலைச் சொல்லி ஒரு கடிதம் கொடுத்தவன்.

அந்தக் கடிதத்தைத் தன்னிடம் இருந்து தேவி வாங்கிப் படித்துவிட்டு கிழித்துப் போட்டிருந்தாள்.

அந்தப் பையன்... பேருந்தில் தன்னைத் தாண்டி வரும்போதெல்லாம் பார்த்திருக்கின்றாள்.

ஒருமுறை ஒரு பெண்ணின் உடலைப் பார்த்துக் கொண்டு, "குண்டு... குண்டு..." என்று கேலி செய்தவனும் அவன்தான்.

லாவண்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. "இடியட்..."
என்று பற்களைக் கடித்தவள், தேவியை நோக்கி திரும்பினாள்.

"தேவி.." என்று கூப்பிட,

"என்னடி?"

"பஸ்ல இத்தனை நாளா என்னை இடுப்புல தொட்டது... முதுகுல உரசியது... சாரதி இல்லை." என்றாள். தேவி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"அப்ப யாரு?"

"அந்த லெட்டர் தந்த எருமை." சாரதி அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டான். அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய முகத்தில் முதலில் குழப்பம். பிறகு.. அனைத்தும் புரிந்தது.

"அந்தப் பையனா?" தேவியின் பார்வை உடனே அந்த இளைஞனைத் தேடியது.

அவன் தான் சில நாட்களாக லாவண்யா தன்னை ஏன் வெறுப்புடன் பார்த்தாள் என்பதற்கான விடை இப்போது சாரதிக்கு கிடைத்துவிட்டது.

தான் செய்யாத குற்றத்திற்காக... இத்தனை நாட்களாக அவள் தன்னை குற்றவாளியாக நினைத்திருக்கிறாள்.

அவனது மனம் ஒரு நொடி வலித்தது.

அவளை அத்துமீறி தொந்தரவு செய்தவன் மீது கோபமும் வந்தது. "திருமங்கலம்... இ.பி. ஆபீஸ் இறங்குங்க..." என்று அடுத்த நிறுத்தத்தை அறிவித்தபடி அவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.

தேவியோ அந்தப் பையனை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். "அண்ணா..." சாரதி திரும்பிப் பார்த்தான். "அந்த பையன்தான் லாவண்யாவிடம் அத்துமீறி இருக்கான்." சாரதியின் முகம் இறுகியது.

  "ஏன்மா?" என்ற சாரதி, லாவண்யாவை ஒரு நொடி பார்த்துவிட்டு, "நேத்தே என்னை லெஃப்ட் ரைட் வாங்கணும்னு குதிச்சாளே. இப்ப அதே கோபத்தை அவன்கிட்ட காட்டச் சொல்லு." என்றான். தேவியோ பேச்சற்று தலை கவிழ்ந்தாள்.

"ஏன்மா கேட்க முடியாதா" சாரதியின் குரலில் வேதனை கலந்த கோபம். "ஆப்ட்ரால் கன்டெக்டர்னா என்ன வேண்டும்னாலும் பேசலாம். அதே காலேஜ் பையன், நல்ல டிரஸ் போட்டு, வசதியானவனா தெரிஞ்சிருந்தா... அவனை கத்தவோ திட்டவோ யோசிச்சிக்க வேண்டியதா இருக்குல்ல?" என்றதும், லாவண்யா அந்த வார்த்தைகளைக் கேட்டாள்.

அவனுடைய குரலில் இருந்த கசப்பு அவளது மனதைத் தொட்டது.

நேற்று தான் அவனை எவ்வளவு காயப்படுத்தி விட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த நொடியே... அந்தப் பையன் மீண்டும் அவளை நெருங்கி வந்தான்.

லாவண்யாவின் கோபம் மீண்டும் தலைதூக்கியது. சாரதி தேவியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காதபடி அவள் கையில் இருந்த காம்பஸை எடுத்துக் கொண்டு அந்தப் பையனின் கையில் குத்தினாள்.

"ஆ..." என்று அவன் அலறினான். பேருந்தில் அங்கே  அவனை சுற்றியிருந்த அனைவரும் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

"வலிக்குதா?" லாவண்யாவின் குரல் நடுங்கியது.

"வலிக்குதாடா?" அவள் மீண்டும் காம்பஸை உயர்த்தினாள். "அன்னிக்கு முதுகுல உரசியது இந்த கைதானே?" அவன் பயந்து பின்னால் நகர்ந்தான்.

