Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 32

1 Posts
1 Users
1 Reactions
37 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#268]

அத்தியாயம் 32

 

தேவ்வை போலீசார் கைது செய்த பிறகு, அவனை அதிலிருந்து எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்தாள் சிவன்யா. அதன்படி உன்னிகிருஷ்ணனிடம் "நாளை காலை நீங்கள் அலுவலகம் செல்லும் பொழுதே நானும் வருகிறேன் அண்ணா, என்னையும் கூட்டிட்டு போங்க" என்றாள்.  

 

அவனும் சரி என்று தலையாட்டினான். பின்னர் தனது அறைக்கு செல்வதற்கு நேரமாவது உணர்ந்து தயங்கி, "நீ இங்கு தனியாக இருந்து கொள்வாயாம்மா" என்றான் ஜோவின் அறையை அவளையும் மாறி மாறி பார்த்து. 

 

அவளும் "ஒன்றும் பிரச்சனை இல்லை அண்ணா" என்று கூறி அவனை அனுப்பி விட்டு, தனது அறைக்கு வந்துவிட்டாள். 'இங்கு வந்ததிலிருந்து நான் தனியாகத்தான் இருக்கிறேன். இது அண்ணாவிற்கு தெரியாது, அதனால் தான் அப்படி பயமாக கேட்கிறார்' என்று நினைத்துக் கொண்டாள். 

 

தேவ் கைது செய்யப்பட்டதை வீட்டிற்கு சொல்லலாமா என்று யோசித்தாள். பின்னர் வேண்டாம், நாளை குற்றமில்லை என்று அவரை விட்டு விடுவார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு இங்கு நடப்பது தெரியாது, என்ன ஆயிற்று என்று பயப்படுவார்கள். அத்தை மாமா தனியாக இருக்கிறார்கள். நளினி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். 

 

அதனால் அவர் வந்த பிறகு, அவரே அவர்களுக்கு இங்கே நடந்ததைப் பற்றி சொல்லிக் கொள்ளட்டும் என்றும், அவனின் குடும்பத்தினர்கள் கவலையடைய கூடாது என்று நினைத்தாள்.  

 

நாளைக்கு முதலில் அவரது அலுவலகத்திற்குச் சென்று, அவர் முதலியிடம் எப்படியாவது பேசி புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தாள். உறக்கம் அவளுக்கு வருவேனா என்றது. அவளையும் மீறி கொஞ்சம் அசந்து விட்டாள், அவ்வளவுதான். 

 

காலை மீண்டும் காலை 5 மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிட்டது. எழுந்து குளித்து தயாராகி உன்னிகிருஷ்ணனின் வரவிற்காக வாசலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். 

 

ஜோவும் எழுந்து அவனுக்கு தேவையான காலை உணவை செய்து சாப்பிட்டுவிட்டு, "நான் ஆபிஸிற்கு போகிறேன், உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டான். இன்னும் ஒரு வாரத்தில் அவன் அமெரிக்கா செல்ல இருப்பதால் முடிக்க வேண்டிய வேலைகளை பார்க்க வேண்டிய கட்டாயம். 

 

உன்னிகிருஷ்ணனும் ஒரு வாரத்தில் இந்தியா செல்வதால் ஒரு மாதம் விடுப்பு எடுத்து இருந்தான். ஆகையால் இப்பொழுது அவனாளும் விடுப்பு எடுக்க முடியவில்லை. சிவனையாவை அழைத்துச் சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு, அவன் வேலை பார்க்க சென்று விடுவான். ஏதேனும் என்றால் தனக்கு ஃபோன் செய்யும்மாறு சொல்லிவிட்டான்.  

 

அலுவலகத்தில் தேவ்வின் முதலாளியை பார்ப்பதற்காக காத்திருந்தாள். ஆபீஸ் பாயிடம் தான் வந்திருப்பதை முதலாளியிடம் தெரிவிக்கும்படி கூற, அவர்களிடமிருந்து பதில் வரவே இல்லை. மதிய உணவு நேர இடைவேளையில் வந்த உன்னிகிருஷ்ணன் காலையில் அவன் விட்டுச்சென்ற இடத்திலேயே அமர்ந்திருக்கும் சிவன்யாவை கண்டு வருந்தினான். 

 

அவளை உணவு உண்பதற்கு அழைக்க, அவளோ முதலாளியை பார்க்கும் வரை நான் எங்கும் வரமாட்டேன் என்று கூறி, பிடிவாதமாக அங்கேயே அமர்ந்து விட்டாள். 

 

உன்னிகிருஷ்ணன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் கேட்பதாக இல்லை. அவனுக்கோ வேலை இருக்க, அவளை தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் தன் வேலையை பார்க்க சென்று விட்டான். வேலை முடித்து சாயங்காலம் நேரம் முதலாளி கிளம்பி போய்விட்டார் என்று கூறினான் ஆபீஸ் பாய். 

 

இப்படியாக இரண்டு நாட்கள் தினமும் காலையில் தேவ்வின் அலுவலகத்திற்கு செல்வதும், சாயங்காலம் சோர்வுடன் வீட்டிற்கு வருவதுமாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நகர்ந்தது. 

 

அவள் வரவிற்காக வீட்டில் காத்திருந்த ஜோ சிவன்யாவை பார்த்ததும் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தான். அவள் கூறி கூற்றில் வருத்தமுற்று, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மிகவும் வருந்தினான். 

 

"இன்று நான் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்" என்றான் ஜோ. 

