Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 14

2 Posts
2 Users
1 Reactions
28 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#208]

அத்தியாயம் 14

 

நாளை சாயங்காலம் தேவ் சிவன்யா வரவேற்பு. தேவ்வின் ஊரில். அதற்காக இன்று அனைவரும் அவனது ஊருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

மேகநாதன் தன் தாய் தந்தையருக்கு ரயிலின் படுக்கையை விரித்துக் கொடுத்து, அவர்களை உறங்கச் சொல்லிவிட்டு, தங்கையிடமும் உறங்குவதாக சொல்லி அவனது படுக்கையில் படுத்து விட்டான். 

 

சிவன்யா தேவ் படுக்கட்டும் என்று காத்திருக்க, அவனோ "உனக்கு தூக்கம் வந்தால் உறங்கு" என்று சொல்லிவிட்டு போனில் மெசேஜ் செய்ய ஆரம்பித்து விட்டான். 

 

சிறிது நேரம் அமர்ந்திருந்த சிவன்யா, எதுவும் சொல்லாமல் அவளும் உறங்கலாம் என்று தனது படுக்கையில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு எதிர் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஃபோன் பார்த்து கொண்டு இருந்தான் தேவ். நேரம் கடக்க தேவ் போனில் மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்தானே தவிர உறங்கவில்லை. விடியல் நேரத்தில் தான் உறங்கினான் 

 

அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா. ஃபோனை விட்டு அவனது கவனம் சிறிதும் நகரவில்லை. ஒரு முறையாவது அவளை பார்ப்பான் என்று நினைத்த சிவன்யாவிற்கு, தன்னை அவன் பார்க்காதது வருத்தமாக இருந்தது. 

 

பெருமூச்சுவிட்டு, கண்கள் மூடி படுத்த சுகன்யாவிற்கு உறக்கம் வர மறுத்தது. அனைவரிடத்தும் நன்றாக பேசும் தேவ், தன்னிடம் மட்டும் ஒதுங்கி இருப்பது போல் தோன்றியது. உண்மையில் அவருக்கு என்னை பிடிக்கவில்லையா? எல்லோரிடமும் சகஜமாக தானே பேசுகிறார்.

என்னிடம் மட்டும் தான் சரியாக பேசவில்லை. அவருக்கு என்னை பிடிக்க வில்லை போல. போக போக பிடிக்குமா என்றும் தெரியவில்லையே? ஒருவேளை கடைசிவரை பிடிக்கவே இல்லை என்றால் என்ன செய்வது. 

இல்லை அப்படியெல்லாம் இருக்காது. தங்கைக்கு திருமணம் என்று தானே சொல்லி இருப்பார்கள். அதற்கு தான் லீவு எடுத்து இருந்ததாக சொன்னாறே. 

இப்போது திடீரென்று அவருக்கும் திருமணம் என்றதும் அவருக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போல, என்று பலவாறு எண்ணங்கள் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. 

 

இடையிடையே அவள் விழித்து பார்க்கும் பொழுதெல்லாம் அவன் ஃபோன் பார்த்து கொண்டு தான் இருந்தான். தனக்குள் வந்த குழப்பமான எண்ணங்களுடனேயே, எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் தூங்கி விட்டாள் சிவன்யா.

 

மறுநாள் விடியற்காலையில் தேவின் ஊருக்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதும் வேகமாக ஓடி வந்த நளினி, சிவன்யாவை அணைத்துக் கொண்டு "வெல்கம் அண்ணி" என்றாள் புன்னகையுடன் 

 

"உங்கள் அண்ணியை மட்டும் தான் வரவேற்பாயா? நாங்களெல்லாம் அப்படியே கிளம்பி விடட்டுமா? என்று நிற்கும் ரயிலில் ஏறப்போனான் மேகநாதன். 

 

"அச்சோ அப்படி இல்லை அத்தான். வாங்க வாங்க, அத்தை வாங்க, வாங்க மாமா, வாங்க அண்ணா, வாங்க" என்று எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டு, ஒவ்வொருவரின் முன்பும் குனிந்து குனிந்து வரவேற்றாள் நளினி. 

 

அவளது செயலில் அனைவரும் புன்னகைத்து கொள்ள, அவள் தலையில் செல்லமாக கொட்டிய தேவ், "உன் வால்தனத்தை இன்னும் நீ விடவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு நகன்றான். 

 

மேகநாதன் தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தின் வாயிலை நோக்கி செல்ல அப்பொழுதுதான் விஸ்வநாதன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். 

 

நளினியை பார்த்து, "பொறுமையா போ என்று சொன்னேன் இல்லையா?" என்று முறைத்து விட்டு, "வண்டியை நிறுத்தி விட்டு வருவதற்குள் ஓடி வந்து விட்டாள் சம்மந்தி" என்று சிவநேசனிடம் கூறி, அனைவரையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தார்.

 

இரயில் நிலையத்தில் இருந்து கால் மணி நேர பயணம். அனைவரிடமும் பயணம் நல்லபடியாக அமைந்ததா என்று கேட்ட விஸ்வநாதன், அனைவரும் அமர்ந்ததும் அவர்களது வீட்டிற்குச் செல்ல சிறிது நேரம் ஆகும் என்று கூறி சிவநேசன் அருகில் அமர்ந்து கொண்டார். 