"நேத்து காலையில இடுப்புல அழுத்தியது இந்த கைதானே?" என்றாள் காளி அவதாரமாக.

"நான்..." என்று தடுமாறினான்.

"இப்ப பிட்டத்தின் பின்னாடி தட்டினதும் இந்த கைதானே?" என்றாள். அவன் பதில் சொல்ல முடியாமல் நின்றான். மறுத்தால் காம்பஸ்ஸால் நெஞ்சில் குத்திடுவாளோ என்ற பயம்.

"இப்ப தட்டு! தட்டுடா!" அவளுடைய கோபக் குரல் பேருந்துக்குள் முழங்கியது.

அன்று சற்று பருமனாக இருந்த பெண்ணும் "என்னை குண்டுனு சொல்லி கேலி பண்ணுவான். ஆனா நான் அவனை தாண்டி வர்றப்ப எல்லாம் சகட்ட மேனிக்கு இடிப்பான். இன்னிக்கு இந்த பொண்ணு கொடுக்கற தண்டனை சுகமா இருக்கா" என்றாள்.

அருகில் இருந்த சில பெண்களும் உடனே, "இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. நாமளே கஷ்ப்பட்டு படிக்கவும் வேலைக்குன்னும் கூட்ட நெரிசல்ல இடிபாட்டுல வந்தா, இந்த தடிமாடுங்க வேற இடிச்சிட்டு இளிச்சிட்டு இருப்பானுங்க. நல்லா நாலு போடும்மா!" என்று சில பெண்கள் ஆதரவாகப் பேசினார்கள்.

முத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.

நிலைமை பெரிதாகாமல் சாரதியும் அந்தப் பையனை கீழே இறங்க கூற, அவனும் கீழே இறங்கினான்.

லாவண்யாவின் கையால் காம்பஸ் கீறலோடு, அவன் முகத்தில் விழுந்த அறையும் சேர்ந்து அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இறங்கிச் செல்லும் முன் அவன் லாவண்யாவையும், சாரதியையும் மாறி மாறிப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் பழிவாங்கும் கோபம் தெரிந்தது.

ஆனால் பேருந்து புறப்பட்டுவிட்டது. லாவண்யா நீண்ட பெருமூச்சு விட்டாள்.

"இன்னிக்கு சீட் கிடைக்காம நிக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..." தேவி அவளைப் பார்த்தாள்.

"ஆனா அதுவும் நல்லதுதான்." லாவண்யா முகத்தில் இப்போது நிம்மதி.

"அந்த ராஸ்கல் நெருங்கவும் அடக்கிட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு." சாரதி கம்பியில் சாய்ந்து நின்றிருந்தான்.

அவனது முகத்தில் இன்னமும் நேற்று நடந்தவற்றின் சுமை இருந்தது. "ட்வெல்த் மெயின் ரோட்... இறங்குங்க." என்று பயணிகளுக்கு அறிவித்தான்.

பிறகு அடுத்த நிறுத்தம் வந்ததும், "அண்ணா நகர்... அண்ணா நகர்..." என்று குரல் கொடுத்தான்.

வழக்கம்போல் விசில் அடிக்காமல், வலது கையை உதட்டருகே குவித்து மெதுவாக விசில் சத்தம் எழுப்பினான்.

லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று தப்பி தவறி, டிப்போவிலோ அல்லது, அவன் அன்னையிடமோ அவசரப்பட்டு புகார் செய்திருந்தால், இவர் நிலை என்ன? அதிலும் அறிவில்லையா? கண்டெக்டர் தானே என்று குறைத்து மதிப்பிட்டு பேசினாளே.

"என்ன பார்க்கற? இறங்கு." என்றான் சாரதி.

அந்த வார்த்தையில் ஒருமை இருந்தாலும், கோபம் இல்லை.

ஒருவிதமான விலகல் மட்டுமே இருந்தது. லாவண்யாவும் தேவியும் இறங்கினர்.

பேருந்து புறப்பட்டுச் சென்றது. சில நொடிகள் இருவரும் அமைதியாக நடந்தனர்.

பிறகு தேவி திடீரென்று லாவண்யாவின் கையைப் பிடித்தாள்.

"எப்படிடி இவ்வளவு தைரியமா காம்பஸ் வச்சி குத்தின?"

"அவன் செய்தது தப்புதானே?"

"அது சரி. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா?"

லாவண்யா தயக்கமே இல்லாமல் சொன்னாள்.

"அதான் சாரதி இருக்காரே." தேவி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

"என்ன?"

