Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 15

2 Posts
2 Users
1 Reactions
44 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#209]

அத்தியாயம் 15

 

முழு அலங்காரத்துடன் தயாராகி இருந்த சிவன்யாவை பார்த்த பார்வதி, "ரொம்ப அழகாக இருக்கிறாய் டா. என் கண்ணே பட்டுரும் போல" என்று திருஷ்டி நொடித்தார். 

 

அவர்கள் ஒவ்வொருவரின் செயலிலும் அவளுக்கு மேலும் வெட்கம் உண்டாக, அது அவளை மேலும் அழகாக காட்டியது. அவளது தாய் தந்தையர் கூட அவளை ரசனையாக பார்த்தனர். 

 

ஆனால் அவளை ரசிக்க வேண்டிய தேவ்வோ, கோட் சூட் அணிந்து கையில் வாட்சை கட்டியபடியே "நான் ரெடி, போகலாமா?" என்றான் யாரையுமே பார்க்காமல். 

 

அவனது செயலில் பார்வதிக்கும் வருத்தமாக இருந்தது. மருமகள் அழகை எல்லோரும் பார்த்து ரசிக்க மகன் எதுவுமே சொல்லாமல் இருப்பதை கண்டு மகனை ஆராய்ச்சியாக பார்த்தார். "என்ன கண்ணா? சிவன்யா தயாராகி இருக்கிறாள், நீ எதுவுமே சொல்லவில்லையே?" என்று ஆதங்கமாக மகனை பார்த்தார். 

 

அதன் பிறகு தான் நிமிர்ந்து சுகன்யாவை பார்த்த தேவ், அவளைப் பார்த்துக் கொண்டே "அவளுக்கு என்ன குறைச்சல் மா? அலங்காரம் இல்லாமலே அவள் அழகாக தானே இருப்பாள். இப்போது சொல்லவும் வேண்டுமா? ரொம்ப அழகா இருக்கா" என்று கூற, அதில் மகிழ்ந்தனர் பார்வதி மற்றும் குடும்பத்தினர். ஆனால் அவன் பேச்சு உணர்வுபூர்வமாக இல்லை என்பதை கண்டு கொண்டாள் சிவன்யா.  

 

இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த மகிழ்ச்சி சற்றென்று வடிந்தது. புன்னகையாக இருந்த தங்கையின் முகத்தில் திடீரென்று மாறியதைக் கண்ட மேகநாதன், தங்கையின் அருகில் வந்து "என்னாச்சு குட்டிமா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று அவளின் அலங்காரத்தை சரி செய்வது போல தனது கைக்குட்டை கொண்டு நெற்றியில் ஒற்றியபடி, மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டு அவள் முகம் பார்த்தான். 

 

"ஒன்றும் இல்லை அண்ணா" என்று வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் சிவன்யா.

இருவரையும் சாமி கும்பிட வைத்து மண்டபத்திற்கு அனுப்பி வைத்து அனைவரும் கிளம்பினார்கள். 

 

அனைவரும் மண்டபத்திற்குச் சென்றதும் ஒவ்வொரு சொந்தங்களாக வர தொடங்க, இனிமையாக தொடங்கியது தேவ் சிவன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியும். 

 

வந்திருந்த சுற்றமும் நட்பும் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து விருந்துண்டு கிளம்பினார்கள். விருந்தினர் அனைவரும் கிளம்பிய பிறகு மணமக்களுடன் வீட்டினர் அனைவரும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டார்கள். தேவைக்கு அதிகமாக எதுவும் தேவ் சிவன்யாவுடன் பேசவில்லை. 

அனைவரும் உண்டு முடித்ததும் விஸ்வநாதன் மண்டப வேலையை முடித்துவிட்டு வருவதாகவும், மற்றவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறினார். மேகநாதனும் அவருக்கு துணையாக நின்று கொண்டான். 

 

மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பார்வதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார்.

தூக்க கலக்கத்தில் இருந்த நளினி எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள். தேவ்வும் அவனது அறைக்கு சென்று விட, சிவன்யாவிற்கு ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள். 

 

அவளின் தோளைத் தொட்டு தன் புறம் திருப்பிய பார்வதி, "உன்னுடைய உடைமைகளை எல்லாம் தேவ்வோட அறையில் வைத்திருக்கிறேன் ம்மா. இதில் சூடா பால் இருக்கு, ரெண்டு பேரும் குடிச்சுக்கோங்க" என்று புன்னகையுடன் கூறி அவளை தேவ்வின் அறைவாசலில் சென்று விட்டார்.

 

ஒரு நொடி தயங்கி நின்ற சிவன்யா தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு மெதுவாக கதவை திறந்த உள்ளே சென்றாள். 

முதல் இரவுக்கான பூ அலங்காரங்களுடன் ஒரு கட்டில் இருந்தது. அருகிலேயே ஒரு பீரோ ஒரு பக்கம் குளியலறை ஒரு சிறிய டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. 