 

முன் இருக்கையில் தனியே தேவ் அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் இருக்கையில் சிவன்யா ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவள் அருகில் அமர்ந்த நளினி, அவளுக்கு அவர்களின் ஊரின் பெருமையை பற்றி பேசிக்கொண்டே வந்தாள். 

 

அவள் கூறுவது வேனில் இருந்த அனைவருக்குமே தெளிவாக கேட்க, அனைவருமே புன்னகையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சுற்றிலும் பசுமையான வயல்வெளிகள். சாலையின் இருபுறமும் உயரமான புளிய மரங்கள் சாலைக்கு நிழல் தர அழகாக இருந்தது. 

 

எங்க நோக்கினும் பசுமையாக காட்சியளித்தது அது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. 

"சென்னையில் எங்கும் வாகன நெரிசல்களும் வாகனச் சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருக்கும். இங்கு சுத்தமான காற்றும், கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான வயல்வெளிகளும் இருக்குது" என்று வாய் திறந்து கூறிய மேகநாதன், அந்த இயற்கையை மிகவும் ரசித்துக்கொண்டே பயணித்தான். 

 

ஒவ்வொருவரும் ஏதாவது பேசிக் கொண்டு வர, அந்த வேனில் அமைதியாக இருந்தது தேவ்வும் சிவன்யாவும் மட்டுமே. தேவ் வேடிக்கை பார்ப்பதும், போனை பார்ப்பதுமாக இருந்தான். 

சிவன்யாவின் கண்கள் இயற்கையை ரசித்துக் கொண்டே இருந்தாலும், மனம் ஏதோ ஒரு வித அழுத்தம் இருப்பது போலேயே இருந்தது. 

அவளது மன ஓட்டத்தை கவனிக்காத நளினி ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். 

 

சிறிது நேரத்தில் விஸ்வநாதன் தான் நளினியை "கொஞ்ச நேரம் அமைதியா இருடா" என்று அமைதி படுத்தினார். 

அவர் கூறியதும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த நளினி, மீண்டும் "அண்ணி" என்று சிவன்யாவிடம் பேச ஆரம்பித்தாள். 

அவளின் செயலை கண்டு சிரித்துக் கொண்ட மேகநாதன் "அவள் ஓட்டை வாயை யாராலும் மூட வைக்க முடியாது மாமா" என்று சிரித்துக் கொண்டே கூறினான். 

 

அப்படியே கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க, தேவ்வின் வீட்டில் அருகில் வந்து விட்டார்கள். வண்டி அவர்களது வீட்டின் முன்பு நின்றதும் ஆரத்தி தட்டுடன் தன் மகனையும் மருமகளையும் வரவேற்க தயாராக நின்றார் பார்வதி.

 

அதுவரை தயக்கத்தில் இருந்த சிவன்யா, தனது அத்தையின் மலர்ந்த முகத்தை கண்டு அவளும் புன்னகைத்துக் கொண்டாள். ஆரத்தி எடுத்து புதுமண தம்பதியரை வீட்டிற்குள் அழைத்து வந்தார். 

 

தேவ், சிவன்யா இருவரையும் சாமி கும்பிட வேண்டும் ஆகையால் சீக்கிரம் குளித்து வரும்படி கூற, தேவ் அவனது அறைக்கு சென்று விட்டான். எங்கே சென்று குளிக்க வேண்டும் என்று தயங்கி நின்ற சிவன்யாவின் அருகில் வந்த நளினி, "வாங்க அண்ணி" என்று தனது அறைக்கு அழைத்து சென்றாள். 

 

தனது அத்தை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு விரைவாக குளித்து வந்தாள் சிவன்யா. அவள் வரவும், தேவ்வும் வர, இருவரையும் சாமி அறைக்கு அழைத்துச் சென்று, சிவன்யாவை விளக்கேற்ற வைத்தார் பார்வதி. பின்னர் சாமியின் முன்பும், வீட்டில் இருந்த பெரியவர்கள் முன்பும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் தம்பதியர். 

 

அதன் பிறகு காலை உணவு பரிமாற, உணவு உண்ட பிறகு தேவ் அவனது அறைக்குச் சென்று விட்டான். இங்கு வந்து பிறகு கூட தன் கணவன் தன்னுடன் பேசாதது சிவன்யாவிற்கு வருத்தமாக இருந்தது. சற்று நேரம் என்ன செய்வது என்று தடுமாறியவள், தன் கலக்கத்தையும், தேவ்வை பற்றிய எண்ணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு வந்திருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டு,  தன் அத்தைக்கு உறுதுணையாக, அவரின் அருகிலேயே நின்று கொண்டு தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றாள். 

 

அந்த வீட்டின் பொறுப்பான மருமகளாக, மாமியார் சொல்லும் வேலை அனைத்தையும் செய்து, வந்தவர்களை நன்றாக கவனித்துக் கொண்டாள். அன்று இரவே வரவேற்பு இருப்பதால், அவளை ஓய்வு எடுக்கும்படி நளினியை கூப்பிட்டு சொல்லி, அவளுடன் அனுப்ப முயன்றார் பார்வதி. 