"ம்ம்ம. சாரதி பார்த்துக்குவான்." என்று அழுத்தமாய் உரைத்தாள் புன்கையுடன்.

தேவியின் முகத்தில் குழப்பம். 'அவர் என்னடான்னா 'என்ன பார்க்கற இறங்கு'னு ஒருமையில பேசுறார். சரி... ஏதோ இவ அவரை முன்னாடி எவ்வளவு பேசினதால, மரியாதை கொடுக்கப் பிடிக்கலைன்னு நினைச்சேன்.

இவ என்னடான்னா.. 'அதான் சாரதி இருக்காரேன்னு சொல்றா.'

'எந்த உரிமையில பேசுறாங்க. அவளால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடுதலாக துருவி பேச்சை கூட்டவில்லை. கல்லூரியில் வகுப்பும் வந்துவிட்டது காரணமாக இருக்கலாம்.

ஆனால் லாவண்யாவோ அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த விஷயத்திலும் மனதைச் செலுத்த முடியவில்லை.

அவளுடைய மனதிற்குள் ஒரே ஒரு விஷயம்தான் சுற்றிக் கொண்டிருந்தது.

சாரதி அவனிடம் தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

நேற்று அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்?

'எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை.' அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது.

அவன் கண்களில் தெரிந்த வலி... அம்மாவைப் பற்றி அவன் கொண்டிருந்த அக்கறை... தன்னைத் தண்டிக்கச் சொல்லியும், தன் அம்மாவை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்ட விதமும்... எல்லாமே நினைவுக்கு வந்தது.

அவள் மெதுவாகத் தன் நெஞ்சின் மீது கை வைத்தாள்.

இதுவரை சாரதி மீது இருந்தது வெறும் மதிப்பு தானா? அவனுடைய சிரிப்பு பிடித்தது. அவன் குழந்தைகளிடம் பேசும் விதம் பிடித்தது. வயதானவர்களிடம் காட்டும் மரியாதை பிடித்தது. பயணிகளிடம் பொறுமையாக நடந்து கொள்வது பிடித்தது.

அவன் விசில் சத்தம் கூட தனக்காகவே என்று தோன்றிய நாட்கள் இருந்தன.

இப்போது... அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். 'தனக்கும் அவருக்குள்ளும் என்ன பந்தம்' என்று. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் முகம் சிவந்தது.

ஆம். அவள் மனம் ஏற்கனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால்... அதை இனி சாரதியிடம் எப்படி சொல்வது? அவன் ஏற்றுக் கொள்வானா?

இத்தனை தவறான புரிதல்களுக்குப் பிறகு... 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொன்னால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?

'நேத்து என்னை குற்றவாளியா பார்த்தவ... இன்னிக்கு காதலிக்கிறேன்னு சொல்றாளே?' என்று கேலி செய்வானா? தன்னை நிராகரித்துவிட்டால்?
தன் மனம் தாங்குமா? அதையும் தாண்டி தேவி... அவளிடம் இதை எப்படி சொல்வது?

தேவி தன்னை என்னவென்று நினைப்பாள்? வீட்டில் அம்மாவும் அப்பாவும் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

'காதல் எல்லாம் எதுக்கு?' என்று கேட்பார்களா? எத்தனை கேள்விகள்... எத்தனை பயங்கள்... ஆனால் அவற்றை எல்லாவற்றையும் விட பெரியதாக இருந்தது ஒரே ஒரு உணர்வு.

சாரதியை இழக்கக் கூடாது.
அதே நேரம்... பேருந்துக்குள் சாரதியின் மனதிலும் ஒரு சிறிய நிம்மதி பிறந்திருந்தது.

'அப்படின்னா... அந்தச் சம்பவங்களெல்லாம் நான் இல்லன்னு அவளுக்குப் புரிஞ்சிடுச்சு.' அது மட்டும் அவனுக்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் அடுத்த நொடியே அவன் மனம் மீண்டும் அவனைத் துன்புறுத்தியது.

'அவ என்ன நினைச்சிருப்பா? என்ன இருந்தாலும் சில்லரையை அவ டிரஸ்குள்ள போட்டது நான் தான். தெரியாம போட்டாலும் தப்பு தானோ? அதை நினைச்சு வருத்தப்படுவாளோ?"
அவனுடைய மனம் மீண்டும் அவளைச் சுற்றியே சுழன்றது.