 

சுற்றி பார்த்த சிவன்யா, தேவ் இல்லாததை கண்டாள். குளியலறையில் சத்தம் கேட்க குளிக்கிறார் போலருக்கு என்று நினைத்து, தன்னுடைய பெட்டியைத் திறந்து இரவு உடையை எடுத்து வைத்து தயாராக நின்றாள். 

 

அப்பொழுது குளித்து முடித்து வெளியே வந்தான் தேவ். அங்கு நின்ற சிவன்யாவை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு, தலையை துவட்டியபடியே கட்டில் சென்று அமர்ந்து கொண்டான். 

தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்ட சிவன்யா குளியலறை சென்று குளித்து உடைமாற்றி வந்தாள். அவனிடம் எப்படி பேசுவது என்று தயங்கிக் கொண்டே தான் இருந்தாள். இவள் வரும்பொழுது அவன் ஃபோன் பார்த்துக் கொண்டு இருக்க, பார்வதி கொடுத்த பாலை அவனிடம் கொடுத்தாள் சிவன்யா. 

 

மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கி குடித்துவிட்டு, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது. அதை முடித்துவிட்டு தான் உறங்குவேன். நீ தூங்கு" என்று கட்டிலின் மறுபுறம் அவளுக்கு காண்பித்து விட்டு, லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். 

 

அவளும் எதுவும் சொல்லவில்லை, பேசாமல் சென்று படுத்து விட்டாள். நேற்று இரவு சென்னையில் இருந்து ரயில் பயணம், இன்று பகல் முழுவதும் சொந்தக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தது, சாயங்காலம் ரிசப்ஷனில் நின்று கொண்டிருந்தது என்று உடல் அவளுக்கு அசதியாக இருக்க, படுத்த சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கி விட்டாள். 

 

அவள் கண் விழித்து பார்க்கும் பொழுது அறைக்குள் வெளிச்சமாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்து மணியை பார்க்க மணி 7 ஆகியிருந்தது. வேகமாக எழுந்து பார்த்தாள். தேவ்வும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். நல்லவேளை என்று உடுத்துவதற்கு உடைய எடுத்துக் கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

 

சிவகாமி சிவன்யாவிடம் "சென்னை போல் ஊர் இருக்காது. திருமணமான பெண்கள் விடியல் காலையில் எழுந்துவிட வேண்டும். குறைந்தது ஆறு மணிக்காவது எழுந்துவிடு" என்று சொல்லி தான் இருந்தார். ஆனால் உடல் அலுப்பில் அசந்து தூங்கிவிட்டாள். அம்மா என்ன சொல்லுவாச்களோ என்று பயந்த படியே வேகமாக குளித்து புடைவையை கட்டிக்கொண்டு வெளியே சென்றாள். 

 

இன்னும் தேவ் உறங்கிக் கொண்டு இருக்க தயங்கியபடி அறையை விட்டு வெளியே வந்தாள் சிவன்யா. 

 

நல்ல வேளையாக வரவேற்பு அறையில் யாரும் இல்லாமல் இருக்க, சமையல் அறைக்குச் சென்றாள். அங்கே பார்வதி காலை உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். 

 

"என்ன அத்தை? காலையிலேயே சமையல் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? என்னை எழுப்பி இருக்கலாமே! அம்மாவையே இங்கே காணும்?" என்று கேள்வி கேட்ட மருமகளை புன்னகையுடன் திரும்பி பார்த்த பார்வதி,

"வழக்கமா நான் செய்யும் வேலை தானே டா, எதற்கு உதவி? அம்மா இப்பொழுது தான் அப்பாவிற்கு காபி எடுத்துட்டு போனாங்க. தேவ் எழுந்துட்டானா?" என்று மருமகளிடம் கேட்டார்.

 

அவள் இல்லை என்று தலையாட்ட, அவள் கையில் ஒரு காபியை கொடுத்து, "நீ போய் உட்கார்ந்து குடிமா. இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிந்திடும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நளினி வந்தாள், "அம்மா காபி" என்று. 

 

"பார், அண்ணி காலையிலேயே குளிச்சிட்டாங்க. நீ இன்னும் குளிக்காம இருக்கிற. பொய் குளிச்சிட்டு வந்து காபி குடி" என்று அவளை விரட்டினார் பார்வதி. 

 

"அம்மா" என்ற சிணுங்கியபடி சிவன்யாவின் தொளில் சாய்ந்து கொண்டு, "அண்ணி நீங்களாவது காபி தாங்க" என்றாள். 

 

அவள் கையில் இருந்த காபியை அவளிடம் கொடுக்க, "நீ குடிமா, அவ குளிச்சிட்டு வந்து குடிப்பா" என்று மகளை கண்டித்தார். 

"பரவாயில்லை அத்தை" என்று கூறி தனக்கு காபி கலந்து கொண்டு, நளினியையும் அழைத்துக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 

நளினி ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க, புன்னகையுடன் கேட்டபடியே காபி முடித்து முடித்தனர். 

அந்நேரம் இருவருக்கும் குட் மார்னிங் சொல்லிவிட்டு அங்கு வந்து அமர்ந்தான் மேகநாதன்.

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 24, 2026 7:39 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

nice


 
Posted : July 27, 2026 12:23 pm

Scroll to Top