 

"என்ன?" என்று அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, 

 

"எனக்கு தேவ்வை பார்க்க வேண்டும் என்று தோன்றியது, அதனால் சென்றேன். ஆனால் தேவ் என்னை எதிலும் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டான். நான் முழுமையாக துபாய்யை விட்டு எனது ஊரில் சென்று செட்டிலாக நினைப்பதால், கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டாம் என்றான்" என்று கூறி சோகமாக சோபாவில் அமர்ந்தான். 

 

"அவர் சொல்வதும் சரிதான், நீங்கள் இப்பொழுது தேவ்விற்காக ஏதாவது செய்ய போனால், உங்களால் இங்கிருந்து செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். நான் அவரை எப்படியும் வெளியே எடுத்து விடுவேன்" என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள் சிவன்யா.  

 

அறையில் வந்து படுத்த சிவன்யாவிற்கு தேவ்வை விடுதலை செய்வதற்காக இந்த மூன்று நாட்கள் அவள் பட்டப்பாடுகள் நினைவிற்கு வர, அந்த முதலாளி கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேன் என்கிறார். நான் சொல்வதை கேட்கக் கூடாது என்று முடிவு செய்து இருப்பது போல் தோன்றுகிறது என்று வருத்தப்பட்டாள். 

 

மூன்று நாள்களாக சிறையில் தேவ் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறாரோ என்றும் வருந்தினாள். நாளைக்காவது முதலாளி என்னை பார்க்க அனுமதிக்க வேண்டும், அவர் சம்மதிக்கவில்லை என்றால், இன்று ஜோ சென்று தேவ்வை பார்த்தது போல், நாளைக்கு நான் காவல் நிலையம் சென்று தேவ்வை பார்த்து, அடுத்து என்ன செய்வது என்று கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். 

 

அதன்படியே மறுநாளும் கிளம்பி, உன்னிகிருஷ்ணனுடனே அலுவலகத்திற்குச் செல்ல, அன்றும் தேவ் முதலாளி அவளை பார்க்க அனுமதி அளிக்கவே இல்லை. மதியம் வரை அமர்ந்திருந்த சின்யாவிற்கு மிகவும் சோர்வாக இருந்தது. இருந்தும் முதலாளியே பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உறுதியுடனே அமர்ந்திருக்க, 

 

திடீரென்று அவள் அமர்ந்திருந்த காத்திருக்கும் இடம் பரபரப்பாகியது போல் தோன்றியது. சோர்வுடன் நிமிர்ந்து அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஊழியர்கள் அனைவரும் திடீரென்று யாரோ எதிர்பார்த்து இருப்பது போல் இருக்க, அக் கம்பெனியின் முதலாளி வேகமாக ரிசப்ஷனுக்கு வந்தான். அவரிடம் பேசிவிடலாம் என்று எழுந்து நின்ற சிவன்யாவை கண்டுகொள்ளாமல் வேகமாக வாசலுக்கு சென்றான். அப்பொழுது அங்கு உயர்தர வாகனங்கள் வரிசையாக வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி வந்தார் ஒரு அரேபிய ஷேக்.  

 

காரில் இருந்து மிடுக்காக இறங்கிய ஷேக், வேக நடையுடன் முதலாளியின் அருகில் வந்து நின்று ஏதோ அரபிக் மொழியில் பேசினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இவர் திணறுவதும் என்று அங்கு நடப்பைவற்றை மௌனமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா.  

 

முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்த ஷேக், சிவன்யாவை காண்பித்து ஏதோ அவரிடம் கேட்டார். அதற்கு அவரும் ஆமாம் என்று தலையாட்ட, அவரிடம் ஏதோ சொல்லிவிட்டு வேகமாக அவரது அறைக்கு சென்றுவிட்டார் ஷேக். 

 

முதலாளியும் சிவன்யாவை முறைத்து "நீ தினமும் வந்து இங்கே அமர்ந்திருப்பதால் ஷேக் என்னை திட்டுகிறார். ஏதோ நான் தவறு செய்தது போல் என்னை திட்டி விட்டு செல்கிறார்" என்று அவளிடம் கடுமையாக பேசிவிட்டு, 

"அவர் உன்னை அழைத்து கேட்பார். உன் கணவன் மீது தான் பிழை என்று சொல்லிவிடு, அப்படி என்றால் அவரது கோபமாவது சற்று குறையும். உன்மேல் கொஞ்சம் கருணையாவது கிடைக்கும். அதை விடுத்து அதிக பிரசிங்கித்தனமாக வேறு ஏதாவது பேசி அவரது கோபத்திற்கு ஆளாகி விடாதே!" என்று எச்சரிக்கை செய்துவிட்டு, 

 

அங்கிருந்த ஊழியரிடம் "ஷேக் சொல்லும் பொழுது, இவளை அவரது அறைக்கு அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார். 

 

'ஷேக் நல்லவர் என்று தேவ் சொன்னதாக ஜோ சொன்னாரே! அப்படி என்றால் அவரிடம் நாம் தேவ்வை பற்றி சொல்வோம். அவர் நிச்சயம் ஏதாவது செய்வார், இந்த முதலாளி தேவையில்லாமல் என்னிடம் கோபப்படுவதை பார்த்தால், இவர் தான் ஏதோ தில்லுமுல்லு செய்கிறார் என்று தோன்றுகிறது' என்று நினைத்துக் கொண்டு ஷேக்கின் அழைப்பிற்காக காத்திருந்தாள் சிவன்யா. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 5, 2026 8:28 pm
Kalidevi reacted

Scroll to Top