 

இருந்தாலும் "பரவாயில்லை அத்தை" என்று கூறி, அவர்களுடனே இருந்து அனைத்தையும் செய்த சிவன்யாவை வந்திருந்த சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. 

 

"சென்னையில் வாழ்ந்தாலும் மிகவும் பொறுப்பாக இருக்கிறாள் உன் மருமகள்" என்று சிவன்யாவை அனைவரும் புகழ்ந்து கூறினார்கள். தன் மருமகளை பற்றி அனைவரும் நல்ல விதமாக பேசியதில் மிகவும் மகிழ்ந்தார் பார்வதி. 

 

அப்படியே நேரம் கடக்க, மதிய உணவு நேரம் வந்தும், அங்கு இருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் மருமகளை ஓய்வெடுக்க கூறினார் பார்வதி. 

 

நளினியின் அறைக்கு வந்த சிவன்யாவுடன், அவள் வயது ஒத்த பெண்கள் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். அதில் முக்கால்வாசிக்கு மேல் அவர்கள் கிராமத்தைத் தாண்டி வெளியே எங்கும் சென்றதில்லை. அவர்களிடம் சென்னையை பற்றி நளினி கூறியதை வைத்து, 

"அங்கு பெரிய கடல் இருக்குதாமே! பெரிய பெரிய சாலைகளில் எந்நேரமும் வாகனங்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்குமாமே! பெரிய பெரிய கடையில் எல்லாம் சிலுசிலுன்னு ஏசி போட்டு வச்சிருப்பாங்களாமே!" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேள்விகளை அவளிடம் கேட்டு அவளை குடைந்து கொண்டு இருந்தார்கள். 

 

அவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தாள் சிவன்யா. அவளின் புன்னகை முகத்தை கண்டு "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று அவள் கன்னத்தில் விழும் குழியில் விரல் வைத்து தொட்டுப் பார்த்தார்கள். 

 

அவர்களது செயலில் சற்று வெட்கம் உண்டானது சிவன்யாவிற்கு. "நீங்கள் எல்லோருமே அழகா தான் இருக்கிறீங்க" என்று ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகையுடன் கூறினாள் சிவன்யா.  

 

சற்று நேரத்தில் அங்கு வந்த பார்வதி, "மருமகள் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று அனுப்பினால், அவளிடம் பேசிக்கொண்டு அவளை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறீர்களா?" என்று அங்கிருந்தவர்களை பார்த்தார்.

 

"இல்லை அத்தை, இல்லை சித்தி" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூற, 

"நேரம் ஆயிடுச்சு, எல்லோரும் வரவேற்பு கிளம்புற வழிய பாருங்க" என்று அனைவரையும் அனுப்பிவிட்டு, சிகன்யாவிடம் "நீ ஒரு அரை மணி நேரமாவது படுத்து ஓய்வெடுமா" என்று கூறி அவளை தனியாக விட்டுவிட்டு அனைவரையும் இழுத்துக் கொண்டு "பரவாயில்லை அத்தை" என்று அவள் கூறுவதை கேட்காமல் வெளியே சென்றார்.

 

அவர்கள் அனைவரும் சென்றதும் என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்த சிவன்யா, அவளையும் அறியாமல் அப்படியே கண் உறங்கியும் விட்டாள். 

சொன்னது போல அரை மணி நேரம் கழித்து அவள் குடிப்பதற்கு சூடாக எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினார் பார்வதி. 

எழுந்ததும் வரவேற்பு தேவையான உடுப்பை கொடுத்து "குளித்து தயாராகி விடுமா" என்று கூறிச் சென்றார். 

 

நேரமாகியதை உணர்ந்து குளித்து அவர் கொடுத்த புடவையை அணிந்து கொண்டு தன்னை தானே ஒப்பனை செய்து கொண்டாள் சிவன்யா. அவள் தயாராகியதும் கதவை திறக்க அவளுக்காக காத்துக் கொண்டிருந்த நளினியும் அவளது குழுவினரும் அறைக்குள் வேகமாக வந்து, அவளை பார்த்து "ரொம்ப அழகாக இருக்கிறீங்க" என்று சொல்லி, ஆளாளுக்கு சிறிது அவளுக்கு ஒப்பனை செய்து மேலும் அவள் அழகை ஏற்றினார்கள். 

 

அனைத்தும் முடிந்ததும் தேவதை போல் இருந்த சிவன்யாவை பார்த்து ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி என்று திருஷ்டி நொடித்தாள் நளினி. 

 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..

 

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தனிப்பட்ட வேலை காரணமாக தொடர்ந்து கதை கொடுக்க முடியவில்லை.

விரைவாக அடுத்த அத்தியாயம் போட முயற்சிக்கிறேன்.

தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள் 😊😊

 


 
Posted : July 24, 2026 6:46 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

dev yar kitta phone la msg panra apo unaku sivanya va pidikalaya nijama


 
Posted : July 27, 2026 12:13 pm

Scroll to Top