கொஞ்ச மாதங்கள் கடந்திருக்க, ஒரு வருடம் கூட ஆகவில்லை. அந்த லாவண்யா பேருந்தில் பயணம் செய்து. அதிலும் இந்த இரண்டு நாளில், தன்னுடைய மனதை இப்படி புரட்டிப் போட்டு விட்டாள். அவளை கண்டால் என் மனம் தத்தி தாவுகின்றது. இது.. அது தானோ? என்று தடுமாறினான்.

மாலை நேரத்தில் டிரைவர் இருக்கையில் இருந்த முத்து அவனைப் பார்த்தார்.

"சாரதி..."

"ஆங் அண்ணா?" என்றான்.

"என்னடா ஆச்சு?" சாரதி புரியாமல் பார்த்தான்.

"எதுவுமில்லையே அண்ணா."

"எதுவும் இல்லையா?"

முத்து அவனைப் பார்த்து சிரித்தார். "இரண்டு மூனு நாளா தனியா பீல் பண்ற... தனியா என்னத்தடா யோசிக்கற." சாரதி உடனே முகத்தை மாற்றிக் கொண்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா.."

"என்னத்த ஒண்ணுமில்லையோ" என்று அவர் அதன்பிறகு கேட்கவில்லை.

'ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லை தான்.' என்று சொல்லிவிட்டு டிக்கெட் பையைச் சரி செய்தான்.

ஆனால் அவனது உதட்டின் ஓரத்தில் வந்து மறைந்த அந்தச் சிறிய நிம்மதியான புன்னகையை முத்துவால் தவறவிட முடியவில்லை.

சாரதியோ அந்தப் புன்னகைக்குக் காரணம் யார் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

லாவண்யா அவளுக்குத் தெரியுமா? அவன் மனதிலும் இப்போது அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்று.

  அவளிடம் கூற முடியுமா? நேற்று அவள் பேசிய போது, 'ஆப்ட்ரால் கன்டெக்டர்' என்ற வார்த்தையை விட்டதும் லாவண்யா தான் என்று புரிய அவசரப்படாதே சாரதி என்று மனதிடம் கூறிக் கொண்டான். தன்னிலையும் அவளது நிலையும் யோசி என்றது மனம். தானாக ஆசைப்பட்ட நெஞ்சம் மீண்டும் கூட்டுக்குள் அடைப்பட்டது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : September 10, 2026 6:58 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

Interesting 


 
Posted : September 10, 2026 7:30 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)

நான் தான் அப்பவே சொன்னேனே, அந்த ஹாரஸ்மென்ட் கேஸ் பையனாத்தான் இருக்கும்ன்னு ?
நல்லா வாங்கி கட்டிக்கிட்டானா ?
ஆனால், போறவன் சும்மா போக மாட்டான்னு நல்லாவேத் தெரியுது, எப்படியும் சாரதி லாவண்யா மேல வீண் பழியைப் போட்டு ரீவென்ஜ் வாங்குவான்னு நல்லாத் தெரியுது. வாங்கட்டும், வாங்கட்டும்... அப்பத்தானே ரெண்டு பேரும் ஜோடி சேர முடியும், (இப்படி சேர்த்தால் ஒண்ணுச் சேருவாங்கப் போல. இல்லைன்னா இந்த ரெண்டும் காதலை சொல்லாது, அப்படியே சொன்னாலும் ரெண்டுல யாராவது ஒருத்தர் ஏத்துக்கவும் தயங்குவாங்கன்னு இவங்க முகத்தைப் பார்த்தாலேத் தெரியுது. முசல் பிடிக்கிற நாயை மூஞ்சைப்
பார்த்தாலே தெரியும் தானே ?
ஹ..ஹ..ஹ..!

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 10, 2026 8:46 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow super super Lavanya. U have given very bold and good punishment to him. In bus travel all the ladies had face this issue in daily. Like Lavanya all women should punish this idiots immediately. Love  starts between them.Very intresting sis.


 
Posted : September 10, 2026 9:22 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Idikum pothu theriyala pola aana athae thirupi andha ponnu adicha mattum kobam varuthu ah ivan ah ellam light ah compass la kuthunathu than thappu yae yetho pona poguthu nu vitta revenge look vera ah .

Lavanya aachum sonna lum solluva love ah aana definte ah Sarathy solla matan nu than thonuthu ava sonna after all conductor na ra varthai yae avan sollama irukirathu pothum aanathu than 


 
Posted : September 10, 2026 9:45 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Nalla ennum naalu podu..anna enime avan yenna 7.5 koota porano


 
Posted : September 10, 2026 10:41 am

Scroll to Top