வெளிச்சம் - 30
அத்தியாயம் 30
தேவ் கோவமாக சென்ற பிறகு அப்படியே அங்கு உணவு மேஜை நாற்காலியில் அமர்ந்து விட்டாள் சிவன்யா.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை. வீட்டின் அழைப்பு மணி ஒலித்ததும் தான் சுய உணர்வுக்கு வந்தாள்.
இரண்டாவது முறை மணி ஒலித்ததும், வேகமாகச் சென்று கதவை திறக்க உன்னிகிருஷ்ணன் தான் நின்று கொண்டு இருந்தான்.
"என்னம்மா இவ்வளவு நேரம்" என்று கலக்கமாக இருந்த அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்.
"ஒன்றுமில்லை அண்ணா, ஏதோ யோசனையாக அப்படியே அமர்ந்து விட்டேன். அதான் உடனே கதவை திறக்க முடியவில்லை" என்று சொல்லிவிட்டு அவன் குடிப்பதற்கு தண்ணீரும் எடுத்து கொடுத்தாள்.
தேவ் அறையில் இருந்து வெளியே வர, உன்னிகிருஷ்ணனை பார்த்து புன்னகைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டான். அவன் பின்னாலையே வந்த ஜோ, உன்னிகிருஷ்ணனுடன் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டே டிவி பார்க்க, உன்னிகிருஷ்ணனும் ஜோவுடன் பேசிக் கொண்டே சிவன்யா உடனும் பேசிக்கொண்டு இருக்க, தேவ் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
"ஒரு நிமிடம் அண்ணா" என்று சிவன்யா அங்கிருந்து எழுந்து தேவ்வின் அருகில் சென்று நின்று, "என்ன செய்யணும் என்று சொல்லுங்க, நான் செய்கிறேன்" என்று அவன் கையில் இருந்த பொருளை வாங்க முயற்சித்தாள்.
"நீ எதுவும் செய்ய வேண்டாம். நான் வழக்கமாக செய்யும் வேலைதான், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீ இவ்வளவு சமைத்து இருக்கிறாயே! நீ போய் உட்காரு" என்று சொல்லிவிட்டு, மடமடவென்று ஏதோ செய்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா. செய்து முடித்து சுவை பார்த்துவிட்டு, "டன்" என்று சொல்லி அதையும் உணவு மேஜையில் எடுத்து வைத்து, அனைவரையும் சாப்பிட அழைத்தான்.
உன்னிகிருஷ்ணன் தான் அறைச் செல்வதாக சொல்ல, "இன்று நான் தான் சமைத்தேன் அண்ணா, நீங்கள் இங்கேயே சாப்பிடுங்கள்" என்று அவனையும் சாப்பிடச் சொன்னாள் சிவன்யா.
நால்வரும் உணவு மேஜையில் அமர சிவன்யா முதலில் உன்னிகிருஷ்ணனுக்கு வைத்துவிட்டு, ஜோவிற்கும் பரிமாற போனாள்.
"அவளை தடுத்த தேவ், "அவனுக்கு இந்த சாப்பாடு ஒத்துக்காது" என்று தான் செய்த சாப்பாட்டை ஜோவின் முன் வைத்துவிட்டு, சிவன்யா செய்த சாப்பாட்டை தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
ஜோவும் தேவ்வும் அருகருகே அமர ஜோக்கு எதிரே உன்னிகிருஷ்ணன் அமர்ந்திருந்தான். உன்னிகிருஷ்ணனுக்கு அருகில் தான் ஒரு இடம் இருந்தது. "நீயும் உட்காந்து சாப்பிட வேண்டும்மா" என்று ஒரு தட்டை எடுத்து வைத்தான் உன்னிகிருஷ்ணன்.
அவளும் தயக்கமாக அமர, உன்னிகிருஷ்ணன் தான் சிவன்யா உடன் பேசிக்கொண்டே சாப்பிட்டான். ஜோவும் தேவ்வும் ஆங்கிலத்திலேயே தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். ஆண்கள் மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அவரவர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைக்க, சிவன்யா அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு மீதி பாத்திரங்களை கழுவ சென்றாள்.
அவளுக்கு உதவியாக உன்னிகிருஷ்ணனும் சொல்ல "வேண்டாம் அண்ணா, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் சென்று பேசிக்கொண்டு இருங்கள்" என்று சமையல் பாத்திரம் கழுவி சமையலறையை ஒதுங்க வைத்துவிட்டு அவளும் ஹாலிலுக்கு வந்தாள்.
சிவன்யா வந்ததும் "இங்கே பார் சிவன்யா, நம்ம ஊர் சாப்பாடு ஜோவிற்கு ஒத்து வராது அதனால் அவனுக்கு ஏத்தது போல்தான் இங்கு உணவு சமைப்போம். உனக்கு எப்படி வேண்டுமோ அப்படி நீ உனக்கு மட்டும் சமைத்துக் கொள். ஜோ அவனுக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வான், சரியா?" என்றான்.
அவளும் சரி என்று தலையாட்ட, அவளை பாவமாக பார்த்துக் கொண்டு இருந்தான் உன்னி கிருஷ்ணன்.
அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் குழப்பமாக அவனைப் பார்த்தாள். அவள் உன்னிகிருஷ்ணனை பார்ப்பதை கண்டு, "இன்று லேட்டாயிடுச்சு, நாளைக்கு பக்கத்தில் உள்ள கடைகளை காண்பிக்கிறேன். தேவையானவற்றை எல்லாம் வாங்கிக் கொள், சரியா?" என்றான்.
அவள் அதற்கும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
சிறிது நேரம் கழித்து உன்னிகிருஷ்ணன் அவன் வீட்டிற்கு கிளம்ப, ஜோவும் தேவ்வும் அமர்ந்து ஆங்கில படம் ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவள் அங்கு இருப்பது தெரியாமல் இருவரும் தங்களுக்குள்ளையே படத்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டு இருக்க, இதற்கு மேலும் இங்கு இருப்பதில் அர்த்தம் இல்லை என்று தனது அறைக்கு சென்று விட்டாள் சுகன்யா.
இப்படியே நாட்கள் வாரங்களாக கடந்தது. சுகன்யா வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவள் இங்கு ஒரு வித தனிமையை உணர்ந்தாள். இந்தியாவில் ஊரில் இருக்கும் பொழுது, அத்தை மாமா நளினி என்றும், சென்னை வந்த பிறகு அம்மா அப்பா அண்ணன் என்றும் அவளுடன் அனைவரும் பேசிக்கொண்டு குடும்பமாக இருந்தனர். ஆனால் இங்கோ இவளுடன் பேசுவதற்கு ஆள் இல்லாமல் தனி தீவாக இருப்பது போல் தோன்றியது.
அவளது தாய் ஃபோன் செய்யும்பொழுது எல்லாம் அவன் காலையிலேயே வேலைக்குச் சென்று விட்டதாவும், லேட்டாக வருவதாகவும், மகிழ்வாக இருப்பதாகவும் போன் செய்து பேசி சமாளித்தாள். தேவ்வுடன் பேசிய விசுவநாதன் மருமகளை நன்கு கவனிக்கும்படி தினமும் வற்புறுத்தி சொல்வார்.
மேலும் விடுமுறையின் பொழுது எங்காவது வெளியே அழைத்துச் செல்லும்படியும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் ஒரு வார விடுமுறை அன்று வழக்கம் போல் தேவ்வும் ஜோவும் வெளியே கிளம்பும் போது சிவன்யாவையும் தன்னுடன் வருமாறு அழைத்தான்.
கணவன் அழைத்ததில் மகிழ்ச்சியும் இல்லை வெறுப்பும் இல்லை. இந்த நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பதை விட வெளியே சென்று வரலாம் என்று தான் தோன்றியது. அவளும் சரி என்று தலையாட்ட, தேவ் டிரைவ் பண்ண அவனது அருகில் ஜோ அமர்ந்து கொண்டான். பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் சிவன்யா.
வெளிநாடு வெளியூரு புதிதாய் முதல் முறை பார்க்கிறோம் என்ற ஆர்வம் எதுவுமே சிவன்யாவின் மனதில் இல்லவே இல்லை. ஏதோ ஒரு வித வெறுப்பு, அழுத்தம் அவள் மனதை தாக்கியது போல் உணர்ந்தாள். தன் மனதின் போக்கில் செல்லாமல் தன்னை ஆர்வமாக காட்டிக் கொள்வது போல் உயர்ந்த கட்டிடங்களை அதிசயமாக பார்ப்பது போல் பார்த்தாள்.
ஒருவித சலிப்பு அவளுள் தோன்றியது. ஒருவித செயற்கைத் தனம் அவளது செயலில் தெரிவதை அவளே உணர்ந்து வருந்தினாள். இனி எங்கும் இவர்களுடன் வெளியே வரக்கூடாது என்ற முடிவும் அவளுக்குள் தோன்றியது.
எவ்வளவோ கனவுகளுடன் திருமணம் முடித்தாலும், திருமணத்திற்குப் பிறகு தேவ்வின் நடத்தையால் தன்னுடைய ஆசைகள் அனைத்தையுமே அடக்குகிறாளா, மறைக்கின்றாளா என்பதே அவளுக்கு புரியவில்லை.
இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற எண்ணம் வந்தது. 'அச்சோ, நான் ஏன் இப்படி நினைக்கிறேன். அப்பா அம்மா பார்த்து நடத்திய திருமணம் அல்லவா! நான் இப்படி நினைக்கலாமா! அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்?' என்ற எண்ணமும் ஓடியது.
புதுசாக ஒரு ஊரை சுற்றிப் பார்க்கிறேன் என்ற மகிழ்ச்சியோ! கணவனின் திருமணம் முடிந்து கணவனுடன் வெளியே வந்திருக்கின்றோம் என்ற மகிழ்ச்சியோ சிறிதும் இல்லாமல் வெறுமையாக வாழும் வாழ்க்கையே வெறுத்தாள் சிவன்யா.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 40
4 weeks ago
-
வெளிச்சம் - 39
4 weeks ago
- 25 Forums
- 325 Topics
- 1,578 Posts
- 1 Online
- 420 Members
